logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

Victor Prince

சிறுகதை வரிசை எண் # 204


இலவச ஆம்புலன்ஸ் 'கொரானா கூடாரமாக மாறிய டெல்லி நிஜாமுதீன் தப்லிகி ஜமாத்' செய்தி இந்தியா முழுக்க தலைப்புச்செய்தியானது. அதில் கலந்து கொண்டு தமிழ்நாடு திரும்பியவர்களிடம் கொரானா தொற்று கண்டறியப்பட்டது, தெலுங்கானாவைச் சார்ந்த சிலர் மரணித்தது என எங்கும் தப்லிகி விவாதங்கள் ரெக்கைக்கட்டிப் பறந்தது. கண்ணுக்குத் தெரியாத கொலைக்கார கிருமியுடன் எப்படி போர்செய்வது என தெரியாமல் கையறுநிலையில் வீடுகளில் முடங்கி டிவி ரிமோட்டைப் பிடித்துகொண்டிருந்தவர்களின் நாடிப்பிடித்து பார்த்ததோ என்னவோ !! செய்தி தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களது வழமையான விருந்தினர்களோடு புது மருத்துவ பேச்சாளர்கள் எனத் தேடிப்பிடித்து வீடுகளிலே அமரவைத்து விவாதமேடை உருவாக்கி டெல்லி சம்பவத்தை ரோஸ்ட் செய்து மகிழ்ந்தது. தடையை மீறி பெருந்திரளாக மக்களைக் கூட்டி மதநிகழ்வினை நடத்தி அதில் சட்டத்திற்கு புறம்பாக போலி விசாக்களில் வெளிநாட்டினரை வரவழைத்து கொரானாவைப் பரப்பியதாக 2020 மார்ச் மத்திலிருந்து பெரும்புயல் கிளம்பியதே அனைத்துக்குமான கருப்பொருளானது. இந்தியாவைக் கடந்தும் இந்த கருத்ததானது கொரானாவால் வீடுகளிலும் அறைகளிலும் முடக்கப்பட்ட இந்தியர்களால் காலவரையின்றி விவாதிக்கப்பட்டது. "ரெண்டாயிரம் பேரு ஒரே இடத்தில !! ஒரே நாள்ல இந்தியா முழுக்க பரப்பியாச்சு.....இத பத்தி சொன்னா செல செக்கிலரிஸ்ட்டு கெழம்பி வருவானுவ, குஜராத் ஸ்டேடியத்துல பல ஆயிரகணக்கில ஆட்கள் வரலியான்னு நம்மள கேள்வி கேட்டுட்டு....இந்த டெல்லி போஸ்ட பேஸ்புக்ல செயர் பண்ணதுக்கு, சோ கால்டு பிரண்டே என்ன அன்பிரண்டு பண்ணீட்டான்...." இரவு முழுக்க தனக்குள்ளே சீறிக்கொண்டிருந்த பாரதிக்கண்ணனுக்கு விடிந்த பிறகும் அது தான் பேசவியந்தது. துபாயின் அல் டம் நட்சத்திர ஹோட்டலின் கிச்சனில் பணிபுரிந்த அவனும் அவனது நண்பர்களும் பத்து நாட்களாக அறையிலே முடங்கிக்கிடந்தனர். என்றைக்கு கொரானா வாலைச் சுருட்டும் !! என்றைக்கு வாழ்வு மலரும் !! என்ற நிச்சயமில்லாமல் நான்கு சுவர்களுக்குள் திரைப்படங்களைப் பார்த்தும் வீட்டிலுள்ளவர்களிடம் வீடியோகால் பேசியும் நேரத்தைக் கடத்தினர். விழுப்புரத்தில் அவனது அக்கா வீட்டிலிருந்து வந்த அழைப்பே அனைத்துக்கும் வித்திட்டிருந்தது. "கனகஜோதி பாட்டி இறந்துட்டாங்க, அப்பிடி கொரானா நம்ம ஊருக்கும் வந்திச்சு....பயமா இருக்குடா...." எப்ரல் முதல் வாரத்தில் நடந்தது அந்த மரணம். அவளது தெருவிலுள்ள வயது முதிர்ந்தவரின் மரணச்செய்தியைச் சொன்னாள். "அங்க எப்டிக்கா வந்திச்சு !!??" "டெல்லில ஏதோ மாநாடுக்கு போய்ட்டு சாகுல் வாத்தியாரும் அவர் பசங்களும் வந்திருக்காங்க..அவரு வீட்டுக்க பின்னாடி தானே கனகஜோதி பாட்டி வீடு..." "நீயூஸ்ல பாத்தப்போ, பதறி போச்சு....கடைசில நம்ம தெருவுக்கே கொண்டு வந்துட்டானுகளே !! வேணும்னு தான் பண்ணீருப்பானுக...நாட அழிக்கது தானே அவனுவ நோக்கம், இதுன்னா வசதியா போச்சு ஜெயிலுக்கும் போகவேண்டாம்...." "தெரியலடா, அப்பிடி தான் எல்லாரும் பேசிக்கிறாங்க... சாகுல் சார் வேணும்னே பண்ணுவாரா !! அவங்களும் சாவாங்க தானே !!" "உடம்புல குண்டு கட்டிட்டு வெடிக்கும் போதும் அவங்களும் சாகுறாங்களே....இதுல அந்த மாதிரி இல்லியே !! பிப்டி பிப்டி...." "யாரு மனசுல என்ன இருக்குன்னு பெருமாளுக்கு தான் தெரியும்... நைட்டே நாங்க பாண்டிச்சேரி வந்திட்டோம்....தெரு புல்லா காலியாச்சு...." அவள் தனது கணவர் குழந்தைகளுடன் பாண்டிச்சேரியிலுள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு அவசரமாக இடம்மாறினாள். "அம்மா அப்பாவ நல்லா பாத்துக்கோ...வெளிய எங்கயும் விடாத..வீட்ல மாஸ்க் போட்டுக்கோங்க, காய்கறி திங்ஸ் எல்லாம் வெந்நீர்ல போட்டு வெயில்ல காயவச்சு யூஸ் பண்ணுங்க..." அந்த அறையிலிருந்த ஏனைய நால்வருக்கும் கனகஜோதி பாட்டியைத் தெரியவில்லை என்றாலும் பாரதிக்கண்ணனுடன் புலம்பினார்கள். "இதுல உள்நோக்கம் இல்லன்னு டிவில வந்து உக்காந்து விவாதம் பண்ற ஆண்டி நேசனல்ஸா புடிச்சு முதல்ல ஜெயில்ல போடனும்..." நால்வரில் ஒருவன் சொன்னான். "விழுப்புரத்தில இவனுங்களால ஒரு டெத்தே நடந்திருக்கு, அதுக்கு சாட்சியா அந்த ஊரே இருக்கு.....இன்னும் எத்தன பேர சாகடிக்க போறானுகளோ !!" "எல்லா மாவட்டத்தும் போயிருக்கானுக.....மச்சி உன்னோட ஈரோடுக்கு ஆறு பேரு போயிருக்கானுக.....சீக்கிரமா இவனுவள பிடிச்சு நாடுகடத்தினா சரியா போய்டும்...." நால்வரில் ஈரோட்டைச் சார்ந்தவனைக் குறிப்பிட்டு ஒருவன் சொன்னான். கனகஜோதி பாட்டியின் மரணத்திலான கோபமும், ரத்தச் சொந்தங்கள் மேலான பரிவும் சேர்ந்து துவேசங்களால் நிறைந்திருந்தது அந்த அறை. மதிய உணவை உண்ட பிறகும் டெல்லி சமாச்சாரம் அங்கிருந்து விலக மறுத்தது. உலகமே அடர் போர்வைப் போர்த்தி உறங்கிக்கொண்டிருந்தது. சாவுச்செய்திகள் ரத்தம்கக்கா எண்களாக மேல்நோக்கி ராக்கெட்டாக உயர்ந்து அனைவரின் நித்திரையைக் கெடுத்தது. கதவுகளின் எடையைக் கூட்டியும் மதில்களை உயரப்படுத்தியும் பூட்டுகளில் நவீனத்தை புகுத்தினாலும் மட்டுப்படுத்த முடியாத புது எதிரியிடம் உலகம் மெதுவாக தோற்றுக்கொண்டிருந்தது. மனித வன்மங்களின் கோபுரங்களில் சீட்டாடிக்களைத்திருந்த புஷ்டியான மனிதர்களே தங்களது அனைத்து புலன்களுக்கும் விடுமுறை அளித்து தங்களது எதிரிகள்பால் கருணைக்கொண்டனர். யாருக்கும் எப்போது வேண்டுமென்றாலும் மரணம் நடக்கலாம் என்ற பாடத்தைக் கொரானாக்கிருமிகள் ஈவுஇரக்கமின்றி மனிதகுலத்திற்கு எடுக்கத் துவங்கியது. இரண்டு மாதத்தில் டெல்லி பரவலை மறந்து கொரானா மரணங்களைக் கணக்கிடுவதும், தேச மக்களைப் பட்டினியிலிருந்து யார் காப்பாற்றுவார் என்ற விவாதங்களோடு நாட்கள் நகர்ந்தது. வதந்தி என்றவர்களும் உண்மை என வாதிட்டவர்களும் டெல்லி பரவலை மிஞ்சும் செய்திகளை உலகம் முழுவதிலிருந்தும் பார்த்ததிலிருந்து நீயா நானா என ஒருவரையொருவர் பார்த்து கைவிரித்து பாராபரனுக்கே வெளிச்சம் என்றாயினர். சாவு அண்மித்தது என்று பலிஆட்டை நெருங்கும் கசாப்புக்கடைக்காரனின் வேடம் கொரானாகிருமிகளுக்கும் ஆடுகளின் ரூபம் மனிதர்களுக்கும் ஆனது. ஜூன் மாதத்தில் பாண்டிச்சேரியில் நோய்தொற்று பரவல் அதிகமானது. பாரதிக்கண்ணன் தினமும் வேண்டிய பிரார்த்தனையில் மின்னல் தாக்கியது. அவனது பெற்றோர் இருவரும் நோய்த்தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பணம் எவ்வளவும் செலவளிக்க முடியும் என்பதால், பெருந்திரளான நோயாளிகளைக் கொண்டிருக்கும் அரசு மருத்துவமனை யோசனையைத் தவிர்த்து தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மூன்றாவது நாள், தொற்று முழுமையாக நுரையீரலைச் செயலிழக்க வைக்க, செயற்கைச் சுவாச உபகரணங்கள் பயனற்றவையாகி அவன் தந்தை இறந்தார். நிமிடத்திற்கு நிமிடம் சகோதரியிடம் உரையாடி பெற்றோர் நலம் கேட்டு இருந்தவன் அந்த செய்தியோடு சிலையாகிப்போனான். விமானசேவை இல்லாததால் அந்த அறை அழுகையின் தொட்டிலானது. ஏழாவது மாடியிலிருந்து அவனது அழுகைச்சத்தம் அந்த அடுக்குமாடிகுடியிருப்பு முழுக்கக் கேட்டது. "என்ன பண்ண தெரியல ... ரெண்டு சின்ன குழந்தைகள வச்சுட்டு நான் என்ன பண்ண, உன் அத்தான் யாரையோ பாக்க போயிருக்காங்க...." குழந்தைகள் அழுகையோடு அவளது சன்னமான தேம்பலுமாக அவைகள் கேட்டன. "அம்மாவுக்கு தெரியுமா ? அம்மா எப்பிடி இருக்காங்க..." "அம்மாக்கு சொல்லல....அவங்களும் சீரியஸ் தான் எயிட்டி பிரசண்ட் லங்ஸ் டேமேஞாம்...." "அப்பாவுக்கு சடங்கெல்லாம் எப்பிடி ?" "எதுவும் தெரியலடா !! இவங்கள வெளியே விட்டதுக்கு மாமா மாமி என்ன திட்றாங்க... நான் எப்பிடி போக !! நம்ம முற படி எரிக்கக்கூடாதாம், நோய் பரவுதாம்.... பொதைக்கிறதுக்கு யாருமே தயார் இல்ல ....உன் அத்தானுக்கு போன் பண்ணு..." அவளால் தொடர்ந்து பேசமுடியவில்லை. பாரதிக்கண்ணின் நண்பர்களும் தங்களது தொடர்புகள் மூலமாக பாண்டிச்சேரியில் தெரிந்தவர்களுடன் பேசினர். பள்ளி, கல்லூரி, தெருவில் விளையாடியவர்கள் என அனைவரிடமும் உதவி கேட்டான். எல்லா கதவுகளும் பெரும்கிருமிக்காய் அடைப்பட்டிருந்தது. "பாடிய சீக்கிரம் எடுத்திட்டு போங்க ...எங்க பொதைக்க போறீங்களோ அந்த இடத்த போலீஸ்கிட்ட சொல்லீடுங்க....." மருத்துவமனையானது உடலை எடுத்துச்செல்ல வலியுறுத்தி அவனது அத்தானை விரட்டியது. "பாரதி, ஏதோ முஸ்லீம் அமைப்பு இலவசமா அடக்கம் பண்றாங்களாம்.... என் மாமா சொன்னாருடா..." "அதெல்லாம் வேண்டாம் மச்சி, அதிலயும் ஒரு அஜண்டா வைச்சிருப்பானுக....எத்தன லெட்சம் ஆனாலும் பாத்துக்கலாம், ஆள் கெடைப்பாங்க..." பாரதி அவன் நண்பனின் கோரிக்கையை நிராகரித்தான். "சரி தான் பாரதி...வேற ஆள் கெடைக்கும்....இலவச ஆம்புலன்ஸ் போர்டு போட்டு இவனுக பண்றது சேவ இல்ல, மதத்துக்கு ஆள்புடிக்குறானுக... " "ஆமா...இப்போ இலவச ஆம்புலன்ஸ் ஒரு டிரண்ட்....நாங்க ரொம்ப நல்லவங்கன்னு காட்டிக்க..." பாரதி வேதனையிலிருக்க அவனது இரு நண்பர்களின் உரையாடல் அதிலிருந்து கிளைப்பரப்பிச் சென்றது. வீடுகளிலிருந்து ஆண்களை வெளியேற விடாமல் பாசச்சங்கிலி போடப்பட்டிருந்தது. பெரிய மல்லன்களே வீடுகளுக்குள்ளே மதுவருந்தி மட்டையாகி கோவிட் செய்திகளைக் கைப்பேசி தொலைக்காட்சி என மாற்றி அயர்ந்தனர். அரவமற்ற சாலைகளைக் கொரானா நோய்கிருமிகள் ஏகாதிபத்திய குத்தகைக்கு எடுத்தது போலிருந்தது. இறந்த உடல்கள் மூலயாக நோய் வேகமாகவும் இயல்பாகவும் பரவுகிறது என்கிற செய்தி, உடன்பிறந்தாரே உடல்களை விட்டு ஓடும் கதைகள் தொலைக்காட்சிகளில் நிமிடத்திற்கு ஒன்று என சாதாரணமாயிருந்தது. "பாரதி, ஒரு முஸ்லீம் அமைப்பு ஹெல்ப் பண்றதா சொல்லீருக்காங்க... அது சம்பந்தமா ஒருத்தர் கால்க்காக வெயிட் பண்ணீட்டு இருக்கேன்..." அத்தானின் நிராயுதத்தனம் அவரது பேச்சில் தெரிந்தது. மருத்துவமனையே அந்த அமைப்பினரின் எண்களை உறவினர்களுக்கு அளித்து வந்தனர். "அது தேவ இல்ல அத்தான்...வேற ஆல்டர்நேடிவ் நான் பாக்குறேன்..." "கொள்க கோட்பாடு பாக்கவேண்டிய நேரமில்ல இது..." "என் அப்பா உயிரோட இருந்திருந்தாலும் இதத் தான் சொல்லுவாரு...." "ஹாஸ்பிட்டல் போன் எனக்கு தான் வருது...ஓயாம அடிக்குறாங்க...." "அடிக்கட்டும்....கோபம் வந்து வீட்டுக்கு தூக்கீட்டு வரமாட்டாங்க தானே !!?" அவன் நீண்ட மௌனத்தாலும் வற்றிய கண்ணீரலும் மரத்துப்போயிருந்தான். "நான் என்ன பண்றதுக்கு ?" "போன சுவிட்ச் ஆப் பண்ணீட்டு வீட்டுக்கு போங்க...அக்கா பிள்ளைக தனியா இருக்கு, உங்க அம்மா அப்பா வேற அவளுக்கு போன் போட்டுட்டே இருக்காங்களாம் நீங்க அவங்க போன கட் பண்ணி விடுறதால....." ரத்தம் கனம் இழந்து இலகுவாகும் தருணத்தில் முள்முனையில் இருவரும் காணப்பட்டனர். அடுத்த உரையாடல் வசனம் இருவரையும் காலாகாலத்திற்கு பகையாளிகளாக்கியிருக்கும். நல்லவேளை இருவரும் முடித்துக்கொண்டனர். "பாரதி, குட் நீயுஸ்...வாட்ஸ் அப் பாரு, அனுப்பீருக்கேன்....பாண்டிச்சேரிக்கு விக்ரமன் ன்னு ஒருத்தர் அவர் நம்பர் அதில இருக்கு, நான் போன் பண்ணி பாத்தேன்... புரோகிதர வச்சே அடக்கம் பண்ணுவாங்களாம்...." அவனின் நண்பனொருவனின் தேடலில் சிக்கியதை அவனுக்குப் பகிர்ந்தான். "எவ்ளவு மணி ? கேட்டியா ?" "நத்திங்டா....நீ முதல்ல பேசுடா...." பாரதிக்கண்ணனின் முகம்மலரலோடு ஆர்வமிகு பேச்சால் அறையின் நால்வரும் அவனைச் சூழ்ந்தனர். ' கொரானாவால் இறந்தவர்களின் இறுதி சடங்கைப் புரோகிதர்கள் முன்னிலையில் இலவசமாக செய்து தருகிறோம்... இவண் கடலூருக்கு மதியழகன் பாண்டிச்சேரி விக்ரமன் நாகப்பட்டினம் ராஜேஷ்குமார்' என்பதோடு மேலும் சில மாவட்ட பெயர்களுடன் அவர்களின் எண்களுமாக 'இவண்..மக்கள் சேவை மையம்' என்றிருந்தது. விக்ரமனிடம் அழைத்து பேசிவிட்டு, அதனை அக்காளிடம் தெரிவித்துவிட்டே அவன் உணவருந்தினான். "இலவச ஆம்புலன்ஸாம் !! எங்களுக்கு புரோகிதரே இருக்கு !!" பாரதிக்கண்ணனுக்கு ஆதரவாக பேசிய அவனது நண்பர்களில் ஒருவன் உணர்ச்சிவயப்பட்டான். ஒரு ஆம்புலன்ஸ் மருத்துவமனை முன்பு வந்து நின்றது. உடலை முழுவதுமாக பாலுத்தீனிலான கவச உடையணிந்த நான்கு இளைஞர்கள் சவப்பெட்டியுடன் மருத்துமனைக்கு உள்ளேச் சென்றனர். பாலைவனத்தின் ஒற்றைமரம் போல் அந்த பரந்த அறையில் தனியாக கிடத்திவைக்கப்பட்டிருந்தார். பிளாஸ்டிக் பைக்குள்ளிருந்த அந்த உடலில் பலகோடி கொரானா தொற்றுக்கிருமிகள் இருந்திருக்கலாம். உடலை விட்டு ஆத்மாவைத் தின்று தீர்த்த தொற்றுக்கிருமிகள் மறுவேட்டைக்கு காற்றில் தேர்கட்டி பறக்கத் தயாராக அந்த கனமான பிளாஸ்டிக் பையினுள் கூரான போரினைச் செய்து கொண்டிருந்தது அந்த இளைஞர்களின் கரங்கள் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களது கரங்கள் நடுங்கவில்லை. பூத உடலைத் தூக்கி பெட்டியில் வைத்தனர். "கொரானா பாடி வருது..." என்ற செய்தியோடு மருத்துவமனை வளாகம் பெருக்கிய மைதானம் போலானது. ஆம்புலன்ஸ் ஓட்டுனரைத் தவிர ஒருவரும் அங்கில்லை. "புரோகிதர அரேஞ் பண்ணுங்க...எவ்வளவு பணம் ஆனாலும் தர்ரோம்....முடிஞ்சவரைல வீடியோ எடுங்க, அது ஒன்னு தான் எங்களுக்கு அப்பா கடைசி பத்தின சொத்தா இருக்க போகுது...." நண்பர்கள் சூழ இருந்து பாரதிகண்ணன் பேசினான். பிளாஸ்டிக் கவச உடையினுள் விக்ரமனின் காதில் இருந்த ஃபுளூடூத் அதைக் கடத்தியது. "புரோகிதர் தான் கொஞ்சம் பிரச்சன...யாரும் வரமாட்டேங்குறாங்க...ஒருத்தர் நம்மகூட டச்ல இருக்கார், அவர எப்பிடியாவது வரவழைக்கிறோம்...." மருத்துவமனைச் செல்வதற்கு முன்பாக விக்ரமன் பேசியது பாரதிகண்ணன் குடும்பத்திற்கு வருத்தத்தைக் கொடுத்தது. புரோகிதர் முன்நின்று நடத்தினால் தான் மீறிய தகனதர்மங்களுக்கு போம்வழியாகும், அதே நேரத்தில் அவரது ஆத்மாவும் சந்திஅடையும் என அவர்கள் கருதினர். தூண்டப்பட்ட பாரதிக்கண்ணன் வேறுவழியின்று கடைசிநேரத்தில் விக்ரமனிடம் அழைத்திருந்தான். "உங்க எடத்தில என்ன வச்சு தான் நான் பாக்குறேன்... பணம் பிரச்சனையே இல்ல !! இப்பவும் அவர் கேக்குறத கொடுக்கிறோம்... கண்டிப்பா அவர வைச்சு சடங்கு பண்ண தான் நாங்க முயற்சிப்போம்..." உடலை ஆம்புலன்சில் ஏற்றியபடியே விக்ரமன் பேசினான். ஜேசிபியால் எட்டு அடி ஆழத்திற்கு குழித்தோண்டி விட்டே அவர்கள் மருத்துவமனை வந்திருந்தனர். குழிக்கரையில் உடலை இறக்கிவைத்து புரோகிதருக்காகக் காத்திருந்தனர். "பாடிய புதைச்சாச்சா ?" பல மணிநேர அழைப்புகளைப் புறக்கணித்திருந்த புரோகிதர் ராகவனிடமிருந்து விக்ரமனின் போனுக்கு அழைப்பு வந்தது. "சாமி வாங்க...உங்களுக்காக தான் இருக்கோம்.... ஆனா பாடிய பொதைக்கதுக்கு முன்னால நீங்க சடங்கு செய்யனும்...ப்ளீஸ் எங்களுக்காக....அவர் பேமிலி ரொம்ப ரிக்கொஸ்ட் பண்றாங்க..." "மண்ணுக்குள்ள வச்சு ஓதினாலும் வெளிய வச்சு ஓதுனாலும் யார் பாக்கபோறா...'ஓ பண்றோம்' ன்னு சொல்லீட்டு போன வைக்க தெரியாதா !! ...." விக்ரமனுக்கு சலிப்புடன் பாடம் நடத்தினார் ராகவன். "இறைவன் பாப்பாருல்ல !!" "ஆமா...அடுத்த பாடி நானா தான் இருக்கும் ...இறைவன் நல்லா பெவிலியன்ல இருந்து பாப்பார்.....போங்கப்பா நான் வரல்ல வேற ஆள பாருங்க..." "ராகவன் சாமி...கொஞ்சம் பொறுமையா கேளுங்க !! இதுக்கு மட்டும் நீங்க அஞ்சு நிமிசம் ஒதுக்கினா, முப்பதாயிரம் தாரோம் .... அந்த பேமிலி தந்திருக்காங்க.... " விக்ரமனின் நீட்டலைக் கேட்ட ராகவனுக்கு முன்பின் யோசிக்க நேரமிருக்கவில்லை. "எனக்கு இன்னும் ரெண்டு கவச உடை வேணும்...உங்க பசங்க கிட்ட கொடுத்தனுப்புங்க.... மத்தபடி, இதுக்கு இன்னும் ரெண்டு புல் கூட வேணும், அதையும் முன்கூட்டியே வர்ர பசங்க கிட்ட கொடுத்தனுப்புங்க..." பணத்தையும் மதுவையும் பெற்றபிறகே தனது டிவிஎஸ் பிப்டி பைக்கைத் துடைத்து 'கொரானா அவசரம்' என்ற அட்டையை முன்னால் கட்டிக் கிளம்பினார். உடலைக் குழிக்கரையில் வைத்த இளைஞர்களில் பயபக்தியுடன் தலைக்கவிழ்ந்து நிற்க ராகவன் மந்திரங்களைச் சத்தமாகச் சொன்னார். வேனை ஓட்டிவந்த இளைஞன் தூரத்திலிருந்து போனில் பதிவுசெய்துக்கொண்டிருந்தான். இருபுறமும் கயிறுகளைக் கட்டி கவனமாக இறக்கினர். ராகவன் சென்ற பிறகு நால்வருமாக ஆளுக்கொரு மண்வெட்டியால் மண்ணை இழுத்து அதில் போட்டனர். மண்மேடாக்கி அதன் மேல் கையோடு கொண்டு வந்த பூமாலைகளைப் போர்த்தினர். விக்ரமனின் எண்ணிலிருந்து முப்பது நிமிட காணொளி வந்தது. அறையே நிசப்தத்தில் முழ்கியது. சில நொடிகளிலேயே அவனின் உறவினர்கள் அனைவரும் அதனைக் கண்டாயிற்று. ஆயிரம் நன்றிகளை விக்ரமன் வாட்ஸ் ஆப் கண்பிதுங்க அனுப்பி, "இந்தியா வரும் போது அப்பாவின் சமாதியைப் பார்ப்பதற்கு முன்பு உங்களைச் சந்தித்து காலைத் தொட்டு கும்பிடுவேன்....பாரத் மாதாக்கி ஜே..." குறுஞ்செய்தி அனுப்பினான். "யூ ஆர் வெல்கம்...பாரத் மாதாக்கி ஜே.." என்ற பதில் விக்ரமனிடமிருந்து வந்தது. விக்ரமன் பெயர் பண்டிச்சேரி கண்ணதேவன் குடும்பத்தாற்கு பரமார்த்த சொல்லானது. தந்தையில்லாத வீட்டின் முற்றத்தில் கால்வைக்க மனதைப் பக்குவப்படுத்த அவனுக்கு பதினேழு மாதம் பிடித்தது. டில்லியில் ஒரு வேலை விடயமாக வந்திறங்கிய பாரதிக்கண்ணன் சில பரிசுக்களை விக்ரமனுக்காக வாங்கிவிட்டே சென்னைக்கான விமானமேறினான். விக்ரமன் குறுஞ்செய்தியில் குறிப்பிட்டிருந்த சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையிலுள்ள ஒரு ஹோட்டலின் முன்பாக அவன் நின்றுகொண்டிருந்தான். சாலையின் எதிரில் ஒரு மசூதி இருந்தது. தொழுகை முடிந்து வெளியே வந்தவர்களில் ஒருவன் அவனை நோக்கி வந்தான். முப்பது வயதையொத்திருந்தான். "நீங்க தேடி வந்த விக்ரமன் நான் தான்..." தயங்கி மலைத்து நின்ற பாரதிக்கண்ணனுக்கு நேராக கையை நீட்டினான். மசூதியையும் தலைப்பாகையையும் பார்த்து நின்ற அவனுக்கு பேச்சு வரவில்லை. "விக்ரமன் கொரானா காலத்தில வைச்ச பொய்பெயரு.....என் பெயர் இம்ரான்..." "எதுக்கு பெயர் மாற்றி...." கையில் பரிசுப்பெட்டியுடன் தடுமாறிய அவனது கைகள் இம்ரானுக்காக நீளவில்லை. "உக்காந்து பேசலாமே..." என்ற இம்ரான் ஹோட்டலின் உள்சென்றான். அவனும் பின்னால் சென்றான். "ஆஸ்பிட்டல்ல ஒரு கொரானா டெத்க்கு எங்களுக்கு கால் வந்திச்சு....எங்கள பாத்ததும் அவங்க ரிலேடிவ்ஸ் வேண்டாம்னு சொல்லீட்டாங்க...பிறகு நாலு நாள் கழிச்சு அந்த பாடிய யாரோ அடக்கம் பண்ணினாங்க, அந்த வீடியோவ நீங்களும் வோட்ஸ்அப்ல பாத்திருப்பீங்க, ரொம்ப வைராலானதுல அதுவும் ஒன்னு.....கயிறால கட்டியிழுத்து..அந்த பெட்டி தலைகீழா விழுந்து....மறுநாள் அவரோட பிரதர் எனக்கு கால் பண்ணி அழுதார், நீங்க பெயர் மாற்றி தாடியில்லாம வந்து ஒரு பொய்யாவது சொல்லீருக்கலாமேன்னு..... அவரோட அழுக தான் அப்பிடி எங்கள பண்ண வச்சிது, மத்தபடி வேற எண்ணம் எதும் இல்ல...." பாரதிக்கண்ணன் கண்களிலிருந்து நீர் கசிந்து வடிந்திறங்கியது. தனது கையிலிருக்கும் பரிசைப் பார்த்தபடி இம்ரானை மனதுருக கண்ணியமாகப் பார்த்தான். "அழ வேண்டாம்....இது சாதாரண விசயம் தான், அந்த நோய் நம்ம எல்லாரையும் பயமுறுத்திச்சு....ஆனா இறைவனுக்கு மட்டும் தான் நான் பயப்படுவேன்..." "ஒரு கிப்ட் வாங்கீட்டு வந்தேன்.... உங்களுக்கு பிடிக்குமான்னு தெரியல !!" பெட்டியைக் கைகளில் உருட்டியபடி அமர்ந்திருந்தான். "தாங்க.... பிடிக்கிற எல்லாத்தோடையுமா நாம இந்த உலகத்துல வாழுறோம் ?..." பாரதி அந்த பெட்டியைக் கொடுத்தான். கையில் வாங்கிய இம்ரான் அங்கேயே பிரித்துப்பார்த்தான். புன்னகைத்தான். தங்கஇழை வேயப்பட்ட அட்டையைக் கொண்ட பகவத்கீதை அதிலிருந்தது. இருக்கையிலிருந்து ஏழுந்து வந்து இம்ரானை இறுகக் கட்டிப்பிடித்தான்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.