logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

allinagaram Dhamotharan

சிறுகதை வரிசை எண் # 227


-சிறுகதை- இரவல் கரு..! -அல்லிநகரம் தாமோதரன் இழப்பின் வலியானது, கண்களில் கசிவாகி, தலையணை முழுவதையும் ஈரமாக்கியிருந்தது. அடக்கவோ, அந்தக் கணத்தின் பெருஞ் சோகத்தைக் கடக்கவோ முடியாமல், துயர உச்சத்தில் விம்முகிறது உயிர்க்கூடு. தன்னை மனிதப் பிறப்பாக மண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்த ஜீவனின் அகால மரணம், கண்களில் நீராக ஓடவிட்டு, தீராத ஏக்கமாய் கலவரம் பண்ணுகிறது இருபத்து இரண்டு வயசான இளைஞன் குலோத்துங்கனுக்கு. ‘ஒன்னப் பெத்த ஆத்தா பகவதி செத்துப் போய்ருச்சிடா.’என்று, இந்தக் கிராமத்திலுள்ள தனது நண்பன் ஆத்மநாதன் செல்ஃபோன் மூலமாகத் தகவல் தந்திருக்க, சென்னையில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிற குலோத்துங்கன், நொடிப் பொழுதும்கூடத் தாமதிக்காமல் உடனடியாக அழுகையும், கண்ணீருமாய் பஸ்சேரி கிட்டத்தட்ட நானூறு கிலோ மீட்டர் தூரம் பிரயாணப்பட்டு, தனது சொந்தக் கிராமமான லட்சுமிபுரத்துக்கு அதிகாலை ஐந்து மணிக்கு வந்தடைந்திருந்தான். நேராக, பகவதியின் பிரேதம் வைக்கப்பட்டிருக்கிற அவளது வீட்டுக்குப் போகாமல், ஊர்க் கடைசியில் இரண்டு தெருக்களைக் கடந்து இருக்கிற தனது வீட்டுக்குப்போய், அங்கிருந்தபடியே “நா ஊருக்கு வந்துட்டேன். எங்க அம்மா மொகத்த கடைசியா ஒரு தடவையாவது பாக்கணும்டா. இந்த ஒலகத்துல எனக்கு மனுஷப் பொறப்பக் குடுத்த சீவாத்திடா அது.” என்று கண்ணீர்; சொட்டச் சொட்ட கரகரத்துக் கிழிந்த குரலில் நண்பன் ஆத்மநாதனுக்கு கைப்பேசி மூலம் தகவல் சொல்லியிருந்தான். “ஏண்டா நேரங்காலந் தெரியாம இப்டிச் சின்னப்புள்ள கணக்காப் பேசுற? ஒங்க அம்மாவோட மக்கமாருங்களப் பத்தி, ஒனக்கு நல்லாவேத் தெரியும். நீ அங்க போறத நிச்சயமா விரும்ப மாட்டாங்கடா. அதவிட ஒங்க அம்மாவோடப் புருஷன் இருக்காரே, அந்தாளு, ஓம் பேரக் கேட்டாலே அய்யனாரு கணக்கா அருவாளத் தூக்குற ஜென்மம். நீ அவுங்க வீட்டுக்குப் போயி நேர்ல நின்னுட்டா, அம்புட்டுத்தே.. உசுரோடக் கொன்னு ஒங்கம்மாவுக்குத் தொணப் பொணமா அனுப்பிருவாய்ங்கெ”என்று நீர்த்துப்போன கிசுகிசுப்புக் குரலில் பீதி கிளப்பி, திகிலில் வேர்த்துப்போக வைத்தான் ஆத்மநாதன். “அப்டீன்னா, எங்க அம்மாவோடப் பிரேதத்தப் பாக்கவே முடியாதா? என்னைப் பெத்தவடா..!” துக்கத்தில் தடதடத்த குரல், உயிரின் அலறலாக துயரங்கூட்டியது. “கடைசியா ஒரு தடவ எங்கம்மாவோட மொகத்தப் பாக்குறதுக்கு ஏதாச்சும் வழியிருந்தா கொஞ்சம் யோசன பண்ணிச் சொல்லேண்டா..!” உயிர் வலியெடுக்கிற துயரக் குரலில் கெஞ்சினான். “ஏதாச்சும் வழி இருக்கான்னுப் பாக்குறேன். அதே சமயம் முடியாதுன்னுத் தெரிஞ்சா, அங்க போயி ஏதாச்சும் ரகளையக் கூட்டாமெ அடுத்த பஸ்சப் புடிச்சு மெட்ராசுக்கே ஓடிப் போயிரணும் சரியா?..” கட்டன் ரைட்டாகக் கூறி சமாதானம் சொன்னான், நண்பன். “சரிடா.. முயற்சி பண்றேன்..” சொல்லிவிட்டு, குப்புறவாக்கில் படுத்து, தலையணையில் முகம் புதைத்துக்கொண்டான். இறந்துபோன அம்மா பகவதிக்கும் தனக்குமான உறவு பற்றியும், மூன்றாம் மனிதர்கள் போல, காலம் தங்கள் இருவரையும் நெருங்க விடாமல் பிரித்துவைத்துவிட்ட அவலம் பற்றியுமே நெஞ்சுக்குள் கவலை பிரவாகமெடுத்திருக்க, அவளைப் பற்றிய பழைய நினைவுகள் மனசெல்லாம் அலையடிக்கத் தொடங்கின குலோத்துங்கனுக்கு. நண்பன் ஆத்மநாதனின் அழைப்புக்காக, செல் ஃபோன் மேல் கண்களையும், கவனத்தையும் வைத்துத் தவம் கிடந்த அவனது சிந்தனையை, “என்னாச்சுடா ஒனக்கு? அந்தப் பகவதிய நெனச்சு, இன்னுங் கண்ணீர் வுட்டுட்டுத்தான் இருக்கீயா? பெத்துப் போட்டதுலேர்ந்து ஒன்ன அப்டி என்னதே பெருசா வளத்துக் கிழிச்சிட்டான்னு இப்டி மருகிக் கெடக்க?” என்றபடி, பக்கத்தில் வந்து நின்ற அப்பா நாகராசுவின் பக்கம் முகத்தைத் திருப்பினான். செத்துப்போன பகவதியை, ‘ஒன்னோட அம்மா..” என்று எப்போதும் அவர் இவனிடம் குறிப்பிட்டுச் சொன்னதேயில்லை. தனக்கும் இவனுக்குமான இடைவெளி அதிகரித்து விட வேண்டாம் என்ற எச்சரிக்கை உணர்வுகூட இதற்குக் காரணமாக இருக்கலாம். “இத… பாருய்யா. பகவதியோட மகெங்கெ, தண்ணியப் போட்டுட்டு வந்து அந்தம்மாவோடச் சொத்துகளுக்குச் சொந்தங் கொண்டாடி பங்கு பிரிக்கிறதுக்காக ரகள பண்ணிட்டு இருக்காய்ங்கெ. நீ அங்க போனா, நீயும் பங்கு கேக்கத்தே வந்துட்டன்னு நெனச்சு, ஒன்னைய பிரிச்சி மேய்ஞ்சிருவாய்ங்கெ.” அப்பாவின் மனைவி-அதாவது, இவனை வளர்த்து வரும் அம்மா முத்தம்மாள், அருகில் வந்து தன் பங்குக்கு புத்தி புகட்டும் வார்த்தைகளால் கத்தி நீட்டினாள். “நாங்கதே சொத்துலப் பங்கு கேக்குறதுக்காக ஒன்ன அங்க அனுப்பி வைச்சோம்ங்கிற அவச்சொல்லும் வந்துரும். ஓம்பாட்டுக்க வீட்லயே இரு.” என்றபடி அவனது தோளில் கைவைத்து உலுக்கியவாறு சொன்னார் அப்பா. அதற்கு, அவன் அசைந்துகூடக் கொடுத்திருக்கவில்லை. அழுதழுது முகம் உப்பியிருக்க, வாரப்படாத அலங்கோலத் தலையுடன் வேரோடு விழுந்த மரமாக அப்பயேடிதான் படுத்துக் கிடந்தான். ‘‘ஒனக்கும் இருவத்திரெண்டு வயசாச்சு. இது நாள் வரைக்கும் ஒனக்கு சோறூட்டி, மூக்குச் சிந்திவிட்டு... குளிப்பாட்டி எல்லாப் பணிவிடையுஞ் செஞ்சது நாங்கதானெ..! இப்ப என்னவாம் கூலிக்குப் பெத்தவ மேல நீளுது பாசம்..?” பார்வை தீக்கங்காகத் தகிக்க, முட்டாசாக இனிக்கக் கெஞ்சிய வார்த்தைகளை, சட்டெனப் பட்டாசாக்கி வெடித்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்தார் அப்பா, நாகராசு. பகவதியைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், வெள்ளந்தி மனுஷி. இதனாலேயே அவளை ‘அப்புராணி’ என்றே குறிப்பிடுவார்கள்;. தனக்கிருந்த ஜந்து ஏக்கர் விவசாய நிலத்தில், பலவகைப் பயிர்களை பயிரிடுவதும்இ ஆண்கள் இருவரும், பெண்கள் இருவருமான தனது நான்கு பிள்ளைகளை பாதுகாத்து ஆளாக்குவதிலுமே அவளது கவனம் முழுசும் இருக்கும். அவ்வளவாக விவரந் தெரியாத அந்தப் பிஞ்சுப் பருவத்தில். குலோத்துங்கனை எப்போதாவது வீதியில் பார்த்துவிட்டால், அப்படியே அவனது கையை, தனது கையால் பிடித்து அழைத்துக்கொண்டு போய், மிட்டாய், பிஸ்கெட் என ஏதாவது தின்பண்டங்கள் வாங்கித் தந்து. இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி முத்தங்கொடுப்பாள். இவ்வாறு முச்சந்தியில் வைத்து ஒருநாள் அவள் கொண்டிருப்பதைக் கவனித்துவிட்ட அவனது அப்பா நாகராசுவின் மனைவி முத்தம்மாள், அவன் விளையாடி முடித்துவிட்டு வீட்டுக்குப் போகவும், ‘என்ன சொன்னாலும் ஓந் தலையில ஏறாதாடா? ரோட்ல போயி வர்ற யாரு.. எது வாங்கித் தந்தாலும் சாப்ட்டுக்கிறதா?’ என்று சொன்னவாறே அவனது வலது காதை கையினால் ஆத்திரத்துடன் திருவினாள். அதன்பிறகு, வீதியில் பகவதியைப் பார்த்தாலே, நான்கு கால் பாய்ச்சலில் வீட்டுக்கு ஓடிப்போய்விடுவான் குலோத்துங்கன். ஊரில் பலரும், அவனை, ‘எலேய் முப்பதாயிரம்..’ என்றும், ‘கூலிக்குப் பொறந்தவனே என்றுமாக பட்டப்பேர் வைத்துக் கூப்பிடுவதுண்டு. அந்த இளம்பிராயப் பருவத்தில், அப்படிக் கூப்பிடுவதற்கான அர்த்தம் அவ்வளவாகப் புரிபடாமல் இருந்த அவன், பத்தாங் கிளாஸ் சேர்ந்திருந்த புதிதில், ஒருநாள், முச்சந்தியில் பனியாரக்கடை வைத்திருக்கிற வேலாயிப் பாட்டியிடம்,“என்னைய எதுக்கு பாட்டி எல்லாரும் முப்பதாயிரம், கூலிக்கிப் பொறந்தவனேன்னு கூப்டுறாங்க?” என்றுக் கேட்டான். அப்படியே இரண்டு கைகளையும் அவனுக்கு முன்னால் நீட்டியபடி, அவனது கைகளைப் பிடித்து பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டவாறு ‘அது எதுக்குன்னு, ஒனக்குத் தெரியாதா காள? என்றாள். அவன், ‘தெரியாது’ என்பதுபோல அப்படியும், இப்படியுமாகத் தலையை ஆட்டினான். ‘ம்.. சரி.. சரி.. சொல்றேங் கேளு. இப்ப அம்மான்னு ஒன்ன வளத்துட்டு வருதே, முத்தம்மா.. அது ஒன்னப் பெத்தத் தாயி கெடையாது. ஒன்ன கடை வீதியில பாத்து, ஓங்கிட்ட அடிக்கடி அக்கறையா சௌக்கியம் வெசாரிக்கிறாளே பகவதி, அவதே ஒன்னப் பெத்த ஆத்தாக்காரி’ அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவளது ஆச்சரியப் பதில், வீச்சரிவாளாக மூளைக்குள் நீண்டு மூச்சடைக்க வைத்தது அவனை. ‘அப்டியா? அப்றம் எதுக்கு ஆயா நான் வேறவங்க வீட்ல இருக்கேன்? எதுக்கு அந்தம்மா என்னை வேற வீட்ல வுட்டுட்டுப் போய்ருச்சு?’ அர்த்தம் பொதிந்த குரலில் வருத்தம் வறுத்தெடுக்கக் கேட்டான். அருகாய் பச்சை பூத்திருந்த முகம், சட்டென சருகாய் வாடித் துவண்டிருந்தது. ‘ஒன்னோட அம்மான்னு சொல்லிக்கிட்டு ஒன்ன இப்ப வளர்த்;துட்டு வர்றாளே, முத்தம்மா… அவளுக்குக் கல்யாணமாகி அஞ்சாறு வருஷமாகியும் புள்ள பொறக்கல. ஆனா புள்ள பெத்துக்கணுங்கற ஏக்கம் மட்டும் நாளுக்கு நாளு கூடிக்கிட்டே இருந்துச்சு அவளுக்கு. அப்புறந்தே, ஒன்னப் பெத்தாளே அந்தப் பகவதிகிட்டப் போயி முப்பதாயிரம் ரூவா கூலியாத் தர்றதாவும், வாடகத் தாயா ஆகச் சொல்லியும் விடாப் புடியாக் கெஞ்சினாங்க. மொதல்ல இதுக்கு பகவதி புருஷெஞ் சம்மதிக்கலேன்னாலும், சொந்தமா இருந்த கொஞ்சூண்டு வெவசாய நெலமும் மழை தண்ணியில்லாததால வறட்சியால, சோத்துக்குக்கூட லாட்ரியடிக்க வேண்டிய தரித்திரப் பொழப்பா ஆகிருச்சு. அதனால கஞ்சிக் கஷ்டமாவது தீரட்டும்ன்னு முப்பதாயிரம் ரூவாய வாங்கிட்டு வாடகைத் தாயாகி, புள்ள பெத்துத் தரச் சம்மதிச்சா.அப்புறம், ஆஸ்பத்திரியில போயி, இப்ப ஒன்ன வளத்துக்கிட்டு வர்றாரே, நாகராசு, அவரோட உயிர்ச் சத்த எடுத்து பகவதியோட கர்ப்பப் பையில வெச்சாங்க. அவளும் வாடகத் தாயா கர்ப்பமடைஞ்சு, கருவச் சொமந்து பத்தாவது மாசத்துல ஒன்னப் பெத்தெடுத்தா. ஒனக்கு அப்பெ, இப்ப ஒன்ன வளத்துட்டு வர்ற நாகராசுதே. நீ பெத்தெடுத்து மூணு மாசம் பகவதிதே ஒனக்குத் தாய்ப்பாலு குடுத்தா. அதுக்கப்புறமா ஒங்கப்பெ நாகராசோட பொஞ்சாதி இப்ப ஒன்ன வளத்துக்கிட்டு இருக்குற முத்தம்மா தன் வீட்டுக்குத் தூக்கிக்கிட்டுப் போயி வளக்க ஆரம்பிச்சிட்டா. அப்போயிருந்து ஒன்னப் பெத்த பகவதியோட புருஷங்காரெ, உன்கிட்ட அவள அண்ட விட்றதேயில்லை. ஒன்னப் பாக்கக்கூடாது.. பேசக்கூடாதுன்னு கண்டிஷன் போட்டுட்டானாம். அதே மாதிரி, ‘புள்ளையப் பெத்துக் குடுத்ததுக்கு வாடக குடுத்துட்டோம். இனிமேல் அவனுக்கும் ஒனக்கும் எந்தச் சம்பந்தமும் கெடையாது.’ன்னு இப்ப ஒன்ன வளர்த்திட்டு வர்ற முத்தம்மாவும் ஒங்க அம்மா பகவதிகிட்டக் கட்டன்ரைட்டாச் சொல்லி எழுதி வாங்கிட்டாங்களாம். மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடிங்கிறது கணக்கா, பகவதி நெலமெ ஆகி, ஓங்கிட்ட நெருங்க முடியாம நொறுங்கிக் கெடக்கா பாவம். ஒங்க அம்மா பகவதி ரொம்ப நல்ல பொம்பளைய்யா… சூழ்நெலதே ஒன்ன நெருங்கவுடாமெ அவள கூட்டுப் புழுவா மொடக்கிருச்சு. என்று சோகம் ததும்பக் கரகரத்தக் குரலில் அவள் சொல்லி முடிக்கவும், மனச் சுணக்கத்துடன் அப்படியே வீட்டுக்குப்போன குலோத்துங்கன், வீட்டில் யாரும் பார்த்துவிடாத இடத்தில் உட்கார்ந்து குலுங்கிக் குலுங்கி அழுதான். அதன் பிறகு ஒருநாள், தன்னை வளர்த்து வருகிற முத்தம்மாவிடம் கேட்டான். எங்க அம்மா பேரு பகவதியா அம்மா?’ அந்தக்கேள்வி அவளைக் கந்தலாக்கிப் போட்டிருக்க வேண்டும்… கடந்த காலத்தின் சிக்கல் நிறைந்த உண்மை, மனசையே சுக்கல் சுக்கலாய்ச் சிதறடித்ததுபோல போல அதிர்ந்தாள். ‘அப்டின்னு ஆரு சொன்னது? அப்டியெல்லாம் ஒண்ணுமில்ல. நீ எங்க புள்ளய்யா. நீ அந்தப் பொம்பள பகவதிகூட இனிமேல் பேசாதைய்யா. அந்தப் பொம்பளயோடப் புள்ளைங்களோ, புருஷங்காரனோ பாத்தா அம்புட்டுத்தே… வாரிசு உரிமையோட சொத்துக்குச் சொந்தங் கொண்டாட வந்துட்டதா ஒன்ன அடிச்சிப்புடுவாய்ங்கெ. நீ நல்ல புள்ளதானெ.. அந்தம்மாவ அடிவாங்க விடமாட்ட இல்லீயா..! ’ என்றும், இன்னும் பலவித பயமுறுத்தும் வார்த்தைகளில் சொல்லியும் எச்சரித்திருந்தாள். அதன் பிறகு, அன்றுச் சாயங்காலமே, குலோத்துங்கனைப் பார்த்து, ‘எலேய்.. பத்தாயிரம். கூலிக்கிப் பொறந்தவனே’ என்று வழக்கம்போல பெட்டிக்கடை முனுசாமி கூப்பிட, இயல்பாயிருந்த அவனது முகம், புயலின் கோரம் கூட்டியது. ‘ஏம்பேரு குலோத்துங்கெ. முப்பதாயிரங் கெடையாது. நீதே முப்பதாயிரம்.. ங்கோத்தாதே முப்பதாயிரம்.. ங்கொக்காதே முப்பதாயிரம்.. ஓந் தங்கச்சிதே முப்பதாயிரம்’ என்றுப் பதிலுக்கு தடித்த வார்த்தைகளுடன் எகிறியிருந்தான் குலோத்துங்கன். ‘முப்பதாயிரம்’ என்று தன்னை பட்டப்பேர் வைத்து அழைப்பதற்கான உண்மையான அர்த்தம் தெரிந்த பின்பு, அப்படிக் கூப்பிடுபவர்களிடம் சண்டை போடுவதும், பக்கத்திலிருப்போர் சமாதானம் செய்து வைப்பதும், வாடிக்கையான ஒன்றாகவே ஆகிவிட்டிருந்தது. உள்ளுரில் பத்தாம் வகுப்புப் படித்து முடிக்கவும், அதன்பிறகு வெகு தொலைவில் உள்ள நகரம் ஒன்றில் பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு ஆஸ்டலில் தங்கிப் படித்து முடித்து, அதன் பிறகு, சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் சேர்ந்து மூன்றாமாண்டுப் படித்து வந்தான். பத்தாம் வகுப்புப் படித்து முடிக்கிறவரையிலும், பகவதி இருக்கிற பக்கம்கூடப் போவதில்லை குலோத்துங்கன். எப்போதாவது ஏக்கமாயிருக்கும் தருணங்கில் பாசப் பீறிடல் தாக்குவதுண்டு. அவளைத் தேடிப் போய்ப் பார்த்துப் பேச மனப்பட்சி படபடக்கும். ஆனாலும் ‘நீ பகவதிகூடப் பேசுனத அந்தம்மாவோடப் பிள்ளைங்களோ, புருஷனோ பாத்துட்டா, அந்தம்மாவ அடிச்சுப்புடுவாய்ங்கெ’ என்ற வார்த்தைகள் நினைவுக்கு வர, உயிர் பிடுங்கும் ஏக்கத்துக்கு, துயர் பிழிய அணைபோடுவான். நம்மால பாவம் அந்தம்மாவுக்கு கஷ்டம் வந்துரக்கூடாது’ என்றெண்ணி,பாச வதைப்பை,அப்போதே மனசுக்குள் புதைப்பான். இன்று இறந்துபோன அம்மா(!) பகவதியைப் பற்றியே, சிந்தனை பூராவும் மேய விட்டபடியிருந்த குலோத்துங்கன், சட்டென காதுகளைக் கிழித்துப் போடுமளவுக்கு வீதியிலிருந்து வருகிற தாரை தப்பட்டையின் பெருத்த ஓசையைக் கேட்டுச் சிலிர்த்தெழந்தான். ‘அம்மா பகவதியோடப் பிரேத ஊர்வலமாயிருக்குமோ..?’ மனசெல்லாம் திரண்டு வருகிற ஏக்கக் களேபரம், குலோத்துங்கனை மிரண்டு எழ வைத்தது. வேகமாய் வாசலுக்கு ஓடிவந்து பார்த்தான். மல்லிகை, கனகாம்பரம், சாமந்தி, ரோஜா என விதம் விதமானப் பூ மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த டிராக்டர் ஒன்றில், பகவதி அம்மாவின் உயிரற்ற பூதஉடல், திரளான மனிதத் தலைகளுடன், மூச்சடங்கிய மௌனத்தோட போய்க் கொண்டிருந்தது. ‘எனக்கு உசுரு தந்த தாயே.. ஓ பொணத்தோட சுடுகாட்டுக்கு வர்றதுக்குக்கூட உரிமை இல்லையா எனக்கு? என்றுச் சொல்லிக் கதற வேண்டும் போல உதடுகள் நெளிந்து அழுகுரலாய் வெடிக்க அசைந்தன. இவன், அந்த இறுதி ஊர்வலத்தைப் பார்ப்பதைக் கவனித்துவிட்ட அப்பாவின் மனைவி முத்தம்மாள், குலை நடுங்க அவனுக்கு அருகில் வந்து நின்றாள். ‘என்னய்யா.. இங்க வந்து நின்னுட்ட? வேடிக்க பாத்தது போதும். வீட்டுக்குள்ளாரப் போ சாமீ ’ என்றாள். ஆனால் அவன் போகவில்லை. சட்டென பயக்கூடு உடைத்து தன்னை விடுவித்துக் கொண்டது, மனப்பட்சி. தடை வார்த்தைகள் தாண்டி மடை திறந்துப் பீரிட்டது திடீர்த் தைரியம். முகத்தை வேகமாய்த் திருப்பி, அவளை உக்கிரமாய் ஒரு முறைப்பு விட்ட அவன், அதே வேகத்துடன் கால்களை வீசிப்போட்டு வீதியில் நடந்து, அந்த ஊர்வலத்தை முந்திக்கொண்டு போய், அடுத்த கால் மணி நேரத்தில் மயானத்தை அடைந்தான். மயானத்தில், வெட்டியான்கள் இரண்டு பேர், பிரேதத்தை எரியூட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருப்பது தெரிந்தது. சிறிது நேரத்தில், பகவதியின் பிரேதமும் அங்கு வந்து சேர்ந்திருந்தது. குலோத்துங்கன் ஒரு ஓரமாகப்போய் நின்று கொண்டான். பகவதியின் பிரேதத்தை கீழே இறக்கி, அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகுக் குவியலில் மல்லாக்குப் படுக்க வைத்து, அடுத்த அரைமணி நேரத்திற்குள்,உடல் முழுக்க விறகுக் கட்டைகள், வறட்டிகளை அடுக்கி வைத்து, எல்லாச் சடங்குகளும் முடிக்கப்பட்டன. பகவதியின் பிரேதத்திற்கு நெருப்பு வைப்பதற்காக, எரியும் கொள்ளிக் கட்டையைக் கொண்டுபோய் வெறித்த பார்வையுடன் நின்றிருந்த மூத்த மகன் போஸ்மணியிடம் ‘இந்தாப்பா.. ஒந் தாயி பிரேதத்துக்கு கொள்ளி வை.’ என்றுத் தர, அவன் அதை வாங்கவில்லை. தேக விறைப்பும், கோப முறைப்புமாக வேறு பக்கம் திரும்பி நின்று கொண்டான். “எலேய்.. இந்தச் சமயத்துல இப்டி வீம்பு பண்ணினா எப்டிடா? நெருப்புக் கட்டைய வாங்கி, பிரேதத்துக்கு கொள்ளி வைடா. சொத்து விஷயமா, இந்தக் காரியமெல்லாம் முடிஞ்சப் பெறகு பேசிக்கிறலாம். சொத்துச் சண்டைக்கி நேரங்காலந் தெரிய வேண்டாமா? நீ கேக்குற வயல ஓ பேருக்கே எழுதித் தர்றேன்.” என்றவாறே தீயால் விசும்பி எரிந்து கொண்டிருக்கும் கட்டையை அவனுக்கு முன்பாக நீட்டினான். “ஒன்னோட வார்த்தைய ஓட்ற தண்ணிலதான் எழுதணும். ஒன்ன நம்ப முடியாது. இப்பவே ஒரு வெள்ளப் பேப்பர்லயாவது அக்ரிமென்டு கணக்கா எழுதியாவது கையெழுத்துப் போட்டுக் குடு. அப்பத்தான் நம்புவே.” அதுவரையிலும், களத்தில் அவிழ்த்து விடப் போகிற ஜல்லிக்கட்டுக் காளையாக கோப முகங்காட்டி நின்றிருந்த சின்ன மகன் செந்தட்டி, வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டவாறு, அவரது அருகில் வந்து நின்றான். “அந்த வயல அவரு பேர்ல எழுதித் தந்துட்டு, எனக்கு மட்டும் அந்தத் தரிசுக்காட்டக் குடுக்கப் போறீயாப்பா? அந்த ஏமாத்து வேல ஏங்கிட்ட நடக்காது. ஆயுதத்த எடுத்தேன்னா, ஒருத்தந் தலையும் ஒடம்புல இருக்காது.” “நீ தலைய எடுக்குற வரைக்கும் ஏங் கையி என்னா மயிரு புடுங்கவாப் போகும்? அந்த நெல்லு வெளையிற வயலு எனக்குத்தே. அந்த வயல் மேல யாரு உரிமை கொண்டாடுனாலும், நா மனுஷனா இருக்க மாட்டேன். சின்ன மகன் செந்தட்டி, தனக்கேயுரிய கரகரத்தக் குரலில் மீசையை நீவிவிட்டபடியே இன்னும் நெருங்கி வந்து முறுக்கினான். “இந்தாங்கப்பா.. நிறுத்துங்க ஒங்க சண்டைய. மழை வர்றாப்ல இருக்குது. சட்டுன்னு வேலைய முடிச்சிட்டு அவுங்கவுங்க போற சோலிக்குப் போக வேணாமா?” சிக்கலான இவர்களின் மயானச் சண்டையை செரிக்கத் திணறியது நாட்டாமையின் பொறுமை. வறுத்தெடுக்கிற மன ஆற்றாமையில், பருத்த உடல் அதிர வலுத்து விழுந்தன வார்த்தைகள். “அதெல்லாம் முடியாதுங்க நாட்டாமெ. ஆத்தோர வயல எனக்கேத் தர்றேன்ட்டு ஒரு வெள்ளக் காகிதத்துல எழுதிக் கையெழுத்தாவது போட்டுத் தரணும். அப்பத்தே நா எங்கம்மாவோடப் பிரேதத்துக்குக் கொள்ளி வெப்பே..” இறுதியான வார்த்தைகளில், உறுதியாகச் சொல்லி விட்டிருந்தான் பெரிய மகன். இந்த வீரியமான வார்த்தைச் சலசலப்பு, மயானத்தில் ஆங்காங்கு சிறுசிறு அணியாகச் சிதறிக்கிடந்த மனிதத் தலைகள் எல்லாவற்றையும், கரும்புச் சக்கையைக் கண்டுவிட்ட எறும்புக் கூட்டமாக அவர்களைச் சுற்றி நின்று மொய்க்கப் பண்ணியது. பொறுத்துப் பார்த்த நாட்டாமை, “சரிப்பா.. அம்மா சடலத்துக்கு மூத்த மகெந்தே கொள்ளி வைக்கணும்ங்கிற சம்பிரதாயத்த மீறுறதத் தவிர, வேற வழி இல்ல.” என்று சொல்லி மூச்சு வாங்கிக்கொண்டு, மறுபடியும் தொடர்ந்தார் “யப்பா சின்னவனே.. நீயே ஒங்கம்மா பிரேதத்துக்கு கொள்ளி வைப்பா.” பகவதியின் சின்ன மகன் செந்தட்டியைப் பார்த்துச் சொன்னார். “நீங்க வேற.. எதுக்குங்க நாட்டாமெ எரியுற கொள்ளிக் கட்டையால முதுகச் சொறிஞ்சுவுட்றாப்ல பேசுறீங்க? நா மட்டும் இழிச்ச வாயனா? என்னை கொள்ளி வைக்கச் சொல்லிட்டு, அந்த வயல மூத்தவெம் பேருக்கு எழுதி வெக்கவா? இதுக்கு நாஞ் சம்மதிக்க மாட்டே. வயல ஏம் பேருக்கு எழுதி வெக்கிறதா, எங்க அப்பனெ கற்பூரத்தக் கொளுத்தி சத்தியம் பண்ணச் சொல்லுங்க.. அப்றமா நாங் கொள்ளி வெக்கலேன்னா, ஏங் காத வேண்ணாலும் அறுங்க.” வலது கை விரல்களால், தனது இடது காதின் நுனியைப் பிடித்து, கீழாக ஜவ்வுமிட்டாய் போல இழுத்துக் காட்டிச் சொன்னான் சின்ன மகன். அதுவரையிலும் லேசாகத் தூறிக் கொண்டிருந்த வானம், பலத்த மழையாய் வலுத்து, அங்கிருந்த தகரக் கொட்டகையில் தாரை தப்பட்டை வாசிக்க ஆரம்பித்தது. “என்னப்பா.. ஓ ரெண்டு மகெங்களும் இப்டி மயானத்துல வந்து மொரண்டு பண்ணிட்டு இருக்காய்ங்க..? பெத்த தாய்க்கு காரியம் பன்றப்ப சொத்துக்கு சண்ட போட்டுக்கிட்டு..? ச்..சை..! அசிங்கமா இருக்குதுப்பா. வெளியூர்ல இருந்து வந்துருக்கிறவங்கெ நம்ப ஊர்க்காரங்களப் பத்திக் கேவலமா நெனைக்க மாட்டாங்களா?” நாட்டாமையின் இந்த ஆதங்கம், அப்பாவின் நெஞ்சுக்குள் ஊசி குத்தியிருக்க வேண்டும். முடிவா என்னடா சொல்றீங்க..? கொள்ளி வெக்க முடியுமா.. முடியாதா?” என்றார். “மொதல்ல, அந்த ஆத்தோரமா இருக்குற வயல் யாருக்குன்னு முடிவாச் சொல்லுங்க.” இரண்டு பேருமே கோரஸாகச் சொன்னார்கள். இனிமேலும் அவர்களை வற்புறுத்துதில் எந்தப்பயனும் இல்லை என்று தோன்றியிருக்க வேண்டும் அவருக்கு. சட்டென அந்த இடத்திலிருந்து வேகமாய்ப் போன அவர், எந்த நேரத்திலும், தனக்கு அடியோ, வசவோ வரக்கூடும் என்ற அச்சத்துடன் அழுதழுது உப்பிய முகத்துடன், ஓரமாய் நின்றிருந்த குலோத்துங்கனின் அருகில் போய் நின்றார். அவனுக்கு உடல் வெடவெடத்தது. ‘நாம நெனச்சதுபோலவே அடிக்கத்தே வர்றாரோ..?’ என்றத் திகில், உயிர்க்குலையில் கத்தி போட்டது. அப்படியே அவன் அங்கிருந்து நகர ஆயத்தப்பட, வலது கையை முன்னுக்கு வீசிப் போட்டு, அவனது கையைப் பற்றிக்கொண்டார். அம்மாவின் கணவர்.“பயப்படாதய்யா. நான் ஒண்ணுஞ் செய்ய மாட்டே... என்றபடி, தனது கையில் பிடித்திருந்த கொள்ளிக் கட்டையை அவனது கையில் தந்தார். “வா குலோத்துங்கா.. ஒன்னப் பெத்த அம்மாவுக்கு நீ கொள்ளி வெய்யி. கூலிக்காக ஒன்ன வயித்துலச் சொமந்திருந்தாலும், நீயும் அவ பெத்தப் புள்ளதானெ…! ம்.. பயப்படாத எவெ ஒன்னத் தொட்ருவான்னுப் பாப்போம்.. அவனது கையைப் பிடித்துக்கொண்டு வந்து சிதைக்கு அருகில் நிறுத்த, அவன், குலுங்கி அழுதபடியே, அந்தக் கொள்ளிக் கட்டையைக் கையில் வாங்கிக்கொண்டு, விறைத்த உடலும், வெறித்த பார்வையுடனுமாக சிலைபோல அசையாமல் நின்றான். அங்கிருந்த எல்லோருக்கும், இது விரக்தியை உண்டு பண்ணியிருக்க வேண்டும். நாட்டாமை விரக்தியின் உச்சத்திற்கே சென்றவாறு, “என்ரா.. எதுக்குத் தயங்குற? நீயும் அந்தத் தாயளிகளப்போல ஏதாச்சும் எதிர் பாக்குறீயா?” என்றார். அந்த அதட்டல், அவனது அசைவற்ற மௌனத்தை உசுப்பி விட்டிருக்க வேண்டும். ‘எனக்கு சொத்துல பங்குன்னு சல்லிக்காசுகூட வேணாம். ஊரறிய இனி யாரும் என்னை முப்பதாயிரம்ன்னு கூப்டக் கூடாதுன்னும், நானும் பகவதியோடப் பிள்ளைதேன்னுச் சொன்னாப் போதும்.’ என்றபடி, அழுதுகொண்டே பகவதியின் சிதைக்கு நெருப்பு வைக்க, அதுவரையிலும் அவனது வார்த்தைகளைச் சிலாகித்தவாறு அமைதியாயிருந்த பகவதியின் கணவர், நெக்குருகலுடன் தாவிப்போய் குலோத்துங்கனை இறுகக் கட்டிக்கொண்டு, அவனது தோளில் முகம் புதைத்து ஓரிரு நிமிடங்கள் குலுங்கிக் குலுங்கி அழுதவாறு, “ஒங்கம்மா பகவதி, ஒன்னப்போல இன்னும் ரெண்டு பிள்ளைங்களக்கூட கூலிக்குப் பெத்துப் போட்ருக்கலாம்யா குலோத்துங்கா’என்றார். முகவரி: அல்லிநகரம் தாமோதரன், 8, மூர்த்தி தெரு, அல்லிநகரம். தேனி-625531. கைப் பேசி எண்: 9626950509 நஅயடை: றசவைநசனாயஅழவாயசயn;பஅயடை.உழஅ

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.