logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

Arav

சிறுகதை வரிசை எண் # 212


புதுச் சட்டை “சின்னு கண்ணு எந்திரி சாமி பள்ளிக்கூடத்துக்கு நேரமாவுது” ஆயா சின்னுவை எழுப்பினாள். கிழவியை திட்டிக்கொண்டே, கண்ணைக் கசக்கிக் கொண்டு சின்னு எழுந்தான். “போய் குச்சியை ஒடச்சி பல்ல ரண்டு தேயி தேச்சிட்டு வா தண்ணி ஊத்தி உடுரன்” என்றாள் கிழவி. அவனா குளித்தால் ஒழுங்காக குளிக்கமாட்டான், ரெண்டு டப்பாவ டபக்கு டபக்குனு மொண்டு ஊத்திட்டு வந்துருவான். அதான் எப்பவும் கிழவி குளிப்பாட்டுவது வழக்கம். அதுதான் அவளுக்கு பிடித்ததும் கூட. “ராத்திரி பூரா ஆயாளும் பேரனும் கூத்துப் பாத்துட்டு கும்மாளம் அடிச்சிட்டு வந்து, இப்போ எந்திரி எந்திரினா எப்புடி எந்திரிப்பான்” என்று சின்னுவின் அம்மா கிழவியையும் அவனையும் சேர்த்து திட்டிக்கொண்டிருந்தாள். ஆனால் அவர்கள் காதில் வாங்கிக்கொள்ளவேயில்லை இதெல்லாம் வழக்கமான ஒன்றுதான். சின்னுவுக்கு எட்டு வயது பக்கத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறான். படிப்பில் சுட்டி. கிழவிதான் அவனுக்கு நெருக்கமானவள். எப்பொழுதும் அவளிடம் வம்பிழுத்துக்கொண்டேயிருப்பான் வம்பிழுத்து அவளிடம் வசவு வாங்கவில்லை என்றால் அன்றைய நாள் அவனுக்கு திருப்தியாக அமையாது. கிழவி பெரிய காரியமாகவோ அல்லது ஏதேனும் விசேசத்திற்கு வெளியூர் சென்றுவிட்டால் இரவு அங்கேயே தங்க நேர்ந்தால் அன்று முழுவதும் “ஆயா எப்ப வரும் எப்ப வரும்னு” நச்சரித்துக்கொண்டே இருப்பான் தனது அம்மாவிடமும் அப்பாவிடமும். கிழவி வீடு வந்து சேர்ந்ததும் “உம்பேரன் உன்னையேதான் நேத்து பூரா கேட்டுட்டு இருந்தான் நாங்களாம் அவனுக்கு மனுசங்களா தெரில” என்பாள் சின்னுவின் அம்மா. அதைக்கேட்டு கிழவி “எத்தினி பேரு இருந்தாலும் என் பேரனாட்டம் வருமா என் மேல பாசம் காட்ட” என்று மனதிற்குள் ஆனந்தக் கூத்தாடுவாள். சின்னுவிற்கு கிழவியுடன் கூத்துப் பார்க்க செல்வதென்றால் ரொம்பப் பிடிக்கும். பக்கத்து ஊர்களில் எங்கு கூத்து நடந்தாலும் கிழவியும் பேரனும் ஆளுக்கொரு துப்பட்டி எடுத்துக்கொண்டு கிளம்பி விடுவார்கள். சில நாட்கள் கிழவிக்கு ஆர்வமில்லை என்றாலும் சின்னு விடமாட்டான். பாதி கூத்து முடிவதற்குள் தூங்கியும் விடுவான். கூத்து முடிந்ததும் கிழவி வீடு செல்ல எழுப்பினால் எழுந்து கிழவியுடன் சண்டை போடுவான் “தூங்குனா எழுப்ப மாட்டியா கிழவி” என்று. அந்த கூத்து முடிந்ததும் இங்க சின்னதா ஒரு கூத்து நடக்கும். கூத்துப் பார்ப்பது போல சின்னுவிற்கு பிடித்தமான இன்னொன்று பம்பரம் விளையாடுவது. பள்ளிக்கூடம் விட்டதும் வீட்டுக்கு வந்து, பையை தூக்கி எரிந்துவிட்டு, பம்பரத்தை எடுத்துக்கொண்டு சாவடிக்கு ஓடிவிடுவான். அவனைப் போலவே அவனது நண்பர்களும் ஆஜராகி விடுவார்கள். விளையாடி விட்டு பள்ளிக் கூடத்து வெள்ளை சட்டையில் புளிதியை அப்பிக்கொண்டு வருவான். வந்து அம்மாவிடம் ரெண்டு மொத்து வாங்குவான். கிழவி சின்னுவை குளிப்பாட்டிக்கொண்டிருக்கையில் நெளிந்துகொண்டே இருந்தான். அதற்கு கிழவி “என்னடா கொமரனாயிட்டியா ஏதோ வயசுப்பிள்ள தொட்ட மாதிரி இந்த நெளி நெளியிர” என்றாள். சின்னு வெட்கப்பட்டான். “ஆயா இந்த பொங்கலுக்கு எனக்கு புதுத்துணி வாங்கித்தர சொல்லி அம்மாக்கிட்டையும் அப்பாக்கிட்டயும் சொல்லாயா” என்றான். “மைனருக்கு புதுத்துணி வேணுமா” என்று கிண்டலாக கேட்டுவிட்டு, “நீ பொறப்பட்டு பள்ளிக் கூடத்துக்கு போ நா வாங்கித்தர சொல்றேன்" என்று சொல்லிவிட்டு பக்கத்துக்காட்டில் களவெட்ட சென்றுவிட்டாள். சின்னுவும் எப்படியும் பொங்கலுக்கு புதுத்துணி வந்துரும் என்று நம்பிக்கையுடன் பள்ளிக்கு புறப்பட்டு சென்றுவிட்டான். சின்னுவுக்கு கிழவி அம்மாவழி பாட்டி. கிழவி தன் மகனுடன் சண்டையிட்டுக்கொண்டு மவ வீடே கதினு வந்துட்டா. மாமியார் மருமகள் சண்டை, மகன் தன் பக்கம் இல்லாமல் பொண்டாட்டிக்கே தயவு செய்ததால் கிழவிக்கு வருத்தம். சின்ன சந்து கிடைத்தால் போதும் நம்மாளுங்க அதுல ரயிலே விட்டுருவாங்க. அது மாதிரி சின்ன பிரச்சனையை பேசி பேசியே பெரிசாக்கிடிச்சி ஊரு சனம். அப்படி வந்த சண்டையில் கிழவியிடம் கையை நீட்டி விட்டான் கிழவியின் மகன். அந்த மனத்தாங்கல் தாங்காமல் கிழவி “நான் என் மவ ஊட்டுலயே இருந்துக்கறன், மருமவன் எனக்கு ஒரு வாய் கஞ்சி ஊத்தாம உட்டுற மாட்டாரு, இங்கிருந்து அடிமைக்கஞ்சி குடிக்கோனும்னு எனக்கொன்னு தலையெழுத்தில்ல” என்று வந்தவள்தான் அதுக்கப்புறம் அங்க போகவே இல்லை. அவ்வளவு ரோசக்காரி. அம்மாவை கை ஓங்கிவிட்டான் அண்ணன் என்று ஆத்திரம் தாங்காமல் கிழவியின் மகளும் வந்து அவள் பங்கிற்கு ஏசிவிட்டு போனாள். அதுக்கப்புறம் எத்தனையோ முறை எதாவது காரியமாக ஊர்பக்கம் போனாலும், வீட்டுப்பக்கம் போனதில்லை. அன்று இரவு சின்னு தூங்கியிருந்தான். கிழவி, மகள் மற்றும் மருமகனிடம் “நம்மதான் கயட்டப்படரம்னா இந்த சின்ன பயலுமா படனும் மூனு பேரும் கூலி வேலைக்கு போறதும் அந்த காச, இருக்கற ரண்டேக்கராவுக்கு முட்டூலி போட்டுட்டு, அரவவுறு காவவுறு கஞ்ச குடிச்சிக்கிட்டு இருக்கோம், எப்பவுமோ நமக்கு கயட்டம் தீராது, எப்படியாச்சும் இந்த பொங்கலுக்கு இந்த பயலுக்கு புதுத்துணி வாங்கி கொடுக்கோனும். பாவம் பள்ளிக் கூடத்து டாயரயே போட்டுக்கிட்டு சுத்துது” என்று புலம்பித்தள்ளினாள். “இருக்கற கசட்டத்துல நானும் உங்களுக்கு சொமையா இருக்க” என்று தனது மன உறுத்தலையும் வெளிக்காட்டினாள். “இதுல என்னத்த சொமைய கண்டிங்க, மூனு வேலையும் விருந்தா போட்டுக்கிட்டு இருக்கம் நாங்க, குடிக்கிற கஞ்சியில உங்களுக்கு கொஞ்சம”. “நீங்களும் என்ன சும்மாவா இருக்கிங்க, வயசான காலத்துல காடுகரனு போய் கூலி வேல பாத்து, எங்களுக்கு ஒத்தாச பண்ணுறிங்க, ஊட்டுலயே இருக்க சொன்னாலும் கேக்கமாட்டிக்கிறிங்க” என்றான் மருமகன். இதைக்கேட்ட கிழவியும் அவளின் மகளும் உணர்ச்சிவசப்பட்டனர். “பாப்போம் இந்த தடவயாச்சும் பையனுக்கு புதுத்துணி வாங்கி கொடுக்க முடியுமானு”. “சந்தையில துணிக்கட போட்டுருக்கான் பாரு பாக்க பாக்க ஆசையா இருக்கு நம்மலுக்கே, அந்த சின்னதுக்கு ஆச வராதா என்ன?, போனவாட்டி சந்தைக்கு போனப்ப துணிக்கடயையே பாத்துட்டு கெடந்தான்” என்று தன் பங்கிற்கு கொஞ்சம் ஆதங்கப்பட்டான். “என்ன பண்றது ஆர குத்தம் சொல்ல நம்மலும் இன்னிக்கு மேல வந்தர்லாம் நாளைக்கு வந்தர்லாம்னுதான் இருக்கோம், சாமி வழிவிட்ட பாட்ட காணோம்” என்று சின்னுவின் அம்மா தன் கணவனின் தலையை இருட்டில் நீவி விட்டவாறே ஆறுதல் கூறும் போக்கில் விசனப்பட்டாள். “கயட்டம், நட்டம் எல்லாம் பெரியவங்களுக்குத்தான் சின்ன குழந்தைகளுக்கேது, பெரியவங்களா இருந்தா நமக்கு வாச்சது அவ்வளவுதானு மனச தேத்திக்குவாங்க, சின்ன புள்ள என்ன பண்ணும் பாவம்” மீண்டும் கிழவி பேசினாள். “எப்படியாச்சும் புது சட்ட வாங்கி கொடுத்தறனும் என்று” மீண்டும் ஒருமுறை அழுத்தமாகச் சொன்னாள் கிழவி. வெகுநேரம் அனைவரும் பேசாமலே படுத்திருந்து தூங்கிப் போயினர். சின்னுவும் கூடப் படிக்கிற பசங்கக்கிட்ட எல்லாம் பொங்கலுக்கு புதுத்துணி வாங்கப்போவதைப் பற்றி குதுகலமாக அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தான். மறுபடி ஒருமுறை கிழவியிடம் புதுத்துணி வாங்குவதைப் பற்றிக் கேட்டு உறுதி செய்துக் கொண்டான். மேலும் அம்மா மற்றும் அப்பாவிடவும் கேட்டும் கொண்டான். அவனது ஆவலைப் பார்த்து அவர்களும் வாங்கி கொடுத்து அழுகு பார்க்க வேண்டும் என்று எண்ணிணார்கள். பொங்கல் நெருங்கிக் கொண்டிருந்தது. பொங்கலுக்கு ஒருவாரம் முன்பு சனிக்கிழமை வார சந்தையில் துணி வாங்குவதாக திட்டம். அதுவரை பள்ளிக் கூடத்திலும் பம்பரம் விளையாட்டின் போதும் அதைப்பற்றியேதான் அவனுக்கு பேச்சு. அரைக்கை சொக்கா வாங்குவதா இல்ல முழுக்கை சொக்காவா, டவுசரா இல்ல பேண்ட்டா என்றெல்லாம் பேச்சுக்கள் நண்பர்கள் மத்தியில். அந்த வாரம் சந்தைக்கு போக இரண்டு நாட்களே இருந்த நிலையில் அவர்கள் வைத்திருந்த ஒரே ஒரு மாடு சுனங்கிவிட்டது. அவர்களிடம் இருப்பு ஏதும் இல்லாத போது பேருக்கு கட்டுத்தரையில ரெண்டு ஜுவனாவது இருக்க வேண்டும் என்று வாங்கி வந்தது. ஒரு சிந்து மாடும் இரண்டு ஆட்டு கிடாரிகளும். ஒரு முறை ரொம்ப கசட்டத்தில் இருக்கும்போது இதுகளுக்கு தீனி போட முடியாது என்று, இருந்த நான்கைந்து உருப்படியை விற்று விட்டனர். அதுக்கப்புறம் வெகுநாள் கழித்து வாங்கியவைகள்தான் இவை. மாட்டின் நிலையைக் கண்டதும், பக்கத்து ஊரில் உள்ள மாட்டு வைத்தியரை வரச்சொல்லி பார்த்தனர். மாட்டின் வயிற்றில் கைவிட்டு பார்த்து விட்டு “சாப்ட்டது ஏதோ மாட்டுக்கு ஒத்துக்கலீங்க, ஜீரணம் ஆகல வயித்துக்குள்ள அப்படியே இருக்குதுங்க” என்றார் வைத்தியர். மேலும் “ரண்டு மூனு நாளா சாபட்டது எல்லாம் சேந்துக்குச்சுங்க, சாணியும் ஒழுங்கா போட்டுருக்காது” என்று மாட்டின் வயிற்றில் இருந்து சாணியை கையால எடுத்து போட்டார். இது மாதிரி இரண்டு மூன்று முறை செய்தார். புதிதாக வாங்கி வந்த வைக்கோல்தான் சேரவில்லை போல என்று அனைவரும் முடிவுக்கு வந்தனர். சின்னு மாட்டுக்கு உடம்பு சரியில்லை என்ற காரணத்தை சாக்காக வைத்து அன்று பள்ளிக்கு போகவில்லை. “மாடு படுத்தே கெடக்குது எந்திரிக்க வேற மாட்டிங்குது, டவுன்ல இருக்குற ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய்டுங்க, இல்லனா ரொம்ப வெவகாரமா போய்டுமுங்க” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார் வைத்தியர். கிழவி “எப்படியாவது காப்பாத்திபுடுங்க பட்டி பொங்க வர நேரத்துல இப்படியா ஆவோனும்” என்று குமுறினாள். “ஆமாங்க எத்தனைய வேனும்னாலும் விக்கலாம் ஆனா உசுரு போவ உட்டுற கூடாதுங்க” என்றாள் சின்னுவின் அம்மா. “சரி நா டவுனுக்கு மாட்ட ஏத்திட்டு போவ வண்டி கூட்டியாறேன்”என்று சின்னுவின் அப்பா கிளம்பிவிட்டான். எல்லாவற்றையும் புரிந்தும் புரியாதவனாக பார்த்துக்கொண்டிருந்தான் சின்னுப் பயல். மாட்டை ஏற்றி செல்ல மினி ஆட்டோ கூட்டி வந்தான் சின்னுவின் அப்பா. மாட்டை வண்டியில் ஏற்றுவதற்கு பக்கத்து வீடுகளிலிருந்தெல்லாம் ஆட்களை கூப்பிட்டு, மூங்கில் கோல்கள் உதவியுன் மாட்டை வண்டியில் ஏற்றினார்கள். மாட்டுக்கு ஒன்றும் ஆகவில்லை என்றால் அன்னைக்கு இரவு கூத்துப்பாக்க போவதாக திட்டம். வைத்தியர் இப்படி சொல்லிவிட்டு போனதும் அந்த எண்ணமே கிழவிக்கு இல்லை. “மாட்ட காப்பாத்தி கொடு மாரியாத்தா” என்று கிழவி மாடு நன்றாகி வர வேண்டும் என்று வேண்டுதல் விடுத்தாள். நன்றாகி வந்துவிட்டால் உண்டயலில் போட காசு முடிந்தும் வைத்துக் கொண்டாள். சின்னுவும் இந்த கலவரத்தில் கூத்தை மறந்தான். ஆஸ்பத்திரியிலேயே தங்கி மாட்டுக்கு வைத்தியம் பார்த்து மாட்டை காப்பாற்றி வண்டியேத்தி வீட்டிற்கு வந்தாயிற்று. வண்டிக்கு, ஆஸ்பத்திருக்கு, மாட்டுக்கு மருந்து என காசு எல்லாம் விரயம் ஆகியிருந்தது. மாடு பிழைத்த சந்தோசத்தில் அனைவரும் இருந்தனர். அன்றைக்கு சனி சந்தை போக வேண்டிய நாள். சின்னு “இன்னிக்கு துணி எடுக்க போலாமாபா” என்றான் தயக்கத்துடன். அப்பாவிற்கு நினைவிருந்ததுதான் துணி எடுப்பது பற்றி. ஆனால் என்ன செய்ய கையில் காசில்லையே. கடன் வாங்கி செலவு செய்யவும் மனசில்லை, ஏற்கனவே வாங்கிய கடனை அடைத்தால் போதும் என்ற மனநிலைதான். “மாட்ட ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனதுல நெறைய செலவாயிப்போச்சி சாமி, மாசி மாசம் மாரியாயி நோம்பி வருதுல அதுக்கு வாங்கித்தரேன்” என்றார் சின்னுவிடம். “போப்பா எப்ப பாத்தாலும் இப்படித்தான் பண்ணுறனு” அழுக ஆரம்பத்துவிட்டான். கிழவி “எஞ்சாமியில அழுவாத கண்ணு மாரியா நோம்பிக்கு வாங்கிக்கலாம்” என்றாள். “போடி கிழவி” என்று அழுதுகொண்டே வீட்டுக்குள்ள போயி படுத்துக்கிட்டான் பொழுதா நேரத்துல. ஆம்மாவுக்கும் வருத்தம்தான் ஆனாலும் அவனை அதட்டினாள். ஆதற்கு பிறகு அவன் சில நாட்களுக்கு சோகமாகவே இருந்தான். பயலுகளெல்லாம் “புதுசட்ட வாங்கியாந்துட்டயாடா, எப்ப வாங்க போற என்று ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கெல்லாம் அவனால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த வருசம் பொங்கலும் அவர்கள் கொண்டாடவில்லை. மாசி மாசம் மாரியம்மன் நோம்பி நெருங்கி கொண்டிருந்தது. முன்பைப் போலவே மீண்டும் ஒருநாள் கிழவி குளிப்பாட்டிக் கொண்டிருக்கையில் “மாரியா நோம்பிக்கு புதுசட்ட வாங்கியாந்துருமா அப்பா” என்றான் ரொம்ப ஆசையாக. “வாங்கியாந்துருவாருடா” என்று பதிலளித்து அவன் காலிடுக்குகளில் தேச்சி குளிப்பாட்ட அவன் “கூசுது கெழவி” என்று நெளிந்தான். நோம்பி நெருங்கிக் கொண்டிருக்க “நோம்பிக்கு எப்புடியாவது சட்டத்துணி வாங்கி கொடுத்துறோனும், இல்லனா சின்னு பொக்குனு போய்டுவான்” மருமகனிடம் கிழவி பேரனுக்காக பரிந்தாள். “பாக்கலாம் பாக்கலாம்” என்று ஒரு பிடிப்பில்லாமல் மாமியாரிடம் பதிலளித்தான். “ஏன் என்னாச்சு எப்படியாவது எடுத்து கொடுத்துறோனும், பாவம் அதுக்கு என்ன நாம அடிக்கடியா எடுத்து கொடுக்கறம். பள்ளிக்கூடத்து சட்டையவே போட்டுக்கிட்டு சுத்துது அத உட்டா கோவணத்த கட்டிக்குது” என்றாள் கிழவி. “ஆமாங்க பழைய துணி ஒண்னு ரண்டுதான் இருக்கு அதுவும் பத்தும் பத்தாததுமாதான் இருக்கு” என்று தன் பங்கிற்கு வாதாடினாள் அம்மாக்காரி. “நானும் எடுத்துப்புடலாமுனுதான் பாத்தன் ஆனா கோயிலு வரிய இந்தமட்டம் ஜாஸ்த்தியாக்கிப்புட்டாங்க அதுமில்லாம கடன கொடுக்க வேண்டிய எடத்துலலாம் கேக்குறாங்க நோம்பி சமயமுனால” என்றான். கிழவிக்கும், மகளுக்கும் பக்கென்றிருந்தது. கிழவி சிறுவாட்டு காசு கொஞ்சம் வைத்திருக்கிறாள் அதை தரலாம் என எண்ணி கேட்டாள். “எங்கிட்ட சிறுவாட்டு காசு கொஞ்சம் இருக்குது, அத கொடுக்குறேன்” என்றாள் மருமகனிடம். மகளுக்கும் இது நல்ல யோசனையாக பட்டது, ஏன்னா இந்த தடவையும் இல்லைனுட்டா பையன் பொக்குனு போய்டுவான் என்பதால். மருமகன் “வேணா நீங்க வச்சிக்குங்க, நீங்க நாலு எடத்துக்கு நல்லது கெட்டதுக்கு போறிங்க, ஆத்தர அவசரத்துக்குனா என்னா பண்ணுவிங்க” என்றான். “நா வைச்சி என்னா பண்ண போறேன் ஊட்டு செலவுக்கு இல்ல காட்டுக்கு முட்டூலி போட எதுக்காது கொடுப்பேன்” கிழவி பதிலுக்கு. “அதலாம் வேணாம் பொறவு பாத்துக்கலாம்” என்று ஒரேடியாக மறுத்துவிட்டான். இந்த தடவ துணி இல்லை என்பதை முன்கூட்டியே தெரிவித்துவிட்டனர். மீண்டும் அழுகாச்சி, வீட்டில் எல்லாரிடமும் சண்டை பண்ணிக்கொண்டு யாரிடமும் பேசாமல் இருந்தான் பெரிய மனுசன் போல சின்னு. அப்புறம் கொஞ்ச நாளையிலேயே மாரியாகோயில் நோம்பி நெருங்கியது. அந்த நோம்பி முசுவில் அவன் சகஜமாகிவிட்டான். மாரியாகோயில் ஆட்டம் பழகிக்கொண்டான். வீட்டுக்கு வந்து கோயிலில் பழுகுன ஆட்டத்தை “டன்டுனுக் டன்டுனுக் டன்டானுக்” என்று கிழவியிடம் ஆட்டம் போட்டு காண்பிப்பான். கிழவியும் அவன் தாத்தனாட்டமே ஆடுறான் என்று மனதிற்குள் நினைத்துக்கொள்வாள் வெளியில் சொல்ல வெட்கப்பட்டுக்கொண்டு. கிழவர் செத்து பன்னிரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. “கிழவனார் இருந்திருந்தா இந்த பயலை இப்படி உட்டுறுப்பாரா?” என்று அவ்வப்போது கிழவி நினைக்காமலில்லை. மாரியா நோம்பியில் மாடு பிழைத்துக்கொண்டால் உண்டயலில் போட வைத்திருந்த காணிக்கையையும் செலுத்தினாள் கிழவி. கூட்டத்தோடு நின்று சின்னு ஆடும் மாரியா கோவில் ஆட்டத்தை குடும்பமே ரசித்தது. “என்னப்பா உம்மவன் இந்த ஆட்டம் போடுறான்” என்று ஊர்க்காரர்கள் கூற அவர்கள் ஆனந்தப்பட்டனர். அந்த நோம்பியில் கூத்துப்பாக்க கிழவி மற்றும் சின்னுவுடன் சின்னுவின் அம்மாளும் இணைந்துக்கொண்டாள். அப்படியே நாட்கள் போய்க்கொண்டிருந்தன. சின்னுவும் பள்ளிக்கூடம் போறது, விளையாட்டுனு புதுத்துணி பற்றிய அவனது நினைவுகளை கிட்டத்தட்ட மறந்தே போயிருந்தான். முழு ஆண்டுப் பறிட்சை முடிந்து விடுமுறை விட்டுருந்தார்கள் பள்ளியில். பம்பரம் மட்டுமில்லாமல் இன்னும் நிறைய விளையாட்டுக்கள் விளையாட ஆரம்பித்தார்கள். மதியம் சாப்பாட்டுக்கு கூட வராமல் விளையாட்டில் முசுவாக இருந்தான். ஒருநாள் இரவில் சின்னு தூங்கியதற்கு அப்புறம் “சின்னுப்பயலுக்கு பொறந்தநாளு வருது, இதுக்காவது அவன் கேட்டத வாங்கி கொடுக்கோனும்” கிழவி கூறினாள். மேலும் “என்னோட சிறுவாட்டுக் காச கொடுக்குறேன், வர வார சந்தையில அவனையே கூட்டிப் போய் எடுத்துட்டு வந்துருங்க” என்றாள். “நானும் உங்க காச வாங்க கூடாதுனுதான் இருந்தன், இதுக்குப்புறம் விட்டா அப்புறம் எப்ப வாங்குறது” என்று சலித்துக்கொண்டான். “ஆமா அப்புறம் விட்டா இந்த காசுக்கும் எதுனா செலவு வந்துரும், காசு இருக்கப்பவே போய் எடுத்தாந்துருங்க” என்றாள் கிழவி. மேலும் தொடர்ந்தாள் “நமக்கெல்லாம் எதுனா செலவு இருந்துட்டேதான் இருக்கும் அதலாம் பாத்தா முடியுமா, அப்புறம் பையனுக்கு எப்பதான் செய்யுறது”. “ஆமா அதுவும் ஒருநா அடம்பண்ணுது அப்புறம் விட்டுறுது, பாவம் அது வயசுக்கு அதால முடிஞ்சது அதுதான்” என சின்னுவின் அம்மா அவனுக்காக பரிந்தாள். “அவன் மறந்துட்டானு நாம உட்டுறதா, சின்னப் பயன் அப்படித்தான் இருப்பான்” என்றாள் கிழவி மகளிடம். “சரியாயா நீங்க தூங்குங்க, உள்ள வெக்க தாங்கல நானும் இவனும் வெளில காத்தாட கட்டுல போட்டு படுத்துக்குறம்” என்று சின்னுவை தூக்க முடியாமல் தூக்கிச் சென்றாள். கிழவி சென்றதும் “என்னைய கட்டிக்கிட்டு ரொம்ப கசட்டப்படுற நீ, வேற எங்கையாது வாக்கப்பட்டுருந்தா ராணியாட்டம் இருந்துப்பையோ என்னவோ” என்று தன் மனைவியின் காதில் கிசுகிசுத்தான். “நா இப்பவும் ராணிதான், பின்ன இந்த ராசாவ கட்டிக்கிட்டா நா ராணிதான” என சொல்லி அவன் காதில் இவள் கிசுகிசுத்து அவனை ராஜாவாக ஒருமுறை மனதிற்குள் நினைத்துப்பார்த்துக் கொண்டாள். அடுத்தநாள் வழக்கம் போல் சின்னுவுக்கு அபிசேகம் நடக்கிறது கிழவியின் திருக்கரங்களால். சின்னுவின் உடம்பை வரட்டு வரட்டு என தேய்த்து அழுக்கெடுத்துக் கொண்டிருந்தாள். சின்னு.. கிழவி பாத்து தோல உரிச்சி எடுத்துப்புடாத. கிழவி.. சும்மா இருடா, இல்லாட்டி அழுக்கு போவாது” என்று சொல்லிவிட்டு, “இந்த வாரம் சந்தைக்கு நீயும் உங்கப்பாவும் போய் துணி எடுத்தாந்துருங்க” என்று சொன்னாள். “கிழவி கம்முனு இரு நீ ஒவ்வொருவாட்டியும் தண்ணீ ஊத்தியுடும் போது, இப்புடித்தான் சொல்லுற, ஆனா வாங்கியாந்து தர மாட்டிக்கிறிங்க” என்றான். “அது இல்லீடா இந்தமட்டம் உறுதியா வாங்கிடலாம், ஒனக்கு பொறந்தநாளு அடுத்த வாரம் வருதுல, அதுக்கு உங்கப்பா வாங்கிதரனு சொல்லிட்டாப்ல” என்று உறுதியளித்தாள். ஆனால் சிறுவாட்டுக் காசு விசயத்தைப் பற்றி அவள் மூச்சி விடவில்லை. அதைப் பற்றி சொன்னாள் “இதையேன் கெழவி மொதல்லையே தரல” என்று சண்டைக்கு வந்துவிடுவான் என்று கிழவிக்குத் தெரியும். கிழவி சொன்னாலும் சின்னுவுக்கு நம்பிக்கையில்லை, அதனால் இந்த முறை அவன் ஆர்வம் காட்டவில்லை. சந்தைக்குப் போகும் முதல் நாள் அப்பா அவனிடம் விசயத்தை சொன்னார். ஆம்மாவும் சொன்னாள், இப்படி அனைவரும் சொல்வதால் சின்னு அவனையறியாமல் மீண்டும் புதுத்துணி வாங்குவதில் ஆர்வம் காட்ட தொடங்கிவிட்டான். அன்று இரவு ஏனோ அவன் உற்சாகத்துக்கு அளவே இல்லை. கிழவியை காரணமின்றி கொஞ்சிக் கொண்டேயிருந்தான். அம்மா, அப்பா, கிழவியென அனைவருமே உற்சாகமாக இருந்தனர் சின்னு நினைத்தது நடக்கப்போகிறதென்று. சின்னு கிழவியை கொஞ்சிக் கொண்டேயிருந்தான். கிழவி இந்த சந்தோச்த்தில் கிழவனாரையும், தன் மகனையும் நினைத்து கண்ணீர் விட்டாள். மகன் கை நீட்டினாலும் அவனை முழுவதுமாக கிழவி வெறுக்கவில்லை. கிழவி மட்டுமல்ல எந்த அம்மாதான் வெறுப்பாள். சாப்பாடு முடிந்து கிழவியும், சின்னுவும் வெளியில் கட்டில் போட்டு படுத்துக் கொண்டனர். அன்று என்னவோ சின்னுவிற்கு தூக்கம் வரவே இல்லை. கிழவியிடம் அவனுக்கே உரிய பாணியில் பேசிக் கொண்டிருந்தான். கிழவிக்கும் மிக உற்சாகமாக இருந்தது, பேரன் தன்னிடம் இவ்வளவு நெருக்கம் காட்டுவது. “சின்னு படிச்சி பெரியாள வரோனும், பெரிய ஆபீஸ்சரா வரோனும்” என்றாள். அதற்கு சின்னு “சரி கிழவி” என்றான். இப்படி அவள் சொல்லுவதற்கெல்லாம் “சரி கிழவி”, “சரி கிழவி” என்று அவளிடம் விளையாடிக் கொண்டே பதிலளித்துக் கொண்டிருந்தான். இப்படி அவர்களின் சம்மாசனைகள் வெகுநேரம் தொடர்ந்தது. பின்னர் அவர்களையே அறியாமல் இருவரும் தூங்கிப்போயினர். காலையில் “கிழவி, கிழவி” என்று சின்னு கிழவியை எழுப்பிக் கொண்டிருந்தான். எப்பொழுதும் கிழவிதான் சின்னுவை எழுப்புவாள். இன்று சின்னு கிழவியை எழுப்பிக் கொண்டிருந்தான். மகள் மருமகன் மற்றும் பேரன் என அனைவரும் எழுப்பியும் கிழவி எழவில்லை. “அம்மா” என்று கிழவியின் மகள் கதறினாள். அதைக் கேட்டு அக்கம் பக்கத்தினரை அவர்கள் வீட்டை நோக்கி வந்தடைந்தனர். “ஆயா எந்திரி ஆயா புதுச் சட்ட எடுக்க போவனும்” என்று கண்ணீர் விட்டுக்கொண்டே கிழவியை எழுப்பிக் கொண்டிருந்தான் சின்னு.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  • Usha Ranee Avatar
    Usha Ranee - 1 year ago
    அருமையான கதை என் குழந்தை பருவத்தை நியாபகப்படுத்தியது.