logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

Aruljoothy

சிறுகதை வரிசை எண் # 225


சும்மா இருக்கிறேனா? காலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு, பிறகு குளித்து அடுக்களைக்குள் நுழைந்தாள் பாரதி. பாலை அடுப்பில் வைத்து நான்கு கோப்பைகளில் தனித்தனியாகக் காப்பித்தூள் சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்தாள். ஆம் மாமனாருக்குச் சர்க்கரை போடக்கூடாது ,மாமியாருக்கு அரை சர்க்கரை போட வேண்டும் ,கணவனுக்கு சர்க்கரை சரியாக இருக்க வேண்டும் ,தனக்கும் தேவையான சர்க்கரையைப் போட்டாள். பால் பொங்கியதும் தனித்தனியாகக் காபியைக் கலந்தாள். ஒவ்வொருவருக்கும் காபியைக் கொடுத்துவிட்டு ,மீண்டும் அடுக்களைக்குள் நுழைந்தாள், காலை நேரம் என்பதால் பரபரப்புடன் இட்லி மாவை எடுத்து இட்லி பாத்திரத்தில் இட்லி வேக வைத்து,தேங்காயை உடைத்து, சில்லு சில்லாகப் பெயர்த்துத் தேங்காய் சட்னி தயார் செய்தாள். அதற்குள் பெரிய மகன் ஓடி வந்தான், " அம்மா நான் இன்னைக்கு பிரஷ் பண்ணிட்டேன் எனக்குப் பால் கலக்கிக் கொடுங்கள்" என்றான் . அவளும் பால் கலக்கிக் கொடுத்தாள், இன்னொரு பாத்திரத்தில் மீண்டும் பாலை ஊற்றி நன்றாக ஆற்றினாள். சிறிய மகளுக்குப் பால் புட்டியில் பால் எடுத்துச் சென்றாள். அவளுக்கும் கொடுத்துவிட்டு மீண்டும் அடுக்களைக்குள் நுழைந்தாள். மகனுக்கும் கணவனுக்கும் மதிய சாப்பாடு தயார் செய்ய வேண்டும். சாம்பார் ,கூட்டு, ரசம், பொரியல் என்று தனித்தனியாகக் கணவனுக்கு எல்லாம் செய்து விட்டு எடுத்து வைத்தாள்.மகனுக்குத் தனியாக எலுமிச்சை சாதம் செய்து அவனுக்கு உருளைக்கிழங்கு பொடிமாஸ் செய்து வைத்தாள் .எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு தன்னுடைய ஆறிப்போன காபியை எடுத்து வாயில் ஊற்றினாள். மணி ஆகிவிட்டது மகனை பள்ளிக்குத் தயார் செய்ய வேண்டும் என்று புலம்பிக்கொண்டு ,அவனுக்கு இட்லி ஊட்டிவிட்டாள். பிறகு சீருடை அணிவித்து பள்ளியில் விட்டு வந்தாள். வந்தவுடன் அழுக்குத் துணிகளை எல்லாம் மெஷினில் போட்டாள்.இதற்கிடையில் மகளைக் குளிக்க வைத்து உடை மாற்றி அவளுக்கும் ஊட்டிவிட்டு, பிறகு தானும் சாப்பிட்டாள். "ஏமா பாரதி, சீக்கிரமா சாப்பிடக்கூடாது பையன் போறதுக்கு முன்னாடியே?" என்று மாமனார் கேட்டார். "இல்ல மாமா, மணி ஆயிடுச்சு, அதான் போயிட்டு வந்து சாப்பிடுறேன்" என்றாள். "சரி மா எனக்கும் அப்படியே ஒரு காபி போட்டு கொடும்மா", மாமனாருக்கு இரண்டாவது காபி கொடுத்தாகிவிட்டது.இப்பொழுது பாத்திரங்களை எல்லாம் கழுவியாக வேண்டும் என்று புலம்பினாள். எல்லா பாத்திரங்களும் கழுவி முடிப்பதற்குள் மணி 11 ஆகிவிட்டது. துணியும் துவைத்தாகி விட்டது. துணிகளை எல்லாம் எடுத்து அவற்றைக் காய வைக்க மாடிக்குச் சென்றாள், துணிகளை எல்லாம் காய வைத்து விட்டுப் பெருமூச்சு விட்டபடி வந்து ஹாலில் அமர்ந்தாள். அத்தை நாடகம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வேறு எதுவும் மாற்றி பார்க்க முடியாது என்று அவளும் அந்த பிடிக்காத நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு மகளோடு சிறிது நேரம் விளையாடினாள். அதற்குள் மணி பன்னிரண்டு ஆகிவிட்டது. மாமனாருக்குச் சர்க்கரை நோயும் ரத்தக்கொதிப்பும் இருப்பதால் அவருக்குத் தனியாகச் சமைக்க வேண்டும் என்று நினைக்கும் போதே , "இப்படி விளையாடிக்கொண்டிருந்தால் எப்படி? மணி ஆகிவிட்டது" என்று மாமியார் பேச தொடங்கியதும், "இதோ வரன் அத்தை, பாப்பாவ புடிங்க" என்று மீண்டும் அடுக்களைக்குள் சென்றாள்.சமையல் முடிப்பதற்குள் மணி ஒன்றரை மணி ஆகிவிட்டது. தன்னுடைய மகளுக்குச் சாப்பாடு ஊட்டி விட்டு, அனைவருக்கும் சாப்பாடு பறிமாரினாள். மணி இரண்டாகி விட்டது, தானும் அமர்ந்து டிவியில் பிடிக்காத நாடகத்தைப் பார்த்துக் கொண்டு சாப்பிட தொடங்கினாள் .அதற்குள் மகளுக்குத் தூக்கம் வந்துவிட்டது. விரு விரு என்று சாப்பிட்டுவிட்டு மகளையும் ,ஆராரோ பாட வைத்து தூங்க வைத்தாள். "அத்த பாப்பாவ பாத்துக்கோங்க ,நான் போய் மாடியில் இருந்து துணி எடுத்துட்டு வரேன்" என்று ஓடினாள். காய்ந்த துணிகளை எல்லாம் எடுத்து வைத்து மடித்து விட்டு ,மணியைப் பார்த்தால் மணி நான்கு ஆகி விட்டது .மகனை பள்ளியில் இருந்து அழைத்து வர வேண்டும்; உடனே கிளம்பினாள் . "பாரதி சும்மா தானே போற நானும் வரன் மா,போகிற வழியில இறக்கி விட்டுடு மா , என்னுடைய பிரண்டு அங்க தெரு முனையில் நிப்பான்" என்றார் மாமனார். "சரிங்க மாமா", என்றாள். அதென்ன சும்மா போற - என்று மனதிற்குள்ளே புலம்பி கொண்டாள் .மகனைக் கூப்பிட்டு விட்டு வீட்டிற்கு வந்தாள். மகனுக்கு சாயுங்காலத்திற்குச் சாப்பிட கொடுத்தாள். பிறகு வீட்டுப்பாடம் செய்ய உதவி செய்தாள்.அதற்குள் சின்னவள் எழுந்துக்கொண்டாள்.அவளுக்குச் சாப்பிட கொடுத்து, கைப்பேசியை எடுத்தாள்,உடனே மகன் ஓடி வந்து பட்டென்று கைப்பேசியைப் பிடிங்கினான். அதற்குள், "ராத்திரி சாப்பாட்டுக்குத் தக்காளி சட்னி அரைச்சிடு மா" என்று மாமியாரின் குரல் கேட்டது. "சரிங்க அத்தை" என்று சட்னி அரைக்க அடுக்களைக்குள் போனாள். "அம்மா !அப்பா வந்துட்டாரு" என்று மகன் கூறவே,கணவன் குளித்து வருவதற்குள் காபி தயாராக வேண்டும் என்று சுட சுட காபி எடுத்துக் கொண்டு போய் கொடுத்தாள் .பிறகு தொலைக்காட்சி பார்க்க அனைவரும் அமர, கணவன்நாட்டு நடப்பு செய்திகளை வைத்தான். இரவு சாப்பாட்டு நேரம் நெருங்கிடவே, அனைவரும் சாப்பிட சென்றனர் .எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு குழந்தைகளைத் தூங்கவைத்துவிட்டுப் படுக்கைக்குச் செல்லும் போது மணி பதினொன்று ஆகி இருந்தது .மனதுக்குள்ளே அங்கலாய்த்துக் கொண்டாள். எப்பொழுது தான் இரு பிள்ளைகளும் பெரியவர்கள் ஆவார்களோ ,அப்பொழுதுதான் எனக்கு கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் என்று சொல்லிக் கொண்டாள். "ஏன் பாரதி நாலு நாளா சொல்லிட்டு இருக்கேன் இந்த ஒட்டடையை அடிக்கக்கூடாதா ?"என்று கணவன் கேட்டான்.சும்மா தானே இருக்கிற வீட்டுல, இதைவிட என்னதான் பண்ற? நாடகம் பார்க்கவே நேரம் போதாது என்று அங்கலாய்த்துக் கொண்டான். பாரதிக்கு இது ஒன்றும் புதிதல்ல பழகிப்போன வார்த்தைகள் தான். ஐந்து வருடங்களாக மாமியார், மாமனார் ,கணவன் என்று மூவரும் மாற்றி மாற்றி "சும்மா தானே இருக்கிறாய்" என்று சொல்வது ஒன்றும் புதிதல்ல., இருந்தாலும் அன்று அவளுக்கு என்னமோ போல் மனம் கனத்திருந்தது .ஆமாங்க சும்மாதான் இருக்கிறேன். நான் சும்மா இருக்கிறதால தான் ,உங்களால காலையில எட்டு மணிக்கு போய்விட்டு இராத்திரி எட்டு மணிக்கு வர முடியுது. நான் சும்மா இருக்கிறதால தான் உங்க பெரிய பையன் வீட்டு பாடத்தையெல்லாம் ஒழுங்கா செய்ய முடியுது .நான் சும்மா இருக்கிறதாலதான் உங்க அப்பா காலையிலும், மாலையிலும் நடைபயிற்சி போறாரு. நான் சும்மா இருக்கிறதால தான் உங்க அம்மா வயதான காலத்தில் அவர்களுக்குப் பிடிச்ச நாடகங்களைப் பார்க்க முடியுது.நான் சும்மா இருக்கிறதால தான் உங்களால ஒவ்வொரு நாளும் நிம்மதியா தூங்க முடியுது. "ஒரு நாள் நீங்க சும்மா இருந்து தான் பாருங்களேன்" ,என்று வெடுக்கென்று படுக்கைக்குச் சென்றாள். அன்று என்னவோ நிம்மதியாகவே தூங்கினாள் பாரதி .பட்டு பட்டு என்று பேசிய பாரதியைப் புரிந்து கொள்ளவே பாஸ்கருக்கு 10 நிமிடங்கள் ஆகியது. புரண்டுப்புரண்டு படுத்தும் அவனுக்குத் தூக்கம்வரவில்லை.அப்பொழுது தான் அவனுக்குப் புரிந்தது எவ்வளவு சுலபமாக சொல்லிவிட்டோம் சும்மா இருக்கிறாள் என்று? ,அப்பொழுது தான் அவனுக்குப் புரிந்தது அந்த வார்த்தை அவளை எப்படி காயப்படுத்தி இருக்கும் என்று ,அப்பொழுது தான் அவனுக்குப் புரிந்தது அவளை எவ்வளவு மோசமாக நடத்தியிருக்கிறோம் என்று .எல்லாவற்றையும் புரிந்து தனது தவறை உணர்ந்து மனம் திருந்தியவனாய் , நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்த அவளுடைய கால்களை வருடி மன்னிப்பு கேட்டான். பாவம் பாரதிக்கு அது தெரியாது. மறுநாள் காலையில் எப்பொழுதும் போல பாரதி எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு மீண்டும் அடுக்களைக்குள் நுழைந்தாள். கணவன் அவளுக்கென்று ஒரு கோப்பையில் சுடச்சுட காபியைக் கொடுத்தான் .என்னங்க புதுசா காபி எல்லாம் போட்டு தரீங்க. ஒன்னும் இல்ல இனிமேல் இப்படித்தான், நீயும் உன்னை கவனிச்சுக்கோம்மா என்று இயல்பாய் சொன்ன பாஸ்கரனை காதலோடு பார்த்தாள். "நான் காய் கட் பண்ணி தரேன்" என்று சொன்னான். சரிங்க என்று இருவரும் பகிர்ந்து சமைக்க தொடங்கினார்கள் .ஆனால் இன்று பாரதி புத்துணர்ச்சியோடும் மனநிறைவோடும் வேலையைத்தொடங்கினாள்..

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.