logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

உமா மகேஸ்வரி

சிறுகதை வரிசை எண் # 214


தாய்மை வரம்.., சிறுகதை கார் ஏர்போட்டை விட்டு கிராமம் நோக்கி விரைந்தது, நர்த்தனாவுக்கு அந்த கிராமச்சூழலே பிடிக்கவில்லை.., நகரத்தில் லிப்டில் பயணித்து அப்பாவுடன் காரிலும்.., மற்ற நேரங்களில் தோழிகளுடன் ஸ்கூட்டியிலும் நகரத்தையே வருவாள். காபி கபே பீட்சா கார்னர் என சாப்பிட்டு ஜாலியாக சிட்டுக் குருவியாய் சிறகடிப்பாள். திருமணம் என்ற பந்தத்தில் தன்னை பெற்றோர்கள்.. இணைத்து விட்டது பிடிக்கவில்லை அவளுக்கு. கணவன் முகுந்தனின் அரவணைப்பும், காதல் பேச்சும் பிடிக்காது..,தன்னை தனிமைப் படுத்திக் கொண்டாள். தாய், தந்தையிடம் எரிந்து விழுந்தாள். தோழிகள் சுதந்திரமாக உலா வர.., தான் மட்டும் கல்யாணம் என்ற சகதியில் மாட்டிக் கொண்டோமே..,?? என்ற கவலை அவளுக்கு..., அப்பா ரங்கராஜன் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரை எதிர்த்து பேச தைரியம் இல்லை. மூன்று மாதங்களுக்கு முன்பு தான் முகுந்தனுக்கும் நர்த்தனாவுக்கும் திருமணம் முடிந்திருந்தது. முகுந்தன் நகரத்தில் ஒரு அபார்ட்மெண்டில் தங்கி இருக்கிறான். கிராமத்தில் தன்னுடைய தாத்தா, பாட்டி, பண்ணைவீடு, தோட்டம்..,அதன் செழிப்பு என அவன் சொல்லிக்கொண்டு போக.., எதையுமே கேட்காதவள் போல் இருப்பாள் நர்த்தனா. அவள் எதிலும் ஒரு பிடிப்பில்லாமல் இருக்க.., அவன் அம்மா “ஒரு வாரம் கிராமம் போயிட்டு வாங்கப்பா” என அனுப்பி வைத்தாள். கிராமம் என்றதும்.. அவனிடம் இன்னும் அதிகமாக எரிச்சல் பட்டாள் நர்த்தனா. கிராமம் என்றாலே படிப்பறிவு இல்லாத மக்களும்..., சுகாதார மற்ற இடங்களும் தான் அவள் கண் முன் விரிந்தது. ஏர்போர்ட்டில் இருந்து விடிகாலை நான்கு மணிக்கு. வீட்டிற்கு வந்து இறங்கியதும்..., பாட்டி ஆவி பறக்க காபி கொடுத்தாள். அந்த சுவை வித்தியாசமாக தெரிந்தது நர்த்தனாவுக்கு. ""சுக்கு ,மல்லி, சீரகம் போட்டு காப்பி குடிச்சா....,எந்த வைரசும் ஒன்னும் பண்ணாது முகுந்தா" பாட்டி பர்வதம்மா சிரித்தாள் ஆரோக்கியமாக..! அதற்குள் லேசாக விடிந்திருந்தது. பாட்டி பெருமையாய் நர்த்தனாவை வீட்டிற்கு வெளியே அழைத்து வந்தாள். முற்றத்தில் பாட்டி தெளித்த சாணத்தின் வாசனை, லேசாக காற்றில் கலந்து வீசியது. பாட்டி போட்ட கோலத்தின் நடுவே.., பூசணிப்பூ புன்னகையாய் சிரித்தது. ஆச்சரியமாய் பார்த்தாள், நர்த்தனா. இது எல்லாமே ரொம்ப புதுசு நர்த்தனாவுக்கு. ஒரு பக்கம் கிணறு..அதில் கப்பியும் வாளியும்.. பக்கத்தில் பழுத்து தொங்கும். பலாமரம், வேம்பு, செம்பருத்தி, செவ்வந்தி, சந்திரகாந்தா, இருவாட்சி கொடி, துளசி.,டிசம்பர் பூ....என பல வண்ண பூக்கள் ..! பாட்டி பண்ணை வீட்டில் மாடிப்பகுதியை ஒதுக்கி இருந்தாள். நர்த்தனாவுக்கு., மாடியில் வந்து சன்னல் வழியாக, வெளியே பார்த்தாள். பலாப்பழம் பழுத்து அணில்கள் சூழ்ந்து கொள்ள.., சிட்டுக் குருவிகளும், மற்ற பறவைகளும் கூடவே சேர்ந்து கொத்தி கொண்டிருந்தன. மணம் நாசியில் ஊடுறுவியது. புது அனுபவமாக இருந்தது. அவளுக்கு. பாட்டி அழைத்தாள் நர்த்தனாவை. “என்னப்பா குளிச்சிட்டியா'..,? முகுந்தை சாப்பிட அழைச்சிட்டு வா என்றாள். டைனிங் டேபிளில் புட்டும், கூடவே பாசிப்பயறும் அப்பளமும்.., முகுந்து “வாவ் பாட்டி.., சூப்பர்”” என்றபடி சர்க்கரையை தூவி. “பிரமாதம் பாட்டி.., ” எக்ஸலன்ட் ‘ என சாப்பிட ஆரம்பித்தான். நர்த்தனா எப்படி சாப்பிட..,? குழம்பினாள்.. "பாட்டி.., நாளையிலேருந்து நர்த்தனாவுக்கு பிடிச்ச டிபன் பண்ணு பாட்டி..,” முகுந்த் சொன்னான். இவள் மாம்பழங்களையும், பலாவையும் மட்டுமே ருசி பார்த்தாள். இவள் மேலே வந்தபோது முகுந்த் தூங்கியும் விட்டான். நர்த்தனாவும் பயணக் களைப்பில் தன்னை மறந்து தூங்க ஆரம்பித்தாள். மாலை கீழிறங்கி வந்த போது.. பாட்டியும் ஒரு பெண்ணும் மஞ்சாடி முத்துக்களை வைத்து விளையாடி கொண்டிருந்தார்கள். "நர்த்தனா.. முகுந்தன் அவன் சிநேகிதன பார்க்க போயிருக்கான். உனக்கு அதிரசமும்,வடையும் பண்ணி வச்சிருக்கேன். சாப்பிடு...,அப்படியே எங்க கூட பல்லாங்குழி விளையாட வாரியா... என்றாள் பாட்டி. "வேண்டாம் பாட்டி.எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை .."நான் சும்மா உட்கார்ந்து இருக்கேன் என்றவள்.. மெல்ல எழுந்து..கயற்று கூடையில் பூக்களை பறிக்க ஆரம்பித்தாள். மாலை நேரம் வேப்ப மரத்து காற்று சில்லென்று இதமாக வீசியது. நித்ய கல்யாணியின் வாசம் நாசியை நிறைத்தது. அப்படியே அமர்ந்து...பூக்களை பாட்டியின் உதவியோடு கட்ட ஆரம்பித்தாள். மறுநாள் காலை..பாட்டியோடு வெளியே வந்த போது.. கிராமம் ஒரு வகையில் ஆரோக்கியத்துக்கு அடிப்படை... என்பதை நர்த்தனா உணராமல் இல்லை. பாட்டியோடு வயல் வெளிக்கும் குளத்து மேட்டுக்கும் போய் வந்த போது.., நாத்து நடும் பெண்கள் வரி வரியாக நாத்து நடும் போது பாடுவதையும்... கூடவே.. உயர்ந்த மரங்களில் தொங்கும் தூளிகளில்அவர்கள் குழந்தைகள் தூங்கும் அழகையும் ரசித்தாள்.., பெண்கள் எந்த கள்ளமும் இல்லாமல் பேசி சிரித்து கொண்டு வேலைகள் செய்வது... வியப்பை தந்தது.. புது அனுபவங்கள் நார்த்தனாவுக்கு ஒரு தெம்பை தந்தது. நர்த்தனா வீட்டுக்கு வந்து மாடிக்கு வந்த போது.. படபடக்கும் இறக்கை சப்தங்கள்,சின்ன, சின்ன கொஞ்சல்கள். மெதுவே எழுந்து..,மாடியின் சன்னல் வழியாக வெளியே பார்வையை திருப்பினாள். சன்னல் பக்கமாக..,பலா மரத்துக்கிளை ஒன்று சாய்வாக படர்ந்திருக்க., அதில் பஞ்சுபொதி போல் ஒரு கூடு. உள்ளே வருவதும் போவதுமாக இரண்டு சிட்டில்கள். மஞ்சள் கலந்த சாம்பல் கலரும் கலந்த கலவையில்.., இரண்டும் கிளைகளில் உட்காருவதும் பறப்பதுமாக இருந்தது. எங்கேயோ சேகரித்த பஞ்சுகளும், நார்களும் ,தேங்காய் சவுரிகளும் இடத்தை அடைத்திருக்க..,மூன்று முட்டைகள் உள்ளே.., குருவிகள் எந்நேரமும் வரலாம்.!! மெல்ல விலகி கொண்டே கவனித்தாள் நர்த்தனா. முகுந்தை மணமுடித்தப் பிறகு, ஆபீஸ் போவதும் வருவதுமே சரியாக இருந்தது. முகுந்த் இவளிடம் நெருங்கி வரும் போதெல்லாம் வெறுப்பை காட்டினாள் நர்த்தனா. இயந்திர வாழ்க்கையாகி போனது இருவருக்கும்.., ”திருமணம் என்ற பந்தமே.., தேவையில்லாத ஒரு நரகம்”” தங்கையிடம் கோபமாய் பேசியிருக்கிறாள். இதில் குழந்தை பற்றி யோசிப்பதே பெரிய விஷயமாக இருந்தது “ச்சே கல்யாணமானா.., குழந்தைங்க மட்டும் தானா.., வாழ்க்கை..,?? அம்மாவிடம், பல முறை எரிந்து விழுந்தது ஞாபகம் வந்தது.!! நான்கு நாட்கள் கடந்து போனது தினமும் சிட்டுக்குருவிகளின் கூட்டை பார்ப்பதே வேலையாகி போனது நர்த்தனாவுக்கு… அன்று வித்தியாசமான சில சப்தங்கள், விடிகாலையே விழித்து,விட்டாள் நர்த்தனா.l சன்னல் வழியே பார்வையை விட்டாள். சின்ன செப்பு உதடுகள். குருவியின் முகத்தில் ஒரு சின்ன பிளவு போல அவ்வப்போது திறந்து, திறந்து மூட அற்புதமாக இருந்தது. ”என்ன ஒரு உலகம். ஒன்று தாயைப்போல.., ஒன்று தந்தைப்போல.., இன்னொன்று வால் குட்டியோ..,? வித்தியாசமாய் கண்சிமிட்டியது.! கொள்ளை பிரியத்துடன் பார்த்து கொண்டிருந்தாள் நர்த்தனா. அன்று இரு குருவிகளுமே ரொம்ப உற்சாகமாய்.., இங்கே ஒரு உலகம் இயங்கி கொண்டிருக்க..,அந்த ஐந்து பேர் மட்டுமே புது உலகம் போல..,குஞ்சுகளோடு அளவளாவி கொண்டிருந்தது. ஆச்சரியத்தின் நுனியில் இருந்தாள் நர்த்தனா.! நர்த்தனா கீழே இறங்காமலே காத்திருந்தாள். பாட்டியும் இரண்டு முறை அழைத்துப் பார்த்து விட்டாள். மேலே வந்து வெண்பஞ்சு இட்லியும், சாம்பாரையும்,சட்னியையும் வைத்து விட்டு போனாள். ஒன்றோடொன்று முகம் உரசி.., ஏதேதோ கதைகள் பேசி.., அங்கே ஒரு தாயின் அரவணைப்பையும்.., தந்தையின் போற்றுதலையும்... நேரிலே கண்டாள். அவள். கண்கள் குளமானது. அம்மாவின் ஞாபகம் வந்தது.உடனே அம்மாவை பார்த்து பேச வேண்டும் போல இருந்தது. “ஐந்தறிவு ஜீவனுக்கே தெரியும் பாசம் கூட, பல்கலையில் பயின்ற எனக்கு கூட தெரியாமல் போச்சே.., ச்சே".., மாலை.., முகுந்த் வீட்டிற்குள் நுழைந்த போதே ”நர்த்தனா, நாளைக்கு டிக்கெட் போடலான்னு இருக்கேன். நீயும் இரண்டு நாளா..,மாடியிலே இருக்கே.., கிராமத்துக்கு வந்ததே உனக்கு பிடிக்கல.., சோ..,”” என்றவனின் முன்னே வந்து நின்றாள். ”என்னங்க பாட்டி வீடு.., எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இன்னும் ஒரு வாரம் கூட இருந்திட்டு போலாமே"..,? "அப்புறம் நாம அடிக்கடி நம்ம விடுமுறை களிக்க கிராமத்துக்கு வந்திடனும்"' உற்சாகமாய் சொன்னவளை..., “என்ன நா்த்தனா சொல்றே..,?” ‘ முகுந்த் கண்கள் சுருக்கி.., பாட்டியை பார்த்தான். பாட்டி "நான் இல்லைப்பா..," என தலையாட்டினாள். "அந்த இயந்திர வாழ்க்கையில் இருந்து எனக்கு ஒரு மாறுதல் கிடைச்சிருக்கு.., முகுந்த் பிளீஸ்..ஒரு வாரம் எனக்காக"...,கண்கள் கெஞ்ச சொன்னாள். “சரி.., உன்னிஷ்டம் நர்த்தனா.” இப்பவே ஆபீஸ்க்கு கால் பண்ணி ஓன் வீக் லீவு சொல்லிடுறேன்.”” அத்தையிடமும் பேசிடுறேன்.”” அவன் கைகளை பிடித்து சந்தோசமாய் குதித்தாள். மெல்ல அவனிடம் காதலாய் சரண்டைந்தவளை...,அணைத்துக் கொண்டான் முகுந்த். பாட்டி.., சிரித்தபடி மாடியை விட்டு கீழிறங்கி மல்லிகைப் பந்தலை நோக்கி நடந்தாள் ஒரு புன்னகையோடு...!! குமரி உத்ரா நாகர்கோவில் 9486556166

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.