logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

நித்யா

சிறுகதை வரிசை எண் # 218


அம்மையார் ஹைநூன் பீவி நினைவு சிறுகதைப் போட்டிக்காக. சிறுதெய்வங்களின் வரங்கள்.! நித்யா உறுதிமொழி வணக்கம்! இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சிறுகதை எனது சொந்தக் கற்பனை. இதுவரை முகநூல் உட்பட எந்த ஊடகத்திலும் இது வெளிவந்ததில்லை எந்தவொரு படைப்பின் தழுவலோ, மொழிபெயர்ப்போ இது கிடையாது! போட்டி முடிவு வெளியாகும் எந்த ஊடகங்களுக்கும் அனுப்ப மாட்டேன். தங்களது போட்டியின் அனைத்து விதிமுறைகளையும் ஏற்கிறேன். இப்படிக்கு, நித்யா முகவரி என்.நித்யா N.NITHYA 232, ஸ்ரீசாய்பவன் ஹோட்டல், ராயல் பேக்கரி எதிரில், மேட்டுப்பாளையம், பெருமாநல்லூர் ரோடு, திருப்பூர் 641 602. செல் 890 355 9668. MAIL ID: nithyanagaraj2020@gmail.com “அந்தக் குட்டி சைக்கிளை ஏதாவது பண்ணுங்களேன்.. வெய்யில்லயும், மழையிலயும் காய்ஞ்சு வீணாப் போகுது..” மனைவி ஸ்ரீநிதியின் குரல்.. கெஞ்சல், சலிப்பு என்கிற எல்லையைத் தாண்டி கண்டிப்பு என்கிற அபாயகட்டத்துக்கு இடம்பெயர்ந்திருந்தது. போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தவன் அதை தற்காலிக நிறுத்தம் செய்து விட்டு அவளிடம் நிமிர்ந்தேன். கண்களில் யோசனை. “என்ன, புதுசாக் கேட்கிற மாதிரி பார்க்கறீங்க. ஒரு விசயத்தை எத்தனை தடவை தான் உங்களுக்கெல்லாம் சொல்றதோ.” வழக்கமான முற்றுப்புள்ளி வாக்கியத்தை அங்கலாய்த்தபடியே அவள் ராஜ்ஜியமான சமையலறைக்குள் புகுந்துவிட்டாள். துணி காயப் போட வீட்டின் பக்கவாட்டிற்கு சென்றிருந்த அம்மாவும் காலி பக்கெட்டுடன் வந்தாள். ”ஏன்டா அந்த சைக்கிளை..” என அவளும் ஆரம்பிக்க.. உசாரானவன் கை உயர்த்தி நிறுத்தினேன். “கொஞ்சம் டைம் கொடு.. ஏதாவது செய்யறேன்..” அவள் மேற்கொண்டு எதுவும் பேசாமல் பெருமூச்சு விட்டபடி அங்கிருந்து நகர்ந்தாள். இரண்டு பேரும் சேர்ந்து எனக்குள் ஏற்படுத்தின குற்றவாளி பிம்ப உணர்வு மிகவும் உறுத்த ஆரம்பித்திருந்தது. ஒருமாதிரி இது கெளரவப் பிரச்சனை ஆக்கிவிட்டது. போனை சோபாவின் மேல் போட்டுவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தேன். ஒரு பழைய சைக்கிளைக் கூட விற்க பலமில்லாதவனா நான்..? என் இயலாமைக்கு என்ன காரணம்..? என் மூத்த மகள் தியாவின் சைக்கிள் அது. அவளுக்கு ஐந்து வயதிருக்கும் போது வாங்கினது. எதிர் வீட்டில் குடியிருந்த கெளதம் சைக்கிள் வாங்க அதைப் பார்த்து ஆசைப்பட்டு, அடம்பிடித்து, உண்ணாவிரதமெல்லாம் இருந்து வாங்கின சைக்கிள். பீயெஸ்ஏ கம்பெனியின், குட்டி தேவதைகளுக்கான ஆரம்ப வாகனம். சிறுமி களுக்கான பிங்க் வண்ணம். பின்முதுகு சாய்ந்து கொள்ளும் வசதி. இரண்டரை அடி உயரம் இருக்கலாம்.. சைக்கிள் வாங்கினதும் உலகத்தையே போரில் வென்ற சந்தோசம் அவளிடம். லூலூ என்றெல்லாம் அதற்கு வினோதப் பெயர் சூட்டி மகிழ்ந்தாள். இருவரும் இணைந்து பின்பக்க அருணாசலம் செட்டியார் குட்டி சந்தில் சைக்கிள் ஓட்டிப் பழகினார்கள். இரண்டு முறை கீழே விழுந்து முழங்காலில் பதக்கம் சூடினாள் தியா. கைகளில் சிராய்ப்புத் தழும்புகள். ’ஏன்டி இப்படிப் படுத்திக்கிறே.. வரலைன்னா விடேன். சும்மா ஆம்பளைப் பையன் மாதிரி எல்லாத்துக்கும் முறுக்கிக்கிட்டு..’ என என் அம்மா மனம் கேட்காமல் அங்கலாய்த்தாள். அம்மாவுக்கு அவள் மேல் ஒரு வருத்தம் இருந்தது. எனது முதல் குழந்தை யை ஆண் வாரிசாக மிகவும் எதிர்பார்த்திருந்தாள். அந்த ஏமாற்றம் எப்போதாவது வெளிப்படும். அது தியாவின் மேல் எதிரொலிக்கும்.. உண்மையில் அம்மாவின் வார்த்தைகள் தியாவுக்கு ஆறுதலையோ, வெறுப்பையோ உண்டாக்குவதற்கு பதிலாக சவாலை ஏற்படுத்தின. ‘அதென்ன எல்லாத்துக்கும் பசங்க கூடவே என்னை கம்பேர் பண்றது.. அவங்க மட்டும் என்ன அப்படி ஸ்பெசல்?’ என சிலுப்பிக் கொண்டாள் தியா. ‘ஓட்டியே தீருவேன்’ என அடம்பிடித்து, விடாப்பிடியாக ஒரே வாரத்தில் கற்றுக் கொண்டாள். தனது கருத்தை வாபஸ் வாங்கிக் கொண்டு அவளுக்குப் பிடித்த முந்திரிப் பருப்பு தோசை செய்து கொடுத்தாள் அம்மா. ‘ஒற்றைக் கையால் கூட ஓட்டுவேன், கெளதமால் முடியாது’ என ஸ்டைல் காட்டினாள். சரியாக ஒன்னேகால் வருடம் மட்டுமே அந்த லூலூவுடன் பின்னிப் பிணைந்திருந்தாள். அவ்வளவு தான் அந்த சைக்கிள் அவளுக்கு பயன்பட்டது. அவள் உயரத்துக்கும், வளர்ச்சிக்கும் அது ஈடு கொடுக்க முடியாமல் பின்தங்கிவிட்டது. ‘ஓட்டும் போது கால் முட்டுதுப்பா..’ என்று புகார் சொன்ன போது இரண்டு முறை உட்காரும் சீட்டினை மேலுயர்த்திக் கொடுத்தேன். அதுவும் சில மாதங்களுக்குத் தான் வந்தது.. ‘குட்டியா இருக்கு, உயரம் பத்தலை’ என்று குற்றம் சொல்லிவிட்டு அந்த சைக்கிளைப் பின்பக்கம் போட்டு விட்டாள் தியா. கொஞ்ச மாதங்கள் அமைதியாக இருந்து விட்டு ‘புதுசா, பெரிய சைக்கிள் வாங்கித் தாங்கப்பா..’ எனக் கெஞ்ச ஆரம்பித்தாள். ஐந்தாம் வகுப்பு முடிக்கும் தருணத்தில் இருந்தாள். ‘முடியாது, வேற செலவுக இருக்கு, உனக்கெதுக்கு இப்ப சைக்கிள்? கொஞ்ச நாள் பொறு. ஸ்கூட்டர் ஓட்ட சொல்லித் தர்றேன்..’ என ஏதேதோ சால்ஜாப்பு சொல்லி அவளது கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்யப் பார்த்தேன்.. முடியவில்லை. ஒரு பலவீனமான நேரத்தில் என்னை வீழ்த்தி என் சம்மதத்தை எளிதில் வாங்கி விட்டாள். சரி, பழைய சைக்கிளை எக்சேஞ்ச் செய்துவிட்டு புதுசுக்கு மாற்றிக் கொள்ளலாம், ஏதாவது நல்ல தள்ளுபடி கிடைக்கும் என்கிற எண்ணத்தில் அதையும் தூக்கிக் கொண்டு அதே கடைக்கு சென்ற போது ‘அப்படியெல்லாம் இங்கே வழக்கம் இல்லை சார்’ என்றார் கடைக்காரர் விரோதமாக. மோட்டார் பைக், ஸ்கூட்டர் என எல்லாவற்றிற்கும் இந்த ‘பழசுக்குப் புதுசு’ வசதி உள்ள போது சைக்கிளுக்கு மட்டும் இல்லையா என்ன.? யோசித்துப் பார்க்கையில் அதன் பின்னணியில் இருந்த வியாபார அரசியல் புரிந்தது. புது சைக்கிள் விற்றால் அவனுக்கு லாபம் கிடைக்கும். பழசை கை மாற்றினால் நூறு, இருநூறுக்கு பேரம் பேசுவது அவனுக்கு மான இழுக்கு அல்லவா. தவிர புதுசு வாங்காமல் பழசு போதும் என கஸ்டமர் போய்விட்டால் ஒரு புதிய சைக்கிளின் விற்பனையும் தடைபடுமல்லவா. புதிய சைக்கிளை வாங்கிக் கொண்டு பழைய சைக்கிளை திரும்ப வீட்டுக்கு எடுத்து வந்துவிட்டேன். அது என்னை கேவலமாகப் பார்த்து சிரித்தபடி தாய் நாட்டுக்கே திரும்பி விட்டது. வீட்டருகே இருந்த பழைய சைக்கிள் ரிப்பேர் கடையில் சொல்லி வைத்தேன். அவன் அதைப் பார்த்துவிட்டு “என்ன ரேட்டுன்னு கொடுப்பீங்க. ஒரே விலை சொல்லுங்க. நாணயம், நேர்மையாப் பேசுங்க. மாத்தி மாத்திப் பேசாதீங்க..” என்றான் கறாராக. அவன் பாஷையே புரியவில்லை எனக்கு. என்ன சொல்ல வருகிறான் என்பதை கணிக்கவே முடியவில்லை. மனதில் தோண்றின தொகையைச் சொன்னேன். எதுவும் பேசவில்லை அவன். ‘ஆகட்டும் பார்க்கிறேன்’ என்றபடி நகர்ந்துவிட்டான் அவன். அவனது வியாபாரம் புதிராக இருந்தது. சாதாரணமாக நாம் ஒரு விலை சொல்லுவோம், பதிலுக்கு எதிராளி ஒரு தொகை சொல்லி அதைக் குறைப்பார்கள். அந்தத் தொகை ஒத்துவந்தால் சரி என்போம். இல்லையென்றால் முடியாது என சொல்லிவிடுவோம். இதுதான் எனக்குத் தெரிந்த வியாபார நடைமுறை. ஆனால் அவனது செயல் புரியாமல் தலைசுற்றியது எனக்கு. அதிகமா, குறைவா எதுவுமே பதில் சொல்லாமல் இப்படி நட்டாற்றில் விட்டுப் போனால் என்ன செய்வது எனப் புரியவில்லை. யாராவது வந்து அந்த சைக்கிளைப் பார்ப்பார்கள், அவன் விற்றுத் தந்துவிடு வான் என்ற நம்பிக்கையில் கொஞ்ச காலம் இருந்தேன். அப்படியே அந்த சைக்கிளை மறந்தே போனேன். யாருக்கும் தொந்தரவு தராத வகையில், கண்கள் உறுத்தாத வண்ணம்.. உரல், உலக்கை போல, துணி துவைக்கும் கல் போல அதுவும் வீட்டில் புழங்காத புராதனப் பொருளாக கொல்லைப் புறத்தில் தங்கியிருந்தது. போன மாத ஆயுத பூஜையன்று வீட்டை சுத்தம் செய்தாக வேண்டிய நிலை. பதுங்கியிருந்த சைக்கிள் மீண்டும் வெளியே வந்துவிட்டது. கண்ணில் படும்படி இருந்ததால் ஆளுக்காள் அதன் எதிர்காலத்தைப் பற்றி மீண்டும் கவலைப்பட ஆரம்பித்து விட்டார்கள்.. என்ன பண்ணலாம்.. கொஞ்சம் சிரத்தை எடுத்து யோசித்தேன். எப்படியாவது இதை நாடு கடத்தியாக வேண்டிய கட்டாயம். நான் கடைசியாகப் பேசின அவனிடமே திரும்பவும் போகலாமா என்று.. ம்ஹூம்.. மண்டையைப் பிய்த்துக் கொள்வதா.. வேண்டாம். கொஞ்சம் வேறு மாதிரி யோசித்தால் என்ன.. செல்போனில் போட்டோ எடுத்து அதை எனது வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் ‘குட்டி சைக்கிள் விற்பனைக்கு..’ என்று தலைப்பிட்டு செல் எண்ணுடன் பதிவிட்டேன். நான்கைந்து குழுக்களில் போட்டேன். யாராவது அழைப்பார்கள், கண்டிப்பாக விற்பனையாகி விடும் என்றும் எதிர்பார்த்தேன். மோசமில்லை. என்ன விலை என்று நான்கைந்து பேர் கேட்டிருந்தனர். இந்த முறை கவனமாக பொருள் இங்கிருந்து கிளம்பினால் போதும், வீடு சுத்தமானால் போதும் என்கிற எண்ணத்தில் இருந்தவன் இறங்கி வந்து அளவான தொகையையே குறிப்பிட்டு சொன்னேன். அதற்குப் பிறகு எதிர்விளைவு இல்லை. சப்பென்றாகிவிட்டது. என் டிஜிட்டல் மார்க்கெட்டிங் இவ்வளவுதானா.! வேற என்ன பண்ணலாம்.. ஒளிந்திருக்கும் என் வாடிக்கையாளனை தேடிப் பிடிப்பது எப்படி.? போட்டோ ஷாப் போய் சைக்கிளின் போட்டோ போட்டு விற்பனைக்கு என்றெழுதி செல் எண் பதிவிட்டு ஏ3யில் நான்கைந்து அச்சுப் பிரதி எடுத்தேன். தியாவின் ஸ்கூல் எதிரில் இருந்த ஒரு விளக்குக் கம்பத்தில் திருடன் மாதிரி நள்ளிரவு சென்று மாட்டி வந்தேன். அப்படியே குழந்தைகள் பூங்கா சுவரிலும், குழந்தைகளுக்கான ஆடைகள் விற்கும் பிரபல துணிக்கடை எதிரிலும்.. என்னுடைய யோசனையின் கதிர்வீச்சு குறித்து பெருமைப்பட்டுக் கொண்டேன். இந்த முயற்சி கட்டாயம் பலனளிக்கும் என்று தோண்றியது. இரண்டு, மூன்று தினங்கள் பொறுமையாக காத்திருந்தேன். ஒரு மிஸ்சுடு கால் வந்தது. புதிய எண். திரும்ப அழைத்தேன். ‘பழைய சைக்கிள் இருக்குன்னு..’ ’நான் தான். சொல்லுங்க எங்கிருந்து பேசறீங்க..’ ‘எத்தனை வருசம் ஆச்சு, என்ன விலை..’ ‘கம்மி தான் நேர்ல வந்து பாருங்க. அப்புறம் விலை பேசலாம்.. இங்கே பத்ரகாளியம்மன் கோவில் கிட்ட.’ ‘சரி, கூப்பிட்டுட்டு வர்றேன்..’ சுவாரசியமின்றி முடிந்துவிட்டது உரையாடல். அடுத்து இன்னொரு பெண் அழைத்தார். பேசப் பேசவே கட் செய்து விட்டார். என்னடா இது சோதனை என்றாகிவிட்டது எனக்கு. நான்கைந்து தினங்கள் கழித்து ஸ்கூலிற்குப் போயிருந்த போது என் விளம்பர போஸ்டரைக் காணவில்லை, யாரிடம் விசாரிப்பது எனத் தெரியாமல் அலைந்தேன். பூங்கா எதிரில் சென்று பார்த்த போது சினிமா போஸ்டர் அதை மறைத்திருந்தது. எந்தப் பக்கம் போனாலும் கேட்டைப் போடறாங்களே.. பழைய பேப்பர் போட கடைக்குப் போயிருந்தேன். அங்கிருந்த பழைய தகர சேர், கட்டில்கள், இரும்பு டேபிள் என எல்லாவற்றையும் பார்த்த போது சுருக்கென்றது. பெரிய பிக்கப் வேனில் அந்தப் பொருட்கள் மூட்டை மூட்டையாக ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. இவரிடம் ஆலோசனை கேட்டால் என்ன.. பருப்பு வடையை வரக்காப்பியில் பிஸ்கட் மாதிரி தொட்டு தொட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்த அவர் போனில் காட்டின அந்த சைக்கிளையும், என்னையும் மாறி மாறிப் பார்த்தார், “ப்ச்.. எங்கே சார். இதெல்லாம் ஸ்க்ராப்புக்குத் தான் போகும்.. நூறோ இருநூறோ தரலாம்..” என்றார் இரக்கமில்லாமல். அவரது முன்னோர்களையும், தலைமுறையையும் வாழ்த்தி விட்டு வந்தேன். பேசாமல் அது இங்கேயே இருந்துவிட்டுப் போகட்டுமே. யார், தலையில் தூக்கி வைத்துக் கொண்டு சுமக்கப் போகிறார்கள். இனிமேல் யாராவது வீட்டில் இதைப் பற்றிப் பேசட்டும்.. என்னுடைய பழைய சைக்கிள் எனக்கு ஞாபகத்தில் வந்தது. அது ஒரு மூன்று சக்கர சைக்கிள். நான் தவழ்ந்து முடித்த அடுத்த கட்டத்தில் தாய்மாமாவால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது எனக்கு. கிட்டத்தட்ட இருபது வருடம் என் கூடவே வாழ்க்கை நடத்தினது.! அதற்குப் பிறகு பள்ளிக் காலத்தில் இரண்டு சைக்கிள் மாறினேன். அப்புறம் டீவியெஸ் ஐம்பது, இப்போது ஸ்கூட்டர்.. என்னுடைய மூன்று சக்கர சைக்கிள் சீட்டுகள் பிய்ந்து போய், சக்கரம் மேல் டயர் உறிந்து போய், பெடல்கள் உடைந்து, இதர இரும்புகள் துருப்பிடித்து.. அத்தனை இருந்தும் அதை நான் விற்கவில்லை. தூக்கிப் போடவில்லை. அம்மாவும், அப்பாவும் மாறி மாறி முயற்சித்த போதும் அதை விற்க விடவில்லை நான். ‘பரவாயில்லை, அது அப்படியே இருந்துட்டுப் போகட்டும்.. அதனால யாருக்கென்ன நட்டம்..’ என்பேன் விரைத்தபடி. உயிரற்ற பொருள் என்பது தாண்டி மனரீதியாக நெருக்கமான உறவாக அதைப் பார்த்தது தான் அனைத்திற்கும் காரணம். உயிரற்ற பொருளை உறவாகப் பார்த்தது அந்தக் காலம்.. உறவுகளைக் கூட உயிரற்ற பொருளாக பார்ப்பது இந்தக் காலம் என நினைத்துக் கொண்டேன். ஆனால் நான் வெளியூரில் இருக்கும் நாளில் எனக்குத் தெரியாமல் அப்பா அதனை பழைய இரும்புக் கடைக்குப் போட்டுவிட்டார். செய்தி தெரிந்து அவரிடம் கோபித்துக் கொண்டேன். இவளது சைக்கிள் குறித்து ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இருப்பதற்கு அதுவும் ஒரு காரணமோ என்னவோ. மனம் ஒத்துழைக்க மறுக்கிறதோ எனக்கு. ஆனால் அந்த மாதிரி பைத்தியக்காரத்தனமெல்லாம் தியாவிடம் இல்லை. அவளைப் பொறுத்தவரை பொருள் பொருள் தான். அதில் தெளிவாக இருந்தாள். அதுசரி, இந்த சைக்கிளை என்ன தான் செய்வது.. இதற்கு முடிவென்ன.. புரியாமல் தவித்தேன். பதினைந்து, இருபது நாட்கள் கழிந்திருக்கும். ஆபிஸ் வேலையாக சில தினங்கள் வெளியூர் சென்றுவிட்டு அன்று தான் வீடு திரும்பியிருந்தேன். வீட்டிற்கு வந்து போனவர்கள், அக்கம்பக்கத்து செய்திகள் என சேகரித்து வைத்திருந்தவைகளை எல்லாம் கொட்ட ஆரம்பித்தனர் வீட்டினர். பள்ளி குறித்து, தேர்வு அறிவிப்பு குறித்து சொன்னாள் தியா. ஏதோ வேலையாக பின்புறம் போனவனுக்கு வெற்றிடம் உறுத்தியது. குட்டி சைக்கிளைக் காணோம். ‘ புரியாமல் சுற்றிலும் பார்த்தேன். இடம் மாற்றி வைத்து விட்டார்களா என்ன. வீட்டிற்குள் வேகமாக நுழைந்தேன். “தியாவோட பழைய சைக்கிள் எங்கே..” மனைவி ஸ்ரீநிதியும், அம்மாவும் ஒருசேர தியாவைப் பார்த்தார்கள். தியா கண்களை அழுத்தமாக மூடித் திறந்தாள். படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு “ஆமா நான் தான்..” என்றாள். புரியாமல் இருவரையும் பார்த்தேன். “என்ன..” ஸ்ரீநிதி ஆரம்பித்தாள். “நீங்க ஊருக்குப் போன மறுநாள் ஒரு ஜெக்கம்மா குடும்பம் வந்திருந்தது..” “யாரு..?” “அதுதாங்க மாடு மேல பட்டுத் துணி போர்த்தி அலங்காரம் பண்ணி, உறுமி மேளம் அடிச்சுக்கிட்டு யாசகம் வாங்க வருவாங்களே.. அந்த கும்பல்..” “ஓ, அதுவா. சொல்லு..” “அதுல ஒரு பாப்பா.. இவளோட சைக்கிளையே வெச்ச கண்ணு எடுக்காம ஆசையாப் பார்த்திட்டிருந்தா. அதை கவனிச்சவ ‘என்ன சைக்கிள் வேணுமா..’ன்னு கேட்க அம்மாவோட புடவைக்குப் பின்னாடி ஒளிஞ்சுக்கிட்டா அவ. இந்த மகாராணி பெருந்தன்மையோட சைக்கிளை உருட்டிக்கிட்டுப் போய் அவ கையில கொடுத்துட்டா. எப்படி..!” “……………” “முழு தானம்ங்க. அப்படியே! சே, எடைக்குப் போட்டிருந்தா ஒரு பாக்கெட் பேரீச்சம்பழமாவது கிடைச்சிருக்கும். அதுக்கும் வழியில்லாம.. என்ன ஒரு தாராள மனசு பாருங்க உங்க பொண்ணுக்கு. அட அடா..” பேசிக் கொண்டே போனாள் ஸ்ரீநிதி. நான் திகைத்துப் போய் தியாவைப் பார்த்தேன். “நான் கொடுத்ததை அவளால நம்ப முடியலைப்பா. அந்த சைக்கிளை அவ ஆசையோட தொட்டுப் பார்க்கிறா.. அதிசயம் மாதிரித் தெரியுது அவளுக்கு. ஓடி வந்து என் கையைப் பிடிச்சுக்கிட்டு அழுகிறா. அதுக்கு மேல அவளுக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை.! பாவம்ப்பா..” எனக்குக் கூட இது தோண்றவில்லையே.. ஒரு பொருளுக்கு விலையில்லை யெனில் அதனை விரும்புகிறவர்களுக்கு தானமாக தரலாமே. அதன் மூலம் சந்தோசம் தரலாமே.. மிகப் பெரிய பிரச்சனைகளுக்கெல்லாம் எத்தனை சிறிய தீர்வுகள் இருக்கின்றன குழந்தைகள் உலகத்தில்..! “வாப்பா இங்கே..” என்றேன். தயங்கி வந்தவளை இழுத்து நெற்றியில் முத்தம் வைத்தேன். .

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.