logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

Sudha.T

சிறுகதை வரிசை எண் # 200


மூவரின் தனிமை, இறுதியில் வெற்றி!! ஜூம் மீட்டிங் ஓடிக்கொண்டிருந்தது. "ஓகே வி வில் பிக்ஸ் தட் டார்கெட். வி வில் டிஸ்கஸ் த இஷ்யூஸ் இன் டீடைல்" போன்ற பேச்சுக்கள் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. சிலர் தங்களை மியூட்டிலேயே வைத்துக் கொண்டிருந்தனர். டீம் லீடர் அவர்களின் பெயரைச் சொல்லி அழைத்தால் மட்டும் உடனே ஹைபர்நேஷனில் இருந்து வெளி வரும் கரடி போல் சிலித்துக்கொண்டு வந்து ஆனால் சரியாக பதில் சொல்லி விடுவார்கள். "ஓகே, மீண்டும் 2:00 மணிக்கு சந்திப்போம்". விஜய் பெருமூச்சு விட்டான். மொபைலில் உமா சிரித்துக் கொண்டிருந்தாள். கொல்லும் தனிமை விஜய்யை தின்று விடும் போல் இருந்தது. ஏக்கப்பெருமூச்சு அனலாய் அவன் உடலை தகித்தது. என்ன சொல்லி அழைத்தால் வருவாயோ நீ ? என்று விஜய்யின் மனம் கசிந்தது. உமாவுடன் கழித்த அந்த சந்தோஷமான தருணங்கள் விஜய்யின் நினைவுகளை சீண்டியது. எதற்கெடுத்தாலும் பிடிவாதம் உமாவிற்கு. எல்லாவற்றிலும் ஒரு முரண். எல்லோருமே ஒரு நோக்கத்தோடு தான் எதிர்பார்ப்போடு தான் பழகுகிறார்கள் என்ற எண்ணம் அவள் உள்ளத்தில் வேரூன்றி இருந்தது. விஜய்யின் பெற்றோர், சொந்தக்காரர்கள் யாரையுமே அவளுக்கு பிடிக்கவில்லை. தலையில் பூ வைத்துக்கொள், நேரத்திற்கு சாப்பிடு, தினமும் காலையில் குளித்து விடு போன்ற சாதாரண விஷயங்கள் கூட உமாவிற்கு ஆணாதிக்கத்தின் உச்சக்கட்டமாக தோன்றியது. தாயில்லாத விஜய்க்கு ஒரு நல்ல தோழியாகவும் தாயாகவும் விளங்க வேண்டும் என்று உமாவிற்கு தோன்றவே இல்லை. இப்போது காரணமே இல்லாமல் விவாகரத்து வேண்டும் என்ற பிடிவாதம். குழந்தை பிறக்காதற்கும் விஜய் தான் காரணம் என்று தீர்மானமாக உமா நம்பிக் கொண்டிருந்தாள். அவளுடைய பெற்றோரும் அவளை உசுப்பி விட்டுக் கொண்டிருந்தனர். "டிவோர்ஸ் பேப்பர்களில் சைன் பண்ணி விட்டாயா விஜய் ? " அண்ணனின் உணர்ச்சியற்ற குரல் போனில் ஒலித்தது. "நீ அவளுக்கு பரிசளித்த நகைகளை திரும்ப வாங்கி விடு." "ஏன் அண்ணிக்குத் தேவையா அவை? " என்று கேட்க நினைத்தவன், "இன்னும் இல்லை அண்ணா " என்றான். மேலும் பேசுவதற்குள் அவனுக்கு இன்னொரு கால் வந்தது "அண்ணா நான் பின்னர் பேசுகிறேன். " விஜய்யை தேசாய் மொபைலில் அழைத்தார். "இன்று அப்பார்ட்மெண்ட் பார்க்க ஒரு நல்ல கிளைன்ட் வருகிறார். நீ வீட்டில் தானே இருக்கிறாய்? " "நான் வீட்டில் இல்லாமல் எங்கே போவேன்? சந்தர்ப்பமும் சூழ்நிலையும் என்னை கையாலாகாதவனாக ஆக்கி வைத்திருக்கிறதே. " "ஏன் இப்படி விரக்தியாக பேசுகிறாய் விஜய்? " "என்னுடைய நிலைமை புரிந்தும் நீங்கள் இப்படி பேசுவது மிகவும் வருத்தமாக இருக்கிறது மிஸ்டர் தேசாய் " "ஐ அம் சாரி விஜய். உன்னை வேதனையுறச் செய்வது என் நோக்கமல்ல. எனக்கும் நிறைய நஷ்டம் ஏற்பட்டு விட்டது. இந்த வீட்டை விற்று வரப்போகும் பணத்திற்காகத்தான் நான் காத்திருக்கிறேன். கடன்காரர்கள் மிகவும் என்னை நெருக்குகிறார்கள். என் ஷேர்கள் எல்லாம் முடங்கி விட்டன. " "தேசாய் பாபு என்னுடைய எம்பிஏ பரீட்சைகள் நெருங்குகின்றன. அல்ப காரணங்களுக்காக என் மனைவி விவாகரத்து கோருகிறாள். என் கம்பெனி என்னை ஓரங்கட்டி விட்டு என் ஜூனியருக்கு பிரமோஷன் கொடுக்கிறது. வீட்டு வேலைகளையும் நான் தான் செய்கிறேன். வேலைக்காரி பத்து நாட்களாக வரவில்லை. சிங்க் பாத்திரங்களால் நிரம்பி வழிகிறது. இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் வீட்டை பார்க்க வருபவருக்கு எப்படி நான் வீட்டை காட்டுவது? அவர்கள் என்ன நினைப்பார்கள்?" "பரவாயில்ல விஜய், நான் மிகவும் இக்கட்டில் இருக்கிறேன். ஸந்தியா என்ற லேடி வருகிறாள். வீட்டை கண்டிப்பாக வாங்கிக் கொள்வதாக கூறியிருக்கிறாள். இன்னும் சிறிது நேரத்தில் அங்கு வருவாள். வேறு வழி இல்லாமல் விலையையும் குறைத்து தான் கூறியிருக்கிறேன். அதற்குத்தான் சொன்னேன் நீயே வாங்கிக் கொண்டு விடு என்று. உன்னிடம் பணம் இல்லை என்று மறுத்து விட்டாய். " சொல்லவொண்ணாத மனச்சோர்வு விஜய்யை ஆட்கொண்டது. அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் இந்த வீட்டை காலி செய்துவிட்டு எங்கே போவது? தனியாள் என்றால் யாரும் வீடு வாடகைக்கு தருவதில்லை. ஆயிரம் கேள்விகள் கேட்கின்றனர். மனைவி இல்லையா ? விவாகரத்து ஆகிவிட்டதா ? பெற்றோர் வருவார்களா ? நண்பர்கள் நிறைய உண்டா ? பெண் நண்பர்கள் வருவார்களா ? இரவில் தாமதமாக வீட்டிற்கு வருவீர்களா ? இப்படிப்பட்ட கேள்விகளால் விஜய் மிகவும் நொந்து போயிருந்தான். ஒர்க் ஃப்ரம் ஹோம் என்றாலும் வாரத்தில் ஓரிரு நாட்கள் அலுவலகம் செல்ல வேண்டி இருக்கிறது. தனிமை வெறுத்து விட்டது அவனுக்கு. ஹாலை மட்டும் சிறிதே ஒழித்து வைத்தான். அங்கங்கு சிதறி கிடந்த பனியன், ஜட்டி, டீ காபி கப்புகள், பிரிந்து கிடந்த நியூஸ் பேப்பர்கள் எல்லாவற்றையும் கிளியர் செய்தான். சமையலறை கதவை சாத்தி வைக்கலாமா என்று யோசிக்கும்போது காலிங் பெல் ரீங்கரித்தது. "எஸ் கம்மிங் " என்று பதிலளித்தவாறே கதவைத் திறந்த விஜய் சற்றே அதிர்ச்சியில் பின் வாங்கினான். "ஹலோ நான் தான் சந்தியா " இன்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பெண்மணிக்கு சுமார் 60 வயது இருக்கும். நீல வண்ணத்தில் சல்வாரும் அதற்குப் பொருத்தமாக காலர் வைத்த கம்மீசும் அழகாக க்ளிப்பிடப்பட்ட நரைத்த பாப் கூந்தலும் அவளை (அவரை) மிகவும் கண்ணியமாக காட்டியது. தன் முகத்தில் இருந்த ஆச்சரியத்தை மறைக்காமலேயே இன்முகத்துடன் அந்தப் பெண்மணியை வரவேற்றான் விஜய். சந்தியாவிடம் ஓர் அதீத படபடப்பு தென்பட்டது. " நான் அதிக நேரம் எடுத்துக் கொள்ள மாட்டேன். பிளாட் பார்த்தவுடன் கிளம்பி விடுவேன்." என்று கூறினாலும் அவள் விழிகள் அங்கும் இங்கும் அலைந்தன. "பரவாயில்லை நீங்கள் வீட்டை பாருங்கள். நான் எனக்கு டீ தயாரித்துக் கொண்டிருந்தேன். நீங்களும் என்னோடு சேர்ந்து அருந்தலாம்" என்றான் விஜய். "ஓ ஷ்யூர். " சந்தியாவின் குரலில் குதூகலம் தொனித்தது. விஜய் அடுப்பில் டீக்கெட்டிலை ஏற்றி குமிழை திருகியவுடன் பர்னர் நீல ஜ்வாலை காட்டியது. "நான் உதவலாமா? " மென்மையாக ஒலித்தாள் சந்தியா. விஜய் மறுப்பேதும் சொல்லாமல் நகர்ந்து கொண்டான். வெகு நாள் பழகியவள் போல் டீப்பொடி, ஜீனி, பாலை லாகவமாக எடுத்து கையாண்டாள் ஸந்தியா. "தனியாகத்தான் வசிக்கிறீர்களா? " நீட்டிய டீ கோப்பையுடன் வினவினாள் ஸந்தியா. "டீ அருந்திய பிறகு நான் இந்த சிங்கில் உள்ள பாத்திரங்களை அலம்பிவிடுகிறேன். உங்களுக்கு எந்தவித ஆட்சேபணையும் இருக்காது என்று நினைக்கிறேன்." என்றாள் மேலும். " நான் உங்களை விட வயதில் மிகவும் சிறியவன். ஒருமையிலேயே நீங்கள் என்னுடன் பேசலாம்." புன்னகைத்தான் விஜய். "ஓகே, வீடு மிகவும் அழகாக இருக்கிறது தனியாகத்தான் வசிக்கிறாயா என்று என்னுடைய கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லவில்லை. " விஜய் தலை தாழ்ந்தான். நொடியில் உமாவுடன் வாழ்ந்த வாழ்க்கை தோன்றி மறைந்தது. அவசரமாக பதிலளித்தான். "தனியாகத்தான் " மனதின் படபடப்பு வெளியில் ஒலித்ததோ ? "உட்கார்ந்து டீ அருந்துவோமே விஜய் " ஒரு தாயின் அக்கறை ஸந்தியாவின் குரலில் ஒலித்தது. "ஏதேனும் பிரச்சனையா விஜய்? " "இல்லை அம்மா, அம்மான்னு அழைக்கலாமா உங்களை?" "என்னிடம் சொல்லலாம் என்றால் சொல் விஜய்." "என் கம்பெனி என்னை அலட்சியம் செய்கிறது. ப்ராஜெக்டுக்காக மிகவும் சிரமப்பட்டு உழைத்தேன் நான். ஆனால் பிரமோஷன் வேறு யாருக்கோ. என் மனைவியும் என்னை புரிந்து கொள்ளவில்லை. " விஜய் தன் மன ஆதங்கத்தை கொட்டி தீர்த்தான். "மன்னிக்கவும் நான் என் வேதனைகளை உங்களிடம் சொல்லி விட்டேன். இந்த வீட்டை நீங்கள் கண்டிப்பாக வாங்கிக் கொள்வதாக தேசாய் பாபு கூறினார்." "நானும் ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டவள் தான் விஜய். என் இரு மகள்களும் வெளிநாட்டில் வசிக்கின்றனர். அவர்கள் தான் நான் இந்த வீட்டை வாங்குவதற்கு பணம் தருகின்றனர். என் கணவருக்கு என் மீது அக்கறை இல்லை. அவருடைய உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே அவர் உலகம். என் தேவைகளோ, என்னுடைய உடல் நலனோ அவருக்கு முக்கியமில்லை. என்னுடைய வயதுக்கேற்ற உபாதைகள் எனக்கும் இருக்கின்றன. நான் சொல்வதைக் கேட்க, என்னுடன் மனம் விட்டு பேச என் கணவர் தயாராக இல்லை. நான் எது சொல்ல விழைந்தாலும் அப்புறமாக சொல் இப்போது எனக்கு நேரமில்லை என்பார். என்னுடன் சேர்ந்து ஒரு டீ அருந்த கூட அவருக்கு மனதில்லை. கணவரிடம் பேச வேண்டியதை மற்றவர்களிடமா பேச முடியும்? எப்பொழுதும் மற்றவர்களிடம் குற்றம் கண்டுபிடித்து ஏதாவது சண்டை இட்டுக் கொண்டே இருக்கிறார். நாங்கள் வசிக்கும் வீடு அவருடைய பெயரில் இருக்கிறது. நீ சொல்வதெல்லாம் நான் கேட்டுக் கொண்டிருக்க முடியாது உனக்கு இஷ்டம் இல்லை என்றால் வீட்டை விட்டுப் போ என்று அவர் சில நாட்களுக்கு முன்பு கூறினார். என் பெண்கள் இருவரும் தந்தையின் பேச்சைக் கேட்டு கொதித்துப் போய்விட்டனர். அவர்கள் தான் என்னை தனியாக வசிக்கும் படி கூறி, அப்பாவுக்கு உன் அருமை அப்போதாவது புரிகிறதா என்று பார்க்கலாம் என்றனர். ஒரு சகதியில் சிக்கிக் கொண்டு இருப்பது போல் இருந்த எனக்கு என் பெண்களின் வார்த்தைகள் வேதவாக்காக தோன்றியதில் வியப்பில்லை. துணை இருந்தும் தனிமையில் வாடுவது மிகவும் கொடுமை. உன்னுடைய நிலைமை எனக்கு மிகவும் நன்றாக புரிகிறது விஜய். எவ்வளவு மனிதர்கள் இந்த உலகத்தில், ஆனால் பேசுவதற்கு தான் யாரும் இல்லை. பேச்சுக்கள் யாவுமே வியாபார பரிவர்த்தனைகள் போல் தான் இருக்கின்றன. நட்புக்கள் எல்லாமே போலியாகவும் ஒரு நோக்கத்துடனும் காணப்படுகின்றன. சிலர் பேச மட்டும் விரும்புகின்றனர், எதற்கு தெரியுமா? தங்கள் பெருமைகளை சொல்லிக் கொள்ள, மற்றும் சிலர் தங்கள் கஷ்டங்களை சொல்லிவிட்டு "பாவம் நீ ஜாலியாக இருக்கிறாய் உன்னிடம் போய் என் கஷ்டங்களை சொல்லி விட்டேன்" என்று நம் மீது ஒரு பொறாமை பார்வையை வீசுவார்கள். ஆனால் நாம் சொல்வதை கேட்பதற்கு அவர்களுக்கு விருப்பமில்லை, பொறுமையும் இல்லை நாம் ஏதாவது ஆலோசனை சொல்லலாம் என்றால் அதை கேட்பதற்கு மனமும் இல்லை." "அம்மா நீங்கள் சொல்வது நூறு சதவிகிதம் உண்மை. நாம் இருவருமே இந்த நீரோட்டத்தில் சேர்ந்துதான் பயணிக்கிறோம். " "உன் மனைவியிடம் நான் பேசிப் பார்க்கிறேன் விஜய். எனக்கென்னவோ அவள் சிறுபிள்ளைத்தனமாகவும் விளையாட்டுத்தனமாகவும் இருப்பதாக தோன்றுகிறது. சரியான வழிகாட்டல் இன்றி இருக்கிறாள் அவள். கணவரை பிரிந்து வாழ நினைக்கும் எனக்கு மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்ல என்ன தகுதி இருக்கிறது என்று யோசிக்கிறாயா? என்னுடையது தற்காலிகமான பிரிவு. மேலும் உன் வயதில் எனக்கு அப்படிப்பட்ட எண்ணங்கள் தோன்றியது இல்லை. என்னுடைய இளமையில் நான் நிறைய விட்டுக் கொடுத்து தான் போனேன். " நீண்ட பெருமூச்சுடன் நிறுத்தினாள் ஸந்தியா. "நம்முடைய நல்ல குணத்தினால் நாம் நிறைய வஞ்சிக்கப்படுகிறோம். " என்றான் விஜய். அப்பொழுது வாயில் கதவு தட்டப்பட்டது. " பணிப்பெண் வந்துவிட்டாள் போலிருக்கிறது." ஆர்வத்துடன் கதவை திறக்கச் சென்றான் விஜய். வாசலில் 70 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி நின்று கொண்டிருந்தாள். "யார் நீங்கள்? என்ன வேண்டும் உங்களுக்கு?" "இந்த வீடு வாடகைக்கு இருப்பதாக வாட்ச்மேன் கூறினார். என் பெயர் ராதிகா. நான் இந்த அப்பார்ட்மெண்டில் முதல் பிளாக்கில் வசிக்கிறேன். " அவள் குரலும் உடலும் லேசாக தள்ளாடியது. சந்தியா சட்டென்று அந்த மூதாட்டியை பிடித்துக் கொண்டாள். "உள்ளே வாருங்கள் அமர்ந்து கொண்டு பேசுவோம். " "புதிதாக யாரோ வருகிறார்கள் என்று வாட்ச்மேன் கூறினான். யார் என்று தெரிந்து கொள்வதற்காகத்தான் நான் வந்தேன்" என்றாள் ராதிகா. விஜய்க்கு சற்றே சலிப்பு ஏற்பட்டது. "இந்த வீடு வாடகைக்கு அல்ல, விற்பனைக்குத்தான் " என்றான் பொறுமை இழந்தவனாக. "நான் வாடகைக்கு கேட்கவும் வரவில்லை வாங்கவும் வரவில்லை" என்றாள் ராதிகா அவசரமாக. "பின் எதற்கு வந்தீர்கள்?" என்றான் சற்றே கோபமாகவே விஜய். "இல்லை, நான்....... என்று தடுமாறினாள் அந்த மூதாட்டி. , 'ஒரு வயசான அம்மா தான் இந்த வீட்டை வாங்கறாங்க' என்று வாட்ச்மேன் என்னிடம் கூறினான். யாருன்னு பார்க்கலாம் என்று வந்தேன் " தயங்கி தயங்கி பேசினாள் அவள். ஸந்தியா டீ கோப்பையை ராதிகாவிடம் நீட்டினாள். "இந்த மாதிரி இன்னொருத்தர் கையால டீ குடிச்சு ரொம்ப வருஷம் ஆச்சு. வீட்ல மகன் மருமகள் காலேஜ் போகிற பேத்தி எல்லோரும் இருந்தாலும் எனக்கு ஒருத்தரும் டீ போட்டு தர மாட்டாங்க. நானே தான் தயாரித்துக் கொள்ளணும். சாப்பாடும் அப்படியேதான். அவர்கள் தங்களுக்கு தயாரித்துக் கொண்ட பிறகு நான் போய் எனக்கு செய்து கொள்வேன். " ஸந்தியாவும் விஜய்யும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். என்ன சொல்வது என்று இருவருக்குமே தெரியவில்லை. ஸந்தியா ராதிகாவின் அருகில் வந்து அமர்ந்து கொண்டு அவள் கரங்களைப் பற்றிக் கொண்டாள். "உங்கள் கணவர்? " கேள்விக்குறியுடன் ராதிகாவின் முகத்தை ஏறிட்டு நோக்கினாள் ஸந்தியா. "அவர் போய்ச் சேர்ந்து பல வருஷங்கள் ஆச்சு. இருக்கும்போதே சொத்தை எல்லாம் பிரித்து மகனுக்கும் மகளுக்கும் கொடுத்து விட்டார். என் பெயருக்கு என்று எதுவும் வைக்கவில்லை. அப்பா என்ன பெரிய சொத்து வைத்து விட்டு போனார், உனக்கு பிபி சுகர் மாத்திரை வாங்கவே எல்லாம் சரியாக போய்விடுகிறது, என்று என் மகன் என்னை கரித்துக் கொட்டுகிறான். மகனே என்னை மதிக்காத போது மருமகள் எப்படி மதிப்பாள். என்னை எப்பொழுது வீட்டை விட்டு துரத்தலாம் என்று தான் அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். " கண்ணீர் எட்டிப் பார்த்தது ராதிகாவின் கண்களில். மேலும் கூறினாள் ராதிகா. "மன ஆறுதலுக்காக யாருடனாவது போய் பேசினால் என்னைப்பற்றி வீண் அபவாதங்களை என் மருமகள் அவர்களிடம் பின்னர் கூறி விடுகிறாள். நான் அவர்களிடம் செலவிற்கு பணம் கேட்பேன், மருந்து மாத்திரை வாங்குவதற்கும், சாப்பிட ஏதாவது வாங்கிக் கொடுக்கவும் சொல்வேன் என்றெல்லாம் கூறியிருக்கிறாள். அதனால் என்னுடன் யாரும் பேசுவதில்லை. என்னை பார்த்தாலே தவிர்த்து விடுகின்றனர். நான் உண்மையைத்தான் சொல்கிறேன் என்னை நம்புங்கள்" என்று சொல்லிவிட்டு அழ ஆரம்பித்து விட்டாள் ராதிகா. "ப்ளீஸ், மனதை தேற்றிக் கொள்ளுங்கள். நான் யார் கூறுவதையும் அப்படியே நம்பி விடமாட்டேன். விசாரித்த பின்பு தான் ஏற்றுக் கொள்வேன்" என்றாள் ஸந்தியா ஆறுதலாக. அதைச் சொல்லும்போதே அவள் மனம் ஒரு தெளிவான முடிவிற்கு வந்திருந்தது. "உங்களுக்கு பென்ஷன் என்று எதுவும் கிடையாதா?" என்று சந்தியா ராதிகாவை பார்த்து கேட்டாள். "இல்லை என் கணவர் ஒரு சிறு வியாபாரம் தான் செய்து வந்தார்.அதிக சொத்து எதுவும் சேர்க்கவில்லை. வீடும் கொஞ்சம் நகைகளும் மட்டுமே. என் பெண்ணிற்கும் நான் அவள் விரும்பியவாறு எதுவும் அதிகமாக தரவில்லை என்று குறை. அதனால் அவளும் என்னை ஏனென்று கூட கேட்பதில்லை. " ராதிகாவின் மன வேதனை அவள் குரலில் தெரிந்தது. ஸந்தியாவின் இதயத்தில் சொல்ல முடியாத வலியும் வருத்தமும் ஏற்பட்டது. பல குடும்பங்களில் உதவித்தொகை இருப்பதால்தான் வயதானவர்களை வீட்டில் வைத்திருக்கிறார்கள் போலும். படுக்கையில் இருக்கும் முதியவர்களின் நிலை மிகவும் மோசம். ஒரு சமயம் வரை குடும்பத்தினர் கவனிக்கிறார்கள், பின்னர் கவனிக்கமுடியவில்லை என ஒதுக்கிவிடுகிறார்கள், தொலைதூர கோயில்களில் விட்டுவிடுகிறார்கள் அல்லது கொலைகூட செய்து விடுவார்களோ என்னவோ ? பல வயதான பெற்றோர்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். வேலை செய்ய முடியாமல் வயதாகிவிட்டதால், குறைந்த வருமானம் அல்லது வருமானம் இல்லாததால், முதியவர்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யக்கூட சிரமப்படுகிறார்கள். பணம் இல்லாத முதியவர்கள், உடல்நலனும் குன்றிப்போனால் அவர்களின் நிலை மோசமாகிவிடுகிறது. பணம் உள்ள குடும்பங்கள் தனியார் நிறுவனங்கள் மூலமாக உதவியாளர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். சில இடங்களில் ஹெல்ப்பர்களே முதியவர்களை மோசமாக நடத்தும் சம்பவங்களும் நடக்கின்றன. இதைவிட, ஏழை குடும்பங்களில் முதியவர்களை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை பெரும்பாலும் பெண்களே தலையில் சுமக்கிறார்கள் அல்லது பலவந்தமாக அந்த பொறுப்பு அவர்கள் மீது சுமத்தப்படுகிறது. இதற்கெல்லாம் என்ன தீர்வு? சந்தியாவின் எண்ண ஓட்டம் ராதிகாவின் குரலால் கலைந்தது. "வயதாகி அதிக நாள் இருக்கக் கூடாது, அப்படியே இருந்தாலும் மற்றவர்களை சார்ந்து இருக்கவே கூடாது. வயசான காலத்துல நமக்குன்னு பணம் இருக்கணும் அது ரொம்ப முக்கியம். அந்தப் பணம் இல்லாததுனால தான் நான் இவ்வளவு கஷ்டப்படறேன்." சட் என்று ஒரு முடிவுக்கு வந்தாள் ஸந்தியா. "உங்களுக்கு என்ன தெரியும்? உங்களால் என்ன செய்ய முடியும்?" ராதிகா ஒன்றும் புரியாமல் விழித்தாள். "நீங்கள் எதில் எக்ஸ்பர்ட்? சமையலா? கை வேலையா ?ஸ்வெட்டர் பின்னுவதா? " "சமையல் தான். பாரம்பரிய குஜராத்தி பக்குவங்கள் எல்லாமே எனக்கு மிக நன்றாக செய்யத் தெரியும். " சந்தியா விஜய்யை நோக்கி கூறினாள். " விஜய், உன் வாழ்க்கையைப் பற்றி கேள்விப்பட்ட பிறகு முதலில் நான் இந்த வீட்டை வாங்க வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் இப்பொழுது என் மனதை மாற்றிக் கொண்டு விட்டேன். வீட்டை வாங்கிக் கொள்கிறேன் ஆனால் நீ காலி செய்ய வேண்டாம். பேயிங் கெஸ்ட் ஆக நீ என்னுடன் இருக்கலாம். ராதிகா தீதீயுடன் சேர்ந்து நானும் சில சமையல் பதார்த்தங்கள் பொடி வகைகள் தயார் செய்து விற்பனை செய்தால் கண்டிப்பாக அவற்றுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். வரும் லாபத்தை ராதிகாவே எடுத்துக் கொள்ளட்டும். எனக்கு தேவையில்லை. மகன் மகளுக்கு முன்னால் நிமிர்ந்து நிற்க ராதிகா தீதீக்கும் இதுதான் நல்ல சான்ஸ். விஜய், உன்னுடைய அலுவலக வேலைக்கு நாங்கள் ஒருபோதும் இடையூறாக இருக்க மாட்டோம். உன் மனைவியை உன்னுடன் சேர்த்து வைப்பது தான் என்னுடைய அடுத்த மிக முக்கியமான வேலை. உன் மனைவி உன்னுடன் வந்து சேர்ந்த பிறகு நீ இந்த வீட்டிலேயே தொடர்ந்து இருக்கலாம். வாடகை மட்டும் எனக்கு கொடுத்து விடு. நானும் என் வீட்டிற்கு சென்று விடுவேன். ஆனால் ராதிகா தீதீயை கைவிடமாட்டேன். என் கணவரும் நான் யார் என்பதை உணர வேண்டும்." ஸந்தியாவின் குரலில் தெரிந்த உறுதி மற்ற இருவரையும் மலைக்க செய்தது. "இது எப்படி முடியும் ஸந்தியா பஹன்?" அதன் பிறகு ஸந்தியா பேச்சுக்கு இடம் கொடுக்கவில்லை. சில தினங்களில் தேசாய் பாபுவிடமிருந்து வீட்டு பத்திரத்தை வாங்கி விட்டாள். விஜய்க்கு ஒரு அறையை ஒழித்துக் கொடுத்தாள். சந்தியாவும் ராதிகாவும் விதவிதமாக சமைத்து விஜய்க்கும் தந்தனர். வியாபாரமும் செய்தனர். அன்னையின் இந்த புதிய அவதாரத்தை கண்ட ராதிகாவின் மகனும் மருமகளும் அவளிடம் அன்பாக இருக்க விழைந்தனர். ஸந்தியா இறுதியில் தான் சொன்னதை சாதித்துக் காட்டினாள். எப்பொழுது உமாவை போய் சந்தித்தாள்? என்ன பேசினாள்? ஒன்றுமே தெரியாது விஜய்க்கு. ஆனால் உமா ஒரு பொன் மாலை பொழுதில் ஒரு மெல்லிய தென்றலாய் சங்கீதமாய் விஜய்யின் அறையில் நுழைந்து அவனை பரவசப்படுத்தினாள். கணவன் மனைவி இருவருக்கும் ஸந்தியாவும் ராதிகாவும் அம்பாளும் மகாலட்சுமியுமாகவே தோன்றினர். ராதிகாவும் விஜய்யும் முதியவர்கள் இருவரின் கால்களிலும் விழுந்து மனதார வணங்கினர். மகிழ்ச்சி பூக்கள் மலர்ந்து மணம் வீசத் தொடங்கின. சிரிப்பு மத்தாப்பூக்கள் ஆனந்த வண்ணங்களை வாரி வழங்கத் துவங்கின. சாதிப்பதற்கு பாலினமும் வயதும் தடையா என்ன.? ஸாரா உணவுப் பொருட்கள் இல்லாத சமையலறைகளே இல்லை என்று ஆகிவிட்டது. ஸந்தியா ராதிகாவின் கீழ் இப்போது சுமார் 20 பெண்கள் பணிபுரிகின்றனர். தேசாய் பாபுவும் இந்த வியாபாரத்தில் ஓர் பங்குதாரர். ஸாரா ஃபுட் ப்ராடக்ட்ஸின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழாவில் பேசும்போது ஸந்தியா கூறிய வார்த்தைகள் முன்னேற துடிக்கும் உழைப்பாளிகளின் மனதில் நச்சென்று அமர்ந்தன. வாழ்க்கை ஒரு நதி. சில சமயம் நதி வற்றலாம். சில சமயம் வெள்ளமும் பெருக்கெடுத்து ஓடும். துணிந்து நீந்துபவனே வெற்றி அடைகிறான்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.