logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

ப. சிவகாமி

சிறுகதை வரிசை எண் # 199


பெண்ணுரிமை என்பது… (சிறுகதை) முனியம்மாவின் அவலக்குரல் அந்த நள்ளிரவு நேரத்திலும் அக்கம்பக்கத்து வீட்டினரை எல்லாம் அவள் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டிருந்தது. அன்று இரவு நன்றாகச் சாப்பிட்டுப் படுத்தச் சில மணி நேரத்திற்குள் “லேசா நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு. கொஞ்சம் தண்ணீர் கொடும்மா” என்று கேட்டுத் தண்ணீர் வாங்கிக் குடித்த சின்னத்தாய் அடுத்த பத்து நிமிடத்திற்குள் போயேப் போய்ச் சேர்ந்து விட்டாள்! இத்தனைக் காலம் கண் போலப் பாதுகாத்த அவளதுத் தாய் இனி அவளுக்கு இல்லை. சூழ்நிலையை உணர்ந்து பக்கத்துவீட்டு வள்ளியம்மா கிழவி, “இதோ பாரு முனியம்மா, நாள் முழுசும் அழலாம். உடம்பு வெரைச்சிப் போறதுக்குள்ள செய்ய வேண்டியதைச் செய்” என்று துரிதப்படுத்த, சொல்லற்கரிய அந்தத் துயரத்திலும், கண்களை மறைக்கும் கண்ணீரருவியுடனும் இறந்துவிட்ட தன் தாய் சின்னதாயின் உடையை சரிசெய்து, கை கால்களை நீட்டி விட்டு, கால் பெருவிரல்களை சேர்த்து கட்டி, வாயில் வெற்றிலை இடித்து வைத்துவிட்டு, விளக்கேற்றினாள். அதற்குள் குளிரூட்டிப் பெட்டி வந்துவிட்டிருந்தது. அதனை அந்த சிறு கூடத்தின் நடுவே வைத்து அதில் சின்னதாயியை கிடத்தியாயிற்று. முனியம்மாவின் மகள் மல்லிகா பக்கத்து தெருவில் வசித்து வந்த தன் தாய்மாமன் ராமசாமியிடம் துக்கச் செய்தியை சொல்லிவிட்டு வந்தாள். இன்னும் சில மணி நேரமே தன் தாய் இந்தப் பெட்டியில் கொலுவிருப்பாள்! பிறகு…?' ஓலமிட்டுக் கதறினாள் முனியம்மாள். '82 வயதிலும் சின்னத்தாய் ஓரிடத்தில் ஓய்ந்து உட்கார்ந்தது இல்லை. வீட்டில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருப்பாள். வீதியில் செல்பவர்களோடு வம்பிழுப்பாள். சமையலில் குறுக்கிடுவாள். பேரன் பேத்திக்கு கதைகளைச் சொல்லி அன்பும் அறிவுரையும் வழங்குவாள். கொள்ளுப்பேரன் கண்ணனோடு விளையாடுவாள். அவனை கொஞ்சி மகிழ்வாள். அவனோடு போட்டி போடுவாள். சிலநேரங்களில் அவனோடு மல்லுக்கு நிற்பாள். கண்ணனும் பெரும்பாலான நேரங்களில் தன் பூட்டி மடியில்தான் இருப்பான். இனி அவனுக்கும் துணையில்லை' என்று நினைத்தபோது மல்லிகாவுக்கு அழுகை பீறிட்டது. தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருக்கும் முனியம்மாவின் மகன் பழனிக்குத் தகவல் போயிருந்ததில் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் வாசலில் பந்தல் முளைத்து எட்டுத்திக்கும் அதிர பறையொலி ஒலிக்க ஆரம்பித்திருந்தது. அழுகையும் அவலமும் மேலிட சுற்றத்தினர் வந்த வண்ணம் இருந்தனர். திடீரென்று நான்கைந்து ஆட்களுடன் வந்த முனியம்மாவின் தம்பி ராமசாமி சின்னத்தாயின் அருகில் சென்று சில வினாடிகள் அவளை உற்றுப் பார்த்தான். பின்பு பரபரவென மின் இணைப்பைத் துண்டித்து ஃப்ரீசர் பெட்டியைத் திறந்து சின்னத்தாயைத் தூக்க முயற்சித்தான். ராமசாமியின் செயலைக் கண்டு ஒரு கணம் அதிர்ச்சி அடைந்த முனியம்மா சட்டென குறுக்கே பாய்ந்து “அவங்கள ஏன் தூக்கற?” என்று கத்திக்கொண்டே தன் தாயின் சடலத்தின் மீது விழுந்து அதனைப் பற்றி அணைத்துக் கொண்டாள். “அம்மாவை என் வீட்டுக்குத் தூக்கிட்டு போறேன். நகரு” என்று முனியம்மாவைத் தள்ளிவிட முயன்றான் ராமசாமி. “இத்தனைக் காலம் எங்கே போன? இப்ப அம்மாவை தூக்கிட்டு போறேன்ற” என்று கோபத்துடன் கேட்டுக்கொண்டே தன் அன்னையின் சடலத்தை மேலும் இறுகப் பற்றிக் கொண்ட முனியம்மா, “எங்களுக்கு என்ன செய்யறதுன்னு தெரியும்! நீ தூரத் தள்ளிப் போ” என்று தன் தம்பியைத் தள்ளி விட முயன்றாள். கோபமான ராமசாமி வெறித்தனமாக இழுத்துத் தள்ளிவிட்டதில் முனியம்மா பந்துபோல் சுவற்றில் மோதி சரிந்தாள். அவள் தலையிலிருந்து ரத்தம் கொடகொடவென்றுக் கொட்டியதைக் கண்டுகொள்ளாத ராமசாமி, “டேய் தூக்குங்கடா பிணத்தை” என்று உடன் வந்தவர்களை நோக்கிக் கத்தினான். அவர்களும் சின்னத்தாயின் சடலத்தை தூக்கிக் கொண்டு வெளியேற, ராமசாமி அவர்களைப் பின்பற்றிப் போய்க்கொண்டே இருந்தான். கூடியிருந்தவர்கள் அங்கு நடந்தவற்றைப் பார்த்துச் செய்வதறியாது திகைத்து நின்றனர். துக்கச் செய்தியை சொந்த பந்தங்களுக்குத் தெரிவித்துக் கொண்டிருந்த மல்லிகா, மாமன் தன் பாட்டியின் சடலத்தை தூக்கிச் செல்வதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கையிலிருந்த அலைபேசியை அப்படியேப் போட்டுவிட்டு உள்ளே ஓடினாள்.i அங்குத் தன் தாயின் கோலத்தைக் கண்டுப் பதறித்துடித்து, நொடியில் கொடியில் கிடந்தப் பருத்திப் புடவையை எடுத்துத் தலையில் அடிபட்ட இடத்தில் வைத்து அழுத்திப் பிடித்துக்கொண்டே,. “அம்மா மருத்துவமனைக்கு போகலாம் வா” என்றவாறு அவளைத் தூக்க முயற்சித்தாள். சின்னத்தாயின் வலது முழங்கைப் பகுதியில் பந்து போல் வீங்கிப் புடைத்திருந்ததைப் பார்த்த எதிர் வீட்டு கோகிலா, “அத்தை நிறைய அடிபட்டு இருக்கு. உடனே மருத்துவமனைக்குப் போகணும். கொஞ்சம் எழுந்திருக்க முயற்சி பண்ணுங்க” என்று மல்லிகாவுடன் சேர்ந்து சின்னத்தாயை உசுப்பினாள். அடிபட்ட வலியை விடத் தாய் இறந்த துக்கமும் தம்பி செய்த துரோகமுமே முனியம்மாவை வெகுவாகப் பாதித்திருந்தது. “நான் எங்கும் வரலைம்மா” என்றாள் கையசைப்பிலேயே. எவ்வளவு முயன்றும் முனியம்மாவைத் தேற்றுவது என்பது இயலாமல் போனது. மருத்துவமனைக்கு வர மறுத்துவிடவே, என்ன செய்வதென்றுப் புரியாத மல்லிகா அடிபட்டு ரத்தம் கசியும் தாயின் தலைப்பகுதியில் பருத்தித் துணியைக் கொண்டுத் தானே கட்டு போட முயற்சித்தாள். வீங்கிப் புடைத்திருந்த முனியம்மாவின் முழங்கையில் தைலத்தை மெதுவாகத் தேய்த்து விட்டாள் கோகிலா. 'அதிகாலையில் எழுந்து வாசல் தெளிப்பதில் துவங்கி சமைத்து துவைத்து துலுக்கி… என வீட்டு வேலைகளை முடித்து, தன் தாய்க்கு குளிக்க உடைமாற்ற உதவிபுரிந்து பக்குவமாகத் தயார் செய்த உணவைச் சாப்பிட வைத்து பின்பு அலுவலகத்துக்கு ஓடி அங்கே பெருக்கி துடைத்து தண்ணீர் எடுத்து வைத்து மேல் அதிகாரி சொல்லும் பிற கடமைகளைச் செய்து, மீண்டும் மதியத்தில் ஓடிவந்து தாயை கவனித்து ஒரு வாய் உணவு உண்ணக் கொடுத்து, இரண்டு வாய் அவசரமாய் தானும் அள்ளிப் போட்டு அரைகுறையாய் சாப்பிட்டு, மீண்டும் அலுவலகத்துக்கு ஓடிக் கடமையாற்றி மீண்டும் வந்து…..' என இந்த வயதிலும் காலில் சக்கரம் கட்டாதக் குறையாக முனியம்மா அல்லாடிக் கொண்டிருந்ததை பார்த்திருந்த அக்கம் பக்கத்தினர், அவளின் தற்போதையப் பரிதாபகரமான நிலையைக் கண்டு மிகுந்த வேதனை அடைந்தனர். இப்போது வந்து இவ்வளவு வம்படியாக மகன் என்ற உரிமையை நிலைநாட்டத் துடிக்கும் இந்த ராமசாமியின் செயல் எந்த வகையில் நியாயம் என்று முணுமுணுத்தனர். வெளியேப் பறையடித்து துக்கச் செய்தியை ஊருக்குப் பறைசாற்றிக் கொண்டிருந்தவர்களும் திகைத்து நின்று விட்டிருந்தனர். அரை மணி நேரத்திற்கு முன்பு அமளிதுமளி பட்ட இடம் இப்போது அமைதியாய்…. நீண்டு கொண்டிருந்த நேரத்தில் வாசலில் பெருத்த சலசலப்பு. பாட்டியை இழந்தத் துயரமும் பயணம் செய்தக் களைப்பும் ஒருசேர ஊர் சேர்ந்த பழனிக்கு தன் தாய்மாமன் செய்த அடாவடித்தனம் தெரியவர, “அவனா? நானா? ன்னு இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பார்க்கிறேன்” என்று கையில் கிடைத்த உருட்டுக்கட்டையை எடுத்துக்கொண்டு புயல் போல ஆக்ரோஷமாகப் புறப்பட்டான். அடிபட்டுக் கிடந்தத் தாயை அப்படியே விட்டுவிட்டு, “அண்ணா வேண்டாம்! விட்டுடுண்ணா! அவங்கள கடவுள் பாத்துக்குவார்ண்ணா! நீங்க வாங்கண்ணா!” என்று கத்திக்கொண்டே மல்லிகா அண்ணன் பின் ஓடினாள். தடுக்க முயன்றப் பலரையும் உதறிவிட்டுப் போய்க்கொண்டே இருந்தவன் தெருவின் திருப்பத்தை அடைந்தபோது, “தம்பி பழனி! கொஞ்சம் நில்லப்பா” என்ற கம்பீரமானதொருக் குரலுக்குக் கட்டுப்பட்டான். 'செல்வம் ஐயா' அவ்வூரின் பெரிய மனிதர். பொதுவுடமைச் சித்தாந்தவாதி, முற்போக்குவாதி, பெண்ணியவாதி… என்று அவருக்கு பன்முகங்கள். பெரியபெரிய அரசியல் புள்ளிகளுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் வேண்டப்பட்டவர். “என்னுடன் வா” என்ற அவர் அவன் வீட்டை நோக்கி நடக்க, அவரைப் பின்பற்றி நடந்தான் பழனி. அவரைக் கண்டதும் எழுந்திருக்க முயன்ற முனியம்மாவைப் பார்த்து, “பரவாயில்லம்மா! நீ சிரமப்பட வேண்டாம். அப்படியே படுத்துக்கோ” என்று அங்கிருந்த மரப்பலகை ஒன்றில் அமர்ந்தார். பழனி கையிலிருந்த உருட்டுக் கட்டையை ஓரமாகப் போட்டுவிட்டு அவர் அருகில் பவ்வியமாக நின்று கொண்டிருந்தான். செல்வம் தான் வந்த நோக்கத்தை நேரடியாக நிறைவேற்ற ஆரம்பித்தார். “சொந்தபந்தம் என்றால் நல்லது கெட்டது, லாப நஷ்டம் என நாலும் இருக்கத்தான் செய்யும் பழனி. அதுக்காக உருட்டுக்கட்டையை எடுத்துக்கிட்டு நீ உன் மாமனை அடிக்கப்போனா பிரச்சனை இன்னும் பெரிசாத்தானே ஆகும். இப்போ இருக்கிற சூழல்ல இது பலருக்கும் சங்கடத்தையும் கஷ்டத்தையும் நஷ்டத்தையும் ஏற்படுத்திவிடும். இப்போதைக்கு ஆக வேண்டியதை கவனிப்பது தான் புத்திசாலித்தனம். இறந்துபோன உங்க பாட்டியை நல்லவிதமாக அடக்கம் செய்கிற வேலையைப் பார். மற்றதை அப்புறம் பேசிக்கலாம். என்ன முனியம்மா நான் சொல்றது சரிதானே…” என்றார். முனியம்மா அமைதியாக இருந்தாள். “என்ன அமைதியா இருக்க? முனியம்மா, உனக்குத் தெரியாதது ஒண்ணுமில்ல. பழனிக்குச் சீறீப்பாயுற வயசு. அவன் அப்படித்தான் இருப்பான். நீதான் அவனுக்கு எடுத்துச் சொல்லணும்! கோபத்துல அடிதடியில மாட்டி போலிசு கேசு அது இதுன்னு போனா அவன் வேலைக்கும் பிரச்சனை வந்திடும்… அவன் எதிர்கால வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிடும். நீயும் உங்க அம்மாவை எவ்வளவோ சிறப்பா கவனிச்சிகிட்ட. விட்டுட்டு போயிடுச்சு. என்ன செய்யறது? நீயா நானான்னு போட்டி போட்டுட்டு இருந்தா உயிரோட வரவா போகுது? போனது போகட்டும்னு விட்டுட்டு இனி உன் பொண்ணு வாழ்க்கையைப் பற்றியும் பிள்ளை வாழ்க்கையைப் பற்றியும் யோசிக்கிறத பாரு…” 'உண்மையிலேயே எங்க மேல இருக்குற அக்கறைல தான் சொல்றாரா?' முனியம்மா அமைதியாக இருந்தாள். அவரேத் தொடர்ந்தார்…. “தன் அம்மாவோட இறுதி யாத்திரை அவங்கப் பெற்ற ஆம்பளப் புள்ளத் தான் இருக்கும்போது பொம்பளப் பிள்ளை உன் வீட்டிலிருந்து நடக்கிறது தனக்கு அவமானம்னு நினைக்கிறான் உன் தம்பி. இதைத் தான் செய்யலேன்னா ஊர்ல நாலு பேரும் தன்னை நாலுவிதமா பேசுவாங்கன்னு நினைக்கிறான். அவன் நினைக்கிறதும் நியாயம்தானே முனியம்மா! ஊரோடு ஒத்து போறது தானே நல்லது…” ‘சரிதான்! நல்ல நியாயத்தைத்தான் பேசுறாரு இவரு…’ முனியம்மாவுக்குள் கோபம் கொழுந்து விட்டது. ஆனால் அவரோ பழனியிடம் “…பழனி, முதல்ல நீ உங்கம்மாவை மருத்துவமனைக்கு அழைச்சுக்கிட்டு போயி அவங்க உடம்பை கவனி. உங்க பாட்டி நல்லா தீர்க்காயுசா வாழ்ந்துட்டு நிறைவாய்த்தான் போய் சேர்ந்திருக்காங்க. அவங்களோட இறுதி காரியத்தை எல்லோரும் ஒற்றுமையாய் இருந்து நல்லவிதமா நடத்தி முடிங்க…”என்று சொல்லிவிட்டுக் கிளம்பிப் போய்விட்டார். அவர் சென்ற பிறகு தன் அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பழனி எடுத்த முயற்சிப் பலனளிக்கவில்லை. எவ்வளவோச் சொல்லியும் கோகிலா கொண்டுவந்தப் பாலைக் கூட குடிக்க மறுத்துவிட்டாள் முனியம்மா. பழனி பறை அடிக்க வந்தவர்களுக்குப் பேசிய பணத்தைக் கொடுத்துவிட்டான். முனியம்மா குடிக்க மறுத்துவிட்ட பாலைக் கண்ணனுக்கு கொடுத்து குடிக்க கெஞ்சினாள் மல்லிகா. *** தன் தாய் சின்னத்தாய்க்கு உதவியாகத் தனது 16வது வயதில் அலுவலகத் தூய்மை பணியில் ஈடுபடத் தொடங்கினாள் முனியம்மா. மணமான புதிதில் கொஞ்சகாலம் தவிர வேறு எப்போதும் தன் தாயைப் பிரிந்தவள் இல்லை அவள்!. பிழைப்பைத் தேடி கணவருடன் பிறந்த ஊருக்கே வந்து, அலுவலகத்தில் தூய்மைப் பணியைத் தொடர்ந்தும் வயல்வெளி வேலைக்குச் சென்றும் குடும்பத்தை ஒப்பேற்றினாள். தான் விரும்பியப் பெண்ணை மணம் முடித்துக் கொண்டு வந்த தம்பி, பெற்றத்தாயை ரொம்பவுமே அலட்சியப்படுத்தினான். அவன் மனைவியும் சின்னத்தாய் மீது அடிக்கடி குற்றம் சுமத்தி திட்டி அவளை வீட்டைவிட்டே வெளியேற்றி விட்டாள். இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக முனியம்மாதான் தன்தாயைப் பேணி பாதுகாத்து வந்தாள். சின்னத்தாய்க்கோ மகன் மீது அளவு கடந்த பாசம். மகனுடன் வசிக்க வேண்டும் என்பதுதான் அவளது ஆசையும் கூட!. மகள் வீட்டில் வசித்தபோதிலும் நாளும் மகனைப் பற்றித்தான் பேசுவாள். 'என் புள்ள ரொம்பக் கஷ்டப் படுதே' என்று மகனுக்காக உருகுவாள். மாதமானால் தனது ஓய்வூதியப் பணத்தை வாங்கி மல்லிகா மூலமாக மகனிடம் சேர்த்து விடுவாள். பழனியும் முனியம்மாவும் கைச்செலவுக்கு கொடுக்கும் காசைக் கூட பத்திரப்படுத்தி மகனுக்கு கொடுப்பாள். மகனுடன் தன்வீட்டில் வசிக்க வேண்டும் என்ற ஆசை நாளடைவில் ஏக்கமாக மாறியது சின்னத்தாய்க்கு!. தெருவழியாக எவரேனும் போனால் அவரை அழைத்துப் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு மகனைப் பற்றியே பேசுவாள். “என் புள்ள ஹோட்டலை வெச்சுகிட்டு ரொம்பச் சிரமப்படுறான். நான் அவனோட இருந்தாலாவது அவனுக்கு கொஞ்சம் ஒத்தாசையாக இருக்குமே” என்பாள். 'கேட்பவர்கள் எவராவதுத் தன் மகனிடம் சொல்லி அவன் தன்னை அவனோடு அழைத்துச் செல்ல மாட்டானா' என்ற ஏக்கத்தில்!. ராமசாமி எப்போதுமேத் தன் தாயின் இந்தப் பாசத்தைப் புரிந்து நடந்து கொண்டதில்லை, தன் அம்மாவின்மீது அக்கறையோடு பாசத்தோடு இருந்ததில்லை. இத்தனை ஆண்டுகளில் அவள் இருக்குமிடம் தேடி வந்து ஒருமுறை கூடப் பார்த்ததில்லை. அவனது இரண்டு பிள்ளைகளும் பொறியியல் பட்டம் பெற்று நல்ல நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். கைநிறைய ஊதியம் பெறுகின்றனர். இவனும் ஹோட்டல் தொழிலை விடாமல் செய்து வருகின்றான். இருப்பினும் அம்மா கொடுக்கும் பணத்தை மறுக்காமல் பெற்றுக் கொள்வான். பிள்ளையிடம் சின்னத்தாய் கொண்டிருக்கும் பைத்தியக்காரத் தனமான பாசத்தை கண்டு முனியம்மாவுக்கு சில நேரங்களில் கோபம் பொங்கியெழுந்தாலும் பல நேரங்களில் தாய்மீது பரிதாபமே மிஞ்சும். இரண்டு வருடங்களுக்கு முன்புச் சிறுநீரகத் தொற்று, டெங்கு காய்ச்சல் என ஒன்றன் பின் ஒன்றாக முனியம்மாள் உயிருக்கு போராடிய நிலையில், சுமார் ஒரு மாத காலத்திற்கும் மேலாக மருத்துவமனையில் தங்கிப் பெற்றச் சிகிச்சைக்குப் பின்பு உயிர் பிழைத்து மீண்டு வந்தாள். பழனி பணிக்கும் மருத்துவமனைக்குமாக அல்லாடிக் கொண்டிருந்த, மல்லிகா வீட்டிற்கும் மருத்துவமனைக்குமாக அலைமோதிக் கொண்டிருந்த அந்தச் சங்கடமானக் காலகட்டத்தில் தான் மல்லிகா, வேறு வழியின்றி தன் பாட்டியை மாமன் வீட்டில் விட்டுவந்தாள். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிச் சற்றே உடல் நலம் தேறிய பின்பு, “மாமா வீட்டில் இருந்து பாட்டியை அழைச்சிகிட்டு வந்திடு மல்லிகா” என்றாள் முனியம்மா. பாட்டியை அழைத்துவர மாமன் வீட்டிற்குச் சென்றாள் மல்லிகா. “மாமி, அம்மா பாட்டியை அழைத்து வரச் சொன்னாங்க… “பாட்டி! பாட்டி!...” என்று கூப்பிட்டுக் கொண்டிருந்த மல்லிகாவிற்கு மாமி சொன்ன பதில் பேரதிர்ச்சியை தந்தது. மின்னலெனப் புறப்பட்டு வந்து தன் அம்மாவிடம் விஷயத்தைக் கூறினாள். “அம்மா, பாட்டி தெருவுல போற வர்றவங்ககிட்ட எல்லாம் வம்பு பேசறாங்களாம். அத்துடன் எப்பவும் மாமியை குறை சொல்லிகிட்டே இருக்காங்களாம். மாமிக்கும் அவங்களுக்கும் அடிக்கடி சண்டைதானாம். அதனால மாமா பாட்டியை முதியோர் இல்லத்தில் விட்டுட்டாராம்” என்றாள் படபடப்புடன். இதைக் கேட்ட முனியம்மாவின் உள்ளமும் உடம்பும் வேதனையில் நடுங்க ஆரம்பித்துவிட்டது. “தன்னால் கவனிக்க முடியாத சூழல் என்பதால் தானே அம்மாவைத் தம்பியிடம் விட வேண்டியதாப் போச்சு! அதற்காக அவங்கள முதியோர் இல்லத்திலேயே கொண்டு போய் விடுவான்? அதுவும் இவ்வளவு சீக்கிரத்திலேயே! பாவி….” என்றுப் பெருகி வந்தக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே மகளை அழைத்துக் கொண்டு குறிப்பிட்ட முதியோர் இல்லத்துக்குச் சென்றாள். அங்கு… அந்தத் தள்ளாத வயதில் கையில் தட்டை ஏந்திக்கொண்டு உணவுக்காக வரிசையில் காத்துக் கொண்டிருந்த தன் தாயின் கோலத்தை கண்டதும்… “கடவுளே! இது என்ன கொடுமை? நான் என்ன பாவம் செய்தேனோ என் தாயின் இந்தக் கோலத்தைக் காண? நான் உயிரோடு இருக்கும்போதே என் தாய்க்கு இந்த நிலைமையா?” என்றுக் கதறி அழ ஆரம்பித்து விட்டாள். “பெற்றுக்கொண்ட முன்பணமாவது மண்ணாங்கட்டியாவது…. எதுவும் வேண்டாம். தன் அம்மாவை மட்டும் அனுப்பினால் போதும்” என்றுக் கறாராகப் பேசி இல்லத்திலிருந்து தன் தாயை அழைத்து வந்துவிட்டாள். அன்றிலிருந்து ஒரு வேளையாவதுத் தன் தாயை யாரையும் நம்பி ஒப்படைத்ததில்லை. அவருக்கு இனி அனைத்துமேத் தான் ஒருத்தி மட்டும்தான் என்று முடிவு செய்திருந்தாள். அவர் ஆசைப்பட்டதையெல்லாம் செய்து கொடுத்தாள். விரும்பி கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தாள். நேற்றுவரைக்கும் தன் தாயை அப்படித்தான் கண்போலக் காத்துவந்தாள். 'ஆனால் இன்று?' வாழும் போதுத் தாய்க்குத் தண்ணீர்கூடத் தராதவன் செத்தபின்பு பாடைகட்டிப் பேர் வாங்க நினைக்கிறான்… அவனது செயலை நியாயப்படுத்தவும் சிலபேர் இருக்கிறார்கள்…! மனசாட்சியாவது! மண்ணாங்கட்டியாவது…! எல்லாக்காலத்திலும் வல்லான் வகுத்ததேச் சட்டம்… தன்னை முற்போக்குவாதி என்றும் பெண்ணீயவாதி என்றும் மேடை தோறும் காட்டிக் கொள்ளும் செல்வம்… “ஏம்ப்பா ராமசாமி! உங்கம்மா உயிரோடு இருந்த வரைக்கும் எவ்வளவோ கஷ்டத்திலும்கூட அவங்கள பொறுப்பா கவனித்தாளே! காப்பாற்றினாளே உங்க அக்கா, அவளுக்குத் தானே உங்க அம்மாவுக்குண்டான இறுதி காரியத்தையும் செய்யக் கூடிய உரிமையிருக்கு…” என்று சொல்லத் துப்பில்ல! பேச்சை வைத்துப் பிழைப்பை நடத்தும் இவர்கள்… முற்போக்கு வாதியாவது! பெண்ணீய வாதியாவது! ச்சே!' மனிதர்களின் போக்கை நினைக்க நினைக்க முனியம்மாவின் மனம் கோபத்தாலும் வேதனையாலும் கொந்தளித்தது. இல்லை! இல்லை! இல்லை! என் தாய்க்குச் செய்ய வேண்டியக் கடைசிக் கடமையையும் நான்தான் செய்வேன். யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன். இதில் என் உயிர் போனாலும் பரவாயில்லை!. இறுதி மூச்சு உள்ள வரைக்கும் என்னுடனேயே இருந்து என்னால் பாதுகாக்கப்பட்ட என் தாய்க்கு உண்டான கடைசி காரியத்தை நான் செய்வதுதான் முறை! ஒரு முடிவுக்கு வந்த முனியம்மா மல்லிகாவை அழைத்தாள். “மல்லிகா 'சமம்' அமைப்பின் தலைவி வாசுகி அம்மாவுக்குப் போன் போட்டு என் சூழ்நிலையைச் சுருக்கமாக சொல்லி உடனடியா உதவி கேட்டேன்னு சொல்லு” என்றாள். “ஆயா! ஆயா!” என்று அழைத்துக் கொண்டே குழந்தை கண்ணன் முனியம்மாவின் கன்னத்தை வருடினான். மூன்று வயதானக் கண்ணனுக்கு என்னத் தெரிந்ததோ? அழுது அழுது சோர்ந்து போயிருந்தான். ராமசாமி சின்னத்தாயியைத் தூக்க முற்பட்டபோது கூட அவன் தன் பூட்டியின் கால்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். 'சின்னத்தாய் கண்ணனைக் கொஞ்சுவதும், கண்ணன் சின்னதாயைக் கொஞ்சுவதும்…' இரண்டு குழந்தைகள் ஒருவரையொருவர் கொஞ்சி விளையாடிப் பாச மழையில் களிப்பதைப் பார்ப்போர் உள்ளமெல்லாம் பூரிக்கும். முனியம்மா சிரமப்பட்டு எழுந்து அமர்ந்தாள். தன் பேரனை மடியில் உட்கார வைத்துக்கொண்டாள். அவன் முகத்தை துடைத்து விட்டு தலையை வருடினாள். 'இவன் மீதுப் பாசத்தைப் பொழியும் அந்த ஜீவன் இனி இல்லை' என்று நினைத்தபோதுத் துக்கம் அடைத்தது. காசநோயால் தந்தை போனபிறகு தனி ஒருத்தியாக தன்னையும் தம்பியையும் வளர்த்து ஆளாக்க அவள் பட்ட கஷ்டமெல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தது. தாயின்பால் பரிவும் பாசமும் பொங்கியது. “அம்மா! தாயே! என்னை பெற்றவளே! நான் ஏதேனும் தப்பு பண்ணியிருந்தா என்னை மன்னிச்சிடும்மா. உன் விருப்பத்திற்கு மாறாக நடந்திருந்தால் மன்னிச்சிடு தாயே! என்னை மன்னிச்சிடு!” என்று வாய்விட்டுப் புலம்பினாள். 'கடைசிக் கடைசியாய் என் அம்மாவுக்கு நான் செய்யவேண்டியக் கடமை…' நினைத்து முடிப்பதற்குள் 'மகிழினி' மகளிர் குழு தலைவி மலர்க்கொடியின் தலைமையில், 'வீரமங்கை வேலுநாச்சி' மகளிர் குழு தலைவி அம்சவேனியின் தலைமையில், 'பாசறை' மகளிர் குழுத் தலைவி பனிமலர் தலைமையில், 'நம்பிக்கை' மகளிர் குழு தலைவி அஞ்சலையம்மாள் தலைமையில்… என அடுத்த ஒருமணி நேரத்திற்குள் சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் வந்த வண்ணமாக! முற்பகல் முடிவதற்குள் முனியம்மாவுக்குள் முழுத்தெம்பும் பெருகினாற்போல்… நம்பிக்கையோடு நெஞ்சு நிமிர்த்தி வீதிக்கு வந்தாள். ******** ப. சிவகாமி, Q.14, அரசு ஊழியர் குடியிருப்பு, லாஸ்பேட்டை, புதுச்சேரி.605008. 9790176618.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.