ஹரணி
சிறுகதை வரிசை எண்
# 219
படைப்பு சிறுகதைப் போட்டி – 2023
அம்மையார் ஹைநூன்பீவி நினைவு சிறுகதைப் போட்டி..
நெருப்புப் புணர்ந்தவர்கள்
ஹரணி
ஓர் எறும்பின் மேல் கொட்டிக் கவிழ்க்கப்பட்ட கருப்பு வண்ண சாயத்துள் சிக்கித் திணறும் அந்த எறும்பைப்போலவே மங்களநாயகி திணறிக்கொண்டிருந்தாள். மூச்சு விடுவதில் சிரமம் அதிகரித்துக்கொண்டு வந்தது. நின்றிருந்த இடத்தைவிட்டு நகர முடியுமா என யோசித்து கால்களைத் தூக்கிப் பார்த்தாள்.முடிந்தது. நகர்த்தினாள். நகர்ந்தன கால்கள். நடந்தாள். சுற்றிலும் அடர்ந்து இருள் ஒரு துளி வெளிச்சத்தைக்கூட காட்ட மறுக்கிற இரக்கமற்ற இருளாக இருந்தது. நடந்தாள். எதுவரை நடப்பது? எங்கே நடப்பது? எங்கே முடிப்பது ? என்கிற கேள்விகள் உள்ளுக்குள் குடைந்தாலும் சிறுகுழந்தையின் பரிதவிப்பைப்போலப் பதில் தெரியாமல் நடந்தாள். அவள் உடம்பின்மேல் போர்த்திக் கிடந்த வண்ணம் மறைந்துவிட்ட உடையில்கூட தளர்வுகள் சுற்றிக் கிடந்தன. சற்று நேரத்தில் அவளின் ஆடைகள் மேலே தூவப்பட்ட துகள்கள் உதிர்வதைப்போல உதிரத்தொடங்கின. சிறுசிறு துண்டுகளாக அவளின் உடல் மேல் மானம் காத்துநின்ற ஆடைகள் உதிரத்தொடங்கின. அவளுக்கு அந்த உதிர்வுகளின் உணர்வு இருந்தாலும் அதைப்பற்றிய கவலையற்றவளாக நடந்தாள். “நடந்துகொண்டேயிரு நிற்காமல்!” என்று யாரோ உள்ளுக்குள் கத்தலும் கதறலுமாகக் குரலெழுப்புவதற்குக் கட்டுப்பட்டவள் போல நடந்துகொண்டேயிருந்தாள் மங்களநாயகி. மண்டைக்குள் முழுக்கத் தேள்கள் அடைந்து கொட்டுவதுபோன்ற வலிகள்.
ஓரிடத்தில் கொஞ்சம் வெளிச்சம் இருந்தது. அங்கே அருகில் போய் நின்றாள். அந்த வெளிச்சம் வெம்மையாக இருந்தது. அந்த வெம்மை பிணத்தின்மேல் மொய்க்கும் எறும்புகளைப்போல அவளுடம்பில் ஊர்ந்தேறத் தொடங்கியது. எரியும் நெருப்பு அகலத்திலும் உயரத்திலும் வளர்ந்து மேலும் வெம்மைக் காட்டியது. நெருப்பில் எரிவனவற்றை ஒருகணம் பார்த்த மங்களநாயகி அதிர்ந்துபோனாள். அவளின் உடம்பெங்கும் பெரும் பயமும் நடுக்கமும் அவளை உலுக்கியது. அவள் கண்ட காட்சி.. நெருப்பில் நிறைய பெண்களின் முலைகளும் பெண்ணுறுப்புகளும் கிடந்தன. வெண்ணெய்க்கட்டி உருகுவதுபோல அவை எரியத்தொடங்கின. ஒவ்வொரு முலையின் மேலும் காம்பைத் தீண்டியபடி விரல்களுடன் ஒரு கையிருந்தது. அந்த விரல்களை விட்டு மேலே ஒரு பறவை பறக்க முயற்சிப்பதுபோல ஒவ்வொரு முலையும் துடித்தது. முடியவில்லை. நெருப்புப் பட்டவுடன் ஒவ்வொரு முலையின் காம்பும் வெடித்துப் பிளக்க அதனுள்ளிருந்து எழுதப்பட்ட வெள்ளைத்தாள்களும் பேனாக்களும் பென்சில்களுமாக வெளியே வந்து தெறித்தன. அந்தத் தாள்களும் நெருப்பிலேயே விழுந்து எரியத் தொடங்கின. அவற்றில் குழந்தையின் கிறுக்கல்கள்போல எழுத்துகள் படிந்து வழியத்தொடங்கின. முலையைப் பற்றிய அந்த கையும் முழங்கையுடன் அறுந்துபோயிருந்தது. அல்லது அதற்குப்பின் அந்தக் கையுடனான உடம்பு எதுவும் தெரியாமல் கருப்பு வழியும் இருளே இருந்தது. நெருப்பு எரியும் வெளிச்சத்தில் எப்படி இது சாத்தியம் ? என்று மங்களநாயகி குழப்பமுடன் யோசித்து நடுங்கிக்கொண்டிருந்தாள். அப்போது முற்றிலுமாக மங்களநாயகியின் உடலின் மேலிருந்த ஆடை துகள்களாக உதிர்ந்து அப்படியே பிறந்தமேனியாக நின்றாள். எண்பது வயதுக்குரிய பிறந்தமேனி அது. காய்ந்துபோன சுரைக்காய் கூடு போல முலைகளும் வாழைப்பட்டை சருகைப்போல உடம்பும் ஒடுங்கிய தொடையுடனான கால்களில் அங்கங்கே கருப்புத்திட்டுகளும் இருக்க அவளை நோக்கி விரல்களுடன் கூடிய கை நீண்டு வந்தபோது அவள் தன் பலம் முழுக்கவும் திரட்டிப் “பெருமாளே!” என்று ஓங்கிக் கத்தினாள். அந்த கத்தலில் ஒரு கணம் எரிந்துகொண்டிருந்த நெருப்பு நின்று பின் மறுபடியும் எரிய ஆரம்பித்தது.
உடம்பெங்கும் வியர்வை வழிந்து ஈசிசேரை நனைக்கத் திடுக்கென விழிப்பு வந்துவிட்டிருந்தது மங்களநாயகிக்கு.
இது என்ன இப்படியொரு நடுக்கமும் பயங்கரமும் உயிரை எரிக்கும் உணர்வுமாக ஒரு கனவு?
எழுந்து உட்கார்ந்து அறையின் விளக்கிற்கான சுவிட்சைப் போட்டாள். அறைக்குள் ஒளி வந்தது. கனவில் தான் பார்த்த இருளும் நெருப்பும் இங்கே அறைக்குள் இருக்குமோ என்கிற அச்சத்தில் உடம்பை ஒரு குலுக்கு குலுக்கி அறை முழுக்கக் கண்களை மேயவிட்டாள். இல்லை. இல்லை. நடுக்கம் அடங்கியது.
மணியைப் பார்த்தாள். மணி ஒன்றைத் தாண்டியிருந்தது.
எழுந்து கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்து வராண்டாவில் நின்று ஒருமுறை கோபாலன் அறை இருக்கும் திசையைப் பார்த்தாள். மனம் முழுக்கப் பகலெல்லாம் நடந்த எல்லாவற்றையும் எண்ணிப் பார்த்தாள். செல்போனைப் பார்க்க அது உயிர்க்கொல்லிபோலத் தெரிந்தது. அத்தனை அழைப்புகள். அத்தனை பேச்சுகள். அத்தனை கேள்விகள். அத்தனை எச்சரிக்கைகள். அத்தனை மிரட்டல்கள். அத்தனை அதட்டல்கள்.. அத்தனை..அத்தனை.. எத்தனை? எண்பது வயதில் தாங்கமுடியவில்லை.
நாளை விடியும்போது என்னவேண்டுமானாலும் நடக்கும்.
தனக்கு நாளை விடியக்கூடாது என்று மங்களநாயகி உறுதியாக முடிவெடுத்தாள். அதற்கு முன்னால் கோபாலனிடம் பேசிவிடவேண்டும். பேச வேண்டியது நிறைய இருக்கின்றன. எல்லாவற்றையும் மனதுக்குள் ஒருங்கிணைத்தாள். அவன் பதில் தேவையில்லை. ஆனாலும் மங்களநாயகி எண்ணிப்பேசுவதை அவனிடத்தில் சொல்லிவிடவேண்டும். அவன் கேட்கவேண்டும்.
அவன் அறை நோக்கி நடந்தாள். உள்ளுக்குள் விளக்கு எரிந்துகொண்டிருந்தது.
கதவைத் தட்டினாள்.
தானாகத் திறந்தது. உள்ளே போனாள். போன் பேசிக்கொண்டிருந்தான். இவளைப் பார்த்தவன் சற்றே அதிர்ந்தாலும் காட்டிக்கொள்ளாமல்
“ஏம்மா.. இன்னுமா தூங்கலே உடம்பு என்னாத்துக்கு ஆவறது? மாத்திரை போட்டியா? போட்டுமா தூக்கம் வரலே?” என்று கேள்விகளாக அடுக்கினான்.
எதற்கும் பதில் பேசாமல் அவன் எதிரே போய் நாற்காலியை நகர்த்திப்போட்டு உட்கார்ந்தாள். கொஞ்சநேரம் அவனை மேலிருந்து கீழ்வரை பார்த்தாள்.
“என்னம்மா?” என்றான் போனைக் கட்செய்துவிட்டு.
பேசாதே என்று அவனுக்கு வலது கையால் நிறுத்தம் காட்டிவிட்டு மறுபடியும் அவனை ஆழமாகப் பார்த்தாள்.
கோபாலனுக்குப் புரிந்தது.
“அம்மா.. அநாவசியமாக் கவலைப்படாதே.. நான் தப்பு செய்யலே? மாமா, அத்திம்பேர், நாராயணன் அண்ணா எல்லார்கிட்டேயும் பேசிட்டேன். ஒரு பிரச்சினையும் இல்லன்னு சொல்லிட்டாங்க.. நாளைக்குக் காலையிலே போலிசு வர்றதுக்குள்ளே ஜாமீன் வந்துடும்.. நீ பயப்படாதம்மா.. போய் நிம்மதியாப் படுத்துத் தூங்கு..கோர்ட்டுல அவதூறு வழக்குப் போடுவேன் என் மேல அபாண்டமாப் பழி போடறதுக்கு.. !”
“நிறுத்து.. நான் பேசணும்..! பேசிட்டுப் போயிடறேன்.. அதுவரைக்கும் நான் சொல்றத மட்டும் கேளு.. !”
பேசாமல் இருந்தான்.
மங்கள நாயகி பேச ஆரம்பித்தாள்.
“உங்கப்பா சொன்னார்.. அவங்க கூலி வேலை செய்யறவங்க.. அன்றாடச் சாப்பாட்டுக்காகப் போராடுறவங்க.. ஒவ்வொரு நாளும் அவங்களுக்கு நரகம்.. அதுலேர்ந்து விடுபடத்தான் அவங்கப் புள்ளங்களப் படிக்க அனுப்புறாங்க.. படிச்சிட்டு அப்படியே மாடிமேலமாடி கட்டி.. பத்து காரு வச்சி எட்டு வேலைக்காரங்க வச்சி வாழறதுக்கு இல்ல.. தங்களுக்குக் கிடைக்காத மூணுவேள சோறு தங்களோட புள்ளங்களுக்காகவது கிடைக்கட்டுமேன்னுதான் படிக்க அனுப்புறாங்க.. அதுனால அங்க உனக்கு டீச்சரா போஸ்டிங் ஆயிருக்கறது கொடுப்பினை.. புண்ணியம் நம்பப் புள்ளங்க நல்லாருக்கும்.. அதுங்க வாழ்க்கை கஷ்டமில்லாம இருக்கும் போன்னு” சொன்னார்..
“ நாற்பது வருஷம் சர்வீஸ் பண்ணி ரிட்டயர்டு ஆனேன்.. அவங்க என்ன டீச்சருன்னு கூப்பிட்டதவிட அம்மான்னும் சாமிம்மான்னு கூப்பிட்டதுதான் அதிகம்..!”
“எதுக்கு மனுஷியை சாமின்னு கூப்பிடுறீங்க? “ என்று கேட்பேன்.
“இல்ல தாயி.. மனசு வந்து எங்கப் புள்ளங்களுக்கு படிப்பு சொல்லித் தரவந்திருக்கீங்க.. அதுக்கு நேர்த்திக்கடன்னு சொன்னாங்க.. மனுஷங்கள சாமி நிலைக்கு உயர்த்துனா சாமி ஆயிடமுடியாது.. நாம இன்னும் சரியா நடந்துக்கணும்னு உணர்த்துற விஷயம்அது..!”
“அம்மா..” என்று இடைமறித்தான் கோபாலன்.
“நிறுத்து.. எதுவும் பேசக்கூடாது நீ? நான் சொல்றத மட்டும் கேளு..!”
சுவர்க்கடிகாரம் இரண்டுஅடித்து ஓய்ந்தது.
மங்கள நாயகி தொடர்ந்தாள்.
“சரியான நேரத்துக்குப் போவேன்..! சரியான நேரத்துக்குச் சாப்பிடுவேன்.! சரியான நேரத்துக்கு வீட்டுக்கு வருவேன்.! வீட்டுக்கு வந்தாலும் உங்கள எல்லாம் நல்லா பாத்து வேண்டியத செஞ்சு கொடுத்துட்டு.. நாளைக்குப் புள்ளங்களுக்கு என்ன சொல்லிக்கொடுக்கணும்.. எப்படிச் சொல்லிக்கொடுக்கணும்னு யோசிச்சுக் குறிப்பு எடுப்பேன். அங்க நிறைய குழந்தைகள்ல பொம்பள பசங்கத்தான் அதிகம். மேலுக்குச் சட்டை இருக்காது. அழுக்குபோன கவுனும் கிழிஞ்சிருக்கும். ஆனா பாடத்தை ஒழுங்கா கவனிக்கும்!”.
“ நீ பொறந்தப்ப அத்தனை சந்தோஷம் எனக்கும் உங்கப்பாவுக்கும். அப்பா அப்பவும் சொன்னார்.. ஏய் மங்களா உன்ன மாதிரியே இவனையும் டீச்சராக்கிடு.. நல்ல புண்ணியமான காரியம்” என்றார்.
“அப்படித்தான் ஆகணும்னு நினைச்சேன்.!”
“அதுக்காக உன்னை சாதாரணப் பள்ளிக்கூடத்துலே ஆணும் பொண்ணும் கலந்து படிக்கிற இடத்துலே சேர்த்துவிட்டேன். படிப்பைத் தவிர எதுவும் உனக்கு வித்தியாசமாத் தெரியக்கூடாதுன்னு.. ஆனா இப்ப நினைச்சா என்னோட அடிவயிறு கொதிக்குது.. உன்னை ஏண்டா பெத்தோம்னு.. “
“எங்கிட்டதான் பால் குடிச்சே.. ரெண்டு கையாலேயும் என்னோட மார்புகளைப் புடிச்சுக்குவே.. பாசமா புள்ள இருக்கான்னு நினைச்சு அஞ்சு வயசு வரைக்கும் பால்குடுத்தேன்.. எல்லாம் பச்ச குழந்தைங்க.. அதுங்களுக்கு என்னான்னு தெரியாத வயசு.. ஒருத்தருவிடாமச் சொல்றாங்க.. நீ அவங்க நெஞ்சுமேல கைவச்சி படுத்துன பாட்டை.. ஒரு பெத்ததாயி உங்கிட்ட இதச் சொல்லும்போது அப்படியே செத்தப்பொணமா மாறிப்போயிடறேன்.. சே.. என்ன புள்ள நீ? பெத்தப் புள்ளகிட்ட பெத்தவ பேசற பேச்சா இது?!”
“அவங்க இல்லாததயும் பொல்லாதயும் சொல்றாங்கம்மா..” என்றான் இடைமறித்து.
“இந்த வயசுலே.. உன் ஆயுசுக்குமான பொய்யைச் சொல்றே? இவ்வளவு பொய் சொல்றே? என் உடம்பு நடுங்குது.. நம்ப வயித்துல பொறந்தது இப்படி பொய்யும் புரட்டுமா அய்யோ பெருமாளே..! இப்படியே என்ன எடுத்துக்கப்புடாதான்னு வேண்டுறேன்..”
“ நான் எம்புள்ளங்களுக்குப் படிப்பு சொல்லிக்கொடுத்ததவிட பாரதக் கதையைதான் அதிகம் சொல்லியிருப்பேன்.. ஒவ்வொரு பாத்திரமும் அது பேசுற பேச்சையும்தான் சொல்வேன்.. பாரதக் கதை முழுக்கக் கதையாப் படிக்காம உரையாடல்போல நினைச்சு படிக்கணும்.. எத்தனை அறம்? எத்தனை நெறி? எத்தனை வாழ்க்கை ஒழுங்கு?”
“தினமும் உன்னைத் தூங்க வைக்க ஒவ்வொரு கதையா சொல்லியிருக்கேன்.. பதினைஞ்சு வயசுவரைக்கும் கதைக் கேட்டிருக்கே.. படிக்க வர்ற புள்ளங்க எல்லாரையும் படுக்க வர்ற புள்ளயா எப்படிடா உன்னால நெனக்க முடிஞ்சது?”
ஞபச்ச குழந்தைங்க.. யாராச்சும் குழந்தைகளோட இப்படி நடந்துக்க நினைப்பு வருமா? எம்புள்ளயா நீ? ஞ
ஞஎல்லாரையும் அப்படியே பாக்கமுடியுமா? அப்படி அடங்காத வெறியா உனக்கு?ஞ
காமம் ஒரு வேட்கை. அதுவும் ஒரு வாழ்க்கையின் அங்கம். பரஸ்பரம் ஒருத்தருக்கொருத்தர் விரும்பி வச்சுக்கறது.. வாழ்க்கை முழுக்க நாள் முழுக்க எல்லாநேரமும் யார் கிட்ட வேணாலும் அதையே வேணும்னு நினைச்சிருக்கியே? எப்படிடா? அருவருப்பா இல்ல?ஞ
“வாய்க்கும் வயித்துக்கும் பத்தாம படிக்கவர்றாங்க.. அவங்களுக்குப் படிப்பு சொல்லிகொடுத்தா படுக்க வரணும்.. மார்க் போடறதுக்கு மானங்கெடணும்.. உனக்கு ரெண்டு பொம்பளப்புள்ளங்க இருக்கு.. அவங்க நல்லாப் படிக்கிறாங்க.. நல்லா மார்க் எடுக்கறாங்க.. அவங்களுக்கு இப்படித்தான் உன்ன மாதிரி எவனோ ஒருத்தன் கூப்பிட்டிருப்பானா? மார்க் போட்டிருப்பானா? அதுங்க சின்னப்புள்ளலேர்ந்து அப்பா..அப்பான்னு உன்னைக் கூப்பிட்டு.. உன்னோட விளையாடி,, உன்னோட சாப்பிட்டு.. உன்னோட படுத்து வளர்ந்து வந்துருக்காங்க.. எனக்கு இப்போ நடுங்குது? இந்த நினைப்புலதான் அதுங்களோடயும் இருந்திருப்பியா?”
“அம்மா.. என்னைக் கொல்லாத!” என்று கத்தினான் கோபாலன்.
“பாரதக் கதையிலே யட்சனுக்கும் தருமனுக்கும் நடக்கிற உரையாடல் தெரியும் உனக்கு. அடிக்கடிச் சொல்லியிருக்கேன்.. அதுலே நிறைய கேள்விங்க இருக்கு.. கடைசிவரைக்கும் ஒருத்தனுக்கு உற்ற துணை எதுன்னு யட்சன் கேக்கறப்பா அவன் கற்ற கல்வின்னு தருமன் சொல்லுவான். கல்வியைவிட உனக்குக் காமம் பெரிசா? உனக்கு என்ன மாதிரி உடம்பு தளர்ந்து வயசாயியும் இப்படித்தான் அலைவியா? “
“அம்மா…”
“ யட்சன் மறுபடியும் கேப்பான்.. உயர்சாதிங்கறது பிறப்பா? கல்வியா? ஒழுக்கமா? ன்னு
தருமன் சட்டுன்னு சொல்வான் ஒழுக்கந்தான்னு.”
“உனக்கு சாதின்னா அட்டையிலே எழுத்துனத வச்சி பேசறே.. ஒழுக்கங்கறது உயிரோடயும் உணர்வோடயும் சம்பந்தப்பட்டது. நாளைக்குக் காலையிலே உன்ன அழைச்சிட்டுப் போயிடும் போலிசு. உன்னோட பொண்டாட்டி.. புள்ளங்க..அதுவும் பொம்பளப்புள்ளங்க.. உன்னோட கூடப்பொறந்த பொறப்புங்க.. சொந்தக்காரங்க.. எல்லாருக்கும் என்ன பதில்? எல்லாத்தையும் உதிர்த்துட்டு உன்ன மாதிரி நாங்க வாழமுடியுமா? குரு தட்சிணை உண்டு கேள்விப்பட்டிருக்கேன்.. ஒழுக்கத்தக் கத்துக்கொடுன்னா உடம்பைக் கொடும்பியா?”
“அதெல்லாம் நடக்காது.. முன் ஜாமின் வாங்கிடுவாரு மாமா..!”
“ச்சீ! அசிங்கமா இல்ல..! பொம்பளய பொறுக்கனுதுக்கு.. முன் ஜாமீனா. நீ குற்றவாளி இல்லை.. நானும் உங்கப்பாவுந்தான் குற்றவாளிங்க.. உன்னை சரியா வளர்க்கலேங்கறதவிட உனக்குக் கற்றுக்கொடுத்த கல்வி சரியா இல்லை.. நீ படிச்ச படிப்பும் வாங்குன சர்டிபிகேட்டும் பிரயோசனமில்ல.. வெறுங்காகிதம்.. குப்பைக்காகிதம்.. உங்கப்பா செத்துப்போயிட்டாரு.. நல்ல வேளை.. நான் உசிரோட இருக்கேன். ஆனா உசிரை மட்டும் வச்சிட்டு எல்லோரும் என்னைக் கிட்டத்தட்ட கொலையுயிராக் கொன்னுட்டாங்க.. நடைப்பிணந்தான் நான்.. இனிமே திங்கற சோறும்.. குடிக்கிற தண்ணீரும்.. பாக்கற மனுஷாளும்.. பொம்பள பொறுக்கறவனோட அம்மான்னுதான் பாப்பாங்க.. சொல்லமாட்டாங்க.. சொல்லிட்டு சிரிக்கற மனுஷாளும் உண்டு.. இந்த வயசுலே.. சாமிசாமின்னு கூப்பிட்டு வாழ்ந்த வாழ்க்கையிலே மலத்தைத் தின்னமாதிரி ஆயிட்டேன்.. உள்ளே போகாம வெளியே வராமத் தொண்டையிலே சிக்கித் திணறி நிக்கறேன்.. என்ன சுத்தி ஒரே மல வாசனை.. பொம்பளபுள்ளங்க கதறி அழற சத்தம்..தூங்க முடியலே.. மாத்திரை போடறது தூக்கம் வர்றதுக்கு. மானம் போனதுக்கு மாத்திரை போட்டா தூக்கம் வந்துடுமா.. ?”
“எத்தனை புள்ளங்க? டிவியிலே வாட்ஸ் அப்புல பேஸ் புக்கல பேட்டிக் கொடுத்துத் துடிக்குதுங்க.. அதுங்கள பாத்தியா? அதுங்கள ஒரு புள்ளயகூடவா உன்னோட மகள் மாதிரி தெரியுதுன்னு நினைப்பு வரலே? புள்ளங்க நம்பளக் காப்பாத்தும்னு நிம்மதியா இருப்பாங்க பெத்தவங்க.. இப்போ எனக்கு ரொம்பப் பயமா இருக்கு? உங்கப்பா செத்துப்போயிட்டாரு.. நீ இருக்கற வீட்டுலே நான் நிம்மதியா இருக்கமுடியுமான்னு? எண்பது வயசு என்ன எட்டு வயசு என்ன? எல்லாம் ஒண்ணுதான்..வேட்டையாடுற மிருகத்துக்குக் கறிதானே?”
“அய்யோ.. அய்யோ.. அம்மா..!” அதிர்ந்து பேச்சற்று நின்றான் கோபாலன். உடனே அழுதான் வாய்விட்டு.
“பொய் அழுகை வேண்டாம்.. எத்தனையோ பேப்பர்லே வருது.. ஊருக்கே நியாயம் பேசறான்.. கவிஞருங்கறான்.. எழுத்தாளங்கறான்.. என்னென்னமோ பதவில இருக்கான்.. அவனும் இப்படித்தான் உன்ன மாதிரி அலையறானுங்க.. இப்படி ஒழுக்கமே இல்லாவங்க எப்படி மத்தவங்களுக்கு ஒழுக்கத்த சொல்லிக் கொடுக்கறீங்க? சமூகத்த மாத்துவேம்பீங்க.. இதுலே அவன் திறமையைப் பாரு.. அவன் தனிப்பட்ட வாழ்க்கையைப் பார்க்காதேன்னு ஒழுக்கங்கெட்ட பேச்சுப் பேச ஒரு கூட்டம்.. அவங்களையும் பெத்தவங்கப் பாத்துக்கிட்டுதான் இருக்காங்க.. சே.. அசிங்கமான மிருகங்க..”
“என்ன மாதிரி பெத்தவ எத்தனை பேரு செத்து செத்துப் பொழக்கறாங்கன்னு தெரியலே! நம்ப பண்பாட்டுல நாட்டையும், மண்ணையும் மலையையும் செடிகொடி ஆறு கடல் எல்லாத்தையும் பொண்ணாப் பார்த்துக் கொண்டாடும் தேசம்.. எல்லாம் படிச்சிருக்கே.. பெண் இல்லாம எதுவும் இல்லன்னு.. உனக்கு மட்டும் பெண் வெறுங்கறியா தெரிஞ்சிருக்கு.. பெண் இங்கே பிரும்மம்.. பிருமாண்டமான படைப்புத் தெய்வம்.. அவதான் மனுஷக்குலத்தின் பிரதிநிதி.. தாய்மை ஒண்ணுக்காக உலகமே பெண்ணை தூக்கி வச்சி பெருமை பேசுது.. உனக்கு மட்டும் அதுவும் சின்னப்புள்ளங்க.. உன்ன பெத்த இந்த வயித்த நெருப்புல வச்சுப் பொசுக்குனாக்கூடப் பாவம் போகாதுடா…”
எழுந்து நின்றாள் மங்கள நாயகி.
கோபால் ஓடிவந்து அவள் கால்களில் விழுந்தான். அழுதான்.
காலை உதறினாள். “காலை பிடிக்காதே பயமாயிருக்கு என்று தன் ஆடையில் ஒரு கையை வைத்துப் பிடித்துக்கொண்டாள். !
வெளியே வந்தாள்.
கோபாலும் வெளியே வந்தான்.
“என் பின்னாலே வராதே!” என்று சொல்லிவிட்டு சாமி அறைக்குள் போனாள். கோபால் அப்படியே நின்றுவிட்டான். சாமிப் படங்களின் முன் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.
பார்த்துவிட்டு கோபால் திரும்பி அவன் அறைக்குள் போய் கதவைச் சாத்திக்கொண்டான்.
மெல்ல எழுந்து சாமி அறையில் இருந்த பீரோவினைத் திறந்து உள்ளிருந்து தன்னுடைய சான்றிதழ்கள் பென்ஷன் புத்தகம் எல்லாவற்றையும் எடுத்தாள். அவற்றை அப்படியே தரையில் போட்டாள். பின் கோபால் படித்த அத்தனைச் சான்றிதழ்களையும் எடுத்து தரையில் போட்டாள்.அவற்றை ஒருகணம் வெறிக்கப் பார்த்தாள்.
பாஞ்சாலி சபதம் உரைப்பதைப்போலப் பேச ஆரம்பித்தாள்.
“கற்ற கல்வி ஒழுக்கந் தரும். ஒழுக்கத்தைத் தராத கல்வி கல்வியல்ல.! இவை யாவும் வெற்றுக் காகிதங்கள்.! நான் என் பிள்ளையைச் சரியாக வளர்க்கவில்லை. நான் ஊருக்கே கற்றுக்கொடுத்த சாமியாக இருக்கலாம்.! ஆனால் என் மகனுக்குக் கற்றுக்கொடுத்தது வீணாகிவிட்டது.! அவனுக்கும் இது பயனற்றது.!”
வெளியே பார்த்தாள். இருள் அச்சுறுத்தி அடர்ந்து கிடந்தது. சுவற்றில் மணியைப் பார்த்தாள் மணி நான்காகிவிட்டிருந்தது. இன்னும் சில மணிநேரங்களில் விடிந்துவிடும். அந்த வெளிச்சம் உயிர்க்கொல்லி. வாழமுடியாது. எதற்கும் பதில் சொல்லமுடியாது. தெரியாத பதில்களால் அவள் கொடூரமாகக் கொல்லப்பட்டுவிடுவாள். அப்படிச் சாக விரும்பவில்லை மங்களநாயகி. மறுபடியும் அடர்ந்த இருளைப் பார்த்தாள்.
சாமி விளக்கேற்றிக் கும்பிட்டுவிட்டு அந்த விளக்கு நெருப்பு எடுத்து குவியலாகப் போட்ட சான்றிதழ்களின் மேல் வைத்தாள். பற்றிக்கொண்டு எரிய ஆரம்பித்தது. சாமி அறைக்கதவை உள் தாழிட்டாள். சாமிஅறையின் மின் விளக்கை அணைத்தாள். இப்போது எரியும் நெருப்பு மட்டுமே, அதன் மேல் போய் அப்படியே அமர்ந்தாள். பிணத்தின் மேல் மொய்க்கும் எறும்புகள் போல அவள் உடம்பின் மேல் வெம்மை ஊர்ந்தேறத் தொடங்கியது. அவளுக்குக் கண்ட கனவு மறுபடியும் வந்தது. அந்தக் கனவில் எரியும் முலைகளும் பெண் உறுப்புகளும் காணாமல் போயிருந்தன. உதடுகள் மட்டும் “பெருமாளே!” என்று உச்சரித்தன. மங்கள நாயகி மட்டுமே எரியத் தொடங்கினாள்.
ஹரணி, 31 பூக்குளம் புது நகர், கரந்தை, தஞ்சாவூர்-613002. பேச. 9442398953
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்