Lavanya Perumalsamy
                            
                            சிறுகதை வரிசை எண்
                                # 196
                            
                         
                        
                        
                        
                            நம்பிக்கைத் துகள் 
“இவனெல்லாம் உயிரோடு இருந்து என்னத்தைச் சாதிக்கப் போறானாம்? தறுதலை... தறுதலை...” 
கோபத்தின்  உச்சத்தில் சொற்களை சிவபாலன் உதிர்க்க, “ஐயோ, உங்க வாயால அப்படிச் சொல்லாதீங்க ஐயா” என மேகலை ஓவென்று கதறி அழுதாள். 
“விளக்கு வைக்கிற நேரத்துல வீட்டு வாசல்ல நின்னு எதுக்கு ஒப்பாரி வைக்கிற?” என  மறுபக்கம் சிவபாலனின்  மனைவி, கனகம் எரிந்து விழுந்தாள்.   
உடனே கண்களைச் சேலை முந்தானையால் துடைத்துக் கொண்டாள் மேகலை. அவர்களைச் சஞ்சலத்துடன் ஏறிட்டாள். அதே விளக்கு வைக்கும் நேரத்தில் மகனைப் பற்றி இப்படி அபசகுனமாகச் சொல்லலாமா? எந்தத் தாயால் அதைத் தாங்கிக் கொள்ள முடியும்? 
அதுவும் வினோத் இதுவரையில் யார் வம்பு தும்புக்கும் சென்றதில்லை. படிப்பிலும் கெட்டிக்காரன். மற்றவர்களுக்கு உதவுவதில் முதல் ஆளாகப் போய் நிற்பான். 
அப்படிப்பட்டவனின் நடவடிக்கைகளில் ஏனோ கடந்த சில மாதங்களாக ஏகப்பட்ட மாற்றங்கள். படிப்பிலும், மற்ற விஷயங்களிலும் எந்தக் குறையும் சொல்வதற்கில்லை. என்ன இப்போதெல்லாம் எந்நேரமும் தனித்துப் போய் அமர்ந்து கொள்கிறான். சதா ஏதோ யோசனையில் வேறு உழன்று கொண்டிருக்கிறான். 
அவன் மட்டும் வீட்டில் தனித்திருக்கையில் அவன் அன்னை, மேகலையின் சேலையை எடுத்துத் தன் மேல் போட்டுப் பார்த்தும், கட்டிக் கொண்டும் தன்னை அழகு பார்க்க ஆரம்பித்தான். சில சமயங்களில் அது மேகலையின் கண்களில் பட்டாலும் அதைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. ஏதோ சின்னப் பையன் விளையாடுகிறான் என்று எண்ணி ஒதுக்கிவிட்டாள். 
இப்போது அதுவே தலையில் இடியாய் வந்து இறங்கியிருக்கிறது. 
தொழிலதிபரான சிவபாலனின் வீட்டில் கடந்த ஆறு ஆண்டுகளாக மேகலை வேலை பார்த்து வருகிறாள். அவன் வீட்டில் கொடுக்கும் சம்பளம் தாய்-மகன் இருவரின் வாழ்க்கை சக்கரம் சுழல பெரிதும் உதவுகிறது. எனவே கனகம்  கொடுக்கும் அதிகப்படியான வேலைகளைச் சலிப்பில்லாமல் செய்து முடிப்பாள் மேகலை. 
நேரம் கிடைக்கையில்  சிவபாலனின்  வீட்டு வேலைகளில் அன்னைக்கு ஒத்தாசையாக இருப்பான் வினோத். அன்று அப்படி அவன் வந்த வேளையில் மேகலை கடைக்குச் சென்றிருந்தாள். 
வந்தவனிடம் மொட்டை மாடியில் காயப்போட்டிருந்த துணிகளை எடுத்து வரச் சொன்னாள் கனகம். அவனும் உடனே மொட்டை மாடியை நோக்கிச் சென்றான். கொடியில் காய்ந்திருந்த உடைகளை மளமளவென்று எடுத்துக் கொண்டிருந்தவனின் பார்வை அந்தப் பச்சை வண்ண உடையான நைட்டியின் மேலே பதிந்து மீண்டது. 
சுற்றும் முற்றும் பார்த்த வினோத், மளமளவென்று கைக்குக் கிடைத்த துணிகளை எடுத்துக் கொண்டு கீழே சென்றான். அவற்றை உரிய இடத்தில் வைத்துவிட்டு எஞ்சியிருந்த துணிகளை எடுக்க மீண்டும் மொட்டை மாடி நோக்கி விரைந்தான்.
சற்றுநேரத்துக்கு முன்னர் அவன் பார்த்த அந்தப் பச்சை வண்ண நைட்டியை மெதுவாகத் தடவிக் கொடுத்தான். அதை அப்படியே தான் அணிந்திருந்த சட்டையின் மேலேயே போட்டுப் பார்த்தான். அவன் உயரத்துக்கு அந்த நைட்டி உடை சற்றுச் சின்னதாக இருந்தது.
குனிந்து அப்படியும் இப்படியும் தன்னையே பூரிப்புடன் வினோத் பார்த்துக் கொண்டிருக்க, “ஏய், என்ன பண்ணற?” என அங்கே வந்த கனகத்தின் மகன் விமல் அதிகாரத் தொனியில் கேட்டான். அவனுக்கும் வினோத் வயது தான். ஆனால் நீயெல்லாம் எனக்குச் சமமா என்கிற அலட்சியப் பார்வை எப்போதும் அவனிடத்தில் உண்டு. 
“அது... ஒண்ணுமில்லை” என உடனே தான் மேலே அணிந்திருந்த உடையைக் கழற்றிய வினோத் எஞ்சியிருந்த மற்ற உடைகளை அவசரமாக எடுத்துக் கொண்டு கீழிறங்கி சென்றுவிட்டான். 
ஆனால் விமல் அதை அப்படியே விடவில்லை. அவன் பார்த்ததை அவன் அன்னையிடம் ஏற்ற இறக்கங்களுடன் சொல்லிவிட்டான். ரௌத்திரம் பொங்க விசாரணையைக் கூட்டிவிட்டாள் கனகம்.
அவன் தப்பான கண்ணோட்டத்தில் அவளின் உடையை அணிந்ததாகத் திட்டித் தீர்த்துவிட்டாள் கனகம். தப்பான எண்ணத்தில் செய்யவில்லை என்று வினோத் எவ்வளவோ முறை சொல்லியும் ஒருவரும் கேட்பதாகயில்லை. 
“இனிமே வீட்டுப் படியை மிதிச்சு பாரு. காலை வெட்டிடறேன்” என கனகம் கத்தின கத்தலில் அக்கம் பக்கம் இருந்தவர்கள் எல்லோரும் வீட்டின் வாயிலில் கூடிவிட்டனர். வினோத்துக்கு மிகவும் அவமானமாகிப் போனது. கூசிக் குறுகி நின்றான். 
கடைக்குப் போய்விட்டு அப்போது தான் அங்கே வந்தாள் மேகலை. வாயிலில் கூட்டம் கூடியிருப்பதையும் மகன் நடுநாயகமாக நின்று கொண்டிருந்ததையும் பார்த்ததும் பகீரென்றது அவளுக்கு. 
வேர்த்து விறுவிறுத்து வந்தவளிடம், “வா... நீ பெத்து வச்சிருக்கிற பாரு ஒரு பரதேசி. அவன் செஞ்ச காரியத்தைப் பாரு” என ஆடித் தீர்த்துவிட்டாள் கனகம். 
நடந்ததை அறிந்ததும் மகனை அங்கேயே அனைவரின் முன்னாலும் அடி பின்னி எடுத்துவிட்டாள் மேகலை. அழுதவாறே அன்னையுடன் வீட்டுக்குச் சென்ற வினோத்திடம், “ஏன்டா உன் புத்தி இப்படிப் போகுது... உன் அப்பா இல்லாம உன்னை வளர்க்க என்னவெல்லாம் கஷ்டப்படறேன் தெரியுமா?” எனத் தலையில் அடித்துக் கொண்டு மேகலை அழுதாள். 
“அம்மா... அம்மா..” என மேகலையின் கைகளைப் பற்றிக் கொண்டவன், 
“அம்மா... தப்பான எண்ணத்துல செய்யலைம்மா நம்புங்க. எனக்குக் கொஞ்ச நாளா பொண்ணுங்க உடைகளைப் போட்டுக்கணும்னு ஆசை ஆசையா இருக்கு. பொண்ணு மாதிரி இருக்கணும்னு இருக்கு” எனக் கலக்கத்துடன் அவளை ஏறிட்டான்.    
அவன் தன்னை ஓர் ஆணாகவே உணரவில்லை என்றும் பெண்ணாக மட்டுமே உணர்வதாகச் சொல்லவும் மேகலை திகைத்துப் போனாள். 
“சும்மா தத்து பித்துன்னு உளறாம இருடா... நீ பண்ணி வச்சதுக்கு அந்த அம்மா இனி யார் யார்கிட்ட எல்லாம்  சொல்லி வச்சிருக்காங்களோ? நான் போய் முதல்ல என் வேலைக்கு என்ன ஆச்சுன்னு பார்த்துட்டு வரேன்” எனக் கண்களைத் துடைத்துக் கொண்டு மீண்டும் அரக்க பறக்க சிவபாலன் வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றாள். 
வேலை இல்லையென்றால் என்ன செய்வது? மகனின் படிப்பு என்னவாகும். எதிர்காலமே இருண்டுவிட்டதைப் போலிருந்தது. கண்கள் இரண்டும் இருட்டிக் கொண்டு வந்தது மேகலைக்கு.  
அப்படிச் சென்றவளிடம் தான் சிவபாலன் கோபத்தில் கத்திக் கொண்டிருந்தான். “அப்படி இல்லைங்க ஐயா, அவன் தப்பான எண்ணத்துல எடுக்கலையாம். மன்னிச்சிடுங்க. ஏதோ புத்தியில்லாம செஞ்சுட்டான்” என்றவள் மகன் மேல் தவறில்லை என்பதை உணர்த்திவிடும் வேகத்தில் மகன் சொன்னதை அப்படியே அவனிடம் ஒப்பித்துவிட்டாள்.     
சிவபாலனுக்கு அது இன்னும் எகத்தாளமாகப் போய்விட, அவனெல்லாம் உயிரோடு இருந்து எதைச் சாதிக்கப் போகிறானாம் என்று சொல்லிக் கொண்டிருந்தான். 
“அப்படியே அப்பன் புத்தி” என இல்லாத அவள் கணவனின் மேல் அபாண்டமாகப் பழியேற்றி, “அவன் இருந்தா என்ன, போனா என்ன? அவன் செத்துட்டா ஒரேடியா தூக்கிப் போட்டுட்டுப் போ. உனக்கும் நிம்மதி. அதுக்கு அப்புறம் நீ இங்க வேலைக்கு வரலாம்” என சிவபாலன் சொல்லவும், 
“ஐயா, தயவு பண்ணுங்க ஐயா” என இறைஞ்சுதலாகப் பேசி, அவன் காலில் மடாரென்று விழுந்தாள் மேகலை. 
எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் மேகலையை மீண்டும் வேலைக்கு வரச் சொன்னாள் கனகம். அதுவும் மேகலையின்  மகன் இந்த வீட்டுப் பக்கம் இனி தலை வைத்துப் படுக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன். 
அவனைப் பார்த்தாலே தன் மகனும் கெட்டுவிட வாய்ப்பிருக்கிறது என மீண்டும் குத்திக் காண்பித்துவிட்டு, “சரி சரி, உன்னைப் பார்த்தா பாவமா இருக்கு. போ விளக்கு வச்சதுக்கு அப்புறம்  அழுது வடியாம வேலையைப் பாரு” எனப் பெரிய மனதுடன் ஒப்புக் கொண்டாள் கனகம்.
அவள் ஒப்புக் கொண்டதற்குக் காரணம் மேகலையின் மேல் இருந்த பரிதாபமெல்லாம்  இல்லை. அவள் வேலையை விட்டுப் போய்விட்டால் பிறகு வேலைக்கு என்று வேறு ஆளை உடனே எங்கே போய்த் தேடுவது?
இரண்டரை வருடங்கள் உருண்டோடின. மேகலை வாக்குத் தந்ததைப் போல் அதன்பிறகு வினோத்தை சிவபாலனின் வீட்டுப் பக்கம் வரவிடவேயில்லை. 
மேகலை அன்று மிகவும் பரபரப்புடன் காணப்பட்டாள். வினோத்தின் எதிர்காலம் குறித்த பயம் அவளை முற்றிலும் ஆட்கொண்டிருந்தது. அன்று பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளிவருகின்றன.
அவளுக்கென்று அவசர ஆத்திரத்துக்கு உதவ உறவுகளும் சொந்தங்களும் இல்லை. அதனால் அவள் தான் கடினமாக உழைத்து மகனைப் படிக்க வைக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்தாள்.  மகன் நல்ல நிலைக்கு வந்துவிட்டால் போதும். 
 அவள் நினைத்ததைப் போலவே வினோத் அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருந்தான். மருத்துவனாக வேண்டும் என்பது அவனது கனவு. ஆகவே அதற்குத் தீவிரமாகப் படித்துப் பரீட்சைகளை எழுதியிருந்தான். 
முகமெல்லாம் பூரிப்புடன் சென்ற மேகலையிடம், அன்று முழுவதும் கனகம் எரிந்து எரிந்து விழுந்தாள். காரணம் அவள் மகன் விமல் சுமாரான மதிப்பெண்களே பெற்றிருந்தான். 
பணத்தைத் தந்து அவனை எப்படியாவது பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிட வேண்டும் எனத் திட்டம் போட்டுக் கொண்டிருந்த வேளையில் மேகலை வாயெல்லாம் பல்லாக வரவும் வினோத் நல்ல மதிபெண்கள் பெற்றிருக்கிறான் என்று கனகத்துக்குப் புரிந்து போனது. 
அதுவுமில்லாமல் வினோத்துக்கு மருத்துவப் படிப்புப் படிப்பதற்கு கோயம்புத்தூரில் இடம் கிடைக்கவும் கனகத்தின் பொறாமை குணம் இன்னுமே தலைதூக்கியது. 
‘விளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சலம் கேட்குது’ என முகத்தை நொடித்துக் கொண்டு  உள்ளுக்குள் பொருமிக் கொண்டாள்  கனகம். 
இதற்கிடையில் மேகலைக்கு வயிற்றில் கட்டி வந்து மிகவும் அவதிப்பட, மருத்துவர் அதை அகற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டார். அதனால் அவளால் வேலைக்குச் செல்ல முடியாமல் போனது, கையிருப்பும் குறைந்து போனது. 
எப்படியோ மூன்று வாரங்களுக்குள் தன்னைச் சரி செய்து கொண்டு சிவபாலன் வீட்டை நோக்கி ஓடினாள். அதற்குள் எப்படியோ கோயம்புத்தூர் செல்ல மகனையும் தயார் செய்துவிட்டாள். 
படிப்புக்கென்று சேர்த்து வைத்ததையெல்லாம் செலவு செய்து அவனுக்கு உடைகள் என மேலும் தேவையானவற்றை வாங்கித் தந்தாள். அத்தோடு அவளுக்கும் மருத்துவச் செலவும் சேரவும் கையிருப்பு மொத்தமும் தீர்ந்து போனது. 
மகனை அழைத்துக் கொண்டு சிவபாலனிடம் சென்ற மேகலை, அவன் ஊருக்குச் செல்கிறான் என்றும் அதனால் சிறிது பண உதவி தேவை என்றும் கேட்க, வினோத்தை ஒரு பார்வை பார்த்தான் சிவபாலன். 
“அப்படியே அவனை ஆசீர்வதிச்சு அனுப்புங்க ஐயா” எனத் தொடர்ந்து மேகலை சொல்ல, “நீயே ஒழுங்கா வேலைக்கு வர்றதில்லை. உன்னை நம்பி எப்படிப் பணம் கொடுக்கிறது?” என்றாள் கனகம்.   
“அம்மா, இப்போ உடம்புக்குச் சரியாகிடுச்சு. இனிமேல் வராம இருக்க மாட்டேன்ம்மா” என நம்பிக்கையுடன் பதிலளித்தாள் மேகலை. 
“உன் மகன் படிச்சு சம்பாரிச்சு உன்னைப் பார்த்துக்குவான்னு  எனக்கு நம்பிக்கையில்லை. அவன் உருப்படாம தான் போகப் போறான். அதுவும் அவன் போறப் போக்கு கொஞ்சமும் சரியில்லை. எதை நம்பி கடன் தர்றது? வேணா ஒண்ணு பண்ணு. அவனை என்கிட்ட வேலைக்கு விடு. எனக்கும் இப்போ கூட மாட தொழிலைப் பார்த்துக்க ஆள் வேணும்” என்றான் சிவபாலன். 
 “ஐயா, அவன் டாக்டருக்குப் படிக்க இடம் கிடைச்சிருக்கு” என மேகலை கண்கள் கலங்கி போய்ச் சொல்ல, 
“இடம் தான கிடைச்சிருக்கு. படிச்சு முடிக்கலையே. படிச்சு முடிக்கப் போறானோ, இல்லை, ஊர் சுத்த போறானோ. யாருக்குத் தெரியும்? அவனுக்கே அவன் என்னவா இருக்கறதுன்னு தெரியலை. இந்த லட்சணத்துல காசைக் கரியாக்கி அவனைப் படிக்க வைக்க ஆசைப்படறியா? அவனெல்லாம் மருத்துவம் பார்த்து யாரை சாகடிக்கப் போறானோ? இங்கேயே இருந்தா நம்ம கண் பார்வையிலேயே ஒழுங்கா இருப்பான் பாரு” என்றான் சிவபாலன். 
‘ஐயோ மகனை இங்கே அழைத்து வந்தது தப்போ?’ எனச் சஞ்சலம் கொண்டாள் மேகலை. 
“இல்லைங்க ஐயா, அவன் நல்லா படிச்சு டாக்டர் ஆகிடுவான். தயவு செஞ்சு உதவுங்க” என எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும், அவள் நம்பிக்கையை உடைப்பதிலேயே குறியாக இருந்தனர் இருவரும். எத்தனை மன்றாடியும் கணவன் மனைவி இருவரும் மனம் இரங்கவில்லை. 
ஒருவித வெறுமையுடன் வீட்டை நோக்கிச் சென்றாள் மேகலை. கைச் செலவுக்கு எப்படியோ பணத்தைப் புரட்டி மகனைக் கோயம்புத்தூருக்கு அனுப்பிவிட்டாள். 
அவளால் தாங்கவே முடியவில்லை. ஓடாய் இந்தக் குடும்பத்துக்கு என்று கடந்த  ஆறு வருடங்களாய் உழைத்திருக்கிறாள். சம்பளம் வாங்கிக் கொண்டு தான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் ஓர் இக்கட்டில் உதவுவதற்குக் கூட அவர்களுக்கு மனம் வரவில்லையே என்று மனம் விண்டு போனது. 
மறுநாள் வேலைக்குச் சென்றவளிடம், “வேலைக்கு வேற ஆள் பார்த்துட்டோம் மேகலை. உனக்கே அடிக்கடி உடம்புக்கு முடியாம போகுது. நீ வருவியா மாட்டியான்னு காத்துகிட்டு இருக்க முடியாது பாரு” என கனகம் நீட்டி முழக்க, மேகலை திகைத்துப் போனாள். 
கடந்த மூன்று வாரங்கள் தவிர இதுவரையில் ஒருநாள் கூட விடுப்பு எடுக்காதவளைப் பார்த்து என்ன பேச்சு பேசுகிறார்கள். பலமுறை மன்றாடிப் பார்த்தும் கனகம் மசியவில்லை. நாங்கள் சொல்வதை நீ கேட்கவில்லை அல்லவா என்ற ஆத்திரத்தில் அப்படியொரு முடிவை எடுத்திருந்தனர். 
அதற்குமேல் அவர்களிடம் கெஞ்சுவதற்கு மேகலையிடம் திராணியில்லை. எதிர்காலம் மங்கலாகத் தெரிய சோர்வுடன் மெள்ள வீடு நோக்கி நகர்ந்தாள். 
 *****
“சீக்கிரம் வா கனகம், டாக்டர் ஹாஸ்பிடலுக்குக் கிளம்பிடுவாங்க. அதற்குள்ள போய் அவங்களைப் பார்த்துடலாம்” என சிவபாலன் சொல்ல, 
“இதோ வந்துட்டேன். சும்மா எதுக்குக் கத்திட்டு இருக்கீங்க?” எனத் தன் பருத்த உடலை நகைகளால் அலங்கரித்து நகர்த்த முடியாமல் நகர்த்திக் கொண்டு வந்தார் கனகம். 
“நம்ம போய்ப் பார்க்கணுமா? காசு கொடுத்தோம். அவ வேலையைச் செஞ்சா. அதுக்கு நம்ம நேர்ல போய் நன்றி சொல்லணுமா?  அவளுக்கு வேண்டியதை ஏதாவது வாங்கிக் கொடுத்து விட்டிருக்கலாமே” என காரில் ஏறியவாறே கனகம் நொடித்துக் கொள்ள, 
“அப்படிக் கொடுத்து விட்ட நகையைத் திருப்பி அனுப்பிட்டாங்க. அதான் நேர்ல போய்ப் பணமா கொடுத்தா மறுக்க முடியாதே எனக் கிளம்பிட்டேன்” எனச் சொல்லிச் சிரித்தார் சிவபாலன்.
“இருந்தாலும்...” என கனகம் அப்போதும் நொடித்துக் கொண்டு முகத்தை வெளியில் திருப்பிக் கொண்டார். 
“அதில்ல கனகம். அந்தப் பொண்ணு நம்ம பையனோட உயிரைக் காப்பாத்தியிருக்கா” என சிவபாலன் சொல்ல, “அதுக்குத் தான் லட்சம் லட்சமா பணம் கட்டிட்டோமே. அப்புறம் என்ன?” எனக் கணவர் கேட்கும் வகையில் முணுமுணுத்துக் கொண்டார்.  
“இப்படிப் பேசற நீ தான் போன மாசம் அந்தப் பொண்ணோட கால்ல விழுந்து நம்ம பையனைக் காப்பாத்த சொல்லிக்  கெஞ்சின. ஞாபகமிருக்கா” எனச் சிரித்தார்  சிவபாலன். 
ஆம்! அவர்களின் மகன் விமல், நண்பர்களுடன் குடித்துக் கும்மாளமிட்டுவிட்டு காரை எடுத்துக் கொண்டு போய் எதிரில் வந்த லாரியில் மோதிவிட்டான். லாரி டிரைவர் குதித்துத் தப்பித்துவிட்டார். குடிபோதையில் இருந்ததால் இவனால் எதுவும் செய்ய முடியவில்லை. 
தலையில் பலத்த காயம். மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றால். இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக மதுபானம் மற்றும் போதை மருந்து கலந்திருப்பதால் முதலுதவி தவிர மேற்கொண்டு வேறெந்த சிகிச்சையையும் ஆரம்பிக்கவே முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.  
ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு, மூளையில் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அப்படியே செய்தாலும் உயிர் பிழைப்பான் என்ற உத்திரவாதம் தர முடியாது எனக் கையை விரித்தனர். 
அதுவுமில்லாமல் அவர்கள் மருத்துவமனையின் சிறந்து விளங்கும் மூளை நரம்பியல் அறுவைச் சிகிச்சை மருத்துவர் தற்சமயம் ஊரில் இல்லை என்றும் அன்று இரவு தான் டெல்லியில் இருந்து திரும்பி வருவதாகச் சொன்னார்கள். சிவபாலன் சற்றும் யோசிக்காமல் தனக்குத் தெரிந்த ஆட்களைப் பிடித்து அந்த மருத்துவர் வரும் நேரத்தில் விமான நிலையத்துக்கே போய்விட்டார். 
வெளியில் வந்த மருத்துவர் விவேகாவை எதிர்கொண்டு அவள் கைகளைப் பற்றி, தன் ஒரே மகனைக் காப்பாற்றச் சொல்லிக் காலில் விழாத குறையாகக் குலுங்கி அழுதார் சிவபாலன்.  அவரைக் கூர்ந்து பார்த்த விவேகா அதற்குமேல் எதுவும் யோசிக்கவில்லை. 
“நீங்க ஹாஸ்பிடல் போங்க சார். நான் வீட்டுக்குப் போய்க் குளிச்சுட்டு வரேன். இல்லை பேசண்ட்டுக்கு என்கிட்ட இருந்து கிருமி தொத்திக்க வாய்ப்பிருக்கு” எனக் கனிவுடன் அவரிடம் சொன்னவள்,  உடனே மருத்துவமனையைத் தொடர்பு கொண்டாள். 
விமலின் உடல்நிலையைப் பற்றித் தெரிந்து கொண்டு மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் எனத் துரிதமாகச் செயல்பட்டு அவர்களிடம் சில உத்தரவுகளைப் பிறப்பித்தாள். சிவபாலனிடம் மேலும்  ஆறுதல் சொல்லி அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தவள் வாக்களித்தபடி அடுத்த ஒரு மணி நேரத்தில் மருத்துவமனையில் இருந்தாள். 
அப்படி வந்தவளை எதிர்கொண்டு அவள் காலிலேயே கனகம் விழுந்துவிட்டார். 
இரண்டு நாட்கள் போராடி, விமலுக்கு மூளை மற்றும் முதுகுத்தண்டு அறுவைச் சிகிச்சையைச் செய்து முடித்து அவன் உயிரைக் காப்பாற்றிவிட்டாள் விவேகா. மேலும் மூன்று வாரங்கள் மருத்துவமனையில் இருந்து உடல்தேறி இப்போது வீட்டுக்குச் சென்றுவிட்டான் விமல். 
அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் விவேகாவைப் பார்க்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிட்டவில்லை. வேறு ஒரு மருத்துவர் வந்து விமலின் உடல்நிலை குறித்துப் பேசிவிட்டுச் செல்வார். ஆகவே அவளுக்கு நன்றி கூற வேண்டும் என்று இதோ மனைவியுடன் கிளம்பிவிட்டார் சிவபாலன். 
அவர்கள் இருவரும் அந்த மருத்துவரின் குடியிருப்புக்குச்  செல்கையில் வீட்டின் முன்னால் கார் இன்னும் நின்று கொண்டிருந்தது. 
“நல்லவேளை, டாக்டர் இன்னும் கிளம்பலை” என்ற நிம்மதி பெருமூச்சுடன் காரிலிருந்து சிவபாலன் இறங்கினார். 
வாயிலிலிருந்த வீட்டுமணியை அழுத்தவும், சில நொடிகளில் யாரோ வந்து கதவைத் திறந்தனர். கதவைத் திறந்தவளைப் பார்த்ததும், சிவபாலன் மற்றும் கனகம் அதிர்ந்து போயினர். 
“மேகலை நீயா? இங்க என்ன பண்ணற?” என சிவபாலன் கேட்க, “என்ன பண்ணுவா? இங்க டாக்டரம்மா வீட்ல வேலைக்கு இருப்பா” என்றவாறே வீட்டினுள் நுழைந்தாள் கனகம். 
அவர்கள் உள்ளே வர வழிவிட்டு அவர்களைப் பின்தொடர்ந்து சென்றாள் மேகலை. 
“பரவாயில்லை... ஆளு நல்லா ஜம்முன்னு இருக்க” என கனகம் சொல்ல, “யாரும்மா வந்திருக்காங்க?” என்றவாறே முன்னறைக்கு வந்த விவேகா, சிவபாலன் மற்றும் கனகத்தை அங்கே சற்றும் எதிர்பார்க்கவில்லை. 
“வாங்க சார், வாங்கம்மா” என அவர்களை வரவேற்று, “உட்காருங்க” என அமரச் சொன்னவள், “இவங்க என் அம்மா” என மேகலையை அறிமுகப்படுத்தி வைத்தாள். 
“இவளா?” என கனகம் அலட்சியத்துடன் பார்க்க, “உனக்குப் பையன் தானே இருந்தான்? அவன் என்ன ஆனான்? நான் அப்பவே சொன்னேனே அவன் உன்னைப் பார்த்துக்க மாட்டான்னு. கேட்டியா? விட்டுட்டுப் போயிட்டானா?” என நக்கலாகச் சொன்னவாறே சிவபாலன் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தார். 
“ஏதோ இந்த டாக்டர் பொண்ணோட நல்ல மனசு  வேலை செய்யற உன் மேலே பாசம் வச்சு அம்மான்னு கூப்பிடுது” எனத் தொடர்ந்து சிவபாலன் பேச, தன் அன்னையைப் பார்த்துப் புன்னகைத்த விவேகா, “என்னங்க சார் என்னை ஞாபகமில்லையா? நான் உங்களுக்குத் தெரிஞ்ச வினோத்” என்றாள்.   
மருத்துவப் படிப்பில் சேர்ந்த வினோத்துக்கு நாளாக நாளாக அவனுக்குள் பெண்மை குணங்களே தலைதூக்கியிருப்பது புரிந்தது. ஆகவே வெளியில் ஆணாக அவனால் வாழவே முடியவில்லை. அதுவே ஒருவித மனசஞ்சலத்தை உருவாக்கியிருக்கிறது. அதைப் பற்றி நிறையப் படித்துத் தெரிந்து கொண்டான். 
அவன் உணர்வுகளுடன் போராடி தோற்பதற்குப் பதிலாக மேற்கொண்டு என்ன செய்யலாம் எனத் தன் தாய் மேகலையிடம் சொல்லவும் ஆரம்பத்தில் அதிர்ச்சியடைந்தாள். பிறகு இவனுக்கு இப்படி ஆகிவிட்டதே என்ற வருத்தம் மட்டுமே அவளிடம் எஞ்சியிருந்தது. 
மனதைத் தேற்றித் திடப்படுத்திக் கொண்டு என்ன ஆனாலும் அவள் தான் வினோத்துக்கு  உறுதுணையாகவும், பக்கபலமாகவும் இருக்க வேண்டும் என்ற முடிவுடன் மருத்துவரிடம் அழைத்துச் சென்றாள். அவரின் பரிந்துரையின்படியும், வழிகாட்டுதலின்படியும்  நடக்க ஆரம்பித்தான்.
கல்லூரிப் படிப்பின் இடையில் பாலினத்தை மாற்றுவது பல விஷயங்களில் சிக்கலாக முடியும்  என்று இருவருக்கும் புரிந்தது. ஆகவே மருத்துவப் படிப்பு முடிக்கும் வரையில் காத்திருந்து தன் பாலினத்தை மாற்றிக் கொண்டாள் விவேகா.
அதன்பிறகு மேற்படிப்பு முடித்து, மருத்துவமனை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து வருடங்கள் உருண்டோட இன்று புகழ்பெற்ற மூளை நரம்பியல் அறுவைச் சிகிச்சை மருத்துவராகத் திகழ்கிறாள் விவேகா.  
“நான் உயிரோட இருந்து எதைச் சாதிக்கப் போறேன்னு நீங்க என் அம்மாகிட்ட சொன்னதை நானும் கேட்டேன் சார். உங்ககிட்ட மன்னிப்புக் கேட்கணும் என அன்னைக்கு நானும் என் அம்மா பின்னால வந்தேன். நீங்க சொன்னதைக் கேட்டதும், நான் ஏன் உயிரோட இருக்கணும் என எனக்குத் தோணுச்சு. ஆனா அதை விட, நான் ஏன் சாதிக்கக் கூடாதுன்னும் அதிகமாத்  தோணுச்சு. 
நான் உருப்படமாட்டேன்னு நீங்க கொடுத்த ஆசீர்வாதம் தான் எனக்குப் பெரிய உத்வேகமா இருந்தது சார். நான் உருப்பட்டுக் காட்டறேன் பாருங்கன்னு அதுவே எனக்குள்ள ஒரு வைராக்கியத்தைத் தந்துச்சு. தொடர்ந்து போராடணும் என்கிற நம்பிக்கையைத் தந்துச்சு. 
நான் இந்த நிலைமைல இருக்கிறதுக்கு மிக முக்கியக் காரணம் என் அம்மா மட்டும் இல்லை. நீங்களும், அந்தச் சின்ன வயசுல எனக்குள்ள நீங்க விதைச்ச அந்த நம்பிக்கைத் துகளும் தான். அதுக்கு நான் உங்களுக்கு நன்றி சொல்லணும்” என்றாள் விவேகா.  
விவேகா சொன்னதைக் கேட்ட கணவன் மனைவி இருவரின் முகங்களும் பாறையாய் இறுகிப் போக அப்படியே எழுந்து நின்றனர். 
 
****
                        
                        
                     
                
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்