மாதேஷ். மு
சிறுகதை வரிசை எண்
# 21
ஆரணியஇராமன்
1.
அவசரமாக கடிகாரத்தைப் பார்த்தபடி, “சொப்னா! நேரமாச்சு, தோசை போதும்”, என்றபடி, கைக்கழுவச் சென்றான் மதன். “இந்தாங்க! ரெண்டு தோசைதால சாப்பிட்டீங்க, இவ்ளோ பெரிய தொப்பைக்கு இத்துணூண்டு எப்படி பத்தும்?” என்று புருவ தூக்கலுடன், நமுட்டுச் சிரிப்பில் மதனிடம் கேட்டாள். “ஏய் நீ அடி வாங்கப் போற!” என்றபடி அவசர அவசரமாக ஷூ போட்டுக்கொண்டிருந்தான்.
அடுப்பை அமத்திவிட்டு மதனிடம் சென்று, “ஏங்க நேத்து நைட் ஒரு விஷயம் சொன்னேனே, அத பத்தி கொஞ்சம் யோசிச்சு பாக்கலாம்ல என கொஞ்சலும் கெஞ்சலுமாக நின்ற சொப்னாவைப் பார்த்து “நேத்து கேட்டதுக்கு நேத்தே பதில் சொல்லிட்டேன். எனக்கு மூணு ப்ராஜெக்ட் பெண்டிங் இருக்கு. அதுல ஒண்ணுக்கு இன்னைக்கி தான் லாஸ்ட் டேட். இன்னும் அத பிராஸஸ் பண்ணி கூட முடிக்கல, இப்படி இருக்குற ஸிட்டுவேஷன்ல, நீ பாட்டுக்கு வந்து வர்ற சனிக்கிழமை, உன் பிரண்டோட கலியாணம், ஜோடியா பாப்பாவோட போணும்னா எப்புடி? நான் சொல்ற மாறி கேளு. உன் அக்காவ கூட்டினு கலியாணத்துக்கு போ. ஏதாவது சொல்லி உன் பிரண்ட சமாளி. புரிஞ்சுக்கடி பட்டிக்காடு!” என்றபடி வேகமாக காரில் ஏறி ஆபிசுக்கு புறப்பட்டான் மதன்.
அமைதியாக திரும்ப சுவரைப் பார்த்து, “இதே உங்க பிரண்ட் கலியாணம்னா போயிருப்பீங்க.. ம்ஹும்!” என்றபடி முணுமுணுத்துக்கொண்டு வேலையைப் பார்க்க துவங்கினாள் சொப்னா.
2.
சிகப்பு கலர் மாருதி காரை பார்க் செய்துவிட்டு, லிப்ட் ஏறி தன்னுடைய கேபினுக்குச் சென்றான் மதன். “மதன், இன்னைக்கு ஈவினிங் ஓட டைம் முடியுது, நியாபகம் இருக்குல, எப்படியாச்சும் முடிச்சுற்றா” என்றபடி பக்கத்து கேபினில் அமர்ந்தாள் ரதி.
ம்ம்! என்றபடி கூனி கீபோர்ட் பொத்தான்களுடன் கபடி ஆடத் தொடங்கினான். எவனுக்கு காத்திருக்கும் கடிகாரம்! மதனைப் போல வேகமாக அது தன்னுடைய சுழல் வேலையை செய்துக்கொண்டிருந்தது.
“மதன், டைம் ஆச்சு, வா லன்ச் முடிச்சுட்டு பண்ணலாம்” என்றபடி கேபினை விட்டு எழுந்தாள். பதில் வரவில்லை. “டேய், ரொம்ப பண்ற டா! மணி ரெண்டாச்சு, ஒன்பது மணிக்கு வந்த”, என்று சலித்தாள் ரதி. பதில் வந்தது… கீபோர்ட் பொத்தான் சத்தமாக… “போடா டேய்! என்றபடி சென்று விட்டாள்.
சிறிய முள் நான்கை தொட்டது. அப்பாடா! என்றபடி, “ரதி, முடிச்சாச்சு, சப்மிட் பண்ணிரு, நா போய் சாப்பிட்டு வர்றேன்” என்றபடி கேண்டீனுக்குச் சென்றான் மதன்.
பிளேட்டை வாங்கிவிட்டு கேண்டின் டேபிளில் அமர்ந்து தன் போனை எடுக்க, பட்டிக்காடிடமிருந்து பத்து மெசேஜ்… இருந்த டென்சனில் சட்டென்று அதை வலப்புறமாக தள்ளிவிட்டான்.
ட்ரிங்! டரிங்!
“ஏய் ரதி! சொல்லிட்டு தால வந்தேன், என்ன?” என்றான். “மேனேஜர் உடனே கூப்புடுறாரு” என கட் பண்ணினாள். வாங்கிய பிளேட்டை ஒரு வாய் கூட சாப்பிடாமல் கேன்டீனிடம் தற்காலிகமாக தந்துவிட்டு கேபின் நோக்கி விரைந்தான்.
3.
“சார்”, “எஸ், உள்ள வாங்க மதன்”. மதன் வந்து நின்றான். “ப்ராஜெக்ட் முடிச்சாச்சா?”, “முடிச்சாச்சு”, “ப்ரூப் பாத்தாச்சா?”, “பாத்தாச்சு”, “அப்றம் இது என்ன? நா சொல்லவா எர்றர் மிஸ்டர் மன்மதன்”. உதடை மடித்து, முளித்து பாவமாக சொன்னான் “சாரி சார்”!
“போயி குப்பையில போடுங்க உங்க சாரிய, உங்க கிட்ட என்ன சொன்னேன்? ஈவினிங்குள்ள முடிக்கனும்ணு சொன்னேன்ல, இப்ப பாருங்க எர்றர். இதை நா ரன் பண்ணாம அனுபிச்சு வச்சிருந்தா பேச்சு வாங்குறது யாரு? நீங்களா நானா? கஞ்சி போட்ட சட்டைய போட்டுகிட்டு, மினுக்கிகிட்டு, கேன்டீன்ல பொண்ணுங்களோட முப்பத்தி ரெண்டும் தெரியுற மாதிரி பேச வேண்டியது. சனிக்கிழமை இராத்திரி ஆனா போதும். எல்லாரையும் கூட்டிகிட்டு ஊர் சுத்த வேண்டியது; ஸ்டோரி போட வேண்டியது; இதெல்லாம் பண்ணலாம். வேலைல சரியா இருக்கிறவங்க பண்ணலாம்? என்ன மொறைக்குற!! நீ பின் பாக்கெட்ல வச்சிருக்க கூலிங் கிளாஸ்ல இருந்து வெளிய நிக்குற மாருதி வரைக்கும் எல்லாம் கம்பெனியோடது. அதுக்கு ஒழுங்கா வேல பாக்குறியா நீ? இப்ப கொடுத்த நேரத்துல ப்ராஜெக்ட் தராததுக்கு எனக்கு மேல இருக்குறவன் என்னைய விட கேவலமா என்னைய கேப்பான். என்ன பதில் சொல்ல?”
அமைதியாக தலை குனிந்தபடி நின்றான் மதன்.
“போங்க மதன், போயி இந்த தடவையாச்சும் வேலைய ஒழுங்கா பண்ணுங்க, முடிச்சுட்டு வீட்டுக்கு போங்க”, மெதுவாக நடந்து கதவை தள்ளி, கேபினுக்கு வந்தான். மீண்டும் பொத்தான் ஆட்டம் தொடங்கியது. சிறிது நேரம் கழித்து எதுவும் சொல்லாமல் மெதுவாக ரதி அருகே வந்து, காபியை வைத்துவிட்டு சென்றுவிட்டாள்.
4.
“ரதி, மணி பத்தாச்சு, தப்பு என்னோடது, நா இருக்கேன், எல்லார மாறியும் நீ கெளம்பு, எதுக்காக எனக்காக உக்காந்திருக்க?”, பதில் வரவில்லை. ரதியின் கண்களோ விண்டோ வழியாக மதனின் கண்களை பார்க்க, மதனின் கண்களோ விண்டோஸ் 11ஐயே பார்த்துக்கொண்டிருத்தது.
அப்பாடா! ஒரு வழியா முடிஞ்சு, என நினைத்தபடி இருவரும் காரில் தங்கள் வீட்டிற்கு செல்ல தொடங்கினர்.
செல்லும் வழியில் மேனஜரின் இனிய சொற்கள் கண் முன்னே வந்துக்கொண்டிருக்க, சட்டென்று ஒரு சேர் ஆட்டோக்காரன் உள்ளே நுழைய, முதுகுத்தண்டில் உள்ள மிருக குணம், மூளைக்கு ஏறி, காட்டுத்தனமாக கத்திவிட்டான்.
சரியான எரிச்சலுடன் வீட்டுக்கு வந்து, ஷுவை கழற்றி எறிந்துவிட்டு, உள்ளே வந்து தட்டில் இட்லியை வைத்தாள். அதனை பிய்த்து வாயில் வைக்கும் சமயத்தில் சொப்னா ஆரம்பித்துவிட்டாள்.
“எனக்காக அப்படி ஏதாச்சும் ஒன்னாச்சும் பண்ணிருக்கீங்களா? நா ஆசைப்பட்டு கேட்ட கலியாணத்துக்கு கூட வரமாட்றீங்க! போங்கங்க..”, “சொப்னா நா செம கடுப்புல இருக்கே விட்ரு”, “உங்களுக்கு எப்பதா கடுப்பு இல்ல ம்ஹும்…”, “ஏய்! நேரம் இல்லடீ நா என்ன பண்ண…” எரிச்சலுடன் பிய்த்த இட்லியை தொப்பென தட்டில் போட்டான்.
“ஆமா! சனிக்கிழமை ரதி கூட ஊர் சுத்த மட்டும் நேரம் இருக்கு, எங்கூட கலியாணத்துக்கு வர்ற நேரம் இல்ல, அப்படித்தான?”
பளார்!
“தட்டில் இருந்த புதினா சட்னி, சொப்னாவின் கண்ணத்தில் இருந்தது. மறு கண் சிவந்து வியர்த்துக்கொண்டிருந்தது.
“மெதுவாக எழுந்து, இரண்டடி பின்னால் சென்று கண்களை துடைத்துக்கொண்டு, “ஒனக்கு மூணு வேள ஆக்கி போடவும், முதுகு தேச்சு விடவும், முந்தி விரிக்கவும் தான் என்ன கட்டி கூட்டிக்கினு போனியா?” என்றபடி பாப்பாவை தூக்கிக்கொண்டு சென்றுவிட்டாள்.
5.
கற்சிலையைப் போல சிறிது நேரம் அசையாமல் அமர்ந்திருந்தான். பின், சொப்னா! சொப்னா! அடியே சொப்பனசுந்தரி! இருளில் பதில் வரவில்லை. மனம் பதறியது. படபடவென எழுந்தான். வாசற்கதவைத் தாண்டி வெளியே வந்து எட்டிப்பார்த்தான். எவளும் இல்லை. பட்டிக்காடுக்கு போன் செய்தான். வீணை இசை ரிங்டோன் வீட்டினுள் இருந்து கேட்டது. மெதுவாக கண் சிமிட்டினான். பதட்டம் இன்னும் தலைக்கு ஏறவில்லை. அதற்குள் அலைபேசி சிணுங்கியது. பட்டிக்காட்டின் அக்கா, சட்டென எடுத்தான். “சண்ட போட்டீங்களா!”, “ஆமா மதினி, கோச்சிட்டு அங்க வந்தாளா?” “அலைச்சல்ல படுத்துட்டா, நீங்க போயி தூங்குங்க, நாளைக்கு ஆபிஸ் போயிட்டு வரைல உங்க பொண்டாட்டி, உங்க வீட்ல இருப்பா” என்றபடி துண்டித்தாள்.
கதவைத் திறந்து மெதுவாய் வீட்டினுள்ளே வந்தமர்ந்தான். ஏதோ ஓர் மயான அமைதி. நூலகம் போலிருந்தது வீடு. மின்விசிறி சுழலும் சத்தம் மட்டுமே தான் இருக்கிறேன் என்பதை காட்டிக்கொண்டிருந்தது. எல்லாம் இருந்தும் ஏதோ ஒரு வெறுமை. அதனை சரியாக உணர முடியாமல் திண்டாடினான்.
அறைக்குள்ளே சென்று பொத்தி படுத்தான். ஏசியை குறைத்து வைத்தான். நடுங்கும் குளிரிலும் கூட நாசியின் வெப்பத்தாக்கம் தலை வரை கணத்தது. உருண்டான்; பிரண்டான்; நினைவுகள் மெல்ல வருடத் தொடங்கின.
அவள் இல்லாத அறையில், அவள் ஸ்பரிசத்தை தீண்டமுடியாத இரவை அவனால் கடக்க முடியவில்லை. எழுந்தான்; மொட்டைமாடிக்கு சென்றான்; இரத்தத்தை சுண்டும் சந்திரனை காணவில்லை; அவனும் கோவித்துக்கொண்டு ஓடிவிட்டான் போலும்.
அவன் நின்று கொண்டிருந்த அதே இடத்தில் நேற்று இரவோ, சுந்தரி பின்னால் நின்று இருக அணைத்து, இடப்பக்க கழுத்தில் இதமாக இதழ்பதித்த தருணம். ஆனால் இன்றோ, அவள் இல்லை, அவள் நினைவுதான் மதனை சுட்டது.
முன்பெல்லாம் அருகில் சுந்தரி இருப்பதால், சொப்பனத்தில் எவள் எவளோ வருவர். இப்போது சொப்பணசுந்தரியே இல்லாததால் சொப்பணமே வரவில்லை போலும்.
“அடிச்சா, போயிருவாளா! ஆபிசு டென்ஷன்.. ஏதோ ஒரு தடவ, கோவத்துல கை வச்சுட்டேன். அதுக்கு… இதுதான் பட்டிக்காடுக்கு, அவ பட்டிக்காடு கத்துக்கொடுத்த லட்சணமா? ஏன்டி, எனக்கு ஆபிசுல எவ்ளோ டென்ஷன் இருக்கும்னு உனக்கு என்னடி தெரியும்? மூணு வேள அடுப்பங்கறைக்குள்ள இருக்குற ஒனக்கு எப்படி தெரியும்? என்ன சொன்ன, மூணு வேள சோத்துக்குதான் நா உன்ன வச்சிருக்கேனா? அப்படியாடி பாத்தேன். ஐடில வேல பாக்குற நா என்ன மயிருக்குடி கெங்குவார்பட்டில இருக்குற உன்ன கட்டிகிட சம்மதிச்சேன்? ஏதோ ஒன்னு உன்ட இருந்துச்சு. அதெல்லாம் புரிஞ்சா நீ என்ன விட்டு போயிருக்க மாட்ட? ஏன்டி விட்டுட்டு போன? எனக்கும் ரதிக்கும் உள்ள இருக்குறது உனக்குலா புரியாதுடி? என்ன லூசு மாறி தனியா சுவர் கூட பேச விட்டுட்டேல” என்றபடி பிதற்றிக்கொண்டே இருந்தான். கோபத்தில் பல்லை நறநறவென கடித்தான். ஆனால் கண்கள் கலங்கி நீர் வடிந்துக்கொண்டே இருந்தது.
6.
மணி ஒன்று… இரண்டு… முள் சுழன்றுக்கொண்டே இருந்தது. கண்கள்தான் சொக்கவில்லை. ஒருவேளை தலையணை ஈரமானதுதான் காரணமோ என்னவோ? எப்பொழுதும் அவள் நீண்ட மயிர் சாயும் தலையணையோ, இன்று மதனின் கை இடுக்கில். ஏக்கத்தில் அதை கட்டிப்பிடித்து ஒருவழியாக அவனை அறியாமல் மதனுக்கு சாந்தம் கிட்டியது.
ஆரணியத்தில் இராமனை வாட்டிய இராப்பொழுது, மதனை ஒருவழியாக உலுக்கி விட்டு கடந்து சென்றது. ஆதித்தன் உதித்துவிட்டான்.
டபடபவென சத்தம், சட்டென கண்கள் விழித்தான் மதன். படபடவென ஓடி அடுப்பங்கரைக்கு வந்தான். “அடியேய்! நீ எங்கடி வந்த?” அடுப்பை அமத்திவிட்டு காபியை பக்கத்தில் வைத்துவிட்டு கண்டுகொள்ளாமல் தன் அடுப்படி ராஜ்ஜியத்தை தொடர்ந்தாள். “உனக்கு ஒன்னு பத்தல போல, இன்னும் ரெண்டு கொடுத்திருக்கணும்”, “ஆன்ன்!! அடிப்பீங்க.. அடிப்பீங்க..!” புருவத்தை தூக்கி பாத்துவிட்டு வேலையைத் தொடர்ந்தாள். “காபிய குடிச்சுட்டு போயி குளிச்சிட்டு வாங்க, நேத்து ரொம்ப அழுதுருப்பீங்க போல, கண்ணெல்லாம் சுருங்கி போயி கெடக்கு” என்றாள் அதே நமுட்டுச் சிரிப்புடன். “சீச்சீ!! இல்லையே, நானா…!”, மெல்லிய புன்முறுவலுடன் “அதுலாம் இருக்கட்டும், எப்ப பெங்களூரூ போறோம்?” என்றாள். “பொம்பள புத்தி! வேற என்ன பண்ண, சனிக்கிழமை போலாம்”. “அப்ப ரதியோட ஊர்சுற்ற… வேணாமா…”
“இந்த மன்மதனுக்கு ரதிலாம் வேணாம். சொப்பன சுந்தரியே போதும்”.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்