மா.கா.சதீஷ்
சிறுகதை வரிசை எண்
# 197
தலைப்பு : மண(ன)க்கொலை
வழக்கமாக எங்களை 10.50 க்கு இறக்கிவிட வேண்டிய கம்பெனி பேருந்து பாழாகிப் போன ரெயில்வே கேட்டில் சிக்கி 15 நிமிடம் தாமதமாக அதாவது இரவு 11.05 க்கு காந்தி நகர் நிறுத்தத்தில் நான் உட்பட மூன்று ஊழியர்களை இறக்கிவிட்டுச் சென்றது.. பணிபுரியும் கம்பெனியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது நான் தங்கியிருந்த அறை.. அதை கடக்க இரண்டு பாடல்கள் தூரம் எங்களுக்கு.. டிரைவர் அண்ணன், நடிகர் மோகனின் தீவிர விசிறி என்பதால் பெரிதாய் மற்ற நடிகர்களின் பாடல்களை ஒலிபரப்ப மாட்டார்.. அன்றைக்கு நூறாவது நாள் படத்தில் வரும் "விழியிலே மணிவிழியிலே" பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்போது என் நிறுத்தத்தில் இறங்கி விட்டேன்.
60 வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் கையில் பசை வாளியோடும் போஸ்டர்களோடும் நின்று கொண்டிருந்தார்.. அவர் என்னை அருகில் அழைத்தார்.. தம்பி நீங்க தப்பா நினைக்கலனா எனக்கு ஒரு உதவி செய்யனும்.. செய்வீங்களா என்றார்.. சொல்லுங்க அய்யா என்றேன்.. நானும் ஒரு பையனும் வால்போஸ்டர் ஒட்ட வந்தோம்..ஒரு அம்பது போஸ்டர் ஒட்டிருப்போம். கரெக்டா இங்க வந்த உடனே அவனுக்கு ஒரு போன் வந்துச்சு.. அவன் அவங்கம்மா கிட்ட சாயங்காலம் சண்டை போட்டு வண்டானாம். அதனால அவங்க அம்மா இப்பவரைக்கும் சாப்பிடல ன்னு அவனோட அக்கா போன்ல சொல்லிச்சு.. அதனால பையன் அப்படியே வேலைய பாதியில விட்டுட்டு போயிட்டான் தம்பி.. இன்னும் ஒரு அம்பது போஸ்டர் தான் இருக்கும்.. கோச்சிக்கமா கூட இருந்து உதவி பண்ணினா உனக்கு புண்ணியமா போகும் தம்பி என்றார்.. உடனே நான், அய்யா போஸ்டர் ஒட்ட சொல்லி குடுத்தவர் எண்ணியா பாக்கப்போறார், போதும் போய் படுங்க மணி பதினொன்னே கால் ஆயிடுச்சி என்றேன்.. இல்ல தம்பி அது தப்பு .. நான் இப்படியெல்லாம் யாருக்கும் துரோகம் பண்ணாததால தான் இந்த வயசு வரைக்கும் ஆண்டவன் என் கைய கால நல்லா வச்சிருக்கான் என்றார்.. முடிஞ்சா நீங்க உதவி பண்ணுங்க. இல்லனா பரவாயில்லை..நான் விடிகாலையில யாரையாச்சும் கூப்டு ஒட்டிக்கிறேன் என்றார்.. அந்த வார்த்தை என்னை அந்த வேலையை செய்ய பணித்தது.. "நேர்மை என்பது தனித்த உணர்வோடு இயங்க வேண்டிய காரணி அல்ல.. அது இயல்பாய் இருக்க வேண்டிய குணம்" என்பதால். சரிங்க அய்யா நான் உதவி பண்றேன் என்றேன்.. சரிங்க தம்பி நான் உங்களுக்கு இந்த வேலைக்காக இருநூறுபா தரேன் என்றார்.. நான், பரவால்ல அய்யா என்றவுடன் அது தப்பு தம்பி நீங்க வாங்கிக்கனும். இல்லனா நீங்க போலாம் நான் பாத்துக்குறேன் என்றார்.. சரிங்க அய்யா என்றேன்.. கொஞ்சம் அப்படி உட்காருங்க நான் இன்னும் சாப்பிடல சாப்டு வந்துடறேன், தம்பி நீங்க சாப்பிட்டிங்களா என்றார். நான் சாப்பிட்டேன் என்றேன்.. அந்த பையனுக்கு வாங்கின சாப்பாடு இருக்கு தம்பி சாப்பிடுங்க என்றார்.. இல்லங்க வேணாம்.. நான் கம்பெனிலயே சாப்டேன்.. நீங்க சாப்டுங்க என்று நான் சொன்ன வார்த்தையை அவர் உள் வாங்காமல் அந்த பையன பாருங்க தம்பி அம்மாவ ரொம்ப திட்டிட்டேன் ன்னு என் கிட்ட சொல்லிக்கினே இருந்தான்.. தீடீர் ன்னு போன் வந்ததும் அம்மா தான் முக்கியமுன்னு வேலைய கூட பாதியில வுட்டுட்டு போயிட்டான் ..ம்ம். இந்த காலத்து புள்ளங்களே புரிஞ்சிக்கவே முடியல என்று சொல்லி அவர் தூரமாய் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்துவிட்டார்.. அவரின் அந்த வார்த்தை என் மனதை அறுக்கும்படியாய் இரு வாரங்களுக்கு முன்பு அந்த சம்பவம் நடந்தது..
இரண்டு வாரங்களுக்கு முன்பு:
நான் எனது சொந்த ஊரில்(செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம்) இருந்து 100 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ராணிப்பேட்டையில் கார் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில், பொறியாளர் பொறுப்பில், ஊழியர்களோடு தங்கி பணிபுரிந்து வருவதால் ஞாயிற்றுக்கிழமை மட்டும் வீட்டுக்கு செல்வது வழக்கம்.. அப்படித்தான் இரண்டு வாரங்களுக்கு முன்பு வீட்டுக்குப் போனதும் காலையில் சிற்றுண்டி முடித்தப்பிறகு டிவி பார்த்துக் கொண்டிருந்தேன்.. என் அம்மா கையில் ஏதோ ஒரு போட்டோவை வைத்துக்கொண்டு , டேய் வியாழக்கிழமை புரோக்கர் கோயிந்தன் வந்துருந்தாரு.. நாலஞ்சு பொண்ணு போட்டோ எடுத்துட்டு வந்தாரு..அதுல இது ஒண்ணு தான் உன் ராசிக்கு செட் ஆவுதுன்னு நான் எடுத்து வச்சேன் என்று சொல்லி அந்த போட்டோவை என்னிடம் நீட்டினார். அந்த புகைப்படத்தை உற்றுப் பார்த்து நோட்டமிடுவதற்குள் பெண்ணின் பயோடேட்டாவை மூச்சு விடாமல் ஒப்புவித்தார் அம்மா. பொண்ணு நல்லா படிச்சிருக்கு ன்னு புரோக்கர் சொன்னாரு. அப்புறம் என்ன ?நீ கேட்ட மாதிரி படிச்ச பொண்ணு தானே? பொண்ணு எப்படி இருக்கு ன்னு சொல்லு ஒருநாள் போய் பாத்துட்டு வந்துருவோம் என்றார்.. அம்மா பேசி முடித்ததும் நான், இல்லமா எனக்கு பிடிக்கல என்றேன்.. உடனே அம்மா சற்று குரலை உயர்த்தி இப்போ அந்த பொண்ணுக்கு என்ன கொறைச்சல், நல்லத்தானே இருக்கு, நல்லா படிச்சிருக்கு , அழகா இருக்கு, ஜாதகமும் செட் ஆவுது என்று அடுக்கிக்கொண்டே போனார். நானும் குரலை உயர்த்தி பிடிக்கலனா விட்ரு, சும்மா தொணத் தொணன்னு பேசாத என்று கடிந்து கொண்டேன்..
மீண்டும் அம்மாக்களுக்கே உரித்தான மொழியில் என்னை வசை பாட தொடங்கிவிட்டார் என் அம்மா. உனக்கென்ன வயசு எறங்கிகினே போவுதா, கருவேப்பிலை கொத்து மாதிரி ஒரே ஒரு புள்ளய பெத்து , ஒண்ணுத்துக்கும் ஒதவாத உங்கப்பன் வருமானம் இல்லாம உன்ன வளத்து படிக்க வச்சி நான் கண்ணு மூடறத்துக்குள்ள கல்யாணம் பண்ணி வெக்கலாம்ன்னு பாத்தா வர சம்பந்ததெல்லாம் நீ இப்படியே தட்டி கழிச்சின்னு போனா என்னா ஆவுறது. 29 வயசு ஆகியும் பையனுக்கு கல்யாணம் பண்ணி வெக்காம இருக்குறா பாரு ஆத்தாகாரி ன்னு சொந்த பந்தமெல்லாம் காரி துப்புது மூஞ்சில. நான் எங்க போயி முட்டிகிறது.. பொண்ணு புடிச்சிருந்தா ஜாதகம் நல்லா இல்ல, ஜாதகம் நல்லா இருந்தா பொண்ணு புடிக்கலனு சொல்ற? இதுக்கு மேல எங்கேயும் போய் என்னால அலஞ்சி திரிஞ்சி பொண்ணு தேட முடியாது டா. தயவு செஞ்சி இந்த பொண்ணுக்கு ஓக்கே சொல்லு டா என்று கெஞ்சும் வகையில் கேட்டுக்கொண்டு இருந்தாள் அம்மா.
நானும் இதையெல்லாம் கேட்டுட்டு மீண்டும் ம்மோவ் பிடிக்கலனா விட்றனும். பிடிக்கல ன்னு சொன்ன பிறகும் நீ அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கினா உன் வாழ்க்கை நல்லா இருக்கும் ன்னு எத வச்சி சொல்ற, இப்படிலாம் நடந்த உன் வாழ்க்கை இப்ப நல்லா இருக்கா சொல்லு? நீயும் உங்க அண்ணன் சொன்னார்ன்னு தான பிடிக்காம இருந்தாலும் பக்கத்து தெருவுல இருந்த அப்பாவ, வேலவெட்டி இல்லாம இருந்த அவரை கல்யாணம் பண்ணிக்கின. இப்ப வரைக்கும் உன் கல்யாண வாழ்க்கயில சந்தோஷாமா இல்லன்னு நீயே எத்தனை தடவை எங்கிட்ட சொல்லி அழுதிருப்ப? அப்படி இருக்கும்போது என்னை எப்படி பிடிக்காத பொண்ண கல்யாணம் பண்ணி வாழ சொல்ற. பிடிச்சி கல்யாணம் பண்ணி இருந்தா கூட நாளைக்கு அவ எப்படி இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணி போயிடுவேன்..
பிடிக்கலன்னு சொல்லியும் நீ எனக்கு கல்யாணம் பண்ணி வச்சா சின்ன பிரச்சினை வந்தாலும் இதுக்கெல்லாம் அம்மா தான் காரணம்ன்னு எனக்கு தோணும். அப்புறம் நீ இன்னும் மாமாவ திட்ற மாதிரி நானும் உன்ன திட்டனுமா? வேணாம் விட்ரு, என் பிரண்ட்ஸ் லாம் என்னை விட வயசாகி கூட கல்யாணம் பண்ணி இருக்காங்க. அதனால வயசு ஜாஸ்தி ஆவுறதெல்லாம் ஒரே விஷயமே கிடையாது.. நான் வெயிட் பண்றேன். இதை பேசி முடித்ததும் அம்மாவின் கண்களில் கண்ணீர் கசிவதைப்பார்த்தேன் .. அதற்கு மேலும் அங்கு உட்கார முடியாமல் படுக்கையறைக்கு சென்று தாளிட்டு கொண்டேன்.. நான் சொன்ன எந்த வார்த்தை அம்மாவை சுட்டிருக்கும் என்று படுக்கையறையில் ஒரு முறைக்கு நூறு முறை எண்ணி நொந்து கொண்டேன்..
அன்று மறுநாள் காலை பணிக்கு திரும்புவதற்காக காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் ராணிப்பேட்டைக்கு செல்லும் அரசுப்பேருந்தை பிடித்து மூன்று பேர் கொண்ட இருக்கையில் ஜன்னலோரம் அமர்ந்து கொண்டேன்.. என்ன இருந்தாலும் அம்மாவின் திருமண வாழ்வின் வடுக்களை நான் ஞாபகப்படுத்தி பேசி இருக்கக்கூடாது என்று மீண்டும் மீண்டும் நினைக்க என் முகம் வாடுவது எனக்கே தெரிந்துது.. காலியாய் இருந்த மீதி இரண்டு இருக்கையில் 70 வயது மதிக்கத்தக்க முதியவரும் 30 வயது மதிக்கத்தக்க திருமணமான பெண்ணும் அமர்ந்தனர்... அவர்கள் தந்தை - மகளாய் இருக்கலாம் என்பது அப்போதைக்கு ஊகம்.. பேருந்து புறப்படப் தொடங்கியதும் அந்த பெண் கண்ணீர் விட்டு அழத்தொடங்கினாள்.. தாத்தாவும் தன் மகளை அழாதம்மா, அழாதம்மா என்று தேற்றிக்கொண்டே வந்தார்.. பேருந்து பத்து நிமிடம் கடந்திருந்த நேரத்தில் தாத்தாவுக்கு போன் வந்தது. மறுமுனையில் அவரது மனைவி என்று நினைக்கிறேன்.. அவர் போனை எடுத்து இருடி கமலா கிட்ட தர்றேன் என்றார்.. அதுவரை வெறும் பார்வையாளராக இருந்த நான் அந்த பேரைக் கேட்டதும் அந்த பெண்ணை உற்று நோக்க விரும்பினேன்.. ஆம் அது என் அம்மாவின் பெயர். அந்த அக்கா அழுது கொண்டே அலைபேசியில் பேச முடியாமல் வீட்டுக்கு வந்து சொல்றன் ம்மா என்று கூறி போனை கட் செய்து விட்டார்.. மீண்டும் கண்ணீரின் வீரியம் நிறைக்கத் தொடங்கியிருந்தது கமலா அக்காவுக்கு.. அம்மாவின் பெயர் கொண்டவர் என்பதால் நான் அந்த கண்ணீரின் காரணம் எதுவென்று தெரிந்து கொள்ள மனம் துடித்தது.. அம்மாவின் சாயல் உள்ள யாரைப் பார்த்தாலும் ஒரு வித அன்பு இதய அறையை தட்டுவது இயற்கை தானே... அம்மாவின் முகச்சாயல், அம்மாவின் பெயர், அம்மாவின் நிறம், அம்மாவின் உயரம், அம்மாவின் புடவை , அம்மாவின் சமையல் இப்படி எது ஒன்றிலும் அம்மாவை நினைவுபடுத்தும் காரணிகள் உள்ள நபர்களின் மேல் ஒருவித அன்பு வருவது இயல்பு தானே.. அந்த பெண் அழும் கண்ணீரின் சத்தம் பக்கத்து இருக்கைகள் வரை கேட்க எல்லோரும் திரும்பிப் பார்த்தனர்..அதை கவனித்த நான் அந்த தாத்தா விடம் , தாத்தா எல்லாரும் பாக்குறாங்க அவங்கள அழ வேணாம்ன்னு சொல்லுங்க , என்ன ஆச்சு சொல்லுங்க என்று மெதுவான குரலில் சொன்னேன்.. அவர் இந்த கேள்வியை யாராவது கேட்டால் சொல்லலாம் என்று முடிவு செய்தது போல் என்னிடம் சொல்ல ஆரம்பித்தார்... தம்பி, இவ என் ஒரே பொண்ணு , நான் போஸ்ட்மேனா இருந்து ரிட்டயர்டு ஆயிட்டேன். ரொம்ப செல்லமா வளர்த்தோம். என்னோட வருமானத்தெல்லாம் சேத்து வச்சு அவளை எம்.காம் வரைக்கும் படிக்க வச்சேன். அவளும் நல்லா படிச்சி நல்ல வேலைக்கும் சேர்ந்து சம்பாதிச்சு அவ கல்யாணதுக்கு தேவையான நகை பணமெல்லாம் வாங்கிகிட்டா.. 6 வருஷம் அவ சம்பாதிச்ச காசெல்லாம் வீண் செலவு செய்யாம பொறுப்போடு நடந்துகிட்டா.. போன ஆவணி மாசம் தான் எனக்கு தெரிஞ்ச புரோக்கர் மூலமா வந்த சம்பந்தத்த பேசி முடிச்சி கல்யாணம் பண்ணி வச்சேன்.. மாப்பிள்ளை டெக்ஸ்டைல்ல மொத்த வியாபாரம் பண்றார்ன்னு பொண்ணு குடுத்தேன். ஆனா அது உண்மை இல்லன்னு நாலு வாரத்துல எங்களுக்கு தெரிஞ்சிடுச்சி.. அவங்க அம்மாவ கேட்டா இப்பதான் பிசினஸ் டல் ஆயிடுச்சி இனிமே சரியாயிரும் ன்னு சொன்னாங்க.. நானும் அவர எதுவும் கேட்க கூடாது ன்னு பொறுமையா இருந்துட்டேன்.. பழைய கஸ்டமர்கிட்ட லாம் கடன வாங்கி ரொம்ப குடிக்க ஆரம்பிச்சுட்டான் தம்பி. குடி ரொம்ப ஆகி பொண்ணு ஏதாச்சும் கேட்டா மோசமா போட்டு அடிக்கிறான் தம்பி.. நானும் எவ்வளவோ பொறுமையா , புருஷன் பொண்டாட்டி விசயத்துல தலையிட கூடாதுன்னு அமைதியாய் இருந்துட்டேன்.. போனவாரம் தான் தம்பி, என் பொண்ணுக்கு இன்னொரு விசயம் தெரிஞ்சிருக்கு அவனுக்கு இப்ப இன்னொரு பொண்ணோட தொடர்பிருக்குன்னு .. அத வச்சி நேத்து நைட் நடந்த சண்டையில என் பொண்ண போட்டு ரொம்ப அடி அடிச்சிருக்கான் தம்பி, அவங்க அம்மாவும் தடுத்திருக்காங்க. அவனுக்கு அப்பா இல்ல.. அதனால அவங்க அம்மாவாலயும் எதுவும் பண்ண முடியல.. இன்னைக்கு விடிகாலையில நாலு மணிக்கு என் பொண்ணு விஷயம் இப்படி ன்னு சொல்லி என்னை வந்து கூட்டிட்டு போயிடுப்பா அழுதான்.. நானும் அவன கேட்டு சண்ட போடலாமுன்னு தான் போனேன்.. அவன் நல்லா தூங்கின்னு இருந்தான். சம்பந்தியம்மா மட்டும் எழுந்து வந்து வழி அனுப்பி வச்சாங்க அவன எதுவும் கேட்டு நீங்க மரியாதைய குறைச்சிகாதிங்கன்னு சொல்லி..
ஒத்த புள்ளைய பெத்து வளத்து இந்த பாவி கிட்ட குடுத்து நானே என் பொண்ணு வாழ்க்கைய கெடுத்துட்டேன் தம்பி என் கையை இறுகப் பிடித்து அழும்போது மண வாழ்வு என்பது அப்பட்டமான திணிப்பு என்பதை எண்ணி அழ காத்திருந்தது என் கண்கள்.. அதற்குள் சரிங்க தம்பி நாங்க எறங்க வேண்டிய எடம் வந்திடுச்சி . அங்க இருந்து பார்த்தலே நம்ம வீடு தெரியும் தம்பி . அதோ அந்த மஞ்சகலர் வீடு தான் தம்பி வரட்டுமா என்றார். சரிங்க அய்யா என்று சொல்லி அந்த வீட்டை நன்றாகவே உற்றுப்பார்த்தேன் ஒரு நிமிடத்திற்கு மேல் அங்கு வண்டி நின்றாதால்.. அவர்கள் இருவரும் கண்ணீரோடு நடந்து சென்ற காட்சி இன்னும் கலக்க நினைவோடும் கனத்த கதையோடும் நினைவிருக்கிறது எனக்கு.. நெஞ்சம் குறுகுறுத்தது எனக்கு. உடனே அம்மாவுக்கு போன் செய்தேன். ம்மோவ் நேத்து ஏதாச்சும் தப்பா பேசிருந்தா சாரி என்றேன். அதெல்லாம் விடு.. நீ பத்திரமா போய் இறங்கிட்டியா சாப்டியா என்ற இரட்டை கேள்வியில் முடித்துவிட்டாள் அம்மா..அம்மா என்பது அம்மா . அவ்வளவே தான்..
இப்போது சாப்பிட்டு முடித்திருந்த போஸ்டர் ஒட்டும் பெரியவர்,அவர் கையில் பசையை எடுத்துக் கொண்டு என் கையில் அந்த போஸ்டரை கொடுத்து பிரிக்கச் சொன்னார்.. பிரித்துப் பார்த்தும் என் கை கால்கள் நடுங்க ஆரம்பித்தது விட்டது..இதயம் நொறுங்கி இமைகள் சுருங்கிய அந்த நொடி என்னை என்னவோ செய்தது ... அந்த பெரியவர் என்னாச்சு தம்பி என்றார். இவங்களுக்கு என்னாச்சு என்றேன் அவரிடம். அதற்கு அவர், வீட்ல பிரச்சினை போல தம்பி, பொண்ணு தூக்கு போட்டுகுச்சி என்றார்..எனக்கு நெஞ்சம் நொறுங்கி நிலையிழந்து கண்ணீர் கசிய ஒவ்வொரு போஸ்டரையும் ஒட்டி முடித்து அழுதுகொண்டேச் சென்றேன் நான் தங்கியிருந்த அறைக்கு.. ஆம் அந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் இருந்தது அதே அந்த கமலா அக்கா தான். நினைத்துப் பார்க்கவே முடியாத மரணம்.. என்ன நடந்திருக்கும் என்பதை எப்படியும் பிடிபடவில்லை.. மூலக்காரணம் எதுவென்று இருக்கும் என்பது மட்டும் அறிந்தால் மேலும் மூளையை கசக்க மனமில்லை எனக்கு . நன்கு படித்த பெண் அவ்வளவு எளிதில் தற்கொலை முடிவெடுக்க எவ்வளவு துயரை அடைந்திருப்பார் என்று எண்ணும்போது மணவாழ்க்கை கசந்து போனால் மரணம் என்பது விடுதலை என்று யார் சொன்னது இவர்களுக்கு என்று எண்ணி எண்ணி வெதும்பி கொண்டேன்.. என் தாயும் அப்படி ஒரு முடிவை எடுத்திருந்தால் என்னின் இருப்பதென்பது கேள்விக்குறி தானே... நினைக்க நினைக்க கண்ணீர் காய காய நிலையிழந்து என் இருப்பு.. அவர் கொடுத்த இருநூறு ரூபாய் அந்த கண்ணீரின் பிசுபிசுப்பில் நனைந்திருந்தது..
இரவெல்லாம் எனக்கு தூக்கமில்லை.. மணவாழ்வு கொடுங்கனவாகிப் போன பிறகு கோட்டையில் வாழ்ந்தாலும் கும்மிருட்டு தானே பாதிக்கப்பட்டவர்க்கு.. தற்கொலை என்பது கோழைத்தனம் என்றால் மனக்கொலை என்பது அரக்கத்தனம் தானே. காலையில் எப்படியும் சாவு வீட்டுக்கு சென்று கமலா அக்காவின் கடைசி முகத்தை பார்த்து விட வேண்டும் என்று நினைத்து கொண்டே படுத்தேன்.. ஆனால் விடியல் மனம் அதற்கு தயங்கியது.. அம்மாவின் பெயர் கொண்ட அந்த உடலினைப் பார்க்க மனமுமில்லை தைரியமும் இல்லை எனக்கு.. இருப்பினும் கம்பெனி செல்லும் பேருந்து இந்த ஷிப்டில் அந்த வழி போகுமென்பதால் நிகழ்வை தூரத்திலிருந்து பார்க்க நினைத்தேன்..நினைத்த படியே அந்த நிறுத்தத்தில் மூன்று ஊழியர்கள் ஏற வேண்டி இருந்தால் பேருந்து நின்றது. அந்த ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து அந்த மஞ்சகலர் வீட்டைப்பார்த்தேன்.. ஆமாம் சாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது.. இழவு வீட்டின் மலர்மாலைகள் வாசம் இருநூறு மீட்டர் தூரத்தில் இருந்தபோதும் சல்லடையில்லாமல் நாசிக்கு ஏறியது...பெருத்த கூட்டம் நின்று கொண்டிருந்தது... அதற்குமேல் அதை பார்க்க மனமில்லாத நான் கண்களை இறுக மூடிக்கொண்டேன் இரண்டு நிமிடத்திற்கும் மேலாய்.... இழவு வீட்டின் வாசத்தை நாசி விடுவித்துக் கொள்ள ஐந்து நிமிடங்கள் பிடித்தது எனக்கு ...
டிரைவர் அண்ணன் நேற்று பாதியில் நிறுத்தியிருந்த பாடலை பிளே செய்தார்.. பாடல் ஒலித்ததும் கண்களை திறந்து கொண்டேன்.. கர்சீப்பால் கண்களை துடைத்துக் கொண்டேன்.. இயல்பை மீறி கனத்தது அந்த பாடல்... "ஓடையைப்போலே உறவும் அல்ல.. பாதைகள் மாறியே பயணம் செல்ல"....
*மா.கா. சதீஷ்*
29A, ராஜபாளையம் தெரு, திருக்கழுக்குன்றம் அஞ்சல் (ம) வட்டம், செங்கல்பட்டு மாவட்டம்.. 603109..
அலைபேசி : 9626296658
மின்னஞ்சல்: tkmsathish1002@gmail.com
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்