சி. கண்ணன்
சிறுகதை வரிசை எண்
# 207
சரிங்க சார்…
பனித் துளியை விட கொஞ்சம் பெரிய சாரல் விழுந்து கொண்டிருந்தது. இதமான மெல்லிய காற்று… சாரலையும், மனதையும் தழுவிக்கொண்டு சென்றது. ராமச்சந்திரன் பல்சர் வண்டியில், ஹெல்மெட் போடாமல், சாரலை உடம்பில் வாங்கிக் கொண்டு, ஸ்நேகா மில்லின், புளிய நிழல் பார்க்கில் நிறுத்திவிட்டு, சவுரியமாக திரும்பிப் பார்க்கும் போது. எதிரே, உள்ள கார்பார்க்கில் எம்டியின் கார் நின்றிருந்தது. எப்போதும், எம்டியின் கார், அலுவலக வாயில் அருகிலேயே நிற்கும். இன்று ஏன், பொதுவான கார்பார்க்கில் நிற்கிறது? தனக்குள் கேள்வி கேட்டுக்கொண்டு, மில்லின் பொருள் இருப்பு கட்டிடத்திற்கு நடந்தான்.
ராமச்சந்திரனுக்கு 35 வயதிருக்கும். நிறம் கருப்புதான், இருந்தும் பார்ப்பதற்கு கலையாக இருப்பான். இன்னும் திருமணமாகவில்லை. 10ம் வகுப்பு முடித்தவிட்டு, 25 வயது வரை கோயம்புத்தூரில்தான் வேலை பார்த்தான். திருமணத்திற்குப் பெண் எதுவும் சரியாக அமையாததால், சில வருடமாக ஸ்நேகா மில்லில் வேலை பார்க்கிறான்.
ஊரில் உள்ளவர்களுக்கு ஒரு வாட்சப் குருப், வேலை செய்கிற இடத்தில் உள்ளவர்களுக்கு ஒரு வாட்சப் குருப் உருவாக்கியுள்ளான். இரண்டு வாட்சப் குருப்பிலும், ஆகாத போகதா விசங்களைப் பகிர்ந்தாலும், கல்யாணம், காதுகுத்து, கிடாவெட்டு, திருவிழா போன்ற தகவல்களை பரிமாறுவதும், இணைந்து போவதை உறுதிப்படுத்தவும், இந்த வாட்சப் குருப் பயன்படுகிறது. நல்ல நிகழ்வென்றாலும், துக்க நிகழ்வென்றாலும், நண்பர்களுக்கு தகவல் கொடுப்பது, ஒருங்கிணைப்பது போன்றவற்றை முழு விருப்பத்தோடு செய்வான்.
ராமு இருக்கிற இடம் கலகலப்பாக இருக்கும். யாரையும் எளிதில் சிரிக்க வைத்துவிடுவான். சின்ன மனுசன், பெரிய மனுசன் எல்லாரையும் கலாய்ப்பான். மகிழ்ச்சிக்காக யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. பெருசுக எல்லாம், அவங்க சிய்யான் சின்னக் கருப்பு மாதிரி அப்படியே பேசுறான் என்பார்கள். சின்னக்கருப்பை எல்லோரும் சக்கரை என்றே அழைப்பார்கள். அவர் சக்கரையாக பேசுவார் என்பதால் அந்தப் பெயர் என்பது மந்தையில் பேசும் போதுதான் தெரியும். இந்தத் தலைமுறைக்கு ராமு தாத்தா சக்கரை என்றுதான் தெரியும். அவரது உண்மையான பெயர் சின்னக் கருப்பு என்பது பலருக்குத் தெரியாது.
ராமுவிடம் உள்ள இன்னொரு நல்ல விசயம், இடம் பொருள் பார்த்து பேசுவது, நடந்து கொள்வது. தன்னுடைய கிண்டல் பேச்சால் யாருடைய மனம் நோகாமல் பார்த்துக் கொள்வான். சக்கரை வாரிசு என்பதில் ராமுக்கு உள்ளுற பெருமை தான்.
”ராமச்சந்திரா…! ராமச்சந்திரா…!” வலது கையில் குடையைப் பிடித்துக்கொண்டு, இடது கையால் அழைத்தார் பியூன் பாபு.
”என்னாண்ணே… இந்த மழைக்கு குடை வேறயா..” என்றான் ராமச்சந்திரன். ”ம்… இருக்கட்டும். உன்னைய எம்டி கூப்பிடுறார்”. என்றார் பாபு.
”என்னைய எதுக்குண்ணே கூப்பிடுறார்…”
”ம்… மழைத் தண்ணிய ஒம் ஒடம்புல சேகரிக்கிற வித்தைய கேட்க கூப்பிடுவார்…”
”என்னன்னு கேட்டா, கிண்டலா… நாளைக்கு விலக்குக்கு வா… உனக்கு ஒரு பாயாசம் போடச்சொல்றேன்….” என சிரித்துக் கொண்டே சொன்னான்.
”எனக்கு பாயாசம் போடுறதில்லாம் இருக்கட்டும், முதல்ல உள்ள போ, நீ, ஒம் பல்சரை நிறுத்தும் போதே எம்டி வரச்சொன்னார்… லேட் பன்னமா போ…”
”சரிண்ணே…” தலையாட்டிக் கொண்டே, ராமு, பெரிய எட்டு வைத்தான், சின்னதாய் விழுந்து கொண்டிருந்த தூரல் பெரிதாக விழுந்தது. மேலும் பெரிதாக நனைந்து விடாமல் ஓடி எம்டி அறையின் முன்னாடி நின்றான். தலை முடியை சரிசெய்து கொண்டு, பேண்ட்டிலிருந்து கைத்துணியை எடுத்து முகத்தை தொடைத்துக் கொண்டான்.
மழை பெய்யத் தொடங்கியதால் மண்வாசம் கம கமன்னு வந்தது. ஏசி அறையின் குளிர்ந்த காற்று, எம்டி அறை இடுக்கிலிருந்து வந்து கொண்டிருந்தது. ஊரில் பெரிய மழை பெய்து கொண்டிருக்குமோ, என தலையை சாய்த்து, காங்கிரிட் சுவரின் இடைவெளியில் தெற்கு நோக்கிப் பார்த்தான். போனை எடுத்து, சிலம்பரனுக்கு, “இங்க மழை பேயுது, நம்மூர்ல மழை பேஞ்சா வீடியொடு எடுத்து குருப்புல போடு”ன்னு மெசேஸ் போட்டான். அப்படியே, கோடை மழையை வீடியோ எடுத்தான். உள்ளிருந்து சத்தம் வர, சுதாரித்துக் கொண்டவன், உடம்பை வலைத்து, தலையை கொஞ்சம் தாழ்த்திக் கொண்டு உள்ளே போனான். எம்டியின் அம்மா பொன்னுத்தாயின் பெரிய புகைப்படத்திற்கு மாலை அலங்காரம் செய்து முடித்து விட்டு தங்கமுத்து வெளியேறினார்.
”ராமு…”
”சார்…”
”உட்காருப்பா,”
”பராவாயில்ல சார்…”
”உங்க மேனேஜர் வந்துட்டாரா….”
”சார், ஒருமணி நேரம் பெர்மிசன் கேட்டிருக்கிறார் சார்…” என்ற பதிலைத் தந்துவிட்டு, பொன்னுத்தாய் அம்மா படத்தையும், அதற்கருகில் இருந்த அன்னை மீனாட்சி படத்தையும் ஓரக்கண்ணால் பார்த்தான்.
”நீ, வேலைக்கு சேர்ந்து பத்து வருசத்துக்கு மேலாச்சுல்ல?”
”ஆமாங்க சார்,”
”உங்க செக்சன்ல உங்க காண்டிரிபூசன் எந்தளவுக்கு இருந்துச்சுன்னு எனக்குத் தெரியும். வேலையை புரிஞ்சிகிட்டு ஹார்ட் வோர்க் பன்ற, ஸ்டாக் இன்சார்ஜ்ஜா ரெண்டு வருசத்துக்கு முன்னாடி தானா புரோமோசன் ஆன,”
”ஆமாங்க சார், என வேகமாக தலையாட்டினான்” ராமு.
”நல்ல பையன்தான் நீ, ஆனால், உங்க மேல ரெண்டு முனு ரிமார்க் வந்திருக்கே…” ன்னு சொல்லி முடிக்க எம்டியின் செல்போன் ஒலித்தது. உடனே போனை அட்டன் செய்ததைப் பார்க்கும் போது, எதிர் முனையில் இருப்பவர்கள் வேண்டியவர்களாக இருப்பார்கள் போலத் தெரிந்தது..
ஏசி அறை ராமச்சந்திரனுக்கு புளுக்கம் தரத் தொடங்கியது. இதமான தென்றலோடு வந்தவனுக்கு, பங்குனி மாத உச்சி வெயில் உடம்பெல்லாம் ரணமாகப் படுவதுபோல் இருந்தது. என்னவாக இருக்கும், என யோசிக்கத் தொடங்கினான்.
போனில் பேசிக்கொண்டிருந்தவர், ”ராமு… போயிட்டு உங்க மேனேஜர் வந்ததும் வா,” என்று கண்டிப்பு இல்லாமல், இனிமையாகவும் இல்லாமல் சொன்னார். மழை தந்த மகிழ்ச்சியோடு சென்ற ராமு, சோர்ந்த முகத்தோடு வெளியே வந்தான். வெளியில் யாரும் இல்லை. பங்குனி மாதம், காலையில் வந்த மழை, வந்த வேகத்தோடு போயிருந்தது. ஷிப்ட் மாறியவர்கள், அவரவர் வேலைகளை செய்து கொண்டிருந்தனர். போனை சுவிட்ச் ஆப் செய்து, கொடுத்துவிட்டு, ஸ்டாக் ரூமுக்கு போனான்.
”ராமு அண்ணா, என்ன பெரிய யோசனையா போறீங்க?” என்றான், எதிரே வந்த, கேண்டினில் வேலை செய்யும் சந்திரன். ஆனால், எதையும் காதில் வாங்காத ராமு, பூமிக்கு வலிக்காமல் நடந்து கொண்டிருந்தான். மழையின் ஈரம் தார்ச்சாலையில் லேசான வெக்கையை கொடுத்தது. சாலையின் இருபுறமும் இருந்த அரளிச் செடிகளின் பூக்கள் மேல் விழுந்த மழைத்துளிகள், மலர்களை மகிழ்ச்சி கொள்ள வைத்திருந்தது. எதையும் பார்க்காமல், எதிரே வருபவர்களையும் பார்க்காமல் நடந்து கொண்டிருந்தான். பாய்லரில் இருந்த செல்வம், ஏன் இப்படி போறான்… “காலாகாலத்துல கல்யாணம் பண்ணாம” என்று அவராகவே பேசிக் கொண்டிருந்தார். பாய்லரில் எரிக்கிற வேலை செய்தாலும், யார் மீதும் எரிச்சல் பாடதாவர் செல்வம். மில்லுற வேலை செய்யிற பசங்க வெளிய சேட்டை செஞ்சாலும் சத்தம் போட்டு, நல்வழிபடுத்தக் கூடியவர்.
டேபிளை சுத்தம் செய்து விட்டு, கம்யூட்டரை ஆன் செய்தான் ராமு. ஸ்டாக்கில் வேலை செய்து கொண்டிருக்கும் குமார், சிவா, அஜித், சூர்யா நாலு பேரும், ஒன்னா வந்து குட்மார்னிங் வைத்து விட்டுச் சென்றனர்.
முதல் ஆளாக முத்துமுருனும், கமலசாமியும் தள்ளுவண்டிய தள்ளிக் கொண்டு வந்தனர். ”சார், பேரல் எடுத்துக்கிறோம், எழுதிக்கோங்க” என்றனர். ”ம்… ம்…” ன்னு தலையாட்டிக் கொண்டே, நோட்டை எடுத்தான். ட்ராவ தொறந்து எதையோ தேடிக் கொண்டிருந்தான். ராமுக்கு சில நிமிடங்கள் கழித்துத்தான், என்ன தேடுறோம் என்பதே உதித்தது. நிமிர்ந்து உட்கார்ந்தான். சார், “என்ன கையெழுத்து வாங்காம வெளிய அனுப்புறீங்க” சின்ன புன்னகையோடு கேட்டான் முத்துமுருகன்.
”அஜித், இங்க வா, செக்பன்னிட்டு எழுதி, கையெழுத்து வாங்கு,”
”சரிங்க சார்,” என்று எண்ணிப் பார்த்துவிட்டு கையெழுத்து வாங்கினான். தலையில் கைவைத்து, கண்ணை மூடினான் ராமு. அந்த ரெண்டு மூனு ரிமார்க் என்னவா இருக்கும். போன வாரம் மயில்கொன்றை மரத்தடியில் எம்டியோட பெர்சனல் செக்ரட்ரி கவிதாவோட கடலை போட்டிக்கிட்டுருந்தோமே, அதுவா இருக்குமா.. “நீங்க ஸ்டாக்கெல்லாம் நல்ல மெயிண்டன் பன்றீங்கன்னு” எம்டி சொல்றாருன்னு சொல்லி அதுதான தொட்டுத் தொட்டுப் பேசுச்சு. நாம ஒன்னும் தப்பா எதுவும் பேசலையே. கவிதா, “சிரிக்காத, ஒங்க கண்ணக் குழிக்குள்ள விழுந்திருப்போறேன்” ன்னு சினிமா டயலாக்தான சொன்னேன். அப்பயே, கவிதா புருசன் வந்துட்டான். அவனும் நல்லா சிரிச்சு பேசுனான். செவ்வாக்கிழமை திருவிழான்னு வரச்சொன்னானே. நாம ஒன்னும் வரம்பு மீறலையே… அவ புருசன் எதுவும் டார்ச்சர் பன்னி, எம்டி கிட்ட பத்தவச்சிருப்பாளோ! இது அப்படி பெரிய குத்தமா. ம்…
டமார்.. ங்ங்ங்… ன்னு சத்தம், யோசனையிலிருந்து திரும்பிப் பார்த்தான். கொரானவுக்குப் பிறகு வேலைக்கு வந்த சூர்யா, கேத்தலை நழுவவிட்டு, விழுந்துட்டான். ”என்னடா புல்தடுக்கியா இருக்க” பெங்களுர்ல பெரிசா அதை செஞ்சேன் இதைச் செஞ்சேன்னு, இப்படிக் கிடக்கியேன்னு குமார் சிரித்தான். “கீழ விழுந்தா இப்படித்தான் பேசுவியாக்கும், கைபிடிச்சு தூக்கி விடு”…ன்கு கடுமையாச் சொன்னான் ராமு. சூர்யா, நான் சும்மா தான்… என வார்த்தையை முழுங்கிக் கொண்டு, முகம் சுருங்கிப் போனான் குமார்ஃ அருகில் போய் நின்றான். குமாரின் கையைப்பிடித்து எந்திருச்சி, கை கால்களை உதறிக் கொண்டான் சூர்யா.
ச்சே… இவ்வளவு பெரிய கோபம் வேண்டியதில்லையே என தன்னையே கடிந்துகொண்டு கண்ணை மூடினான் ராமு.
ஊர்ல, பொன்னுச்சாமி கேதத்துக்கு வந்தப்ப, வேட்டுப்போட்டு குத்தாட்டம் போட்டோமே, அதைப் பார்த்திருப்பாரோ, ம்… அப்ப அவர் இல்லையே, இருந்தாலும் நம்மூர்ல ஆடுறது அது பெரிய தப்பில்லையே… அன்னைக்கு, காரைக்காலிருந்து, சரவணன் வந்திருந்தான். பழைய தோஸ்த், கொஞ்சம் சரக்குப் போட்டு ஆடிட்டமோ… ஊர்ல ஆடுறது வழக்கம் தானே… ஆடாம இருந்தா, இந்தப் பயக எல்லாம் ஒங்க மொதலாளி வந்திருக்கிறாருன்னு, பேசமா இருக்கியான்னு பேசியிருப்பாய்ங்க…
ச்சோ… என்னவா இருக்கும், தலை சுத்துதே…
”அஜித், கேண்டினுக்கு போயிட்டு வாரேன், மேனேஜர் வந்தா சொல்லிரு.” டீ குடிக்க வேகமாக நடந்தான். ஒரு வேளை, நம்ம இஷ்டத்துக்கு கேண்டினுக்கு போய் டீ குடிக்கிறத சொல்கிறாரா…வேலையை ஒழுங்கா செஞ்ட்டுதான போயிட்டு வாரேன்… ம்…ம்…
கேண்டின் கேசியர்கிட்ட நேத்து டீ சரியில்லைன்னு சத்தம் போட்டோமே, அதைச் சொல்லியிருப்பானா, அந்த கேசியர் விஜய் மோசமான ஆளு, ஆறு வருசத்துக்கு முன்னாடி, கேண்டின் வாஷ்பேசின் மறைவுல, ஒத்த வீட்டு புஷ்பா லிப்லாக் கொடுத்தாளே, அதைச் சேர்த்து சொல்லியிருப்பான, இதுல நான் தப்பு செய்யலையே, அவளும் கல்யாணம் கட்டிக்கிட்டு, ரெண்டு ஆம்பள புள்ள பெத்துட்டாளே.
எங்கம்மாகிட்ட சொல்லிட்டு, செல்வம் அண்ணனை கூப்பிட்டு பொன்னுகேட்டு போனா, புஷ்பா அப்பன், “மாப்ளன்னு பேச்சுக்குதான் அந்தக் காலத்துல இருந்து கூப்பிடுறோம், அதுக்காக பொண்ணு கேப்பிகளோ உங்க சாதிக்கும் எங்க சாதிக்கும் இடையில சண்டையிழுத்து விட்டுறாதீக, தாயா, பிள்ளையா பழகிட்டுகிருக்கோம்”னு மூச்சு விடாம பேசி அனுப்பிவிட்டார். அப்பயே, உம்பிள்ளை சாதிபார்த்தா லிப்லாக் பன்னுனான்னு கேட்டேனே. என்னாச்சு… அடுத்த நாள் அவ வேலைக்கு வரவில்லை, அடுத்த மாசமே கல்யாணமாச்சு, வேண்டவே வேணாமுன்னு நினைச்ச அவங்க சொந்த தாய்மாமன் கூட. நானும் மானங்கெட்டவன், கல்யாணத்துக்கு போய் போட்டாவும் எடுத்தேனே.
யோசித்து நடந்து போக, கேண்டினும் வந்திருச்சு, எதிர்பட்ட கேசியர் விஜய், “ராமு, நேத்து மாஸ்டர் பால் எடை கட்டுனது சரியா அமையல. அது கொஞ்சம் டேஸ்ட் மாறிருச்சு, இன்னைக்கு குடிச்சுப்பாருன்னு” சாதாரணமா சொன்னான். இவன் ஒன்னும் சொல்லியிருக்க மாட்டான். என்னவா இருக்கும்.
முந்தாநாளு, மில்லு வண்டிய விட்டுட்டு, ரயில்வே கேட்டுகிட்ட நின்னுகிட்டிருந்த முருகேஸ்வரிய ஏத்தி வந்தோமே, அதை எவனும் போட்டு விட்டிருப்பானோ. மில்லுக்குள்ள நைட் ஷிப்ட்ல என்னென்னோமோ நடக்குதுங்றாங்க, நான் லிப்ட்தான கொடுத்தேன். எனக்கும் கால காலத்துல கல்யாணம் நடந்திருந்தா, முருகேஸ்வரி வயசுல எனக்கும் ஒரு மக இருந்துருப்பா. முருகேஸ்வரியும் எனக்கு ஒரு வகையில அண்ண மகதான். கொஞ்சம் அப்பா வழி தூரத்து சொந்தம். இதையெல்லாம் போய் அவருகிட்ட எவன் போய் சொல்லியிருப்பான்.
கேண்டினவிட்டு பலமான யோசனையோடு வெளியே வந்தான். சந்திரமுகி நயன்தாரா சேலையை கட்டிகிட்டு முருகேஷ்வரி, ”சித்தப்பா… சித்தப்பா…” என அழைத்தாள். ஏறிட்டு பார்த்த ராமு, ”என்னம்மா” என்றான். சித்தப்பா, வர்ற புதன்கிழமை என்ன பொண்ணுப் பார்க்க கடமலைக்குண்டுல இருந்து வாராங்க. அப்பா, உங்களை வேலைமுடிச்சு திரும்பும் போது வீட்டுக்கு வரச் சொன்னாரு. மறந்திராமா வந்திருங்க. அப்பா போன்ல பேசுவாங்க. நான் இன்னைக்கு கணக்கு முடிக்க வந்தேன்.” முருகேஸ் சொல்லி முடிக்க, ராமு ”சரிம்மா” என்று புன்னகை செய்து அனுப்பிவைத்தான். கொஞ்ச தூரம் நடந்த பின், அய்யோ, அந்தப் பிள்ளைக்கு ஒரு டீ வாங்கிக் கொடுத்து, குடிக்க வைத்து அனுப்பாம விட்டுட்டோமேன்னு வருந்தினான்.
போன மாசம் ஒன்னாம் தேதி எம்டி வீட்டுக்குப் போனோம். அப்ப என்ன நடந்ததுன்னு யோசித்தான். மோகன் தான் நீ போயி, ஒரு கையெழுத்த மட்டும் வாங்கிட்டு வந்துருன்னான். நான் சார்கிட்ட பேசிட்டேன்னும் சொன்னனே. நானும், அந்த பங்களாவுக்கு வெளிய வண்டிய நிறுத்திட்டு, வாசலுக்கு பக்கத்துல இருக்கிற வெளி வரவேற்பரையில்தானே உட்கார்ந்திருந்தேன். தினமலர்ல கிரிக்கெட் புள்ளி விபரத்த தான் படிச்சிக்கிட்டிருந்தேன். வேற எதுவும் செய்யலையே. அவர் பொன்னு ஸ்நேகா, வெளிய போகும் போது கூட, தலைகுனிந்து, எந்திருச்சு நின்னுகிட்டுதான இருந்தேன். அவரு, கையெழுத்துப் போட்டு, புதுக்கார்ல கொழுந்தியாவோட வெளிய போனார். நானும் அப்படியே , வண்டிய எடுத்துட்டு வந்துட்டேன்.
ம்… இதைப் பத்தி மோகன்கிட்ட சொன்னேன், அப்புறம், ஆமா கணேசன்கிட்ட ஸ்நேகா பத்தியும், அவரு கொழுந்தியா பத்தியும் கொஞ்சம் கூடுதல சொன்னத, கணேசன் யார்கிட்டயும் சொல்லியிருப்பான. ச்ச்சே… நமக்கு வாய்ல தான் சனி.
இன்னைக்கு காலையில, இந்த கச்சம்மா கிழவி வெறுங்குடத்த தூக்கிட்டு வந்தப்ப, ”கொஞ்ச நேரம் இருந்துட்டு போடா” ன்னாங்க அம்மா. நான் தான், இப்படியே எதுக்கெடுத்தாலும், சடங்கு சாஸ்த்திரம் பார்த்திக்கிட்டு, என்னம்மா அள்ளிக் கட்டிக்கிட்டன்னு கோவிச்சுட்டு வந்தேன்.
இங்க எம்டி கிட்ட இப்படி என்னன்னு தெரியாமா… சரி என்ன சொல்வாரோ பார்ப்போம் என நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தான் ராமு.
”சார், சார்…” என அழைத்தான் அஜித். ”என்ன?” என்றான் ராமு கொஞ்சம் தெளிவாக.
”உங்கள எம்டி கூப்பிடுறறாம்.”
”மேனேஜர் கூடத்தான் வரச் சொன்னாரு, இன்னும் மேனேஜர் வரலையே.”
”இண்டர்காம்ல இப்பதான் பாபு அண்ணே சொன்னார்.”
”சரி, நான் போயிக்றேன். நீ, அங்கிட்டு இங்கிட்டு போகாம, அங்க போ.”
அரளி மலரை பார்த்து ரசித்துக் கொண்டே அலுவலத்தை அடைந்தான் ராமு. கவிதா பக்கத்துல போய் நின்னு, நலம் விசாரித்துவிட்டு, மோகனுக்கு போன் பன்னினான்.
”மோகன், காலையில் சார் பார்த்து, ரெண்டு பேரையும் பார்க்கனுமுன்னாரு, நீங்க பெர்மிசன் விசயத்தை சொன்னேன். நீ எங்க இருக்க?”
”இப்பதான் புறப்படுறேன். வர அரை மணி நேரம் ஆகும். சொல்லிடு, வந்துடுறேன் சொல்லி கட்பன்னினான்.”
”ராமு, என்ன பன்னிகிட்டு இருக்க, சார் வரச் சொன்னார் என்றார் பாபு.”
”இல்லண்ணே, இன்னும் எங்க மேனேஜர் வரலை என்றான்.”
”உன்னதான் கூப்பிட்டாரு, போ…” ன்னு சொல்லிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டார்.
கொஞ்சம் தைரியத்தோடு உள்ளே போனான். வழக்கம் போல உட்டகாரச் சொல்ல, நின்றுகொண்டுதான் இருந்தான் ராமு.
”ராமு, ஸ்டாக் சாப்ட்வேர் மாத்தலாமுன்னு இருக்கேன். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை டிரையல் போட வாராங்க, நீ, வந்துரு. அப்புறம், மோகன் ரூமுக்கு அடிக்கடி ஏன் போறீங்க. பிரண்ட்சிப் வேற வேலை வேற, மோகன் உனக்கு மேனேஜர். புரிஞ்சிக்குருவ.”
”சரிங்க சார், மாத்திக்கிறேன்.” உடனே பதிலளித்தான். இதை அவர் எதிர்பார்த்தார்.
”ரெண்டாவதா, மில்லுல வேலை பார்க்கிறவங்க கல்யாணத்துக்கு போற, அது உங்க தனிப்பட்ட விசயம். அதை பேஸ்புக்குல போடும் போது, மில் பேரு நல்ல விதமா வர்ற மாதிரி பார்த்துக்கனும். ஏதாவது அடைமொழிய போட்டு, மில் பணியாளர் அப்படி இப்படி எழுதுறதை விட்டுரு”
”சரிங்க சார்…”
”பேஸ்புக் பாக்கிறத விட்டுட்டு ஆழமா வேலையைப் பாருங்க.”
”சரிங்க சார்…”
அதற்கடுத்து எதுவும் பேசாமலேயே தனது ஆப்பிள் லேப்டாப்பில் எதையோ வாசித்துக் கொண்டிருந்தார். இவனிடம் பேசவுமில்லை. உட்காரச்சொல்லவும் சொல்லவில்லை. போகச்சொல்லவும் சொல்லவில்லை. ஆனால் இவன் மட்டும் இரண்டு முறை சரிங்க சார்... சரிங்க சார் என்று பணிவான வார்த்தைகளில் சொன்னான். அடுத்த குற்றச்சாட்டு எதுவா இருக்கும் என்ற அச்சத்தில் அந்த ஏசியிலும் வேர்த்து நின்றான்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்