Atchaya K
சிறுகதை வரிசை எண்
# 217
*என்னை ஏற்றுக்கொண்டாயா*
ஏழு வருடங்களுக்கு முன்பு கருப்பன் சன்னிதியில் அவனின் கட்டளையின் படி அவர்களுக்கு திருமணம் முடிந்தது.
ஏழு வருடங்களுக்கு பின்பு…..
அவள் அவன் தோளில் சாய்ந்து அழுது கொண்டே என்னால தானங்க உங்களுக்கு இவ்வளவு கஷ்டம் என்று புலம்பி கொண்டிருந்தாள்.
"ஏ புள்ள அழாத எதுக்கு அழுகுற இப்போ என்ன நடந்தது போச்சு ஏன் இப்படி எல்லாம் பேசுற உன்னாலே எனக்கு எந்த கஷ்டமும் இல்லை".
"இல்லங்க கல்யாணம் ஏழு வருசம் ஆச்சு உங்களுக்குன்னு பேர் சொல்ல ஒரு பிள்ளைய கூட என்னால கொடுக்க முடியலையே" என்று தேமி தேமி அழுதாள்.
"ஏய் என்ன நீ பேசுற அதெல்லாம் ஒன்னும் இல்ல அழாத…. அழாத ன்னு சொல்றேன் என்ன பாரு என்னபாருன்னு சொல்றேன்ல,
"உன்னைய நான் கல்யாணம் பண்ணது அந்த கருப்பசாமி சொன்னதுக்காகவோ ஊருக்காகவோ இல்ல உங்க சொந்த பந்தத்துக்காகவோன்னு நினைச்சியா அதெல்லாம் இல்ல நீ என்ன விரும்புனன்ற ஒரே காரணத்துக்காக தான். கல்யாணம் கட்டிக்கிட்டேன்.அதுக்காக மட்டும் தான்". என்று தோள்பட்டையை கட்டியபடி சொன்னான் அவன்.
"சும்மா இதுக்காண்டி எல்லாம் கண்ண கசக்கிட்டு இருக்காதே" சரியா என்று அவள் கண்ணில் வழியும் நீரை அவன் வேஷ்டி முனையால் துடைத்துவிட்டான்.
"இல்லங்க இருந்தாலும் ஊர்ல எல்லாரும் உங்கள பத்தி தப்ப பேசிடகூடாதில்ல அத நினைச்சாதாங்க கஷ்டமா இருக்கு".
அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல பேசுனா பேசிட்டு போறாங்க "அப்படி பேசுறவங்களுக்காகவா நீ என் மேல விருப்பப்பட்ட " என்றவுடன் அவள் தன் கையால் அவன் வாயை மூடியவாறே "இப்படியெல்லாம் பேசதீங்க. உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க தான் எனக்கு உலகமே"..
அப்புறம் என்ன பிறகு ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிற.
இதெல்லாம் நினைச்சி மனசபோட்டு குழப்பிக்காத நீ எனக்காக இருக்கல்ல அதுமட்டும் எனக்கு போது,சரியா
அவள் எதுவும் பேசவில்லை…
என்ன புள்ள எதுவும் பேச மாட்ற..அப்படி இல்லையா
ஏங்க அதெல்லாம் இல்லங்க..
என்னதான் நீங்க ஆயிரம் சொன்னாலும் என் மனசு அத ஏத்துக்க மாட்டேங்குதுங்கே..
"பிறகு என்ன பண்ணாலமுன்னு நீயே சொல்லு"….
"எனக்கு என்னங்க தெரியும் என்னிடம் கேக்குறீங்க"..
அவன் ஒரு புன்னகை புரிகிறான்.
அவள் "என்னங்க" சிரிக்கிறிங்க என்றாள். ஒன்னும் இல்ல சொல்றேன். இப்போ உனக்கு ஒரு குழந்தை.
ஏங்க… என்றாள்
"என்னாச்சு" என்றான்
நம்ம குழந்தைன்னு சொல்லுங்க.
"ஓ.சரி சரி நமக்கு ஒரு குழந்தை இருக்குன்னு வச்சுக்கோ..அந்த குழந்தைக்கு நீ என்னவெல்லாம் செய்வ"
"அதான் இல்லையேங்க"…
"இருந்தா என்னவெல்லாம் பண்ணுவன்னு கேட்டேன்".
நமக்குன்னு ஒரு குழந்தை இருந்தா அந்த குழந்தைய கையிலே வச்சு தாங்குவேன்.என்னவெல்லாம் வேணுமோ அதெல்லாம் வாங்கி தருவேன்.
"நிறுத்து நிறுத்து ஒரு நிமிஷம்" என்று இடை மறித்தான்.
"என்னங்க"என்றாள்.
குழந்தன்னு சொன்ன சரி "ஆணா பெண்ணான்னு சொல்லலயே"என்றான்.
"எந்த குழந்தையா இருந்தாலும் கடவுள் குடுக்குறது தானே அதுனால எந்த குழந்தையா இருந்தாலும் நான் அப்படி தான் பாத்துப்பேன்".
"ஆனா ஒரு ஆசை உங்கள மாதிரி உங்க குணநலன் உள்ள ஒரு குழந்தை வேணும் அதுமட்டும் போதும்"என்றாள்.
"சரி அப்படின்னா ஒரு பெண் குழந்தைன்னு வச்சுக்கலாம்"
"இல்ல இல்ல ஆண் குழந்தை"என்றாள்.ஒரு வித படபடப்புடன்
இப்போதான் சொன்ன எந்த குழந்தைன்னாலும் பரவாயில்லை என்று.இப்போ ஆண் குழந்தைங்குற.
"இல்லங்க உங்கள மாதிரி உங்க குணநலன் வேணுமுன்னு சொன்னல்ல"அதான் என்றாள் ஒருவித வெகுளித்தனத்துடன்.
"ஏன் என்ன மாதிரி என் குணநலனுடைய ஒரு பெண் குழந்தையா இருக்க கூடாதா"…என்றான்.
இருக்கட்டுமேங்க.நான் எதும் சொல்லல..
சரி சரி என்ற புன்முறுவலுடன் "ஆண் குழந்தையே இருக்கட்டும்"
"சரி இதெல்லாம் எதுக்கு இப்போ கேக்குறீங்க" என்று வினவினாள் ஒருவித அவசரத்துடன்
"சொல்றேன் சொல்றேன் அவசரப்படாம கேளு இப்போ நமக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கு,நீ இப்போ சொல்லு எப்படியெல்லாம் பாத்துப்ப" என்றான்.
உடனே அவள் அவளை மறந்து "நம்ம குழந்தைக்கு என்னன்ன வேணுமோ வாங்கி குடுப்பேன்.நிறைய டிரஸ் எல்லாம் எடுத்து போட்டு அழகு பாப்பேன்.முத்தம் குடுப்பேன் அள்ளி அணைச்சிப்பேன்.பெரிய பட்ட படிப்பெல்லம் படிக்க வைப்பேன்.அவனுக்கு நல்ல முறையில் கல்யாணம் பண்ணிவைப்பேன். இன்னும் நிறைய நிறையா…அவனுக்கு செய்வேன்.
அப்போ இந்த பிரம்மன மறந்துடுவே.. அப்படித்தானே
அதெல்லாம் இல்லங்க..அப்படியெல்லாம் பண்ண மாட்டேன். நீங்கதானே எனக்கு எல்லாமே"
சரி அப்படின்னா ஒன்னு பண்ணு..
"என்னங்க செய்யனும்" என்றாள்
"இப்போ நான்தான் அந்த குழந்தைன்னு நினச்சிக்கிட்டு
நீ எப்படியெல்லாம் கொஞ்சுவியோ எப்படியெல்லாம் பாத்துப்பியோ உன் ஆசை தீரும் வரை அப்படி பாத்துக்கோ ..நா உன் மடியில படுத்துகிறேன்..சரியா" என்றான்.
அவள் நாணத்தில் கண்கள் சிவந்து,
"ஏங்க…. போங்க எனக்கு வெட்கமா இருக்கு என்று அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
அவனும் "என்னை பாரு" என்று கூற அவள் மறுக்க
அவன் இரு கைகளையும் அவளின் கன்னத்தில் அருகே கொண்டு சென்று சற்று அவள் முகத்தை உயர்த்தினான் அவனின் பார்வை அவளுக்கு"ஏன் என்னைய பார்க்க மாட்டியா" என்று ஏக்கத்தோடு இருப்பது போல அவளுக்கு இருந்தது.
இப்போது இவனுக்கு புடவை முந்தானை தேவைப்பட்டது. ஆனால்,
இரு கண்களும் கண்ணீரால் காதலை பரிமாறிக்கொண்டதால் முந்தானை தேவையற்று போனது.
அவன் அதே காதலுடன் அவளிடம் "என்னைய நீ உன் குழந்தையா ஏத்துக்கிறிய சிவகாமி" என்று கேட்டான்.
அவள் பதில் ஏதும் கூறாமல் அவனை இறுக அணைத்து கொண்டாள்.அதற்குத்தான் அவள் பதில் ஏற்கனவே கூறிவிட்டாளே.
இப்போது அல்ல.
ஏழு வருடங்களுக்கு முன்பே….
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்