Bhanumathy Kannan
சிறுகதை வரிசை எண்
# 223
சிறுகதை:
By: பானுமதி கண்ணன்
மனிதம்…
கையில் அந்தத் தாலிக்கயிறு இரும்பு போல் கனத்தது. இரும்பே தானோ? அல்ல. தங்கத்திற்கும் இரும்புக்குமான வித்தியாசம் இவனுக்குத் தெரியும். சேட்டு சொல்லிக் கொடுத்திருக்கிறான். இதுவரை எத்தனை சங்கிலிகளை அறுத்திருப்பான்! எல்லாம் தங்கம். சொக்கத் தங்கம்!
படிப்பு ஏறவில்லை. பத்தாவது ஃபெயில். வொயிட் காலர் உத்தியோகம் நினைச்சே பார்க்க முடியாது. அப்பா போல் சித்தாள் வேலை செய்யவும் உடம்பு வணங்காது. வேறு என்னதான் செய்வது?
மனசில் என்ன நினைத்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் சோறு போட அம்மாவால் முடிந்தது. அப்பாவுக்கு அந்த டீசென்சி பத்தாது. "தண்டச்சோறு ராமன் வந்துட்டான்..முதல்ல அவனுக்குக் கொட்டு!" என்று சடாரென்று எழுந்து போவார். சித்தாளாக கல்லு மண்ணு கூட புழங்கிப்புழங்கி அவர் மனசும் அதே மாதிரி ஆகிப் போயிருந்தது.
ஒரு முறை அவர் சுடுசொல் பொறுக்க மாட்டாமல் தட்டைத் தூரத் தள்ளி விட்டு எழுந்து விட்டான். "டே..சாப்டுப்போடா.." என்ற அம்மாவின் தீனமான குரல் பின்னால் ஒலித்தது தான். ஆனால் அப்பா? "சும்மாருடி..வயிறு காஞ்சா தானா வருவான்!"
கையிலிருந்த துட்டுக்கு அன்றைக்கு ஒரு டீயும் பன்னும் தான் முடிந்தது. பத்தவேயில்லை. பசித்த வயிற்றைத் தடவிக் கொண்டு உட்கார்ந்திருந்த போது அறிமுகமானவன் தான் எத்திராஜு. கல்யாண வீட்டில் பந்தி பரிமாறுகிற வேலையாம் அவனுக்கு. மாசத்தில் இருபது நாள் விருந்து சாப்பாடு தான் என்றான். அவன் அதைச் சொன்னபோது இவனுக்கும் மனதில் ஆசை துளிர் விட்டது. தன் பெரிய வயிற்றுக்கு இந்த வேலை தான் சரிப்படும் என்று தோன்றியது. வாளியிலிருந்து சாம்பாரை மொண்டு இலையில் ஊத்தணும்! அவ்வளவு தானே? செஞ்சுடலாம்! அதை விட அப்பளம் போடுகிற வேலையாயிருந்தால் இன்னும் ஈசி!
பெரம்பூர் ரயில் கல்யாண மண்டபத்தில் தான் முதல் போஸ்டிங். அதாவது கரண்டி பிடிக்கக் கல்யாண மண்டபத்தில் நுழைந்தது. ரயில்கள் வருவது போவதை வேடிக்கை பார்த்துக் கொண்டே வேலை செய்யலாம். பெரிய தாழ்வாரத்தில் ஜமுக்காளம் விரித்து தாராளமாகத் தூங்கலாம். காசு பற்றிய கவலையின்றி ஃபேன் போட்டுக் கொள்ளலாம். என்ன.. காலையில் கொஞ்சம் சீக்கிரம் எழுப்பி விட்டு விடுவார்கள்..
எல்லாம் சரி. ஆனால் இவன் நினைத்தது போல் எடுத்ததுமே பரிமாறுகிற வேலையை இவனுக்குக் கொடுத்து விடவில்லை. புதிதாக வருபவர்கள் முதலில் சமையலறையில் தான் புழங்க வேண்டுமாம்.
அம்பாரமாகக் காய்கறிகளை எதிரே குவித்து "வெட்டு!" என்றார்கள். எனக்குத் தெரியாது என்றான். "அப்படிச் சொன்னா ஆச்சா? கத்துக்கணும்! சரி. காய்கறிகளைக் கழுவிக்கொடு. அரிசியைக் களைஞ்சி போடு. அண்டாவை அடுப்பு மேல் ஏற்று. இறக்கு. சாம்பாரை அடிபிடிக்காமல் கிளறிக் கொண்டே இரு. இந்தா..இந்த ரச குண்டானை ஜாக்ரதையாய் நகர்த்திப் போய் அங்க வை. மேலே கீழே கொட்டிக்கினு வந்து நிக்காதே!"
பிடிக்கவில்லை தான். உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிவது மகா கேவலமாக இருந்தது. தன்னை என்னவென்று நினைத்து விட்டான்கள்! இன்னிக்கு வேணா எனக்கு வேலை இல்லாமல் இருக்கலாம். ஆனா நாளைக்கே நான் பெரிய ஆளாகி நிறையச் சம்பாதிப்பேன். அப்ப இருக்குடே ஒனக்கு!
எப்படிச் சம்பாதிக்கப் போகிறோம் என்ற எந்த உத்தேசமும் இல்லை. ஆனால் மனது கறுவியது. எப்போதும் கணகணத்துக் கொண்டே இருக்கும் அடுப்பு எரிச்சல் மூட்டியது. சூடு வியர்வை தாங்க முடியவில்லை. டவலால் அக்குள் முதுகு என்று சொறிந்து கொண்டே இருந்தான். ஆனால் கடைசி பந்தியில் மானாவாரியாகச் சாப்பிடக் கிடைத்தபோது மனது மகிழ்ந்து போனது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? தினம் வடை பாயசத்தோடு சாப்பாடு வீட்டில் சாத்தியமா? பிள்ளையார் சதுர்த்தி அன்றைக்குக் கிடைத்தால் உண்டு!
பந்தி முடிந்து மீந்து போனதை அவரவர் தங்கள் வீடுகளுக்குப் பார்சல் பண்ணிக் கொண்டபோது இவனும் தன் பங்குக்குக் கொஞ்சம் மைசூர்பாகு வெஜிடபிள் பிரியாணி எடுத்துக் கொண்டான். அன்றைக்கு இரவு இவன் வீட்டில் சாப்பிடவில்லை. ஆனால் வீட்டிலிருந்தவர்கள் இவன் கொண்டு வந்ததைச் சாப்பிட்டார்கள். இவன் கெத்தாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
சாப்பாடு தான் யதேஷ்டமே தவிர துட்டு கம்மி தான். எண்ணி எண்ணிக் கொடுத்தார்கள். யாரோ போட்ட சாப்பாட்டையும் காண்ட்ராக்டர் தன் கணக்கில் காட்டினான். கிடைத்த காசில் அம்மாவிடம் கொடுத்தது போக மிஞ்சியது கொஞ்சூண்டு. இதை வைத்துக் கொண்டு என்ன பண்ணுவது?
ஜீன்ஸ் பேண்ட் வாங்க வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை! முடியவில்லை. மாற்றிக் கட்ட ஒரு லுங்கி மட்டும் வாங்கிக் கொண்டான். தங்கைக்கு ரெண்டு சீட்டிப் பாவாடை. தம்பிக்கு புது ஸ்லேட். பலப்பம். அம்மாவுக்கு புடவை வாங்கக் காசு மிஞ்சவில்லை. அடுத்தமுறை பார்க்கலாம். காலில் ஹவாய் செருப்பு வேறு அறுந்து கொண்டே இருக்கிறது.
எல்லாவற்றையும் விட மோசமான விஷயம் குடியிருந்த வீடு! காலையில் பாத்ரூம் போவதே பெரிய அவதி.பொதுக் கழிப்பறை. முன்னவன் நாற்றத்தைச் சகித்துக்கொண்டே தன் நாற்றத்தை இறக்க வேண்டும். ச்சே.. என்ன வாழ்க்கை இது! பணம் வேண்டும்! நிறையப் பணம்! நினைச்ச மாதிரி வாழ! தாராளமாகச் செலவழிக்க! ஆசைப்பட்டதை வாங்கிச் சாப்பிட! பைக்கில் டுர்..ரென்று போகிறவனைப் பார்த்தால் வயிறு எரிகிறது.
தண்டச்சோறாக இல்லாமல் ஏதோ வேலைக்குப் போகிறான் என்ற மட்டில் அப்பா திருப்தியடைந்து விட்டார் போல. என்ன வேலை ஏது என்று எதுவும் கேட்கவில்லை. ஆனால் லேட் நைட்டில் இவன் கொண்டு வருகிற சாப்பாட்டை வைத்து யூகித்திருக்கலாம்.
இதுவரை எத்தனையோ மண்டபங்களில் வேலை பார்த்து விட்டான் தான். சென்னையிலுள்ள எல்லா மண்டபங்களும் கிட்டத்தட்ட அத்துப்படி. ஆனால் வெஸ்ட் மாம்பலம் தான் இவன் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய மண்டபம். எந்த திட்டமிடுதலும் இல்லாமல் திடீரென்று நேர்ந்து விட்ட திருப்பம்!
சுமார் மண்டபம் அது. நடுத்தர வர்க்கத்துக்கானது. ரிசப்ஷன் நடந்து கொண்டிருந்தது. ஃபோட்டோகிராபர் தாட்டியான மணப்பெண்ணை அப்படி..யிப்படி நிற்க வைத்து ஃபோட்டோக்கள் எடுத்துக் கொண்டிருந்தார். பெண்கள் சொன்னபடி கேட்பது இந்த கல்யாண சமயத்தில் மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டான். சிரிப்பு வந்தது.
மேலே கிச்சனில் லட்டு பிடித்துக் கொண்டிருந்தார்கள். நாளை முகூர்த்தத்துக்கு இலையில் போட. பெரிய்ய வாணலியில் கடலை மாவை பூந்தியாகப் போட்டு ஜல்லிக் கரண்டியால் துழாவி சர்க்கரைப் பாகில் கொட்டி... வழக்கம் போல் இவன் நழுவிக் கொண்டான். லட்டு பிடிக்கிற வேலையெல்லாம் ஆகுமா என்ன? சூடு சூடாக உருட்ட வேண்டும். கை கன்னிப் போகும். ஆனால் பிடித்த லட்டுகளைத் தாம்பாளத்தில் ஏந்தி தோளில் சுமந்து மண்டபத்தின் இன்னொரு மூலையில் இருந்த அறையில் கொண்டு போய் வைத்து விட்டு வந்தான்.
ஒரு தம் அடிக்கலாம் என்று தோன்றியது. இடுப்பிலிருந்து ஒரு வில்ஸ் ஃபில்டரை உருவிக்கொண்டு மொட்டை மாடிக்குப் புறப்பட்டபோது தான் அதிர்ஷ்டம் இவனை வா..வா.. என்று அழைத்தது. அது சத்திரத்தின் பின்பக்கமாக மாடிக்குப் போகிற படிக்கட்டு. அரிசி பருப்பு காய்கறி மூட்டைகள் சமையலறைக்கு வந்து போகும் வழி. ஜனநடமாட்டம் கிடையாது. ஒரு இருபத்தைந்து வாட் பல்பு கடனுக்கு அழுது கொண்டிருந்தது.
அந்த இடத்தில் தான் அந்தச் சிறுமி நின்று கொண்டிருந்தாள். ஐந்து வயசு இருக்குமா? பட்டுப் பாவாடை, சட்டை, கம்மல் ஜிமிக்கி, கழுத்தில் டாலர் வைத்த செயின் என்று அமர்க்களமாக இருந்தாள். முதலில் ஒன்றும் தோன்றவில்லை.
"ஏன் பாப்பா இங்க நிக்கறே?" என்றான்.
கிளினிக்குகளில் இருப்பது போல் 'உஷ்..ஷ்" என்று உதட்டில் விரல் வைத்து அதட்டினாள். "ஒளிஞ்சு பிடிச்சு விளயாடிக்கிட்டிருக்கோம். சத்தம் போட்டா என் தம்பி என்னைக் கண்டு பிடிச்சுடுவான்!"
பேசும் போது அவள் அசைவுகளுக்கேற்ப ஜிமிக்கி ஆடியது. செயின் பளீரிட்டது. பெரிய செயின். வசதியான வீட்டுப் பெண் போல. அப்போது தான் மனதில் அந்த சாத்தான் புகுந்தது. அவள் கழுத்திலிருக்கும் அந்த ஒரு செயின் மட்டும் போதும். இவனுடைய பல பிரச்சினைகள் தீர்ந்து விடும்!
"பாப்பா உனக்கு லட்டு பிடிக்குமா?" என்றான்.
"உம்..!" என்று பலமாகத் தலையாட்டினாள்.
"வா..தரேன்!" என்று அவளை நகர்த்திக்கொண்டு போய் ஒரு லட்டை அவள் வாயில் திணித்து லாவகமாய் அவள் கழுத்திலிருந்த செயினை உருவினான். அந்தக் குழந்தை தன் தம்பி தன்னைக் கண்டு பிடித்து விடக்கூடாது என்பதில் முனைப்பாய் இருந்ததே தவிர செயின் பறி போனதை உணரவே இல்லை!
அந்த முதல் அனுபவம் இவனை கிடுகிடுக்க வைத்தது. வியர்வை ஆறாகப் பொழிந்தது. ஒரு சிறு பெண்ணை ஏமாற்றிய குற்றம் மனதைக் குத்தியது. இவள் தன்னைக் காட்டிக் கொடுத்து விடுவாளோ என்ற பயமும் பிரதானமாக இருந்தது.
ஆனால் அவளுக்கு அத்தனை சூட்டிகை பத்தாது போல் இருந்தது. செயின் பறிபோனதையே அவள் உணரவில்லை! அவள் அம்மா எங்கே? ரிசப்ஷனில் டேன்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறாளோ? அல்லது உறவுகளோடு செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்கிறாளோ? பெண்களுக்குத் தங்கள் பகட்டை வெளிக்காட்டுவதில் உள்ள ஆர்வம் ஜாக்கிரதையில் பத்தாது என்று தோன்றியது.
அந்த செயின் நல்ல விலை போயிற்று. டாலரோடு சேர்த்து இரண்டு பவுன்.
"இந்தச் செயின் ஏது?" என்றான் மார்வாடி தனக்குத் தெரிந்த கொஞ்ச தமிழில்.
"என் தங்கச்சிது..."
"வெக்கப் போறியா.. இல்ல விக்கப் போறியா?"
"வித்துடறேன் சேட்டு. அப்பாவை ஆஸ்பிடலில் போட்டிருக்கு! கொஞ்சம் பணமுடை.."
"அப்பாவுக்கு என்னா ஒடம்பு?" என்றான்.
உனக்கேண்டா அதெல்லாம் என்று மனதுக்குள் கறுவிக்கொண்டு "கிட்னி பெயிலியர் !" என்றான்.
"அச்சா" என்று உச்சுக்கொட்டியவன் உரசிப் பார்த்து விட்டு, "நல்ல தங்கம் தான்! உனக்கு எவ்வளவு வேணும்?" என்றான்
"எவ்வளவு குடுப்ப?"
அவன் சொன்ன தொகை பிரமிப்பாக இருந்தது.
"சரி சேட்டு. சீக்கிரம் பணத்தைக் குடு. நான் போவணும்!" என்று அவசரப்படுத்தினான்.
பணத்தை ஜேபியில் திணித்துக்கொண்டு நகர முற்பட்டவனைச் சேட்டு கூப்பிட்டு நிறுத்தினான்.
"பாரு..இது திருட்டு நகையா இருந்தா போலீஸ் கிட்ட என்னைக் காட்டிக் குடுத்துடாதே! அங்க எனக்கு ஆளீருக்கு. நான் தப்பிச்சுக்குவேன்.ஆனா நீ மாட்டிக்குவே! அப்புறம் உன்கிட்டருந்து எந்த திருட்டு நகையும் நான் வாங்க மாட்டேன்! புரிஞ்சுதா?"
அடப்பாவி!
•••
சேட்டு தான் தங்கம்.. போலி இரண்டுக்குமான வித்தியாசத்தை இவனுக்கு கற்றுக் கொடுத்தது. தங்கம் என்று நினைத்து ஒரு நாள் ஒரு காலேஜ் பெண்ணின் கழுத்திலிருந்த டூப்ளிகேட் செயினை இவன் அறுத்துக்கொண்டு வந்தபோது, "அரே பையா! இத்தனை நாள் திருடறே! தங்கம் போலிக்கு உனக்கு வித்தியாசம் தெரியலே!" என்றான் சேட்டு.
"என்ன சொல்ற சேட்டு?" என்றான் அதிர்ந்து போய்.
"இது கவரிங் நகைன்னு சொல்றன்! டூப்பு!"
"அது எப்படி சேட்டு உனக்குத் தெரியும்?"
"இந்தா பாரு.." என்று மேஜை டிராயரிலிருந்து சிறு மேக்னட் துண்டை எடுத்து டேபிள் மீது வைத்தான். மைனர் செயினை அதன் அருகே கொண்டு போனபோது சட்டென்று அது அதைக் கல்விக் கொண்டது.
"பாத்தியா..சுத்தத் தங்கமா இருந்தா மேக்னட் சட்டை கூடப் பண்ணாது! இப்ப பாரு!" என்று தன் கழுத்திலிருந்த செயினைக் கழட்டி மேக்னட் அருகில் கொண்டு போனான். அது சாதுப்பிள்ளையாய் சமர்த்தாய் அமர்ந்திருந்தது.
"ஆனா சேட்டு.. செயின் பறிக்கறப்போ கழுத்திலே மேக்னட் எல்லாம் வெச்சி உரசிப் பாக்க முடியுமா?"
"முடியாது தான். ஆனா மார்வாடி கிட்ட விக்கக் கொண்டு வரதுக்கு முன்னாடி உரசிப் பார்க்கணும்! இப்போ இதை வெச்சே நான் உன்னைப் போலீஸ்ல பிடிச்சுக்குடுக்க முடியும்! என்னா சொல்றே?"
"ஐயோ..வேண்டாம் சேட்டு!" என்று அலறினான்.
"ஒண்ணு சொல்றேன் கேட்டுக்க. உங்க ஊர்ல தாலிக்கு மவுசு ஜாஸ்தி. சுத்தத் தங்கம்! அதுல சமரசமே இல்ல! அதை மட்டும் ஞாபகம் வெச்சுக்க!" என்று சூட்சுமம் சொல்லிக் கொடுத்தான்.
அதற்குப்பிறகு தாலிக்கொடிகளை மட்டுமே குறி வைத்தான். சேட்டு சொன்னது சரிதான். அத்தனையும் சுத்தத் தங்கம். அதன் மதிப்பு என்ன என்றுகூட அவனுக்குத் தெரியாது. சேட்டு சொல்வதுதான் ரேட்டு! எத்தனை சரடுகள்! மாங்கல்யங்கள்! அந்தப் பெண்களின் கூக்குரல்களில் மனம் அதிர்ந்தது. வயதான பெண்கள் சுழன்று விழுந்த போது ஐயோ பாவமே என்றிருந்தது. அதற்காக தூக்கி விட்டுக் கொண்டா இருக்க முடியும்?
வாழ்க்கைத்தரம் கொஞ்சம் உயர்ந்தது. விலைமதிப்பான புடவையில் அம்மா கொஞ்சம் உயர் மதிப்பாகத் தெரிந்தாள். அப்பா சப்பணமிட்டு இவனெதிரில் உட்கார்ந்து சாப்பிடுகிறார். வெகு முக்கியமாக வீடு மாற்றியாகி விட்டது. பாத் அட்டாச்ட் டபுள் பெட்ரூம் வீடு!
அந்த வெஸ்ட் மாம்பலம் சிறுமியை மனது மறக்கவே இல்லை. 'உஷ்..' என்று உதட்டில் விரல் வைத்து அவள் அதட்டிய காட்சி அவ்வப்போது நினைவு வந்து நெஞ்சைப் பிசைந்தது. இதற்கு என்ன பிராயச்சித்தம் செய்யப் போகிறோம்?
•••
குற்றங்கள் செய்யச் செய்ய மனது அதற்குப் பழகி விடுகிறது. நியாயம் கற்பித்துக் கொள்கிறது. வருமானத்துக்கு மேல் சொத்து என்று பெரிய மனிதர்களை டிவி காண்பிக்கிறபோது இத்தனை இருக்கிறவனே பண்ணுகிறான்.. ஒரு பொதுக் கழிப்பறைக்காரன் தான் பண்ணால் என்ன தப்பு என்று தோன்றி விடுகிறது.
ஆனால் இன்றைய சம்பவம் மனதை மிகவும் பாதித்து விட்டது. வழக்கம் போல் விடிகாலையில் சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். தூக்கக் கலக்கத்தோடு பால் வாங்கப் போய்க் கொண்டிருந்தாள் அந்தப் பெண். நடுத்தர வயசு இருக்கும். விடிகாலையில் ஆளரவமில்லாத தெருவில் தனியாகப் போகிறோமே என்ற ஜாக்கிரதை உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லை. கழுத்தை மூடாமல் பளபளவென்று போய்க் கொண்டிருந்தாள்! பின்னாலேயே போய்…சட்டென்று அவள் கழுத்தில் கைவைத்து ஒரு இழு! அவள் சுருண்டு விழுந்ததை கவனிக்கக்கூட இவனுக்கு நேரமில்லை.
ஆனால் மதியத்திலிருந்து டிவி அவள் இறப்பைச் சொல்லிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன் இவன் செயின் பறித்த எந்தப் பெண்ணும் இறந்ததாகத் தெரியவில்லை. கொஞ்சம் பேர் கத்திக்கொண்டு பின்னாலேயே ஓடி வருவார்கள். சிலபேர் மலைத்து அப்படியே நின்று விடுவார்கள். கழுத்துத் தோல் பிய்ந்து ரத்தம் சிந்தியவர்களும் உண்டு. ஆனால் யாரும் செத்ததாகத் தெரியவில்லை. இவள் மட்டும் ஏன் இப்படி?!
மீடியாக்காரன் மைக் முன்னால் அவள் உறவினர்கள் குமுறிக் கொண்டிருந்தார்கள். தாலியைப் பொக்கிஷம் போல் மதிப்பாளாம் அவள். சுத்தப்படுத்தக் கூட கழட்ட மாட்டாளாம். போன வருஷம் அவள் புருஷன் இறந்து போனபோது கூட தாலி கழற்றும் சடங்குக்கு அவள் ஒப்புக்கொள்ளவே இல்லையாம்!
"இது என் கழுத்தில் இருந்தா அவர் என் கூடவே இருக்கிறது போல் இருக்கு! நான் உயிரோடு இருக்கிற வரை இதைக் கழட்ட மாட்டேன்! சாஸ்திரம்னு சொல்லி யாராவது இதைக் கழட்டினா இப்பவே நான் உயிரை விட்டுடுவேன்!"
ஆக, கணவன் இறந்த பிறகும் கூட தாலியோடே வாழ்ந்திருக்கிறாள்! "அவ உயிர் போல் மதிச்ச தாலியை எந்தப் படுபாவியோ அறுத்துட்டான். அந்த அதிர்ச்சி தாங்காம மகராசி உயிரை விட்டுட்டா!"
மனம் கனத்து விட்டது. கணவன் இறந்த பிறகும் கழுத்தில் தாலியோடு! இப்படியொரு சென்ட்டிமென்ட்டை கண்டதுமில்லை. கேட்டதுமில்லை! எப்பேர்ப்பட்ட பத்தினி! இவள் சாபம் தன்னைச் சும்மா விடுமா?
அந்த தாலியை எடுத்துக் கொண்டு நேராக போலீஸ் ஸ்டேஷன் போனான். போலீஸ் இவனை விசித்திரமாகப் பார்த்தது. "என்ன சொல்றப்பா?"
"ஆமாம் சார். நான்தான் சார் காலையில் அந்தம்மா கழுத்திலிருந்த தாலியைப் பறிச்சவன்! இதுதான் சார் அந்தத்தாலி! தாலி மேல் அந்தம்மாவுக்கு இப்படி ஒரு பக்தி இருக்கும்னு எனக்கு தெரியாமப் போச்சுது சார். ப்ளீஸ்.. இந்தத் தாலியைக் கொண்டு போய் அந்தம்மா கழுத்துல போட்டுடுங்க சார்! ஒருவேளை அந்தம்மா பொழைச்சு எழுந்தாலும் எழுந்துக்குங்க சார்!"
"என்னது..பொழைச்சு எழுந்துக்குமா?!"
"ஆமாம் சார்..அவங்க இன்னும் முழுசா செத்திருக்க மாட்டாங்க சார்! தாலி பறிபோன அதிர்ச்சியில் உயிர் போயிருக்கு! அவ்வளவு தான். இப்போ தாலியைக் கொண்டு போய் திரும்ப அவங்க கழுத்திலே போட்டுட்டா அந்தம்மா பிழைச்சு எழுந்தாலும் எழுந்துக்கலாம்! அப்படி இல்லாட்டாக்கூட தாலி தன் கழுத்துக்கு வந்துட்டதை அவங்க ஆன்மா நிச்சயம் புரிஞ்சுக்கும்! செத்தபிறமும் பதிமூணு நாள் வரை ஆன்மா உயிரோடு இருக்குமாமே ! அந்த திருப்தியோடவாவது அவங்க போவட்டும்! ப்ளீஸ் சார்! எனக்காக இதைச் செய்யுங்க சார். இனிமே நான் இப்படிப்பட்ட பாவ காரியத்தைப் பண்ண மாட்டேன்! இன்னியோட விட்டுட்டேன்! நிச்சயமா சார்! அந்தம்மா மேல சத்தியம்!"
••
சந்தர்ப்பமும் சூழ்நிலையும் ஒரு மனிதனைத் தவறான திசைக்குத் திருப்பலாம். ஆனால் அதிலிருந்து எவ்வளவு சீக்கிரம் அவன் விடுபடுகிறான் என்பதை வைத்தே மனிதம் தீர்மானிக்கப்படுகிறது.
•••
Bhanumathy kannan
Cell: 8939646846
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்