logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

அப்பச்சி பெயருக்கு பொருத்தமாக பெருங்கருப்பிலான நடுத்தர தண்டியிலான தேகமும், பஞ்சுப் பொதி போன்ற அடர்த்தியான, மருந்திற்கும் ஒரு கருமயிர் கூட காணமுடியாத வெண்மையான தலைமயிர் கொண்டவர் பெரியகருப்பன் அப்பச்சி தினமும் காலையில் சூரியனை கையெடுத்து கும்பிட்டு விபூதியை குங்குமப்பொட்டு போல் இரு புருவங்களுக்கிடையே இட்டுக்கொள்வார். ஊரில் அவ்வப்போது வெள்ளாமை பொய்த்துபோவதால், அரிசி வியாபாரத்தை மேற்கொண்டிருந்தார். குள்ளமான உருவத்தையும் அவரது அரிசி வியாபாரத்தையும் இணைத்து 'அரிசிக்கார கூலையர்' என்றே அவருக்கு பெயர் விளங்கிற்று. அறுபது ஆண்டுகளுக்கு முன் போக்குவரத்து வசதியற்ற காலகட்டத்தில் சக வியாபார கூட்டாளிகளோடு சேர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகேயுள்ள வையாபுரிபட்டியிலிருந்து தலைச்சுமையாக அரிசி மூட்டையை சுமந்து கொண்டு பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் தன் சொந்த ஊரான நம்பூரணிப்பட்டி கொண்டு வந்து சேர்ப்பார். இரவு ஓய்வுக்கு பின் மீண்டும் காலை பத்து கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் பள்ளத்தூர் சந்தைக்கு கொண்டு வந்த பின் விற்பனை நடைபெறும். இதில் வரும் வழியிலேயே லெவிகார்கள் அரிசியை பிடுங்கிக்கொள்வதும் நடக்கும். தன் தங்கைகள் இருவரையும் திருமணம் செய்து கொடுத்தபின்பும், ஏனோ தெரியவில்லை தன் முப்பத்தி ஆறாவது வயதில் தான் அப்பச்சி பதினைந்து வயதான கருப்பாயி ஆத்தாளை கலியாணம் செய்து கொண்டார். அப்பச்சியை விட சற்று வளத்தியானவள் அவரின் பெருங்கருப்பிற்கு சற்றும் சளைக்காதவள் ஆத்தா. இரு அண்ணன்மாருக்குப்பின் பிறந்த கடைக்குட்டி கிடேரி, பக்கத்திலுள்ள முள்ளாங்காடு கிராமத்தில் பிறந்து வளர்ந்து அப்பச்சியின் கரம்பிடித்தவள். கடைந்தெடுத்த காலும் கையும் பின் கொசுவ கண்டாங்கிச்சேலையில் அள்ளிச்செருகிய கொண்டையோடும் அளவான பொட்டோடும், காதில் திருமணம் ஆன புதிதில் நாற்பது ரூபாய் கொடுத்து கொத்தமங்கலம் ஆசாரியிடம் சொல்லி செய்து வாங்கித்தந்த ஏழு கல்லு தோடோடும் மலயாவிலிருந்து கொண்டுவந்த கோதுமைமணிச்சங்கிலியோடும் குறைவில்லாத கம்பீரத்துடன் காட்சியளிப்பாள். வெற்றிலைச்செல்லத்திலிருந்து கொழுந்து வெற்றிலை, லெட்சுமி மார்க் சீவலோடு சுண்ணாம்புக் குடுவையில் இருந்து ஆள்காட்டி விரல் கொண்டு கடுகளவு தோண்டியெடுத்து ,ஒரு நாளைக்கு ஐந்தாறு முறையாவது தரிக்கும் தாம்பூலத்தின் வாசம் சேலையெங்கும் மணத்துக்கிடக்கும். கிட்டத்தட்ட எண்பதுகளில் தூர்தர்ஷனில் மாலை வேளையில் கிராமியப் பாடல் பாடிய கொல்லங்குடி கருப்பாயி, கருப்பாயாத்தாளை ஒத்திருக்கும். அரிசிமூட்டையை தலைச்சுமையாக சுமந்துவரும் கணவனுக்கு சகாயம் செய்ய பாதி வழியிலிருக்கும் பத்ரகாளி கோயிலில் காத்திருந்து சுமையை மாற்றி தான் சுமந்து வருவாள். அந்த குடும்பத்தின் குலசாமியாகவே வீட்டின் வடகிழக்கு ஈசானிய மூலையில் நிற்கும் புளியமரம் தன் பசுமை மாறாத பச்சையத்தால் பூத்து மணம் பரப்பி நெல்லிக்காய்ப்பு போல் நெருங்கக் கொத்துக்கொத்தாய் காய்த்து கனிந்து எந்த காற்றிற்கும் அசைந்து கொடுக்காமல் சேதாரமாகாமல் தவமாய் நின்று காப்பாற்றி குடும்பத்திற்கு சேர்ப்பித்து அருள்புரியும். அதில் ஊஞ்சல் கட்டி ஆடுவதும் பரவசம் தான்.வெள்ளாமையே பொய்த்தாலும் தான் பொய்க்கா புளியமரம். கோடைக்காலங்களில் புளியை உலுப்புதலும், ஓடு உடைத்தலும், கொட்டை அகற்றுதலும், விற்பனைக்கு போக வருடத்துக்கு வீட்டுக்கு தேவையான புளியை எடுத்து வைத்தல் மற்றும் வெள்ளாமை நேரத்தில் நாத்து நட ,களையெடுக்க, நீர்பாய்ச்ச, குப்பை வைக்க என்று வயல் வேலைகளில் மும்மரமாய் சுழல்பவள் அறுவடை வேலை முடிந்த கடைசி நாளில் வேலையாட்களுக்கு சமைக்க கோழி ரசம் வைக்க படக்கென கோழியை பிடித்து சடக்கென கழுத்தை முறித்து விருட்டென சமைத்து பரிமாறுவாள். இவர்களுக்கு மூத்த மகள் சிகப்பி கடைக்குட்டி மகள் லெட்சுமி இடைப்பட்ட மகன் பெயர் முத்தையன் சுற்றியுள்ள பங்காளிகள் வீட்டிலெல்லாம் பத்து பன்னிரண்டு குழந்தைகள் என்றிருக்க, இவர்களது என்னமோ கட்டுக்கோப்பான சிறிய குடும்பம் தான். என்னதான் அதிகாலையிலேயே யாவாரத்திற்கு கிளம்பினாலும் சுமையோடு வீடு வந்து சேர்கையில் சுள்ளென உச்சம் தொட்டு விடுவான் சூரியன். வெயிலின் பரிபூரண ஆட்சியிலிருக்கும் ஊர்.வெயிலும் புழுதியும் தானே அந்த மண்ணின் அடையாளம் உயிர்களின் ஆதாரம். உயிருள்ளவரை அணையாத பசித்தீயாய் சற்றும் நின்று இளைப்பாறவிடாமல் விரட்டும் வெயில். அந்த மண்ணின் மைந்தர்களெல்லாம் வெயிலின் மைந்தர்களும் தான்.மக்களைப்பற்றி பேசும் போது மண்ணையும் அந்த அலாதியான ருசி கொண்ட தண்ணீரைப் பற்றியும் சொல்லியே ஆகவேண்டும். இருபொறை செம்மண் கொண்ட நிலம், நிலத்தினடியில் வருடக்கணக்காக இறுகிக்கிடக்கும் செம்மண் பாறையாக மாறி அபூர்வமான செம்பாறாங்கற்கள் கிடைக்கும் பூமி அதன் மூலம் வடிகட்டப்பட்ட தெளிந்த தண்ணீர் பால் போன்றும் அலாதியான ருசி கொண்டதாகவும் , சுற்றுவட்டார எண்பத்து நான்கு கிராமங்களில் எங்கேயும் கிடைக்காத அமுதம் போன்ற நீர் சுரக்கும் ஒற்றை சர்க்கார் கேணி. அவ்வூரின் தனித்த அடையாளம். அபூர்வ செம்பாறாங்கற்களால் கட்டிய ஆங்காங்கே இரட்டை மீன்கள் பொறிக்கப்பட்டிருப்பதால் பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டியதாய் சொல்லப்படும் கோட்டை, ஊரின் எல்லையில் , இன்றும் சிதலமடைந்தும் சாட்சியாய் நிற்கிறது. செம்பாறாங்கற்களை வெட்டி வீட்டின் சுற்று கல்லாய் ஊன்றுவதும் ஊரணிகளுக்கு சுற்று படிக்கட்டுகள் அமைப்பதற்கும் பயன்படுத்துவர். அந்த கற்களை அறுக்கும் வேலையே அப்பகுதியில் பெருவாரியாக நடந்ததால் பக்கத்து ஊரு கல்லூர் என்றே அழைக்கப்படுகிறது. பனையோலை வேய்ந்த வீட்டிற்கு எதிரேயுள்ள வைக்கோல் வேய்ந்த பட்டறையில் அரிசிமூட்டையை கிடத்திவிட்டு அங்கிருக்கும் மரத்தினாலான, ஒருவர் தாராளமாய் படுக்கக்கூடிய அளவிலுள்ள பெஞ்சுப்பலகையில் களைப்புக்கு நீராகார தண்ணியை வாங்கி குடிச்சிப்பிட்டு ஓய்வெடுப்பார் அப்பச்சி. தேத்தண்ணி வேண்டுமென்றாலும் வீட்டிலேயே பசு மாடு இருப்பதால் வெளியே களப்புக்கடைகளுக்கு சென்று தேத்தண்ணி அருந்துவதோ வம்பு பேசும் வழக்கமோ இல்லாதவர் தனக்கென சில மதிப்புகளையும் கௌரவத்தையும் போற்றிக் காப்பவர். வேகாத வெயிலில் தலைச்சுமையாக அரிசிமூட்டையை சுமந்து நடந்து நடந்தே மூல நோய்க்கு ஆளானார். அப்பச்சியின் பொருட்டு வீட்டில் எப்போதும் அவரின் வைத்தியத்திற்கான சாப்பாடாகவேயிருக்கும்‌. குளிர்ச்சிக்கு பாசிப்பயறு குழம்பு, மூல நோயால் இறங்கும் குடலை வலுவாக்க பிடிகருணைமசியல்,சேனைக்கிழங்கு குழம்பு , சுண்டைக்காய் பச்சடி, என்றிருக்கும். வீட்டில் செல்லம் போல காய்ச்சிருக்கும் சீனிமிளகாயின் வற்றலையும் நாட்டுக்கோழி ரசத்தை மட்டும், நோய் காரணமாக தொடவேமாட்டார். ஆனால் வெள்ளாட்டங்கறியை சிறு துண்டுகளாக நறுக்கி சரிக்குச்சரி வரமிளகாய் கிள்ளிப் போட்டு வதக்கி உப்பு சேர்த்து வெந்ததும் மிளகு சீரக பொடியைத்தூவி இறக்கி, ஒரு வாரத்திற்கு தினமும் இரண்டு துண்டுகள் வீதம் அப்பச்சிக்கு கொடுத்துவிட்டு தினமும் இரண்டு வரமிளகாய் துண்டோடு பிள்ளைகளோடு சேர்ந்து கஞ்சி குடிப்பாள் ஆத்தா முருங்கைக்கீரைக்கு கல்லுப்பு போட்டு வேகவைக்க ,உப்புக்கரையாமல் கீரையுள் சிக்கிக்கொள்ள... முருங்கைக்கீரைக்கு உப்பு போட தெரியாதவள் என்றும் இரவு பாலில் உறைக்கு தயிர் விடுகையில் "கொஞ்சமாய் விடுடி மைய்க்கா நாள் மத்தியானம் சாப்பிடமுடியாம தயிர் புளிக்குதுடி " என்ற போதும் எதையும் கொஞ்சமாய் வைக்க கைவராத கர்ணபரம்பரைக்காரியை மானாவாரியாக ஏசும்போதும் ஒருவித நாணத்தோடே அமைதியாயிருப்பாள் ஆத்தா. எதையும் பதவிசாக செய்யத்தெரியாதவள் என்பது அப்பச்சியின் நினைப்பு. அப்படித்தான் ஒருமுறை அவரின் மூலநோய் வைத்தியத்திற்காக ஆமைக்கறியை கொடுக்கலாமென கோயில் பட்டி ஊரணியில் குளிக்கப்போகும் வழியில் பூமதி அத்தாச்சி சொன்னதை வைத்து பெரிய கம்மாயிலிருந்து பிடித்து வந்த ஆமையை திருப்பிப் போடாமல் சட்டித்தண்ணீரில் அமிழ்த்திய ஆமையை மூடியிட்டு அடுப்பிலிட , மண் சட்டியை உடைத்துக்கொண்டு வெளியே குதித்த ஆமை கதையைக்கூறி "ஒங்காத்தா ஒரு கூறுகெட்டவ"என சொல்லிச்சொல்லி சிரிப்பார் பிள்ளைகளிடம். இருவருக்கும் இருபத்தியொரு வயது இடைவெளியாலோ என்னவோ அவளின் அத்தனை கம்பீரத்தையும் அவரிடம் சமர்ப்பித்து பள்ளிக்கூட வாத்திக்கு பயப்படும் மாணவியாகவே மாறிப்போவாள்.சில நேரங்களில் சண்டைகளுக்கும் பஞ்சமிருக்காது காலை ஐந்து மணிக்கெல்லாம் வாசக்கூட்டி சாணி தெளித்து ஒரு நாள் நட்சத்திரம் ஒரு நாள் தாமரைப்பூ கோலமென வேறு விசேடங்கள் திருவிழாக்கள் என்றால் கூட மாற்றி வேறு பெரிய சிறிய கோலங்கள் போட்டதில்லை, போடவும் தெரியாது. வீட்டிற்கென வைத்திருக்கும் பசு மாட்டில் பால் கறந்து அன்றாட அவள் பணிகள் முடித்து இரவு குளிக்கப்போகுமுன் வண்ணாவீட்டு ருக்கக்கா லண்டியன் விளக்கை தூக்கிக்கிட்டு சோறு வாங்க வந்துவிடும். சில நேரங்களில் ஹாஸ்யமாகவும் சில நேரங்களில் ரகசியமாகவும் ஊர்க்கதைகளை கொறித்துவிட்டுச்செல்லும் ருக்கக்கா. துவைக்க துணிகள் அதிகமிருக்கும் நாட்களில் மட்டும் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு போய் கண்மாய்களில் துவைத்து குளித்து வருவாள் பகல் நேரத்தில். அத்தனை வேலைகளும் முடிந்து இரவு சாப்பிட்டுவிட்டு படுக்கையில் விழுமுன் "அரியவளே' என தன் குலதெய்வத்தின் பெயரை உச்சரிக்காத நாளை காணமுடியாது. எண்ணி பத்து பதினைந்து குடும்பங்களே வாழும் மிகச்சிறிய ஊர். நம்பூரணிப்பட்டி, அக்காலத்தில் நிகழ்ந்த அடுத்தடுத்த பஞ்சங்கள்,நிலையான வருமானமின்மை மூன்று வேளை சோற்றுக்கு உத்திரவாதமில்லையென்ற பல நிர்பந்தங்களால் தங்கள் குழந்தைகளை பக்கத்திலுள்ள கானாடுகாத்தான்,புதுவயல் கண்டனூர் பள்ளத்தூர் கடியாவெட்டி ராயவரம் போன்ற செட்டிநாட்டு கிராமங்களிலுள்ள தன் பெயருக்கு முன்னே ராஜா ராணி குமாரி என்று பெருமைகள் சேர்த்துக்கொண்ட பணக்கார செட்டிமார்கள் வீட்டில் பெண் குழந்தைகளை வயதுக்கு வரும் காலம் வரை வீட்டு வேலை மற்றும் எடுபிடி வேலைக்கு விடுவது வழக்கம். ஊரிலுள்ள மற்ற குடும்பங்களைப்போலவே தன் மூத்த மகள் சிகப்பியையும் கருப்பாயாத்தாவின், கணவனையிழந்த தாய் சிட்டா வேலை பார்க்கும் , அழகாபுரியிலுள்ள ஒரு செட்டிய வீட்டில், வேலைக்கு சேர்த்திருந்தனர். எட்டாப்பு படித்துக்கொண்டிருந்த முத்தையனும் தந்தை எவ்வளவு சொல்லியும் கேளாமல் பெங்களூரிலுள்ள ஒரு செட்டிய வீட்டில் வேலைக்கு சென்றுவிட்டான். "கடைக்குட்டி லெட்சுமி பிறந்த பின் தான் பசி பட்டினியில்லாத வாழ்க்கை " என்று அடிக்கடி சொல்வார் அப்பச்சி பெரியகருப்பன் அதனாலேயே லெட்சுமியை மட்டும் எங்கும் அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருந்தார். காலம் தன் சாட்டையை சமரசம் இன்றி சுழற்ற.... மூன்றாண்டு காலங்கள் மெல்ல நகர, சிகப்பி பெரிய பெண்ணாகிவிட்ட காரணத்தால் வீடு திரும்பியிருந்தாள் வீட்டிற்கு ஓலைப்பெட்டியை எடுத்துக்கொண்டு அரிசி வாங்கவரும் உறவுக்கார வாடிக்கையாளர்களுக்கு அரிசியளந்து போட்டு கொடுப்பதும் சக குமரிகளோடு கண்மாயில் நீச்சல், விளையாட்டு மற்றும் ஆடி தை மாசிகளில் செவ்வாய் பிள்ளையார் கும்பிடும் சாக்கில் விடிய விடிய கும்மாளமிட்டு ஆடிப்பாடி விளையாடித்திரிந்தனர் சகோதரிகள் இருவரும். ஒரு நாள் பக்கத்து வீட்டிலிருக்கும் தன் மைத்துனரை அழைத்து மூத்த மகள் திருமணம் குறித்து பேசத் தொடங்கினார் அப்பச்சி. "வாங்க அயித்தான் வாங்க உட்காருங்க" "ஏ லெட்சுமி தண்ணிங்கொண்டாத்தா மாமாவுக்கு" தண்ணீர் கொண்டு வந்த லெட்சுமியிடம் "காபி போடுத்தா மாமாவுக்கு"என்றார். "சொல்லுங்க அயித்தான், புதுப்பட்டி வரைக்கும் போயிருந்தேன் சீமென்ன வாங்க, அதான் நேரமாயிருச்சு" என்ன அயித்தான் இந்த வருசமும் மழையக்காணும் இந்த வருசமும் வெள்ளாமை அம்புட்டுதேன் போல" "சரி நீங்க சொல்ல வந்த தாக்கல சொல்லுங்கயித்தான் "என்றார். "அதான் பெரியவ செகப்பிக்கும் நம்ம படிக்காசுக்கும் கலியாணம் எப்ப வச்சுக்கலாம்னு முடிவு பண்ணத்தான் அயித்தான் உங்கள வரச்சொன்னேன்" கண்ணுச்சாமி மாமாவின் குலசாமியான மலைமேலிருக்கும் பிரசன்னநாயகி உடனுறை கைலாசநாதரின் மற்றொரு பெயர் 'படிக்காசு' முன்னொரு காலத்தில் கைலாசநாதரின் திருமேனி மண்மலைக்குள் மறைந்துவிட்டதாகவும் அவ்வழியாக தினமும் கடந்து செல்லும் இடையரின் பால்குடம் அங்கே தடுக்கி கொட்டிவிடுமென்றும் மறுநாள் காலை அந்த பாலிற்கான காசு ,பொற்காசாக படிக்கட்டில் இருந்ததாகவும் அதனால் கைலாசநாதர் படிக்காசு நாதர் என்றும் பெயர் பெற்றார் என்றும் கூறப்படுகிறது. தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலமான கும்பகோணத்திலிருந்து நாச்சியார் கோயில் செல்லும் வழியிலுள்ள அரிசிற்கரைபுத்தூர் என்ற அழகாபுத்தூரிலும் காஞ்சிபுரம் அருகேயும் படிக்காசு நாதர் கோயில்கள் உள்ளன. ஆனால் படிக்காசுநாதன் என்று குழந்தைகளுக்கு பெயர் சூட்டி மகிழ்வது இவ்வூரில் தான். "இப்ப என்ன ஆனி, ஆடி முடுஞ்சு ஆவணியில் ஒரு நல்ல நாளா பாத்து வச்சுருவோம் இடையில ஒரு மாசந்தான் டயமிருக்குல்ல அதுக்குள்ள மத்த வேலையப்பாப்போம்" பேசிக் கொண்டிருக்கையில் வந்த காபித்தண்ணியை குடிச்சிப்பிட்டு கிளம்பலானார் கண்ணுச்சாமி மாமா. கண்ணுச்சாமி மாமா வந்து போனதிலிருந்தே, சிகப்பியின் முகத்தில் ஈயாடவில்லை. மழைக்கு முன் இங்கும் அங்கும் ஓடித்தவித்து கறுத்து போகும் மழை மேகங்கள் போலிருந்தது அவள் மனமும் முகமும். இறுதியில் கண்கள் ஐப்பசி கார்த்திகை மழையாய் பொழிந்து தள்ளியது. கண்ணுச்சாமி மாமாவின் மூத்த மகன் படிக்காசு கெட்டிக்காரன். தன் அப்பச்சியோடு சேர்ந்து கொண்டு தொடர்ந்து தண்ணீர் பற்றாக்கறையிலும் வெள்ளாமையை இழுத்துப்பிடித்து பார்த்துக்கொண்டும் வீட்டையும் நிர்வாகம் செய்து வந்தான். சின்னவன் சின்னக்கண்ணோ ஊரே பிடிக்கவில்லையென்று பட்டுக்கோட்டை பேராவூரணி முத்துப்பேட்டையென பல ஊர்களிலுள்ள உணவகங்களில் வேலை செய்து இரண்டு மூன்று வாரத்திற்கொருமுறை ஊருக்கு வந்து கூட்டாளிகளோடு சேர்ந்து சுற்று வட்டார ஊர்களில் நடைபெறும் திருவிழா மற்றும் கண்டனூர் கொட்டகையில் சினிமாவென செலவு செய்து விட்டு மீண்டும் வேலைக்கு திரும்புவான். என்ன செய்வது காதல் கெட்டிக்காரத்தனங்கள் பார்ப்பதில்லை. எல்லா தவறுகளுக்கும் பொது மன்னிப்பும் நிபந்தனையற்ற பேரன்பும் காதலில் மட்டும் தானே சாத்தியம். பெரிய வளத்தியில்லாத கட்டுசெட்டான சோடி செகப்பி சின்னக்கன்னு. செகப்பி என்றால் குணம் அதன் அமைதி யாருக்கு வருமென்பார்கள். காலம் இருவருக்கும் காதலெனும் ஜாலம் காட்டிக் கொண்டிருந்தது. அண்ணன் படிக்காசுக்கும் செகப்பிக்கும் கல்யாணம் முடிக்க நினைக்கிறார்கள் பெரியவர்கள் என்றறிந்த சின்னக்கன்னு ஒரு முறை ஊருக்கு வந்த போது அதிகாலையிலேயே தன் மாமன் பெரியகருப்பன் எழுந்திருக்கமுன்னே போய், வீட்டு வாசலில் காத்திருந்தான். வாசல் தெளிக்க வந்த கருப்பாயாத்தா திடுக்கிட்டு 'என்னப்பு , இங்குன நிக்குறீக வாங்க உள்ள, ஏம்ப்பா ஒழுங்கையில நின்னுகிட்டு'என்று உள்ளே அழைத்து தேத்தண்ணி கொடுக்கையிலே 'எங்குட்டு உசுப்ப அசதியா ஒறங்குறாகளே ' என ஆத்தா நினைக்கையிலே பேச்சுக்குரல் கேட்டு எழுந்த அப்பச்சி 'வாங்கப்பு இம்புட்டு வெல்லனத்துல வந்திருக்கீக வாங்க' என்று பெஞ்சுப்பலகையில் அமர செய்கை காட்டி உபசரிக்க, பொட்டிலடித்தாமாதிரி 'மாமா நான் செகப்பிய பொன்னுகேட்டு வந்திருக்கேன் 'என்றதும் கோபத்தை அடக்கிக் கொண்டவராய் 'ஏம்ப்பு ஒங்க வீட்ல பெரியவுக யாரும் இல்லையா அப்பச்சி அம்மா ஏன் ஒங்க அண்ணே எல்லாரும் எங்க போய்ட்டாக என்றதும் 'ஏன் கட்டிக்க போறவன் நாங்கேட்டா குடுக்க மாட்டீயளோ 'என்று சின்னக்கன்னு குரலையுசத்த ஆத்திரத்தில் அடிக்கவே சென்றுவிட்ட கணவனைத்தடுத்து எப்படியோ நிலைமையை சீர்செய்து அனுப்பி வைத்தாள் கருப்பாயாத்தா காலையே கலவரமாக மாறிவிட, அரிசி யாவாரத்திற்கும் போகாமல் அவரின் பெஞ்சு பலகையிலேயே கல்லாய் அமர்ந்து விட்டார் கடுத்துக்கிடக்கும் கால்களை நீவியபடி. ஆனி வெயிலின் உக்கிரம் உச்சம் தொட்டு ருத்ரதாண்டவமாய் ஆடியது. பெங்களூரிலிருக்கும் மகன் முத்தையனை வரச்சொல்லி, தபால்கார வீரப்பனை வைத்து காயிதம் எழுதினார். நாலைந்து நாட்களில் அவனும் வந்து சேர்ந்தான். கொந்தளித்திருந்த குடும்பம் சிகப்பியிடம் கற்பூரம் அடித்து சத்தியம் வாங்கிய பின் கொஞ்ச நாட்களாக மௌன நோன்பியிருந்தது. காதல் தானே சத்தியம், காதலை மறக்கவும் சத்தியம் எப்படி சாத்தியம். 'கல்லு மனசுக்காரி' என்று ஏசினார்கள் ஆமாம் அந்த கல்நெஞ்சுக்கோயிலில் தானே அவள் குலசாமியான அவனை சிலை வடித்திருந்தாள். ஆடி மாத முனீஸ்வரன் கோயில் கிடாவெட்டிற்கு ஊரே களைகட்டியிருந்தது. தொடர்ச்சியாக பல வருடங்களாக மழை பொய்த்த காரணத்தால், மங்களத்தி கம்மாயில் தேங்காய் மஞ்சரட்டு ஒருபுறமுமாய் மொத்த ஊரும் வண்டிகட்டிக்கொண்டு போய் கிடாவெட்டு, பூசை , சாப்பாடு என திருவிழா முடித்து வந்து கொண்டிருந்தது, இருளின் பிடியில் மொத்தமாய் ஒப்புக்கொடுத்திருந்த ஊருக்குள் இரவு ஒவ்வொரு வண்டியாய் நுழைந்தது. அனைவரும் வீட்டில் நுழைந்ததும், வீட்டுக்கு தூரமென, பின்புற தாவாரத்தில் படுத்திருந்த செகப்பியை காணாமல் வெடித்துக்கத்தி கதறினாள் கருப்பாயாத்தா.கடைக்குட்டி லெட்சுமியும் முத்தையனும் செய்வதறியாது விழித்தார்கள். இடியை நெஞ்சிலேந்தி அமர்ந்தவரை உலுக்கி கால்களை கட்டிக்கொண்டு அழுது புரண்டு மண்ணை வாரி தூற்றி 'நல்லாயிருப்பாளா எங் குடிய கெடுத்துட்டு போயிட்டாளே'யென ஆற்ற முடியாமலும் தேற்ற முடியாமலும் புலம்பித்தவித்தாள். ஒரு வாரமாக எங்கு தேடியும் கிடைக்கவில்லை இருவரும்.அடைகாத்து அப்போது தான் குஞ்சுகளை பொரித்திருக்கும் கோழி தன் இரு இறகுகளினடியில் ஒரு வித சீற்றத்துடன் அரவணைத்து அழைத்து செல்வது போல இருள் தன் இரு கரங்களால் அக்குடும்பத்தை அரவணைத்துக்கொண்டது அதன் தணியாத வெப்பத்தோடு.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.