logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

Kodeeshwaran

சிறுகதை வரிசை எண் # 215


ஒரு குப்பைத் தொட்டியின் ஓரத்தில். அதிகாலை 3 மணி. விடிந்ததும் சந்திக்கப் போகும் எத்தனையோ பிரச்சனைகளுக்கு முன், அனைத்தையும் மறந்து எல்லா உயிர்களும் சற்று நிம்மதியாக உறங்கிக் கொள்ளும் அந்த அமைதியான நேரம். நேற்றிரவு பெய்திருந்த சின்ன மழையால் அந்த சாலையின் இரு ஓரத்திலும் கொஞ்சம் தண்ணீர் தேங்கியிருந்தது. மழை நேர விட்டில் பூச்சிகளின் சத்தத்தைத் தவிர மனித சத்தங்கள் ஏதுமின்றிஅந்த இடமே மௌனமாக இருந்தது. அமைதியாக தேங்கிக் கிடந்த குளத்தின் மேல் பெரும்பாறையைத் தூக்கியெறிந்தது போல, திடீரென "ஆ....." என்ற ஒரு அலறல் சத்தம். யாரோ, வலி தாங்க முடியாமல் உயிர் போகும் நிலையில் கடைசியாக ஒருமுறை உரக்கக் கத்தியதைப் போல அந்த சத்தம் இருந்தது. தாங்கமுடியாத அதிகாலைக் குளிரில், ஆள்நடமாட்டாமே இல்லாத அந்த சாலையோர நடைபாதையில் வரிசையாக படுத்துக் கிடந்த ஏழு பேரும் அந்த சத்தத்தைக் கேட்டு விடுக்கென எழுந்து பதற்றத்தோடு பார்த்தனர். "ஐயோ என்னாச்சு!! எங்க ஏம்புள்ள தாயம்மா!!" என பதறி, கத்தியவண்ணம் மங்களமும் திடுக்கென எழுந்தாள். அருகே இருந்த தன் மகள் தாயம்மாளைக் கண்டதும் சற்றே மூச்சு வாங்கி, தன் மகளைத் தன்னோடு கட்டிக்கொண்டு நெற்றியில் ஒரு முத்தமிட்டாள். திடீர் சத்தத்தால் எழுந்த தாயம்மாள் ஏற்கனவே எதையோ பார்த்து பயந்தவாறு உட்கார்ந்திருந்தாள். தனது ஐந்து வயதிலும், இரவில் திடீரென ஏற்படும் சத்தங்களும், கொசு, பூச்சிகளின் கடிகளும் அவளுக்கு நன்றாக பழகியிருந்தன. எனவே அவள் பதற்றப்படவில்லை. இன்று என்ன பயங்கரமாக நடந்தது என பார்த்தாள். வைத்த கண் வாங்காமல் சாலையில் எதையோ பார்த்துக் கொண்டேயிருந்தாள். "ஏண்டி, என்னடி ஆச்சு?!" அருகிலிருந்த ஒரு பெண்ணிடம் மங்களம் கேட்டாள். "தெரியல மங்களம். ஏதோ வண்டி வேகமா போன மாறியிருந்துச்சு. பாவம் இத அடிச்சு நசுக்கிட்டு போயிப்புட்டான்." எனக் கூறி திரும்பிப் படுத்துக்கொண்டு தனது கிழிந்த போர்வையைப் போர்த்திக் கொண்டாள். அவர்களின் எதிரே நடுரோட்டில் ஒரு பெண்நாய், வாகனத்தில் அடிபட்டு நசுங்கி தனது இறுதி நொடிகளை எண்ணிக் கொண்டிருந்தது. உடலும் மடியும் பெருத்திருந்த அந்த நாய், பாதிக்கு மேல் சிதைந்து போன தனது முகத்தோடும் நொறுங்கிப் போன கை கால்களோடும், கத்தவும் முடியாமல் நகரவும் முடியாமல் அப்படியே கிடந்தது. தவறேதும் செய்யாத தனக்கு நேர்ந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த தாயம்மாளைப் பார்த்து அதன் கண்கள் கண்ணீர் விட்டன. தனது சக்தியையெல்லாம் சேர்த்து, தாயம்மாளைப் பார்த்து ஏதோ வாயசைக்க முயற்சித்தது. எதையோ முனகியவாறு, தன்னையே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்த தாயம்மாளைப் பார்த்துக் கொண்டே தனது கண்ணை மூடியது. தாயம்மாள் அந்த நாயின் கண்களையே பார்த்துக்கொண்டு இருந்தாள். "பேதில போறவன். ஒரு உசுருனு கூட பாக்காம ஏத்திட்டு நிப்பாட்டாம போறான் பாரு..." அந்தக் கூட்டத்தில் படுத்திருந்த மற்றொரு பெண் கூறினாள். "வண்டி வந்த சத்தமும் தெரியல; போன சத்தமும் தெரியல. மின்னல் வேகத்துல போறான். மனுசனா இவன்லாம்!" "நல்ல வேலைனு நெனச்சுக்கோங்கடி.. ரோட்டத்தாண்டி நம்மள ஏத்தாம போனானே.." "அதுவும் சரிதாண்டி.. அண்ட ஒரு வீடும் இல்ல வாசலும் இல்ல. நமக்குலாம் எவனும் வீடும் குடுக்க மாட்டான். கெடச்ச எடத்துல வாழ்க்கைய போக்கிக்கிட்டு இருக்கோம். என்னைக்கி இந்த நாய மாறி நாம ரோட்ல கெடக்க போறமோ... ஹ்ம்ம்ம்... நீ வா தாயி.. அங்க லாம் பாக்கக் கூடாது" என மங்களம் கூறிவிட்டு தாயம்மாளை தன்னோடு அணைத்துக் கொண்டாள். "அம்மா! அந்த நாயி பாவம் மா.. லாரில மோதவும் அதால எந்திருச்சு நடக்கவே முடியல..." "ஆமா தாயி... அதுக்கு வலிக்கும் ல.." "ஏம்மா ஓரமா போகாம திருப்பி அங்கேயே தூங்குது? நா வேணா அத அந்த பக்கம் தொறத்திட்டு வரவா..." என அது இறந்துவிட்டது தெரியாமல் எந்திரிக்க முயன்ற தாயம்மாளைத் தன் கைகளுக்குள் கட்டிக் கொண்டான் மங்களம். "ஒன்னும் ஆகாது தாயி... காலேல அதுவே எந்திருச்சு போயிரும்.. நீ தூங்கு.." என இருவருக்கும் சேர்த்து தன் போர்வையை போர்த்தினாள். "மணி 3 தாண்டி ஆகுது.. சீக்கிரம் விடிஞ்சுரும். அதுக்குள்ள படுத்து தூங்குங்கடி.." என்ற குரல் வந்தது. பயத்தோடும் பாவத்தோடும் அந்த நாயின் கோலத்தைப் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு தூங்கினாள் மங்களம். அதிகாலை விடிந்தது. வாகனச்சத்தம் கேட்கத் துவங்கியதுமே ஒருவர் ஒருவராய் எழத் தொடங்கினர். படுத்துக் கிடந்த எல்லோரும் வரிசையாக எழுந்து, தங்களது மூட்டைகளைச் சுருட்டித், தூக்கிக்கொண்டு, அவரவர்க்கு தெரிந்த திசை நோக்கி நடக்கத் தொடங்கினர். விடிய ஆரம்பித்து விட்டது என லேசாக உணர்ச்சி வரவுமே மங்களம் வெடுக்கென எழுந்தாள். ஊரில் பாதிக்குமேற்பட்டோர் தூங்கிக் கொண்டிருக்கும் அந்த 5 மணி, மங்களத்திற்கு எழுந்தே ஆகவேண்டிய கட்டாய நேரம். ஒருநாள் தாமதமானாலும் அன்றைய பொழுது அவளுக்கு சாதாரணமாக இருக்காது என்பதை அவன் நன்கு அறிந்திருந்தான். எனவே விறுவிறுவென எழுந்து தன் போர்வை முழுவதையும் தாயம்மாளுக்குப் போர்த்திவிட்டு அருகே இருந்த தனது பைக்குள் மற்ற அனைத்தையும் வைத்தான். ஒவ்வொரு நாளும் காலை வேலையைச் சமாளிப்பது அவளுக்கு பெருங்கொண்ட சவால்தான். பின்னே? காலைக் கடன்களை அவள் எங்கு சென்று முடிப்பாள்? பல கோடி உயிர்களுக்கும் அதற்கு இடமளிக்கும் இந்த உலகம், இவர்களுக்கு மட்டும் ஏனோ, 'விடிந்து வெளிச்சம் வருவதற்கு முன்' எனக் கூறிச் சுறுக்கிக் கொண்டது. நாளைய வியாபாரத்திற்கு பொருள் வாங்க வைத்திருந்த 100 ரூபாயைத் தவிர ஒன்றுமில்லாத அந்த பையை தாயம்மாளின் தலைக்கு தலையணையாக வைத்துவிட்டு துண்டையும் துணிகளையும் எடுத்துக்கொண்டு கிளம்பினாள். "ராஜீ... ராஜீயம்மா......" அருகில் தூங்கிக் கொண்டிருந்த முதியவளை தட்டி எழுப்பினாள். "என்ன மங்களம்?" எனக் கேட்டவளின் கண்கள் விடியத் தொடங்கி விட்டதை உணரவும் தூக்கத்தை முடித்துக் கொண்டன. அவளுக்கும் அதே கவலை. "நா அந்த ஆத்துப்பக்கம் போயிட்டு வந்துர்றேன். புள்ள தூங்குறா.. செத்தநேரம் பாத்துக்க...." எனக் கூறிவிட்டு வேகமாக நடந்தாள். வைகை ஆற்றினோரத்தில் சின்னதாய் கட்டப்பட்டிருந்த தண்ணீர் தொட்டி அங்கு பல பேருக்கு உதவிக் கொண்டிருந்தது. 6 மணிக்கெல்லாம் குளித்து முடித்து, மங்களகரமாக வந்தாள் மங்களம். முடியை நன்கு வாரி, சுருட்டி கொண்டை போட்டுக் கொண்டு, நெற்றியில் வட்டமாக குங்குமமிட்டுக் கொண்டே தன் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். மெல்லத் தனது பையை எடுத்துக்கொண்டு, மெதுவாக தாயம்மாளை எழுப்பினான். "தாயி.. தாயி... விடிஞ்சுருச்சு.. எந்திரித்தா..." "அம்மா.. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கவா.." போர்வையை நன்கு மூடிக் கொண்டாள். "கொஞ்ச நேரத்துல எல்லாரும் போக, வர னு பஸ் ஸ்டாண்டுக்கு போக வர ஆரமிச்சுருவாங்க.. நாம ரோட்டு ஓரத்துல தூங்குனா ஏதாச்சும் சொல்லப் போறாங்க தாயி.." "சரி நா அப்போ பஸ் ஸ்டாண்டுக்குள்ள வந்து நம்ம கடைல தூங்கிக்கவா?" "சரி.. அங்க வந்து அம்மா மடில தூங்கிக்கோ.." மெதுவாக அவளைத் தூக்கி உட்காரவைத்து, தங்கள் படுக்கை, பை, எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு, தாயம்மாளையும் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு பஸ் ஸ்டாண்டின் உள்ளே சென்றான். பரமக்குடி பேருந்து நிலையம். அதிகாலையிலேயே வியாபாரம் செய்பவர்கள், சரக்கு எடுப்பவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் என பேருந்து நிலையத்திற்கு ஆட்கள் வரத்தொடங்கினர். மங்களம், தான் வழக்கமாக வந்து உட்காரும் இடத்திற்கு வந்து உட்கார்ந்தாள். பயணிகள் நடந்து செல்லும் பிளாட்பாரத்தில் ஒரு ஓரத்தில் அமர்ந்து தன் பையை கழட்டி வைத்தாள். மங்களம் அமரவும், அதற்கெனவே காத்திருந்தாற்போல தாயம்மாள் தன் தாயின் மடியில் வந்து படுத்துக் கொண்டாள். தன் பையில் இருந்து ஒரு துண்டை எடுத்து தாயம்மாளை சுற்றி போர்த்திவிட்டு, இன்னொரு துண்டை எடுத்து தனக்குமுன் விரித்தாள். பைக்குள் இருந்து ஒரு சிறிய பெட்டியை எடுத்தாள். அதற்குள் 'சேப்ட்டி பின்' (Safety Pin) என சொல்லப்படும் ஊக்குகள் இருந்தன. ஒவ்வொரு பெரிய ஊக்கையும் திறந்து அதனுள் பத்து சிறிய ஊக்குகளை திணித்து திணித்து மூடினாள். ஒவ்வொன்றாக அப்படிச் செய்து தன்முன் இருந்த துண்டில் வரிசையாக அடுக்கிக் கொண்டிருந்தான். "அய்யா.. பத்து ரூபா தான்யா.." "அம்மா.. ஒன்னு வாங்கிகோங்கம்மா. பத்து ரூபா தான் மா.." என வருபவர்கள் போகிறவர்களிடம் கூவிக்கூவி விற்றுக் கொண்டிருந்தாள். மணி காலை 8 ஆனது. யாரும் இவளைக் கண்டுகொள்ளவில்லை. காலையிலிருந்து யாரும் மங்களத்திடம் ஒன்றும் வாங்கவில்லை. மங்களத்திற்கு தொண்டை வறண்டது. தாயம்மாளை மெல்ல பக்கத்தில் படுக்க வைத்துவிட்டு, எழுந்து சென்று பின்னால் இருந்த டீ கடையில் தண்ணீர் குடிக்கச் சென்றாள். "என்ன மங்களம்.. காலைலயே மங்களகரமா இருக்க... இன்னும் போனி ஆகலையா.." சட்டியில் இருந்த பாலை ஆற்றிக்கொண்டே டீக்கடைக்காரர் கேட்டார். "அட ஆமண்ணே.. இன்னும் ஒன்னு கூட ஆகல.." "அட.. ஒன்னெடுத்த ஆளுங்கள்ளாம் ராத்திரில வேறமாறி சம்பாரிச்சுட்டு வந்துடுறாங்க. நீ ஏன் இப்பிடி கஷ்டப்படறியோ.." "அட நீ வேறண்ணே.. அப்டிலாம் இருக்கதுக்கு நாண்டுக்குட்டு போயிரலாம்.. புள்ள வேற இருக்கால்ல.. நல்ல விதமா வளத்துரனும் னு தானே இவ்வளவும் பண்றேன்.." "அதுதான் எனக்கு தெரியுமேத்தா.. சரி தாயம்மா எந்திரிச்சுட்டாளா? இந்தா கொஞ்சம் பால் கொண்டு போயி குடு.." "இல்லண்ணே.. இன்னும் தூங்குறா.. போனி ஆகட்டும்... அப்போ வரேன்.." "அட சும்மா வாங்கிட்டு போத்தா.. காசு வரவும் குடு.." "வேண்டாண்ணே.. உன் கதையும் என்னய மாறிதான் னு தெரியும். காலங்காத்தாலயே கடன சொல்லி உன்ன கடுப்பாக்க நா விரும்பல.. போனி ஆகவும் நா வரேன்.." கூறிவிட்டு மீண்டும்வந்து அமர்ந்து கூவத் தொடங்கினாள். எத்தனை தூரம் வாழ்க்கை தன்னைக் கூட்டிக் கொண்டு போனபோதும், மூன்று விசயங்களைத் தவறியும் செய்து விடக் கூடாது என மங்களம் தீர்க்கமாக இருந்தான். பிச்சை எடுப்பது, அடுத்தவர் பொருளைத் திருடுவது , தவறான வழியில் சம்பாரிக்க நினைப்பது. தன்னிடம் ஒரு ரூபாயும் இல்லாத போது கூட எங்கும் யாரிடமும் கையேந்தியதில்லை. எப்படியும் இந்த நாள் தனக்கும் ஏதாவது கொடுத்துவிட்டுதான் முடியும் என மீண்டும் அமர்ந்தாள். கொஞ்ச நேரத்தில் தாயம்மாள் முழித்தாள். வாய் கொப்பளித்துவிட்டு யாரோ கொடுத்த அழுக்கான பழைய சட்டையையும் டிரவுசரையும் போட்டுகொண்டு, வாரப்படாத செம்பட்டை நிற முடிகளோடு, பரட்டைத் தலையுடன், அத்தனை அழகான மஞ்சள் நிற கருவிழிகளோடு தாயம்மாள் மங்களத்தின் எதிரே வந்து நின்றாள். "அம்மா.." "என்னம்மா..." "காலைல அங்க ஒரு நாயிக்கு அடிபட்டு கத்துச்சுல்ல.." "ஆமா..." "அங்க இப்போ அந்த நாயவே காணோம் மா... ஓடி போயிருச்சோ.." வரிசையாக வாகனங்கள் சென்றதால் ரோடோடு ரோடாக மாறி மறைந்துபோன நாயின் பரிதாபமான சோகக் கதையைச் சொன்னால் தாயம்மாளுக்குப் புரியாதென அறிந்த மங்களம், "அது திருப்பி அவங்க வீட்டுக்கு போயிருக்கும் மா" எனக் கூறினான். சில மணிநேரத்தில் இருந்த சுவடு கூட இல்லாமல் காணாமல் போய்விட்டது. இவ்வளவு தான் வாழ்க்கை என நினைத்துக் கொண்டாள். தோளைச் சுரண்டி பொட்டலம் போட்டு உறவினருக்கு கொடுப்பது மட்டும் தான் மனிதனுக்கும் நாயுக்குமான வித்தியாசம் என உணர்ந்து லேசாக சிரித்துக் கொண்டாள். "அம்மா பசிக்கிது மா..." வயிற்றைப் பிடித்துக் கொண்டு தாயம்மாள் துள்ளினாள். அதுவரை அமைதியாக இருந்த மங்களத்துக்கு இப்போது வேர்க்கத் தொடங்கியது. தன் மகளின் பசியைப் போக்க யாரவது வந்து இதை வாங்க மாட்டார்களா என சுற்றும் முற்றும் வேகமாக கூவத் தொடங்கினாள். மணி 9 ஆனது.. யாரும் ஒன்றும் வாங்கவில்லை. பையில் இருந்த ஒரு வளையக் கம்பியை எடுத்து, அதில் எல்லா ஊக்குகளையும் கோர்த்து, கையில் மாட்டிக்கொண்டு எழுந்தாள். தாயம்மாளைக் கூட்டிக்கொண்டு ஒவ்வொரு பஸ்ஸாக ஏறி ஏறி இறங்கினான். "ரெண்டு சேத்து பதினைஞ்சு ரூபாய்க்கினா குடு.. இல்லனா வேணாம்.." எனக் கூறி, தன் மனைவி முன்னால் சாதித்து விட்டதாக எண்ணிக்கொண்ட ஒருவரிடம் அதனைக் கொடுத்து காசை வாங்கி கொண்டு டீக்கடையை நோக்கி விரைந்தான். பாலும், பண்ணும் தாயம்மாளின் ஒருபாதி நாளுக்கான உணவாக இருந்தது. முடித்து விட்டு மீண்டும் பழைய இடத்தில் அமர்ந்தனர். தாயம்மாள் பயணிகள் அமரும் மேஜையில் அமர்ந்து கொண்டு ஒரு டப்பாவை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தாள். நண்பகல் வந்தது. இவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு எதிரே ஒரு கார் வந்து நின்றது. "மூணு பேரும் இங்கயே இருங்க. பக்கத்துல பக்கத்துல தான் வெட்னரி ஹாஸ்பிடல் இருக்கு. நா டெய்சிய கூட்டிட்டு போய்ட்டு வந்துடுறேன்." என தன் அம்மா, மனைவி, மற்றும் குழந்தையை, ஒருவர் இறக்கி விட்டுவிட்டுத் தன் வளர்ப்பு நாயுடன் காரில் சென்றார். மூவரும் வந்து தாயம்மாளின் அருகில் வந்து அமர்ந்தனர். அந்த சிறுவனின் கையில் ஒரு அழகான சிறிய நாய்க்குட்டி இருந்தது. அதைத் தன் முகத்திற்கு அருகே தூக்கி வைத்து "ஹேரி.. ஹேரி பாட்டர்..." என அதைக் கொஞ்சிக் கொண்டு இருந்தான். 'லேப்ரடார் (Labrador)' எனும் வகையான அந்த நாய்க்குட்டி, பழுப்பு நிறத்தில் சாந்தமான முக பாவனையுடன் அவ்வளவு அழகாக இருந்தது. சிறிது நேரத்தில் அந்த நாய்க்குட்டி ஏதோ அனத்தியது. "அம்மா.. ஹி ஐஸ் ஹங்க்ரி" என அந்த சிறுவன் கூறவும், தன் பைக்குள் இருந்து பால் புட்டியை எடுத்துக் கொடுத்தாள் அந்த சிறுவனின் அம்மா. அதிலிருந்த பாலை குட்டி நாயை மடியில் தூக்கி வைத்துக் கொண்டு அவன் ஊட்டிக் கொண்டிருந்ததை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் தாயம்மாள். இத்தனை நாள், தெருவெங்கும் ஓடித்திரியும் நாய்களை 'ச்சீ' என அடித்து துரத்தும் காட்சியை மட்டுமே கண்டிருந்தவள், இப்போது ஒருவன் நாயை மடியில் வைத்துக்கொண்டு அவளுக்கு கூட கிடைக்காத பால் புட்டியில் அதற்கு உணவூட்டுவதை ஆச்சரியமாகப் பார்த்தாள். கொஞ்ச நேரத்தில் அந்த சிறுவன் நாய்குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்துக் கொண்டிருந்தவள், கொஞ்சம் பக்கத்தில் சென்று ஆசையாக நின்றாள். தன் அருகே அந்த நாய்க்குட்டி வரும்போது பயந்து தூரமாக தன் தாயைத் தேடி ஓடினாள். "பயப்படாத.. ஹேரி சின்ன பையன். கடிக்க மாட்டான்" என்று அந்த சிறுவன் தாயம்மாளிடம் கூறினான். பல தயக்கத்திற்குப் பிறகு தாயம்மாள் அருகே வந்து அந்த நாய்க் குட்டியைத் தொட்டுப் பார்த்தாள். துள்ளிக் கொண்டிருந்த அந்த நாய்க்குட்டி, அவளது கைகளில் தாடையை வைத்து தன்னைக் கொஞ்சும்படி கேட்டது. அந்த ஸ்பரிசத்தை அவள் தன் வாழ்நாளில் ஒருபோதும் உணர்ந்ததில்லை. அவளுக்கு புல்லரித்தது. ஒரு முறை தாயம்மாள் விளையாடிக் கொண்டிருந்த போது, அவளது கையில் இரண்டு வண்ணத்துப் பூச்சிகள் தானாக வந்து உக்கார்ந்தன. அப்போது அவளுக்கு ஏற்பட்ட மயிர்க்கூச்சலை இந்த நாய்க்குட்டியைத் தீண்டும் போது உணர்ந்தாள். கொஞ்சம் கொஞ்சமாக தைரியம் வந்தவளாக, அந்த நாய்குட்டியை கையில் எடுத்து தூக்கிப் பார்த்தாள். பஞ்சு போன்ற அதன் மேனியும், துடிதுடிப்பான பாய்ச்சலும் அவளை உற்சாகத்தின் உச்சிக்கு கொண்டு சென்றன. சந்தோசத்தில் அவள் கால்கள் துள்ளத் தொடங்கின. மின்னல் வேகத்தில் துடித்துக் கொண்டிருந்த அந்த நாய்க்குட்டியின் இதயத் துடிப்பைக் கண்டுமீண்டும் பயம் தொற்றிக் கொள்ள, அந்த சிறுவனிடமே அதைக் கொடுத்தாள். அந்த சிறுவனும் தாயம்மாளும் அந்த நாய்குட்டியுடன் அந்த கட்டிடத்தில் இருந்த தூண்களைச் சுற்றி சுற்றி ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர். அத்தனை மகிழ்ச்சியாக தாயம்மாள் இருந்ததை மங்களம் பார்த்ததே இல்லை. தாயம்மாளின் சிரிப்பைப் பார்த்து மங்களம் அழவே தொடங்கினான். தன் வயதுள்ள ஒருவன் பணம், கார் என வாழும் ஆடம்பர வாழ்க்கையைப் பற்றி எண்ணி, அதைத் தன்னோடு ஒப்பிட்டு சிறிதும் வருந்திக் கொள்ளாமல், ஒரு நாய்க்குட்டியின் ஸ்பரிசத்தில் தன்னை இழந்து துள்ளிக் குதிக்கும் இந்த குழந்தைப் பருவ மனம் கடைசி வரை இருந்துவிட்டால் எத்தனை நன்றாய் இருக்குமென மங்களம் நினைத்தாள். ஆனால் தாயம்மாளின் அந்த சந்தோஷம் ரொம்ப நேரம் நிலைக்கவில்லை. சிறுது நேரத்தில் அந்த கார் மீண்டும் வந்தது. எல்லோரும் காரினுள் ஏற, ஹேரி பாட்டரை தூக்கிக் கொண்டு, தாயம்மாளுக்கு டாடா காட்டிவிட்டு அந்த சிறுவனும் காரில் ஏறினான். கொஞ்ச நேரத்தில் கார் பேருந்து நிலையத்திற்கு வெளியே சென்று வேகமாக மறைந்தது. தாயம்மாள் அந்த கார் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்தாள். மங்களத்திடம் ஓடி வந்து அழத்தொடங்கினாள். "அம்மா அம்மா.. எனக்கும் அந்த நாய்க்குட்டி வேணும் வாங்கிக் குடுமா.." என்றாள். என்ன சொல்வதென தெரியாத மங்களம், "சரி சாயங்காலம் வாங்கிக்கலாம்" எனக் கூறி தேற்றினாள். கொஞ்சம் கொஞ்சமாக இருட்டத்தொடங்கியது. தாயம்மாள் இன்னும் அந்த நாய்க்குட்டியின் ஸ்பரிசத்தை தன் கைகளில் உணர்ந்தாள். ஏதோ ஏக்கத்தோடு சோகமாகவே அமர்ந்திருந்தாள். "ஹரி வேணும்.. ஹரி வேணும்" என முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். பொழுது சாயவும் அனைவரும் தங்கள் இடத்திற்கு செல்லக் கிளம்பினர். மங்களமும் தாயம்மாளைக் கூட்டிக்கொண்டு தாங்கள் இருக்கும் ரோட்டோரத்திற்கு சென்றாள். "இந்தா மங்களம்.. கோவிலுக்கு போனோம்ல. அங்க குடுத்த புளியோதரையும் வாழப்பழமும்" என அருகில் இருந்தவர் கொடுக்க, அதை தாயம்மாளுக்கு ஊட்டி விட்டு தானும் கொஞ்சம் சாப்பிட்டுக்கொண்டாள். இரவு வந்தது. இன்னும் அந்த நாய்க்குட்டியை நினைத்துக்கொண்டு சோகமாக இருந்தாள் தாயம்மாள். அவள் யாரோடும் விளையாடியதில்லை. என்பதைவிட, அவளுடன் விளையாட யாரும் வரவில்லை என்பது சரியாக இருக்கும். எதிர்பாராமல் சட்டென வந்து போன அந்த சந்தோசமான உணர்வு மீண்டும் கிடைக்காதா என ஏங்கி கொண்டிருந்தாள். அப்போது யாரோ முனங்கும் சத்தம் கேட்டது. சாலையின் முடிவில் இருந்த குப்பைத்தொட்டியின் பின்புறம் அந்த சத்தம் வந்ததைக் கேட்டு மங்களம் சென்று பார்த்தாள். இரண்டு பச்சிளம் நாய்க்குட்டிகள் பசியால் தன் தாயை எதிர்நோக்கி கத்திக்கொண்டிருந்தன. "தாயம்மா... இங்க வந்து பாரேன்.." மங்களம் கூறினான். ஓடி வந்து பார்த்த தாயம்மாள் சந்தோசத்தில் குதித்தாள். இரண்டு குட்டிகளையும் அள்ளிக்கொண்டு தன்னோடு அணைத்துக் கொண்டாள். குப்பையில் கிடந்த அழுக்கான முகத்தைப் பற்றி அந்த குழந்தை மனம் கவலைப் படவில்லை. இரண்டு குட்டிகளையும் அள்ளி அணைத்து கொஞ்சித் தீர்த்தாள். தன் கைகளில் இரட்டிப்பு ஸ்பரிசத்தை உணர்ந்தாள். குட்டிகள் பசியில் துடித்ததை மங்களம் உணர்ந்தாள். தாய் நாய் எங்கும் உள்ளதா என அருகில் நோட்டம் விட்டாள். "எற தேட போயிருக்குமோ?" "குட்டிய பக்கத்துலயேதான் தாய் கெடக்கும். இங்க ஒன்னயும் காணோமே" "ஒருவேள இதோட தாய் வராம போனா?" என தனக்குள் தானே பேசிக் கொண்டிருந்த மங்களத்திற்கு திடீரென புல்லரித்தது. "அப்போ காலைல கார்ல அடிபட்ட நாய்தான் இதுங்களோட..........." காலையில் அடிபட்டு இறந்து கிடந்த நாயின் இரத்தமும் பாலும் தெருவெங்கும் பரவிக் கிடந்ததை ஒரு கணம் நினைத்துப் பார்க்கவும் மங்களத்திற்கு கண்கள் கலங்கின. காலையில் சாதாரணமாக அவள் கண்ட காட்சி இப்போது மனதை கனக்க வைத்தது. "அடப்பாவமே.. காலைல இருந்து ஒன்னும் சாப்டுருக்காதுகளே..." என்றவாறு கண்ணைத் துடைத்து விட்டு தன் பையில் இருந்த பத்து ரூபாயை எடுத்துக் கொண்டு டீக்கடைக்கு ஓடினாள். குட்டிகளோடு விளையாடிக் கொண்டிருந்த தாயம்மாள் மங்களம் பால் வாங்கிக்கொண்டு வருவதைப் பார்த்து, "அம்மா அம்மா... இதுங்களுக்கு நா பேர் வச்சுட்டேன்." என குஷி பொங்க கூறினாள். "என்ன பேரு தாயி.." என கூறிய வண்ணம் ஒரு கிண்ணத்தில் பாலை ஆத்தி, ஊற்றி, அவற்றை குட்டிகளுக்கு கொடுத்துக் கொண்டே கேட்டாள். "காலைல பாத்த அந்த குட்டி நாயோட பேரு தான். இது பெரிய அரி, அது சின்ன அரி." என கூறி அவற்றை கொஞ்சினாள். அரிகளின் வரவால் ஹேரியை அவள் மறந்திருந்தாள். இவற்றைப் பார்த்துக் கொண்டே மங்களம் அந்த சற்று சுவற்றில் சாய்ந்து அமர்ந்தான். அவனுக்கு பழைய ஞாபகங்கள் கண்முன் வரத் தொடங்கின. மங்களம் சில நேரம் அவனாய் இருந்தாள். சில நேரம் அவளாய் இருந்தான். திருநங்கையாக மாறிப்போன மங்களத்தை அவளது பெற்றோர்கள் துரத்திவிடவே, 'மங்களப்பாண்டி' யான தன்னை 'மங்களம் அம்மாளாக' மாற்றிக் கொண்டு, அனாதையான தாயம்மாளை தன் மகளாக வளர்த்து வருகிறாள் மங்களம். தன் மேல் உயிரையே வைத்திருந்த தனது தாயின் பெயரையே வளர்ப்பு மகளுக்கும் சூட்டி, தன் சொந்த மகளாக வளர்த்துவந்த தாயம்மாளின் மீது இவள் உயிரையே வைத்திருந்தாள். தனக்கென யாருமில்லாத நிலை வந்தபோதும், தனக்கென ஒரு மகள் இருப்பதையும், தானொரு தாயானதையும் நினைத்து மங்களம் எப்போதும் ஆனந்தப் பட்டுக் கொண்டிருந்தாள் மங்களம். தன்னுடன் யாருமில்லாமல் வெறுமையாகிப் போன போது, தன்னோடு விளையாட இரு சகோதரர்கள் கிடைத்த சந்தோசத்தில் பசியை மறந்து விளையாடிக் கொண்டிருந்தாள் தாயம்மாள். யாரும் திரும்பிப் பார்க்காத, வேண்டாதவற்றையெல்லாம் தூக்கியெறியும் அந்த குப்பைத்தொட்டியின் ஓரத்தில் ஒரு பேரழகான குடும்பம் ஒன்று உருவாகியிருந்தது. நாளை, நமக்கும் நல்லதைச்செய்யுமென்ற நம்பிக்கையோடு... சுபம். எழுத்து: கோடீஸ் ரெங்கராஜ். பரமக்குடி. 8682920290.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in