Mohammed Muzammil S
சிறுகதை வரிசை எண்
# 191
*தாயாக*
வழக்கம் போல சுதாகரை இருசக்கர வண்டியில் ஏற்றி கொண்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு சின்ன சந்துக்குள் நுழைந்தான் முரளி
பொதுவாக யாரும் அந்த தெருக்குள் வரவே யோசிக்கும் அளவிற்கு கெட்ட நாற்றம் அடித்து கொண்டு குப்பையாய் காட்சி அளிக்கும். வேறு என்ன செய்வது சமூகத்தால் புறந்தள்ளுபவர்களுக்கு இது தானே ஒரே அடைக்கலம். தகரத்தால் அடைத்த ஒரு சிறிய வீடு.அதை வீடு என்று சொல்ல முடியாது வெயில் காலத்தில் வாட்டி வதைக்கும் நெருப்பு பொட்டலம்.அதற்குள் குனிந்து தான் செல்ல வேண்டும். வாழ்க்கையே இழுத்து கொண்டிருக்கும் போது குனிந்து செல்வது எல்லாம் இவர்களுக்கு பெரிதல்ல. அவர்கள் இந்த தெருவுக்குள் தான் வாழ வேண்டும், இந்த சிறு குடிசையில் தான் வாழ வேண்டும் என்பது விதி. ஆனால் ஏன் அந்த விதி முரளிக்கு வந்தது. அதற்கு பதில் தெரியாமலே பல முறை முரளியுடன் அங்கு சென்றிருக்கிறான் சுதாகர். ஆனால் தெரு கோடியில் நின்று கொள்வானே தவிர அந்த தெருவுக்குள்ளோ இல்லை அந்த வீட்டிற்குள்ளோ தவறியும் நுழைய மாட்டான்.
பழம், காய்கறி, மளிகை பொருள் என வாங்கி வரும் முரளி வழக்கத்திற்கு மாறாய் இன்று பட்டு புடவையை வாங்கி கொண்டு வந்திருந்தான். அதை எடுத்து கொண்டு நேராக அந்த வீட்டை நோக்கி நடந்தான். சற்று எரிச்சலுடன் முரளியை வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தான் சுதாகர். இந்த மாதிரி ஆட்களிடம் பழக்க வழக்கம் வைக்க வேண்டாம் என்று பல முறை முரளியிடம் கூறியும் கேட்காததாலோ என்னவோ இந்த கோப பார்வையாக இருக்கலாம். முரளி அந்த வீட்டை அடைவதற்கும் அவன் பார்க்க சென்ற நபர் வீட்டை விட்டு வெளி வருவதற்கும் சரியாய் இருந்தது. வேண்டாம் என்று சொல்ல சொல்ல வம்படியாக புடவையை கையில் திணித்து காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்தான் சுதாகர். சட்டென்று முரளி சுதாகரை இங்கு வருமாறு சைகை காட்டினான்.
"இவன்ட்ட எத்துன தடவ சொன்னாலும் புரியாது. இவன் சவகாசம் வச்சுக்குறது மட்டுமில்லாம என்னையும் கோர்த்து விட பாக்குறான்" என்று முனங்கி கொண்டே சென்றான் சுதாகர்.
சுதாகரை வீட்டுக்குள் வர சொல்லி அவள் எவ்வளவோ கேட்டும் உள்ளே செல்ல சுதாகர் மறுத்து விட்டதால், உள்ளே சென்று லட்டு, மைசூர் பாகு என சில இனிப்புகளை வெளியே எடுத்து வந்து வழங்கினாள் அவள்.
"இன்னைக்கு என் பொறந்த நாளு கண்ணு" என்று கூறி கண் கலங்கினாள் அவள்
"அண்ணா அழாதே அண்ணா அதான் நான் இருக்கேன்ல" என்றான் முரளி
இதுவரை இவர்களின் உறவை அறிந்திராத சுதாகர் "என்னது அண்ணனா"? என்றான் வியப்பாக
"ஆமா மச்சான். அதெல்லாம் அப்றம் சொல்றேன். வா இங்கிருந்து போலாம்" என்று சுதாகரை அழைத்து கொண்டு சென்றான் முரளி.
இருவரும் மெரினாவை அடைந்தனர். மேகம் இருள் சூழ தொடங்கியது. முரளி தொடர்ந்தான்.
"மச்சான் இதுநாள் வரைக்கும் யார்டையும் சொல்லிக்கிட்டது இல்லை. அது என் கூட பிறந்த அண்ணன் டா"
நடப்பது எதுவும் புரியாதவனாய் சுதாகர் பார்த்துக் கொண்டிருக்க முரளி தொடர்ந்தான்.
"எங்கம்மா நான் சின்ன வயசா இருக்கும் போதே என்னை விட்டுட்டு போயிட்டாங்க. பொம்புள்ள இல்லாத குடும்பம் எவ்ளோ கஷ்டப்படும்னு உனக்கே தெரியும். நான் எங்க அப்பா எங்க அண்ணா மூனு பேரும் ரொம்பவே கஷ்டப்பட்டோம். எங்க அண்ணா தான் என்னை குளிப்பாட்டி பள்ளிக்கு அனுப்பி எங்களுக்கு சமச்சு கொட்டி எல்லாத்தையும் பாத்துக்கிட்டான். அவன் படிப்ப தொலச்சு என்னை படிக்க வச்சான். பக்கத்து வீட்டு பொம்புள்ளைங்க கிட்ட சமைக்க கத்துக்குறேன் குடம் தூக்க கத்துக்குரேனு அவங்க கூட பேசி பேசி காலப்போக்குல அவங்க கூட கதை பேச ஆரம்பிச்சுட்டான். ஒரு கட்டத்துல அவனுக்கு பெண் உணர்வு வந்துருச்சுடா. எங்க குடும்பத்துக்காக மாடா உழச்சான். ஆனா ஊருக்கு பயந்துக்கிட்டு அவன அடுச்சு தொரத்திட்டாரு எங்க அப்பா. அவன் தியாகத்த கொஞ்சம் கூட யோசிக்கல. பெத்த அம்மா வாசனையே தெரியாத எனக்கு அம்மாவா இருந்து எல்லாம் பண்ண அவன நான் எப்டி டா தூக்கி போட முடியும்" என்று விசும்பலுடன் சொல்லி முடித்தான்
"மச்சான் வா எந்திரி போலாம்" என்றான் சுதாகர்
"எங்கடா"
"இன்னைக்கு உன்னோட அம்மாவுக்கு பொறந்த நாள்லடா. வா வெளில கூட்டிட்டு போயி செமையா செலிபிரேட் பண்ணலாம்"
சுதாகரை முரளி ஆர தழுவிக் கட்டி அணைத்து கொண்டான்.
மேகம் இருள் நீங்கி தெளிவு பெற தென்றலும் இதமாய் வீச தொடங்கியது
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்