logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

லீலா ராமசாமி/ Leela Ramasamy

சிறுகதை வரிசை எண் # 206


வாழ்ந்து காட்டுவோம் வாங்க! **************************** காதல் என்றாலே அன்று முதல் இன்று வரை அம்பிகாபதி - அமராவதி, ரோமியோ - ஜூலியட் , லைலா -மஜ்னு என்றுதான் உதாரணம் சொல்கிறார்கள். அந்தக் காதல்களில் என்ன நடந்தது? 'காதலர்கள் மரணித்தாலும் காதலை வாழ வைத்திருக்கிறார்கள்' என்று சொல்கிறார்கள். இது தோற்றுப் போனக் காதலர்களுக்கு வக்காலத்து வாங்குவது போலல்லவா இருக்கிறது? வெற்றி பெற்ற காதல் என்றால் காதலர்கள் இணைந்து, கடைசிவரை வாழ்ந்து, தங்கள் காதலை வெற்றி பெறச் செய்திருக்க வேண்டாமோ? அப்படித் தங்கள் காதலுக்காக உயிர் விட்ட இந்த ஆறு பேரும் ஒரு காதலர் தினத்தன்று மேலுலகில் சந்தித்துக் கொள்கிறார்கள். தங்களுக்குள் மகிழ்ச்சியாக உரையாடுகிறார்கள். "இன்றைக்குப் பூவுலகத்தில் 'காதலர்கள் தினம்' என்று கொண்டாடுகிறார்கள்! நம் காலத்தில் தான் காதலித்த நாம் சேர்ந்து வாழ முடியாமல் போயிற்று. இப்படிக் காதலர்கள் தினம் என்று கொண்டாடும் இன்றைய நாளில் உலகில் காதலர்களுடைய நிலைமை எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டு வரலாமா? பூவுலகில் காதலை மதிக்க ஆரம்பித்து விட்டார்கள் போலிருக்கிறதே!" என்றான் அம்பிகாபதி. "இங்கிருந்து கீழே பாருங்கள்! ஓர் இணை பட்டாம்பூச்சிகள்! அவைகளும் காதலர் தினம் கொண்டாடுகின்றனவோ? அருகிலுள்ள பழச்சாறு கடையைப் பாருங்கள். அங்கே ஒருவருக்காகவே மற்றவர் பிறந்தவர் போன்ற ஒரு அழகான ஆணும் பெண்ணும் பழச்சாறு அருந்துகிறார்கள். அவர்களைப் பார்த்தாலே தெரிகிறது.. அவர்கள் நிச்சயமாகக் காதலர்கள் தான்! அவர்கள் காதலர் தினத்தைக் கொண்டாடுகிறார்கள் போலும். நாம் அவர்களைக் கவனிப்போமா?" என்று சிலாகித்துக் கேட்டான் மஜ்னு. "நமக்கு அந்தப் பட்டாம்பூச்சிகளும் அந்த ஆணும் பெண்ணும் ஒன்றுதான். இரண்டு இணைகளும் பார்க்க அழகாக இருக்கிறார்கள். அவர்களை நாம் வேடிக்கைப் பார்ப்போமா?" கேட்ட ரோமியோவை மற்றவர்களும் ஆமோதித்தார்கள். அப்படியே செய்தார்கள். ****** அதோ அந்த எல்லையற்றப் பரந்த வானில் இரண்டு பட்டாம்பூச்சிகள் பறந்து திரிந்து கொண்டிருந்தன. இயற்கை எனும் ஒப்புயர்வற்ற ஓவியக் கலைஞன் தனது மாயத் தூரிகையால் வரைந்த எத்தனையோ அழகான வண்ண ஓவியங்களில் வண்ணத்துப்பூச்சிகள் முன்வரிசையில் அல்லவா இடம் பிடிக்கும்! அந்தச் சிறகுகளின் வண்ணங்களின் சேர்க்கை இரகசியம் அவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. ஒவ்வொரு பட்டாம்பூச்சிக்கும் ஒரு வித்தியாசமான வண்ணக் குழைவு! பண்டிகைகளில் அழகான வண்ண வண்ணப் புத்தாடைகள் அணிந்த சிறுமியரைப் போல அளவிலா ஆனந்தத்துடன் பறந்து கொண்டிருந்தன. தங்கள் அழகைப் பற்றிச் சற்றுக் கர்வத்துடன் பறந்து சென்று, இவற்றின் வண்ணங்களுடன் போட்டியிடுவது போன்று அற்புதமாகப் பூத்திருந்த மலர்களில் சென்று அமர்ந்தன. சுருட்டி வைத்திருந்த தங்கள் நீண்ட குழல் வாயை நீட்டின. உத்தமப் பெண்கள் தங்கள் மனப் பெட்டகத்தில் மறைத்து வைத்திருக்கும் இரகசியங்களைப் போன்று அம்மலர்களின் ஆழத்தில் தேக்கி வைத்திருந்த மதுவைத் தங்கள் குழல் வாயால் உறிஞ்சிப் பருக ஆரம்பித்தன. அருகில் உயர்ந்து வளர்ந்திருந்த மரத்தின் ஒரு கிளையில் அமர்ந்திருந்த அந்தப் பறவைகளின் கூரிய பார்வையில் அந்தப் பட்டாம்பூச்சிகள் சிக்கின. ****** அவனும் அவளும் ஆளுக்கொரு பழச் சாற்றினை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பானத்தின் இனிய சுவையும் அதன் குளுமையும் நாவின் மையத்தில் பாய்ந்து, பக்கவாட்டில் பரவி மேலண்ணத்தில் ஊற்றாகச் சிலீரென்று குளிர்வித்து, தலை உச்சியைத் தொட்டு மண்டை முழுவதையும் குளிர்விக்கும் மாயாஜாலத்தை அனுபவித்துக் கொண்டிருந்ததில் அவர்களின் இரண்டு பக்கங்களிலும் இருந்த மேசைகளில் வந்தமர்ந்து இவர்களையே வல்லூறுகளாய்க் கவனித்துக் கொண்டிருந்த ஆறு ஜோடி சிவந்த விழிகளைக் கவனிக்கத் தவறிவிட்டனர். ****** அந்தப் பறவைகள் தேர்ந்த வில் வீரனின் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பைப் போல ஜிவ்வென்று நேர்க்குத்தாகப் பாய்ந்தன அந்தப் பட்டாம்பூச்சிகளை நோக்கி! பட்டாம்பூச்சிகளின் மூளையில் எச்சரிக்கை மணி அடித்தது. வினாடியின் பின்ன நேரத்தில் பட்டென்று எழுந்து பறந்து தங்கள் சிறகுகளின் வண்ணத்தோடு ஒத்துப் போகும் வண்ண மலர்களின் கூட்டத்தில் சென்று மலர்களோடு மலர்களாக அமர்ந்தன. "எங்களை நாங்களே காப்பாற்றிக் கொள்ள முடியாத பூச்சிகளாகப் பிறந்ததற்குப் பதில் அந்த அழகான மனிதக் காதல் ஜோடிகளாய்ப் படைத்திருக்கக் கூடாதா இறைவா? எப்படியாவது தப்பி விடுவோமே!" பட்டாம்பூச்சிகளின் வேண்டுதல் இறைவனுக்குக் கேட்டது. ****** அவனும் அவளும் குளிர்பானங்களை முழுவதுமாகக் குடித்து முடித்தவுடன் தான் தலை நிமிர்ந்து தங்களைச் சுற்றிப் பார்க்கத் தொடங்கினர். அவர்கள் இருவரையும் கொலைவெறியோடு பார்த்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்தவுடன் இருவரது கண்களும் பொருள் பொதிந்த பார்வைகளைப் பரிமாறிக் கொண்டன. நிதானமாக எழுந்து தாங்கள் அருந்திய குளிர்பானங்களுக்குப் பணம் செலுத்திவிட்டுச் சட்டென்று வெளியே வந்து அங்கு நின்றிருந்த ஒரு ஆட்டோவில் ஏறிப் பறந்தார்கள். அந்த ஆறு பேரும் இவர்களைக் காரில் பின் தொடர்ந்து துரத்த ஆரம்பித்தனர். ஆட்டோவின் வெளியே பார்த்த அவள் மனம் எண்ணியது, "அதோ அந்த அழகான வண்ணத்துப்பூச்சிகளாய்ப் பிறந்திருக்கக் கூடாதா? அங்கே இந்தப் பாழாய்ப் போன ஜாதிகளும் மதங்களும் அந்தஸ்து பேதங்களும் இருக்காதே! கௌரவக் கொலைகள் இருக்காதே. எப்படியாவது பறந்து தப்பித்திருப்போமே! ஏன் இறைவா இந்தச் சோதனை? இவர்கள் கையில் நாங்கள் சிக்கக் கூடாது." கடற்கரைச் சாலையில் ஓடிக்கொண்டிருந்த ஆட்டோவை விட்டிறங்கி அலைகள் வந்து மோதும் கடற்கரையை நோக்கி ஓடி.. இல்லை.. பறந்து கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்தார்கள். ஆம். அவர்களின் வேண்டுதல் இறைவனுக்குக் கேட்டு, அவர்கள் பட்டாம்பூச்சிகளாக மாறி இருந்தார்கள். இப்போது மேலே பறந்த பறவைகளைப் பார்த்து பயமாக இருந்தது. ****** மலர்கள் பூத்துக் குலுங்கிய அந்த அழகான நந்தவனத்தில் அந்தப் பெரிய செடி மறைவில் சென்று ஒளிந்து கொண்டன மனிதர்களாக மாறிய பட்டாம்பூச்சிகள். அவைகளைத் துரத்தி வந்த பறவைகள் அவர்களை நெருங்கி வந்து அவர்களைக் கொத்த முயன்று சடாரென்று விலகிச் சென்றன. பட்டாம்பூச்சிகள் மகிழ்ச்சியுடன் இறைவனுக்கு நன்றி கூறின. ஆனால்.. 'ஐயோ..! இதென்ன.. அந்த மனிதர்கள் ஏன் நம்மை நோக்கி வருகிறார்கள்?' பெரிய பூச்செடிகளின் பின்னால் சென்று மறைந்திருந்தவர்களின் கைகளைப் பிடித்து இழுக்க முயன்றார்கள் அவர்கள். அவர்கள் வெளியே வந்தவுடன் .. இதென்ன மாயம்.. அவர்கள் பட்டாம்பூச்சிகளாய் மாறிப் பறக்கிறார்களே..? பறந்து கொண்டும் ஓடிக்கொண்டும் இருந்த அந்தப் பட்டாம்பூச்சிகள் இரண்டும் அந்தப் பூக்களில் அமர்ந்து தங்கள் குழல் வாயை நீட்டி மலர்களின் ஆழத்தில் தேங்கியுள்ள மதுவை உறிஞ்ச ஆரம்பித்தன.. ****** கடற்கரையில் வீசிய பலத்த காற்றில் பறப்பது கடினமாக இருந்தது அந்த வண்ணத்துப் பூச்சிகளுக்கு. துரத்தி வந்த பறவைகளிடமிருந்து தப்பிக்க அந்தக் குழந்தைகளின் தோளில் அமர்ந்தன. "ஐய்.. பட்டாம்பூச்சி!" என்றபடி அவர்கள் அவற்றைப் பிடிக்க முயல, அந்தப் பட்டாம்பூச்சிகள் இரண்டும் திடீரென மனிதர்களாக மாறியது கண்டு வாயடைத்து நின்றனர் அந்தக் குழந்தைகள்! ஓடிக்கொண்டும் பறந்து கொண்டும் இருந்த அவர்களுக்குப் பசித்தது. தாகமாக இருந்தது. அருகிலிருந்த குளிர்பானங்கள் கடையை நோக்கி நடந்தனர். இரண்டு பழச்சாறுகள் கொண்டு வரச் சொல்லி ஸ்ட்ரா போட்டு உறிஞ்ச ஆரம்பித்தார்கள்... அந்தப் பானத்தின் இனிய சுவையும் அதன் குளுமையும் நாவின் மையத்தில் பாய்ந்து, பக்கவாட்டில் பரவி மேலண்ணத்தில் ஊற்றாகச் சிலீரென்று குளிர்வித்து, தலை உச்சியைத் தொட்டு மண்டை முழுவதையும் குளிர்விக்கும் மாயாஜாலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கு நினைவு வந்தது... 'ஐயோ.. அவர்கள் வந்துவிடப் போகிறார்கள்.. நாம் ஓடித் தப்பிக்க வேண்டும்..!' ****** மேலுலகிலிருந்து அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்த அந்த ஆறு பேருக்கும் ஒரே குழப்பமாகிவிட்டது. "அவர்கள் இருவரும் மனிதர்களாக மாறிய பட்டாம்பூச்சிகளா..? பட்டாம்பூச்சிகளாக மாறிய மனிதர்களா? அந்த இரண்டு இணைகளுக்கும் ஆயுள் நீளம். அதனால் தான் இறைவனே பட்டாம்பூச்சிகளை மனிதர்களாகவும் மனிதர்களை பட்டாம்பூச்சிகளாகவும் மாற்றிக் காப்பாற்றி இருக்கிறார்! ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது.. எந்த உருவத்தில் இருந்தாலும் எல்லா நிலைகளிலும் வாழ்க்கைப் போராட்டம் ஒன்றுதான்! இவர்களை மட்டுமே வைத்து பூமியில் எந்த அளவுக்குக் காதலுக்கும் காதலர்களுக்கும் மரியாதை தருகிறார்கள் என்று ஒரு முடிவுக்கு வர முடியாது. நாம் வேறு சில காதல் ஜோடிகளையும் பார்த்து விட்டு இறுதியில் ஒரு முடிவுக்கு வரலாம்." "நானும் அமராவதியும் அதோ அந்தக் கடற்கரையிலே அமர்ந்திருக்கும் காதலர்களைப் பார்த்துவிட்டு வருகிறோம்." என்றான் அம்பிகாபதி. "நானும் ஜூலியட்டும் போய் அதோ அங்கே மலையின் அழகை ரசித்துக் கொண்டே ஏறிக்கொண்டிருக்கிறார்களே.. அவர்களைப் பார்த்துவிட்டு வருகிறோம்." என்றான் ரோமியோ. "லைலாவும் நானும் போய் அதோ அந்தப் பூங்காவின் பெஞ்சிலே அமர்ந்திருக்கும் அழகான காதலர்களைப் பார்த்துவிட்டு வருகிறோம்." என்றான் மஜ்னு. ****** மெரினா கடற்கரை. அவ்வளவு கூட்டத்திலும் அந்த அழகான காதல் ஜோடி தனித்துத் தெரிந்தார்கள். "நீங்க இல்லாம என்னாலே வாழமுடியும் னு நினைக்கிறீங்களா அமர்? எவ்வளவு சுலபமா 'என்னை மறந்துடு'ன்னு சொல்றீங்க?" "என்ன செய்ய முடியும் அம்பிகா? நீ பெரிய பணக்கார வீட்டுப் பொண்ணு. உங்கப்பா பெரிய பதவியில இருக்காரு. எங்கிட்ட படிப்பு இருக்கு. முன்னேற முடியும் னு நம்பிக்கையும் இருக்கு. ஆனா இதையெல்லாம் அவர் ஏத்துக்கலையே. எப்ப வாய்ப்புக் கிடைச்சாலும் என்னைப் போட்டுத் தள்ளிடுவாரு. அதுக்கு உங்கப்பா கூட இருக்கற பி.ஏ. ஆள் ஏற்பாடு பண்ணிட்டார்." "ஐயோ. உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன் அமர். அதுக்குப் பதிலா நாம கல்யாணம் பண்ணிக்கிட்டு எது வந்தாலும் ஒண்ணாவே சந்திக்கலாம்" அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஆட்கள் சிலருடன் அங்கு வந்த அம்பிகாவின் தந்தை அவளை அலற அலற இழுத்துச் செல்ல, அவருடைய ஆட்கள் சிலர் அமரை ஆயுதங்களால் தாக்கிக் குற்றுயிராக்கிக் கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்துவிட்டுக் கடற்கரையில் அருகிலிருந்த ஆட்கள் சிலர் ஓடி வந்தார்கள். அவர்களைப் பார்த்தவுடன் அமரை அப்படியே விட்டு விட்டுச் சென்றார்கள் அம்பிகாவின் அப்பாவுடன் வந்த அடியாட்கள். அமர் மருத்துவமனை‌க்கு எடுத்துச் செல்லப் பட்டான். "என்னடா ஆளை முடிச்சிட்டீங்களா?" "இல்லிங்கையா" என்று கடற்கரையில் நடந்ததை அம்பிகாவின் அப்பாவிடம் அந்த ஆட்கள் கூறிக் கொண்டிருந்தார்கள். அப்போது 'தடால்' என்ற சத்தம் கேட்டது. அவர்கள் திரும்பிப் பார்க்க, அங்கே அம்பிகா வேரற்ற மரம் போல் விழுந்து கிடந்தாள். அதைப் பார்த்த அம்பிகாவின் தந்தை அலறினார். "ஐயோ மகளே! என்னாச்சு உனக்கு..? போய்த் தூங்குங்கடா..!" ஓடிச் சென்று அவளைத் தூக்கினார்கள். அவளது தலை சாய்ந்தது. அவளைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்கள். அம்பிகாவின் தந்தையிடம் தலைமை மருத்துவர் சுந்தரம் பேசினார்: "இதோ பாரு சிதம்பரம்! உன் நண்பனாச் சொல்றேன். உனக்கு இருக்கிறது ஒரே பொண்ணு. சொத்து எக்கச்சக்கம். அப்படி இருக்கும் போது அவள் விரும்பிய பையனையே கல்யாணம் பண்ணி வையேன். அந்தப் பையனையும் இங்கேதான் கொண்டு வந்து சேத்து இருக்காங்க. நல்ல பையனாத் தெரியுது. நல்லா படிச்சிருக்கான். நல்ல உத்தியோகம் பார்க்கிறான். பணம் ஒண்ணுதானே குறைச்சலா இருக்கு? அதுதான் உங்கிட்டே எக்கச்சக்கமா இருக்கே? உன் ஒரே பொண்ணுக்கு என்ன பிடிக்குதோ அதைப் பண்ணி, அவங்கள வாழ வைப்பா. பாவம் ரெண்டு சிறுசுகளும் உயிரைப் பணயம் வச்சிருக்காங்க. நீ எடுக்குற முடிவுலதான் ஒம்பொண்ணோட வாழ்க்கையே இருக்கு. நல்ல முடிவா எடு." "சரி சுந்தரம்! ஏதோ எங்க சமூகம், அந்தஸ்து, கௌரவம் அது, இதுன்னு பார்த்து தப்பா நடந்துடுச்சி. சரி.என் பொண்ணு விருப்பப்படியே நான் நடக்கிறேன். சரிதானே!" (இதைப் பார்த்துக்கொண்டிருந்த அம்பிகாபதியும் அமராவதியும் மகிழ்ச்சியுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். மன நிறைவுடன் மேலுலகம் திரும்பினார்கள்) ****** "அந்த இறைவன் மிகவும் நுணுக்கமான ரசனையுள்ளவன். இந்த மலை, அதிலுள்ள அழகான பசுமையான மரம், செடி கொடிகள், அங்கே மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகள், மலையின் மேலிருந்து ஆர்ப்பரித்து விழும் அருவி எல்லாம் எவ்வளவு அழகாக இருக்கின்றன! உன்னுடன் இருக்கும் போது இந்த உலகமே மிகவும் அழகாக இருக்கிறது ராம்." "ஆம் ஜூலி! இறைவன் ரசனையுள்ளவன் என்பது உன்னைப் பார்த்தாலே தெரியுமே. பார்க்கப் பார்க்கச் சலிக்காத அழகு! இவ்வளவு அழகும் எனக்கே எனக்கா என்று நினைக்கும்போது எனக்குக் கர்வமே ஏற்படுகிறது. இப்போது இந்தப் பாதையில சேர்ந்து போவது போல நாம் நமது வாழ்க்கையிலும் சேர்ந்து போனால் எவ்வளவு நன்றாக இருக்கும்!" "ஆனால் நம் இரண்டு பேருடைய வீட்டிலேயும் மதத்தைக் காரணம் காட்டி நம்மை ஒன்று சேர விடாமல் தடுக்கிறார்களே ராம்! ஒருத்தரை விட்டு ஒருத்தர் வாழ முடியாது என்று தானே அன்றைக்கு ரெண்டு பேரும் வெளியூருக்குப் போய் வாழலாம் என்று கிளம்பினோம்! அன்றைக்கு நம் இரண்டு குடும்பங்களும் விட்டார்களா நம்மை? உங்களை அடித்துப் போட்டுவிட்டு என்னை எங்கள் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்து விட்டார்களே! இந்த முறையாவது அவர்கள் கண்ணில் படாமல் நாம் வாழ வேண்டும். ஐயோ.. ராம்! பாறை வழுக்கிக் கீழே சறுக்கிட்டே போறீங்களே! என் கையைப் பிடிங்க ராம்..! ரா.ஆ..ஆ..ஆ..ம்!" ராம் ஜூலியின் கண்ணெதிரே கீழே சறுக்கிக் கொண்டே போய் ஒரு பாறை தடுத்துக் கீழே விழுந்தான். மேலே இருந்து கீழே இறங்கி ஓடி வந்த ஜூலி ராமின் சலனமற்ற உடலைத் தான் பார்த்தாள். பதைப்புடன் அவனை 'ராம்.. ராம்' என்று அந்த மலையே அதிரும்படி அழைத்தும் அசைத்துப் பார்த்தும் அவன் கண் விழிக்கவில்லை. "உங்களை விட்டு நான் மட்டும் இந்த உலகத்தில உயிருடன் இருப்பேன் என்று நினைத்தீர்களா?" ஜூலி மேலே ..மேலே ஏறிச் சென்று, மலை உச்சியிலிருந்து குதிக்கப்.. யாரோ அவள் கையைப் பிடித்து இழுக்க, திரும்பிப் பார்த்தாள். அங்கே.. அந்த ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனும் அவனுடைய தாத்தாவும் நின்றிருந்தார்கள். "என்னை விடுங்க. நான் என் ராம்கிட்டே போகணும்." அவர்கள் எதுவும் பேசாமல் அவளை இழுத்துக் கொண்டே வந்து ஒரு பக்கம் கையை நீட்டிக் காட்டினார்கள். அங்கே.. "ராஆஆஆம்!" கையை உதறிக் கொண்டு ராமிடம் ஓடினாள். ராம் காயங்களுக்குப் பச்சிலைப் பற்றுப் போடப்பட்டு அமர்ந்திருந்தான். மெல்லக் கண்களைத் திறந்து, மெலிதான குரலில் பேசினான் ராம். "அந்த ரோமியோவின் ஜூலியட் போலவே நீயும் அவசரப் பட்டுட்டியே ஜூலி! மயக்கமா இருந்த என்னை இறந்து போயிட்டேன்னு நெனச்சி, இப்படி நீயும் சாகத் துணிஞ்சிட்டியே! நான் நினைவு வந்து எழுந்து நீ இறந்து போயிட்டதை தெரிஞ்சிகிட்டா.. நான் உயிரோட இருப்பேனா? அந்த ரோமியோ, ஜூலியட் கதை மறுபடியும் தொடர்ந்து இருக்கும். நாம வாழணும், ஜூலி! வாழணும்." தாத்தாவும் பேரனுமாக அவனைக் கைத்தாங்கலாகத் தூக்கி நிறுத்தினார்கள். "வாங்க எங்க வீட்டுக்கு. காயம் குணமாகற வரைக்கும் இருந்துட்டுப் பெறகு போகலாம்." ஜூலி ஓடி வந்து அவன் கையைத் தன் தோளைச் சுற்றிப் போட்டுக் கொண்டாள். சாவின் விளிம்பைப் பார்த்துவிட்டு வந்ததால் 'இனி என்ன நேர்ந்தாலும் ஒரு கை பார்த்து விடலாம்' என்ற துணிவுடனும் நம்பிக்கையுடனும் நடந்தார்கள். (ரோமியோவும் ஜூலியட்டும், "பரவாயில்லையே..! இவர்கள் நம்மை விட புத்திசாலிதான்!" ஒருவரையொருவர் மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டு மேலுலகம் திரும்பினார்கள்) ****** அழகான அந்தப் பூங்காவில் பூத்த இரண்டு பெரிய பூக்களைப் போல அவர்கள் அந்த சிமெண்ட் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். இருவர் முகங்களிலும் மலர்ச்சி இல்லை. அதிலும் அந்தப் பெண்ணின் கண்கள் தடாகத்தில் நீந்தும் மீன்களைப் போல் கண்ணீரில் மிதந்து கொண்டிருந்தன. தனது மலரிதழைப் பிரித்துப் பேசினாள்: "மனோஜ்! உங்கப்பாரு எங்கூட்டுக்கு வந்து, 'எல்லாரையும் வீட்டுக்குள்ளே வச்சி குடும்பத்தோட கொழுத்திப் போட்டுடுவேன்'னு மெரட்டிட்டுப் போயிட்டாரு. நீங்க ஒசந்த சாதி. எது செஞ்சாலும் யாரும் கேட்டுக்க மாட்டாங்க. ஒங்களை நான் வளைச்சுப் போட்டுட்டேனாம். ரொம்ப அசிங்கமாத் திட்டிட்டுப் போனார். போற போக்குல இன்னும் ஒரு வாரத்துல எனக்குக் கல்யாணம் பண்ணி வெளியூருக்கு அனுப்பச் சொல்லிட்டுப் போறாரு. எங்க குடும்பத்தைக் காப்பாத்திக்கணும்னா நாம இனிமேக்கொண்டு சந்திக்காம இருக்குறதுதான் நல்லது." "நிலா! உன்னை அடுத்தவனுக்குத் தாரை வார்த்துட்டு அந்த மஜ்னு மாதிரி கிறுக்குப் பிடிச்சு அலைவேன்னு நெனைச்சியா? நீ எந்தக் காலத்துல இருக்கே? நான் எங்கப்பாவுக்கு ஒரே பிள்ளை. நான்னா அவருக்கு உசுரு. எனக்கு அவரோட அந்தஸ்துக்குத் தகுந்த மாதிரியான இடத்துல பொண்ணு பாத்து ரொம்ப கிராண்டா கல்யாணம் பண்ணி வைக்கணும்னு பாக்குறாரு. நான் அதுக்குச் சம்மதிக்கல. அந்தக் கோபத்துல உங்க வீட்டுல வந்து சத்தம் போட்டுட்டுப் போயிருக்காரு. இதோ பார், நிலா! எனக்கு மும்பைல வேலை கெடைச்சிருக்கு. நாளைக்கு நாம கெளம்பி மும்பை போய்க் கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்க்கையைத் தொடங்குறோம். என்னைப் பிரிஞ்சி எங்கப்பாவாலே ரொம்ப நாள் இருக்க முடியாது. கொஞ்ச நாள்ல அவரே நம்மளை வந்து அழைச்சிட்டுப் போவாரு பாரு. இங்கே என் ஃபிரண்டுதான் போலீஸ் ஆபீஸர். அவன்ட்ட சொல்லி இருக்கேன். உங்க குடும்பத்துக்கு வேண்டிய பாதுகாப்பை அவன் பாத்துக்குவான். நீ மட்டும் சரியான நேரத்துக்கு என் கூட மும்பை கிளம்பற வழியைப் பாரு. சரியா?" நிலாவின் முகம் நிலவைப் போலவே பிரகாசித்தது. (லைலாவும் மஜ்னுவும் மகிழ்ச்சியுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். மன நிறைவுடன் மேலுலகம் திரும்பினார்கள்) ****** அம்பிகாபதி- அமராவதி, ரோமியோ- ஜூலியட், லைலா- மஜ்னு எல்லோரும் மீண்டும் மேலுலகில் சந்தித்து, இப்படி ஒரு முடிவுக்கு வந்தார்கள்: "பூவுலகில் எல்லாரும் காதலர் தினம் கொண்டாடினாலும் இன்னும் காதலை ஏற்றுக் கொள்வதில் மட்டும் நம் காலத்தில் இருந்த அதே மனப்பான்மைதான் இருக்கிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வு, அந்தஸ்து பேதங்கள், ஜாதி மதங்கள் வித்தியாசம் இவைகளால் இன்னும் காதலர்கள் பிரிக்கப் படுகிறார்கள். ஆனால் நம்மைப் போலில்லாமல் இந்தக்கால காதலர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். பெரும்பாலும் தாங்களும் வாழ்ந்து தங்கள் காதலையும் காப்பாற்றிக் கொள்கிறார்கள். பெற்றோர்களும் சிறிது காலம் கழித்து அவர்களை ஏற்றுக் கொள்கிறார்கள். காதல் திருமணங்கள் இப்போது அதிகரித்திருக்கின்றன என்றே சொல்லலாம். வாழ்க காதல்! வாழ்க காதலர்கள்!" ******

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in