logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

நித்வி

சிறுகதை வரிசை எண் # 190


பொன்வண்டு காலம் போன கோடை விடுமுறைக் கெல்லாம் இப்படி இல்லை…. வீடு, அணைப் பிள்ளையார் கோயில் வீடு, அணைப் பிள்ளையார் கோயில் வீடு, அணைப் பிள்ளையார் கோயில் என பகல் பொழுதை அணைப் பிள்ளையார் கோயிலுக்கும், இரவை வீட்டுக்கும் என பங்கு பிரித்துக் கொள்வோம்… பொழுது விடிய என் நட்பின் வீடுகளுக்கு நான் செல்வேன் இல்லையா என் நட்பில் ஒருவன் என்னை தேடி வந்து விடுவான். விடிந்த சிறிதுக்குள் குழுவாய் சேர்ந்து விடுவோம்…பிறகென்ன எங்களது கால்கள் தானாக அணைப் பிள்ளையார் கோயில் நோக்கி நகர ஆரம்பிக்கும்… வீட்டுக்கும் கோவிலுக்கும் பக்கம் தான் ஒரே கிலோமீட்டர்.எங்கள் ஏரியா ஊரின் கடைசி மூலை, அணைப் பிள்ளையார் கோயிலோ ஊரைத் தாண்டி நான் சொன்னேனே ஒரு கிலோ மீட்டர் தூரம் என்று அங்கு இருக்கும்…ரயில்வே ஸ்டேஷன், ரெட்டை வாய்க்கால், எல்லாம் தாண்டி மூணார் போகும் ரோட்டில்… பிள்ளையார் கோயில், கோயிலை ஒட்டி கொட்டகுடி ஆறு கிளை கிளையாக பிரிந்து ஓடும் அதில் ஒரு கிளை இந்த ஆறு…கோயிலும் ஆறும் ஒருவரை ஒருவர் தொட்டு அடுத்தடுத்து இருப்பர் மேற்கு தொடர்ச்சி மலையில் வானம் கொட்டினால் கொட்டகுடி பெருக்கெடுத்து விடும் ஊரைச் சுற்றி ஓடும் கொட்டகுடியின் கிளைகள் தங்கு தடையின்றி குறுக்கே வரும் அனைத்தையும் அடித்து இழுத்துக் கொண்டு ஓடும்.இதன் ஓட்டத்தை கட்டுக்குள் கொண்டு வரவே கொட்டகுடி ஓடு பாதையில் ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டது அரசாங்கத்தால். அப்படித்தான் இங்கும் தடுப்பு ஒன்று அமைக்கப்பட்டது சரியாக கோயிலை ஒட்டியே தான் அந்த தடுப்பும் அமைந்தது.ஒரு சின்ன அணை போல… அணையும், ஆறும், பிள்ளையாரும் தங்களுக்கென ஒரு தனித்த பெயரை வைத்துக் கொண்டனர் (அ) ஊரில் வைத்தனர் "அணை பிள்ளையார்" என்று… அங்கே வரும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் உண்டு.கார்த்திகை மாதம் ஆனால் ஐயப்ப சாமிக்கு மாலை போட்டவர்கள் சூரியனுக்கு முன்னேயே எழுந்து ஆற்றில் குளியலை போட்டு பிள்ளையாரை கும்பிட்டு விட்டு செல்வர். ஊர்க்காரர்கள் குளிக்கவும் துவைக்கவுமாய் இருப்பர். என்னைப் போன்ற சில்வண்டுகள் குளிக்க, மீன்பிடிக்க, கருவேல மரமேறி "பொன்வண்டு" பிடிக்க வருவோம்… லீவு விட்டாப் போதும் தெனைக்கும் இதே வேலை தான் பொன்வண்டை பிடித்து ரெடிமேட் சேலைக்கு தரும் அட்டை பாக்ஸில் போட்டு வளர்த்து, தீப்பெட்டி அட்டைக்கும் வைத்து விற்போம்.பொன்வண்டிற்க்கும் எங்களுக்கும் பிடித்தமான ஒன்று ஒரே மரத்திலே கிடைக்கும் "கொடிக்காய் மரம்"... கொத்துக்கொத்தாய் கொடிக்காய் பிடுங்கித் தின்போம் பொன் வண்டுகளுக்கும் கொடிக்காய் இலைகளை திங்கத் தருவோம் அந்த இலைகளை பொன்வண்டின் கழுத்துக்கும் உடம்பிற்கும் இடையே இருக்கும் ஒரு குட்டி இடைவெளியில் வைத்து அது கழுத்தை முன்னும் பின்னும் உடலோடு சாய்க்க சாய்க்க இலைகள் அறுபடும்.அங்கே கையை வைத்தால் ஒரே கிழியாய் கிழித்து ரத்தம் வந்துவிடும் என்று ஒரு கதை சொல்லப்பட்டு வந்தது யார் சொன்னது என்று தெரியவில்லை.இதுவரை யாரும் அப்படி அறுபட்டதில்லை நான் பார்க்க. அது அந்த இலைகளை விரும்பி திங்கும் என்று தான் நம்பினோம் ஆனால் எங்களுக்கு அந்த கொடிக்காய் விருப்பமானது வாயில் வைத்தால் துவர்ப்போ துவர்ப்பு சப்பு கொட்டிக் கொண்டே சுவைப்போம்… போகும்போது மட்டும் தான் நடந்து, திரும்பி வீடு வந்து சேர மாட்டுவண்டி பயணம் தான் அணைப் பிள்ளையார் வந்து வண்டி வண்டியாக மண் எடுத்துக் கொண்டு போவார்கள் வீடு கட்டுவதற்கு.அந்த வண்டியிலேயே நாங்களும் தொற்றிக்கொண்டு செல்வோம். நான் என் வீட்டு பக்கத்தில் இருக்கும் சங்கையா அண்ணன் வண்டியை பிடித்துக் கொள்வேன் அப்பப்போ அதற்றுவார் நான் சிரித்தே அவரை மலுப்பி விடுவேன். இப்படித்தான் கழிந்தது ஒவ்வொரு நாளும் போன கோடை விடுமுறையில்… ஆனால், இந்தக் கோடை விடுமுறையின் இறுதி நாளுக்கு வந்து விட்டோம் இருந்தும் அது போன விடுமுறையின் பக்கம் கூட நிற்க முடியாது என்பதைப் போலத்தான் போகிறது… தண்ணீர் வரத்து முன்பை போல இல்லை ஆனாலும் அணைப் பிள்ளையார் நோக்கி நகரும் எங்கள் கூட்டம் குறையவில்லை ஆனால் மாட்டுவண்டிகள் கூட்டம் குறைந்துவிட்டது.பொன்வண்டுகளை பிடித்துக் கொண்டு மட்ட மத்தியானத்தில் கால் சுட நடந்து போகிறோம் மாட்டுவண்டி இருந்தால் அதன் மீது ஏறி அமர்ந்து கொண்டு சொகுசாக வீடு சேர்வோம்… எனக்கு மாட்டு வண்டியின் முளைக் குச்சியை பிடித்து சக்கரத்தில் ஒற்றை கால் வைத்து ஒரே முட்டில் தாவி வண்டியில் ஏற கொள்ளப் பிரியும் வண்டி நிக்கயிலே மட்டும்தான் அப்படி ஏற முடியும் ஓடும் வண்டியில் ஏறினால் கால் ஒடிந்து படுக்கைக்கு இரையாக வேண்டியது தான்… பல மாதங்களாகவே சங்கையா அண்ணனின் மாட்டுவண்டி கிடப்பில் தான் இருந்தது.அதை எடுக்கவே இல்லை, வெறுமனே அவர் வீட்டுக்கு வெளியே இருக்கும் கொட்டகையை ஒட்டி வண்டி நின்றிருக்கும் அந்த வண்டியில் மாடுகள் பூட்டி நான் பார்த்து பல நாட்கள் ஆகிற்று. ஒரு மாடு அடிக்கடி நோய் வாய்ப்பட்டு கொண்டே இருந்தது. அழகான வெள்ளை காளை சாம்பல் நிற பெரிய கொம்புகளோடு வளர்ந்து நெடுநெடு வென இருக்கும். அதன் திமிலை பார்த்தால் மேற்கு தொடர்ச்சி மலை போல மேல ஏறி கீழே இறங்கி, அந்தத் திமிலில் முளைத்திருக்கும் மயிர்கள் எங்கள் வீட்டில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலையைப் பார்த்தால் அதில் இருக்கும் மரங்களைப் போல் நட்டுக் கொண்டு இருக்கும்…இப்படி மாடுகளை பூட்டாத அந்த வண்டிகளில் நாங்கள் தினமும் மேலேறி கீழே குதித்து மறுபடி மேலே ஏறி பின் கீழே குதித்து விளையாடுவோம். என்னதான் இருந்தாலும் ஓடும் வண்டியின் பின்னே ஏறி உட்கார்ந்து போவது ஒரு தனி ரகம்தான் அது ஆற்றில் மிதக்கும் ஒரு சுகத்தை கொடுக்கும்… பையில் பொன்வண்டுகள், ஒரு கையில் கொடிக்காயிலை, வாயில் கொடிக் காய் என துணிக்கடை அலமாரிகளை போல நிரம்பி இருந்தோம்…துவர்ப்பை சுவைத்துக் கொண்டே வீடு வர சங்கையா அண்ணன் வீட்டின் முன் தெருவில் பாதிப்பேர் கூடியிருந்தனர் மீதி பேர் அவரின் கொட்டகை முன்பு இருந்தனர்… இரண்டு மாசத்திற்கு முன்பு கூட இதே போலத்தான் இங்கு கூட்டம் இருந்தது. நான் சொன்னேன் அல்லவா அந்த வண்டி காளை அதற்கு (காணம்) அம்மை போட்டிருந்தது. உடம்பெல்லாம் ஆங்காங்கே பொட்டு வைத்தார் போல புண்கள்.எனக்கு அம்மை போட்ட போது கூட இதே மாரி தான் இருந்தது அதில் ஒரு பொட்டு வடுவாய் என் கையில் இன்னும் இருக்கிறது… என் அம்மைக்கு என்னை வீட்டை விட்டு வெளியே விடாமல் வேப்பிலை மேலே வெள்ளை துணி விரித்து அதில் படுக்க வைத்து வேப்பிலை போட்ட தண்ணீர் ஊற்றி. ஆனால், மாட்டிற்கு அவர்கள் செய்ததே வேறு… சங்கையா அண்ணனின் மனைவி செல்லம்மாக்கா என்னிடம் தான் சொன்னார்கள் முக்கு வீட்டில் இருக்கும் ஜெயந்தியை அழைத்து வரச் சொல்லி விர்ரென மோட்டார் வண்டி சத்தத்தை எழுப்பிக்கொண்டு எங்கும் நிற்காமல் முக்கு வீட்டில் போய் தான் நின்றேன். நானும் ஜெயந்தி அக்காவும் வருவதற்குள் தெருவில் இருக்கும் இன்னும் ரெண்டு ஜெயந்தி அங்கிருந்தனர். அதில் ஒரு ஜெயந்தி என் அம்மா… என்னக்கா ஆச்சு? செல்லம்மா அழுது வடிந்த கண்களுடன் தொண்டைக்கு உள்ளே இருந்த பேச்சை வெளியே இழுத்துக் கொண்டு வந்து பேசினார்… மாட்டுக்கு அம்ம போட்டுருக்குடி… என்னக்கா சொல்ற அதே இவ்வள கூட்டமா! இவெ, வந்து கூப்புட்ட வேகத்துல என்னமோ ஏதோனு நெனச்சு ஓடியாந்தே நான் நெனச்சது சரியாத்தேய்ம் போச்சு… சங்கையா அண்ணன் வீட்டிற்குள் இருந்து வெளியே கொட்டகைக்கு வந்தார்.செல்லம்மா ஆரம்பிச்சு வுடு… செல்லம்மாக்கா வீட்டுக்குள்ளிருந்து சொலகு ஒன்றை எடுத்து வந்தார். என் அம்மா, மளிகை கடைக்கார ஜெயந்தி அக்கா, முக்கு வீட்டு ஜெயந்தி அக்கா, அந்த சொலகை மூவருமே பிடித்திருந்தனர் சொலகின் பின்பக்கமாக…செல்லமாக்கா அந்த சொலகில் அடுப்பில் இருந்த விறகுச் சாம்பலை கொட்டினார்.படுத்து கிடந்த மாட்டை எழுப்ப முயற்சி நடந்து கொண்டிருந்தது.அது எழவே மாட்டேன் என்றது… சரி, சரி, படுத்துருக்க வாக்குலயே செய்வோம்… இரண்டு ஜெயந்தி அக்காவும், என் ஜெயந்தி அம்மாவும் மாட்டின் தலையிலிருந்து அந்த சாம்பலை புடைத்துக் கொண்டு மாட்டு வால்வரை மறுபடி மாட்டுத் தலை முதல் வால் வரை மறுபடி தலை முதல் வால் வரை என்று மூன்று வட்டம் சாம்பலை பொடைத்தனர். மூன்றாவது வட்டம் மொத்த சாம்பலையும் மாட்டின் வால் பகுதிக்கு அருகே கீழே கொட்டி விட்டனர்… என் அம்மா, அப்புறம் ரெண்டு ஜெயந்தி அக்காவும் செல்லம்மாக்காவின் அருகில் போய் நின்று… ஏன் கா அழுகுற? எல்லாஞ் சரியாப் போயிரும்கா…செய்ய வேண்டியத செஞ்சிட்டோம், நம்புவோம், நீ மனச விட்டுராத. அண்ணனுக்கு நீதே தைரியஞ் சொல்லணும். மாடு கூடவே பொலங்குன ஆளு கொஞ்சம் பாத்துக்க என ஆளாளுக்கு தைரியம் சொல்லி கிளம்பினர்… நானும் என் கூட்டுச் சிறுசுகளும் மாட்டு வண்டி மீது ஏறி என்னடா இப்படி ஆகிருச்சு இனிமே நம்ம வண்டில போக முடியாதா? ஒனக்கு அம்ம போட்டுச்சே சரியாக எத்தன நாளாச்சு "பத்து விரல்களையும் காட்டினான் மடக்கிவிட்டு மறுபடியும் பத்து விரல்களையும் காட்டினான்". அதே மாதிரி மாட்டுக்கும் சரியாகிரும்ப்பி… **************** இன்னைக்கும் அதுபோலவே தான் கூட்டம் கூடியிருந்தனர், அவர்கள் வீட்டை பார்த்து ஓடினோம்.அன்னைக்கு மாதிரியே தெருவில் பாதிப்பேர் வீட்டு வாசலிலும், மீதி பேர் கொட்டகை பக்கம்மும்… நான் அம்மா பக்கத்தில் போனேன். கைகளைப் பற்றினேன், கீழே குனிந்து என்னை பார்த்தார் என் தலையை தடவிக் கொடுத்தார்… மாட்டுக்கு மறுவுடியும் என்னம்மா ஆச்சு? "மாட்டுக்கு ஒடம்பு சரியில்லப்பா பாலு"… நான் கொட்டைக்குள் படுத்திருந்த மாட்டைப் பார்த்தேன் உடலில் எங்கேயும் பொட்டு போன்ற காயங்கள் ஒன்றும் இல்லை.அது தன் தலையை தரையில் ஒட்டி வைத்திருந்தது, கண்கள் எல்லாம் கண்ணீர் வடிந்து ஓடா ஆற்றுத் தடம் போல இருந்தது.மாட்டின் குண்டியில் சலம் போல ஏதோ ஒன்று ஒழுகியது… ஏய், வழிய விடுங்கப்பா டாக்டர் வாரரு… மாட்டுக் கொட்டகையை நோக்கி டாக்டர் வந்தார்.சங்கையா அண்ணன் ஓடிவந்து மாட்டை எழுப்பினார்.மாடு முக்கி முனங்கி எழுந்து நின்றது… டாக்டர் தன் கையில் வைத்திருந்தவற்றை கீழே ஓரமாய் வைத்தார்.அவர் பையில் இருந்து ப்ளூ கலரில் ஒன்றை எடுத்தார். அது கையுறை, ஒவ்வொன்றாய் தன் கைகளில் மாட்டினார் அது மிக நீளமாக இருந்தது அவரின் கைமுட்டி வரை நீண்டிருந்தது… சங்கையா அண்ணன் மாட்டின் வாலை தூக்கிப்பிடிக்க டாக்டர் மாட்டின் குண்டிக்குள் கையை விட்டார்.சில நொடிகள் அவரின் கை உள்ளே தான் இருந்தது. மாடு கொஞ்சம் கூட தன் உடம்பை நகர்த்தவில்லை கட்டை போலவே அசைவற்று இருந்தது. டாக்டர் தன் கையை வெளியே எடுக்க குண்டியில் ஒட்டி இருந்த சலம் எல்லாம் கீழே ஒழுகியது கையுறையெல்லாம் திட்டு திட்டாய் ரத்தம் ஒட்டிக் கிடந்தது… டாக்டர் சங்கையா அண்ணனின் முகத்தை பார்த்தார்… ம்ஹிம்……என்று தலையை ஆட்டினார்… ஊசி ஒன்றை போட்டுவிட்டார்.டிவியில் நான் பார்த்து பயப்படும் அதே மாட்டு ஊசி திக்கென்று இருந்தது. பல அடிகள் என் கால் பின்னே போனது… பையில் இருந்து காசை எடுத்து டாக்டர் இடம் நீட்டினார்… அட உள்ள வையப்பா ஏற்கனவே ரொம்ப செலவழிச்சிட்ட… இருந்தும் சங்கையா அண்ணன் அவர் கையில் காசை திணித்து விட்டார்… சங்கையா இனி செலவழிக்கிறது எல்லாம் ஆத்துல போட்ட மாதிரி என்று சொல்லி மறுபடியும் அவர் முகத்தைப் பார்த்தார். புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். சொல்லிவிட்டு நடையை கட்டினார்… செல்லமாக்கா மூக்கை உறிஞ்சிக் கொண்டே அழுதது என் அம்மாவும் தெருவில் சிலரும் பக்கம் நின்று ஆறுதல் சொன்னனர்… பக்கத்து தெருவில் இருக்கும் நடராசு அண்ணன் சங்கையா அண்ணன் கிட்டே போனார்… "இனி ஆகாதுப்பா டாக்டர் சொன்னத கேட்டேல்ல"… "மண்ணுக்கு போயி ரெண்டு மாசோ ஆகுது, வண்டி ஓட்டமே இல்ல"… "இனி ஓட்டம் இருக்காதுய்யா"… கவுர்மெண்ட்ல சொல்லிட்டாய்ங்க இனி ஆத்துல மண்ணடிக்க கூடாதுன்னு.அதனால தான இத்தன மாசமா வண்டிய எல்லாரும் கெடப்புல போட்ருந்தீங்க. பகல்ல போனா புடிச்சுக்கிருவாய்ங்கன்னு ராவுல போனீங்க என்ன ஆச்சு பைன கட்டுனதுதே மிச்சம்… வெய்யக் காலம் உங் கொட்டகையை பாரு எல்லா பக்கமு ஓட்ட அதுல கெடந்தது கெடந்தே மாட்டிக்கு சூடு பிடிச்சிருக்கும்… மொதல்ல கூரய மேயிற வழியப் பாரு… என் நெலம தெரியதான்னே உனக்கு, தெரிஞ்சிட்டே சொல்றியே. வண்டி ஓட்டமில்ல, இந்த ரெண்டு பசு மாடு கறக்குற பால ஊத்தித்தேன் வயித்த கழுவுறதா இருக்கு.தீவனக் கடையில வேற கொள்ளக் கடெங் கெடக்கு… என்னய என்ன பண்ணச் சொல்ற? பேசாம மாட்ட ஏத்தி விட்டுருவோம் சங்கையா… வேணாம்ணே, வேணாம்ணே மனசுக்கு ஒப்பாதுணே அது. புள்ள கணகட்டா அங்குட்டும் இங்கிட்டுமா ஓடிக்கிட்டு திரிஞ்சது… எலேய் சுத்தி பாரு உங் கொட்டகைய நீயே, ஒத்தத குடுத்து மத்தத காப்பாத்திக்கன்னு சொல்றேன். இந்த கொட்டையிலேயே மத்ததுகளும் கெடந்துச்சு இதோட நெலமதே அதுகளுக்கும்… உசுரு இருக்கும் போதே ஏத்திவிட்டாத்தே இல்லேன்னா அப்ப பொலம்பி ப்ரோசனமில்ல. எம் மனசுல பட்டத சொல்லிட்டே இனி உம் முடிவுதே. வீட்டுல கலந்து பேசி ஆக வேண்டியது என்னான்னு பாரு, நா வாரேன்… கொஞ்சம் கொஞ்சமாக சங்கையா அண்ணன் வீடு கூட்டத்தை இழந்து கொண்டிருந்தது.முன்பைப் போலவே நானும் என்னை போன்ற மற்ற சின்னதுகளும் மாட்டு வண்டி மீதேறி என்னடா இப்படி ஆகிருச்சு என்று மறுபடி ஆரம்பித்தோம்.நான் அப்போதும் முளைக் குச்சியை பிடித்து தான் வண்டி மீது ஏறினேன்… மறுநாள் ஸ்கூலுக்கு சென்று விட்டு சாயங்காலமாக வீடு வந்தேன். சங்கையா அண்ணனின் மாட்டுக் கொட்டகையை பிடுங்கிப் போட்டுக் கொண்டிருந்தனர். கட்டுக் கட்டாய் புதுக் கூரைகள் இருந்தது அருகே. பக்கத்திலே பசுமாடுகள் மாத்திரம் இருந்தது காளை மாடுகளை காணோம்.கூடவே, வண்டியையும் தேடினேன். "வண்டி இருந்த இடத்தில் ஒரே ஒரு முளைக் குச்சி கிடந்தது எடுத்துக் கொண்டு ஒரே ஓட்டம் வீட்டிற்கு"... அதற்கப்புறம் அந்த வண்டி என் கண்களுக்கு அகப்படவேயில்லை. வெள்ளைக் காளைகளும் தான்…

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.