logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

VIJI SAMPATH (VIJAYALAKSHMI S.K.)

சிறுகதை வரிசை எண் # 211


"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" கயிற்றுக் கட்டிலில் கிழிந்த நாரைப் போலப் படுத்துக் கிடந்த ராஜாத்தியின் முகம், கழுத்து இவற்றை மென்மையாகத் துடைத்து விட்டு அவளை மெதுவாக ஒருக்களிக்கப் படுக்க வைத்து முதுகுப் பக்கமும் துடைத்து விட்ட அந்தக் கைகளின் ஸ்பரிசம் ராசாத்தியின் மனதில் ஏதேதோ நினைவுகளைக் கிளர்ந்தெழச் செய்தது. இத்தனை பாசத்துடன் தனக்குப் பணிவிடை செய்பவர் யாரெனப் பார்க்க அவள் துடித்தாலும் அவளால் கண்ணிமைகளைப் பிரிக்க முடியவில்லை. யாரென்று கேட்க நினைத்தாலும் குரல் தொண்டையிலிருந்து எழும்பவில்லை. நடந்ததை நினைவுக்குக் கொண்டு வர அவள் முயற்சித்த போது.. அன்று காலை எப்போதும் போல அவள் நேரத்தோடு வேலைக்குக் கிளம்ப பரபரப்போடு படுக்கையிலிருந்து எழ முயற்சித்ததும், தலையணையிலிருந்து தூக்கக் கூட முடியாமல் தலை பாறாங்கல்லாகக் கனத்ததும் ஈரத்துணியை பிழிந்தாற் போல உடம்பும் கை, கால்களும் முறுக்கி,முறுக்கி வலித்ததும் மட்டுமே நினைவுக்கு வந்தது. *எனக்கு என்னாச்சு? அன்னைக்கு வேலைக்குப் போக முடியாம தலைவலியும் மேல்வலியும் பாடாப் படுத்தி எடுத்தது ஒண்டிதான் நியாபகத்துக்கு வருது. எத்தினி நாளா இப்பிடிப் படுத்துக் கெடக்கறோம்? நம்மள இப்படி ஆதரவா,அனுசரணையா கெவுனிக்கிறது யார்னே தெர்லயே!....? நமக்குத்தான் உறவுன்னு சொல்லிக்கக் கூட இங்க யாருமே இல்லையே...! சுயபச்சாத்தாபத்தில் அவள் மனம் ஏங்கித் தவித்தது. தன்னுடைய அன்புக்காக ஏங்கித் தன் காலடியையே சுற்றிச் சுற்றி வந்த உறவையும் தன் கண் முன்னால் வரக்கூடாதென்று விரட்டியடித்தது நினைவுக்கு வரக் கண்களிலிருந்து மாலை மாலையாகக் கண்ணீர் வழிந்தது. அந்தக் கண்ணீரைத் துடைத்து விட்ட கரங்களை ஆதரவாகப் பற்றிக் கொண்டாள் ராசாத்தி. கண்ணைத் திறக்க முடியாத அந்த நிலையிலும் கூட தன்னைச் சுற்றிலும் ஒரு சுகந்தமான நறுமணம் சூழ்ந்திருப்பதை நுகர முடிந்தது அவளால்...! ஓ...நானு செத்துப் போய் இப்ப சொர்க்கத்துக்கு வந்துட்டனா? அதுதான் இப்பிடி ஒரு பூ வாசமும் ..சாம்பிராணி வாசமும் வீசுதா.! நம்ம குடிசையின்னா சாக்கடை நாத்தமும்,..ஈர மொடை வீச்சமும்,கருவாட்டுக் கவிச்சு நாத்தமுமால்ல நாறிகிட்டிருக்கும். பத்தாக்கொறைக்கு இந்த சுப்பிரமணி வேற வாள்..வாள்னு கத்திகிட்டு கெடப்பானே..! அந்தச் சத்தமும் கேக்கலையே! அப்படீன்னா நாம கண்டிப்பா சொர்க்கத்துலதான் இருக்கமோ! அய்யோ பாவம் ..சுப்பிரமணி ! நாம இல்லாம அவன் ஏங்கிப் போவானே... ! நாம போடற பழைய சோத்துக்கும், பொறைக்குமே நம்ம பின்னால அலைவானே. குப்பைத் தொட்டியில .கண்ணுமுழி கூடத் தொறக்காத குட்டியாக் கெடந்தவனைத் தூக்கியாந்து பேரு வெச்சு, சோறு வெச்சு வளத்தோம். ஆனா ரத்த சம்மந்தப்பட்ட ஒறவைத் தூக்கிக் கடாசிட்டோம். இப்ப இங்க சொர்க்கத்துல நம்ம மச்சானையோ, இல்ல பொன்னி அக்காவையோ பாத்தமுன்னாக் கேப்பாங்களே..! நீ நல்லாக் கவனிச்சுக்குவேன்னுதான ஒன்னை நம்பி ஒப்படைச்சிட்டு வந்தோம் .நீயெல்லாம் ஒரு பொம்பளையா..? இத்தனக் கல்நெஞ்சுக்காரியாடி நீயின்னு கேட்டாக்க நா என்ன பதில் சொல்றது? நா அப்பிடி செஞ்சிருக்கக் கூடாதுதான்...இப்ப புரியுது. ஆனா அப்ப எம்புத்திக்கு ஒறைக்கலையே....!. நினைவலைகள் தந்த சுமையில் திரும்பவும் ஆழ்மயக்க நிலைக்குப் போய் விட்டாள் ராசாத்தி. ராசாத்தி, இளமையும், பொலிவும் பொங்கிப் பூரித்த ஓர் அழகுப் பதுமை. அவர்கள் குப்பத்திலேயே பல ஆண்கள் அவளுடைய கடைக்கண் பார்வைக்காக ஏங்கித் தவித்தார்கள். ஆனால் ஒருவரையும் தன் கால்தூசிக்குக் கூட மதிக்க மாட்டாள் ராசாத்தி காரணம். .. அந்தக் குப்பத்து ஆண்கள் எல்லோருமே தாங்கள் வாங்கும் கூலிக்கு அதிகமாகவே குடித்துவிட்டுக் கடையில் கடன் சொல்லி விட்டு வருமளவிற்கு பெருங்குடிமகன்கள். தாங்கள் பெற்ற குழந்தைக்ளுக்குக் குடிக்கப் பாலோ கஞ்சியோ இல்லாவிட்டாலும் கூடக் கவலைப்பட மாட்டார்கள் கையில் காசில்லாவிட்டால் பெஞ்சாதியைப் போட்டு அடித்து அவர்கள் கையிலிருப்பதைப் பிடுங்கிக் கொண்டு போய்க் குடித்து விட்டு பீடிப் புகையோடும் சாராய நாற்றத்தோடும் வீடு வந்து சேருவார்கள். ராசாத்தியின் அப்பனும் அவர்களில் ஒருவன். அவனோடு போராடிப் போராடியே ராசாத்தியின் அம்மா மேலே போய்ச் சேர்ந்தாள். அவள் போனதும் பக்கத்திலிருந்த அடுக்குமாடி வீடுகளில் வீட்டு வேலை செய்து அப்பனுக்கும் சேர்த்து சோறு போட்டு வந்தாள் ராசாத்தி. அவளிடமும் ஒரு ரூபாய் கூட விட்டு வைக்காமல் பிடுங்கிக் கொண்டு போய்க் குடித்து விட்டு வந்து விடுவான்.அப்படி வீட்டு வேலைக்குப் போகும் போது பழக்கமானவள்தான் பொன்னி. அதே குப்பத்துவாசிதான். ஒரு நாள் ஆட்டோ ட்ரைவரான தன் கணவனை ராசாத்திக்கு அறிமுகம் செய்து வைத்து விட்டு அவனுடைய உயர்ந்த குணங்களைப் பாராட்டிப் பேசிய அந்தத் தருணம்தான்.. “கல்யாணம்னு செஞ்சுகிட்டா பொன்னியக்கா புருஷனாட்டமா, குடிக்காம இருக்கறவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்..இல்லைன்னா கால முச்சூடும் கன்னியாவே காலத்தைக் கழிச்சிரணும்”கிற தீர்க்கமான முடிவுக்கு ராசாத்தியைக் கொண்டு வந்து நிறுத்தியது. ஆனால்... “அம்பதாயிரம் ரூபாய ஒரே தவணையாகத் தருகிறேன். உன்னோட குடிசைய எங்கிட்ட அடமானமா வெச்சிருக்கியே. அந்தப் பத்திரத்தைக் கூடத் திருப்பித் தந்துர்றேன். அதுக்குப் பதிலா ராசாத்தியை எனக்குக் கட்டிக் குடுத்துரு” என்று சீமைச் சரக்கை ஊற்றிக் கொடுத்து விட்டு..அந்தக் குப்பத்து நாட்டாமை ஆசை காட்ட, ஐம்பது வயதானவனுக்கு மூன்றாம் தாரமாய்க் கேட்கிறானே என்பது கூட உறைக்காமல் பணத்தைப் பார்த்ததும் ராசாத்தியின் அப்பன் குரங்கைப் போலப் பல்லிளித்து விட்டு நாட்டாமை சொன்னதுக்கெல்லாம் ஒப்புதல் கொடுத்து விட்டான். ஆனால் இந்த விஷயம் கல்யாண நாள் வரைக்கும் யாருக்கும், குறிப்பாக ராசாத்திக்குத் தெரியக்கூடாது ..அவளுக்கே தெரியாமல் அவளுடைய ரவிக்கை ஒன்றை அளவுக்காகக் கொண்டு வந்து தரும்படியும் “மாப்பிள்ளை” சொல்லி அனுப்பி இருந்தான். ஆனால் சீமைச்சரக்கு அடித்த போதையில் தன்னிலை மறந்து, “இன்னும் பதினைஞ்சு நாள்ல உனக்கும் தலைவருக்கும் கல்யாணம். பரிசமா அம்..பதா..யிரம் ரூவா தரேன்னிருக்காரு. உனக்கு வேண்டிய நக,நட்டு, பொடவ எல்லாம் அவரே பாத்து வாங்குறேன்னாரு. ரவிக்கை தெக்கிறதுக்கு ஒன்னோட அளவு ரவிக்க மட்டும் ஒண்ணு வேணுமாம் புள்ளே” சகலத்தையும் உளறி வெக்க..உஷாரானாள் ராசாத்தி. அப்பன் சொன்னதுக்கெல்லாம் “சரி..சரி..” என்று தலையாட்டியவள், இரவு முழுக்க யோசித்து ஒரு முடிவெடுத்தாள். மறுநாள் காலை, அதை செயல்படுத்தத் துவங்கினாள். சரியாக தலைவர் சொன்ன தேதிக்கு ஒரு நாள் முன்னதாக மாலையும் கழுத்துமாகக் கழுத்தில் புது மஞ்சள் சரட்டில் தங்கத்தாலி தொங்க மாப்பிள்ளைக் கோலத்தில் இருந்த ஆறுமுகத்துடன் குடிசைக்கு வந்தவளைப் பார்த்து எரிமலையாகக் கொந்தளித்தான் ராசாத்தியின் அப்பன். தன் மகளை ஏமாற்றிக் கல்யாணம் செய்து கொண்டதாக ஆறுமுகத்தை அடிக்கப் போனவனைத் தடுத்து நிறுத்திய ராசாத்தி.. “எம் புருசன் மேலக் கைய வெச்சே தெரியும் சேதி...நீ பாத்த மாப்பிள்ளைய விட இவுரு எதுலயும் கொறஞ்சவரில்ல. நானாத்தான் விருப்பபட்டு அவரைக் கட்டாயப்படுத்தித் தாலியக் கட்டிகிட்டேன். இப்பக் கூட ஒங்கிட்ட ஆசீர்வாதம் வாங்க இங்க வர்ல. எங்கம்மா படத்த எடுத்துகிட்டு அப்பிடியே ஒங்கிட்ட எனக்குக் கல்யாணமாயிடுச்சுங்கிற சேதியச் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்” மிடுக்காகச் சொல்லி விட்டுத் தான் வந்த வேலையை முடித்துக் கொண்டு தன் கணவன் கையோடு கை கோர்த்துக் கொண்டு பெருமையுடன் நடந்தவளை அக்கம்பக்கத்து குடிசைக்காரர்களெல்லாம் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். ஆறுமுகம் யாரென்று சொல்லவில்லையே ! மூன்று மாதங்களுக்கு முன்னால் விஷக்காய்ச்சலில் இறந்து போன பொன்னியின் கணவன்தான் ஆறுமுகம். அவனைத்தான் கட்டாயப்படுத்திக் கல்யாணம் செய்து கொண்டிருந்தாள் ராசாத்தி. ஐந்து வயதுப் பெண் குழந்தை அமுதாவையும் தன்னையும் நிர்க்கதியாக விட்டு விட்டு மனைவி இறந்து போன துக்கத்தில் இருந்த ஆறுமுகத்திடம், ஒரு வாரமாகப் பேசிப் பேசி.. “இருவரின் கஷ்டங்களும் இந்த ஒரு கல்யாணத்தில் தீரும் என்றால்..ஏன் நாமிருவரும் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது” என்று அவனிடம் வாதாடி அவன் சம்மதத்தைப் பெறுவதற்குள் நொந்து நூலாகி விட்டாள் ராசாத்தி. அப்படியும் அவன் முழுமனதாகச் சம்மதிக்காத நிலையில் பொன்னியின் படத்திற்கு முன்னால் பூப் போட்டுப் பார்த்து... சாதகமாகப் பூ கிடைத்த பின்பே அவன் சம்மதித்தான். அதற்குப் பிறகு கொஞ்சமும் தாமதிக்கவில்லை ராசாத்தி. பொன்னியின் தாலி,கல்யாணப் புடவையே தனக்குப் போதும்..அக்காவின் ஆசீர்வாதமாக அதையே ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்லி ஆறுமுகத்தின் இதயத்தில் இடம் பிடித்து, அவனுடைய இல்லத்தரசியாகி .பொன்னிக்குப் பிறந்த அமுதாவுக்கும்..அவளுக்குப் பிறந்த செல்விக்கும் ஓர் அருமையான அன்னையாகி வருடங்கள் பத்து ஓடி விட்டன. நல்லறமாகப் போய்க் கொண்டிருந்த அவர்களின் இல்லறம் திடீரென ஒரு நாள் துயரமான நிலையைச் சந்தித்தது. ஆறுமுகத்துக்கு மிகப்பெரிய மாரடைப்பு ஏற்பட.. மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முன்பே ராசாத்தியின் மடியில் தலை வைத்தபடியே இரு பெண்குழந்தைகளை அவள் கையில் ஒப்படைத்து விட்டு உயிரை விட்டான்.கணவன் இறந்த துக்கத்தில் புண்ணாகிக் கிடந்த அவள் நெஞ்சத்தை மேலும் ரணமாக்கியது அக்கம் பக்கத்துக் குடிசைப் பெண்களின் அனுதாப முலாம் பூசிய சாடைப் பேச்சுகள். “ஏ புள்ள ராசாத்தி...நீ இப்பிடியே மூலையில உக்காந்து மூக்கைச் சிந்திகிட்டே இருந்தா உம் பொழப்பு நாறிடும். ஆமா..உம் மூத்தா புள்ள அமுதாவுக்கு வயசு பதினஞ்சாயிடுச்சே. இன்னுமா அவளுக்கு சடங்கு பண்ண நேரம் வரல. ஒரு வேளை மூத்தா மவதான. எதுக்கு செலவு பண்றதுன்னு யாருக்கும் சொல்லாம மறைச்சிட்டியோ” என்று மறைமுகத் தாக்குதல் தொடுக்க..அவளுக்கே அப்போதுதான் புத்தியில் உறைத்தது. டாக்டரிடம் அழைத்துப் போய் ஆலோசனை கேட்க வேண்டும் என்று நினைத்தாலும் ஏதேதோ ப்ரச்னைகளில் நாட்கள் தள்ளிப் போக அடுத்த இடி வந்து இறங்கியது அவள் தலையில். அமுதா எப்போது பார்த்தாலும் பள்ளியில் ஆண்பிள்ளைகளோடுதான் விளையாடுகிறாள் என்று பள்ளி நிர்வாகமும், அவர்களோடுதான் வெளியில் சுற்றுகிறாள் என்று செல்வியும், அக்கம் பக்கத்தவர்களும் புகார் சொல்ல..அதற்கேற்றாற்போல அமுதாவும் ஆறுமுகத்தின் பேண்ட், சட்டைகளை அணிந்து கொள்ள ஆரம்பித்தாள். அக்கம்பக்கத்தவர்களின் கேலிச் சிரிப்பு,.ராசாத்தியின் அடி, திட்டுகள் எதற்கும் அமுதாவின் விசித்திரப் போக்கு மாறவே இல்லை. தான் வேலை செய்யும் கல்லூரிப் பேராசிரியர் வீட்டில் ஒருநாள் அமுதாவைப் பற்றிப் பேசி ராசாத்தி கண்கலங்க அந்தப் பேராசிரியர் சொன்ன தகவல் ராசாத்தியை நிலை குலைய வைத்து விட்டது. “உங்க பொண்ணுக்கு மரபணுக்கோளாறு ஏற்பட்டிருக்கும்னு நினைக்கிறேன் ராசாத்திம்மா. எங்க கல்லூரியில படிக்கிற ஒரு மாணவனுக்குக் கூட இந்த மாதிரிதான் ஆச்சு. எதுக்கும் நீங்க டாக்டரிடம் கூட்டிப் போங்க” .. தன் விதியை நொந்த வண்ணம் வீடு திரும்பிய ராசாத்தியை... “அம்மா.... அக்கா நம்மள விட்டுட்டு ஏதோ வேற ஊருக்குப் போறாளாம்.இனிமே இங்க வரமாட்டாளாம். அம்மாவ கவனமாப் பாத்துக்கோனு சொல்லிட்டு, உம் போட்டோக்கு முத்தம் குடுத்துட்டுப் போயிட்டாம்மா! போம்மா நேத்து நீ அக்காவ ரொம்பத்தான் அடிச்சிட்டே” அழுத வண்ணம் செல்வி குற்றம் சாட்ட.. ”அடக் கடவுளே...இத்தினி நாளா கஸ்டப்பட்டதெல்லாம் இப்பிடி வீணாப் போகத்தானா...? மாமோய்..நீயும் பொன்னியக்காவும் இந்தக் கோராமையப் பாத்துகிட்டு சும்மாத்தான இருக்கீங்க? ஏதாச்சும் பண்ணக் கூடாதா” குலுங்கிக் குலுங்கி அழுதாள். “ராசாத்தி...அமுதா இப்பிடி வூட்ட வுட்டுப் போனது கூட ஒரு நல்லதுக்குன்னுதான்னு நெனச்சிக்கோ. நாங்களே உங்கிட்ட சொல்லணும்னு நெனச்சிருந்தோம். அமுதா கொஞ்சம் கொஞ்சமா ஆம்பிளையாகிட்டு வர்றாப்புல இருக்கு. இந்த மாதிரி இருக்கறவங்க எல்லாம் பம்பாய்க்குப் போனா எப்பிடியும் பொளச்சுக்குவாங்களாம். நீ எதுக்கும் கவலப்படாத. இவங்கெல்லாம் வீணாப் போனப் பொறப்புங்க. யாருக்கும் உபயோகமில்லாதவங்க. கடவுளால சபிக்கப்பட்டவங்கதான் இப்பிடி ஆவாங்களாம். இவங்களால மத்தவங்களுக்குத்தான் பிரச்சினை. போனவ போனவளாவே இருக்கட்டும். செல்விய நெனச்சு ஆறுதல் பட்டுக்கோ. அமுதா இங்க இருந்தா செல்வியக் கரையேத்தறது கஸ்டம்.அமுதாவப் பத்தித் தெரிஞ்சா செல்விய எவன் கட்டிக்குவான்” பால் போலிருந்த ராசாத்தியின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சைக் கலந்தார்கள். சுயநலம் மேலிட.... “அவளோட விதி இப்பிடிதான்னா நாம என்ன செய்ய முடியும்” மனதைத் தேற்றிக் கொண்ட ராசாத்தி செல்விக்காக வாழலானாள். வருடங்கள் உருண்டோடின. வேலைக்காகவோ, கடைத் தெருவுக்கோ எங்கு சென்றாலும் தன்னை யாரோ கண்கொட்டாமல் பார்ப்பது போலவும், “அம்மோய்” என்று ராகமாகக் கூப்பிடுவது போலவும் ஓர் உணர்வு அவளுக்குத் தோன்றும். வெறும் மனப்பிரமை என்று இருந்தவள் முன்னால் ஒரு நாள் “அம்மோய்” என்று அழைத்தவாறு திருநம்பியாக...அமுதனாக மாறிய நிலையில் அமுதா வந்து நிற்க...அந்த நாள் செல்வியைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்திருந்த நாளாக அமைந்து விட்டதுதான் சோகம். வந்தவர்களுக்கு சகல விஷயங்களும் தெரிந்து விட..சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறி விட்டார்கள். வெறி கொண்டவளைப் போல அமுதனை அடித்துத் துவைத்துத், துரத்தி விட்டாள் ராசாத்தி அத்தனை அடி வாங்கியும் “அம்மோய்,அம்மோய்” என்று அவள் காலடியில் விழுந்தவனை உதைத்து வெளியே தள்ளிக் கதவையும் சாத்தி விட்டாள். இந்த விஷயம் வெளியில் தெரிந்து செல்விக்கு எந்த வரனுமே அமையவில்லை. ஒரு நாள் தன்னுடன் படித்த மாணவனைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டு கண்காணாத இடத்திற்குப் போய் வாழ்ந்து கொள்கிறேன். இங்கிருந்தால் அமுதாவினால் மனஉளைச்சல் அதிகமாகிறது என்று கடிதம் எழுதி வைத்து விட்டு செல்வி காணாமல் போய் விட...வாழ்க்கையின் கடைசி பிடிப்பையும் இழந்து நொந்து போயிருந்தவளிடம் திரும்பவும் வந்தான் அமுதன். “அம்மோய்...என்னை மன்னிச்சுரும்மோய்” இனிமே நான் உங்கூடவே இருந்து உன்னைக் கவனிச்சுக்கிறேன். என்னைத் தொரத்தி வுடாதம்மா..இந்த சுப்பிரமணியாட்டம் உங்காலடியிலயே கெடக்கிறேம்மா” அவள் பாதங்களைப் பிடித்துக் கொண்டு கண்ணீருடன் கெஞ்ச..அவனுடைய உள்ளார்ந்த பாசத்தையும், கள்ளமில்லா அன்பையும். புரிந்து கொள்ளாத ராசாத்தி. “சீச்சீ..என்னைத் தொடாத..நீயெல்லாம் சபிக்கப்பட்ட பொறப்பாம்..எல்லோரும் சொல்றாங்க” அருவருப்புடன் கால்களை உதறி, அவனை வாய்க்கு வந்தபடி எல்லாம் திட்டித் தீர்த்தாள். “பொறந்த வீட்டுக்கு நீ செஞ்ச நல்லதெல்லாம் போதும். எங்கண்ணு முன்னால வராம எங்கனாச்சும் தொலைஞ்சு போ” அவனைத் துரத்தி விட்டாள். உடம்பும்,மனசும் ஓய்ந்து போக.. ஏதோ இருப்பதைத் தானும் உண்டு, சுப்பிரமணிக்கும் போட்டாள்.அம்மா தன்னை இனிமேல் ஏற்றுக்கொள்ள மாட்டாள் அவள் சொன்னது போல எங்காவது கண்காணாத இடத்திற்குச் சென்று விடலாமென நினைத்துத் தான் ஓட்டிக் கொண்டிருந்த ஆட்டோவை ஓனரிடம் ஒப்படைக்கப் பையும் கையுமாகக் கிளம்பியவனைத் துரத்திக் கொண்டு வந்தது சுப்பிரமணி. சின்னஞ்சிறு குட்டியாக இருந்த போதிருந்தே அதன் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தான் அமுதன். “டேய்..சுப்பிரமணி அம்மாவ விட்டுட்டு இங்க எதுக்கு வந்தே..? நான் ஊரை விட்டே போறேன்டா. நீ அம்மாவப் பத்திரமாப் பாத்துக்கோ” அதன் தலையை வருடிக் கண்ணீருடன் கூற..சுப்பிரமணியின் கண்களிலும் கண்ணீர். அது விடாமல் குறைத்துக் கொண்டே அமுதனின் பேண்ட்டைக் கவ்விப் பிடித்து இழுத்துக் கொண்டே ராசாத்தியின் குடிசை வரை சென்றது. ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்ட அமுதன் கதவைத் திறந்து உள்ளே போகக் கடுமையான காய்ச்சலில் கண்கள் மேலே செருகி ஆபத்தான நிலையில் கிடந்தாள் ராசாத்தி. “என்ன வுட்டுட்டுப் போயிடாத அம்மோய்” உடலும்,உள்ளமும் பதற .மருத்துவமனையில் சேர்த்து அமுதன் வைத்தியம் செய்ததில் உயிர் பிழைத்துக் கொண்டாள் ராசாத்தி. ஆனால் அவளுடைய உடல், மன ஆரோக்கியம் மிகவும் சீர்கெட்டு இருப்பதால் அவள் தேற பல மாதங்கள் ஆகலாம். ஆரோக்கியமான உணவும், சுகாதாரமான சுற்றுப்புறமும் அவசியம் என்று டாக்டர் கூற அம்மாவையும், சுப்பிரமணியையும் தன்னுடைய வீட்டுக்கே அழைத்து வந்து விட்டான் அமுதன். அவன் விரும்பியபடியே இந்த ஒரு மாதமாக அவன் தாய்க்குப் பணிவிடை செய்வதில் அகமகிழ்ந்தான். சுயவுணர்வு வந்தபின் ராசாத்தி மனம் திருந்தி தன்னுடைய மெய்யான அன்பைப் புரிந்து கொண்டு.. “கடவுளின் படைப்பில் சபிக்கப்பட்டவர்கள் என்று யாருமே இல்லை..எல்லா உயிர்களும் சமம்.” அமுதா அமுதனாக மாறியதற்கு மரபணுக்கோளாறு தவிர வேறெந்தக் காரணமுமில்லை என்பதை உணர்ந்து அம்மா தன்னை மகனாக ஏற்றுக் கொள்ளும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று அமுதன் உறுதியாக நம்புகிறான். அவன் நம்பிக்கை விரைவில் கைகூட நாமும் இறைவனை வேண்டுவோம்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.