logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

சோ.சுப்புராஜ்

சிறுகதை வரிசை எண் # 209


சிறுகதை: மலேசிய குடியுரிமை எப்போதும் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிவரும் வழக்கமான நேரத்திற்கு ரமேஷ்பாபு வீட்டிற்குத் திரும்பி இருக்கவில்லை. பெரும்பாலும் சனிக்கிழமைகளில் அவன் சீக்கிரமே வீட்டிற்கு வந்து விடுவான். அன்றைக்கு அழகர்சாமி வீட்டிற்கு வந்து விட்டபோதும் ரமேஷ் வந்திருக்கவில்லை. அழகர்சாமி வீட்டிற்குள் நுழைந்ததுமே, “ரமேஷ் இன்னும் வீட்டுக்கு வரலடா….” என்றாள் நிர்மலா கண்களில் நிறைய கண்ணீரையும் பதட்டத்தையும் தேக்கியபடி. ”சில சமயங்களில் எதிர்பாராத விதமாக ஏதாவது பிரச்னை வந்து திடீருன்னும் சைட்டிற்குப் போக வேண்டியும் இருக்கும் நிர்மலா..” என்ற அழகர்சாமி நிர்மலாவை இழுத்து அணைத்து அவளின் உதட்டில் முத்தம் பதித்தான். அழகர்சாமியை மூர்க்கமாய் உதறிய நிர்மலா” காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் கொண்டு போனான்ங்கிற கதையா ரமேஷ் தொலைஞ்சு போயிட்டா நீ நல்லதுன்னு நினைக்குறியோ. முழுசா என்னைச் சொந்தம் கொண்டாடலாம்னு பார்க்குறியாடா ராஸ்கல்….” என்று நிர்மலா அழத் தொடங்கி விட்டாள். டெலிபோன் அட்டையை சொருகி அழகர்சாமி அலுவலக எண்ணை டயல் செய்தான். யாரும் எடுக்கவில்லை. சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு மேல் அலுவலகத்தில் யாராவது இருப்பார்கள் என்று நினைத்தது முட்டாள்த் தனமாகத் தோன்றியது அழகர்சாமிக்கு. சிரிபெட்டாலிங்கில் இருக்கும் கம்பெனி அபார்ட்மெண்ட் தொலைபேசிக்குத் தொடர்பு கொண்டபோது போனை எடுத்த குமார், ”ரமேஷ் மத்தியானம் சாப்பிட்டதுமே ஆபீஸ்லருந்து கிளம்பிட்டார். நீங்க பார்த்திபன்கிட்டக் கேட்டீங்கன்னா அவருக்கு ஏதும் தெரிஞ்சிருக்கலாம். அவங்க ரெண்டு பேரும் ஒன்னாத்தான் ஆபீஸ்லருந்து வெளிய போனத நான் பார்த்தேன்….” .பார்த்திபன் போர்ட் கிளாங்கில் உள்ள சைட்டிற்கு அவசரமாய்ப் போயிருப்பதாக பார்த்திபனுடன் வேலை பார்ப்பவன் தான் சொன்னான். ”ரமேஷ் பார்த்திபனுடன் போர்ட் கிளாங் போயிருக்கலாம். சீக்கிரம் வந்து விடுவான். தைர்யமாய் இரு…” என்று நிர்மலாவை சமாதானப்படுத்தினான். இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு வேலைக்கு வந்திருந்தவர்களில் கல்யாணமான பெரும்பான்மையானவர்கள் ஸ்பௌஸ் விசாவில் தங்களின் மனைவிகளையும் அழைத்துக் கொண்டபோதும் ரமேஷ்பாபுக்கு முதலில் தன்னுடைய மனைவியை மலேசியாவிற்கு அழைத்துக் கொள்ளும் எண்ணம் துளியும் இருக்கவில்லை. அவன் மட்டுமே இங்கிருந்து சம்பாதித்தால் தான் கணிசமான பணத்தை சேமிக்க முடியும் என்பதால் மனைவி இங்கு வருவதால் கிடைக்கும் சௌகரியங்கள் பற்றி அவன் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் ரமேஷ்பாபுவுடன் டிசைன் ஆபிஸில் வேலை பார்க்கும் கிருபாகரன் தன்னுடைய ஐந்துமாத கர்ப்பிணி மனைவியை மலேசியாவிற்கு அழைத்துக் கொள்ள பிரம்ம பிரயத்தனம் பண்ணியதைப் பார்க்க இவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவன் தான் சொன்னான். ”இங்க வந்து குழந்தை பெத்துக்கிட்டாள்னா பிறக்கிற குழந்தைக்கு மலேசியா குடியுரிமை கிடைக்கும். அதுவாவது நம்மள மாதிரி வயித்துப் பாட்டுக்காக நாடுநாடா ஓடிக்கிட்டு இருக்காமல் இங்கயே சொகுசா வாழ்ந்துக்கும். குழந்தையைச் சாக்கா வச்சு கொஞ்சம் முயற்சி பண்ணுனா நமக்கும் பி,ஆர். ஸ்டேட்டஸ் கிடைச்சாலும் கிடைக்கும். அதான் முயற்சி பண்ணுனேன். முடியாமப் போயிருச்சு….” என்றான் சோர்ந்து போய். ”ஏன் என்னாச்சு….?” அக்கறையாக விசாரித்தான் ரமேஷ்பாபு. “அவளோட வீட்ல இது தலைப் பிரசவம்; அம்மாவோட அருகாமையில தான் குழந்தை பொறக்கனும்; அது இதுன்னு ஏதேதோ சொல்லி அனுப்ப மறுத்துட்டாங்க…..” ரமேஷ்பாபு மனைவியை இங்கு வரவழைத்து எப்படியாவது இரண்டு வருஷ காண்ட்ராக்ட் முடிவதற்குள் அவளை ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளச் செய்துவிட வேண்டுமென்று முடிவெடுத்து அதற்கான வேலைகளில் தீவிரமாய் இறங்கினான். “அப்படியென்றால் இந்த வீட்டில் நீ உன் மனைவியுடன் இருந்து கொள். நான் வேறொரு வீடு பார்த்துப் போய்க் கொள்கிறேன். அல்லது பூபதியும் சேதுராமனும் தங்கி இருக்கிற பேச்சிலர்களின் வீட்டில் போய் இருந்து கொள்கிறேன்…..” என்றான் அழகர்சாமி. ”அங்கயெல்லாம் தப்பித் தவறிக்கூடப் போயிடாத. ரெண்டுபேரும் ஏற்கெனவே புருஷன் பொண்டாட்டியா வாழ்ந்துக்கிட்டு இருக்கிறதா செவிவழிச் செய்தி….” என்ற ரமேஷ்பாபு, ”நீயும் இங்கேயே இருந்துடுப்பா. அதான் ரெண்டு பெட்ரூம் இருக்குல்ல; ஒன்னுல நீ இருந்துக்கோ. இன்னொன்னுல நாங்க இருந்துக்குறோம்….” என்றான். ”அதெல்லாம் சரியா வராதுப்பா. குழந்தை பெத்துக்கிற பிராஜெக்ட்டுக்கு பொண்டாட்டிய இங்க வரவழைக்கிற. என்னோட இருப்பு உங்களோட பிரைவசியப் பாதிக்கும்…..” ”கிண்டல் பண்ணாதப்பா. எங்களுக்கென்ன நேத்துத் தான் கல்யாணமாகி இருக்கா என்ன? என்னால தனியா எல்லாம் இருக்க முடியாதுப்பா.….” ஒருவகையில் அழகர்சாமிக்கும் தேஜாபெட்டாலிங்கில் இருந்து வெளியேறுவதில் ஆர்வமில்லை. இந்த இடம் அவனுக்கும் வசதியாகவே இருந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே ரமேஷ்பாபு மனைவியை ரிசீவ் பண்ணுவதற்கு ஏர்போர்ட்டிற்குப் போனபோது அழகர்சாமியையும் உடன் அழைத்துப் போயிருந்தான். அவள் லக்கேஸ் டிராலியைத் தள்ளிக் கொண்டு தூரத்தில் வரும் போதே அவளை எங்கேயோ பார்த்தது போலிருந்தது. நெருங்க நெருங்க நினைவுகளில் படிந்து கிடந்த ஒட்டடை விலகி துலக்கமானது. அவள் நிர்மலா. அழகர்சாமியைப் பார்த்த நிர்மலாவின் கண்களிலும் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் ஒளிர்வதைக் கவனித்தான். அவனை இனங்கண்டு கொண்டதும் கண்கள் மின்ன உதடு துடிக்க சந்தோஷமாய், “நீ நீ ஸாரி நீங்க அழகரு தான…?” என்றாள். ”நான் அழகரே தான். நீ என்னை ஒருமையிலேயே கூப்பிடலாம். உன்னோட பாஷையில இன்னும் சரியாச் சொல்றதானால் குல்ஸ் தடியன்….” என்று சொல்லி சிரித்தான் அழகர்சாமி. ”ரமேஷ் நானும் உன்னோட மனைவியும் சின்ன வயசுல ஒரு வருஷம் போல ஒன்னாப் படிச்சிருக்கோம். ஒரு வருஷம் கூட இல்ல. சரியாச் சொல்லனும்னா ஒரு ஏழெட்டு மாசம் சேர்ந்து படிச்சோம். அதுல பழக்கம்…..” என்றான் அழகர்சாமி.. நிர்மலா பெருமாள் வாத்தியாரின் மகள். அவர் தான் பள்ளியின் தலைமை ஆசிரியர். அதுவரை அவருடைய ஊரான விருதுநகரிலிருந்து தினசரி பள்ளிக்கு வந்து போய்க் கொண்டிருந்தவர் கிராமத்தில் வீடெடுத்து மனைவி மகளுடன் வந்து குடியேறினார். நிர்மலா பட்டணத்துப் பள்ளியில் படித்தவள். அழகர்சாமியின் கிராமத்துப் பள்ளிக்குள் ஒரு புயலைப் போல் நுழைந்தாள். அவளின் நுண்ணறிவும் பாடங்களைக் கிரகிக்கும் ஆற்றலும் கண்டு பள்ளியே திகைத்துப் போய் அவளைக் கொண்டாடியது. அதுவரை பள்ளியில் அழகர்சாமிக்குக் கிடைத்துக் கொண்டிருந்த மதிப்பு மரியாதைகள் எல்லாம் நிர்மலாவிற்கு மாறின. கார்த்திகை தீபத் திருநாளில் அழகர்சாமி சேக்காளிகளுடன் குண்டு விளையாடிக் கொண்டு இருக்கும் போது, போகிற போக்கில் நிர்மலா அவளின் கையிலிருந்த ஒட்டுப்புல் மொத்தத்தையும் அவனுடைய தலையில் தேய்த்து விட்டு ஓடிப் போனாள். அவனுடன் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் அழகர்சாமியிடம், “நிர்மலாவுக்கு உன்மேல இஷ்டம்டா…..” என்றார்கள். ”ஏண்டா அப்படிச் சொல்றீங்க? அவள் எப்பப பார்த்தாலும் என்கூட சண்டைக்குத் தான நிக்கிறாள்….?” என்றான் அழகர்சாமி சுரத்தில்லாமல். ”நம்ம ஊருல பொதுவா யாருக்கு ஒட்டுப்புல் தேய்ப்பாங்க. முறை மாமனுக்கோ, கட்டிக்கப் போறவனுக்கோ தான ஒட்டுப்புல் தேய்ப்பாங்க. நிர்மலா உன் தலையில் தேய்ச்சிட்டுப் போகுதுன்னா என்னா அர்த்தம். யோசிடா. உன்மேல அதுக்கு இஷ்டம்டா. இதுகூடப் புரியாம இருக்கியேடா…..” என்றான் குருசாமி. அழகர்சாமிக்கு ஆளாளுக்கு தூபம் போடவும், அவனுக்கும் அப்படித்தானோ என்று மனசுக்குள் தோன்றத் தொடங்கியது. ஒரு விளையாட்டு பீரியடில் எல்லோரும் விளையாடுவதற்காக வெளியே ஓடிவிட வகுப்பில் நிர்மலா மட்டும் தனியாக உட்கார்ந்திருந்தாள். அந்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்த அழகர்சாமி அவளிடம் போனான். ”நிர்மலா, என்னை உனக்குப் புடிக்குமா….?” என்றான் தயங்கியபடி. ”ஏன் புடிக்காம என்ன…! என்ன மூக்கொழுகுறத மட்டும் கொஞ்சம் குறைச்சிக்கிட்டியின்னா நெறையவே புடிக்கும்…..” ”அப்ப நாம லவ் பண்ணலாமா நிர்மலா?” ”ச்சீ போடா; கெட்ட வார்த்தை எல்லாம் பேசாதடா, அசிங்கம் புடிச்சவனே….” என்று கண்களை மூடித் தலையைக் கவிழ்ந்து கொண்டாள். பட்டணத்துப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நிர்மலா கிராமத்துப் பள்ளிக்கு ஏன் மாற்றப் பட்டாள் என்பது முழுப் பரீட்சை முடிந்து விடுமுறை தொடங்கிய போது அழகர்சாமிக்குத் தெரிய வந்தது. அப்போது மெரிட் பரீட்சை என்னும் சிறப்புத் தேர்வு அமலில் இருந்தது. அது மாவட்டந் தோறும் கிராமத்துப் பள்ளிகளில் பயிலும் சிறப்பான மாணவர்களுக்கு இடையில் நடத்தப்படும் தேர்வு. ஒவ்வொரு பள்ளியிலும் முதல் இரண்டு ரேங்க் பெறும் மாணவர்கள் அந்தத் தேர்வை எழுத அனுமதிக்கப் படுவார்கள். அவர்களில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முதல் நான்கு இடங்களைப் பெறும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களுக்கு நான்கு வருடங்களுக்கு சகல வசதிகளும் உள்ள ஒரு பட்டணத்துப் பள்ளியில் சேர்ந்து படிக்க வாய்ப்புக் கொடுக்கப்படும். படிப்புச் செலவுகள் மற்றும் விடுதிக் கட்டனம் என்று மொத்த செலவுகளையும் ஈடு கட்டும் அளவிற்கு கணிசமான தொகை அரசின் சார்பில் ஸ்காலர்ஷிப்பாக வழங்கப்படும். அது கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்கான திட்டம். அழகர்சாமியின் பள்ளியிலிருந்து அதுவரைக்கும் அந்த சிறப்புத் தேர்வில் யாரும் தேர்வாகி இருக்கவில்லை. அந்தக் குறையைத் தன்னுடைய பெண்ணின் மூலம் தீர்த்து வைப்பதற்காகத்தான் தலைமை ஆசிரியர் நிர்மலாவை அவர் வேலை பார்க்கும் பள்ளியில் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார். அவளுக்கு ஸ்காலர்ஷிப் கிடைப்பதால் அவருக்கு மகளுக்கான படிப்புச் செலவும் மிச்சப்படும் என்பது அவரின் கணக்கு. ஆனால் நிர்மலா அன்றைக்கு அந்தத் தேர்வெழுதுவதற்கே வரவில்லை. அடுத்த நாள் ஏன் என்று விசாரித்தபோது அவள் தனக்கு கடுமையான வயிற்று வலி என்று சொன்னாள். ஆனால் கற்பகம் அழகர்சாமியிடம் நிர்மலா தேர்வெழுதாதற்கான உண்மையான காரணத்தைச் சொன்னபோது, நெகிழ்ந்து போனான். “உன்னை மாதிரி கிராமத்துப் பசங்களுக்கு வைக்கிற பரீட்சையை தன்னைப் போல ஏற்கெனவே பட்டணத்துப் பள்ளியில படிச்சவள் எழுதி உனக்கான வாய்ப்பைத் தட்டிப் பறிக்கிறது சரியில்லன்னு தான் அவள் பரீட்சைக்குப் போகல. அவங்க அப்பா அம்மாவுக்குத் தெரிஞ்சா சத்தம் போடுவாங்கன்னு தான் வயித்துவலின்னு சொல்லீட்டாள்….” அவனுடைய மனதில் ஆணி அடித்தது போல் பதிந்து விட்டாள் நிர்மலா. அந்த சிறப்புத் தேர்வில் அழகர்சாமி அவனுடைய மாவட்டத்திலேயே முதல் மாணவனாகத் தேர்வு பெற்றதும் அது அவனுடைய வாழ்க்கையையே மாற்றி அமைத்ததும் தனிக்கதை. அதற்கப்புறம் நிர்மலாவை சந்திக்க வாய்ப்பே கிடைக்கவில்லை அழகர்சாமிக்கு - இதோ கோலாலம்பூரில் இப்போது சந்திக்கும் வரை. நிர்மலாவிற்கு தனிமை தான் மிகப்பெரிய சுமையாக அழுத்தியது. அழகரும் ரமேஷும் காலையில் கிளம்பிப் போனால் இரவு தான் முன்னே பின்னே என்று வருகிறார்கள். அவளிடம் கிடக்கும் அபரிமிதமான நேரத்தை என்ன செய்வதென்றே தெரியாமல் தடுமாறினாள். அக்கம் பக்கத்திலும் சீனர்களும் மலாய்க்காரர்களும் தான். மொழிப் புரிதலை மீறி அவர்களுடன் பழகுவதற்கும் வாய்ப்பில்லாமல் அவர்களும் வீட்டைப் பூட்டிக் கொண்டு உள்ளேயே அடைந்து கிடந்தார்கள். இரவுகளில் அன்புக்கும் நெருக்கத்திற்கும் ஏங்கி ரமேஷை அணைத்துக் கொள்ளும் நேரத்தில் கூட அவன் மனதுக்குள் கணக்குப் போடத் துவங்குவான். ‘இது வீட்டுக்குத் தூரமாகி எத்தனையாவது நாள்? இன்று கூடினால் கருத்தரிக்க வாய்ப்பு உள்ளதா?’ என்று யோசித்த பின்புதான் அவளை விலகுவதும் நெருங்குவதும் நடக்கும். மனைவியுடனான தாம்பத்ய உறவில் கூட இப்படிக் கணக்குப் பார்க்கிற புருஷனிடமிருந்து என்ன சந்தோஷத்தை எதிர் பார்க்க முடியும் என்று எரிச்சலேற்பட்டது நிர்மலாவிற்கு. குழந்தைப் பேற்றிற்காக கூட்டிப்போன மருத்துவமனைகள், சந்தித்த ஸ்பெஷலிஸ்டுகள், வாங்கித் தந்த மாத்திரை டானிக்குகள், போட்டுக் கொண்ட ஊசிகள்… என்று அவள் உடம்பெல்லாம் சூடு பரவி வயிறே தீப்பிடித்தது போலாகி விட்டது. ”டிக்கெட் எடுத்து மதுரைக்கு என்னைத் திருப்பி அனுப்பி வச்சுடுங்க. குழந்தை பெத்துக்கிறதுக்காக என்னை நீங்க கொன்னாலும் கொன்னு போட்ருவீங்க போலருக்கு….” என்று ரமேஷ்பாபுவிடம் வெடித்து விட்டாள் ஒருநாள். அழகர்சாமி தான் நிர்மலாவிற்கென்று ஒரு தொலைக்காட்சியும் விசிஆரும் வாங்கிக் கொண்டுவந்து கொடுத்தான் ஒருநாள். ரமேஷ்பாபு கூட கடிந்து கொண்டான் – இதெதற்கு வெட்டிச் செலவென்று. ரமேஷ் பணம் எதுவும் தர வேண்டியதில்லை என்றும், ஊருக்குத் திரும்பிப் போகும் போது அழகர்சாமியே தொலைகாட்சிப் பெட்டியையும் விசிஆரையும் இந்தியாவிற்குக் கொண்டு போய்க் கொள்வதாகவும் சொல்லவும் அமைதியாகி விட்டான். அழகர்சாமியே நிர்மலா பகலில் பார்ப்பதற்காக நிறைய சினிமா கேசட்டுகளையும் வாடகைக்கு எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான். அவன் கொண்டு வந்து கொடுத்ததெல்லாம் அபூர்வமான பழைய படங்கள். அவள் அப்படித்தான், பன்னீர் புஷ்பங்கள், உதிரிப் பூக்கள், அழியாத கோலங்கள், முள்ளும் மலரும், புவனா ஒரு கேள்விக்குறி, நிழல் நிஜமாகிறது, மனிதரில் இத்தனை நிறங்களா, சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்….. ஒரு சனிக்கிழமை இரவு அழகர்சாமி வரவேற்பறையில் விசிஆரில் அவள் அப்படித்தான் படம் பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று திரும்பிப் பார்த்தால் நிர்மலா அவளுடைய அறையின் வாசலில் உட்கார்ந்தபடி அவளும் படம் பார்த்துக் கொண்டிருந்தாள். ”நீங்க தூங்கலிங்களா மேடம்…..” என்றான் அழகர்சாமி. ”ஏண்டா வலிஞ்சு மரியாதை குடுத்துப் பேசுற? அது ரொம்பவும் செயற்கையா இருக்குடா. என்னை மாதிரி இயல்பா பேரு சொல்லிக் கூப்பிட்டுப் பேசுடா குல்ஸ் தடியா….” என்று எழும்பி வந்து அழகர்சாமிக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு படம் பார்க்கத் தொடங்கினாள். ”இந்தப்படம் நீ இன்னும் பார்க்கலையா நிர்மலா…?” ”எத்தனையோ தடவை பார்த்துட்டேன். ஆனால் ஒவ்வொரு தடவை பார்க்குறப்பவும் புதுசா தெரியுது. எப்படிடா இப்படிப்பட்ட படங்களா தேடிப்பிடிச்சு எடுத்துட்டு வந்து குடுக்குற…?” ”சரி நிர்மலா, நீ உள்ள போய்ப் படுத்துக்கோ. ரமேஷ் முழிச்சிட்டான்னா உன்னைத் தேடுவான். அப்புறம் என்னோட இந்த ராத்திரியில தனியா இருக்கிறதப் பார்த்தா சந்தேகப்படப் போறான்….” ”மனசில கள்ளமில்லைன்னா நாம யாருக்கும் எதுக்குடா பயப்படனும்…!” ”நாமளும் இந்த சமூகத்துல தான வாழ்ந்தாகனும்….” ”ஏண்டா அழகரு இப்படிப் பயப்படுற? ரமேஷ் வீட்ல இல்லைன்னா நீ சீக்கிரம் வேலை முடிஞ்சுட்டாலும் வீட்டுக்குள்ள வர மாட்டேன்ற. பார்க்குல போய் உட்கார்ந்து நேரம் கடத்தீட்டு அவர் வந்தப்புறம் தான் வீட்டுக்குள்ள வர்ற…” அந்த இரவிற்கு அப்புறம் அவர்கள் இருவரும் இரவுகளில் சேர்ந்து படம் பார்ப்பதும் அந்தரங்கமான உரையாடல்களும் தொடர்ந்தன. ஒரு சனிக்கிழமை சைட்டில் அவ்வளவாக வேலை இல்லை என்று அழகர்சாமி சீக்கிரமே வீட்டிற்கு வந்து விட்டான். பெரும்பாலும் ரமேஷும் சனிக்கிழமை மத்தியானத்திற்கு மேல் வீட்டிற்கு வந்து விடுவான் என்பதால் வீட்டைத்தட்டி உள்ளே வந்து விட்டான். ஆனால் ரமேஷ் வந்திருக்கவில்லை. ”அவர் இன்னைக்கு ஏதோ சைட் விஸிட் போயிட்டு லேட்டாத்தான் வருவேன்னு காலையிலேயே சொல்லீட்டுப் போயிட்டார்….” என்றாள் நிர்மலா. இருவரும் சேர்ந்து அழியாத கோலங்கள் படம் பார்த்தார்கள். ”பதிமூனு வயசுல லவ் பண்ணலாமான்னு கேட்ட, அதுக்கப்புறம் ஏண்டா நீ என்னைத் தேடவே இல்ல….” என்று நிர்மலா கேட்டது அழகர்சாமிக்குக் கிளர்ச்சியாக இருந்தது. அதன் நீட்சியாக இருவரும் அழகர்சாமியின் அறைக்குள் போய் படுத்துக் கொண்டார்கள். சில மாதங்களுக்கு முன்பு அழகர்சாமி நிர்மலாவுடன் தனித்திருந்த ஒரு சமயத்தில் ”நான் குழந்தை உண்டாகி இருக்கிறேன்……” என்றவள், ”குழந்தை உன்னோடது…..” என்று சொன்னதை கேட்டதும் அழகர்சாமிக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. “அதெப்படி அத்தனை உறுதியாச் சொல்ற?” ”எந்தத் துளி கருவாகும்னு அதைச் வாங்கிச் சுமக்குறவளுக்குத் தெரியாதா?” நிர்மலா குழந்தை உண்டாகி இருப்பதாய்ச் சொன்ன சில நாட்களிலேயே மலேசியா பொருளாதாரம் சரிவைச் சந்திக்கத் தொடங்கி இருந்தது. அழகர்சாமி மலேசியாவிற்கு வேலைக்கு வரும்போது ரிங்கட்டின் மதிப்பு பனிரெண்டு ரூபாயாக இருந்தது. அது படிப்படியாய் உயர்ந்து பதினாலு ரூபாய் வரைப் போனது. ஆனால் பொருளாதாரச் சரிவு தொடங்கியதும் ஒரு ரிங்கட்டின் இந்திய மதிப்பு எட்டு ரூபாயாக அதல பாதாளத்தில் வீழ்ந்தது. பொருளாதாரச் சரிவின் காரணமாக நிறைய பிராஜெக்டுகள் எல்லாம் அப்படி அப்படியே நிறுத்தப்பட்டன. வேலையிழப்புகள் தொடங்கின. வேலையில் பூமிபுத்ராக்களுக்கும் – மலாய்க்காரர்களுக்கும் - உள்ளூர் வாசிகளுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டுமென்றும், தவிர்க்கவே முடியாத பட்சத்தில் மட்டுமே வெளிநாட்டினர்களை வைத்துக் கொள்ள வேண்டுமென்றும் மற்றவர்களை எல்லாம் திருப்பி அனுப்பும்படியும் அரசு ஆணையிட்டது. அதன்படி அழகர்சாமியின் கம்பெனியும் முதலில் டிசைன் இன்ஜினியர்களை ஒவ்வொருவராக வெளியேற்றத் தொடங்கியது. சைட்டில் வேலை செய்பவர்களுக்கு பிராஜெக்ட் நிறுத்தப்பட்டால் அவர்கள் அப்படியே வீட்டிற்கு அனுப்பப் பட்டார்கள். தொலைந்து போனதாய் பதட்டமடைய வைத்த ரமேஷ்பாபு அன்றைக்கு இரவு எட்டு மணிக்கு மேல் வீட்டிற்கு வந்தான். மிகவும் சோர்ந்து போயிருந்தான். நிர்மலா அவனைக் கட்டிக் கொண்டு கதறி அழுதாள். அழகரும் ரமேஷும் சேர்ந்து அவளைச் சமாதானப் படுத்தினார்கள். ரமேஷ்பாபுவையும் அலுவலகத்தில் வேலையிலிருந்து விடுவிப்பதற்கான ஆணை வழங்கப்பட்டு விட்டதென்று சொன்னான். ரமேஷ்பாபு ஆர்டரை வாங்கியதும் எம்.டியிடம் போய் தன்னுடைய மனைவிக்கு இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் குழந்தை பிறந்து விடும் என்றும் அதனால் குழந்தை பிறக்கும் வரைக்குமாவது மலேசியாவில் தங்கி இருக்க வாய்ப்பளிக்கும் படியும் இறைஞ்சி இருக்கிறான். அவர்தான் போர்ட் கிளாங் பிராஜெக்ட் ஒன்றிற்கு டிசைன் இன்ஜினியர் ஒருத்தர் தேவையாக இருக்கிறது என்றும் ஆனால் அது காண்ட்ராக்டரின் பிரதிநிதியாக பிராஜெக்ட் சைட் ஆபீஸிலேயே உட்கார்ந்து டிசைன் வேலைகளையும் செய்ய வேண்டும் என்றும் சொல்லவும் ரமேஷ்பாபுவும் அதற்கு உடனேயே சம்மதம் தெரிவித்திருக்கிறான். ”நீ பார்த்திபனைப் போய்ப் பார்த்து பிராஜெக்ட் பற்றிய மற்ற விபரங்களை வாங்கிக் கொள்…” என்றும் சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார். ரமெஷ்பாபு பார்த்திபனிடம் போய் எம்.டி சொன்னதைச் சொல்லவும், ”உனக்கென்ன பைத்தியம் புடிச்சிருச்சா? வேலை நடக்கிறது ஒரு தீவுல. அது கிளாங்கிலருந்தே ரொம்ப தூரம். அங்கயெல்லாம் பெரிய அளவுல பொதுப்போக்குவரத்து கிடையாது. டாக்ஸியும் அவ்வளவா கிடைக்காது. கிளாங்கையும் அந்தத் தீவையும் இணைக்கிறது ஒரே ஒரு பாலம் தான். சுற்றிலும் கடல் தான். வாயும் வயிறுமா இருக்கிற பொண்டாட்டிய வச்சுக்கிட்டு அங்கபோய் எப்படி வாழ்வ?” ரமேஷ் ’எப்படியாவது சமாளித்துக் கொள்கிறேன்….’ என்று பிடிவாதம் பிடிக்கவும், ”உனக்கெல்லாம் சொல்லிப் புரிய வைக்க முடியாது. இன்றைக்கு மதிய உணவிற்குப் பின்னால் எனக்கும் அங்கு போக வேண்டிய வேலை இருப்பதால் நீயும் என்னுடன் கிளம்பி வந்து சைட்டைப் பார்த்துட்டு முடிவு பண்ணு…” என்று சொல்லி அழைத்துப் போய் விட்டார். “அந்த வேலைய ஒத்துக்கிறதுன்னு முடிவு பண்னீட்டியா ரமேஷ்…?” என்றான் அழகர்சாமி. “அய்யோ, டெரிபில். அதிலெல்லாம் போய் வேலை செய்யவே முடியாது….” என்றான் ரமேஷ் சோர்ந்து போய். குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் குறித்துக் கொடுத்த நாள் என்பது அவன் மலேசியாவை விட்டு வெளியேற வேண்டிய நாளுக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாக இருந்தது. ஆனாலும் அவன் மனம் தளர்ந்து விடவில்லை. கடைசி தினத்தில் குழந்தை பிறந்து விட்டாலும் அதைக் காரணம் காட்டி இரண்டு மூன்று மாதங்களுக்கு விசாவை நீட்டித்து குழந்தைக்கு மலேசியக் குடியுரிமை பெற்றுவிடலாம் என்று நம்பிக்கையாய்க் காத்திருந்தான். ஆனாலும் பிரசவ நாள் நெருங்க நெருங்க நிர்மலாவைச்சுற்றி பயம் வலைபின்னத் தொடங்கிவிட்டது. நிர்மலா முரண்டு பிடிக்கத் தொடங்கிவிட்டாள். ”இந்தியாவுக்குப் போயிடலாங்க. குழந்தை பிறந்ததும் அதைக் கவனிச்சுக்கிறதுக்கு அனுபவமுள்ள துணை வேணுங்க. நான் செத்துப் போயிடுவேனோன்னு பயமா இருக்குங்க…..” என்று ஒரு அஸ்திரத்தை வீசினாள். ரமேஷ்பாபு பயந்து விட்டான். அதனால் அவனும் இந்தியாவிற்கே போய்விடலாம் என்று முடிவெடுத்தான். அழகர்சாமியும் திடீரென்று ஒருவழி அம்மாவைப் போய்ப் பார்த்துவிட்டு வரலாம் என்று நினைத்தவன், அவசரமாய் அலுவலகத்திற்குப் போய் ஒருவாரம் விடுப்பு எழுதிக் கொடுத்துவிட்டு ரமேஷுடனே ஊருக்குக் கிளம்பினான். கணவனின் தோளில் வசதியாய்ச் சாய்ந்து கொண்டு “ஸாரிப்பா, உன்னோட ஆசையைத் தான் என்னால பூர்த்தி பண்ண முடியல….” என்ற நிர்மலாவின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. “நம்ம குழந்தைக்கு மலேசியா குடியுரிமைக்குப் பிராப்தமில்ல….” என்றான் ரமேஷும் ஆறுதலாய் மனைவியை அணைத்துக் கொண்டு. விமானம் மெதுமெதுவாய் மேலெழும்பி வானத்தில் சமதளத்தில் பறக்கத் தொடங்கிய கொஞ்ச நேரத்தில் நிர்மலா அந்த வலியை உணர்ந்தாள். வலியின் வேகத்திலும் வலிமையிலும் துல்லியமாய்ப் புரிந்தது அது பிரசவ வலி. அழகர்சாமி தான் விமானப் பணிப்பெண்ணிடம் ஓடிப்போய்ச் சொன்னான். ‘விமானத்தில் டாக்டர் யாராவது பயணிக்கிறீர்களா…?’ என்ற அறிவிப்பு ஒலித்தது. பயணிகள் பலரும் பதட்டமும் பரிதாபமாயும் நிர்மலாவைப் பார்த்துக் கொண்டிருக்க, சுமார் ஐம்பது வயது மதிக்கத் தக்க ஒரு பெண்மணி தன்னுடைய மருத்துவ உபகரணங்கள் அடங்கிய சிறிய பெட்டியுடன் நிர்மலாவை அணுகினாள். பைலட் கேபினை ஒட்டி நல்ல அகலமாய் இருந்த எக்ஸிக்கியூட்டிவ் காலி இருக்கைகளில் நிர்மலாவைப் படுக்க வைத்து அவசரமாய்க் கிடைத்த துணிகளில் ஒரு ஸ்கிரீன் மறைப்பை ஏற்படுத்தி….. அடுத்த சில நிமிஷங்களில் ஒரு பெண் சிசுவின் அழுகை விமானம் முழுவதும் எதிரொலித்தது. விமானப் பணிப்பெண்கள் சந்தோஷமாக தங்களின் விமானத்தில் ஒரு குழந்தை பிறந்ததைக் கொண்டாடும் விதமாக பயணிகள் எல்லோருக்கும் சாக்லேட்டுகளை விநியோகிக்கத் தொடங்கினார்கள். “இப்படி நடுவானத்துல குழந்தை பிறந்துருக்கே, இவளுக்கு எந்த நாட்டோட குடியுரிமை கிடைக்கும்…?” என்று விமானப் பணிப்பெண் ஒருத்தியிடம் கவலையாய் விசாரித்தாள் நிர்மலா. “உன் குழந்தைக்கு என்னம்மா அதிர்ஷ்டக்காரி. ஆகாய புத்ரி அவள். எந்த நாட்டோட பிரஜையா வேணுமின்னாலும் ஆகலாம் அவள்….” என்றாள் அவள். நிர்மலா தன்னுடைய புருஷனை பெருமை பொங்கப் பார்த்து “இப்ப உனக்கு சந்தோஷம் தான…?” என்றாள். “அதெல்லாம் எதுவும் வேண்டாம். நம்ம பொண்ணு இந்திய பிரஜையாவே வளரட்டும்….” என்று சொல்லி குனிந்து குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டான். “ஏன் பெண் குழந்தையா பிறந்திட்டதால தான அப்படிச் சொல்ற ரமேஷ்….” என்று கிண்டல் பண்ணினான் அழகர்சாமி.  நிறைவுற்றது

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.