logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

Bagyalakshmi Sathyanarayanan

சிறுகதை வரிசை எண் # 205


விபத்து !!! "டேய் சேகர்! சீக்கிரம் எழுந்து வா" என்னும் அம்மாவின் குரலில் தூக்கத்திலிருந்து விழித்தான் சேகர். " என்னம்மா ? என்னாச்சு?" என்றான் படுக்கையிலிருந்து எழுந்தவாறு. "அப்பாவைக் காணோம்" என்றாள் கவலையோடு. "மறுபடியுமா? எப்போ வெளிய போனார்னு தெரியுமா?" என்றான் சட்டையை அணிந்தவாறு. "தெரியலையே" என்றாள். சேகரின் அப்பா சுந்தரத்துக்கு நியாபக மறதி நோய். இதே போல முன்பும் சிலமுறை தன்னை அறியாமல் வெளியே சென்று விட்டார், .அப்பாவின் நண்பர் ஒருமுறையும், பக்கத்து வீட்டு மோகன், அப்பா வழி தெரியாது கடைவீதியில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்து அவரது இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்தார் ஆனால் முன்பு பகல் வேளையில் வெளியே சென்றார். அவரின் நிலைப் பற்றி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்குத் தெரியும் என்பதால் அவரிடம் பேச்சுக் கொடுத்து அவரை வீட்டில் கொண்டு வந்து விடுவார்கள். ஆனால் இன்றோ, இரவு எப்பொழுது சென்றார் எங்கு சென்றார் என்று யாருக்கும் தெரியவில்லை. சேகர், அவர்கள் குடியிருந்த பகுதியின் கடைகளிலும் அவர் வழக்கமாக செல்லும் இடங்களிலும் விசாரித்து பார்த்தான். யாருக்கும் எதுவும் தெரியவில்லை. சுந்தரம் கடைவீதியில் துணிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள். பெரியவன் சேகர் அப்பாவின் துணிக்கடையை கவனித்துக் கொள்கிறான். சிறியவன் குமார் பெங்களூரில் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்கிறான். மகள் பூங்கொடி திருமணம் முடித்து வெளிநாட்டில் வசிக்கிறாள். சேகர் தங்கள் துணிக்கடைக்கு வந்திருப்பரோ? என நினைத்து அங்கே வந்தான். அங்கும் யாரும் அவரைப் பார்க்கவில்லை என்றே சொன்னார்கள். இரவு வரை அவனுக்கு தெரிந்த அனைவரிடத்திலும் நேரிலும் அலைபேசியிலும் விசாரித்து பலனில்லாமல் சோர்வுடன் வீட்டுக்கு வந்தான். அம்மாவின் முகத்தில் கவலை ரேகை படர்ந்திருந்தது. அவனுக்கு அம்மாவின் முகத்தைப் பார்ப்பதற்கே பாவமாக இருந்தது. அவளும் தான் என்ன செய்வாள்? அப்பா நன்றாக இருந்தவரை அம்மாவை ராணி போல் பார்த்துக் கொண்டார். அப்பாவுக்கு இந்த நியாபக மறதி வந்ததில் இருந்து அம்மா அப்பாவை ஒரு குழந்தை போல் பார்த்துக் கொள்கிறாள். எங்கே இருக்கிறாரோ? என்ன கஷ்டப்படுகிறாரோ? அம்மாவின் கண்கள் அழுது அழுது வீங்கிப் போய் இருந்தது. சேகரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அப்பாவை பல இடங்களில் தேடினார்கள். சமூக வலைதளங்களில் அப்பாவின் புகைப்படத்தைப் பகிர்ந்தார்கள். எங்கிருந்தாவது ஏதாவது தகவல் வந்திடாதா? என்ற ஏக்கம் சேகரின் மனதில் இருந்தது. களைப்பும் கவலையும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு சேகரை சித்ரவதை செய்தது. கூடிய விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்று பலரும் ஆறுதல் கூறினார்கள். அம்மாவுக்குத் தன் அஜாக்ரதையினால் அப்பாவை துன்பப்படும் நிலைக்கு தள்ளி விட்டோம் என்ற எண்ணம் அவளை நிலைகுலையவைத்தது. ஆனாலும் அவர் நல்லபடியாக கிடைத்து விடுவார் என்ற நம்பிக்கை அவளிடம் காணப்பட்டது. இரவு யாருக்கும் உறக்கம் வரவில்லை. அம்மாவை பக்கத்து வீட்டு பிரபா அக்கா வற்புறுத்தி ஒரு இட்லி சாப்பிட வைத்தார். காலையில் அம்மாவின் அண்ணன் ராகவன் மாமா செய்தி கேள்விபட்டு வந்தார். அவருடன் அத்தையும் வந்து அம்மாவுக்குப் பக்கபலமாக இருந்தார். அவர்கள் பக்கத்து ஊரில் இருந்தார்கள். அப்பாவும் மாமாவும் நல்ல நண்பர்கள். அதனால் அவருக்கும் அப்பா என்ன செய்வாரோ என்ற கவலை, மனது கேட்காமல் நேரில் புறப்பட்டு வந்துவிட்டார். "சேகர் காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்திடலாமா? நம்ம தேடுறத விட அவங்க சீக்கிரம் கண்டு புடிச்சிடுவாங்களே!" என்றார் ராகவன் மாமா. "சரி மாமா இன்னைக்கி போய் புகார் கொடுத்திடலாம். எப்படியாவது அப்பாவைக் கண்டுபிடிச்சாப் போதும் " என்றவாறு சேகர் காவல்துறையில் பணிபுரியும் தன் நண்பன் விமலனுக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டான். அவன் நண்பன் விமலன் காலை 10:00 மணிக்கு காவல் நிலையத்திற்கு வரச்சொன்னான். சேகர், ராகவன் மாமா மற்றும் சில நண்பர்களுடன் சேர்ந்து காவல் நிலையம் சென்று புகார் மனுவை கொடுத்துவிட்டு அப்பா சுந்தரத்தின் புகைப்படம் மற்றும் அங்க அடையாளங்களைத் தெளிவாக சொல்லிவிட்டு வந்தார்கள். விமலன் அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பேசி அனுப்பினான். பெங்களூரில் இருக்கும் தம்பி குமாருக்கும், சிங்கப்பூரில் இருக்கும் தங்கை பூங்கொடிக்கும் தகவல் சொன்னார்கள். குமார், ஒருவேளை பெங்களூருக்கு தன்னைப் பார்க்க அப்பா புறப்பட்டாரோ? என்னும் கோணத்தில் பெங்களூரு ரயில் நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தான். குமாரும் அவன் நண்பர்கள் மூலமாக அப்பாவை பெங்களூரிலும் தன் சொந்த ஊரான சேலத்திலும் தேடினான். சேலத்தில் இருந்து பெங்களூரு செல்லும் வழியிலும் பல நண்பர்களை வைத்து ஏதேனும் தகவல் கிடைக்குமா? என்று முயற்சித்தான் பூங்கொடியும் சேலத்திற்கு விரைந்து வந்தாள். அனைவரும் அப்பாவைக் கண்டுப் பிடிக்கும் முயற்சியில் சிறிதும் முன்னேற்றம் இல்லாததை எண்ணி வருந்தினர். இரண்டு வாரம் முழுதாய் முடிந்து விட்டது. "அப்பா எங்க தான் இருக்காரோ? பாவம் சாப்பிட என்ன செய்வாரோ? " என்ற சேகரின் கண்கள் கலங்கியது. "அவர் யாருக்கும் கெடுதல் நினைச்சது இல்லை, எங்க இருந்தாலும் அவர் நல்லா இருப்பார்" என்றார் அம்மா. "வீடு எங்க இருக்குனு யாராவது கேட்டா அவருக்கு சொல்லத் தெரியுமா?" என்றாள் பூங்கொடி. "நாளுக்கு நாள் அவர் மறதி அதிகமாயிற்று பூங்கொடி, சில சமயம் அவருக்கு சாப்பிட்டது கூட மறந்துடுது" என்றாள் அம்மா அப்போது விமலன் வந்து சேகரை வெளியே அழைத்துச் சென்று பேசினான். பேசிவிட்டு வந்த சேகரின் முகம் இருளடைந்திருந்தது. குமாரை அழைத்து விமலன் தன்னிடம் சொன்னதை தயக்கத்துடன் சொன்னான். "குமார் …. விமலன் நம்மை அரசு மருத்துவமனை வரை வரச் சொன்னான்!" குமாருக்கு புரிந்து விட்டது. "சரி சேகர், அம்மாவுக்கும், பூங்கொடிக்கும் சொல்ல வேண்டாம், ஒன்றும் பயப்படும்படியாக இருக்காது நாம போய்ட்டு வரலாம்" என்றான். சேகரும் குமாரும் மருத்துவமனையை அடைந்தார்கள். விமலன் அவர்களுக்காக காத்திருந்தான். பிணவறையில் சுந்தரம் வயது மதிக்கத்தக்க ஒருவரின் உடல் சிதைந்த நிலையில் இருந்தது. அவருடைய உயரம், நிறம் உடல்வாகு அனைத்தும் சுந்தரத்தின் சாயலில் இருந்தது. அவர்தான் என்ற முடிவுக்கு வருவதற்குப் பல காரணங்கள் இருந்தன. இருவரும் என்ன செய்வதென்று தெரியாமல் அழுதபடியே வெகுநேரம் நின்று கொண்டிருந்தனர். விமலன் தான் இருவருக்கும் ஆறுதல் கூறினான். இதை அம்மாவிடம் எப்படி சொல்வது? அம்மா, அப்பா நலமுடன் திரும்புவார் என்று நம்பிக்கொண்டு இருக்கிறாள். அழுது ஓய்ந்த சேகர் தான் முதலில் விமலனிடம் கேட்டான் "என்ன ஆச்சு விமலா? " "காலையில் காவல் நிலையம் வந்தவுடன் தொலைபேசியில் திருசெங்கோடு அருகே ஒருவர் லாரியில் அடிபட்டு இறந்து கிடப்பதாக செய்தி வந்தது. நான் நேரில் சென்று பார்த்தபொழுது அப்பாவைப் போல் இருந்தது. அதனால்தான் நீங்கள் பார்க்கும் வரை பிரேத பரிசோதனைக்கு அனுப்பாமல் வைத்து இருந்தேன். முகம் சிதைந்து விட்டதால் நீங்கள் தான் உறுதிப் படுத்த வேண்டும்" என்றான். தன் கைகளால் முகத்தை மூடி அழுதான் சேகர். விமலன் ஆறுதலாக அணைத்து "நீதான் பெரியவன் நீயே இப்படி அழுதுகொண்டிருந்தால் மற்றவர்களுக்கு யார் ஆறுதல் கூறுவது? தைரியமாக இருக்க வேண்டும் சேகர்" குமார் இடிந்து போய் அமர்ந்து இருந்தான். இரண்டு வார தேடலின் முடிவு இவ்வாறு அமையும் என்று கனவிலும் நினைக்கவில்லை. அப்பாவுக்கு இப்படி ஒரு முடிவு வந்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவனுக்கு அழுவதற்குக் கூடத் தெம்பில்லாமல் அதிர்ச்சியில் உறைந்து இருந்தான். அப்பா கடுமையான உழைப்பாளி அதே சமயம் மகன்களிடம் மிகவும் கண்டிப்பாக இருப்பார். சிறு வயதில் மிகவும் கண்டிப்பாக இருந்த தந்தை பதின்ம வயதில் நண்பராகிப் போனார். அந்த மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது என்று தெரியவில்லை. எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் அப்பாவிடம் பகிர்ந்து கொள்ளும் சேகரும் குமாரும் அவருக்கு நியாபக மறதி நோய் வந்ததில் இருந்து கண்ணும் கருத்துமாய் பார்த்து வந்தனர். இது வயோதிகத்தின் ஒருநிலை என்றாலும் அவருக்குப் பழைய நிகழ்வுகள் அனைத்தும் பசுமரத்தாணிபோல் பதிந்திருந்தது. அதனால் அவருக்கு வீட்டு விலாசம் யாரிடமாவது சொல்லி வந்து விடுவார் என்ற நம்பிக்கை அனைவரிடத்திலும் இருந்தது. அந்த நம்பிக்கை பொய்யாய் போனதை அம்மாவிடமும் பூங்கொடியிடமும் எப்படி சொல்வது? அம்மா அப்பா வந்துவிடுவார் என்று மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். இவர்கள் வெளியே சென்று வெகுநேரம் ஆனதால் பூங்கொடி அலைபேசியில் அழைத்தாள். சேகர் அப்போதுதான் வெகுநேரம் ஆகிவிட்டதை உணர்ந்தான். பூங்கொடியின் அழைப்பை ஏற்று இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவோம் என்று கூறினான். விமலனிடம் சில கோப்புகளில் கையெழுத்து போட்டு விட்டு கனத்த இதயத்துடன் ராகவன் மாமாவை அழைத்தான். "மாமா ! நீங்க கொஞ்சம் சேலம் அரசு மருத்துவமனைக்கு வர முடியுமா? " "என்ன சேகர்? என்னாச்சு? அப்பாவைப் பத்தி தகவல் தெரிஞ்சுதா?? " "அம்மாட்ட நீங்க இங்க வரீங்கன்னு சொல்லாதீங்க! கொஞ்சம் உங்ககிட்ட பேசணும்,அப்பாவைப் பத்திதான் " “சரி நான் அரைமணி நேரத்துல வரேன்” என்று சொன்ன அவருக்கு மனதுக்குள் லேசான பயம் வந்தது. சரியாக அரைமணி நேரத்தில் ராகவன் மாமா மருத்துவமனைக்கு வந்தார். சேகரும் குமாரும் அவரைப் பார்த்தவுடன் குழந்தை போல அழுதனர். அவர்களால் மாமாவிடம் பேசவே முடியவில்லை. மாமாவுக்கு விமலன் நடந்ததைக் கூறினான். அவரும் அதிர்ச்சியில் இருந்து மீள வெகுநேரம் பிடித்தது. ஒருவழியாக அவர் சுதாரித்துக் கொண்டு அவரும் போய் சடலத்தைப் பார்த்தார். சுந்தரம் போன்ற சாயல் இருந்தது. "முகத்தைக் கூட பார்க்க முடியாமல் இப்படியா உன் விதி முடியவேண்டும்? இதை என் தங்கச்சிகிட்ட எப்படி சொல்லுவேன்?" என்றவாறு வெடித்து அழுதார். நன்றாக இருட்டி விட்டது, வானத்தில் மட்டுமல்ல மூவரின் மனதிலும் தான். "மாமா! அம்மாவிடம் எப்படி இதை சொல்லுவது? " என்றான் சேகர். "எனக்கும் தெரியலியேப்பா ! " என்றார் விழிகளில் நீரோடு விமலன் அப்போது மருத்துவர்களிடம் பேசிமுடித்து விட்டு அவர்களிடம் வந்தான். "நாளை காலை தான் அப்பாவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து கிடைக்கும் சேகர்!, இனி நீ இங்கு வர வேண்டாம் நானே எல்லாவற்றையும் இங்கே பார்த்துக் கொள்கிறேன். காலை நானே அப்பாவின் உடலை உன்னிடம் வீட்டில் ஒப்படைக்கிறேன்" என்றான் வருத்தத்துடன். " சரி விமலா! நீ செய்யறது பெரிய உதவி!" "அதெல்லாம் ஒண்ணும் இல்ல சேகர்! தைரியமாக இரு. ஆகவேண்டியத்தைப் பார், வேறு ஏதாவது வேணும்னாலும் சொல்லு என்னால முடிஞ்சத கண்டிப்பா பண்ணுவேன் ". "ரொம்ப நன்றி விமலா! நாளை எத்தனை மணிக்கு அப்பாவை கொண்டு வருவேன்னு சொல்லு " "மருத்துவர் வந்ததும் கேட்டுட்டு உனக்கு அலைபேசியில் சொல்றேன்டா" "சரி விமலா !" என்றவாறு மூவரும் தளர்ந்த நடையுடன் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தார்கள். மூவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் அமைதியாக வீட்டுக்கு வந்தார்கள். மதியமும் சாப்பிடாம எங்க போனீங்க? அப்பாவை பத்தி ஏதாவது தெரிஞ்சுதா? என்றாள் அம்மா . மூவரும் தலைகவிழ்ந்து உக்கார்ந்திருந்தார்கள். "என்ன மூணு பேரும் என்னமோ மாதிரி இருக்கீங்க? பதில் பேசுங்க" என்றாள் அம்மா. பூங்கொடியும் அம்மா பேசும் சத்தம் கேட்டு வந்தாள். "மாமா, அண்ணா, ஏன் எதுவுமே பேசமாட்டீங்கறீங்க ? ஏதாவது பேசுங்க" என்றாள் மூவரும் கண்களில் நீரோடு இருவரையும் பார்த்தனர். மாமா தான் "என்னானு சொல்றதும்மா? உங்கப்பா ... உங்கப்பா .." மேலே வார்த்தை வராமல் குலுங்கி அழுதார். அப்போது வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. பயத்துடன் பூங்கொடி கதவைத் திறந்தாள். அனைவரின் பார்வையும் வாசலில் நிலைத்திருந்தது. மங்கிய ஒளியில் அறிமுகமாகாத ஒருவர் இருந்தார். “துணிக்கடை நடத்தும் சேகர் வீடு இதுதான? இவர் உங்க விலாசத்தை தேடிட்டு இருந்தார்!” என்றார் அருகில் இருந்தவரை பார்த்ததும் அனைவரின் கண்களும் ஆச்சர்யத்தில் விரிந்தது. ஆனந்தக் கண்ணீர் சுரந்தது. அங்கே அப்பா சுந்தரம் நின்று கொண்டு சிரித்தார். - பாக்கியலட்சுமி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.