சூரிய மூர்த்தி
சிறுகதை வரிசை எண்
# 192
மாங்கல்ய பாக்கியம்
“பொன்னா… பொன்னா… சீக்கிரம் தண்ணி கொண்டு வாடீ… வெளிய போன ஒரு ஆம்பள வீட்டுக்கு வந்தா தண்ணி எடுத்துத் தரக் கூட ஆளு இல்ல,” என்று சொன்னபடியே தன் வீட்டுக் கட்டாந்தரையில் அமர்ந்துகொண்டான் சாமான். அவனுக்கு ‘சாமான்' என்பது தான் பெயர். பெற்றோர் வைத்தது என்னவோ ‘சங்கர்' என்னும் பெயர்தான். அவன் சிறுவயதில் இருக்கும்போது ஒரு நாய் அவன் தொடையண்டை கடித்துவிட்டது. அவனது நண்பர்கள் அப்போது, “என்னடா சங்கரு… உன் சாமானத்த நாய் கடிச்சிருச்சாமே…” என்று சொல்லி அவனைக் கிண்டல் செய்து ‘நாய் கடிச்ச சாமான்’ என்று பட்டப்பெயர் வைத்து அழைத்தனர். நாளடைவில் அவனுக்கு அதுவே பெயராகிவிட்டது. அவன் வீட்டை அடையாளம் காட்டுபவர் கூட ‘சாமான் வீடு’ என்று சொல்லித்தான் அடையாளம் காட்டுவார்கள். சாலைகளில் கலர் பொடிகள், சாக்பிஸ் வைத்துப் படம் வரைவதுதான் அவனது வாழ்க்கை. அதை வைத்துத்தான் தன் குடும்பத்தை நடத்தி வருகிறான்.
அவன் குரல் கேட்டதும் பொன்னம்மாள் தண்ணீருடன் வந்தாள். சாமானின் மனைவி அவள்.
“வந்ததும் வராததுமா ஏன்யா இப்படி கத்துற… தண்ணி எடுத்துட்டு தானே வரேன். இந்தா புடி.”
இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். அவள் சைக்கிளில் மீன் விற்பவள். இப்போது வீட்டில் இருக்கிறாள். அவள் மீன் விற்கச் சென்றபோது, அவள் வந்த தெருவில் அன்று சாமான் ஒரு படத்தை வரைந்து கொண்டிருந்தான். அந்தப் படத்தைக் கண்டு அன்று அவன் மீது காதல் கொண்டவள். பெற்றோரை எதிர்த்து அவனோடு வந்து திருமணம் செய்து கொண்டாள். இன்றோடு 9 ஆண்டு ஆகிறது. சாமானின் மூத்த மகன் 2-ஆம் வகுப்புப் படிக்கிறான். இளைய மகள் இப்போது தான் நடக்கிறாள்.
“ஏன்டி… ஒரு கட்டுன புருஷன இந்த மாதிரிதான் ‘வாயா’, ‘போயா' னு மரியாத இல்லாம பேசுவியா.”
“ஆமா… இப்ப இந்த மூஞ்சிக்கு மரியாத ஒன்னுதான் கொறச்ச. வீட்டுல மளிகை இல்லனு சொல்லி மூணு நாளாவுது. ஏதாச்சும் ஏற்பாடு பண்ணியா… வெளிய உங்கம்மா உப்புக்கண்டம் போட முடியாம மூணு நாளா பொலம்புறாங்க. அத தீக்க வழிய காணம். வந்துட்டாரு பெரிய சாமா…”
“ஏ… சாமான்னு சொல்லாதடீ… அப்பறம் அவ்ளோதான் சொல்லிட்டேன்.”
“என்னடா பண்ணுவ… அப்படிதான் சொல்லுவேன். போடா சாமா...”
“என்ன பண்ணுவன்னா கேக்குற. அப்படியே உன் கன்னத்த கடிச்சு…”
“போதும் நிறுத்து. ஏற்கனவே ரெண்டு இருக்கு. நீ மூணாவதுக்கு அடி போடாத… இதயே எப்பிடி காப்பத்துறதுன்னு இருக்குது.”
“என் ஒடம்புல தெம்பு இருக்குதுடி. நான் காப்பாத்துவேன். இன்னும் பத்துப் புள்ள கூட பெத்துக்குவேன்.”
“அம்மாடி… என் ஒடம்புல தெம்பில்ல சாமி. நீ வேணா தனியா போயி பெத்துக்கோ. என்ன ஆள வுடு.”
“தனியா பெத்துக்கவா!... என்னடி பேசுற…” என்று சொல்லியவாறே பொன்னாவிடம் நெருங்கினான்.
“சீ… சீ… சீ… பட்டப் பகல்ல செய்யற வேலையா இது. அப்படியே அவங்க அப்பன மாதிரியே இருக்குது பாரு புத்தி,” என்று சொல்லிக்கொண்டே கண்களை மூடியவாறு சாமானின் தாய் ‘கறுப்பி' உள்ளே வந்தாள்.
இருவரும் பட்டென்று விலகிக் கொண்டனர். இருவரின் முகமும் வெளிரிப் போயிற்று.
“தாகத்துக்கு தண்ணி குடிக்க கூட உள்ள வர முடில. ரெண்டும் புதுசா கல்யாணமான மாதிரி இருக்குதுங்க,” என்று சொல்லிக்கொண்டே பொன்னா கொண்டு வந்து வைத்த தண்ணீரைக் குடித்து விட்டு மீண்டும் வெளியேறிவிட்டாள் கறுப்பி. கணவனை இழந்தவள். சாமானின் கூரைவீட்டு வாசலில் கருவாடு விற்று வருகிறாள். அவளுக்கு அவள் மருமகள் மீது ஒன்றும் பிடிப்பில்லை. வரும்போது சீர்வரிசை என்று ஒரு பொட்டுத் தங்கம் கூட இல்லாமல் ஓடிவந்தவள் என்பதால். அவளிடம் அதிகமாகப் பேசுவது கூட இல்லை. என்னவென்று கேட்டால் அதற்கான பதில். அவ்வளவே மாமியார் மருமகள் உறவு. ஆடுதான் பகை, குட்டி உறவுதான். பேரன், பேத்தியைக் கொஞ்சாத நாளில்லை.
உப்பு, புளி, மிளகாய் இல்லையென்றாலும் சந்தோஷத்திற்குப் பஞ்சமில்லை அவன் வீட்டில். குடும்பத்தோடு நேரம் ஒதுக்குவதும் குழந்தைகளோடு விளையாடுவதும் மனைவிக்குப் பூ வாங்கித் தருவதும் தாய்க்கு மாத்திரை, மருந்து வாங்கித் தருவதும் என யாருக்கும் குறைவின்றி ஒரு நல்ல குடும்பஸ்தனாகவே இருந்தான். இந்த மூன்று நாளாகப் படம் வரையச் செல்லவில்லை. வெயில் தாங்காமல் மயக்கம் போட்டவன் மூன்று நாட்களாக வீட்டில்தான் இருக்கிறான்.
அப்போதுதான் ஊரையே கொள்ளையில் வாரிப்போட்ட கொரோனா என்னும் கொடுநோய் தமிழகத்தில் பரவத் தொடங்கியது. எங்கும் ஊரடங்கு. திரும்பும் திசையெல்லாம் மரணம். அவன் நேற்று. இவன் இன்று. நாளை யாரோ. மாமன், மைத்துனன், உறவுக்காரன், பகையாளி என யாரையும் விட்டு வைக்கவில்லை. அவன் தெருவரை வந்து விட்டது. அவனால் எங்கும் சென்று படம் வரைய முடியவில்லை. கருவாடு தொழில் ஒன்று மட்டுமே குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். ஏதோ கிழவி தெருவுக்குள் ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் விற்று, காப்பாற்றும் அளவுக்குப் பணம் தேடுகிறாள்.
அந்தக் காலகட்டத்தில்தான் அவன் வாழ்வில் புதுச் சிக்கல் ஒன்று முளைத்தது. அவன் மூத்த மகனுக்குப் பள்ளி மூடப்பட்டது. ஆன்லைனில் வகுப்புகள் அறிவிக்கப்பட்டது. கையில் பணமும் இல்லை. போனும் இல்லை. தன் மகனும் சாக்பிஸ், கலர் பொடிக்கு வந்து விடுவானோ என்ற பயம் பற்றிக் கொண்டது. எப்படியேனும் ஒரு போன் வாங்கிவிட வேண்டும் என்று தீர்மானித்தான். அப்போதுதான் அவனது நண்பன் ரங்கனின் நினைவு அவனுக்கு வந்தது.
ரங்கன் பணக்காரன். பரம்பரைச் சொத்தே பல கோடி பெறும். அது பத்தாதென்று வட்டிக்கு விட்டுப் பணத்தைப் பெருக்குகிறான். அவனிடம் 12,000 ரூபாயைக் கடனாகப் பெற்று தன் மகனுடைய கல்விக்கு ஏற்பாடு செய்துவிட்டான். ஆனால் 7 வட்டி. நண்பனாக இருக்கவே 7 இல்லையென்றால் 10.
“இது ஏதுயா புது போனு. நம்ம புள்ளைக்கா. வெல அதிகமா இருக்கும் போலயே. எவளோயா?”
“11,999 மட்டுமான்டி… ரங்கன் குடுத்த காசுல ஒருபா மிச்சம் பண்ணிட்டேன். ரெண்டு சாக்பிஸ் வாங்கிட்டேன் அதுல.”
“பின்ன… நீ குடுக்குற ஒருபாய்க்கு ஒம்போது சாக்பிஸா தருவாங்க. நீ தான்யா சாக்பிஸையும் கலர் பொடியையும் கட்டிகிட்டு அழுவணும். எம்புள்ளய பாருயா இப்பவே போன்ல படிக்கப் போவுது. நாளைக்கு கம்ப்யூட்டர்ல படிக்கும். வேலைக்கு போயி என்னய ராணி போல பாத்துக்கும். நீ உங்கம்மாவ கருவாடு விக்கவுட்டா மாதிரி எம்புள்ள என்ன வுடாதுயா.”
“இப்ப எங்கம்மா காசுல தான் குடும்பம் ஓடுதுன்னு மறந்துடாதே!. ரங்கனுக்குத்தான் நன்றி சொல்லணும். அவன் மட்டும் காசு தரலன்னா இப்ப இந்த போன வாங்கிருக்க முடியுமா? நம்ம புள்ளதான் படிச்சிருக்க முடியுமா? அவன்தான்டி நண்பன்.”
“ஆமாயா. அவரு நல்லா இருக்கணும். இந்த நெருக்கடி நேரத்துலயும் நமக்கு ஒதவி பண்ணதுக்கு நாம அவரு கால்ல விழுந்து கும்புடணும்.”
“ஆனா, அவன் பொல்லாதவன்டி. மாசா மாசம் வட்டி ஒழுங்கா தரலனா வேலய காட்டிடுவான். வீட்டுக்கு வந்து, இருக்குற சாமாந்தட்ட தூக்கி வெளிய போட்டு அசிங்கம் பண்ணிட்டு போய்டுவான். ஜாக்கரதயா இருக்கணும். வட்டிய குடுத்துடணும்.”
அப்படிச் சொல்லி இன்றோடு நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. இன்றுவரை ஒருமாத வட்டி கூட தரவில்லை. முடியும் என்று நினைத்த ஊரடங்கு நீண்டுகொண்டே போனது. கருவாட்டுத் தொழிலும் முன் போல் இல்லை. நான்கு மாதங்கள் எவரும் வேலைக்குப் போகாவிட்டால் யாரிடம் தான் பணம் இருக்கும். பணம் இருந்தால்தானே கருவாடு வாங்க, கருவாடு வாங்கினால் தானே பணம் இருக்க. ஒருவேளை உணவுக்கே அவதி. அதனால், தன் மக்களைப் அடுத்த தெரு போலீஸ்கார சித்தப்பா வீட்டிற்கு அனுப்பிவிட்டான். வறுமைக் கோட்டிற்கு கீழே இன்னும் ஏழெட்டுக் கோடுகள் போட்டு அதற்கும் கீழே இவனை அமரவைத்தால் தகுமென்ற நிலை. நோயால் பலர் மடிய, வறுமையால், பசியால் பலர் மடிந்தனர். இவன் குடும்பம் ஏதோ ஒரு வேளைக்கேனும் சமாளித்துக் கொண்டிருந்தது.
ஒருநாள் ரங்கன் சாமானின் வீட்டிற்கே வந்துவிட்டான்.
“என்ன சாமா… ரொம்ப நாளாச்சு. வட்டியும் வரல, அசலும் வரல. நீயும் வந்து தலய காட்டமாட்ற. மனசுல என்னதான் ஓடுது. தராம போயிடலாமுனா…”
“சே…சே… அப்படியெல்லாம் இல்லடா. கைல ஒன்னும் சேரல. தொழிலும் அந்த அளவுக்கு இல்ல. காசு வந்ததும் குடுத்துட்றேன்டா.”
“அது எப்புட்றா? கடன் வாங்குனவம்பூரா பேசி வெச்சா மாதிரி இதையே சொல்லுறீங்க. மரியாதயா இன்னும் பத்து நாள்ல அசலும் வட்டியும் வரணும். இல்லன்னா அடுத்த தெருவுல இருக்குற உன் பையன் திடீர்னு காணாம போயிடுவான். சோறு இல்லாம கஷ்டபடுறீங்களாமே. உன் பையன கூட்டிட்டுப் போயி சோறு போட்டு திங்கவெச்சிடுவேன். தண்ணி தரமாட்டேன் பயப்படாத. அவன் விக்கும்போது உன் வீட்டு வாசல்ல போட்டுப் போயிடுவேன். புரிஞ்சுதா. நான் வரேன்.…” என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்பினான்.
அப்போது பக்கத்து வீட்டிற்குச் சென்றிருந்த பொன்னா, தன் கணவனை அழைத்தவாறு உள்ளே வந்தாள். ரங்கனின் பார்வை அவள் பக்கம் திரும்பியது. அப்போதுதான் பொன்னம்மாவை அவன் முதன்முதலாகப் பார்க்கிறான்.
“வா பொன்னா. இவன்தான் என் நண்பன் ரங்கன். நம்ம புள்ளய படிக்க வெச்சவன்,” என்றான் சாமான்.
“அண்ணே… ரொம்ப நன்றிண்ணே. நீங்க செஞ்ச ஒதவிக்கு நாங்க எது குடுத்தாலும் போதாதுண்ணே. இருங்கண்ணே டீ போடுறேன்.”
“சாமா… யாருடா இது. நம்ம பொண்டாட்டியா,” என்று ரங்கன் கேட்டதும் அவனுக்குச் சுளீரென்றது. கோபம் தலைக்கேறியது. ரங்கனை ஒருகணம் முகத்தில் குத்தி, காலால் மிதித்து உயிரையே எடுத்து விட்டான் தன் மனத்துள். ஆனால் வெளியில் ஒன்றும் செய்யமுடியவில்லை. நொந்துகொண்டான். அமைதியாக இருந்துவிட்டான். ரங்கனும் புறப்பட்டுவிட்டான்.
பொன்னாவுக்கும் ஒருநிமிடம் இந்த உலகம் நின்றே போனது. அவன் எந்த அர்த்தத்தில் அப்படிச் சொன்னான் என்று அவளுக்குத் தெரியாதா என்ன? அவளுக்குத் தன் கணவன் மீது கோபம் கோபமாக வந்தது.
“கையாளாவாத ஒருத்தன கட்டுனது என் தப்புதான்… அதனாலதான் இந்த மாதிரி மானங்கெட்ட பேச்செல்லாம் கேக்கவேண்டியிருக்கு. அப்பவே வீட்டுல பாத்தவன கட்டியிருந்தா இப்படி ஒரு நெலம வந்திருக்குமா… வேலவெட்டி பாத்து நாலுகாசு சம்பாரிச்சு வெச்சிருந்தா ஏன் இந்தப் பேச்சு. நேத்து கூட கவர்மெண்டு கான்டிராக்டுல ரோட்டுல கொரோனா பொம்ம வரய ஆளக் கூப்பிடாங்க. போயிருந்தா வட்டியாச்சும் தேத்தியிருக்கலாமே,”என்று சொல்லித் தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்.
அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவள் முன் கூனிக் குறுகி தலை கவிழ்ந்து நின்றான். அவள் சொன்னதும் அவனுக்குச் சரியாகப் பட்டது. கொரோனா தொற்றிக்கொள்ளுமோ, உயிர் போய்விடுமோ என்கிற பயத்தைக் காட்டிலும் மானம் போய்விடுமோ என்னும் பயம்தான் முன்னின்றது. துணிந்தான். உயிரை விட மானம் பெரிதென்று.
மறுநாள் காலையிலேயே வேகவேகமாகத் தன் பையை எடுத்துக்கொண்டு படம் வரையச் சென்றான். பொன்னாவுக்கு மகிழ்ச்சி. பின்னாலேயே துக்கமும் வந்தது. ரங்கன் வந்தான். வீட்டிற்குள் நுழைந்தான். அவள் அதிர்ந்து போய்விட்டாள்.
“என்ன பொன்னா… உன் புருஷன் கெளம்பிட்டானா?”
பயத்துடன். “ம்….”
“அவன் வட்டியும் தர மாட்டான். அசலுந்தர மாட்டான். அதான் நானே நேத்து நேர்ல வந்து கேட்டுட்டுப் போனேன்.”
“அதான் நேத்து கேட்டாச்சே… இப்ப ஏன் வந்தீங்க.”
“இல்ல. உங்கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிட்டு போலாமுனு வந்தேன்.”
“சரி. சொல்லியாச்சா, கெளம்புங்க.”
“என்ன பொன்னா… புடி குடுக்க மாட்டிங்குறியே. உனக்குப் புரியுதா நான் பேசுறது. காலம் பூராவும் பாடுபட்டாலும் உன் புருஷனால இந்தக் கடன அடைக்க முடியாது. ஆனா நீ நெனச்சா முடியும்…” என்று சொல்லியவாறே பொன்னாவின் இடுப்பைத் தொட்டான்.
திடீரென வெளியில் வாசலிலிருந்து ஒரு குரல்.
“ஏ…நாதாரி… திரும்ப இந்தப் பக்கம் வா. உன் கால ஒடிச்சு அடுப்புல வெக்குறேனா இல்லயா பாரு,” என்று திட்டிக்கொண்டே கறுப்பி உள்ளே வந்தாள்.
ரங்கன் கையை உதறிவிட்டு “என்னாச்சுமா?” என்றான்.
“ஒன்னுமில்லப்பா... இங்க இருக்குற பூனை ஒன்னு கருவாட திருட வந்துச்சு. எடுத்து எடக்கல்ல அது மேல விட்டேம்பாரு. ஒரே ஓட்டந்தான். ஆளு ஏமாந்தா பூனை கருவாட தூக்கலாமுனு நெனச்சுது. நான் விடுவேனா. எத்தன மொற எங்கையால அது சின்ன வயசா இருக்கும்போது தின்னிருக்கும். இப்ப உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ண பாக்குது. அதான் நல்லா ஒரக்கிறா மாதிரி போட்டேன்.”
ரங்கனுக்குச் செருப்பால் அடித்தது போல் இருந்தது கறுப்பியின் சொற்கள். ரங்கனுக்கு அவமானமாக இருந்தது. “இன்னும் ஒம்போது நாள்தான்,” என்று சொல்லிவிட்டு வேகமாக நடையைக் கட்டினான்.
பொன்னம்மாள் கறுப்பியின் மீது சாய்ந்து ‘அத்த…' என்று சொல்லிக் கதறிவிட்டாள்.
“நல்ல நேரத்துல வந்தீங்க அத்த. இல்லன்னா….” அவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.
“ஒன்னுமில்லமா. அழாத. இவனுங்களுக்கு இதான் வேல. கடன திருப்பிக் கட்ட முடியாத ஆளாப் பாத்து அதிக வட்டிக்குப் பணத்த குடுத்துட்டு ஒன்னுந் தெரியாத பொம்பளைங்க கிட்ட வீரத்த காட்டுவானுங்க. பொட்டப் பசங்க. நீ பயப்படாதமா. நான் பாத்துக்குறேன்.”
இத்தனை ஆண்டுகள் சரியாகப் பேசாத மாமியார் இன்று தனக்கு ஆறுதல் சொல்வது அவளுக்கு வியப்பாக இருந்தது. தனக்கொன்று என்றால் கேட்பதற்குத் தாய் ஸ்தானத்தில் மாமியார் இருக்கிறாள் என்கிற தைரியம் அவளுக்கு வந்தது. "என்னதான் இருந்தாலும் தன் மகனை நம்பி வந்தவள் இவள்" என்னும் எண்ணம் அந்தக் கிழவிக்கு மட்டும் இருக்காதா என்ன?
இந்த நிகழ்வுகளையெல்லாம் பொன்னா எண்ணிப் பார்த்தாள். பொன்னா வெட்கத்தை விட்டுத் தன் தாயிடம் சென்று உதவி கேட்கலாம் என்று எண்ணினாள். என்னதான் கணவன் முக்கியம் என்று பிறந்த வீட்டை விட்டு வெளியேறினாலும் பிறந்த வீட்டின் மீதான பாசம் துளியளவும் குறைவதில்லை. திருமணத்திற்கு முன்பும் சரி, பின்பும் சரி. தன் சுக துக்கங்களைப் பிறந்த வீட்டோடு பகிர்ந்து கொள்வதில் ஒரு அலாதியான இன்பமும் ஆறுதலும் ஏற்படுகிறது. பொன்னா மட்டும் விதிவிலக்கல்ல. பொன்னா வீட்டை விட்டு ஓடி வந்தாலும் அவளுக்கு அங்கு உறவில்லாமல் போய்விடுமா? நமக்கானவர்கள் அங்கும் இருக்கிறார்கள் என்ற பாசத்தோடே அவள் தன் தாய் வீட்டுக்குச் சென்றாள். ஆனால், அங்கு நடந்ததே வேறு. பொன்னாவின் தாயார்,
“நாங்க சொல்ல சொல்ல கேக்காம அந்த ரோட்ல படம் வரயற பரதேசியத்தான் கட்டிப்பேன்னு ஓடுனல்ல. இப்ப எந்த மூஞ்சிய வெச்சிட்டு இங்க வந்த.”
“பணம் தரலன்னா தரமுடியாதுன்னு சொல்லு. தேவ இல்லாம என் புருஷன பரதேசி, அது, இதுன்னு திட்டுற வேளயெல்லாம் வெச்சிக்காத.”
“ஓ…ஓ… மகாராணிக்குப் புருஷன சொன்னதும் கோவம் பொத்துகுட்டு வருதோ. மரியாத பாக்குறவ பஞ்சபாட்டு பாடிக்கிட்டு இங்க என் வீட்டுப் படியேறி வந்து மடியேந்தி நின்னுருக்கக் கூடாதுடி. உங்கப்பன தலைகுனிய வெச்சிட்டு அவன்தான் முக்கியமுனு போனல்ல. நல்லா அனுபவி. தெருவுல நீ நாயா, பேயா அலயணும். அத பாக்காம என் கட்ட வேவாதுடி.”
பொன்னாவுக்குப் பதில் பேச முடியவில்லை. விரும்பியவனை மணம் முடித்த பாவத்திற்காக அவள் தாய் தந்த அத்துணை சாபத்தையும் வாங்கித் தோள்மேல் போட்டபடி நடந்தாள். இனிமேல் அந்தக் கெட்ட எண்ணம் கொண்டவள் வீட்டைத் திரும்பிக்கூட பார்க்கக் கூடாது என்று தன் தாயைத் திட்டியபடியே வீடு வந்து சேர்ந்தாள். தன் அத்தை கறுப்பியிடம் நடந்ததைக் கூறி அழுதுவிட்டாள்.
“நீ ஏம்மா அங்கலாம் போற… ஒனக்கு கொழந்த பொறந்துருக்குனு தெரிஞ்சுங்கூட வந்து பேர பசங்க மூஞ்சிய பாக்குற அருகத இல்லாதவங்க அவங்க. அவங்க நெஞ்சுல இன்னுமா ஈரமிருக்குமுனு நம்புற. அவங்க பணத்த குடுத்துருந்தாலும் நானும் என் புள்ளயும் வேணாமுனுதான் சொல்லியிருப்போம். எங்களால பணத்தப் பொரட்ட முடியாதுன்னு நெனச்சிட்டியா. இந்தக் கெழவிய நீ என்னன்னு நெனச்சிட்ட. இந்தக் கட்ட வேவுற வெரக்கும் ஒழைக்கும். ஒன்னும் கவலப்படாத.”
பொன்னாவுக்கு, பெற்றவள் கொட்டிய தகிக்கும் கரித்துண்டுளின் மீது பெருவெள்ளம் வந்து பாய்ந்து போன்று இருந்தது உள்ளவள் சொன்ன வார்த்தைகள். இந்தக் கிழவிக்கு இந்த வயதிலும் எவ்வளவு தன்னம்பிக்கை உள்ளது என்று வியந்து நெகிழ்ந்து போனாள்.
நாட்கள் நகர்ந்தன. ரங்கன் வந்த விஷயமோ, பொன்னா தன் தாயிடம் பணம் கேட்ட விஷயமோ சாமானுக்குத் தெரியாது. அவன் வழக்கம்போல வேலைக்குச் சென்று வந்தான். ரங்கன் சொன்ன கெடு, நாளை தான். இவனால் பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. தலையே வெடித்துவிடும் போல் இருந்தது. மறுநாள் தன் மனைவியிடம் இன்று எப்படியேனும் பணத்தைப் புரட்டி விடுவதாகக் சொல்லிவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டான். கணவனின் வேதனை பொன்னாவை வாட்டியது. அன்று காலை டீக்கடை வாசலில் தொங்கவிடப்பட்ட செய்தித்தாள் விளம்பர நிகழ்வும் அவளுக்கும் பயத்தைத் தந்தது. நன்றாகக் கொட்டை எழுத்துக்களில் “கடந்த மூன்று ஆண்டுகளில் கடன் தொல்லையால் 16 ஆயிரம் பேர் தற்கொலை” என்று தலைப்புச் செய்தி அச்சிடப்பட்டிருந்தது. தன் கணவன் அடுத்த எண்ணிக்கையில் வந்து விடுவானோ என்ற கலக்கம் அவளுக்கு ஏற்பட்டது. அடுத்த நொடி கண்கலங்கி தன் திருமாங்கல்யத்தை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். அந்தப் பயம் அவளுக்குத் தைரியத்தையும் வரவழைத்தது. துணிந்து ஒரு முடிவை எடுத்தாள்.
வீட்டிற்கு வந்ததும் தன் மாமியாரை அடுத்த தெருவில் இருக்கும் தன் மக்களை பார்த்து வரச் சொன்னாள். மாமியாரும் சென்றபின் ரங்கனுக்குப் போன் செய்து வீட்டிற்கு வரவழைத்தாள். ரங்கனும் வந்தான்.
“எனக்குத் தெரியும் பொன்னா… கடைசில நீ வழிக்கு வந்துடுவன்னு. இப்பவாச்சும் உனக்குப் புரிஞ்சுதே. சரி, சரி நேரத்த வீணாக்காம வா…”
பொன்னா சென்று கதவைத் தாழிட்டாள். ரங்கன் அவள் பின்புறமாக வந்து அவள் தோள் மீது கைவைத்து மெதுவாகத் தன் கையை முன்பக்கம் நகர்த்தி கீழே இறக்கினான்.
சடாரென்று பொன்னா ரங்கனின் கையைப் பிடித்துத் திருகி, “ஏன்டா நாயே… உனக்கு காசு குடுத்துட்டா என்னவேணா பேசலாம், என்னவேணா பண்ணலாம்னு நெனப்பா. உங்கள மாதிரி ஆளுங்களால தான்டா பல குடும்பம் சின்னாபின்னமாகுது. பல பேரு நடுத்தெருவுல நிக்கறாங்க. பெத்த புள்ளங்களயும் கட்டுன பொண்டாட்டியயும் அம்போன்னு விட்டுட்டு எத்தன ஆம்பளங்க மான, ஈனத்துக்குப் பயந்து மருந்து குடிச்சும், தூக்குப் போட்டும் சாகுறாங்கன்னு தெரியுமாடா உனக்கு. இன்னும் சில பேரு தலமுற தலமுறயா வாழ்ந்த சொந்த ஊர விட்டுட்டு, சொந்தபந்தத்த விட்டுட்டு ஊருபேரு தெரியாத ஏதோ ஒரு ஊர்ல, கீழ விழுந்தா கூட தூக்கிவிட ஆளு இல்லாத அநாதயா வாழுறாங்கன்னு தெரியுமாடா உங்களுக்கு. மனுஷனுக்கும் அவன் பொறந்த சொந்த மண்ணுக்கும் இருக்குற தொப்புள்கொடி ஒறவ கடனுங்கற கத்திய வெச்சு கதறக்கதற அறுக்கறீங்களேடா பாவிங்களா.
அதுக்காகக் கடனே தரவேணாமுனு சொல்லல, அநியாய வட்டிக்குத் தராதீங்கன்னுதான் சொல்றோம். கடன திருப்பிக் கேக்க வேணாமுனும் சொல்லல, கேக்குற முறையில கேளுங்கன்னுதான் சொல்றோம். ஒன்னு தெரிஞ்சிக்கோ, எவனுமே ஏமாத்தனுங்குற எண்ணத்தோட கடன் வாங்குறதில்ல. ஏதாவது ஒரு நல்ல தொழில் செய்து பொழப்பு நடத்தி ஊர்ல கவுரவமா வாழனுமுணு நெனச்சு தான் வாங்குறான். இந்த ஒலகத்துல பொழக்கவா வழி இல்ல. எந்த மாதிரி வேணாலும் தப்பு செய்து பொழச்சிக்க தெரியும். அப்படி நாங்க என்னவேணா பண்ணி பொழக்கனுமுனு நெனச்சா ஏன்டா உங்கள மாதிரி ஆளுங்க கிட்ட கடன வாங்கி மானம், மரியாத கெட்டு உயிர் வாழணும்.
உனக்குத் தேவ காசுதானடா. இந்தாடா…” என்று சொல்லி தன் கழுத்தில் கிடந்த திருமாங்கல்யத்தைக் கழற்றி அவன் முகத்தில் வீசி எறிந்தாள்.
“நீ குடுத்த பணத்தவிட இது மிச்சமா இருக்குமடா. எடுத்துட்டுப் போடா சனியனே. இனிமே இந்த வீட்டுப் பக்கம் வந்த.... மரியாதையா கெளம்பு.”என்று சொல்லிவிட்டு அழுதுகொண்டே நின்றாள்.
ரங்கன் வீட்டைவிட்டு வெளியே வந்தான். அதே சமயம் சாமானும் எங்கேயோ பணத்தை ஏற்பாடு செய்துகொண்டு அங்கே வந்துவிட்டான். அவனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. அவன் பணத்தை ரங்கனிடம் நீட்டினான். ரங்கனோ, “வேணாடா சாமா… உன் பொண்டாட்டி கடன அடச்சிட்டா.” என்று சொல்லி விட்டுச் சென்றுவிட்டான்.
சாமான் வீட்டிற்குள் சென்று பார்த்தான். பொன்னா அழுதுகொண்டு இருந்தாள். ரங்கன் சொன்னதை வைத்துத் தப்புக் கணக்கு போட்டு விடுவானோ? என்று பொன்னா பயந்து நடுங்கினாள். ஆனால் அவன், “ஏன் நடுங்குற பொன்னா?... என் பொன்னாவ எனக்குத் தெரியாதா!....” என்றான். உடனே பொன்னா கதறி அழுது பெருமூச்சிறைத்து அவன் மார்பில் சாய்ந்து கலங்கினாள். அவனும் அவளை அணைத்தான். அவளும் அவனை அணைத்தாள்.
அந்த இரவு வேளையில் நெஞ்சம் நிறைந்தார்கள். மனைவியை நம்பும் கணவன் கட்டிய மாங்கல்யம் எப்போதும் பாக்கியமே!
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்