தினேஷ் குமார்
சிறுகதை வரிசை எண்
# 193
தலைப்பு : போட்டி.
கிணற்றுக்குள்ளிருந்து காக்கை கூட்டம் கத்துவது போல சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. நாக்கு வறண்டு தாகம் எடுத்தது. வயிற்றுக்குள்ளிருந்து கடாமுடா சத்தம். உடலைஅசைக்கவும்முடியவில்லை. கண் இமைகளை திறக்க முயன்றும் முடியவில்லை.
"கண்ணு எழுந்துருடா இன்னைக்கி போட்டின்னு சொன்னியே மறந்திட்டியா? நேரம் ஆகுது பாரு".
அம்மாவின் குரல் கேட்டது. போட்டி என்று கேட்டவுடன் விழித்துக்கொண்டேன். வீட்டுக்கு வெளியில் இருக்கும் முருங்கை மரத்திலிருந்து காக்கைகள் கத்திக்கொண்டிருந்த சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. சனிக்கிழமையில் பள்ளி விடுமுறை என்பதால் அண்ணன் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான். அப்பா அலுவலகத்துக்கு சென்றுவிட்டார். காலைக்கடன்களை முடித்த பின் குளித்துவிட்டு பள்ளி சீருடை உடுத்திக்கொண்டு அம்மா கொடுத்த இட்டிலியை சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு நானும் அம்மாவும் கிளம்பினோம். அண்ணன் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான். அம்மா வீட்டை பூட்டிவிட்டு சாவியை எடுத்துக்கொண்டாள். அம்மாவின் கையை பற்றிக்கொண்டு பள்ளிக்கு நடந்துக்கொண்டிருந்தேன்.
ஓவிய போட்டியில் என்ன வரையலாம் என்று யோசித்துக்கொண்டே தெருவில்
நடந்துக்கொண்டிருந்தேன். புல்லட்டில் சென்றுக்கொண்டிருந்த ஒருவர்,தெருவை கடக்க முயன்ற ஒருவரை பார்த்து "ஓரமா போடா மயிறு" என கத்திக்கொண்டிருந்தார். "மயிறு" இது என்ன புது வார்த்தையா இருக்கே. ஒருவரை திட்டுவதற்காக கூறப்படும் கெட்ட வார்த்தையா?. அம்மாவிடம் கேட்கலாமா?. அம்மா இரண்டாம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறாள்,அவளுக்கு எதுவும் தெரியாது. நாள் முழுதும் வீட்டு வேலையிலேயே மூழ்கிக்கிடப்பாள். போட்டி முடிந்து வீட்டுக்கு சென்றவுடன் அப்பாவிடம் கேட்போம். அவர் நிறைய படிப்பு படித்திருக்கிறார். அவருக்கு எல்லாமே தெரியும்.
என் வீட்டு தெருவிலிருந்து பள்ளி இருக்கும் தெருவுக்குள் நுழைந்தேன். அந்த தெருவில் இருந்த சாக்கடை ஆள்துளையை மூன்று ஆட்கள் சுற்றி நின்று பார்த்துக்கொண்டிருந்தனர். திடீரென்று சாக்கடைக்கு உள்ளேயிருந்து ஒருவர் கையில் வாளியுடன் வெளியே வந்தார். அவர் உடல் முழுதும் சாக்கடை நீர். அருகில் இருந்தவர்கள் மூக்கை மூடிகொண்டனர். வெளியே வந்தவுடன் வாளியில் இருந்த சாக்கடை கழிவுகளை தெருவோரமாக கொட்டிவிட்டு மறுபடியும் சாக்கடை ஆள்துளைக்குள் இறங்கினார். எதற்க்காக இந்த வேலையை அவர் செய்கிறார் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அம்மாவிடம் கேட்கலாமா?. அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்பாவிடம் கேட்கலாம். அவர்களை கண்டவுடன் அம்மா விரைந்து நடந்துக்கொண்டிருந்தாள்.
பிறகு, ஓவிய போட்டிக்கு கிடைத்த வாய்ப்பை பற்றி நினைத்துக்கொண்டே நடந்துக்கொண்டிருந்தேன். நான் மூன்றாம் வகுப்பு வரை புனித மேரி என்ற பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். சில காரணங்களால் என்னை ஆர்.சி என்ற பள்ளியில் நான்காவதில் சேர்த்தனர். ஆர்.சி பள்ளியில் சேர்ந்து ஒரு மாதம் இருக்கும். ஒரு நாள் அட்டெண்டர் எனது வகுப்பு ஆசிரியரிடம் ஒரு செய்தியை சொல்லி விட்டு சென்றார். எனக்கோ நாளை பள்ளி விடுமுறை என்ற செய்தியை சொல்லி இருப்பாரோ என நினைத்துக்கொண்டிருக்கையில், ஆசிரியர் செய்தியை கூறினார்.
"தனலட்சுமி பள்ளியில் நடக்கவிருக்கும் ஓவிய போட்டிக்கு விருப்பம் உள்ளவங்க தலைமை ஆசிரியரை பார்க்கவும்" என்று சொல்லிமுடித்தார்.
எனக்கு சிறுவயதிலிருந்து ஓவியம் வரைவதில் மிக்க ஆர்வம் உண்டு. வீட்டில் நிறைய ஓவியங்களை வரைந்து வைத்திருக்கிறேன். புனித மேரி பள்ளியில் போட்டிகளுக்கு அழைத்துச்செல்லமாட்டார்கள். இந்த பள்ளியில் கிடைத்த வாய்ப்பை தவற விடக்கூடாது என்று போட்டிக்கு பெயர் கொடுக்க தலைமை ஆசிரியர் அறைக்கு சென்றேன். அங்கு பிற வகுப்பு மாணவர்களும் மாணவிகளும் வந்திருந்தனர். எல்லோரும் வந்தவுடன் தலைமை ஆசிரியர் எங்களை பார்த்து.
"இதுக்கு முன்னாடி நம் பள்ளியில் நடந்த போட்டியிலோ அல்லது பிற பள்ளியில் நடந்த
போட்டியிலோ வெற்றிபெற்றவர்களை தவிர மத்தவங்களாம் வகுப்பறைக்கு செல்லுங்கள். உங்களுக்கு அடுத்தமுறை வாய்ப்பு தருகிறேன்" என்று சொல்லிவிட்டார்.
இந்த பள்ளியில் வெற்றிபெற்றவர்களுக்கு மட்டும்தான் வாய்ப்பும் பாராட்டும் கிடைக்கும் போல. இந்த உலகமும் அப்படித்தானா? என்று யோசித்துக்கொண்டே தலைமை ஆசிரியரின் அறையிலிருந்து வகுப்பறைக்கு செல்லும் போது, பள்ளி மைதானத்தில் இருந்த ஆலமரத்தில் காக்கைகள் கத்திக்கொண்டிருந்தது.
ஒரு மாதம் கழித்து மற்றொரு ஓவிய போட்டி வந்தது. தலைமை ஆசிரியரிடம் சென்றேன். அன்றைக்கி போல வெற்றி பெற்றவர்களுக்கே வாய்ப்பு கொடுத்தாள். மற்றவர்களுக்கு அடுத்தமுறை வாய்ப்பு என்று கூறிவிட்டாள். வாய்ப்பு கொடுத்தால் தானே வெற்றி பெற முடியும். வாய்ப்பையே கொடுக்காமல் அடுத்தமுறை அடுத்தமுறை என்றே சொல்லுவிடுகிறாள். தலைமை ஆசிரியர் அறையிலிருந்து வகுப்பறைக்கு செல்லும் போது பள்ளி மைதானத்தில் இருந்த ஆலமரத்தில் தினமும் காலையில் என் வீட்டிற்கு சோறு உண்ண வரும் ஒற்றை கால் காகம் நின்றுக்கொண்டிருந்தது. அது என்னை பார்த்து "கா... கா..." என்று கேட்டது. போட்டிக்கு வாய்ப்பு தரமாற்றங்க காக்கா என்று அதனிடம் கூறினேன். அதற்கு அந்த காகம் "கா... கா..."என்று ஆறுதல் கூறிவிட்டு பறந்து சென்றது. நானும் வகுப்பறைக்கு சென்றுவிட்டேன்.
இரண்டு மதம் கழித்து மற்றொரு ஓவிய போட்டி வந்தது. தலைமை ஆசிரியரிடம் சென்றேன். அன்றைக்கி போல "அடுத்தமுறை" என்று கூறினாள்.
இப்படியே
"அடுத்தமுறை "
"அடுத்தமுறை "
"அடுத்தமுறை "
என்று மாதங்கள் சென்று வருஷம் சென்று நான் ஐந்தாம் வகுப்புக்கு சென்றுவிட்டேன்.
இப்போதெல்லாம் ஓவிய போட்டி என்ற வார்த்தை கேட்டாலே வெறுப்புதான்.
சில மாதங்கள் கழித்து தலைமை ஆசிரியர் ஓவிய போட்டியில் கலந்து கொள்ளாத மாணவர்களை அழைத்தாள். "வரும் சனிக்கிழமை அன்று வேணுகாம்பாள் பள்ளியில் நடக்கவிருக்கும் ஓவிய போட்டிக்கு நீங்கள் எல்லோரும் கலந்துக்கொள்ளுங்கள்" என்று கூறினாள். வானிலையில் ஏற்படும் மாற்றம் போல இந்த மாற்றம். மகிழ்ச்சியுடன் போட்டிக்கு என் பெயரை கொடுத்துவிட்டு வகுப்பறைக்கு சென்றுக்கொண்டிருந்தேன். மைதானத்தில் இருந்த ஆலமரத்தில் அந்த ஒற்றை கால் காகம் கத்திக்கொண்டிருந்தது. அந்த காகத்திடம் சென்று எனக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று கூறினேன்."கா... கா..." என்று சந்தோசத்துடன் கத்தியது.
இதையெல்லாம் நினைத்துக்கொண்டே பள்ளிக்குள் நானும் அம்மாவும் நுழைந்தோம். ஆலமரத்தினடியில் போட்டியில் பங்குபெறும் மாணவ மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களோடு நின்றுக்கொண்டிருந்தார்கள். அவர்களோடு நாங்களும் கலந்துக்கொண்டோம்.
கல்யாணம் ஆகியதிலிருந்து வீட்டு வேலை செய்து செய்து கை கால்கள் ஓய்ந்து விட்டது. இடுப்பு அடிக்கடி வலிக்கிறது. குனிந்து நிமிர்ந்து வேலை செய்யமுடியவில்லை. இதயம் வேகமாக துடிக்கிறது. எதையோ யோசித்துக்கொண்டே படுத்துக்கிடந்தேன். வீட்டுக்கு வெளியில் உள்ள முருங்கை மரத்திலிருந்து காக்கைகள் கத்திக்கொண்டிருந்தன. மணி ஐந்து இருக்கும், விழித்துக்கொண்டேன். இரவு நன்றாக துங்காததால் கண் எரிச்சல் எடுத்தது. எழுந்து கதவை திறந்து வாசல் பெருக்கி கோலம் போட்டுவிட்டு டிவியில் இளையராஜா பாட்டு போடும் சேனலை வைத்தேன்."தென்றல் வந்து தீண்டும் போது" பாடல் ஓடிக்கொண்டிருந்தது. பாட்டை கேட்டுக்கொண்டே பல் விலக்கிவிட்டு மாடிக்கு சென்று தினமும் சோறு உண்ண வரும் ஒரு ஒற்றை கால் காகத்திற்கு சோறு வைத்துவிட்டு காபி போட்டுக்கொண்டு சோபாவில் அமர்ந்து காபி குடித்துகொண்டிருக்கையில் அவர் எழுந்து குளித்துவிட்டு வந்தார். காலை உணவு எதுவும் வேண்டாம் காபி போதும் என்றார். காபி குடித்த பின் சில வார்த்தைகள் பேசிவிட்டு அலுவலகத்துக்கு கிளம்பினார். இன்று சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்றாலும் சின்னவனுக்கு, வேறு ஒரு பள்ளியில் நடக்கவிருக்கும் ஓவிய போட்டிக்கு போகவேண்டியிருந்தது.
"கண்ணு எழுந்துருடா இன்னைக்கி போட்டின்னு சொன்னியே மறந்திட்டியா? நேரம் ஆகுது பாரு".
சின்னவனை எழுப்பிவிட்டேன். பெரியவனுக்கு ஏதும் இல்லை. அவன் நன்றாக தூங்கட்டும் என்று விட்டுவிட்டேன். சின்னவன் குளித்துவிட்டு பள்ளி சீருடை அணிந்துக்கொண்டு வந்தான். அவனோடு சேர்ந்து இட்லி சாப்பிட்டுவிட்டு பெரியவனை பார்த்தேன். நன்றாக தூங்கிகொண்டுருந்தான். அவன் எழ ஒருமணி நேரமாகும் அதற்குள் சின்னவனை பள்ளியில் விட்ட பின், மற்ற வேலைகளை பார்க்கலாமென்று வீட்டை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு சின்னவனை கூட்டிக்கொண்டு பள்ளிக்கு கிளம்பினேன்.
தெருவில் புல்லட்டில் சென்றுகொண்டிருந்த ஒருவர்,தெருவை கடக்க முயன்ற ஒருவரை பார்த்து "ஓரமா போடா மயிறு" என கத்திக்கொண்டிருந்தார்."மயிர்" என்பதற்கு முடி என்று அர்த்தம். அந்த தூய தமிழ் சொல்லை இப்படி கெட்டவார்த்தையாக மாற்றிவிட்டது நமது சமூகம். இன்னும் எதையெல்லாம் மாற்றப்போகிறதோ? இந்த சமூகம்.
பள்ளி இருக்கும் தெருவுக்குள் நுழைந்தோம். அந்த தெருவில் ஒருவர் சாக்கடை கழிவுகளை அள்ளும் வேலையை செய்துக்கொண்டிருந்தார். இதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறதே, இவர் ஏன் இதை செய்துகொண்டிருக்கிறார்?. இயந்திரங்களை வைத்து சுத்தம் செய்யலாமே. நகராட்சியில் புகார் கொடுத்துவிடலாமா?. சின்னவனை பள்ளியில் விட்டவுடன் நகராட்சி தொலைபேசி எண்ணிற்கு அழைத்து புகார் கொடுத்துவிடலாம் என்று முடிவுசெய்து பள்ளிக்கு விரைந்து நடந்துகொண்டிருந்தேன். அங்கு பள்ளி மைதானத்தில் இருந்த ஆலமரத்தினடியில் மாணவ மாணவிகள் அவர்களின் பெற்றோர்களோடு நின்றுக்கொண்டிருந்தனர். நாங்களும் அவர்களோடு கலந்துக்கொண்டோம்.
ஆசிரியர் ஒருவர் போட்டிக்கு செல்லும் மாணவ மாணவிகளையெல்லாம் அழைத்தார். ஆலமரத்தின் எதிர்பக்கத்தில் நின்றுக்கொண்டிருந்த பள்ளி வேனில் அமரச்சொன்னார். அம்மாவிடம் எதுவும் பேசாமல் பள்ளி வேன் நோக்கி நடந்துக்கொண்டிருதேன். ஒரு தேனீ என் தலைக்கு மேல் சுற்றிக்கொண்டிருந்தது. அதை கண்டவுடன் தேன் மிட்டாயின் ஞாபகம் வந்தது. வெளியில் கடினமாகவும் உள்ளே மென்மையாகவும் கடித்தவுடன் தேன் ஆறாக நாக்கில் ஓடும் அந்த தேன் மிட்டாயின் சுவை. அது தேன் இல்லடா கண்ணு சர்க்கரை பாகு என்று அம்மா கூறுவாள். தேன் தான் என்று அப்பா கூறுவார். போட்டி முடிந்து, வீட்டுக்கு போகும் வழியில் மறக்காமல் தேன் மிட்டாய் வாங்கி சாப்பிடவேண்டும்.
வேனில் கடைசி இருக்கை மட்டும் தான் காலியாக இருந்தது. கடைசி ஜன்னல் பக்கத்து இருக்கை. சிறிது நேரம் கழித்து ஆலமரத்தின் பக்கம் பார்த்தேன். அம்மாவை காணவில்லை!!!!!!. அவளை மட்டும் காணவில்லை பிற மாணவ மாணவிகளின் அம்மாக்கள் அங்கே நின்றுகொண்டோ அல்லது வேன் பக்கத்தில் நின்று தன் பிள்ளைகளை கொஞ்சிக்கொண்டிருந்தார்கள். எங்கு சென்றாள் என் அம்மா?..... ஆசிரியரிடம் சொல்லிவிட்டு,போய் பார்க்கலாம் என்றால் அவரையும் காணவில்லை.ஒரு வேளை, அம்மா கழிவறைக்கு சென்றிருப்பாளோ?. சிறுது நேரம் காத்திருந்து பார்க்கலாம். தன் மகன் முதன் முதலில் போட்டிக்கு செல்கிறான், வாழ்த்து சொல்லி அனுப்பாமல் எங்கு சென்றாள் இவள்?. வீட்டு வேலைதான் முக்கியமென்று வீட்டிற்கு சென்றுவிட்டாளா?. என்மீது அன்பில்லையா? பெரியவனுக்குத்தான் எல்லாமோ?. போட்டி முடிந்து வீட்டுக்கு சென்றவுடன் அப்பாவிடம் சொல்லிவிடலாம். அப்பா அவளை நன்றாக திட்டட்டும். அம்மாவின் நினைப்பை தவிர்க்க, முன்இருக்கையில் இருந்த மணியிடம் பேசிக்கொண்டிருந்தேன். டிரைவர் அண்ணன் ரேடியோவை போட்டார். அம்மாக்கு பிடித்த "தென்றல் வந்து தீண்டும் போது" பாடல் ஓடிக்கொண்டிருந்தது. அந்த பாடல் அம்மாவின் நினைப்பை தூண்டியது. அம்மாவின்மேல் வெறுப்பு கூடிக்கொண்டிருந்த சமயத்தில் ஜன்னல் வழியே "கண்ணு" என்று குரல் கேட்டது. ஜன்னல் வழியே பார்த்தேன். அம்மா ஒரு காகித சுருளையும் தேன் மிட்டாய் இரண்டு உருண்டையையும் ஜன்னல் வழியே என்னிடம் கொடுத்துவிட்டு, எதுவும் பேசாமல் ஆலமரத்தினடியில் சென்று நின்றுகொண்டாள்.
பிறகு தான் கவனித்தேன். வேனில் இருந்த எல்லோரிடமும் ஓவியம் வரைவதற்கான சிறப்பு காகிதம் இருந்தது. அதை நான் கவனிக்கவில்லை. ஆனால் என் அம்மா கவனித்திருக்கிறாள். போட்டிக்கு போட்டியாளர்களே காகிதம் கொண்டுசெல்லவேண்டும். இந்த காகிதம் ஓவியம் வரைவதற்கான சிறப்பான காகிதம். ஒருசில கடைகளில் மட்டும்தான் கிடைக்கும். அந்த கடையை எப்படி அவள் கண்டுபிடித்தாள்?. வேன் புறப்பட நேரமாகும் என்பதை அவள் எப்படி தெரிந்துக்கொண்டாள்?. புறப்பட நேரமாகும் என்பதை தெரிந்துக்கொண்டு, காகிதம் வாங்கிவரும் நேரத்தையும் கணக்கிட்டு, தனியாக சென்று வாங்கி வந்திருக்கிறாள்!!!!!. எனக்கு நினைவுதெரிந்த நாட்களிலிருந்து அவள் தனியாக வெளியே சென்றதில்லை. வீட்டுக்கு தேவையான பொருட்களை எல்லாம் அப்பாதான் வாங்கிவருவார். வீடுமட்டும் தான் அவள் உலகம் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டேன். நான் ஒரு முட்டாளாக இருந்திருக்கிறேன். நான் தேன் மிட்டாய் சாப்பிடவேண்டும் என்று மனதில் நினைத்தது அவளுக்கு எப்படி தெரிந்தது?. அம்மா சொல்வதுபோல தேன் மிட்டாய்க்குள் இருப்பது சர்க்கரை பாகாக தான் இருந்திருக்கும். எனக்காக முதல்முறையாக தனியாக சென்று காகிதம் வாங்கி வந்திருக்கிறாள் என்று நினைக்கையில் கண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது.
அம்மாவை பற்றி நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் வேன் சாலையில் சென்றுக்கொண்டிருப்பதை கவனித்தேன். அம்மாவை பார்க்க வேண்டும் போல் இருந்தது. வேனிலிருந்த ஆசிரியரிடம் வண்டியை நிறுத்தச்சொல்லி வீட்டுக்கு போகவேண்டும் என்று கேட்கலாமா?. என் ஒருவனுக்காக வேனை பள்ளிக்கு திருப்புவது சாத்தியமில்லை. வீட்டில் அமர்ந்து அம்மா செய்து தரும் தின்பண்டங்களை சாப்பிட்டுக்கொண்டே மனதிற்கு பிடித்த ஓவியத்தை வரைவதில் கிடைக்கும் திருப்தி, போட்டியில் வெற்றி பெற்றவுடன் கிடைக்கும் திருப்திக்கு ஈடாகுமா? என்று குழம்பிக்கொண்டிருந்தேன். சிறிது நேரம் யோசித்துவிட்டு, போட்டியை அடுத்தமுறை பார்த்துக்கொள்ளலாம் வீட்டுக்கே போய்விடலாம் என்று முடிவுசெய்தேன்.
எப்படி வீட்டிற்கு செல்வது பற்றி யோசித்திகொண்டிருந்த சமயத்தில் அம்மா தினமும் மாடியில் வைக்கும் சோறை உண்ண வரும் அந்த ஒற்றை கால் காகம் எனக்கு, பறப்பது எப்படி என்று சொல்லிகொடுத்திருக்கிறது. அதை முயற்சி செய்யலாம் என்று முடிவுசெய்தேன். என் கையிலிருந்த இரண்டு தேன் மிட்டாயின் ஒன்றில் எறும்பு சுற்றிக்கொண்டிருந்தது அந்த உருண்டையை அதற்கு கொடுத்துவிட்டு மற்றொன்றை என் வாயில் போட்டுக்கொண்டு எனது இரு கைகளையும் மேலும் கீழுமாக அசைத்தேன். உடலில் ஒரு அசைவும் இல்லை. அம்மாவை பார்த்தே ஆகவேண்டும் என்ற வெறியில் வேகத்தை கூட்டி அசைத்தேன். கைகள் வலியெடுக்க ஆரம்பித்தது. அப்போதும் நிறுத்தவில்லை. மேலும் கீழும் மேலும் கீழும் அசைத்துக்கொண்டேயிருந்தேன். இருக்கையிலிருந்து உடல் மெதுவாக மேலேறியது. கடைசி இருக்கை ஜன்னலில் தடுப்பு கம்பி இல்லாததால் யாரும் கவனிக்காத நேரத்தில் ஜன்னல் வழியே வெளியே வந்துவிட்டேன். எனது வீட்டை நோக்கி பறந்துக்கொண்டிருந்தேன். வேனில் இருந்த ஆசிரியர் என்னை தேடிக்கொண்டிருக்கும் குரல் கேட்டது.
பறக்கும் போது ஆடைகள் காற்றின் வேகத்தால் கிழிய ஆரம்பித்தது. பறந்துக்கொண்டே கீழே பார்த்தேன். எல்லோரும் பேருந்திலோ ஆட்டோவிலோ காரிலோ பைக்கிலோ எதையோ தேடி ஓடிக்கொண்டிருப்பது போல இருந்தது. அவர்களை பார்ப்பதற்கு இயந்திரம் இயங்கிக்கொண்டிருப்பது போல இருந்தது. நாமும் இப்படி இயந்திரம் போல ஆகிவிடுவோமோ என்ற பயம் எழுந்தது. காற்றின் வேகம் கூடியது. ஆடைகள் கிழுந்துக்கொண்டே இருந்தது. ஆடைகள் எல்லாவற்றையும் கழட்டிவிட்டு பறக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். கீழே இருப்பவர்கள் யாராவது மேலே பார்த்துவிட்டால் என்ன செய்வது. எல்லோரும் இயந்திரம் போல இயங்கிக்கொண்டிருக்கிறார்களே, அவர்கள் எங்கே மேலே பார்க்கப்போகிறார்கள் என்று ஆடைகள் எல்லாவற்றையும் கழட்டிவிட்டு நிர்வாணமாக
பறந்துக்கொண்டிருந்தேன்.
தினேஷ் குமார்
kumar.rdk.dinesh@gmail.com
9094722014
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்