Bharathipriyan
சிறுகதை வரிசை எண்
# 20
முறுக்கு வாங்கலியோ
(ஏக்கப் பார்வை)
சிறுகதை
பாரதிப்பிரியன்
வெப்ப அனல் கானல் நீராகப் பூமி மீது அசைவாடிக் கொண்டிருந்த சித்திரை மாதத்தின் அக்கினி நட்சத்திர காலம் அது. குவஹாத்தியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் விரைவு இரயிலில், முன்பதிவு செய்யப்படப் பெட்டியில் நான் பயணித்துக் கொண்டிருந்தேன்.
‘அருண் குமார்’.... இது தான் எனது பெயர்.
இந்திய பங்களாதேஷ் எல்லையில் கடந்த நான்கு வருடங்களாக…. கமாண்டோ படைப் பிரிவில் பணியாற்றி வரும் சாதாரண இராணுவ வீரன் தான் நான். நீண்ட நாட்களுக்குப் பிறகு… எனக்கு இருபத்தைந்து நாட்கள் விடுப்புக் கிடைத்திருந்தது.
எனது சொந்த ஊரான மணியாச்சியில் விடுமுறை நாட்களைக் கழிக்கச் சென்று கொண்டிருக்கிறேன். கடந்த இரு தினங்களுக்கு முன் நான் குவஹாத்தியில் இருந்து, சொந்த ஊருக்கு எண்ணிலடங்கா கனவுகளுடன் கிளம்பி இருந்தேன். அடுத்து வர இருக்கும் நாட்களில் குடும்பத்துக்கு என்று நான் நிறைவேற்ற வேண்டிய பல கடமைகள் குறித்த யோசனைகளுடன் பயணத்தைத் தொடங்கியிருந்தேன். .
தமிழக எல்லை வரும் வரை இல்லாத மகிழ்ச்சியும் நிறைவும், இரயில் தமிழக எல்லையில் நுழைந்த நிமிடத்தில் இருந்து, எனக்குள் பொங்கி பிரவாகிக்க ஆரம்பித்து இருந்தது. கடந்த ஆறு வருடங்களாக என் காதில் ஒலித்திராத தேன் மதுர தமிழோசைதான்… அதன் அடிநாதம் என்பதை நான் உணர்ந்த போது, எனக்குள் நிம்மதியையும் நிறைவையும் ஏற்படுத்தியிருந்தது என்றால் அது மிகையில்லை. அழகான வயல்களும், தமிழ் மொழியில் எழுதப்பட்ட இரயில் நிலைய பெயர்களும் என் கண்களில் தென்பட்டபோது எழுந்த பேரின்பத்தை வார்த்தைகளில் விவரிக்க இயலவில்லை என்பதை நான் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.
சொந்த மண்ணில் எழுந்த தமிழ் மணம் எனக்குள் சுகந்தமான நுழைந்து, சுவாச மேட்டில் சுக ராகம் பாடிய மகிழ்வில் இலேசாகக் கண்ணயர்ந்திருந்தேன். விடியும் நேரத்தில் சென்னையை அடைந்த இரயில், இப்போது மதுரைக்கு அருகில் சென்று கொண்டிருந்தது. நீண்ட தூரம் இரயிலில் பயணிப்பது ஒருவகை இன்பம். அதுவும் தமிழகத்தில் பயணிக்கும் போது உருவாகும் மகிழ்ச்சி இருமடங்கு என்பதைப் பல்வேறு தருணங்களில் அனுபவப்பூர்வமாக நான் உணர்ந்த நாட்கள் ஏராளம் உண்டு.
வாணியம்பாடியில் இரயில் நின்ற போது சில கல்லூரி மாணவ, மாணவியர் ஒரு குழுவாக நானிருந்த பெட்டியில் ஏறினார்கள். வாணியம்பாடியில் இருந்து நெல்லை வரை இன்ப சுற்றுலாவாக அவர்கள் செல்வதாக அவர்கள் பேசியதிலிருந்து புரிந்து கொண்டேன்.
பதின் பருவம் கடந்து, இளமையின் முதல் பருவத்தில் நுழைந்திருந்த அவர்கள் அனைவரும், ஆண்களும் பெண்களுமாகச் சந்தோஷமாக, சமத்துவமாக, பாலின வேறுபாடுகளை மறந்து காணப்பட்டனர். ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் உரிய மதிப்பளித்துப் பழகியதை பார்க்கும் போது… எனக்குப் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த வாலிபர்கள் பெண்களைப் பாதுகாக்கும் பொருட்டு அவர்களைச் சுற்றி ஒரு வளையமாக இருந்ததை நான் கவனித்தேன். காலை சிற்றுண்டியை முடித்தபின் ஆரம்பித்த அவர்களின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் எல்லாம் மதிய உணவுக்குப் பிறகு சிறிது நேரம் அமைதிப் பாதைக்குத் திரும்பியது.
அவர்கள் குழுவாக அமர்ந்து சிறிய விளையாட்டுகளை விளையாடினார்கள். சிலர் வார்த்தை விளையாட்டு நிகழ்ச்சி போலச் சொற்களை வைத்து புதிய சொற்களைக் கண்டறியும் போட்டி நடத்தினர்.
மதிய உணவருந்தியதும் அவர்களுடன் சிறிது நேரம் அளவளாவ கிடைத்த வாய்ப்பில்… எனது எல்லைப்புற அனுபவங்களைப் பகிர்ந்த படி பயணித்துக் கொண்டிருந்தேன். இரயில் கொடை ரோடு இரயில் நிலையத்தைத் தாண்டியிருந்தது. சோழவந்தான் இரயில் நிலையத்துக்கு இன்னும் சிறிது தூரம் இருக்கக்கூடும்.
சிக்னல் கிடைக்காத காரணத்தால் மிகவும் சிறியதொரு இரயில் நிலையத்தில் நாங்கள் சென்ற இரயில் வண்டி வேகம் குறைந்து நின்றது. அந்த இடத்தில் நடைமேடைகள் கூட இருந்திருக்கவில்லை. ஒரு சில பயணிகள் இரயில் தவிர வேறு எந்த வண்டியும் அங்கே நின்று செல்வதாக எனக்குத் தோன்றவில்லை. அதிலும் குறிப்பாக விரைவு இரயில்கள் அந்த நிலையத்தை மின்னல் போலக் கடந்து செல்வது தான் வாடிக்கை. ஆனால் அன்று நான் சென்ற விரைவு இரயில் அந்த நிலையத்தில் நிற்க வேண்டிய தேவை இருந்தது.
இரயில் நின்றதும் நான் சாளரம் வழியே வெளியே எட்டிப்பார்த்து விட்டு, சிறிது நேரம் இயற்கை காற்றை அனுபவிக்கலாம் என்று கருதி இரயில் பெட்டியில் வாசல் அருகே சென்றேன். என்னோடு சில கல்லூரி மாணவர்களும் வந்தார்கள். அப்போது எங்கிருந்தோ சிலர் வெள்ளரிக்காய், நிலக்கடலை போன்றவற்றை விற்க இரயில் பெட்டியின் வெளியே ஓடி வருவதை நான் காண நேர்ந்தது. அவர்கள் யாரும் முறைப்படி இரயில்வே நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட விற்பனையாளர்கள் இல்லை என்பதை… என்னால் உணர முடிந்தது. அவர்கள் அனைவரும் அதே ஊரை சேர்ந்த ஆட்களாகத் தான் இருக்க வேண்டும். அவர்கள் இரயில் பெட்டியில் ஏறவில்லை. வெளியே நின்றுகொண்டு தான், அவர்கள் வைத்திருந்த பொருட்களை விற்பனை செய்து கொண்டு இருந்தார்கள்.
அப்போதுதான் என் கண்களில் அந்தக் காட்சி தட்டுப்பட்டது. இரயில் நின்ற இடத்திற்குச் சற்று தள்ளி இருந்த ஒரு பள்ளத்திலிருந்து வளர்ந்திருந்த பெரிய வேப்ப மரத்திற்குப் பின்னால் இருந்து, அந்தப் பெண் பரபரப்பாக ஓடிவந்து கொண்டிருந்தாள். சாயம் போன ஒரு மஞ்சள் நிறப் புடவை… வெளிர் நீல நிற ரவிக்கை…. அந்த ரவிக்கையில் தைப்பதற்குக் கூட இடமில்லாத அளவுக்குக் கிழிசல்கள்… அந்தக் கிழிசல்களைத் தைக்க அவளுக்கு வசதி இருந்ததாக எனக்குத் தோன்றவில்லை. கறுத்த தேகம்… தளர்ந்து போயிருந்த உடல். வெறும் கால்களில் அவள் ஓடி வந்து கொண்டிருந்தாள்.
சிறிது ஓட்டமும், நிறையத் தள்ளாட்டமும் கலந்து அவள் இரயில் பெட்டிகளை ஒருவித படபடப்போடு பார்த்தபடி வந்து கொண்டிருந்தாள். அவள் கைகளில் கொஞ்சம் பெரிய கண்ணாடிப் பை இருந்ததை நான் கவனித்தேன். அதில் சிறிய பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருந்த வீல் சிப்ஸ் என்ற நொறுக்குத் தீனி இருந்தது. அவள் வருவதற்கு முன்பே வேறுபல வியாபாரிகளும் இரயில் பயணிகளிடம் அது போன்ற பொருட்களை விற்று இருந்தார்கள். அவள் தாமதமாக வந்ததால் அவள் கொண்டு வந்த பொருளை வாங்க யாரும் முன் வரவில்லை.
அந்தப் பெண்ணின் கண்கள் இரயில் பெட்டியில் இருந்தவர்களைக் கெஞ்சலாகப் பார்ப்பதை என்னால் உணர முடிந்தது. அவள் பார்வை வெளிப்படுத்திய செய்தியில் ‘யாரேனும் தன்னை அழைத்து அவள் வைத்திருக்கும் பொருளை வாங்குவார்களா?’ என்ற ஏக்கம் இழையோடியதை நான் கவனிக்கத் தவறினேன் இல்லை.
‘அவளுக்குத் தான் விற்பனைக்காக வைத்திருந்த பொருளைக் கூவி விற்கவும் தெரியவில்லை’ என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இங்கும் அங்குமாக… ஒவ்வொரு பெட்டியாக அவள் ஓடியும் நடந்தும் எட்டிப் பார்ப்பதும், கெஞ்சல் கலந்த ஏக்க பார்வையை வீசுவதையும் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். யாரும் அவளையும் அவள் வைத்திருந்த பொருளையும் மதிக்கவில்லை. அவள் தலையில் இருந்து வியர்வை வழிந்து அவள் கழுத்தையும், ரவிக்கையையையும் நனைக்க ஆரம்பித்து இருந்தது.
அவளுக்கு முன் வந்தவர்கள் நாங்கள் இருந்த பெட்டியை கடந்து முன்னால் இருந்த பெட்டிகளில் விற்பனையை ஆரம்பித்து இருக்க, அவளுக்கு எதுவுமே விற்கவில்லை. அப்போது முன்னால் இருந்த ஒரு வியாபாரி “முறுக்கு முறுக்கு!.... முறுக்கு வாங்கலியோ”. என்று கூவுவதை அவள் சட்டென்று திரும்பி கவனித்தாள்
அவள் வாய் மெல்லிய குரலில் “முறுக்கு,... வாங்க…லியோ”... முறுக்கு வாங்கலியோ”... என்று ஈன சுவரத்தில் முனகுவதை நான் கேட்டேன். அவளுக்குத் தன் கையில் இருந்தது சிப்ஸ் என்பதைக் கூடச் சொல்ல தெரியவில்லை என்பதையும், மற்றொரு வியாபாரி சொன்னதைக் கேட்டு அதையே தடுமாறி தடுமாறி சொல்கிறாள் என்பதையும் என்னால் உணர முடிந்தது. உண்மையில் அவள் சமீபத்தில் தான் இந்த வேலையை ஆரம்பித்து இருக்க வேண்டும் என்பதை அவள் நடவடிக்கைகள் அப்பட்டமாக வெளிப்படுத்தின. நான் அவளை நோக்கி எனது கையை ஆட்டினேன்.
அதோ அவள் நான் கரம் ஆட்டுவதைக் கண்டு விட்டாள்…..
அந்த நிமிடம்!!!
அவள் கண்களில் பளிச்சிட்ட ஒளி! அதில் தோன்றிய சந்தோஷ மின்னல்கள்! உதடுகளின் தோன்றிய திருப்தி கலந்த மெல்லிய புன்னகை!
அப்பப்பா!!...
எத்தனை விதமான உணர்வுகள் அதில் இழையோடின தெரியுமா? மகிழ்ச்சியும், பரிதவிப்புமான எண்ண கலவைகள் அந்தப் பார்வையில் இருந்தது. அவள் முகம் எழுப்பிய அத்தனை உணர்வுகளும் அந்த நொடியே எனக்குள் காட்சிகளாகப் பதிவானது. தளர்வும், தவிப்பும், கலந்த படி அவள் ஓடி வந்தாள். அந்த இரயில் அங்கே நிற்பது அதிசயம் என்பதும் அது எப்போது வேண்டுமானாலும் கிளம்பி விடும் என்ற பரிதவிப்பும் அவளுக்குள் இருப்பதை என்னால் உணர முடிந்தது.
அப்போது அவள் கால்களில் கீழே கிடந்த ஒரு கண்ணாடி சில் குத்தியது. ‘யாரோ புண்ணிவான் மது அருந்திவிட்டு வீசி எறிந்த கண்ணாடி குப்பி உடைந்து சிதறியதில், ஒரு துண்டு கண்ணாடித் துண்டு மண்ணில் புதைந்திருந்திக்க வேண்டும். அது அவள் பாதத்தில் நன்றாகக் குத்தி இருந்தது. ஒரு கண்ணாடி துண்டு கூட ஏழையின் இரத்தத்தை உறிஞ்சுவதில் எத்தனை கடுமையாக இருக்கிறது என்பதை எண்ணிய போது எனக்கு உலகத்தின் மீது மட்டுமல்ல, கொலைக் கருவிகள் மீது கூட ஆத்திரம் எழுந்தது. சிப்ஸ்கார பெண்ணின் காலில் குத்தியிருந்த கண்ணாடி ஏற்படுத்திய காயம் காரணமாக உண்டான வலி தாங்காமல் அந்தப் பெண் சில நொடிகள் அப்படியே நின்றாள்.
பிறகு வேகமாகக் குனிந்து, தன் வலது காலை மடித்துக் கொண்டு இடது முழங்காலில் சாய்த்து வைத்து, காலில் குத்தியிருந்த கண்ணாடிச் சில்லை பிடுங்கி ஓரமாக வீசினாள். பிறகு வலியை பொருட்படுத்தாமல், கால்களில் இருந்து இரத்தம் வழிய… கால்களை நொண்டியபடியே அவள் நானிருந்த பெட்டியை நோக்கி ஓடி வந்தாள்.
அந்தக் காட்சியைக் கண்ட எனது கண்களின் ஓரங்களில் இலேசாக ஈரம் எட்டிப்பார்த்தது.
அவள் நானிருந்த பெட்டிக்கு அருகில் வருவதற்குள், நான் எனது சட்டைப் பையில் இருந்து ஐம்பது ரூபாயை எடுத்து தயாராக வைத்துக் கொண்டேன். இரயில் எப்போது வேண்டுமென்றாலும் கிளம்பலாம் என்பதை நான் உணர்ந்து இருந்தேன். அவன் ஒரு பாக்கெட்டை கண்ணாடி பையில் இருந்து எடுத்து என்னிடம் நீட்டினாள். நான் அவளிடம்
“ஒன்று எவ்வளவு ரூபாய்?”, என்று கேட்க…
“பத்து ரூபாங்க”... என்று மெல்லிய குரலில் புன்னகையோடு சொன்னாள். அவள் காலில் இன்னமும் இரத்தம் வந்து கொண்டிருந்தது.
நான் அவளிடம் “ஐந்து பாக்கெட் கொடுங்க!”... என்று சொன்னேன். அவள் மகிழ்ச்சியோடு மேலும் நான்கு பாக்கெட் சிப்ஸ் எடுத்து கொடுத்தாள்.
நான் வாங்கியதைப் பார்த்ததும் என்னோடு இருந்த கல்லூரி மாணவர்களும் அவளிடம் சிப்ஸ் வாங்க முன் வந்தார்கள். நாங்கள் எல்லோரும் வாங்குவதைப் பார்த்து… மேலும் சில பயணிகள் அவளிடம் சிப்ஸ் வாங்க விரைந்து வந்தார்கள்.
நான் அதற்குள் ஏதோ ஒரு யோசனை மூளையில் பளிச்சிட்டவனாக இரயில் பெட்டிக்குள் வேகமாக ஏறினேன். பொதுவாக நான் எங்குப் பயணம் செய்யும் போதும், எனது உடமைகளோடு முதலுதவிப் பெட்டி வைத்திருப்பேன். அது என் நினைவில் வந்ததால் தான் இரயில் கிளம்பும் முன் அதை அவளிடம் கொடுத்துவிட வேண்டும் என்ற உணர்வுத் தூண்டலில் வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தேன்.
இதோ முதலுதவிப் பெட்டி கிடைத்து விட்டது. அதே வேகத்தில் நான் இரயில் பெட்டியின் வாயிலை நோக்கிச் சென்றேன். அதற்குள் அந்தப் பெண்ணிடமிருந்து சிலர் சிப்ஸ் வாங்கி இருந்தார்கள். நான் வாசற்படியை அடைந்து அந்தப் பெண் இருக்கிறாளா? என்று பார்க்க அவள் என்னை நன்றி கலந்த புன்னகையுடன் பார்த்தாள். நான் அவளிடம் முதலுதவிப் பெட்டியை நீட்டினேன்.
‘முதலில் நான் நீட்டியது என்ன என்பது புரியாமல் அவள் விழிகள் அகலமாக விரிந்து கேள்விகளை எழுப்பியதை உணர்ந்த நான்…
“இதில் மருந்து இருக்கு. கால்ல காயம் ஆனதுல்லே…அதுக்குப் போடுங்க”, என்று கூற… அவள் அதை மகிழ்ச்சியாகப் பெற்றுக் கொண்டாள். அவள் விழிகளில் நன்றியும், நன்றிக்கு மேலான உணர்வுகளும் பொங்கியதை என்னால் உணர முடிந்தது. அதற்குள் எங்கள் இரயில் மெல்ல நகர ஆரம்பித்து இருந்தது. அவள் நாங்கள் இருந்த பெட்டியை பார்த்தபடியே ஒரு கையில் சிப்ஸ் பொட்டலமும், மறு கையில் முதலுதவி பெட்டியுமாக நின்று கொண்டிருந்தாள். இரயில் வேகமெடுத்து மதுரையை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்து இருந்தது.
நான் எனது இருக்கைக்கு வந்து அமர்ந்தேன். அங்கு நிகழ்ந்தவற்றைக் கவனித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவிகள் சிலர் என்னிடம் அங்கு நிகந்தச் சம்பவம் குறித்துக் கேட்டார்கள். நான் மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்துவிட்டு…. அந்தப் பெண்ணைக் குறித்து எனக்குள் உருவாகியிருந்த நல்லெண்ணங்களை வெளிப்படுத்தினேன்.
“வறுமையில் அவள் இருக்கிறாள் என்றாலும் பிச்சை எடுக்காமல், இருப்பதை வைத்து ஒரு சிறிய முதலீட்டை போட்டு… ஒரு தின்பண்டத்தை வாங்கி அவள் விற்கிறாள். அதில் அவளுக்கு என்ன வருமானம் கிடைக்கும் என்று தெரியாது?. ஆனால் நான் அவளிடம் அந்தப் பொருளை வாங்கி இருக்காவிட்டால், கண்டிப்பாக அவள் வீட்டில் ஒரு குவளை தேநீர் கூட இரவு குடிக்க அவளுக்கும் அவள் குடும்பத்திற்கும் கிடைத்து இருக்காது. வேண்டாம்!.... அரைகிலோ அரிசி வாங்கிக் கூடக் கஞ்சி காய்க்க அவளுக்குப் பணம் கிடைத்திருக்காது. சரி விடுங்கள் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். நான் அந்தப் பெண்ணிடம் சிப்ஸ் வாங்கவில்லை என்றால் நீங்களும் கூட அவளிடம் சிப்ஸ் வாங்க முன் வந்திருக்க மாட்டீர்கள் அப்படித்தானே?”, என்று கேட்க அவர்கள் மெளனமாக ‘ஆம்’ என்று தலையாட்டினார்கள். நான் அவர்களைப் புன்னகையுடன் பார்த்துத் தீர்க்கமாகப் பதில் சொன்னேன்….
“நம் நாட்டில் நன்மை செய்யக் கூட, மற்றவனின் தூண்டுதல் தேவையாக இருக்கிறது.. நான் உங்கள் முன் செய்யும் செயல் கண்டிப்பாக உங்கள் உணர்வுகளைத் தூண்டும் என்று நான் அறிந்திருந்தேன். நான் வாங்கினால் நீங்களும் சிலது வாங்குவீர்கள் என்று நம்பினேன். நான் எதிர்பார்த்தது போலவே நீங்களும் வாங்கினீர்கள். நான் அவள் காலில் பட்ட காயத்திற்கு மருந்து கொடுத்து உதவியது மனிதாபிமானம். அவள் வறுமையை இந்தப் பத்து நிமிட நேரத்தில் நாம் மற்ற முடியாது. ஆனால் அவள் செய்யும் முயற்சியில் நாம் சிறிய பங்கை எடுத்துக் கொள்ளலாம். அது அவளுக்குத் தன்னம்பிக்கையைத் தரும்”, என்று கூறினேன்.
மாணவர்கள் என்னை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அதோடு அவர்கள் என்னிடம் வேறு எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. ஆனால் அந்த மாணவர்கள் கண்களில் ‘அக்கினி குஞ்சொன்று’ பிரகாசித்ததை நான் அன்று கவனித்திருக்கவில்லை. மணியாச்சி வரும் முன் அந்தக் கல்லூரி மாணவர்கள் என்னோடு மிக நெருக்கமாகப் பழகியிருந்தார்கள். எனது முகவரியை வாங்கிக் கொண்டார்கள். நான் மணியாச்சி இரயில் நிலையத்தில் இறங்கிக் கொண்டேன்.
சில மாதங்கள் கழித்துப் பங்களாதேஷ் எல்லையில் பணியில் இருந்த போது மாணவர்கள் எழுதிய ஓர் கடிதம் என்னை வந்தடைந்தது. அந்தக் கடிதத்தில் சில புகைப்படங்களும் இருந்தது. அதைப் பார்த்த நொடியில் நான் கண்கள் கலங்கிப் போனேன்.
என்னோடு அன்று இரயிலில் பயணித்த மாணவர்கள் ஊருக்குத் திரும்பும் வழியில் அந்த இரயில் நிலையத்தில் நிற்கும், பயணிகள் இரயிலில் வந்து இறங்கியுள்ளார்கள். சிப்ஸ் விற்ற அந்தப் பெண்ணைச் சந்தித்து அவள் குடும்ப நிலையை அறிந்து கொண்டு ஊருக்குத் திரும்பியவர்கள், அவர்கள் கல்லூரி மாணவர்கள் கொடுத்த சிறு சிறு உதவிகளைச் சேர்த்துக் கொண்டு அதன் மூலம் ஒரு தொகையை உருவாக்கிக் கொண்டு மீண்டும் அதே ஊருக்குச் சென்று சிப்ஸ்கார பெண்ணுக்கு அவள் ஊரில் ஒரு சிறிய பெட்டிக்கடை வைத்துக் கொடுத்ததும் இருக்கிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன் அவள் கணவன் ஓடும் இரயிலில் சிப்ஸ் விற்பதற்காக ஏற முயன்ற போது தவறி விழுந்து அப்போதே இறந்தும் போனதையும், அவன் மறைவுக்குப் பிறகு இரு பிள்ளைகளைக் காப்பாற்ற வழியின்றித் தான் அவள் அன்று சிப்ஸ் விற்க வந்ததையும் விலாவாரியாக எழுதியிருந்த மாணவர்கள், அவள், அவள் குழந்தைகள், புதிய பெட்டிக்கடை என்று எல்லாப் புகைப்படங்களையும் இணைத்து அனுப்பி இருந்தார்கள்.
நான் செய்த சிறிய செயல் பெரும் மாற்றத்தை அந்த மாணவர்கள் இதயத்தில் ஏற்படுத்தி இருந்ததை என்னால் உணரமுடிந்தது. அந்தப் பெண்ணுக்கு வெறுமனே காசு பணம் கொடுத்து உதவாமல் அவள் எதிர்காலத்துக்குத் தேவையான வருவாய்க்கு ஒரு தொழிலை அமைத்து கொடுத்த மாணவர்களின் செயல் என்னைப் புளங்காகிதம் அடைய வைத்தது.
மாணவர்களின் செயல் ஒரு இராணுவ வீரனாக எனக்கு நெகிழ்ச்சியை மட்டுமில்லை! நிறைவையும் கொடுத்தது. சில சம்பவங்கள் நம் இதயத்தில் ஊடுருவி, இரத்த நாளங்களில் பயணித்து நிம்மதியை கெடுக்கும் என்று புலம்புவார்கள். உதவுவதால் உபத்திரவம் வரும் என்பார்கள்.
பிறருக்கு நாம் செய்யும் உதவியால் எழும் மகிழ்ச்சி என்பதும், அதே இரத்த நாளங்களில் தான் பயணிக்கிறது. அது நிம்மதியை மட்டும் இல்லை! நிறைவையும் தரும் என்பதை அனுபவித்துப் பார்த்தால் தான் தெரியும்.
வாழ்வது ஒருமுறை…… நாமும் வாழ்வோம்! மற்றவரையும் வாழ வைப்போம்!
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்