Hrishikesh
சிறுகதை வரிசை எண்
# 220
சாதனா அனுப்பிய குறுஞ்செய்தியை கண்டு சற்று அதிர்ந்து தான் போனேன். அதற்கு காரணம், வாட்ஸாப் ஸ்டேட்டசில் நான் வைத்திருந்த புகைப்படம் தான். இல்லை, என் நண்பன் சமர்த் தான் அதற்கு காரணம். அவனுடன் புத்தாண்டு கொண்டாடிய போது, தற்செயலாக அவனது ரெட் வைன் பாட்டிலை நான் பிடித்திருப்பது போல் படம் பிடித்து விட்டான். எனக்கு குடிப்பழக்கம் இல்லையெனினும், நண்பனுடன் சேர்ந்து எடுத்துக்கொண்டதால் அதை ஸ்டேட்டசில் வைத்தேன். அதை என் மாணவி சாதனா பார்த்துவிட்டு, “எங்களுக்கெல்லாம் இல்லையா சார்?” என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்.
நல்ல பெண் தானே அவள்? ஏன் இப்படியெல்லாம் சிந்தித்து, என்னிடம் கேட்க முனைகிறாள்? பதினோராம் வகுப்பு மாணவிக்கு வயது பதினேழு கூட ஆகியிருக்காது, அதற்குள்... ஒருவேளை, நான் தான் முறையான ஆசிரியராக நடந்து கொள்ளவில்லையோ? இல்லையே, ஒரு நண்பனைப் போல மாணவர்களிடம் எத்தனை அன்புடன் பழகுகிறேன்! சரியான பாதையில் நான் வழி நடத்த தவறிய அந்த நட்பின் விளைவா இது? அந்த சமர்த் பயலை மொத்தலாம் என்று தோன்றியது.
“சும்மா தானே கேட்டா...? அதுக்கு ஏண்டா இவ்ளோ வருத்தப்படற?” என்று தனக்கும் நடந்ததற்கும் சம்பந்தமில்லை என்பது போல் பேசினான்.
“ஏண்டா சொல்ல மாட்ட....? இதெல்லாம் ஆரம்பிச்சதே உன்னாலதான்...” என்று பொரிந்தேன்.
“எதுக்குடா கத்தற...? அவ்ளோ நல்லவனா இருந்தா, ஸ்டூடென்ஸும் பார்க்கிற மாதிரி அந்த போட்டோவை போஸ்ட் பண்ணியிருக்கவே கூடாது... அட்லீஸ்ட் ப்ரைவசி செட்டிங்ஸ்ல போய் ஸ்டூடன்ட்சை ப்ளாக் பண்ணியிருக்கணும். இப்ப சாதனா மட்டும் இல்லை, மொத்த ஊருக்கே தெரிஞ்சிருக்கும் நீயும் குடிப்பேன்னு...”
சமர்த்தின் சொற்களில் இருந்த உண்மையை ஜீரணிக்க திராணியில்லை. இப்படி ஒரு முட்டாள்தனத்தை ஏன் செய்தேன்? எதற்காக செய்தேன்? கடவுளே!
சமர்த்திடம் நிகழ்ந்த செல்போன் உரையாடல், சாலையில் பறந்து கொண்டிருக்கும் வாகனங்களின் ஹாரன் சத்தத்தை விட என் மூளைக்குள் அதிகமாக ஒலித்தது. அந்த சம்பவம் நடந்து முடிந்து ஒரு வாரம் ஆகிறது. புது வருடம் பிறந்த பின்பு இன்று பள்ளிக்கு செல்லும் முதல் நாள். ஏற்கனவே செய்த குளறுபடி போல் மற்றொன்று நேராமல் இருந்திட சற்று கவனமாக மனிதர்களை, முக்கியமாக மாணவர்களை கையாள வேண்டும் என்று எனக்கு நானே அறிவுரை புகட்டிக்கொண்டேன். கடவுள் புண்ணியத்தில் பள்ளி திறந்த ஒரு வாரத்திற்கு ஒன்றும் பெரிதாக நடக்கவில்லை. அதனால்தான் என்னவோ இன்று ஒரு புது பிரச்சினை கிளம்பியது.
ஸ்டாப் ரூமில் நுழைந்த மறுகணமே, என்னிடம் வந்து “உங்க ஸ்டூடென்ஸ் ரொம்ப மோசம் சார்... நேத்து தான் ஆர்கானிக் கெமிஸ்ட்ரியில இருந்து ஒரு சின்ன டாபிக் நடத்தினேன். அத படிச்சுட்டு வரவும் சொல்லியிருந்தேன். இன்னிக்கு அதுலேர்ந்து வெறும் பத்து மார்க்குக்கு கிளாஸ் டெஸ்ட் ஒண்ணு வச்சா, ஒருத்தர் கூட தேறல. எல்லாம் மூணு நாலுன்னு வாங்கியிருக்காங்க... ஐ’ம் ஹைலி டிஸப்பாய்ண்டட் வித் யுவர் கிளாஸ், சார்” கடகடவென்று கொட்டித் தள்ளினார் வேதியியல் ஆசிரியர் ஜோதி.
“அப்படியா மேடம்...? என்னன்னு விசாரிக்கிறேன்” என்று மட்டும் சொல்லி வைத்தேன். நான் என்ன செய்வேன்? அவருடைய பாடத்தில் என் வகுப்பு மாணவர்கள் கவனம் செலுத்தவில்லை என்றால் அதற்கு நான் எப்படி பொறுப்பேற்றுக் கொள்ள முடியும்? புத்தாண்டு கொண்டாட்டத்தில் இன்னும் மூழ்கியிருக்கின்றனரோ என்னவோ! தனியார் பள்ளியாயிருப்பதால் எல்லாவற்றிற்கும், எல்லோரிடத்திலும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் உண்டு ஆசிரியர்களுக்கு. எதற்கும் ஒரு முறை பார்த்து என்ன ஏதென்று கேட்டு விட வேண்டும் என்று உத்தேசித்து ஸ்டாப் ரூமிலிருந்து வெளியேறினேன்.
நான் வகுப்பறைக்குள் நுழைந்ததும் அவர்களின் ‘குட் ஆப்டர்நூனில்’ பயம் கலந்திருப்பதை உணர முடிந்தது. ஜோதி மேடமும் ஏதேனும் திட்டியிருக்கக் கூடும்.
அவர்களின் கலவர பயத்தை கண்டு கொள்ளாமல் “கெமிஸ்ட்ரி மேடம் விஷயத்தை சொன்னாங்க... அடுத்த வருஷம் போர்டு எக்ஸாம் எழுதப்போறீங்க... இன்னுமா சீரியஸ்னஸ் இல்லாம இருக்கீங்க...?” என்றேன் முகத்தை கோபமாக வைத்து கொண்டு.
சற்று தயங்கி, லேசாக சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, தன் சட்டையின் விளிம்பை விரல்களால் இறுக்கிப் பிடித்தபடி அர்ஜுன் மெல்ல எழுந்து நின்று பேசலானான்.
“எக்ஸ்ட்ரீம்லி சாரி சார். மேடம் எங்கள படிச்சுட்டு மட்டும் தான் வர சொன்னாங்க... டெஸ்ட் வைப்பாங்கன்னு தெரியாது சார்... நெக்ஸ்ட் டைம் இந்த மாதிரி நடக்காம பாத்துக்கறோம் சார்” என்றான் கெஞ்சலாக.
“மத்த டீச்சர்ஸ் மாதிரி ஸ்ட்ரிக்டா இல்லாம உங்க கூட ஒரு பிரெண்ட் போல பழகுறேன்ல... அதான் யாருக்கும் படிப்பு மேல அக்கறையே இல்லாம போச்சு... இனி பிரெண்ட்லியா இருந்து ஒரு பிரயோஜனமும் இல்ல... அந்த டெஸ்டுல யாரெல்லாம் ஐந்துக்கு கீழ மார்க் வாங்கியிருக்கீங்களோ அவங்கெல்லாம் பேப்பர எடுத்துக்கிட்டு என் கூட பிரின்சிபல் ரூமுக்கு வரணும்...“ என்றேன் கறாராக.
‘பிரின்சிபல் ரூம்’ என்ற வார்த்தையை கேட்டதனாலோ என்னவோ, ஒருவரும் துணிந்து முன் வரவில்லை. இத்தனை நேரம் நின்று கொண்டிருந்த அர்ஜுனும் சட்டென்று அமர்ந்து கொண்டான்.
இப்பொழுது எனக்கு நிஜமாகவே கோபம் வந்தது. “இது வேலைக்காகாது... எல்லாருடைய பேப்பரையும் நானே செக் பண்றேன்... அவங்கவங்க பேப்பரை எடுத்து டேபிள் மேல வைங்க...” என்றபடி முதல் மேஜையில் அமர்ந்திருந்த சாதனாவை நோக்கி விரைந்தேன்.
அவளோ என் வருகைக்கு காத்திருந்தது போல், “சார், என்னோட பேப்பரை காணோம்” என்றாள் சற்றே பதற்றமாக. வகுப்பறையில் நுழைந்ததிலிருந்து அவளை கவனித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு அவள் மேல் சந்தேகம் சற்று அதிகமாயிற்று. எதையோ மறைக்கிறாள், எங்கோ தவறு செய்திருக்கிறாள்; அதை மறைக்க பொய்யும் சொல்கிறாள் என்றது எனது உள்ளுணர்வு.
“அப்படியா... ஆஷா, சாதனாவுடைய பேகை கொஞ்சம் செக் பண்ணி சொல்லு... பேப்பர் தொலைஞ்சு போச்சா இல்ல பத்திரமா இருக்கான்னு தெரிஞ்சுரும்” என்றேன் அவள் பக்கத்தில் அமர்ந்திருந்த மாணவியை பார்த்து. நான் சொன்ன அடுத்த வினாடி துள்ளி எழுந்து நின்றாள் சாதனா. நான் இப்படி சொல்வேன் என்று எதிர்பார்க்கவில்லை போலும். எங்கிருந்தோ வந்த பயம் அவள் கண்களில் ஒட்டிக் கொண்டது.
“பேக்ல எது.. எதுவும் இல்ல சார்... நா.. நானே நல்லா தேடி பார்த்துட்டேன் சா... சார்...” என்றாள் திணறியப்படி.
“கிடைச்சுடுச்சு சார்” என்று துள்ளிக்குதித்தபடி என்னிடம் பேப்பரை நீட்டினாள் ஆஷா. பத்திற்கு மூன்று மார்க் வாங்கியிருந்தாள். இச்சூழலில் சில இதய துடிப்புகளை சாதனா விழுங்கியிருக்க கூடும். தொண்ணூறு சதவீதம் அவளை சந்தேகித்தாலும் பத்து சதவீதமாவது நம்பினேன். யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக அமைந்தது. எல்லோரும் ஆச்சரியத்தில் விக்கித்திருந்தனர். காரணம், இதை யாரும் சாதனாவிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. இந்த காலத்திலும் எல்லா ஆசிரியர்களுக்கும் கீழ்ப்படிந்து நடக்கும் ஒரு அருமையான மாணவி, சாதனா. ஒழுக்கத்தில் மட்டுமின்றி படிப்பிலும், சக மாணவர்களிடம் பழகுவதிலும் கெட்டிக்காரி. அப்படிப்பட்ட பெண் இப்படியொரு பொய் சொல்லி சமாளிப்பாள் என்று கனவிலும் யாராலும் நினைக்க இயலாது.
அவள் கண்களில் சற்று முன் தென்பட்ட கலவரம் இப்பொழுது குற்ற உணர்வாக உருமாறி, கண்ணீராக பெருகி வழிந்தது.
“சாரி, சார்... இனிமேல் ஒழுங்கா படிச்சு நல்ல மார்க் வாங்குறேன், சார்” என்றாள் தலையைக் குனிந்தபடி விம்மிக்கொண்டே.
“மார்க்... ம்...” என்றேன் வேதனையாக. சில வினாடிகளுக்கு எல்லோரையும் மாறி மாறிப் பார்த்தேன். பின்பு நிதானமாக யோசித்து பெருமூச்சொன்றை விட்டபடி, “உட்காரு சாதனா” என்று சொல்லிவிட்டு வகுப்பறையிலிருந்து வெளியேறினேன்.
யோசனையுடன் சிறிது தூரம் நடந்து சென்ற பின், என்னை யாரோ பின்தொடர்வது போல் உணர்ந்தேன். திரும்பிப் பார்க்கையில் சத்தமில்லாமல் அழுதபடி நின்று கொண்டிருந்தாள் சாதனா. எதிர்பார்த்த நபர்தான். ஏதோ சொல்ல நினைக்கிறாள் என்று உணர்ந்தேன். கண்ணீரைத் துடைத்து விட்டு, சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு, பேசத் தொடங்கினாள். அது வரை நானும் அமைதியாக காத்திருந்தேன்.
“சார், நேத்து அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. அப்பாவும் வெளியூருக்கு போயிருக்காங்க... வீட்ல பெரியவங்க வேற யாரும் இல்ல... அதான் அம்மாவுக்கும், தம்பிக்கும், எனக்கும் சேர்த்து முதல் முறையா நேத்து நான் சமைச்சேன்... அதனால படிக்க முடியாம போயிடுச்சு... காலைல அவங்க ரெண்டு பேரையும் பார்த்துக்கிட்டு ஸ்கூலுக்கு கிளம்பற அவசரத்துல படிக்க முடியாம போய்டுச்சு...” என்றாள்.
“இந்த விஷயத்த நான் வந்து பேப்பரை செக் பண்றப்பவே சொல்லியிருக்கலாமே...? யு ஹாவ் அ ஜென்யூன் ரீஸன்...”
“ஆனா சார், இத்தன நாளா கிளாஸ் ஃபர்ஸ்ட் வந்த நான், இதுல மட்டும் மார்க் கம்மியாயிடுச்சுன்னு மத்தவங்களுக்கு தெரிஞ்சா நல்லாயிருக்காது சார்...” என்று இழுத்தாள்.
“ம்... அப்ப மார்க்குக்காகவும், மத்தவங்களுக்காகவும் தான் நீ படிக்கிற? உனக்காக இல்லை, அப்படித்தானே?”
பதிலேதும் அளிக்கமுடியாமல் மௌனமாக நின்றாள். என்னுடைய கேள்வி அவளை சிறிதளவேனும் சிந்திக்க வைத்திருக்கும்.
“இங்க நீ பண்ண தப்பு என்ன தெரியுமா? கம்மியா மார்க் வாங்கினது இல்ல... உன்னை தன் மகளா பாவிச்சு அன்பா நடத்துன டீச்சர்கிட்ட பொய் சொன்ன பாரு, அதுதான் தப்பு... படிப்பு விஷயத்துல உனக்கு ஒரு பிரச்சினைனா, என்கிட்ட சொல்றதுல என்ன தயக்கம்? நான் உன் கிளாஸ் டீச்சர் தானே? எப்பவாவது யாரையாவது கிளாஸ்ல நான் கோபமா திட்டி நீ பார்த்திருக்கியா?”
“இல்ல சார்”
“ஏன் தெரியுமா? உங்க எல்லார்கிட்டயும் ஒரு நண்பன் போல பழகி படிப்பு மேல ஆர்வத்தைக் கொண்டுவரத் தான்... கோபமா பேசறதாலயோ, கண்டபடி திட்டுறதாலயோ யாருடைய குணத்தையும் மாத்திட முடியாது. இப்பெல்லாம் இந்த ஜென் சீ [1995 முதல் 2010 வரை பிறந்தவர்கள்] பிள்ளைகளுக்கு அட்வைஸ் பண்றது பிடிக்கறதில்லை, இல்லயா?”
நான் மேலும் ஏதோ சொல்லப் போகிறேன் என்று உணர்ந்தவள் அமைதியாக என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“அன்னைக்கு என் வாட்ஸாப் ஸ்டேட்டஸுக்கு பதில் அனுப்பியிருந்தாயே, ஞாபகம் இருக்கா?” சில வினாடிகள் யோசித்து, சட்டென்று ஞாபகம் வந்தவுடன் ஆம் என்பது போல் தலையசைத்தாள்.
“அந்த மாதிரி ஒரு போட்டோவை எல்லோரும், குறிப்பா ஸ்டூடென்ட்ஸும் பார்க்கற மாதிரி வச்சது என் தப்பு தான்... ஆனா ஒரு டீச்சர்கிட்ட நீ கேட்ட கேள்வி சரின்னு நினைக்கிறியா?
சற்று யோசித்து “இல்ல சார்” என்றாள்.
“ஒரு தவறான செயல் அது நிகழும் போது ‘தப்பு’ங்கற விஷயமா உருவெடுக்கறதில்ல. அந்த தப்பை செய்யணும்னு ஒரு யோசனை வருது பாரு, அப்பத்தான் ஒருத்தன் தப்பானவனா உருமாறுகிறான். ஏன்னா, ஒரு முறை ஒரு தப்ப தைரியமா செஞ்சுட்டா, அதே தப்பை இன்னொரு முறை செய்வதற்கு மனம் கொஞ்சமும் தயங்காது... நாங்க, ஸ்டூடென்ட்ஸ்கிட்ட பிரெண்ட்லியா நடந்துக்கறதுக்கான காரணம், நீங்க என்ன பண்ணாலும், என்ன சொன்னாலும் கண்டுக்காம அதை அப்படியே ஏத்துக்கறதுக்காக இல்ல... உங்களை நல்வழிப்படுத்தத்தான்” என்றதும் என்னை ஆமோதிப்பது போல மதிய உணவுக்கான மணி ஒலித்தது.
“நான் சொன்னது உனக்கு புரிஞ்சிருக்கும்னு நம்பறேன்... லஞ்ச் பெல் அடிச்சுட்டாங்க... போய் சாப்பிட்டு அடுத்த கிளாஸுக்கு ரெடியாகும்மா... ஆல் த பெஸ்ட்”
“தாங்க் யூ, சார்” என்று மலர்ந்த முகத்துடன் கூறி விடைபெற்றாள்.
ஆசிரியர்-மாணவன், இவர்களுக்கிடையே இருக்கும் ‘பிரெண்ட்லியான’ உறவை இந்நாள் வரை நானும் தவறான அர்த்தத்தில் புரிந்து வைத்திருந்தேன். வெறும் மதிப்பெண் பெறும் இயந்திரமாக மாணவர்களை நடத்தும் ஆர்வத்தில், அவர்கள் பதின்பருவ குழந்தைகள், பிற்காலத்தில் சமூகத்தில் இன்றியமையாத பொறுப்புகளை ஏற்றி நடத்துபவர்கள் என்ற உண்மையை மறந்துதான் விட்டோம். இந்தக் காலத்து குழந்தைகளுக்கு நல்லவை மற்றும் தீயவை எவையெவை என்று புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், பெரியவர்களான நாம் அவர்களுக்கு புரியவைப்பதில் எங்கோ பின்தங்கி இருக்கின்றோம் என்று பொருள். இன்று நடந்த சம்பவம் சாதனாவிற்கு மட்டுமல்ல, எனக்கும் ஒரு மகத்தான பாடத்தை புகட்டியது; ஏனெனில், அனைவரும் மாணவர்களே வாழ்க்கையெனும் வகுப்பறையில்!
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்