முனைவர் இரா. இராமகுமார்
சிறுகதை வரிசை எண்
# 180
ஓடை
ஒருக்களிச்சுப் படுத்து இருந்த கோமுவிற்கு உறக்கமே வரவில்லை. ஓடை ஞாபகமாகவே இருந்தாள்.
காலையில் எழுந்ததும் முதல் ஆளாக அங்கு போய் பார்க்கணும். அது அங்கே இருக்குமா ... இருக்காதா ... மண்டையைப் பிய்த்துக் கொண்டே புரண்டு படுத்தாள்.
போர்வையை எடுத்து 'முழுசா முக்காடுப் போட்டப் போதும்' கோமுவுக்கு உறக்கமே வரவில்லை.
அந்த ஓடையில் விட்டக் 'காகிதக் கப்பலையே' நினைத்துக் கொண்டு இருந்தாள். எப்படி தூங்கினாள் என்றே தெரியவில்லை. உறக்கத்தில்
ஓடை கடலானது. கடல் அலை காலினை நனைத்தது. கனவில் காகிதக் கப்பல், பாய்மரப் படகானது.
விடிஞ்சு போச்சு. பொட்டப் புள்ளைக்கு இவ்வளவு உறக்கம் ஆகாது. நேரத்தே எழும்பி வீடு வாசலை கூட்டாம உறங்குது பாரு ... வசை பாடினாள் கோமுவின் தாய் ராசலெட்சுமி.
என்னுடைய கப்பலை எங்கே! கண்ணைக் கசக்கி கொண்டே கோமு, தாயின் அருகே வந்தாள்.
தாயின் பார்வை கோபத்தின் வெடிப்பில் வீட்டுச் சுவர்க் கடிகாரம் மணி ஏழரையைக் காட்டியது.
அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் கோமு அந்த பரப்புவிளை கிராமத்திலே படுசுட்டி.
ஏழாம் வகுப்புப் படிக்கும் போது பாதியிலே தந்தை கண்ணன் இறந்து விட்டதால் நொடிந்து போனாள். அன்று முதல் அம்மா தன்னிடம் அதிகமாக கோபம் கொள்வதாகவே இன்றளவும் நினைத்துக் கொண்டு இருக்கிறாள்.
கண்ணனுடன் திருமணம் நடந்த நாட்களில் ராசலெட்சுமிக்கு வறுமை என்பது என்னவென்று தெரியாது. சொந்தமான காய்கறிக் கடைக்குக் கூட சென்றது கிடையது. 'காய்கறி கடைகாரர் சம்சாரம்' என்று யாராவது சொன்னால் கூட பெருமையாக தான் இருந்தாள்.
கோமு திடீரென 'குத்தவச்சுட்டா' என்ன செய்வது என ராசலெட்சுமிக்குப் புதிதாக இனம் புரியாத கவலை. ஓடி வந்து கல்யாணம் செய்தாலே இந்த கவலை தொற்றிக் கொள்ளத் தான் செய்யும், மனசுக்குள் நொந்து கொண்டாள்.
காய்கறி வாங்கலையோ! காய்கறி வாங்கலையோ ! கண்ணனின் குரல் கேட்டாலே , போட்டது போட்டபடியாக ராசலெட்சுமி ஓடோடி வந்திடுவாள் அந்த நாள்களில்...
தள்ளு வண்டியில் கண்ணனிடம்காய்கறி வாங்க வந்து, மனதை பறி கொடுத்து, வயிற்றில் குழந்தை இருந்த போது எப்படி எல்லாம் வளர்க்கலாமென ஆரம்ப காலங்களில் சொன்னதை எல்லாம் நினைத்துக் கொண்டு இருந்தாள்.
ஏம்மா ! அழுகிற. நான் இவ்வளவு நேரம் தூங்கிட்டேன்னு அப்பாட்ட சொல்லிட்டு இருக்கியா.. கண்ணன் புகைப்படத்துக்கு முன்னாடி விளக்கு ஏற்றிக் கொண்டே கோமு கேட்டாள்.
கண்களில் எட்டிப் பார்த்தக் கண்ணீர் மழையானது. கோமு பார்க்கும் முன்னரே ராசலெட்சுமி துடைத்துக் கொண்டாள்.
அம்மா .. நான் ஓடை வரைக்கும் போய் வரட்டுமா !
கோமு இப்படி கேட்டதும் ராசலெட்சுமியின் முகம் ஆனியன் வெட்டும் போதும் அன்னியனாக மாறியது. தாயின் முகம் 'கொடுங்கோலாய்' மாறியதை முதன் முதலாக கோமு நேரடியாகப் பார்த்தாள்.
'அப்பன் போன எடத்துக்கே நீயும் போய் சேரு...
நானும் இப்பவே செத்துப் போயிடுறேன்...'
தாயின் கனத்த வார்த்தைகள் கோமுவை 'ஒருபாடு' படுத்தியது.
பரப்புவிளையை இரண்டாகப் பிரிக்கும் ஓடையில் எப்போதும் சலசலப்பு இருந்து கொண்டே இருக்கும். எந்த ஊருல இருந்து யார் வந்தாலும் இந்த ஓடையில கொஞ்சம் மயங்கி தான் போவார்கள்.
ஓடும் நீரில் துள்ளிடும் மீன்கள். துள்ளிக் குதித்து விளையாடும் வாண்டுகள். மீன் பிடிக்கும் வேளையிலும் மீன் விழியாளைத் தூண்டில் போடும் விடலைகள். ஒரு மூட்டைத் துணியைத் தம்பதியர் சகிதமாய் துவைத்திடும் அன்பர்கள். எருமையே குளித்தாலும் பாரபட்சம் பார்க்காத குடியாவன்கள், மஞ்சள் உரசிட தனியே கற்கள், நாரை விளையாடும் தண்ணீர் பூக்கள், சுடலைமாடன் கோயில் மணி ஒலி, சுடுகாட்டற்கு ஓடை தண்ணீர் என பரபரப்புவிளைக்கு மிகப்பெரிய பொக்கிசம் 'இந்த ஓடை தான்'.
இந்த ஓடையில் மட்டும் தண்ணீர் வெயில் காலத்திலும் தாராளமாய் 'சலசலவென' ஓடிக் கொண்டிருப்பதே இவ்வோடையின் சிறப்பு.
பக்கத்துல இருக்கிற தோட்டங்கள், வயலுக்கு எல்லாம் இந்த ஓடையில வரும் தண்ணீரையே பரப்புவிளைகாரங்க பயன்படுத்தினாங்க ..!
'ஓடை இல்லா ஊர்கள் இல்லை. நீர் வறண்டு போனால் வரும் தொல்லை ' என்னும் நிலைமை இங்கு மட்டும் இல்லை.
எல்லா கிராமத்திலும் ஓடை எல்லாம் அரசாங்கமே புனரமைக்க நிதி எல்லாம் ஒதுக்குவாங்க ! ஆனால் இந்த ஓடையைப் பராமரிப்பதும், ஆக்கிரமிப்பு அகற்றுவதும் கிராமமே ஒன்று சேர்ந்து செய்வது மாவட்ட நிர்வாகத்துக்கே பெருமையாக இருந்துச்சு..
'ஏம்பா ... ஓடையில முள்ளு செடியா படர்ந்து கிடக்குது. எங்கிருந்தோ அடிச்சிட்டு வந்திருக்குது. யாருமே கவனிக்காமலா இருக்கீங்க' காடுவெட்டி தாத்தா சொன்னதும் , தாத்தாவே இறங்கி முதல் ஆளாக 'தூர்வாரிட' போனதும் ஓடையின் நினைவலைகள்.
'ஏம்பா... ஊருக்குள் தண்ணீர் உடைப்பு எடுத்திடுச்சு ! எல்லோரும் உசாரா இருந்திடுங்க ! எங்கும் இதே குரல் ஒலித்தது...
ஊருக்குள் ஒரே வெள்ளம்... ஓடை மறிந்து தண்ணீர் வீட்டுக்குள் பாய்ந்தது. உறங்கியவர்களை முதல் முதலாகத் தண்ணீர் எழுப்பியது.
விடிய விடிய எங்கும் அபாயக் குரல். மாடி வீட்டில் எல்லோரும் குவியத் தொடங்கினர். ஓடையைப் பார்த்துக் கொண்டு இருந்த சுடலைமாட சாமி கோயிலுக்கு உள்ளேயும் வெள்ளம் புகுந்தது.
அன்று யாருமே கேள்விப் படாத சொல்லாகவே 'சுனாமி' இருந்தது.
பொக்கிசமாக இருந்த ஓடை சுனாமியால் பரிதாபமாய் தலைவிரிக் கோலத்தில் இருந்தது.
வீட்டுக்கு ஒரு ஆளாச்சும் வாங்கப்பா ! கண்ணன் குரல் ஒலித்தது..
வீட்டு நிலைமை சரியில்லாத போதும் எல்லோரும் ஓடையைச் சீரமைக்கச் சென்றனர்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராசலெட்சுமி பிரசவத்திற்குச் சென்றதால், கண்ணன் ஓடைக்காக சென்றது அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அழுகை ...
கூக்குரல்...
உணவில்லை...
சுற்றித் தண்ணீர் இருந்தும் குடிக்கத் தண்ணீர் இல்லை ... வீட்டு வாசலில் வடிய மறுக்கும் தண்ணீர் ...
பூச்சிகள் மட்டுமல்லாமல் புதிய புதிய பிராணிகள் புதிய விருந்தாளிகளாக வரவு ...
இத்தனையும் கடந்து ஓடைக்காக கண்ணன் தலைமையில் இளைஞர் பட்டாளம் ஒன்று கூடியது சுற்று வட்டாரத்தையே ஆச்சரியப்படுத்தியது.
பிரசவ வலியில் ராசலெட்சுமி குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், கையெழுத்துப் போட கண்ணன் போகவேயில்லை... ஓடையின் நிலைமையே ராசலெட்சுமியின் நிலையும்.
அன்றும் அவள் தன் கணவனின் நிலையை அறியாதவளாகவே இருந்தாள்.
சகட்டு மேனிக்கு குழைகள் குவிஞ்சு கிடக்கு. இதை நீக்காமல் ஊருக்குள்ள தண்ணீர் வடிவதற்கு வாய்ப்பே இல்லை !எல்லோரையும் ஒன்று திரட்டினான் கண்ணன்.
ஒட்டுமொத்த ஊரும் திரண்டது. ஓடையும் மெதுவாக பழைய நிலைக்குத் திரும்பியது...
கண்ணீரைத் துடைச்சு கிட்டே மஞ்சள் உரசும் கல்லில் கண்ணன் உட்கார்ந்து இருந்தான்.
மஞ்சள் உரசும் கல்லில் ரத்தம் வந்ததைப் பார்த்துக் கண்ணன் கத்தினான்.
யாருக்குமே அவன் குரல் கேட்கவில்லை. பிரசவ அறையில் கேட்டது... அங்கும் ரத்தம்...
மஞ்சள் உரசும் கல்லில் கண்ணன் உயிர் பிரிந்தது... மஞ்சள் முகமாய் கோமு மருத்துவமனையில் பிறந்தாள் ...
என்னப்பா ஆச்சு ! நாலு பேர் வந்து தூக்கி கண்ணனைக் கரையில் போட்டாங்க ..
ஏதோ ஒன்னு கடிச்சிருக்கு ... ஆளாளுக்கு ஒவ்வொன்றாக முனகினார்கள்.
பசியை மறந்தவன்; மருத்துவ மனையை மறந்தவன்; மனைவியை மறந்தவன்; காலையிலேயே விஷ பூச்சிக் கடித்ததையும் மறந்தே போனான் கண்ணன்.
மறந்தது எல்லாம் மனதிற்குள் வந்து போனது...
அத்தனையும் பார்த்தவள் கோமு ஓடைக்குப் போறேன் சொன்னவுடன் ராசலெட்சுமி பதைபதைத்தாள்.
முந்தின நாள் ஓடைக்குப் போயிருக்கா.. கப்பலும் விட்டதா சொல்லுறா ... இவளுக்கு ஏதாச்சும் ஒண்ணுனா ... நினைச்சு நினைச்சு ராசலெட்சுமி அழுதாள் ...
பிள்ளைய ரெம்ப தான் திட்டிட்டோனோ மனதிற்குள் கேட்டுக் கொண்டாள். இப்படி ஒருநாளும் இவள் சாப்பிடாமல் இருந்தது இல்லை. வைத்த இடத்தில் சாப்பாடு தட்டு அப்படியே இருந்தது..
கோமு ... கோமு ... ராசலெட்சுமி அழைத்தும் எந்த வித சலனமுமில்லை !
தெருவெங்கும் வீதியில் பயந்து ஓடினாள்...
குப்பைத் தொட்டியின் அருகே சின்னஞ் சிறு நாய்க் குட்டியைத் தடவிக் கொண்டு இருந்தாள் கோமு ..
'அப்பாவை பார்க்க போகலாமா' இப்படி கேட்டதும் கோமுவின் முகம் மாறியது.
தாயின் முகத்தில் கண்ணீரைத் துடைத்து விரலினைப் பிடித்தாள் ...
இருவரும் ஓடையினை நோக்கி நடந்தனர்.
மஞ்சள் உரசும் கல் ... இவர்களுக்காகவே காத்து இருந்தது போல் இருந்தது.
எம்மா ! நேற்று நான் விட்டக் கப்பல் எங்கையும் போகாமல் ஏன் இந்த மஞ்சள் உரசும் கல்லையே சுத்திக்கிட்டு இருக்கு !
ராசலெட்சுமி கல்லையே பார்த்துக் கொண்டு இருந்தாள். கண்ணன் முகம் தெரிந்தது..
கோமுவின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் ராசலெட்சுமி தவித்தாள். ஓடையும் நிசப்தமாகவே இருந்தது..
ஒவ்வொரு முறையும் தூர் வாரும் போது இந்த ஓடை யாரையோ ஒருத்தரைக் காவு வாங்குது ... என்னதுனு தெரியல ... சுடலைமாடன் கோயிலுக்கு வந்த காமாட்சி கிழவி , ராசலெட்சுமி நடந்து போகும் போது கிசுகிசுத்தது கோமுவின் காதுகளிலும் விழுந்தது ...
அப்போதும் ஓடை அமைதியாகவே இருந்தது...
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்