logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

உ.அனார்கலி

சிறுகதை வரிசை எண் # 224


ஐந்தாம் பிறை உ.அனார்கலி, 1/104, சண்முகா நகர், அழகர் கோயில் சாலை, மதுரை – 625 007. தொலைபேசி : 9842423391 மின்னஞ்சல் முகவரி: anarkali.apc@gmail.com கைருன்னும், சுல்தான்பாயும் வந்தவர்களை வாய் நிறைய வரவேற்றுக் கொண்டிருந்தார்கள். திருமண மண்டபம் மெல்லிய இசையில் நிரம்பியிருந்தது. அழகாக உடுத்திய ஆண்களும், பெண்களும் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். மேடையின் வலது ஓரத்தில் பாதுகாப்பாக தீ வளர்க்கப்பட்டிருந்தது. இரண்டு ஓதுவார்கள் அதன் அருகில் அமர்ந்து தமிழில் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தனர். இடதுபுறம் சின்ன அம்மிக்கல் குழவியுடன் வைக்கப்பட்டிருந்தது. இருபுறமும் இடுப்புயர பித்தளைக் குத்துவிளக்கு தகதகவென்று ஜொலித்தது. திரிகள் தங்கப் பொட்டாய் ஒளி காட்டியது. மணமேடையில் மல்லிகைப் பூ சரம்சரமாய் தொங்கவிடப்பட்டிருந்தது. ‘பெண்ணோட தாய் தந்தையைக் கூப்பிடுங்க‘ ஓதுவார் குரல் கொடுக்க கைருன்னும் சுல்தான்பாயும் மேடை ஏறினர். வந்திருந்தவர்களுக்கு ஆச்சரியம் இல்லையென்றாலும் ஆவல் அவர்களின் விழிகளில் நிறைந்து கிடந்தது. ஓதுவார் இருவர் கைகளிலும மலரைக் கொடுத்தார்... தான் சொல்வதைத் திருப்பிச் சொல்லச் சொன்னார்... திருத்தமாய்ச் சொன்னார்கள் கைருன் முகத்தில் பூரிப்பு, சுல்தான்பாய் மனதில் பெருமிதம்... ‘மாப்பிள்ளையை வரச் சொல்லுங்க...‘ பன்னீர்ரோஜாமாலை கழுத்தில் தொங்க, கையில் பூச்செண்டு, பட்டுவேட்டி, சட்டையுடன் மாப்பிள்ளை வந்தார்... மருமகனைப் பார்த்தவுடன் கைருன் முகத்தில் பாசம் கலந்த வெட்கம், அதரத்தில் புன்னகையாய் தவழ்ந்தது. ‘உங்க மாமனார் மாமியாருக்குப் பாதபூசை செய்யுங்க...‘ முதலில் மாமனாருக்குப் பாதபூசை செய்தார் மாப்பிள்ளை அடுத்து மாமியாருக்கு... கைருன் பதறிப்போனாள்... மருமகன் நம்ம காலைத் தொடுவதா... தயக்கம் ஒரு புறம், தவிப்பு ஒருபுறமாய் துடித்துப் போனாள். ஆனாலும் பாதபூசை நடைபெற்றது. ஓதுவார் குரல் கொடுக்க... பெண் அழைத்து வரப்பட்டாள்... நம்ம பெண்ணா இவள்... ஏற்கனவே அழகி... இப்ப தேவலோகத்துக் கன்னிபோல இருந்தாள்... கைருன்னும் சுல்தான்பாயும் பூரித்துப் போனார்கள்... மகள், மாப்பிள்ளை அருகில் நின்றாள். மங்கலநாண் மாப்பிள்ளை கையில் கொடுக்க, மத்தளம் முழங்க, மந்திரம் ஒலிக்க... சற்றே நாணத்துடன் நின்ற மகளின் கழுத்தில் மாப்பிள்ளை தாலி கட்டுவதை நீரில் மிதந்த விழிகளால் பார்த்து மகிழ்ந்தாள் கைருன். ...மாப்பிள்ளையும் பெண்ணும் விடைபெறும் நேரம் வந்தது. கழுத்தில் மின்னிய மஞ்சள் சரடுடன் தாவி தாயின் கழுத்தைக் கட்டிப்பிடித்து அழுதாள்... இல்லை கதறினாள்.. கைருன் உதடுகள் துடிக்க... விம்மினாள்... கூடியிருந்தவர்கள் அழுகையினூடேயே தாயையும் மகளையும் ஆற்றுப்படுத்தினர். சுல்தான்பாய் தாய்க்குருவியாய் மாறி, மகளை கைகளுக்குள் மூடிக் குலுங்கினார்... தாய், தந்தை, மகள் எல்லோரிடமும் ஒற்றைச் சொல்லுக்குக் கூட பஞ்சமிருந்தது. ... மகள் இல்லாத வீடு அந்நியமாய்த் தெரிந்தது கைருன்னுக்கு. மகள் பட்டப்படிப்புப் படித்தவள்... கல்லூரிப்படிப்பு முடித்ததும் வீட்டின் பொறுப்பு மகள் கைக்கு மாறியது. சுல்தான்பாய் கொடுக்கும் பணத்தை எண்ணி பீரோவில் வைப்பதிலிருந்து இட்லிக்கு மாவு அரைப்பது வரை எல்லாம் மகள் தான். கைருன்னுக்கு எந்த வேலையும் கிடையாது... காலையில் சீக்கிரம் எழுந்திருக்கனும் சுல்தான்பாய் நடந்தே பள்ளிக்குப் போய் பஷர் தொழுதுவிட்டு நடந்தே வீட்டுக்கு வரனும்... கைருன் பஷர் தொழுதுவிட்டு தெருவில் அரைமணி நேரம் நடக்கனும். அப்புறம் சாப்பாடு... டிபன் எல்லாம் மகள் மேற்பார்வையில் தான். வாரத்தில் மூன்று நாட்கள் அசைவ சாப்பாடு... அளவோடு... தினம் பழச்சாறு, காய்கறி சூப், தூக்கம் என வாழ்வியல் முறை மகளால் மாறிப் போய்விட்டது. சுல்தான்பாய்க்கு தோல் வியாபாரம். நல்ல வருமானம்... நேர்மையாய் தொழில் செய்வார். நியாயமானவர். இல்லைன்னு யார் வந்தாலும் கை நிறையக் கொடுத்தனுப்புவார். கைருன்னும் நிறைஞ்ச மனசுக்காரி... சொந்தம், உறவு, நட்புன்னு வாஞ்சையாய் இருப்பாள். இறக்கை முளைச்சிருச்சு... இனி இந்தக் கூட்டிலேயே மகள் தங்குறது நியாயமுமில்லை... தனிக்கூடு வேணும்... இந்தக் கூட்டுக்கு வந்து போகலாம் அவ்வளவுதான்... நினைத்துக்கொண்ட கைருனின் நினைவுச் சரங்களில் நாகராணியின் முகம் மங்கலாய்த் தென்படலாயிற்று. கைருன் நிக்ஹா முடிஞ்சு இந்த வீட்டுக்குள் நுழைந்தபோது பக்கத்து வீட்டுப் பெண்ணாய் அறிமுகமானாள் நாகராணி. கைருன் வயது தான் அவளுக்கும். அம்மா இல்லை... வயதான அப்பா மட்டுமே. சொந்தங்களுக்குக் குறைவில்லை. உள்ளூரிலேயே நிறையப்பேர்... நாகராணி மாநிறம் என்றாலும் மூக்கும் முழியுமாய் ஓங்குதாங்காய் இருப்பாள்... பத்தாம் வகுப்பு முடித்திருந்த நாகராணியிடம், மேற்கொண்டு படிக்க வற்புறுத்தினாள் பட்டதாரி கைருன். ஏனோ நாகராணிக்குப் படிப்பில் விருப்பமில்லை. தன்னுடைய திருமணம் மல்லிகைப் பந்தலின் கீழ், அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, குலவைச் சத்தத்தின் ஊடாக நடக்க வேண்டும். குனிந்து வாங்கியத் தாலி மார்பைத் தாண்டி வயிற்றைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும் எனத் தன் ஆசையை கைருன்னிடம் கண்மலர்த்திக் கூறுவாள் நாகராணி. ஒரு ராஜகுமாரன் வந்து தன்னைத் திருமணம் செய்து, குதிரையில் கொண்டு செல்வான் என்பாள் கைருன்னிடம். தூங்குவது தவிர எல்லாநேரமும் கைருன்னும் நாகராணியும் ஒன்றாகத்தான் இருப்பார்கள். நாகராணியின் ஆசை எதையும் பூர்த்தி செய்யாத அப்பா திடீரென்று இறந்து போனார். கட்டிப்பிடித்து அழுத உறவுகள் சொல்லாமல் கொள்ளாமல் சென்றனர். மூன்று நாள் கழித்து கைருன், கையைப் பிடித்து வீட்டுக்குள் அழைத்து வர, வந்த நாகராணி அந்த வீட்டில் ஒருத்தியாய் மாறிப்போனாள். சந்தோஷ நாட்களில் சிரிச்சு, கண்ணீர் வருமுன் துடைத்து மனம் நிரம்பிய தோழியரால், கைருனின் திறக்காத வயிறும், நாகராணியின் பூக்காத மாலையும் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. நாகராணி என முழுப்பெயர் சொல்லி அழைக்கும் கைருன்னை ‘கைம்மா‘ என வாய்நிறையக் கூப்பிடுவாள் நாகராணி. உடம்பு இரண்டாய் உயிர் ஒன்றாய் வாழ்ந்தார்கள். அது ஒரு வெள்ளிக்கிழமை. சுல்தான் வியாபாரம் பார்க்கப் போய் விட்டார்... சோபாவில் கைருன் அருகில் உட்கார்ந்திருந்த நாகராணி, அவளின் கைகளை எடுத்துத் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டாள். நாகராணியின் முகத்தைப் புன்னகையுடன் ஏறிட்டாள் கைருன்... லேசான மஞ்சளில் மின்னிய முகம்.. மெல்லிய புருவம்.. கெண்டைமீனாய் இடமும் வலமும் போய்வந்த கருவிழிகள்... மௌனமாய் ரசித்த கைருன், ‘அழகி நாகராணி நீ‘ என்றாள். ‘உன் பக்கத்தில் வராதவரை‘ என்றாள் பதிலுக்கு நாகராணி. ‘கைம்மா... உங்கிட்ட ஒன்னு சொல்லனும்‘ என்று சட்டென்று பேச்சை மாற்றியவள்... என்ன? ஏது? என்று கைருன் கேட்பதற்கு முன், ‘நான் ஊருக்குப் போயிட்டு வரலாம்ன்னு இருக்கேன்‘ என்றாள். ஊருக்கா? எந்த ஊருக்கு? ஊரில் என்ன வேலை? ஒவ்வொரு கேள்வியும் அதிர்ச்சித் துண்டுகளாக வந்து விழுந்தன. எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாத நாகராணி அடுத்தநாள் கிளம்பிப் போய்விட்டாள். எங்கே போனாள்? ஏன் போனாள்? தெரியாது... வாழ்க்கை என்பது மர்மமுடிச்சுகளும் அதிசயங்களும், ஆச்சரியங்களும் நிரம்பியவைதானே! காலம் எந்த முடிச்சின் அவிழ்ப்புக்காகவும் காத்திருக்கவில்லை. முடிச்சின் அவிழ்ப்புகளுக்குக் காத்திருக்க வேண்டாம். மேலும் மேலும் முடிச்சுகளைப் போடாமலாவது இருக்கலாம் அல்லவா? ஒருத்தியின் வாழ்வில் மட்டும் ஏன் அடுத்தடுத்த முடிச்சுகள். நாகராணி ஊருக்குப்போய் பத்து மாதங்களுக்கு மேல் இருக்கும். எதிலும் ஈடுபாடில்லாமல் கடமைக்காக இயங்கிக் கொண்டிருந்த கைருன் காலை நேரத் தொழுகையை முடித்துவிட்டு இருதோள்பட்டைப் பக்கமாய்த் திரும்பி சலாம் சொல்லிவிட்டு பஷ்ப மணியைக் கையில் எடுத்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்தாள். சுல்தான்பாய் தொழுகைக்காக பள்ளிக்குச் சென்றிருந்தார். ஏதோ உந்துதலில் எழுந்து, சன்னல் வழியாக வெளியே எட்டிப்பார்த்தாள் பார்த்தவளின் கண்கள் அப்படியே நிலை குத்தி நின்றன. கம்பிக் கேட்டைத் திறந்து கொண்டு ஒரு உருவம் – ஓங்கு தாங்காய் தெரிந்தது. தலையிலிருந்து பாதம் வரை துணியால் போர்த்தியிருந்தது. அதன் கைகளில் ஒரு பொட்டலம். வந்த உருவம் – தலைவாசலில் பொட்டலத்தைக் கீழே வைத்தது... மெதுவாய் குனிந்து பொட்டலத்தின் பக்கத்தில் முகத்தைக் கொண்டுபோனது தெரிந்தது. மார்கழி மாத காலை நேரத்தில் அதற்குமேல் சரியாகப் புலப்படவில்லை... ‘யாரது?‘ வாய்வரை வந்த வார்த்தையை ஏனோ நிறுத்திக் கொண்டாள் கைருன். உருவம் விரைந்து கம்பிக் கேட்டு வழியாகத் தெருவில் இறங்கி மறைந்து போனது. விக்கித்து நின்ற கைருன் வாசல் கதவைத் திறந்து கொண்டு வெளியே வரவும், சுல்தான்பாய் வெளியே இருந்து உள்ளே வரவும் சரியாக இருந்தது. இருவரும் துணிப்பொட்டலத்தை விலக்கிப்பார்க்க... உள்ளே ஒரு பெண் சிசு... காவல்துறை, சமூக நலத்துறை என செய்தியைத் தெரிவித்தார் சுல்தான்பாய். எல்லாச் சடங்குகளுக்குப் பின் அந்த வீட்டுப் பெண்ணாக வளர ஆரம்பித்தது அந்த சிசு. ‘எம்மடி நிரப்பிய மரிக்கொழுந்தே, அம்மான்னு கூப்பிடும் ஈரக்குலையே‘ எனக் கொஞ்சினாள். குளிப்பாட்டினாள் மாரிலும் தோளிலும் போட்டு வளர்த்தாள். கண்ணுக்குள் வைத்துக் கொண்டாள். மகள் வந்தபின் கைருன் மனத்திரையில் நாகராணி பின்னால் சென்றுவிட்டாள். ‘பிறைநிலா‘ – இது தான் மகளின் பெயர்... வாய் நிறைய பிறைநிலா எனக்கூப்பிட்டு உச்சிமுகர்ந்தாள். எல்லோரையம் முழுப்பெயர் சொல்லி அழைக்கச் செய்தாள். மழலைப் பள்ளியில் சேர்க்கச் சென்றபோது. சுல்தான்பாய்க்கு கைருனின் செயல் ஆச்சரியத்தைத் தந்தது. சுல்தான்பாய், கைருனை பெற்றவர்களாகக் கொண்ட பிறைநிலா, சாதியற்றவளாய், மதமற்றவளாய் கைருனால் ஆவணப்படுத்தப்பட்டாள். ஏன் என்று கேட்டபோது... அது அப்படித்தான் என்று முடித்துக் கொண்டாள் கைருன். ஐந்து வயது ஆனபோது, சுல்தான்பாய் மகளை மடியில் தூக்கி வைத்துக் கொண்டு கலிமா சொல்லித் தர முன்வந்தபோது சுட்டெரிக்கும் விழிகளால் மறுத்தாள் கைருன். ஏன் என்ற போது... ‘ஏன் என என்னைக் கேட்டால்?‘ ‘நம்ம குழந்தைக்கு கலிமா சொல்லித் தருவதில் என்ன தப்பு?‘ விவாதம் சண்டையாய் வெகுநேரம் நீடித்தது. பட்டெனப் போட்டுடைத்தாள் கைருன்... அடங்கிப் போனார் சுல்தான்பாய். ஆண்டாள் பாடல்களையும், தேவாரப் பாடல்களையும் தேன் குரலில் இசைப்பாள் பிறைநிலா. வெள்ளிக்கிழமைகளில் கோயிலுக்குப் போய் வருவாள். உறவுகளுக்குள் சலசலப்பு உண்டாச்சு... வாய் திறக்க முடியாமல் அடைத்துவிட்டாள் கைருன். ஒரு நாள் மகளை உட்காரவைத்து, வாசலில் கிடந்த புதையல் நீ என்றாள். ‘என் மாணிக்கம் நீ, மூச்சு நீ, இதயத் துடிப்பு நீ, வாழ்க்கையின் அர்த்தம் நீ‘ என மனம் திறந்து கொட்டினாள். ‘என்னைக்கும் நான் உன் மகதாம்மா...‘ ‘உனக்காக ஆண்டாளைப் பாடினேன். அத்தாவிற்காக அல்ஹம்ந்து ஓதுறேன்மா‘ என்று சொல்லிவிட்டு ஓதினாள்... ரம்ஜான் நோன்பு வைத்தாள். படித்து முடித்தவுடன் திருமணத் தகவல் நிலையம் மூலம் மாப்பிள்ளைத் தேடினார்கள். எல்லாவகையிலும் பிடித்துப் போனவரை மாப்பிள்ளையாகத் தெரிவுசெய்தார்கள். விலாவாரியாக பிறைநிலா வந்த விதம் கூறப்பட்டது. மாப்பிள்ளைப் பையன் மத்திய அரசுப்பணி அலுவலராக, பெங்களூருவில் வேலை செய்தார். மாப்பிள்ளை, அவர் குடும்பம், பின்னணி பற்றி அதற்கு என இருக்கும் நிறுவனம் மூலம் கண்டறிந்தனர். திருமணம் நல்லபடியாய் முடிந்தது. மாப்பிள்ளையின் கைப்பிடித்து பிறைநிலாவும் சென்றுவிட்டாள். ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்த கைருன் அருகே வந்தமர்ந்த சுல்தான்பாய் மனைவியின் கரங்களைத் தன் கைகளில் மென்மையாய் ஏந்தினார். ‘நீயும், அல்லாவும் என்னை மன்னிக்கனும் கைருன்...‘ கண்களில் நீர் திரையிடக் கெஞ்சினார் சுல்தான்பாய்... வேறுபக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் கைருன். ‘கைருன்‘ சுல்தான்பாய் குரலில் குற்றவுணர்வு நிரம்பிக் கிடந்தது. மன்னிப்பை கெஞ்சிக் கொண்டிருந்தது. அன்றைய நிகழ்வு சுல்தான்பாய் நினைவடுக்குக்களில் அழியாமல் இருந்தது. கைருன் உள்ளூரிலேயே ஒரு துக்க வீட்டிற்குச் சென்றிருந்தாள். வீட்டைப் பெருக்கித் துடைத்துக் கொண்டிருந்த நாகராணி சுல்தான்பாய் இருந்த அறைக்குள் துடைப்பத்துடன் சென்றாள். ‘பட்‘டென நின்று விடும் மின்சாரத்தைப் போல, படக்கென்று நாகராணியின் கைகளைப் பற்றினார். துவண்டன கைகள்... மறுப்பும், தடுப்பும் இல்லாமல் மலராய் மலர்ந்தாள்... ஆண்மை அரங்கேற்றத்துக்கு ஆயத்தமானது... திட்டமிடாமலேயே இனிய கூடல் ஒன்று நடந்தேறியது... யார் காரணம்? இருவருமே நெடுநாள் ஆசையா? அடைந்தே ஆக வேண்டும் என்ற முயற்சியின் விளைவா? இல்லை... இல்லை எதுவுமே இல்லை காற்றடித்ததும் கொடி அசைந்ததா? கொடி அசைந்ததும் காற்று வந்ததா? விடையில்லை. ஆனால், நடந்தது என்னவோ உண்மை... அதன்பின் ஊருக்குப் போகிறேன் என்று நாகராணி சொல்லிச் சென்றபின் சரியாக பதினொரு மாதங்கள் கழித்து, பிறைநிலா புதையலாய் வாசலில் கிடைத்தாள். மூன்று மாதங்களுக்குப்பின் போனில் தொடர்பு கொண்ட நாகராணி நடந்ததைக் கூறி, ‘போய்வருகிறேன் கைம்மா‘ என்றபடித் தொடர்பைத் துண்டித்துக் கொண்டாள். மூவரும் தனித்தனித் தீவாய் கலங்கிக் கொண்டிருக்க சுல்தான்பாய் அல்லாவிடம் மட்டுமல்ல கைருன்னிடமும், மனசுக்குள் நாகராணியிடமும் பாவ மன்னிப்பு வேண்டி நிற்கிறார்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.