Akila kannan
சிறுகதை வரிசை எண்
# 22
ஆரம்பப் புள்ளி
சூரியக் கதிர்கள் குறைந்து கொண்டிருந்த அழகான மாலைப்பொழுது. காற்று சற்று அதிவேகமாக வீச, அங்கிருந்த மரங்கள் கொஞ்சம் வேகமாக ஆடியது. அந்த மரத்திலிருந்த கிளைகள் ஒடிந்து தன் மேல் விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் அந்தச் சாலையில் சென்று கொண்டிருந்த மக்கள் மரத்திலிருந்து சற்று விலகி நடந்தனர்.
அந்த மரத்தை ஒட்டி, "ட்டூர்... ட்டூர்..." என்று சத்தம் எழுப்பிக் கொண்டு வண்டி வேகவேகமாக ஓடி கொண்டிருந்தது. செல்லும் வண்டிகள் மீது மரத்தின் கிளை விழுந்து விடுமோ, என்ற ஐயம் அனைவருக்கும் இருக்க, அந்த மரத்தை அதீத பயத்தோடு பார்த்து கொண்டிருந்தனர்.
மரத்தின் கிளையோ காற்றின் வேகத்தில் யாரும் இல்லாத பக்கத்தில் விழ, அந்த காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த சிலர், இயற்கைக்கு மக்களை காக்க இருந்த பொறுப்புணர்ச்சியைக் கண்டு வியந்து கொண்டிருந்தனர்.
ஆனால், அந்த சாலையில் அதைப் பார்க்காமல், "ஹை... ஹை..." என்று குழந்தை வேறு எதையோ பார்த்து ஆர்ப்பரித்து கொண்டிருந்தாள். குழந்தையுடன் இருந்த முதியவர்களோ, தன் பேத்தியின் சந்தோஷத்திற்குக் காரணம் தெரியாமல், "எதற்கு இவ்வளவு சந்தோசம் கல்கி?" என்று கேட்டனர் அவள் பாட்டியும் தாத்தாவும். தாத்தா, அவர் தலை முடியில் நரை. பாட்டி, முகத்தில் சுருக்கம். இவை மட்டுமே அவர்களின் வயதை கூறியது. இருவரும் காலத்திற்கு ஏற்ப நடைப்பயிற்சி செய்பவர்கள் என்பதை அவர்கள் நிற்கும் தோரணையும் நடக்கும் விதமும் கூறியது.
"ரொம்ப நல்லாருக்கு" என்று மீண்டும் குதித்துக் கொண்டே கைகளைத் தட்டி குதூகலித்தாள் கல்கி. தாத்தாவும், பாட்டியும் தன் தலையைத் திருப்பி நான்கு பக்கமும் பார்த்தனர். அவர்களுக்கு எதுவும் புதிதாகத் தெரியவில்லை. தெரிந்தது என்னவோ அந்த மரத்தின் கிளை கீழே விழுந்து அதை அவர்கள் பிரமித்துப் பார்த்த காட்சி.
குழந்தை மரத்தின் பக்கம் பார்க்கவுமில்லை. பார்த்தாலும் குழந்தைக்கு அத்தனை விடயங்கள் புரியுமா என்று கூறுவதற்கும் இல்லை என்று முடிவுக்கு வந்தனர். "எது நல்லாருக்கு கல்கி?" என்று கேட்டார் பாட்டி. குழந்தை சாலையில் சென்று கொண்டிருந்த வண்டிகளைக் காண்பித்தது.
"வண்டி தானே கல்கி ஓடுது" என்று தாத்தா கூற, "பாட்டி... தாத்தா, நான் இருக்கிற நாட்டில் கார் மட்டும் தான் நிறைய ஓடும். அப்புறம் வெயில் காலத்தில் பைக். கொஞ்சம் பஸ் அப்புறம் பெரிய வண்டி. ஆனால், இந்தியா சூப்பர். நிறைய ஆட்டோ, ஷேர் ஆட்டோ, பைக்லையே நிறைய வகை" என்று கல்கி தன் கைகளை விரித்து, கண்களைப் பெரிதாக்கி ஆச்சரியத்தோடு கூற, பாட்டி சிரித்துக் கொண்டார்.
"ஆட்டோவில் போவோமா?" என்று தாத்தா குழந்தையின் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு கேட்க, கல்கி ஆர்வமாகத் தலையசைத்தாள். சாலையில் சென்று கொண்டிருந்த ஓர் ஆட்டோவை நிறுத்தி அதில் மூவரும் ஏறிக்கொண்டார்கள் . கல்கிக்கு அனைத்துமே ஆச்சரியமாக இருந்தது.
நிறையக் கடைகள், நெருக்கடியான மக்கள், 'ட்டூர்... ட்டூர்...' என்ற வண்டிகளின் சத்தம், 'பீம்... பீம்...' என்ற ஹாரன் சத்தம். அவள் அனைத்தையும் ரசித்துப் பார்த்துக்கொண்டே, தன் பாட்டியிடமும் தாத்தாவிடமும் நிறையக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே வந்தாள். பெரும்பாலான கேள்விகளுக்குப் பாட்டி பதில் கூறிக்கொண்டே வந்தார். சில சமயங்களில் தாத்தா குழந்தைக்கு விளக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.
குழந்தை அவ்வப்பொழுது தொடர் வாக்கியமாக ஆங்கிலத்தில் பேசினாள். குழந்தையின் ஆங்கில உச்சரிப்பு சற்று வேறு மாதிரி இருக்க, "என்ன, குழந்தை வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறாளா? குழந்தை பேசுற இங்கிலிஷ் வேற மாதிரி இருக்கே" என்று ஆட்டோ ஓட்டுநர் கேட்டார்.
"ஆமா, குழந்தை வெளிநாட்டிலிருந்து இங்க வந்திருக்கா. அது தான் நாங்க பேத்தியை வெளிய கூட்டிகிட்டு வந்தோம்" என்றார் தாத்தா. "என்ன பாப்பா, உனக்கு இந்தியா பிடிச்சிருக்கா?" என்று கேட்டார் ஆட்டோ ஓட்டுநர். "ரொம்ப பிடிச்சிருக்கு." என்றாள் குழந்தை கல்கி.
"ஏன் பிடிச்சிருக்கு?" என்று கேட்டார் ஆட்டோ ஓட்டுநர். "பாட்டி, தாத்தா, சித்தி, சித்தாப்பா, மாமா, அத்தை எல்லாரும் இங்க தானே இருக்காங்க" என்றாள் கல்கி மழலை மொழியில். "நல்லா தமிழ் பேசறியே?" என்று ஆட்டோ ஓட்டுநர். கூற, "ம்... எனக்குத் தமிழ் எழுதவும் தெரியும்" என்றாள் கல்கி பெருமையாக.
அப்பொழுது அவர்கள் ஒரு குப்பை தேங்கிய சாக்கடையைக் கடந்து செல்ல, அங்கே துர்நாற்றம் வீசியது. "உவ்வே... என்னால் முடியலை... நாற்றம்... நாற்றம்..." என்று குழந்தை மூக்கை மூட, ஆட்டோ ஓட்டுநர் அந்த இடத்தைச் சற்று வேகமாகக் கடந்தார்.
"வெளிநாடு ரொம்ப சுத்தமா இருக்குமோ? இப்படி எல்லாம் நாற்றமே வராதா?" என்று வினவினார் ஆட்டோ ஓட்டுநர். "ஆமா, அங்க எல்லாம் சுத்தமா இருக்கும். இப்படி எல்லாம் நாற்றமே வராது." என்றது குழந்தை. பாட்டிக்கு தன் நாட்டை குறைவாக மதிப்பிட்டுப் பேசும் இந்தப் பேச்சு சுத்தமாகப் பிடிக்கவில்லை. தாத்தா இவர்கள் பேச்சைக் கண்டும் காணாமலும் கேட்டுக் கொண்டிருந்தார். இருந்தாலும், முதியவர்கள் இருவரும் குழந்தையின் பேச்சைத் தடுக்கவில்லை. மௌனித்துக் கொண்டனர்.
"இங்கே எல்லாம் அப்படித்தான் பாப்பா. அரசாங்கம் ஒன்னும் செய்யாது. ஓட்டு போடுறதே தேவை இல்லாத வேலை. குப்பையைச் சுத்தம் பண்ண வேண்டாமா? அப்படியே கிடக்குது பாரு." என்று அந்த ஆட்டோ ஓட்டுநர் அரசாங்கத்தை வசைபாட ஆரம்பித்தார்.
பேச்சின் போக்கு, பாட்டிக்கு இப்பொழுது சுத்தமாகப் பிடிக்கவில்லை. அரசாங்கத்தைக் குறை கூறும் அரசியல் பேச்சு தாத்தாவுக்கும் ரசிக்கவில்லை. அவர் முகம் அஷ்டக் கோணலாக மாறியது. பெரியவர்கள் இருவரும் எதுவும் பேசாமல் மௌனமாகப் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
பெரியவர்கள் ஆட்டோ ஓட்டுநரின் பேச்சை ஊக்குவிக்கவில்லை என்றாலும், அரசாங்கம் அதைச் செய்யவில்லை. அரசாங்கம் இதைச் செய்யவில்லை. இப்படிச் செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருக்க வேண்டும் என்ற அவருடைய வளவளப்பு நீண்டு கொண்டே போனது.
முதலில், அவரிடம் பேசிக்கொண்டிருந்த குழந்தை இப்பொழுது, "ங்கே..." என்று கண்களைப் பெரிதாக்கி விழித்தது. ஆட்டோ ஓட்டுநரின் பேச்சு கல்கிக்கு முழுதாகப் புரியவில்லை. ஏதோ அரசாங்கத்தைத் திட்டுகிறார் என்று மட்டும் குழந்தைக்குப் புரிந்தது. அவளுக்கும் சுவாரசியம் குறைந்து விடவே, மௌனித்துக் கொண்டாள். தாத்தாவும் பாட்டியும் எதுவும் பேசவில்லை. தன் பேத்தியின் செய்கையை ரசித்துக் கொண்டிருந்தனர்.
ஆட்டோ ஓட்டுநர் தன்னால் முடிந்தளவு அரசாங்கத்தையும், அவர்கள் நடத்தும் ஆட்சியையும் திட்டிக் கொண்டே வந்தார். அவர்கள் மூவரும் இறங்கும் இடமும் வந்தது. வண்டியை நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர் நடுசாலையில் தன் எச்சிலைக் காரி துப்பினார்.
கல்கி அவரைச் சற்று அருவருப்பாகப் பார்த்தாள். தாத்தாவுக்கும், பாட்டிக்கும் சற்று முன் பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட்ட மரத்தின் கிளையும் இயற்கையின் அமைப்பும் ஒன்று போல் அவர்கள் மூளையில் வந்தமர்ந்தது. நொடிக்குள் அவர்கள் இருவரும் ஆட்டோ ஓட்டுநரின் செய்கையை இயற்கை காட்சியோடு ஒப்பிட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆட்டோ ஓட்டுநரின் இந்தச் செய்கையைப் பார்த்து மனம் நொந்தனர்.
தாத்தா ஆட்டோ ஓட்டுநரிடம் பணத்தைக் கொடுக்க, 'தான் செய்கிறதெல்லாம் தப்பு. இதில் அரசாங்கத்தைக் குறை சொல்ல வேண்டியது' என்று பாட்டி அந்த ஆட்டோ ஓட்டுநரை மனதில் திட்டினார். 'கீழே விழுந்திருந்த எச்சியிலிருந்து நோய் பரவி விடுமோ?' என்ற எண்ணம் ஓட, பேத்தியின் கைகளைப் பிடித்துக் கொண்டு மடமடவென்று வேகமாக நடக்க ஆரம்பித்தனர் தாத்தாவும் பாட்டியும்.
கல்கி ஆட்டோ ஓட்டுநரைத் திரும்பிப் பார்த்தபடியே கொஞ்சம் தூரம் சென்றவள், தன் தாத்தா பாட்டியின் கைகளை உதறிவிட்டு மடமடவென்று ஆட்டோ ஓட்டுநரை நோக்கி ஓடினாள்.
'இவ எங்கே போறா?' முதியவர்கள் இருவரும் அவளை யோசனையாகப் பார்க்க, "நீங்க சொல்றது கரெக்ட் ஆட்டோ அங்கிள். மோசமான அரசாங்கம். நீங்க இப்படி ரோட்டில் துப்பினா நீங்க திட்டின அரசாங்கம் அது தான் உங்க கவர்மெண்ட் உங்களை ஜெயிலில் போடணும். இப்படி ரோட்டில் துப்பினவங்களை, இந்த இடத்தை இப்படி ஆக்கினவங்களை எல்லாம் ஜெயிலில் போடலைனா அது மோசமான அரசாங்கம் தான். அது மட்டுமில்லை, நாம தான் நம்ம இடத்தை இப்படி அசிங்கம் பண்ணாமல் சுத்தமா பார்த்துக்கணும். அப்புறம் தான் அரசாங்கம் சுத்தமா பார்க்க முடியும்." மூச்சு வாங்கக் கூறிவிட்டு மடமடவென்று சென்றாள் கல்கி.
கீழே விழுந்த எச்சில் அவரை பார்த்து காரி உமிழ்ந்தது போல் உணர்ந்தார் ஆட்டோ ஓட்டுநர். 'ஓர் இடத்தின் அசுத்தமோ, சுத்தமோ அதன் ஆரம்பப் புள்ளி நான் தான், அரசாங்கம் இல்லை.' என்று அந்த ஆட்டோ ஓட்டுநர் குழந்தையின் கூற்றிலிருந்து புரிந்து கொண்டார்
ஆனால், அவருக்குத் தோன்றியது போல், 'அனைத்திற்கும் ஆரம்பப் புள்ளி நாம் தான்' என்ற எண்ணம் அனைவருக்கும் தோன்றுமா?
- அகிலா கண்ணன்
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்