சத்தியராஜ் குப்புசாமி
சிறுகதை வரிசை எண்
# 181
குப்பன்ன பாத்துக்குவான்
“கார்த்தி எழுந்திரி சாமி” என்று அப்பா தொட்டபோதுதான் அவனுக்கு விழிப்பு வந்தது.
“மணி 11 ஆச்சு தங்கோ, இன்னும் என்ன தூக்கம், மெட்ராசில இருந்து தூங்கவா வந்த?
“நீ ஏ இன்னும் கல்யாண மண்டபத்துக்கு வரலன்னு?ராசு மாமா கேட்டாரு,
“எந்திரிச்சு படக்குனு குழிச்சிட்டு வேட்டிய கட்டிட்டு கெலம்பு“ என்று அப்பா அவனிடம் அதட்டினார்.
இரவு முழுவதும் ரயில் பயணத்தால் உடல்மிகவும் சோர்வாக இருந்தது. இன்னும் சிறிதுநேரம் தூங்கலாம் என்று அவனக்குப்பட்டது.
ஊருக்கு வருவது ஒரு சடங்கு மட்டுமே. பள்ளி, கல்லூரி, பேராசிரியர் வேலை, என 18 ஆண்டுகளாக விடுதியில் வாழ்ந்து விட்டான். ஊர் குறித்தான பிணைப்பை குறைத்துவிட்டதோடு, நீண்ட விடுதி வாழ்கை அவனுக்குள் வெற்றிடத்தையும் உருவாக்கி இருந்தது. அந்த முடிவில்லாத வெற்றிடத்தில் காலுன்ற உதவியது புத்தகம் மட்டுமே.
வெகுநாட்களுக்கு பிறகு கார்த்தி இன்றுதான் ஊருக்கு வந்திருக்கிறான். மாமன் மகள் திருமணம். இதுபோன்று ஏதாவது நல்லது, கெட்டதுகளுக்கு மட்டுமே வருவான். அந்த இடைவெளி அவனுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. இடைவிடாது எந்த நேரமும் நம்மை மதிப்பிடும், ஆயிரம் கண்களுடன் விழித்துக்கிடக்கும் பெரும் பூதம்தான் சொந்த ஊர். அதன் பார்வையில் இறக்கம் கொஞ்சம் குறைவு.
படுக்கையில் இருந்து எழுந்து பாத்ரூம் போகலாம் என்று வெளியே வந்தபோது, மிக மென்மையான ஈரப்பதம் தூவிக்கொண்டிருந்தது; சூரியனே இல்லை. மிதான குளிர்காற்று. இதுபோன்ற இதமான பகல் குளிர் காங்கேயத்தில் அதிசயம். பகல் குளிர் உடம்மை கூசியது. ஆனால், உடம்பிற்குள் ஒருவிதமான வெதுவெதுப்பு பரவியிருந்தது. சில நேரங்களில் தூங்கி எழுந்தவுடன் மனம் ஒருவிதமான மெளம் நிரம்பி எந்தவித சிந்தனையைற்று சமநிலையில் இருக்கும். ஏன் இப்படி இருக்கிறது என்று நினைத்த அந்த நொடியில் அது விலகிப்போய்விடும். அந்த ஆழ்ந்த அமைதி நிலையை அப்பாவின் குரல் கலைத்தது.
“ஒரு எட்டு கடைக்குபோய் சேவிங் பண்டிட்டு வந்து குளி“ என்று வீட்டுக்கு உள்ளே இருந்தவாரே அப்பா கத்தினார்.
“சேவிங் பன்னாம மூஞ்சியப்பாரு எப்படி இருக்குன்னு? சேவிங் பன்றதுக் கூட நேரம் இல்லாம, அப்படி மெட்ராசுல என்னடா பன்ற?
“இல்லப்ப“என்று வாயை திறந்தான் கார்த்தி,
உடனே “என்ன இல்லப்ப நொல்லப்பா, போடா போய் சேவிங் பன்னிட்டு வா, என்று அதட்டினார்.
ரோட்டுகடைக்குபோய் சேவிங் செய்து பின்பு, குழித்து முடித்து வீடுக்குக்குள் வந்தான். கட்டுவதற்கு இரண்டு வேட்டிகளை அப்பா எடுத்துவைத்திருந்தார். ஒன்றை எடுத்து கட்டிகொண்டு வண்டியை எடுக்கலாம் என்று வெளியே வந்தபோது;
“தலையை ஒழுங்காசீவு, ஒருநாழும் இந்த தலைக்கு எண்ணெய் வெக்கிறது கிடையாது, அந்த பழக்கம் எப்பவமுமே வராதா?“என்று கத்தினார்.
இடதுகையில் தேங்காய் எண்ணையை எடுத்து ஊத்தி, இரண்டு கைகளையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து கார்த்தியின் தலையில் அழுத்தமாக தேய்த்தார். சிறுவயதில் அவர் எண்ணெய் தேய்த்துவிடும்போது எப்படி வலிக்குமோ; அதே போன்று அவனுக்கு இருந்தது. 65 வயதாகிற அப்பாவின் கைக்கு வழு இன்னும் அப்படியே இருக்கிறது என்று ஆச்சரியப்பட்டான்.
எல்லா செயலிலும் சரியாக இருப்பது அவரது இயல்பு. அதிக குற்ற உணர்வு கொள்ளக்கூடியவர். நியாயமற்ற தன்மையின் பக்கம் ஒருபோதும் நின்றுவிடகூடாது என்ற கவனம் கொண்டவர். எழுத படிக்க தெரியாத விவசாயி. நல்ல நாணயஸ்தர். நாணயஸ்தர்களால் நல்ல அப்பாவாக இருப்பது கொஞ்சம் கடினம் தான்.
ஊருக்கு வந்துவிட்டு சென்னை புறப்படும்போது, அம்மாவுக்கு தெரியாமல் பணம் கொடுப்பார். அது பல ஆண்டுகள் நடக்கும் சடங்கு. இன்னும் ஓயவில்லை. கார்த்தியின் திருமணத்திற்கு குடும்பத்தில் பெரிய எதிர்ப்பு இருந்த போதும் “எம்பயனுக்கு எது இஸ்ட்டமோ அத நா செய்வன்“ என்று மிக உறுதியாக நின்றவர். கல்யாணமாகி 6 ஆண்டுகள் கடந்துவிட்டாலும், எத்தனை அவமதிப்புகள்.
எங்கிருந்தோ அப்பா உரக்க இருமல் சத்தம் வரும்போது அவனுக்க திடுக்கிடும். அப்பாவின் வழியாக தாத்தா இருமல் செய்யார்.
தலைகவசம் அணிந்து கார்த்தி வண்டி ஓட்டும் போது எதார்த்தமாக வரும் இருமல் சத்தம் பலமுறை அவனுக்கு அப்பாவை நியாபகப்படுத்தும். கார்த்தியின் மகனுக்கு 4 வயது வந்தபோதுதான் அவனுக்குபுரிந்தது தனது மகனின் இயல்பும் பெரும்பாலும் தன்னைபோலவே உள்ளது என்று. அதற்கு பிறகு மகன் மீது காட்டப்படும் அக்கறையை ஒருவகையில் தன்மீது, தானே காட்டுவதுபோல் உணர்ந்தான்.
மனிதர்களின் ஆன்மா வாரிசுகளினுடாக வாழ்ந்துகொண்டே இருக்கிறது. பாம்பு சட்டையை உரிப்பதுபோல் உடலை மட்டும் உதறிக்கொள்கிறார்கள்.
பீரோவின் மேல இருந்து ஒரு காகித்தை எடுத்துவந்து, ”இந்தா என்று கார்த்தியிடம் நீட்டினார்”,
”இது என்னுங்கப்பா” ?
”அட, பையன LKG சேத்தரதுக்கு, PEM ஸ்கூல் அப்லிகேசன்”. என்றார்
”அட, நம்ம இளங்கோ மச்சான் புள்ள அங்கதான் டிச்சரா போரா, அவகிட்ட சொல்லி நா போனவாரமே வாங்கிட்டன். அருமையான ஸ்கூலு. வீடடுக்கு பக்கதுலையே வேன் வருது, ஏத்திவிட்டா அவம்பாட்டுக்கு போய்ட்டு வருவான்”.
”இந்த அப்ளிகேசன புல்லப்பன்னி நாலைக்கு நீயும் ரேவதியும் போய் ஸ்கூல்ல குடுத்திட்டு, எல்லாதையும் விபரமா விசாரிச்சிட்டு வாங்க” என்றார்
கார்த்திக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை, திரு திரு வென்று முழித்தான். கையில் விபுதியுடன் வந்த அப்பா ”எதுக்கு பேந்த பேந்த முழிக்கிற?குப்பைன பாத்துக்குவான், நம்மல கைவிட்ர மாட்டான், எல்லா கரைக்டடா நடக்கும்” என்று நெத்தியில் திருநீர்வைத்து விட்டார்.
6 ஆண்டுகளுக்கு முன்பு ”மெட்ராசில் ஒரு பெண்ண காதலிக்கிறேன், அவுங்க நம்மாளுக கிடையாது, அவுங்க வீட்டுல பேசிட்டன், நீங்க வந்து பொண்ணு கேளுங்க” என்று சொன்னவுடன்
”ஐயோ எங்குடிய கெடுக்க பொறத்துடடானே” அசலூர் காரிய கட்டிகரனு வந்து நிக்கிரானே, இந்த ஊர்ல என்னால தலநிமித்து வாழமுடியுமா? ஊருக்கே புத்திமதி சொல்ற எனக்கு இப்படி ஒன்னு பொரந்திருக்கே” என்று கார்த்தியின் அம்மா கத்தி அழுததால் இரண்டு நாள் வீடே மயானமாக கிடந்தது. அவனது அப்பா எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தது தான் அவனுக்கு பெரும் கலக்கமாக இருந்தது.
இரண்டு நாட்கள் கழித்து சென்னைக்கு புறப்படும்போது கட்டிலில் உட்காந்து இருந்த அப்பாவிடம் சென்று எனக்கு அந்த பொண்ண கட்டிவைங்கப்பா, கல்யாணத்துக்கு பிறகு இங்க வந்து உங்கள கஸ்ட்படுத்தமாட்டன், நான் சென்னையிலையே இருந்துக்கிறேன் என்று கண்கலங்கி நின்றான் கார்த்தி.
எதுவும் பேசாமல் கட்டிலில் இருந்து எழுந்து அமைதியாக வீட்டுக்குள் சென்றார். தேதி காகிதத்தில் கொஞ்சம் திருநீரை மடித்து எடுத்துவந்து, அவன் பாக்கட்டில் வைத்தார், கூடுவே இரண்டாயிரம் ரூபாய் பணத்தையும் வைத்தார்.”தைரியமா போ சாமி, எல்லா குப்பன்ன பாத்துக்குவான்” என்று கூறி நெத்தியில் திருநீர் பூசிவிட்டார்.
அம்மா என்று வாயை திறந்தான்.”அவகெடக்குரா கூறுகெட்டவ, அவுளுக்கு என்ன தெரியும், நீ போ, நல்ல நாளா பாத்து கந்தாபாளைத்து மாமன கூட்டிட்டு நாங்க மெட்ராஸ்சுக்கு வரோம் என்று சொல்லி வழி அனுப்பி வைத்தார். அந்த கனத்த நாள் அவனுக்கு நினைவுக்கு வந்துபோனது.
வண்டியை எடுத்துக்கொண்டு பெருமாள் மலைக்கு பின்புறம் உள்ள கல்யாண மண்டபத்துக்கு புறப்பட்டான். இன்று முகூர்த்தநாள் என்பதால் சாலைகளில் வண்டிவாகனங்கள் வேகமாக சென்றன. பட்டுப் புடவையும், வேட்டியுமாக குடும்பங்கள் உற்சாகமாக பறந்தனர்.
நூற்றுக்கணக்கான கார்கள் கல்யாண மண்டபத்தை சூழ்ந்து நின்றது. மண்டபத்தின் முகப்பில் கூடாரம் போல கலர்கலரான விளக்குகளால் வளைவு செய்யப்பட்டிருந்தது. சினிமா விருது வாங்கும் நிகழ்ச்சிகளுக்கு பிரபலங்கள் வருவதுபோல் ஒரு வரவேற்பு. அங்கு நின்ற சில பெண்கள் கைப்பேசியில் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தார்கள். சடங்கிற்காக நிறுத்தப்பட்டு இருந்த வாழைமரங்கள் வண்ண திரைச்சிலைகளால் மூடப்பட்டிருந்தது. மண்டபத்திற்குள் நுழைந்த உடன் மாமா, இரண்டு கைகளையும் கூப்பி “வாங்க மாப்ள“ என்று வரவேற்றார்.
“அம்மா சொன்னாங்க நீங்க காலையில 5 மணிக்கே வந்துட்டிங்கன்னு“ என்று மாமா இழுந்தார்.
“நைட்டு முழுக்க வண்டியில் வந்த சலுப்பு, அதான் கொஞ்சநேரம் படுத்துட்டனுங்க“ என்று கூறினான்.
“பரவா இல்ல மாப்ள, போய் பொண்னுமாப்ளைய பாத்துட்டு சாப்டுங்க என்று புன்னகைத்தார். ரேவதி உள்ளாதான் இருக்கா” என்றார்.
மண்டபத்தில் மதிய விருந்திற்கு அதிகமான கூட்டம் நிரம்பி வழிந்தது. இதுபோன்ற கூட்டங்கள் கார்த்திக்கு ஒரு ஒவ்வாமை. மேடையில் புதுமண தம்பதியினரை காணவில்லை. தெரிந்தவர்களுக்கு வணக்கம் வைத்துவிட்டடு தேடி பார்த்தான். ரேவதி அங்கிருந்து கைகாட்டினாள்.
“ஏங்க 12மணி வரைக்குமா தூங்குவீங்க? “உங்களோடதா நானு வந்தேன். ஆனா நா மண்டபத்துக்கு 8 மணிக்கு வந்துட்டேன். நீங்க ஏந்தா இப்படி இருக்கிங்க என்று கடிந்து கொண்டாள்
“என்ன இங்க உக்காரவச்சிட்டு உங்கம்மா எங்கையோ போய்டாங்க”
“காலையில இருந்து இங்க சீர் நடந்துக்கிட்டு இருக்கு, அடுத்தடுத்து நிறைய சடங்கு செய்றாங்க எனக்கு எதுவும் புரியல.
“நம்ம கல்யாணத்துக்கு பிறகு இப்பத்தான் முதல்முறையா உங்க ஊருல நடக்குற கல்யாணத்துக்கு கூட்டிட்டு வந்திரிக்கீங்க, “எனக்கு யாரையும் இங்க தெரியல, தெரிஞ்வங்க ஒரு சிரிப்பு மட்டும் தான். யாரும் பேசுரது இல்ல, அதனால தான் சொன்னேன் நீங்களும் காலையிலை எங்கூடவே மண்டபத்துக்கு வாங்கன்னு“ என்று ரேவதி கோபித்துக் கொண்டாள்.
“பொண்ணு மாப்பிளை? மேடையில் காணோம், எங்க போனாங்க?“என்று பேச்சை மாத்தினான் கார்த்தி.
“அத ஏ கேக்குரீங்க, காலையில் இருந்து, இந்த சீரு, அந்த சீருன்னு எதையாவது பன்னிட்டே இருக்காங்க. இப்பவரைக்கும் இரண்டு முறை தலைக்கு தண்ணி ஊத்திட்டாங்க. பாவம் அந்த பொண்னுபுள்ள ஈரதலையோட இருக்கு ”என்று சிரித்தாள் ரேவதி.
“இதுக்கு முன்னாடி இப்படி எதுவும் பெருசா செய்யமாட்டாங்க, சீர் செய்ய நீறைய பணம் செலவாகும். எதுக்கு வீண் செலவுன்னு விட்ருவாங்க, இப்பதான் எல்லார்கிட்டையும் பணம் வந்திருச்சே என்றான் கார்த்தி.
ரேவதிக்கும் அவனுக்கம் கல்யாணம் ஆகி ஏறத்தால 6 ஆண்டுகள் கடந்துவிட்டது. காதல் திருமணம். ரேவதி சென்னையை பூர்விகமாக கொண்டவள், பழைய வண்ணாரப்பேட்டை பொண்ணு. ராயபுரத்தை தாண்டி எங்கும் அவ போனது கிடையாது. ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனை, காசிமேடு மீன், பாண்டியாஸ் பிரியாணி என வட சென்னை அவளுக்கு ஒரு கொண்டாட்டமான தீவு.
இப்படியான பெண்ணை காங்கேயத்துக்கு எப்படி கட்டிகொடுப்பது என்று ரேவதியின் பெற்றோர்கள் யோசித்தபேது.”நான் சென்னையில்தான் வாழப்போகிறன்” என்று கார்த்தி வாக்குறுதி கொடுத்திருந்தான். ஆனால் இப்போது அப்பா அவனை எப்படியாவது ஊருக்கு கூட்டிட்டு வந்துவிடனும் என்று உறுதியாக இருக்கிறார்.
சொந்த ஊருக்கு வருவதற்கு கார்த்திக்கு விருப்பம் இல்லை.
”ஊரிலேயே நல்லா படிச்சபையன், காலேஜல வாத்தியாரு, பீடி சிகரெட், குடிக்கமாட்டான்; ஆனா இப்படி பன்னிட்டானே என்று பலமுறை அவன் முன்னே பல பேர் பேசி இருக்கிறார்கள். அதை ஒரு பொருட்டாக எப்போதும் எடுத்துக்கொள்ள மாட்டான். ஆனால், இப்போது தனது 4 வயது மகனிடம் யாரும் இயல்பாக இருப்பதில்லை என்பது அவனுக்கு அதீத தொந்தரவாக இருந்தது. ஊரில் செட்டில் ஆகினால் தனது மகனுக்கு என்ன நடக்கும் என்ற குழப்பத்துடன் இருந்தான்.
சென்னையைவிட்டு வருவதற்கும் அவனுக்கு விருப்பம் இல்லை. கோடி கண்கள் கொண்ட சென்னை எந்த பார்வையும் பிறரை மதிப்பிட அதிக நேரம் செலவு செய்யாது. நம்பை பற்றி எந்த மதிப்பீடும் செய்யாமல் நம்முடன் உரையாட தினம் தினம் புதிய மனிதர்கள் முளைத்துக் கொண்டே இருக்கும் பெருநிலம்.
கல்யாண மண்டபத்தின் மூன்றாவது வரிசையில் உட்காந்திருந்த கந்தாபாளைத்து மாமா எழுந்து வணக்கம் வைத்து “வாங்க மாப்ள, எப்ப வந்திங்க“ என்றார்.
கார்த்தி வணக்கம் வைத்துவிட்டு “இன்னைக்கு காலையில தான் வந்தேன்“ என்று அவருக்கு பக்கத்தில் இருந்த இருக்கையில் உக்காந்தான்.
மாமா அவனது கையை இருக்கமாக பிடித்துக்கொண்டிருந்தார் அது அவருடைய பழக்கம். அவர் அவனது தந்தையின் தாய்மாமனுடைய மகன். கார்த்தியின் குடும்பத்தில் எல்லா நல்லது கெட்டதுகளிலும் அவரே மிகமுக்கியமானர். .மாமாவுக்கு பக்கத்து இருக்கையில் பச்சைத்துண்டு போட்டு உட்காந்திருந்தவரை எப்போவோ பார்த்தது போல இருந்தது.
பக்கத்தில் இருந்தவர் “ஆள் யாருன்னு தெரிளிங்கலே? என்று மாமவிடம் கேட்டார் ”எங்க குப்புசாமி மாமானுடைய இரண்டுவது ஆளு“, “மெட்ராசுல காலேஜ் புரோப்போசரா இருக்கான் “ என்று சொன்னார்.
”அட அப்டிங்களா. ஆளே அடையாளம் தெரியல, சின்ன வயசுல பாத்தது” என்று சிரித்தார்.
“பெரியவன எனக்கு நல்லா தெரியும், நம்ம ரைஸ் மில்லுக்கு அடிக்கடி வருவாரு” அவன் கல்யானத்துக்கூட நா வந்திருந்தேன்“,
ரேவதியை காண்பித்து “இதுதான் அவன் சம்சாரம்“என்று மாமா அறிமுகபடுத்தினார்.
உடனே அவர் அட கல்யாண ஆயிருச்சா?
“ஏன் கல்யானத்துக்கு என்னை கூப்பிடல? என்று கார்த்தியை கேட்டார்.
“மாமா இடைமறித்து கல்யாணத்த நாங்க சிம்பில பண்ணிட்டோம்“ என்று கூறிவிட்டு, மெதுவான குரலில், “கல்யாணம் கொஞ்சம் கோனையா போயிருச்சு, அதான் பெருசா யாரையும் கூப்பிடுள“ என்றார்.
உடனே பக்கத்தில் இருந்தவர் முகம் மாறிது. ஒரு பெரிய வியப்புடன் கார்த்தியை பார்த்தார். அதற்கு பிறகு அவர் அவனிடம் இயல்பாக இருக்குவில்லை. ஒரு கணத்தில் அந்த மனிதர் இப்படி மாறியது அவனுக்கு ஒன்றும் வியப்பாக இல்லை. இது போன்று பல முகமாற்றங்களை பார்த்து பழகிவிட்டான்.
கார்த்தி எழுந்து வணக்கம் வைத்துவிட்டு, “காலையி சாப்பிடல, பசிக்குது நான் சாப்பிட போறேன்“ என்று கூறி விட்டு ரேவதியுடன் சாப்பிட சென்றான்.
எதிரில் சாப்பிட்டு முடித்துவிட்டு கைகளுவிக்கொண்டிருந்த பரமசிவன் கார்த்தியை பார்த்து “வணக்கம் பங்காளி,சென்னையில் இருந்து எப்ப வந்திங்க?“ என்று கேட்டான். ”இன்னக்கு தான்” என்று சொல்லிவிட்டு நகரலாம் என்று நினைத்தபோது பரமசிவன் பேச்தை தொடர்ந்தான்.
“போன சித்திரைஅமாவாசைக்கு இராமேஸ்வரத்தில திலாஹோமம் நடத்தினோம், நம்ம குலத்துகாரங்க நிறையபேர் வந்தாங்க, ஆனா நீங்க வரலை, ஏதோ முக்கிமான வேலைன்னு சொன்னிங்க, அடுத்தது வர ஜுன் மாசம் 28, 29ம் தேதில, நம்ம மூத்தூர் குப்பன்சாமி கோயில்ல நவசண்டி மஹாயாஹம் நடத்தப்போறோம். இது முக்கியமானது. கண்டிசனா நீங்க கலந்துகனும்” என்று பரமசிவன் அழுத்தி கூறினான்.
திருமணத்திற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கார்த்தியுடன் பேசாமல் இருந்தான். இப்பத்தான் திரும்பவும் பேச ஆரம்பித்துள்ளான். குலதெய்வ கோயிலுக்கு ஒரு டிரஸ்ட்டு உருவாக்கி அதன் தலைவராக செயல்பட்டு வருகிறான். அவன் பக்கத்தில் நெத்தியில் செந்தூரம் வைத்திருந்த அந்த ஒள்ளியான இளைஞன், கழுத்தில் இருந்த காவி துண்டில் தனது கைகளை துடைத்தாவரு கார்த்திக்கு வணக்கம் வைத்தான்.
“இவரும் நம்ம குலம்தான், வெல்லகோயில் காரரு, பேரு பழனிசாமி. பள்ளிகூடத்துள வாத்தியாரா இருக்கிறாரு, குலதேய்வத்த பத்தி ஒரு புக்கு வந்துச்சுள்ள அதை இவறுதான் எழுதினாரு” உனக்கு கூடு மெட்ராசுக்கு கொரியர்ள அனுப்பினனே” என்று பரமசிவன் அவனை அறிமுகபடுத்தினான்.
தோளில் இருந்த காவிதுண்டை சரி செய்து கொண்டு பழனிசாமி மார்பில் கைவைத்து ”வணக்கம் ஜி” என்றான்.
கார்த்தி வணக்கம் வைத்துவிட்டு.
”நீங்க தான அந்த பழனிசாமியா” என்று புன்னகைத்தான். உங்க புக்குள ஒரு எடத்துளகூடு நம்ம குலதெய்வம் மாதாரியார் சமுகத்த சார்ந்த வருன்னு மென்சன் பன்னவே இல்லையே ஏன்?” என்றான்.
பழனிசாமிக்கு முகம் சட்டென்று மாரியது.
”அத நீங்க அப்படி பாக்க கூடாது; அது தேவையில்லத விசயம் என்று ஏதோ சொல்ல பழனிசாமி தொடர்ந்து பேசியபோது, பரமசிவன் குறுக்கிட்டு ”இந்த ஹோமம் நடத்த நல்ல அனுபவமுல்ல 9 வேதியர்கள காசில இருந்து பங்காளிதான் கூட்டிட்டு வர்ராரு. அவங்களுக்கு டிக்கெட்டல்லாம் இவருதான் போட்டாரு. இந்த யாகத்த நடத்த ஒவ்வொரு குடும்பமும் மாங்கல்ய வரியாக குறைஞ்சது ஆயிரத்து ஐநூறு வசூல் பண்றோம். நீங்களும் அத இந்த மாசம் gpayல அனுப்பிடுங்க என்று கூறிவிட்டு, பழனிசாமியின் கையை இழுத்து வா போகலாம் என்று நகர்ந்தான் பரமசிவன்.
கார்த்திக்கும் ரேவதியும் சாப்பிட அழைத்து போனான்.
“யார் இவுங்க? அவங்களுக்கு எதுக்கு காசு கொடுக்குறேன்னு சொல்றீங்க?“ என்று சந்தேகமாக கேட்டால் ரேவதி.
“இவன் ஒரு பைத்தியகாரன், கோயம்பத்தூர்ல பெரிய கம்பெனியில் மேனேஜரா வேலை செய்றான். MBA படிச்சவன். இப்ப காவிதுண்டபோட்டுக்குட்டு குலதெய்வ கோயிலுக்கு வருகிற எல்லார்கிட்டையும் போன் நம்பர வாங்கி, வாட்சப்ல குழு உருவாக்கி அவங்ககிட்ட பணம் வசூல் பண்ணிட்டு இருக்கான். கோயில்ல உக்காந்துக்கிட்டு அவன் கட்சிக்கு ஆள் சேத்திட்டு இருக்கான்”.
”இந்த ஊர்ல இருக்கிற ஒவ்வொரு குலதெய்வ கோவில்யையும் இதுமாதிரி ஆட்களை இறக்கிவிட்ருக்கானகுக. இவனுகளுக்கு வேலையே குலதெய்வத்த வச்சு, குல ரீதியா பிரிச்சு ஆள்சேப்பது. அப்பறம் ஒரு டிரஸ்ட்ட உருவாக்கி பணத்த வசூல் செஞ்சு எதாவது யாகம் நடத்துறது. இல்லன்னா; ஊருக்குள்ள அனுமார் சிலை வைக்கிறது. இங்க இருக்கிறவங்கள ஒண்ணா சேர்த்துக்கிட்டு ராமர் கோயில பாக்க டூர் கூடிட்டு போரானுக. இத ஒரு பிரஜ்கெட்டாவே செய்ரானுக.”
”ஒ அந்த குல தெய்வ காலண்டர் இவங்க தான் சென்னைக்கு கொரியர் பன்னதா?” என்று எதோ மர்ம ரகசியத்தை கன்டுபிடித்ததை போல ரேவதி இடைமறித்தாள்.
”ஆமா. வீடு விடு போய் சாதி காலண்டர் கொடுக்கிறதுக்கு இவன் எல்லாம் எதுக்கு MBA படிச்சான்னு தெரியல? அவுங்கப்பா செம்பளியாடு மேச்சு கஸ்ட்டப்பட்டு படிக்க வெச்சாரு. ஆனா இவன் இப்படி உருப்படாம சுத்துறான்.”
சாப்பிட்டுமுடித்துவிட்டு உணவுகூடத்தில் இருந்து வலதுபுரமாக இருக்கம் கேட்டின் வழியாக நேரடியாக மண்டபத்தைவிட்டு வெளியே வந்தனர். வெளியே ஐஸ்கிரீம், டீ, காபி மற்றும் பாப்கான் கொடுத்துக்கொண்டிருந்தனர். ரேவதி ஐஸ்கரீம் சாப்பிட்டாள். கார்த்தி ஒரு காப்பியை வாங்கிகொண்டு மெதுவாக முன்புறம் சென்றான்.
மண்டபத்தின் நுழைவாயில் வெளியே நான்கு பேர் பறை அடித்துக்கொண்டிருந்தார்கள், உள்ளே மத்தளம், நாதசுவரம் சத்தத்தில் சரியாக கேட்வில்லை. அந்த நான்குபேரில் ஒருவர் சிகப்பு சட்டை அணிந்திருந்தார், கார்த்திக்கு மிகவும் பரிச்சையமான முகம்.
ஆம் அது செந்தில்.
செந்திலும் கார்த்தியும் ஐந்தாம் வகுப்புவரை படியூர் அரசு ஆரம்பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். வகுப்பறையில் இருவரும் நெருக்கமான நண்பர்கள். பாடம் நடத்தும் போது செய்ய சேட்டைகளுக்கு சரோஜா டிச்சரிடம் அடியும் வாங்கி இருக்கிறார்கள்.
ஆசிரியர் பாடம் நடத்தும்போது எம்.ஜீ.ஆர் படங்களின் கதைகளை அவனிடம் சொல்லுவது கார்த்தியின் வழக்கம். அதை ம், ம் என்று கேட்டுக்கொண்டு ஆசிரியர் நடத்தும் பாடத்தில்தான் மிக கவனமாக இருப்பான் செந்தில். மிக நன்றாக படிக்க கூடியவன். வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்குபவன். வகுப்பே அவனுடைய கையெழுத்தை பார்த்து வியக்கும், அவனுடைய நோட்டை வாங்கித்தான்; விட்டுபோன பாடங்களை எல்லோரும் எழுதுவார்கள். அறிவியல் பாடத்தில் வரக்கூடிய தாவரங்களின் படங்களை மிக நேர்த்தியாக வரையக்கூடியவன். அவன் விரல்கள் ஓவியம் வரைவதற்காகவே தனிதன்மையுடன் படைக்கப்பட்டவை போல.
வாழ்கையில் ஒரு சில கைவிரல்கள் மட்டும்தான் நம் மனதில் பதியும். செந்திலின் விரல்கள் கார்த்தியின் மனதை விட்டு எப்பேதும் மறைந்தது கிடையாது. பல வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் செந்திலை பார்த்தான். மிகவும் மெலிந்து விட்டான். எப்போதும் நேர்த்தியாக இருப்பவன். அவனது ஒவ்வொரு அசைவுகளிலும் நேர்த்தி இருக்கும். ஆனால், இப்போது மொத்தமாக கலைந்துபோன மனிதனாக காட்சியளித்தான்.
கார்த்தி காபி குடித்துக்கொண்டிருந்த பேப்பர் கப்பை தூக்கி எரிந்துவிட்டு ரேவதியை தேடினான். எதோ எண்ணத்தில் இருந்த போது ரேவதி அவனது தோளை தொட்டாள்.
“வாங்க போய் பொண்னு மாப்ள கூடு ஒரு போட்ட எடுக்கலாம்“ என்று கூப்பிட்டாள். சரி போகலாம் என்று கார்த்திக் முன் நகர்ந்தான், பறை அடித்துக்கொண்டிருந்த நால்வரும் உணவு உண்பதற்கு எதிரே நடந்து வந்தனர்.
செந்தில் கார்த்திக்கை பார்த்து சிரித்தான்.
“எப்படி இருக்கிங்க-“ என்று செந்தில் கேட்க “நல்லா இருக்கன்“ என்று கார்த்திக் பதில் சொன்னான்.
”மெட்ராசிலையா இருக்கீங்க?”
”ஆமா செந்தில்.”
”என்ன பன்றிங்க?”
”காலேஜல ஆசிரியராக இருக்கன்.” என்று கூறினான் கார்த்திக். ஆனால் திருப்பி நீ எப்படி இருக்கிறாய் என்ன செய்கிறாய் என்று கேட்கும் தைரியம் கார்த்திக்கு வரவில்லை.
“ஏன் இளைத்து போய் விட்டாய்“ என்று மட்டும் கார்த்திக் கேட்டான்.
“வேலை அதிகம் அதனால தான்“ .
” கல்யாணம் பண்ணிட்டயா?
“கல்யானம் ஆகி இரண்டு பசங்க“ என்று செந்தில் புன்னகைத்தான்.
கார்த்தியின் கவனம் முழுவதும் செந்தில் விரல்கள் மீது தான் படிந்திருந்தது. அந்த விரல் பறை குச்சியை இருக்கமாக பிடித்திருந்தது. அந்த விரல்களில் நேர்த்தி கலையவில்லை. அந்தவிரல்களுடன் உரையாடுவதுபோல் கார்த்திக் உணர்ந்தான்.
செந்தில் இரு கரங்களையும் கூப்பி வணக்கம் வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
கார்த்திக் அசைவற்று ஒரு கணம் அந்த இடத்தில் சோர்வாக நின்றுகொண்டிருந்தான்.
”உங்கப்பா பையனுக்கு ஸ்கூல் அப்பிளிகேசன் வாங்கிட்டு வத்திருக்கிராரு பாத்திங்களா” என்று ரேவதி கேட்டாள் அப்போது சுயநினைவிற்கு திரும்பிய கார்த்தி ”ஆமா பார்த்தேன்” என்று தலையசைத்தான்
”என்ன முடிவு பண்ண போறீங்க?” என்றாள் ரேவதி
என்ன பண்றது. இந்த வருஷம் இங்க வந்துருவோம், அவன PEM ஸ்கூல்லையே சேத்திடுவோம் என்றான் கார்த்திக்.
”பாத்து யோசிச்சு முடிவெடுங்க, இது பையன் வாழ்க” என்றாள் ரேவதி
”எல்லா குப்பன்ன பாத்துக்குவான்” என்று கூறிவிட்டு, கார்த்தி ரேவதியை அழைத்துக்கொண்டு பொண்ணு மாப்பிளையை பார்க்க சென்றான்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்