Justin Olerzor
சிறுகதை வரிசை எண்
# 226
ஆண்மணி
-------------------------------------------------------------------சிறுகதை எழுத்தாக்கம்: ‘ஒளிர்ஞர்’
(குறிப்பு: இக்கதை 99 விழுக்காடு வடமொழிச் சொற்கள் இல்லாமல் எழுதப்பட்டுள்ளது)
பெண்களை, பெருமையாக ‘பெண்மணி’ என அழைக்கும் போது, நம் தலைவன் பொன்னனை ‘மணி’ சேர்த்து ‘ஆண்மணி’ என சொல்வதில் என்ன தவறு?
பொன்னன் - புனைபெயர் - இந்த பெயரில்தான் சுடச்சுட ‘ஆவிபறக்க’ கட்டுரைகள் எழுதுவான். இயற்பெயர் இந்த கதைக்கு வேண்டாம்.
பொன்னன், நேராகப் பார்த்தால், சுமார் முகமும் பக்கவாட்டில் ஓரளவு அழகும் பின்னிப் பிணைந்த படைப்பு. அறிவுடன் கூடிய ஆளுமையுடன், இந்தியர்களின் காபி நிறம்.
வயது 45 ஆகி, முகத்து முடிகள் அறுதிப் பெரும்பான்மை வெளுத்து விட்டன. முடிக்கு நிறமூட்ட அஞ்சி, மீசை, தாடியை வழித்து, வெண்ணெய் தடவியது போல தோன்றுவான். தலை நரையை தொப்பி அணிந்தும், கண்களைச் சுற்றியுள்ள சுருக்கத்தை குளுகுளு கண்ணாடி போட்டும் மறைத்திருப்பான்.
கடந்த 20 ஆண்டுகளாக, சென்னையில் ‘பொறிநுட்பம்‘ என்கிற உப்புமா பத்திரிகை நிறுவனத்தில் துணை ஆசிரியராக குப்பை கொட்டுகிறான்.
அவன் ஊதியம் என்னவென்று கேட்டால் பலரும் உள்ளுக்குள் காரித் துப்புவார்கள். வெளியே, ‘பரவாயில்லை’ என்று சொல்லி ஆறுதல் ‘படுத்தி’ எடுப்பார்கள்.
‘வேலையை விட்டுடாத... இந்தக் காலத்தில வேலை கிடைக்கிறதே ரொம்ப கஷ்டம், என்று 18 ஆம் நூற்றாண்டு முதல் கோடிக்கணக்கான வாய்களால் உளறப்படும் பொன்மொழியை அள்ளி விடுவார்கள்.
பொறிநுட்பம் நிறுவனம், மின்கணினி, தொழிற்புரட்சி, வேலைநுட்பம், உழவுக்கலை, பொன்மங்கை... முதலிய துறைசார் இதழ்களை வெளியிட்டு வந்தது. அச்சு இதழ்களை விட, இணையத்தில் வெளியாகும் மின்னிதழ்களுக்கு நல்ல வரவேற்பு. மூன்று இதழ்களுக்கு இவன் துணை ஆசிரியர். முன்பு மூன்று பேர் செய்த வேலை.
காலை 9.00 மணிக்குத் தொடங்கும் அலுவலகம், பெண்களுக்கு பாதுகாப்பு கருதி, 6.00 மணிக்கு முடியும்; ஆண்களுக்கு 9.00 மணி தாண்டும்.
பொன்னன் கணினியில் உட்கார்ந்தால், படைப்புகளைத் திருத்துதல், மொழிபெயர்ப்பு, வல்லுநர்களை அலைபேசியில் நேர்முகம் கண்டு, பதிவுசெய்தல் என 12 மணி நேர இடைவிடாத வேலை.
புறநகரில் மொட்டைமாடி ஆஸ்பெட்டால் கூரையின் கீழ், குடியிருக்கும் பொன்னன், காலை 5.00 மணிக்கு எழுந்து, தானே சமைத்து, நண்பகல் உணவு கட்டி, ரயில்களைப் பிடித்து, 9.00 மணிக்குள் அலுவலகத்தில் மின்-கையெழுத்திட வேண்டும்.
ஐந்து நிமிடம் கடந்தாலும், அந்த கேவலமான சம்பளத்தில் அரைநாள் ஊதியம் வெட்டு. இரவில் 9.00 மணி என்று சொன்னாலும், சில நாட்கள் 10.00 - 10.30 மணி தாண்டும். மீண்டும் ரயில்களைப் பிடித்து, வீடு வந்து சேர 12.00 - 12.30 மணி ஆகிவிடும்.
இதழியலில் முதுகலைப் பட்டம் முடித்து, 25 வயது இளைஞனாக பொன்னன் இப்பத்திரிகைத் தூண்டிலில் மாட்டிக் கொள்ளும் முன்பு, நெல்லை மாவட்டத்தில், அவன் அப்பா அம்மா உயிருடன் இருந்து, அவன் திருமணத்திற்கான முயற்சிகளை எடுத்தார்கள்.
இவன்தான், திருமணத்தை தாமதப்படுத்தி, பல்வேறு அரசு வேலைகளுக்கு முயற்சித்தான். பல தேர்வுகளை எழுதினான். சிலரிடம் காசு கொடுத்து ஏமாந்தான். இவன் முயற்சிகளுக்கு நாமம் போடப்பட, வயது 35 தாண்டியதும், அரசு வேலைக் கதவு இழுத்து மூடப்பட்டது.
அதன்பின், பொன்னன், குறைந்தபட்சம் கால் மில்லியன் பிரதிகள் விற்கும் முன்னணி இதழ்களிலோ, ஏதாவது தொலைக்காட்சி நிலையத்திலோ, செய்தி ஆசிரியராக (அ) துணை ஆசிரியராக சேர்ந்துவிட முயற்சி செய்து கொண்டே இருக்கிறான்.
இன்று தொலைக்காட்சிகளில், முன்னணி இதழ்களிலும் வேலைகிடைக்க, நுனிநாக்கில் பேசும் அழகான பெண், விஐபி பரிந்துரை, தமிழைக் கொலை செய்து, எழுதிப் படித்தல், தமிங்கில மொழி, வெள்ளைத் தோல், மேல்தட்டு மனோபாவம் - போன்ற சிறப்புத் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
பொன்னனின் 40 வயதுக்குள், அப்பாவும் அம்மாவும் இறந்து போய்விட, இவனுக்கு திருமணம் செய்துவைக்க உறவினர்கள் யாரும் இல்லை. ஒரு அக்கா இருந்தாலும், அவளுக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் பிறந்த பின்பு, தனக்கு தம்பி உண்டு என்பதையே மறந்து விட்டாள்.
இனம் / சமயம் தடையல்ல. 40 - 44 வயதுகளில், பொன்னனுக்கு பொருத்தமான ‘திருமணம் ஆகாத’ வரன்கள் கிடைக்காத சூழல். பல கைம்பெண் (அ) மணமுறிவு பெற்ற வரன்கள் இருப்பதாக தெரிய வந்தது.
அந்த வரன்களும், இவன் சம்பளத்தைக் கேட்டவுடன் அலறித் துடித்து ஓடி ஒளிந்து கொண்டன. ‘நீங்கள் அழைக்கும் எண் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது’
ஒரு காலத்தில் செங்கோல் பிடித்து ஆட்சி செய்த மூட்டைப் பூச்சிகளின் இடத்தை கொசுக்கள் பிடித்து விட்டன. இந்த மூட்டைப் பூச்சிகளோ திருமணத் தரகர்கள் வடிவில் அலைகின்றன.
“பணக்கார விதவை, கார், பங்களா, ஒரே பொண்ணு, வெளிநாட்டு வேலை, ஏக்கர் கணக்கில சொத்து, 100 பவுன் நகை” என ஆசைகாட்டி, பொன்னனின் செங்குருதியைக் குடித்துக் கொண்டிருக்கின்றன.
“பொன்னன், எப்போ கல்யாணம்?” என்பது போன்ற ‘உள்குத்து’ கேள்விகள், பொன்னன் காதில், சொற்களாக கேட்பதில்லை, வாந்தியாக விழுகின்றன.
திருமணமாகி பெங்களூரில் வாழும், பொன்னனின் ஒரே ‘அன்பு’ அக்கா ஒருநாள், பொன்னனின் அலைபேசியில் தொடர்பு கொண்டாள்.
“தம்பீ, லேய்... உனக்கு ஒரு சம்மந்தம் பார்த்து வச்சிருக்கேன். கவர்மென்ட் ஸ்கூல்ல டீச்சரா இருக்காளாம். வயசு 39 ஆகுதாம். உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பாலே” என்றாள்.
பொன்னன், நண்பன் சொன்ன அழகு நிலையத்தில், தலைக்கு நிறமூட்டி, நிறுவனத்தில் விடுப்பு சொன்னான். அந்தியோதயா ரயில் சாளரத்தில் ஓடும் செவ்வகக் காட்சிகளை, வேடிக்கை பார்த்தவாறு, நெல்லையில் இறங்கி, அங்கிருந்து பேருந்து பிடித்து, பிறந்த சிற்றூர் சென்றான்.
ரொம்ப நாள் கழித்துப் பார்த்த அக்கா, பளபளவென ஊதிப் பருத்திருந்தாள். தங்கத் தேர் போல, உடம்பெல்லாம் பொன்னகைகள். தேரின் வடம் போல, கழுத்தில் 22 கேரட் வடம்.
“வாக்கா, அத்தான் நல்லா இருக்காரா? மருமகளும், மருமகனும் நல்லா படிக்கிறாங்களா?”
தம்பி தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து விட்டாள் அக்கா. பெண்ணைப் பற்றி பேச்சு மூச்சைக் காணோம். “அக்கா, அந்த டீச்சர் பொண்ணு” பொன்னன், வெட்கத்தை விட்டுக் கேட்டான்.
“அது வந்து தம்பீ, பொண்ணு... வந்துலே.... இந்த இடம் கைமாறிப் போச்சுலே... கொஞ்சம் பொறுத்துக்கலே தம்பீ. உனக்கு ஒரு நல்ல கல்யாணம் பண்ணி வச்சிட்டுத்தான், அத்தானும் நானும் கண்ணை மூடுவோம்லேய்”
“அக்கா, பெங்களூர்ல, ஏதாவது நல்ல பொண்ணா கிடைக்குமாக்கா?”
“அதுக்கு ஒரு வழி இருக்கு தம்பீ... அத்தானுக்கு, பெங்களூர்ல ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி வைக்கணும்னு ஆசை. அந்த கம்பெனி வச்சா, கலர் கலரா நிறைய பொம்பளைப் புள்ளைங்க வேலை பார்க்க வருவாளுங்க...”
பொன்னன் திருமண ஆசை வழிய, தலையைத் தலையை ஆட்டினான்.
“அதுங்கள்ல, நல்லப் பொண்ணா பார்த்து, உனக்கு முடிச்சிடலாம்லே. ஆனா, அதுக்கு முன்னால நீ ஒரு சின்ன உதவி செஞ்சா போதும்”
“காசு ஏதாவது கடன் புரட்டித் தரணுமாக்கா?”
“காசா... மூச்... என் கல்யாணத்துக்கே, நீ வட்டிக்கு வாங்கி, கண்ணீர்விட்டு அடைச்சே. உன்கிட்ட நான் காசு கேட்பனா? உன் அத்தான், உறக்கத்திலயும் பொலம்பிட்டே இருக்காரு. உன்னைத்தான் நம்பியிருக்கோம்”
“நான் என்னக்கா செய்யணும்?”
“அய்யோ பாவம் நீ... உன்கிட்ட கேட்க முடியுமா? நீயே வயித்துக்கும் சோத்துக்குமா அல்லாடிக்கிட்டு இருக்கே..”
“தேங்கா உடைச்சது மாதிரி கேளுக்கா?”
“தம்பீ, உன் பேர்ல இருக்க, அரை ஏக்கர் வயல் சும்மாத்தானே கெடக்கு. அதை என் பேர்ல எழுதி வச்சிடேன். அந்த இடத்தை ஈடா வச்சி, பேங்குல லோன் வாங்கி, கம்பெனியை தொடங்குறோம்...
பொன்னன் தலையைச் சொறிந்தான்.
“ரெண்டு வருசம் கழிச்சி, பேங்க் கடனை அடைச்சிட்டு, உன்னோட இடத்தை உனக்கே திருப்பி எழுதி வச்சிடுறேன். எழுத்துக் கூலியெல்லாம் நானே பார்த்துக்கறேன். உனக்கு நயா பைசா கூட செலவு வைக்க மாட்டேன் லேய், பார்த்துக்க”
அக்கா, தம்பி மூளையை சோப்பு போட்டுக் கழுவி, நறுமணம் புகைத்து - அவன் பங்கிலுள்ள அரை ஏக்கர் நிலத்தையும் எழுதி வாங்கிக் கொண்டாள்.
எழுதிக் கொடுத்த வள்ளல் பொன்னனை வெறுமனே அனுப்ப மனமில்லாமல், திருநெல்வேலி லாலாக் கடையில் அரை கிலோ அல்வாவும், கால் கிலோ மிக்சரும் வாங்கி, ரயிலுக்கு வழியனுப்பி வைத்தாள்.
“உடம்பைப் பார்த்துக்கலே தம்பீ” அன்பான அறிவுரையுடன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
இது நடந்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. அத்தானின் மென்பொருள் நிறுவனம் ஓகோவென இயங்குவதாக கேள்விப்பட்டான்.
எழுதி வாங்கிய சொத்தை அக்கா திருப்பித் தரவும் இல்லை. பொன்னனுக்குப் பெண் பார்க்கவும் இல்லை. அலைபேசியிலும் அக்காவின் குரல் காணாமல் போய் விட்டது.
இப்போது பொன்னனின் வயது 49. அடுத்த ஆண்டு வந்தால், 50. அதற்குள் மணமகள் அமைய வாய்ப்பு இருக்கிறதோ - இல்லையோ?
ஆனால் பொன்னனின் நம்பிக்கை மட்டும் நிற்கவில்லை. நொடிகளைப் போலவே இயங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டில், தானே சொந்தமாக மின்னிதழ் / இணைய இதழ் வெளியிடும் முயற்சிகளில் பொன்னன் இறங்கியிருக்கிறான்.
“விளிம்போர மக்களின் - காப்பியங்களை எழுதி, ‘முற்போக்கு’ மணிமகுடத்தை அணிந்துகொள்ள, அக்கால புதுமைப்பித்தன் முதல், இக்கால புத்தியக்க பித்தன்கள் வரை பல்லாயிரம் பேர் இருந்து வருகிறார்கள். ஆனால்...?
திருமணக் கனவுகளால் அரிக்கப்பட்டாலும் தான் கொண்ட ‘தொலைநோக்கால்’ துருப்பிடித்துப் பட்டுப்போகாமல், உயிர் துளிர்த்து வாழும், சில மில்லியன் வெள்ளைச்சட்டை ‘ஆண்மணி’களும் இருக்கிறார்கள்.
சிறுகதை ஆக்கம்: ஒளிர்ஞர்
முகவரி: ஒளிர்ஞர், 5/8, காமராஜர் தெரு, புதிய அண்ணா நகர், திருமுல்லைவாயில் (ரயில் நிலையம் அருகில்), சென்னை - 600062.
அழைக்க / வாட்ஸ்-அப் செய்ய தொடர்பு எண்கள்:
9444333609 அல்லது 9444666210
மின்னஞ்சல் செய்ய : geniuspoetwriter@gmail.com
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்