எஸ். ஜெயப்பிரகாஷ்
சிறுகதை வரிசை எண்
# 189
சாம்பல் குதிரைகள்
""""""""""""""""""""""""""""""""""
அந்த சாலையில் வாகனங்களின் ஹாரன் சப்தம் முழுவதும், தடைபட்டு நின்று போயிருந்த அந்த காரை நோக்கி ஒலித்துக் கொண்டிருந்தது. அது ஒரு மாருதி ஸ்விஃப்ட் கார். மொத்த போக்குவரத்தையும் ஸ்தம்பிக்க வைத்தபடி அமைதியாக நின்றிருந்தது. ஆனந்த் தனது பைக்கின் ஹாரனை அடித்து சலித்த பின்பு அதை ஒரு கடை ஓரமாக நிறுத்திவிட்டு “என்னவென்று பார்க்க” அந்த காரை நோக்கி நடந்தான். மருத்துவ பிரதிநிதியாக வேலை பார்க்கும் அவன் தனது பேக்கை முதுகுக்கு பின்னால் மாட்டி இருந்தான். அடர்த்தி குறைந்த நீல நிற சட்டையை கருப்பு பேண்டுக்குள் மடித்து டக் செய்திருந்தான். பாலீஷ் போடப்பட்ட காலனியும், சவரம் செய்யப்பட்ட அவனது முகமும் அன்றைய மலர்ச்சியை வெளிப்படுத்தியது. அவன் அந்த காரை நெருங்குவதற்கு முன்பே சிலர் அங்கு கூடி இருந்தனர்.
அந்த காரின் ஸ்டியரிங் மீது ஒரு பெரியவர் நினைவிழந்து சரிந்து கிடந்தார். பின் சீட்டில் ஒரு வயதான பெண்மணி அவரை எழுப்பியபடி பதற்றத்துடன் அமர்ந்திருந்தாள். கூட்டத்தை விலகிக் கொண்டு ஆனந்த் அந்த பெண்மணியிடம் கேட்டான்! “ என்னாச்சு மா? என்ன ஆச்சு இவருக்கு?”
“ தெரியல தம்பி! இப்பதான் ஹாஸ்பிடலுக்கு இருவரும் “செக்கப்” போய்யிட்டு வரோம்! நல்ல தான் காரை ஓட்டிக்கிட்டு வந்தார்!... திடீர்னு இப்படி மயங்கிட்டார்…! என்றார் அப்பெண் மணி பதற்றத்துடன்.
அதற்குள் பக்கத்தில் இருந்தவர்களில் ஒருவர் தண்ணீர் வாங்கி வந்து, அந்த பெரியவரை நிமிர்த்தி முகத்தில் நீரால் அறைந்தார். சலனமின்றி சரிந்த நிலையில் இருந்தது அவர் முகம். கூட்டம் குசுகுசுத்தது “ ஆள் இருக்காரா… இல்ல.. போயிட்டாரா?.. தெரியலையே? என ஆளுக்கொரு கருத்து கணிப்பு.
அந்த பெண்மணியின் உள்ளம் கலவரத்திற்கு உள்ளாகி தனது கணவரை மீண்டும் தவிப்போடு எழுப்ப முயற்சித்தாள். அவளே ஒரு நோயாளி போல் இருந்தார். வயது அறுபத்தைந்து தாண்டி இருக்கும், பருத்த உடல், இரு பாதங்களும் வீங்கி இருந்தது, அருகே சிறுநீர் சேகரிக்கும் பையில் அவளது சிறுநீர் தேங்கி இருப்பதை பார்க்க முடிந்தது. “ என்னங்க!.. என்னங்க.. என கலங்கியபடி தழுதழுத்த குரலோடு பின்சீட்டில் இருந்து அந்த மனிதரை உலுக்கினாள். அவர்களது காருக்கு பின்னால் நின்றிருந்த வாகனக்கூட்டம் ஹாரனை அலற விட்டபடியே இருந்தன. நிலைமையின் தர்மசங்கடத்தை புரிந்து கொண்டு ஆனந்த் விரைந்து செயல்பட்டான். அவரை பிறகு எழுப்பலாம்! முதலில் காரை இந்த இடத்தில் இருந்து நகர்த்த வேண்டும் என்றபடி காருக்குள் கைகளை விட்டு கியரை சமநிலையில் வைத்தான். பின்பு சுற்றி இருந்தவர்களின் உதவியோடு காரை தள்ளி சாலையின் ஓரத்திற்கு கொண்டு வந்து அருகே இருந்த மரத்தடியில் நிறுத்தினான். இப்பொழுது வாகனங்கள், மடை திறந்த வெள்ளம் போல ஒடத்துவங்கின.
ஆனந்த் அந்த மனிதரின் கையை பிடித்து பார்த்தான். நாடித் துடிப்பு இருந்தது. அருகில் இருந்தவரிடம் தண்ணீர் வாங்கி மறுமுயற்சியாய் அவரது முகத்தில் பலமாக இருமுறை தெளித்தான்.. அவரது கன்னத்தை நன்கு தட்டியபடி “ ஐயா இங்கே பாருங்க! கண்னை திறங்க…!” என்று அவரது காதருகில் கத்தினான். அவரது முகத்தில் சலனம் தெரிந்தது. கண்களை லேசாக திறக்க முயன்றார்.
பின்னால் இருந்த அவரது மனைவியிடம் “ இவர் சுகர் பேஷண்டாமா?” என்றான். “ஆமா தம்பி! நாங்க ரெண்டு பேருமே சுகர் பேஷண்ட்ஸ் தான்பா! ஆனால் இன்சுலின் கரெக்டா போடுக்குவோம்! என்றாள் வெகுளி யாக. இது “ லோ சுகர் மா” அதான் மயங்கிட்டார்” என்றான் பெருமூச்சுடன்.
ஆனந்த பக்கத்தில் இருந்த மளிகை கடைக்கு சென்று இரண்டு மிட்டாய் வாங்கி வந்தான். அதை அந்த பெரியவரின் வாயில் திணித்து “ ஐயா! இதை சப்பி சாப்பிடுங்க என்றான் அவரை உலுக்கியபடி.. அவர் மெல்ல அந்த மிட்டாயை வாயில் அசைபோட்டார். சற்று நேரத்தில் ஓரளவு தெளிவானார். அவரது மனைவியின் முகம் பதற்றம் குறைந்து சற்று நிம்மதி அடைந்தது. அவள் ஆனந்திடம் கைகூப்பி நன்றி சொன்னாள் “ நல்ல நேரத்திலே வந்து உதவி செஞ்சிங்க தம்பி! ரொம்ப தேங்க்ஸ் பா! என்ற அப்பெண்மணியிடம் “ பரவாயில்லை மா! இது சாதாரண விஷயம்! நீங்க உடம்பை பார்த்துக்கோங்க! நான் கிளம்புறேன்.. பார்த்து பொறுமையா போங்க … என்றபடி விடைபெற்றான். தனது பைக்கை நோக்கி நடக்க துவங்கும் போது அந்த பெண்மணி அவனை அழைத்தார் “தம்பி ஒரு நிமிஷம்!” என்றாள் கார் ஜன்னலின் வெளியே தலை நீட்டியபடி.
அவன் “ சொல்லுங்கம்மா” என்றபடி அவரருகே வந்தான். அவள் தயங்கிய படி “நீங்க கார் ஓட்டுவிங்களா? என்றாள்.
தலையை ஆமாம் என அசைத்தபடி “ஓட்டுவேன்.. என்ன விஷயம்னு சொல்லுங்க!” என்றான்.
அப்பெண்மணி மேலும் தயங்கியபடி “இந்த நிலைமையில் இவரால் கார் ஓட்ட முடியாது!.. நீங்க தப்பா எடுத்துக்கலைன்ன? ஒரு உதவி செய்றிங்களா? ரெண்டு ஸ்டாப்பிங் தள்ளிதான் எங்க வீடு…நீங்க கொஞ்சம் காரை ஓட்டி வந்து எங்களை வீட்டில விடமுடியுமா? என்றாள்.
ஆனந்த் பெருமூச்சு விட்டபடி கைக்கடிகாரத்தை பார்த்தான். நேரம் காலை 10:30 ஐ தாண்டி இருந்தது. ஏற்கனவே 35 நிமிடங்கள் லேட். ம்ஹூம்! ஆபீஸில் ஏதாவது காரணம் சொல்லிக் கொள்ள வேண்டியது தான் என எண்ணியபடி “ சரி வரேன்.. இருங்க! என்றான். பிறகு தனது பைக்கை நோக்கி நடந்தான். அதை மளிகைக்கடை அருகே ஓரம்கட்டி நிறுத்தி லாக் செய்தான். பிறகு காரின் டிரைவிங் சீட் அருகே வந்தான். அந்த பெரியவர் மிகுந்த சோர்வுடன் அவனை பார்த்தார் “ ஐயா நீங்க எழுந்து வந்து பக்கத்து சீட்டில் உட்கார்ந்து கோங்க” என அவரை வெளியே கைத்தாங்கலாக அழைத்து வந்து பக்கத்து சீட்டில் அமர வைத்தான். கதவை லாக் செய்து காரின் சாவியை திருகி இன்ஜினை உயிர்ப்பித்தான். அந்த பெண்மணியிடம் அவர்களது வீட்டிற்கு செல்லும் வழியை தெரிந்து கொண்டு, கியர்களை மாற்றி காரை ஓட்டத்துவங்கினான்.
கார் அந்த பங்களா வீட்டிற்குள் நுழைந்தது. ஆனந்த் சற்றே வியப்புடன் அந்த வீட்டை பார்த்தபடி காரை போர்டிக்கோவில் நிறுத்தினான். அவன் அந்த பெண்மணி காரிலிருந்து இறங்குவதற்கு உதவினான். அவள் ஒரு கையில் யூரின் பேக்கை பிடித்து கொண்டு மறுகையை ஆனந்தின் கையை பற்றியவாறு இறங்கினாள். அவள் தன்னிடம் இருந்த சாவியால் வீட்டுக்கதவை திறந்தாள்.
அதற்குள் அந்த வீட்டின் வாட்ச்மேன் ஓடி வந்தான். அந்த பெண்மணி அவனை பார்த்து கோபமாய் “ எங்கய்யா போயிருந்த ? கேட்டை தொறந்து போட்டு…என்றாள். அவன் தலையை சொறிந்தபடி “ பக்கத்து டீக்கடைக்கு போயிருந்தேன் மா” என்றான். அவள் அவனை முறைத்தாள் பின்பு “ சரி சரி! ஐயாவை காரிலிருந்து வீட்டிற்குள் கூட்டிவர இவருக்கு உதவி செய்” என்றாள். அவள் நோயாளி யாக இருந்தாலும், யூரின் பையை கையில் பிடித்தபடி நின்று கொண்டு, சற்றும் குறையாத அதிகாரத்துவத்தோடு அவள் பேசியது ஆனந்திற்கு வியப்பாக இருந்தது. அவனும் அந்த வாட்ச்மேனும் சேர்ந்து அந்த பெரியவரை கைத்தாங்கலாக வீட்டிற்குள் அழைத்து சென்று ஹாலில் இருந்த சோஃபாவில் உட்கார வைத்தனர். “ நீங்களும் உட்காருங்க தம்பி! ஒரு நிமிஷம் இருங்க! கூல்டிரிங்ஸ் வாங்கி வரச் சொல்றேன் என வாட்ச்மேனை கடைக்கு அனுப்பினாள்.
அந்த பெரியவர் களைப்புடன் சோஃபாவில் சரிந்து படுத்துக் கொண்டார். ஆனந்த் வீட்டை கவனித்தான். வீடு விஸ்தாரமானதாகவும் ஆடம்பர அலங்காரத்துடன் வசதியாக காணப்பட்டது. எதிர் சுவரில் இரண்டு பெரிய புகைப்படங்கள் ஃப்ரேம் செய்து மாட்டப்பட்டிருக்கும். அவன் அவற்றை கவனிப்பதை கண்டு அப்பெண்மணி பேசத் துவங்கினாள் “அந்த வலது பக்கம் இருக்கிற ஃபோட்டோவில் இருப்பது., எங்க மகன், மருமகள், பேரன். அவங்க கனடாவில் இருக்காங்க! இந்த பக்கம் இருக்கிற ஃபோட்டோவில் இருப்பது எங்க பொண்ணு, மருமகன், பேத்திகள். அவங்க ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆயிட்டாங்க! என்றாள் பெருமையாக. அவனுக்கு அந்த பெண்மணியை பார்க்கும் போது பரிதாபம் தான் வந்தது. வயதான காலத்தில், நோயில் தவிக்கும் போது கவனிக்க பக்கத்தில் பிள்ளைகள் இல்லாத இந்த நேரத்திலும், தனது பிள்ளைகளின் வெளிநாட்டு புராணம் பேசிக் கொண்டு இருக்கும் இவர்களை என்னவென்று சொல்வது என மனதுக்குள் நொந்து கொண்டான்.
அத்தருணத்தில் தான் அந்த வயதான பெண் வீட்டின் உள்ளே நுழைந்தாள். ஒல்லியான தேகம், நரை பரவிய முதுமை முகத்தில் சுருக்கங்களாக வெளிப்பட்டன. சற்று பயத்துடனும் பதற்றத்துடனும் தென்பட்டாள். அவளை கண்டதும் இந்த பெண்மணியின் முகம் கடுமையானது. கோபத்தோடு கேள்வி கேட்டாள் “ இது தான் நீ வேலைக்கு வர டைம்மா? ஏம்மா ? நாலு நாளா எங்க ஆளையே காணோம்? இப்படி வேலை பார்த்த எப்படி நான் உனக்கு சம்பளம் தரது? என்று கேள்விகளை அடுக்கினாள். ஆனந்திற்கு புரிந்து போனது அவள் வேலைக்காரப் பெண் என்று. அவளை பார்க்க பாவமாக இருந்தது அவளும் வயோதிக பெண் தான் அவள் ஏழை என்பதால் வேலைக்காரி! இந்தம்மா பணக்காரர் என்பதால் எஜமானி அவ்வளவு தான் வித்தியாசம். இருவருமே முதுமை என்கிற காலத்தின் கடைசி படிக்கட்டுகளில் இருப்பவர்கள் தான். தலைகுனிந்து நின்ற அவ்வேலைகார பெண்ணிடம் மீண்டும் அதட்டினார் எஜமானியம்மா.,
“என்னம்மா ? பதிலையே காணோம்?”
“இல்லிங்கம்மா! நாலு நாளா எந்திரிக்க முடியாத அளவுக்கு காய்ச்சல்… சாப்பிட கூட முடியல..
எம்மருமவள் தான் கஞ்சி காய்ச்சி கொடுத்துச்சு! எம் மகன் ரெண்டு நாளா டாக்டர் கிட்ட கூட்டிபோய் ஊசி போட்டு வந்துச்சு!.. அதனால் தான் இன்னிக்கி கொஞ்சம் உடம்பு பரவயில்லைன்னு வேலைக்கு வந்தேன்! என்று தழுதழுத்த குரலில் சொன்னாள் அந்த வேலைக்காரப் பெண். அந்த எஜமானியின் முகம் வாடிப்போனது . அந்த நொடியில் அவளது அதிகாரமனம் சுருங்கி உள்ளுக்குள் ஒளிந்து கொண்டது. எதிரே நிற்கும் அந்த வேலைக்காரப் பெண்மணி ஒரு செல்வந்தர் போலவும் அவளுக்கு முன்னால் தான் ஒரு ஆதரவற்ற அனாதை போலவும் எண்ணினாள். மெளனமாய் தலைகுனிந்து யோசித்தார். பின்பு நிமிர்ந்து நிதானமாக பேசினாள் “ உள்ளே கொஞ்சம் பாத்திரம் இருக்கு… அதை கழுவிட்டு… இந்த வீட்டை துடைச்சு விட்டு வா.. உன்னோட சம்பள பாக்கியை எடுத்து வைக்கிறேன்! வாங்கிக்கோ! நாளைல இருந்து நீ வேலைக்கு வர வேண்டாம்! என்றாள் தீர்க்கமாக. மேற்கொண்டு சமாதானப்படுத்த முயன்ற அப்பெண்ணிடம் கண்ணை மூடிக்கொண்டு கையை போதும் என காட்டி, “ சொன்னதை செஞ்சுட்டு காசு வாங்கிட்டு போம்மா! என்றாள் கடுமையுடன். அப்படியே கண்மூடி சோஃபாவில் தலை சாய்த்து கொண்டாள். ஆனந்த் வெறுப்புடன் எழுந்து கொண்டு “ நான் கிளம்புறேன் மா” என்றபடி நகர்ந்தான். “ இருங்க தம்பி! கூல்ரிங்க்ஸ் சாப்பிட்டு போகலாம்” என்றாள்.
“அதை ஐயாவிற்கு கொடுங்க! அவர் தான் ரொம்ப களைப்பா இருக்கார்” என்றபடி வெளியேறினான். ஒரு வகையில் ஆனந்திற்கு அவர்களை பார்க்கும் போது இயந்திர குதிரைகளை பெற்று வெளிநாட்டில் விட்டு விட்டு இறுதி காலத்தை நோக்கி காத்து கொண்டு உதிர தாயாராக இருக்கும் சாம்பல் குதிரைகளை போல் தோற்றமளித்தனர்.
--------------------------++++------------------------
எஸ். ஜெயப்பிரகாஷ்
( புனைப்பெயர்: ஆதிரன் )
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்