இரா. தங்கப்பாண்டியன்.
சிறுகதை வரிசை எண்
# 188
நூறு யுகங்களின் அடிமைப் பொழுது….
-இரா. தங்கப்பாண்டியன்.
பாதி பூத்தும் பாதி பூக்காமலுமிருக்கும் வேப்ப மரத்தினடியில் நாராயணசாமி நின்றிருந்தார். நான் அவர் பக்கத்தில் சென்றேன். மரத்தையே அன்னாந்து பார்த்துக் கொண்டிருந்தார். எதைப் பார்க்கிறார் என்று நானும் உற்றுப் பார்த்தேன். ஒன்றும் தெரியவில்லை.
"அப்பிடி என்னத்த பாக்குறீங்க நாராயணா " என்றேன்.
"நம்ம பொழப்பு தெரியுதான்னு பாக்கேன்" என்றார்.
நான் ஒன்றும் பேசவில்லை. இருவரும் பேசிக்கொள்ளாமலே நின்றிருந்தோம். லேசாக மாலை நேரக்காற்று வீசத் தொடங்கியது. வெள்ளை நிறப் பூக்கள் உதிரத் தொடங்கின.
" இப்பிடி கண்ணுக்குத் தெரியாம நம்ம பொழப்பும் உதிந்து போயிருமோ.... என்ன பொழப்பு இந்த ஈத்தரப் பொழப்பு" என்று சலிப்போடு பேசினார்.
என்னிடம் பதிலோ வார்த்தைகளோ இல்லாததால் அமைதியாய் நின்றிருந்தேன்.
மாலை மஞ்சள் வெயில் அடித்துக் கொண்டிருந்தது. காற்றும் இதமாக வீசிக்கொண்டிருந்தது. மனப்பாரத்தைக் குறைக்க ஆளுக்கொரு தேநீர் குடித்தால் நல்லது எனத் தோன்றியது.
"கேண்டீன் போகலாமா"
"ம்"என்ற பதிலோடு பின் தொடர்ந்தார்.
நாங்களிருவரும் கொஞ்சம் நடந்திருப்போம். அதற்குள் அலுவலக உதவியாளர் ஓடி வந்தார். "சார் உங்க ரெண்டு பேரையும் அய்யா கூப்பிடுறாங்க” என்றார்.
“இப்ப வரைக்கும் உள்ளதான இருந்தோம். ஒன்னும் சொல்லலையே…” என்று நாராயணசாமி சொன்னார்.
“என்னமோ மெயில் வந்திருக்காம் அதான் கூப்பிடுறாங்க. நீங்க டீ சாப்பிட்டுக்கூட வாங்க. நான் அய்யாகிட்ட சொல்லிடுறேன்” என்றார்.
நான் கேண்டீன் நோக்கி நடந்தேன். “வாங்க அவரிட்ட பேசிட்டு பெறகு கேண்டீன் போகலாம். அவர் எதையாவது வச்சிக்கிட்டுப் பேசுவாரு.” என்றார் நாராயணசாமி.
இருவரும் அலுவலகம் சென்றோம்.
கோபமில்லாத ராஜா... சம்பளமில்லா மந்திரி.. இந்த வார்த்தையை எனது சின்ன வயதிலிருந்தே கேட்டு வருகிறேன். தன்னுடைய வேலையாட்களுக்கு ஊதியம் தராதவன் அவர்களைக் கடிந்து பேசமாட்டான் என்று இதற்கு அர்த்தமாம்.
சம்பளமே இல்லையென்றால் எப்படி வேலை செய்வார்கள்? பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலுவிடம் சூர்யாவும் விஜய்யும் வேலை செய்வார்களே அந்த மாதிரியா..? சம்பளமே தராத வேலையும் சரியா..? சம்பளமே வாங்காமல் இருப்பதும் சரியா..? என்ற. மன விவாதங்களோடே கடந்த மூன்று மாதங்களாகப் பயணித்துக் கொண்டிருக்கிறேன்..
சின்ன வயதில் பள்ளி விடுமுறை நாட்களில் ஏதாவதொரு தொழிலைக் கற்றுக் கொள்ளட்டும் என்று என்னையும் என் தம்பியையும் டெய்லர் கடையில் காஜா போட்டுப் பழக அனுப்புவார்கள். நான் இதுவரையில் காஜாவோ பட்டனோ போட்டுப் பழகவே இல்லை. இதுக்குக் காரணம் அந்த டெய்லர்தான். அவரோட எல்லா சொந்த வேலையும் எங்ககிட்டதான் வாங்குவார். ஆனால் காஜா போடச்சொல்லித்தர மாட்டார். ராத்திரி எட்டு மணிக்குக் கடையை அடைக்கும் போது அங்கே வேலை செய்கிறவர்களுக்கெல்லாம் சம்பளம் தருவார். மறந்தும்கூட எங்களுக்கு ஐந்து பைசாவைக் கூட கண்ணில் காட்டியதில்லை. எங்க வீட்டில் உள்ளோரின் தொந்தரவு தாங்காமல் நானும் என் தம்பியும் அவரது கடைக்குப் போய் வந்து கொண்டிருந்தோம். அப்போதெல்லாம் பள்ளி விடுமுறை விட்டாலே எரிச்சலாக இருக்கும். வழக்கமான சனி ஞாயிறு லீவுலேயும் எங்கய்யா எங்களைச் சும்மா இருக்க விடமாட்டாரு. அந்த டெய்லர் கடைக்கு அனுப்புவார். டெய்லரும் எங்கய்யாவும் நண்பர்கள். அதனால் எங்களுக்கு டெய்லரைக் கண்டாலே பிடிக்காது.
அதற்கடுத்து கொஞ்சம் வளர்ந்த பின் ஏழாம் வகுப்புப் படிக்கும் போது என்னுடைய நண்பர்களோடு சேர்ந்து கட்டிட வேலைக்குச் சித்தாளாகச் சென்றேன். அந்த நாட்கள் இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. நான் வேலை செய்த கொத்தனார் பெயர் போஸ். முதல் நாள் வேலை செய்த அன்று மாலை வேலை முடிந்து வரும் போது டீக்கடையில் மிக்சரும் டீயும் வாங்கிக் கொடுத்து மூன்று ரூபாய் சம்பளம் கொடுத்தார்.
"தம்பி நாளைக்கும் வந்திரு. இன்னும் ஒரு வாரத்திக்கு இங்கதான் வேல." என்று போஸண்ணன் சொன்னார்.
"டெய்லியும் மிச்சர் டீ வாங்கிக் குடுப்பீங்களாண்ணே...." என்று நான் கேட்டேன்.
பக்கத்தில் பீடி குடித்துக் கொண்டிருந்த முருகேஸண்ணன் சிரித்துக் கொண்டே என் முதுகில் தட்டினார்.
"வாடா... நாளைக்கு லட்டு திங்கலாம்" என்றார் போஸண்ணன்.
அந்த லீவு முழுவதும் போஸண்ணனோடு வேலை செய்தேன்.
மற்ற கொத்தனார்களை விட போஸண்ணன் சம்பளத்தை சரியா குடுத்திருவார். இந்த லீவில் 50 ரூபாய் மிச்சம் வைத்தேன். என்னுடைய முதல் சேமிப்பு அதுதான். அதற்குப் பிறகு ஒவ்வொரு விடுமுறையிலும் கட்டிட வேலைக்குச் சென்றேன். கொஞ்சங்கொஞ்சமாய் தொழில் கற்றுக் கொண்டேன். கட்டிடம் கட்டுவதில் பாதி தெரிந்த அரைக் கொத்தனாராக நான் வாங்கிய சம்பளம் தினசரி 130. அப்ப என்னோட வயசு 17. பள்ளி இறுதித் தேர்வு எழுதிட்டு அந்த விடுமுறை முழுவதும் போஸண்ணன் கூடவே வேலைக்குப் போனேன். தேனிக்குப் பக்கத்தில் ரத்தினம் நகர்ல புதுசா ஒரு வீட்டு வேலைக்கு அங்கேயே தங்கியிருந்து வேலை செய்தோம். ஒவ்வொரு நாளும் எல்லோருக்கும் கொடுக்கிற சம்பள விபரம், சாப்பாடு, டீ செலவு விபரம், வீட்டு ஓனர்கிட்டே பணம் வாங்குற விபரம் இப்பிடி எல்லாக் கணக்கும் நான் தான் எழுதுவேன்.
“டேய் தம்பி. நீ என் கூடவே இருடா. எனக்கும் கணக்கு வழக்குப் பார்க்க ஒரு ஆள் வேணும்” என்று போஸண்ணன் சொன்னாலும் நான் கல்லூரியில் சேர வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தேன். இந்த லீவில் ரெண்டாயிரம் ரூபாய் மிச்சம் வைத்தேன். அந்தப் பணத்தில்தான் கல்லூரியில் சேர்ந்தேன். கல்லூரில் சேர்ந்து படித்த காலத்திலும் விடுமுறையில் போஸண்ணன் கூட வேலைக்குப் போனேன்.
“முருகேசா இவனுக்கு ரெம்ப கஸ்டமான வேலையத்தராதே….. காலேசு படிக்கிறவன்டா….” என்று போஸண்ணன் சொன்னாலும் முருகேசன் எனக்கு கஸ்டமான வேலையைத் தான் கொடுப்பார். கல்லூரியில் படிப்பு முடியும் வரையில் போஸண்ணனோடே வேலை பார்த்தேன். நான் கடைசியா அவர்கிட்ட வாங்குன சம்பளம் தினசரி 350. என்னோட எல்லா செலவும் போக வீட்டுக்கும் பணம் குடுத்தேன்.
அப்புறம் நம்ம ரூட்டே மாறி இப்ப ஆபிசராயிட்டோம்(?). நான் அஞ்சலகத்தில் தற்காலிகமாகப் பணியாற்றத் தொடங்கி, அப்புறம் தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றி அப்புறம் இப்ப இருக்குற இந்த கவுர்மெண்ட் ஆபீசர் வேலைக்குப் பரீரீட்சை எழுதி வந்த இந்த 27 வருட வாழ்வில் ஊதியமில்லா மாதங்கள் இந்த மாதங்கள் தான். முன்று மாதங்களாகச் சம்பளம் போடலை. நானும் நாராயணசாமியும் சம்பளம் இல்லாம வேலை பாக்குறோம்.
”என்ன நாராயணசாமி இந்த மாசமும் சம்பளம் போடச் சொல்லி உத்தரவு வரலை. என்ன செய்யப் போறீங்க..?” என்று மேலதிகாரி கேட்ட பிறகுதான் நான் பழைய நினைவிலிருந்து வெளியில் வந்தேன்.
“சம்பளம் தரக்கூடாதுன்னு உங்களுக்கு தபாலே வரலைங்க சார். நீங்கதான் நிறுத்தி வச்சிங்க. மற்ற மாவட்டத்துல சம்பளம் போட்டுட்டு இருக்காங்க. நீங்க பிடிவாதமா இருக்கீங்க. இந்த மூனு மாசத்தல நாங்க ரெண்டு பேரும் சம்பளம் இல்லாட்டியும் எங்க வேலையில குறை வைக்கலையே… சம்பளத்தைப் போடுங்க சார்.” என்று நாராயணசாமி சற்றே குரலை உயர்த்திப் பேசினார்.
“நானா மாட்டேன்னு சொல்றேன். ஜி்எம் சொல்லுறதை நான் எப்பிடி மீற முடியும்?” என்றார்.
“சரிங்க சார் நீங்க அவங்க பேச்சை மீற வேணாம். அதே நேரத்துல சம்பளம் போடக்கூடாதுன்னு எழுத்துப்பூர்வமா லெட்டர் குடுங்க.” என்று நான் கேட்டேன்.
“என்னய்யா என்கிட்ட கலாட்டா பண்ணுற நோக்கத்துல பேசுறே..” என்று குரல் உயர்த்தினார்.
“கலாட்டா பண்ணல சார். மற்ற மாவட்டத்துல சம்பளம் குடுக்குறாங்க. நீங்களும் குடுக்கணும். இதுதானே நடைமுறை” என்று நாராயணசாமி சொன்னார்.
“அதெல்லாம் நீங்க கேட்கக் கூடாது. மத்த மாவட்டங்கள் வேற நான் வேற. அதே மாதிரி நீங்க ஒப்பந்தப் பணியாளர்கள் தானே….. எல்லா மாவட்டங்கள்ல இருக்குற ஒரே மாதிரியான விதி ஒங்களுக்குப் பொருந்தாது. ஒங்களுக்கு சம்பளம் எப்பிடிக் குடுக்கணும்னு நான்தான் முடிவு செய்யணும். நீங்க கவுர்மெண்ட எதிர்த்து கோர்ட்டுக்கு போயிருக்கிங்க. இது தப்பில்லையா..? ஜிஎம். எங்கிட்ட ரெம்ப வருத்தப்பட்டு பேசினாங்க. அவங்களோட பேச்சைத்தான் நான் கேட்பேன்” என்றார்.
“சார் நாங்க கோர்ட்டுக்குப் போயிருக்கிறது உங்கள எதிர்த்து இல்லை. எங்க உரிமைகளுக்காக. ஏன் நீங்களும் உங்களோட புரோமசனுக்கு கோர்ட்டுக்குப் போகலாயா…? ஜிஎம். நமக்குள்ள பிரச்சினையை உருவாக்குறாங்க. இதை மத்த மாவட்டங்கள்ல பெரிசா எடுத்துக்கல. அவங்க போன்ல பேசுனதை எழுத்துப் பூர்வமா குடுக்கட்டும் அப்புறம் பாத்துக்கலாம்னு சம்பளத்தைக் குடுத்துட்டாங்க. நீங்கதான சார் எங்க ரெண்டு பேருக்கும் சம்பளம் போடலை” நாராயணசாமி இன்னும் கோபமாகப் பேசினார்.
இப்போது உயர் அதிகாரி அமைதியானார். ஏதோ ஒரு கோப்பில் கையெழுத்திட்டார். பெல் அடித்து உதவியாளரைக் கூப்பிட்டு கோப்பை எடுத்துக் கொண்டு போகச் சொன்னார். தண்ணீர் குடித்தார்.
“ டீ குடிக்கலாமா..?” என்றார்.
“இல்லைங்க சார் நாங்க இப்பத்தான் கேண்டீன்ல குடிச்சோம்” என்றேன்.
“உங்களுக்கு சம்பளம் குடுக்காம வேலையை மட்டும் குடுக்க எனக்கு மனசில்லை. அதனால நீங்க நாளையில இருந்து ஆபீஸ் வர வேணாம். சம்பளம் குடுத்த பெறகு ஆபீஸ் வந்தா போதும்” என்று அமைதியாகச் சொன்னார்.
“இதை எழுத்துப் பூர்வமா குடுங்க சார்” என்றார் நாராயணசாமி.
“அதெப்பிடி தர முடியும்.?”
“அப்ப நாங்களா வேலைக்கு வராம இருந்துட்டோம்னு காரணம்க காட்ட திட்டம் தீட்டுறீங்களா..?நாங்க வேலைக்கு வராம இருக்க மாட்டோம். வேலைக்கு வரச் சொல்லி பணி நியமன ஆணை குடுத்தது கவுர்மெண்ட். வர வேணாம்னா அதையே ஆணையா குடுங்க. அது வரைக்கும் வேலைக்கு வருவோம்.”என்றேன்.
நீண்ட மௌனத்திற்குப் பின்“ சரி நீங்க போகலாம்” என்றார். நாங்களிருவரும் எழுந்து வெளியே வந்தோம். அலுவலகம் முடிந்து ஒவ்வொருவராகப் புறப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.
மாதாந்திர ஊதியம் வாங்கும் பலருக்கும் இருக்கும் ஒரே நிம்மதி ஒண்ணாந்தேதியானா சம்பளம் வந்திரும் என்பதே. அதே போல ஒப்பந்தப் பணியாளர்களுக்கும் பிரச்சினையும் இது தான். நான் இந்த வேலைக்குச் சேர்ந்த பிறகு தினுசு தினுசாய் பல அதிகாரிப் பெருமக்களிடம் பணியாற்றி விட்டேன். சரியா வேலை செய்யலைன்னா மெமோ குடுத்திருவேன். ரிலிவிங் ஆர்டர் குடுத்திடுவேன். டி.ஏ. குடுக்க மாட்டேன். என்று மிரட்டிய நபர்களே அதிகம். இதற்கு முன் வேலை பார்த்த மாவட்டங்களில் பயணப்படியை நிறுத்தி வைப்பார்கள். ஏதாவது பண்டிகை காலங்களில் மொத்தமாகக் கொடுத்து விடுவார்கள். ஆனால் சம்பளம் போடாமல் யாரும் நிறுத்தவில்லை. முதல் முறையாக தொடர்ந்து மூன்று மாதங்களாக ஊதியமின்றி நிற்கிறேன்.
மாவட்டம் விட்டு மாவட்டம் மாறிப் பணியாற்றும் எனது பணிச் சூழலில் இதற்கு முந்திய மாவட்டங்களில் எல்லாம் உள்ளூர் பயணப்படியை அந்தந்த மாதமே வழங்கிடுவார்கள். சென்னைக்குச் செல்லும் பயணப்படியும் செலவினப் பட்டியல் கொடுத்த ஓரிரு நாட்களிலேயே கிடைத்து விடும். பயணப்படியை வைத்தே வெளியூர் செலவினங்களை ஈடு செய்து விடுவேன். இப்போது வேலை பார்க்கும் மாவட்டம் வித்தியாசமான நிர்வாக முறையில் உள்ளது. பயணப்படியை மட்டுமல்ல ஆண்டுக்கொருமுறை உயரும் 3% ஊதிய உயர்வைக் கூட போராடியே வாங்க வேண்டிய நிலை உள்ளது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறைதான் பயணப் படி கிடைக்கிறது. ஊதியம் வழங்கும் பிரிவு எழுத்தர்கள் எல்லோரும் நிரந்தரப் பணியாளர்களாக இருப்பதால் எதுவும் கேட்க முடிவதில்லை. 97% தற்காலிகப் பணியாளர்களை வைத்தே நடைமுறைப் படுத்தப்படும் ஒரு திட்டத்தில் 3% உள்ள நிரந்தரப் பணியாளர்கள் பணி நிலையும் மனநிலையும்தான் மற்றவர்களின் வாழ்வைத் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதே விந்தையான வேதனை
இதற்கு முன் என் சகப் பணியாளர்கள் மூன்று பேருக்கு ஒரு மாவட்டத்தில் எட்டு மாதங்கள் ஊதியம் வழங்காமல் வேலையை மட்டும் வாங்கினார்கள். அந்த எட்டு மாத காலத்தில் அவர்கள் அடைந்த துயரம் சொல்லி மாள முடியாதவை. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு முதலமைச்சரிடம் நேரில் மனுக்கொடுத்த பின்பே ஊதியம் கிடைத்தது. இப்போதும் எங்களுக்கு அந்த நிலை ஏற்பட்டுள்ளது. பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்தப் பணியாளர்களாகப் பணியாற்றுபவர்களை காலமுறை ஊதியம் வழங்கி நிரந்தரப் பணியாளர்களாக நிலை உயர்த்தப்படும் என்ற அரசின் அறிவிப்பை எங்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.
அடுத்த நாளே எங்களது ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் புதிய விதிகளையும் சேர்த்து அதை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்கள். நாங்கள் நீதி மன்றம் சென்றுள்ளோம். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சில மாவட்டங்களில் ஊதியத்தை நிறுத்தியுள்ளார்கள்
முற்போக்கு இலக்கிய அமைப்புகளோடும் தொழிற்சங்கத் தலைவர்களோடும் கலந்துரையாடும் போது அவர்கள் தங்களுடைய போராட்ட காலங்களைச் சொல்லச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
இருபதாண்டுகளுக்கு முன் மதுரையில் உள்ள ஒரு பத்திரிகை அலுவலத்தில் ஒரு தோழரை சிற்றிதழுக்காக நேர்காணல் செய்தோம். கருவூலப் பணியாளராகத் தொடங்கிய தனது அரசூழியர் வாழ்வில், போராட்ட காலங்களில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வருமானமின்றியும், வேறு வேலைக்குச் செல்ல முடியாமலும் அல்லல்பட்ட காலங்களை அவர் வேதனையோடு பகிர்ந்தார். ஒரு பின்னிரவு வேளையில் வெண்மணி இதயகீதன் சுதந்திரனோடு போன்ற தோழர்களோடு நானும் கலந்து கொண்ட அந்த நேர்காணல் மிகச் சிறந்த நேர்காணல். போராட்டகாலங்களில் அரசு ஊழியராகவும் இலக்கியச் செயல்பாட்டாளராகவும் இருப்பவர்களின் நிலையை ஆக்ரோஷமாக அவர் விவரித்தது இன்னும் மனதில் நிழலாடுகிறது.
நாங்கள் பள்ளியில் பயின்ற காலங்கள் ஆசிரியர்கள் குறைந்த சம்பளம் வாங்கிய காலங்கள். 1989க்கு முந்திய ஆண்டுகளில் அவர்களின் மாதாந்திரப் போராட்டத்தை நான் அறிந்தவன். ராமசாமி வாத்தியார் மைக்செட் போடுவதற்கு சனி ஞாயிறுகளில் செல்வார். பள்ளி முடிந்த பின் ராத்திரி 11 மணி வரையில் பருத்தி வியாபாரிகளுக்கு கணக்கு எழுதித்தான் தன்னுடைய பிள்ளைகளை கரை சேர்த்தார் கணக்கு வாத்தியார்.
நான் வாங்கும் இந்த ஊதியத்தை வைத்தே குடும்பம் ஓடிக் கொண்டிருந்த நிலையில் நான்காண்டுகளுக்கு முன் என் துணைவியார் வேலைக்குப் போறேன் என்று சொன்ன போது மறுக்காமல் சம்மதித்தேன். பிள்ளைகளைத் தமிழ்வழிக் கல்வியில் படிக்க வைத்ததால் கல்விச் செலவு இல்லை என்றாலும் வீட்டுக் கடன் என்னை அச்சுறுத்திக் கொண்டே இருந்ததால் இன்னொரு வருமானம் தேவைப்பட்டது.
இந்த நான்காண்டுகளில் ஏற்பட்ட விலைவாசி ஏற்றமும் மகனின் கல்லூரிக் கட்டணமும் துணைவியாரின் ஊதியத்தாலே ஈடு செய்யப்பட்டது. இந்த மாதத்தில் இரண்டு முறை சென்னைக்கு வழக்கு தொடர்பாகச் சென்று திரும்பி விட்டேன். முன்பதிவு பயணத்தையே வழக்கமாக வைத்திருந்த நான் முன் பதிவில்லா பயணங்களுக்கு என்னைப் பழக்கிக் கொண்டேன். எனக்கான செலவுகளையெல்லாம் சுருக்கிக் கொண்டேன். அப்படியிருந்தும் கடன் வாங்காமல் பொழுது நகரவில்லை. இம்மாதம் சம்பளம் இல்லாவிட்டால் அடுத்த மாதம் கடன் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. வேறு வேலைக்கு போகும் தைரியமும் இல்லை.
”என்ன பலமான யோசனையா இருக்கு?” என்று நாராயணசாமி கேட்ட பிறகே இயல்புக்கு வந்தேன். “ஒன்னுமில்லை நாராயணா“ என்றேன். “சரி நாளைக்கு யோசிப்போம். ரூம்புக்குப் போயிட்டு வாங்க” என்றார். “நாளைக்கு காலையில என்ன செய்யலாம்,?” என்றேன். “நீங்க வாங்க சார். பாத்துக்கலாம்.” என்று சொல்லி விட்டுப் புறப்பட்டார்.
“என்னங்க சொல்றீங்க. மூனு மாசமா சம்பளம் தரலையா..?” மாவட்ட ஆட்சியர் கோபத்தோடு கேட்டார். “ஆமாங்க சார்“ என்றார். நாராயணசாமி.
”இதை ஏன் எங்கிட்டசொல்லலை?” என்று கேட்டுக் கொண்டே பெல் அடித்தார். உதவியாளர் வந்ததும் ” இவங்க ஆபீசரைக் கூப்பிடுங்க” என்றார். ”நீங்க வெளியில வெயிட் பண்ணுங்க” என்றார். நாங்கள் வெளியே காத்திருந்தோம்.
சரியாக 9.45க்கு அலுவலகம் வந்துவிடும் வழக்கம் எங்களுடையது. நாங்கள் இருவரும் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டு, மாவட்ட ஆட்சியரைப் பார்க்கச் சென்றோம். காலையில் கூட்டமில்லாததால் சீக்கிரமே அனுமதி கிடைத்தது. எங்களுக்குப் பின் அலுவலகம் வந்த அதிகாரிக்கு நாங்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க வந்த விசயம் தெரிந்ததும் எங்களுடைய கோப்பைத் தேடி எடுத்துக் கொண்டிருக்கும் போதே மாவட்ட ஆட்சியர் அழைக்கிறார் என்ற செய்தி வந்ததால் வேகவேகமாக பதற்றத்தோடு வந்தார். எங்களைப் பார்த்ததும் “ஏய்யா காலங்காத்தாலேயே என் உசிர வாங்குறீங்க? என்றார். நாங்கள் ஒன்றும் பேசாமலிருந்தோம். அதற்கு மேல் அவரால் அந்த இடத்தில் ஏதும் பேச முடியாத நிலை ஏற்பட்டது. மூவரும் மீண்டும் உள்ளே போனோம்.
“இவங்களுக்கு மூனு மாசமா சம்பளம் போடலையாமே…. உன்மையா…..? என்று கேட்டார்
“அது வந்துங்க சார்……” என்று தடுமாறியவரை இடைமறித்து
“நான் கேட்டகேள்விக்கு பதில் சொல்லுங்க. சம்பளம் போடலையா…” என்றார்.
“ஆமாங்க சார்”
“எதுக்கு?”
”இவங்க அக்ரிமெண்ட் ரெனிவல் பண்ணலை அதனாலதான்…” என்றார்.
“வருசா வருசம் அக்ரிமெண்ட் ரெனிவல் பண்ணுறீங்களா….?”
"இவங்க வேலைக்குச் செர்ந்த புதுசுல ரெனிவல் பண்ணுனாங்க.அப்புறம் இல்லைங்க சார்”
“எத்தனை வருசமா இல்லை?”
“பத்து வருசமா இல்லைங்க சார்”
"பத்து வருசமா ரெனிவல் பண்ணாம விட்டது யார் தப்பு? பத்து வருசம் கேட்காம இப்ப எப்படி கேக்குறுங்க?"
"எங்க ஹெட் ஆபீஸ்ல கேட்கச் சொன்னாங்க. அதனால கேட்டோம் சார்"
"தபால் வந்திருக்கா...?"
"இல்லைங்க சார். ஜீஎம். தான் போன்ல சொன்னாங்க"
“அக்ரிமெண்ட் ரெனிவல் பண்ணாட்டி வேலை செய்யக் கூடாது, சம்பளம் தரக்கூடாதுன்னு ஏதாவது ஜிஓ. வந்து இருக்கா..?”
“அப்பிடி ஏதும் வரலைங்க சார்”
“அப்புறம் எப்பிடி நீங்க நிப்பாட்டி வச்சீங்க?“
“ஜிஎம் போன்ல சொன்னாங்க சார். அவங்க பேச்சை மீற முடியலை”
“ வெறும் போன் மெசேஜை வச்சிக்கிட்டு எப்பிடி மூனு மாசமா சம்பளம் தராம இருந்தீங்க? நீங்க இந்த மாவட்டத்துக்கு வர்றதுக்கு முன்னாடியே இவங்க ரெண்டு பேரும் இங்க வேலை பாக்குறாங்க. தே ஆர் சின்சியர் ஒர்க்கர்ஸ். ஐ.நோ. காண்ட்ராக்ட் ஸ்டாப்ஸ்னா அவங்களும் மனுஷங்க தானே…..தே ஆர் நாட் பாண்டேடு லேபர்ஸ். இதுக்கு முன்னால உங்க டிபார்மெண்டல தானே ரெண்டு மாசம் சம்பளம் போடாத ஒரு அதிகாரியை கட்டாய காத்திருப்புல வச்சாங்க. உங்களுக்கு ஞாபகமிருக்கா…?” என்று கோபமாகக் கேட்டார்.
“ஆமாங்க சார்” என்று மிகவும் மெதுவாகச் சொன்னார்.
“இன்னும் ஒருமணி நேரத்துல இவங்களுக்குச் சம்பள பில் போட்டு எங்கிட்ட காட்டணும்.இல்லையின்னா நடக்குறதே வேற. புரியுதா..?….”
“சரிங்க சார். இப்பவே சம்பளம் போட்டு பைல் கொண்டு வந்து காட்டுறேன்” என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்.
“ரெம்ப நன்றிங்க சார்” என்றோம்.
“பரவாயில்லை.இதை முன்னாடியே என்னோட நாலேஜ்க்கு கொண்டு வந்திருக்கலாமே.. என்றார்”
எந்த பதிலும் சொல்லாமலேயே மீண்டும் “தாங்க்ஸ் சார்” என்று சொல்லி விட்டு வெளியே வந்தோம்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்