மீனாட்சி ராஜேந்திரன்
சிறுகதை வரிசை எண்
# 213
கருப்பாயா
பேருந்தின் ஒலிப்பான் தீடிரென்று பைத்தியம் பிடித்தது போல் அலறியது. அந்த சத்தத்தில் தான் பேருந்தில் இருக்கிறோம் என்பதை உணர்ந்தாள் அவள்.
திருச்சியிலிருந்து காங்கயம் வர பாதி தூரத்தைக் கடந்திருந்தது அந்த பேருந்து.
அவளுடைய தோழிகள் பேருந்தில் ஏற்றி விட்டிருந்தனர். ஏற்றி விட்டு பயணச் சீட்டும் வாங்கியதோடு அவள் நினைவுகள் பேருந்தில் இல்லை. அதன் வேகத்தில் கடந்த காலத்திற்கு பறந்து கொண்டிருந்தது.
கண் முன் அவள் தாய் வழிப் பாட்டி வந்து போனாள். கருப்பாயா என்பது அவளது பெயர். அவர்கள் குல தெய்வம் கருப்பணசாமி நினைவாக வைத்தார்களோ இல்லை அவள் சரும நிறம் காரணமோ தெரியாது. கருப்பாயா ஐந்தரை அடியில் அளவான உடல் கொண்டவள். அதற்கு சலிக்காமல் வேலை செய்யும் உள்ளத் திண்ணமும் உடல் உழைப்புமே காரணம்.
அவர்கள் தென்னந்தோப்பில் உள்ள முப்பது அடி ஆழம் கொண்ட கிணறு அவள் காலத்தில் வெட்டப்பட்டது. அதில் அவளின் பங்கு அதிகம் என்று அம்மாய் கூறி கேட்டிருக்கிறாள் மதி.
ஊரில் பிறருக்கு என்றால் ஓடி ஓடிச் செய்வாள். அதனாலேயே கருப்பாயாவை விசாரிப்பவர்கள் அதிகம். அவளுடைய தந்தை பஞ்சாயத்து பிரசிண்டாக இருந்தராம். அவளுக்கும் அதே ஆளுமை. உதவும் பண்பு. வீட்டில் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பாள். இரண்டு மகள்களுக்கு இடையில் ஒரு மகன். அந்த மகனின் முதல் மகளின் மகள் தான் மதி. கருப்பாயாவின் கொள்ளு பேத்தி. பெண் வழி சமூகத்தின் வழி பார்த்தால் நான்காவது தலைமுறைப் பெண்.
கருப்பாயாவின் கவனிப்பில் அதிக வருடங்கள் வளர்ந்த பேத்தி. மதி பிறந்ததற்குப் பின் அந்த வீட்டில் கொஞ்சம் கொஞ்சம் மாற்றம். அவள் வளரும் போது அந்த வீட்டில் அவள் அம்மாவுக்கோ, அவரது தங்கைக்கோ கிடைக்காத சுதந்திரம் மதிக்கு கொடுக்கப்பட்டிருந்தது. மதி செய்யும் சேட்டைகளில், அவரது மகன் மிகவும் கண்டிப்பானவர் என்றாலும் அவள் அடிவாங்கப் போகும் சமயங்களில், “அடுத்த வீட்டுப் புள்ளைடா.. அவ அப்பனுக்கு யார் பதில் சொல்வது?” எனக் கேட்டு சில இடங்களில் காப்பாற்றி விடுவார். அவள் அப்புச்சியின் அடியை புள்ளப்பூச்சி போன்றிருக்கும் மதிக்கு தாங்கும் சக்தி இருக்காது என்று அவருக்குத் தெரியும் போலும்.
மதியின் அன்னைக்கு நன்றாகப் படிப்பு வந்தாலும் பருவமடைந்ததால் எட்டாவதோடு படிப்பை விட்டிருந்தார். ஆனால் அவருக்கும் சேர்த்து படிக்கும் திறமை மதிக்கும் வாய்த்திருந்தது. அதனால் அவளுக்கு கட்டுப்பாடுகள் குறைவு. ஆசிரியர்கள் மெச்சும் பிள்ளை ஆயிற்றே.
மதி பள்ளி செல்லும் போதெல்லாம் ஒரு ஜான் நீளமிருக்கும் அகன்ற படியில் அவருடைய அடர் ரோஸ் நிற பட்டு சுருக்குப் பையில் வைத்திருக்கும் ஒரு ரூபாய்கள், ஐந்து ரூபாய்களை எடுத்து, “இந்தா.. மதி மத்தியானம் எதாச்சு வாங்கிச் சாப்புடு.. சில்லுவானத்தை பத்ரமா பைக்குள்ள வச்சுக்கோ.. தொலைச்சுப்போடாத..” என்று கூறி தருவார். ஒவ்வொரு முறை வெளியில் செல்லும் பத்திரம் சொல்ல அவர் வாய் வலித்ததே இல்லை.
இடையில் அன்னை, தந்தை ஊருக்குப் படிக்கச் சென்றுவிட அவருடன் இருக்கும் தருணங்கள் காலாண்டு விடுமுறை நாட்கள், அரையாண்டு விடுமுறை நாட்கள் பிறகு மே மாத விடுமுறை எனச் சுருங்கி விட்டது.
கல்லூரி விடுதியில் சேரும் முன்பு ஊரில் உள்ள அனைவரையும் பார்க்க வந்திருந்தாள். நிர்பயா வழக்கு இந்தியாவையைப் பதற வைத்துக் கொண்டிருக்கும் தருணம். தொலைக்காட்சி பெட்டி தொண்ணூறுகளின் பிற்பாதியில் இருந்து வைத்திருந்ததால் செய்தி பார்ப்பது கருப்பாயாவின் வழக்கம். அது மட்டுமில்லாமல் அக்கம் பேச்சுகளும் நாட்டு நடப்பு அத்துபடி. அகில இந்திய வானொலி நிலையத்தின் மூலம் அந்தக் கிராமத்தில் வாழும் வயதானவர்களுக்கு நாட்டு நடப்பு அத்துப்படி. அரசியல் நிலவரத்தை அக்கு வேராக, ஆணி வேராக பிரித்து வாதமிடுவர். அப்படி இருக்கையில் கருப்பாயாவிற்கும் இது தெரிந்தது.
கல்லூரிக்குப் புறப்படும் முன், “நல்லா படி சாமி. யாருகிட்டேயும் ஏமாந்திடாம பத்ரமா இரு சாமி.” என்றாள்.
“நான் ஒன்னும் ஏமாற மாட்டேன் கருப்பு.. பணம் பாரு பத்திரமா இருக்கு. அம்மாய் சொன்ன மாதிரி இரண்டு பக்கம் வச்சுருக்கேன்.” என வாய்த்துடுக்காகப் பேசினாள் மதி.
“நீ ஏமாறாமல் இருக்கோனம். நான் சொல்றது வேற. எந்த பசங்களையும் நம்பிறாத..” வயசுப் பெண்களுக்கு வரும் வியாதியான காதலில் தன் பேத்தி சிக்கி ஏமாந்து விடுவாள் என்ற பயத்தில் அறிவுரை கூறி வைத்தாள்.
ஒவ்வொரு ஆறு மாதமும் விடுமுறை என்றால் அங்கு இங்கு என்று மற்ற சொந்தக் காரர்கள் வீட்டிற்குச் சென்று இறுதியில் பாட்டி வீட்டுக்கு வந்து விடுவாள்.
இப்படி ஐந்தாவது விடுமுறையில் வரும் போது தாத்தா படுத்த படுக்கையாகி இறந்து விட்டார். கல்லூரி முடித்து விட்டு விடுமுறைக்கு வந்த மதிக்கு பாதி சுய நினைவு இழந்த பாட்டிதான் கிடைத்தார்.
கார் வைத்து கோயம்புத்தூர் அழைத்துச் சென்று பார்க்க மன நல மருத்துவர் டிமெண்சியா என்று கூறிவிட்டார். கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தும் மறக்கும். இயல்பான விஷயங்கள் செய்ய முடியாது.
தனியாக அழுவார். கண்ணுக்குத் தெரியாத நபர்களுடன் பேசுவார். மூளை எதை எதையோ கற்பனை செய்து அவரை அழ வைத்தது. சிரிக்க வைத்தது.பத்து சதவீதம் நிஜ உலகத்திலும், தொண்ணூறு சதவீதம் கற்பனை உலகிலும் வாழ ஆரம்பித்தார். உணவு, தூக்கம் எல்லாம் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. தலை முடி இயற்கை நிறத்தை இழந்தது.
வெள்ளிக் கிழமை தவறாமல் பிடித்தவர் குளிக்கவும் கூட மறந்தார். ஆடைகளும் அவ்வப்போது நழுவ ஆரம்பித்தது.
ஊரில் உள்ள பெரியவர்கள் அவளை அடிக்கடி வந்து பார்ப்பர். இல்லையெனில் நலம் விசாரிக்காமல் இருப்பது இல்லை.
இந்த நோய் என்று உறுதி செய்த பிறகு மதி ஒரு நாள் தெளிவாக இருக்கும் போது செல்பி எடுக்க முற்பட ஆள்காட்டி விரலையும், நடுவிரலையும் கவை போல் விரித்து அழகாக சிரித்தார். மதியின் கேலரியில் என்றுமே அழிக்கப்படாதப் படங்கள் அவை.
ஏழாண்டுகள் பறந்தோடியது.
அந்தப் பறவை தன் பயணத்தை முடித்துக் கொள்ளத் தயாராகி விட்டது. ஊரில் பலருக்கும் வாய்ப்புண்ணுக்கு தழை அரைத்து கொடுத்த கைகள். ஆனால் அவரின் படுக்கைப் புண்ணுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா என்பது போல் அவள் உயிர்க்காற்று மெல்ல மெல்ல வெளியேறிக் கொண்டிருந்தது.
அந்தப் பாட்டியின் இறுதிப் பயணத்திற்கு வந்தே விட்டாள்.
காங்கயத்தில் இறங்கியதும் அழைத்துப் போக ஆட்கள் இருந்தது. மகள்கள், மகன், பேரன், பேத்திகள், கொள்ளு பேத்தி பேரன்கள், ஊர்க்காரர்கள் திரண்டிருந்தனர்.
ஊரை நெருங்கிக் கொண்டிருந்தனர். மாலைச் சூரியன் பெரிய ஆரஞ்சு பந்தாக இருந்தான். கதிரவன் மேகக் கூட்டத்தில் நடுவே மாட்டிக் கொள்ள மேகங்களின் சாம்பல் வண்ணக் கரங்கள் மெல்ல ஒவ்வொன்றாகப் பிணைக்க ஆரம்பித்திருந்தது.
வீட்டை அடைந்தவள் பலரைத் தாண்டி கருப்பாயா படுக்க வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்குச் சென்றாள்.
பத்தில் ஒரு பங்காக உடல் ஒடுங்கி இருந்தது. எலும்புகள் துருத்திக் கொண்டிருந்தன.
“பாட்டி..”
கருப்பாயாவின் சுருங்கிய கண்கள் மெல்ல விரிந்தது. இடது கையை மெல்லத் தூக்கி விரல்களை விரித்தார். மதியும் தன் விரல்களை நீட்டி அவரைத் தொட்டாள். சில நொடிகள் தான். மனதில் பெரும் சோகம். தன்னை முதன் முதலில் கையில் ஏந்தும் போது என்ன நினைத்திருப்பாள் தன் பாட்டி என நினைத்தாள். இது அவர்கள் இருவரின் கடைசியாக விரல்கள் தீண்டும் நொடிகள். நான்கு தலை முறை பந்தத்தின் அந்தம் அது.
ஒரு பெண்ணின், “அய்யோ…” என்ற கதறல் எழுந்தது. சூரியன் முழுவதும் மறைந்திருந்தான்.
முற்றும்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்