logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

மயிலாடுதுறை க.இராஜசேகரன்

சிறுகதை வரிசை எண் # 182


அம்மையார் ஹைநூன்பீவி நினைவு சிறுகதைப் போட்டி --2023 அனுப்புநர்: மயிலாடுதுறை க. இராஜசேகரன், 2/204, விவேகானந்தர் தெரு, இ.பி. காலனி, சீனிவாசபுரம், மயிலாடுதுறை-609001 செல்: 9080687670 இமெயில்:rajasekarank1959@gmail.com பெறுநர்: அமைப்பாளர்கள், படைப்பு குழுமம். அன்புடையீர், வணக்கம். படைப்பு குழுமம் அறிவித்துள்ள,அம்மையார் ஹைநூன்பீவி நினைவுச் சிறுகதைப் போட்டி –2023ல் பங்கேற்பதற்காக, நான் எழுதிய “பெற்றவன்” என்ற சிறுகதையை இத்துடன் இணைத்து அனுப்புகிறேன். இதனை பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன். சான்று 1. இந்தச் சிறுகதை என்னுடைய சொந்தக் கற்பனையில் நான் எழுதியது. 2. இதுவரை எந்த வடிவிலும் பிரசுரமாகவில்லை. 3. மொழிபெயர்ப்போ, பிறமொழித்தழுவலோ அல்ல. 4. வேறு எந்த தளத்திலும் இதுவரை பதியப்படவில்லை. என சான்றளிக்கிறேன். மயிலாடுதுறை தங்கள் உண்மையுள்ள, 02.04.2023 க.இராஜசேகரன், மயிலாடுதுறை. சிறுகதை: பெற்றவன் எழுதியவர்: மயிலாடுதுறை க. இராஜசேகரன் வாசல் கதவை தட்டும் ஒசை மெல்லிதாக விட்டு விட்டுக் கேட்டது. மாசி மாதத்தின் அதிகாலைக் குளிருக்கு அடக்கமாக, போர்வையை தலைமுதல் கால்வரை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தேன். “இந்நேரத்தில் யாராயிருக்கும்?” மனசுக்குள் கேள்வி கருவண்டாய்க் குடைந்தது. முகத்தில் மூடியிருந்த போர்வையை விலக்கிப் பார்த்தேன். இருள் விலகி வெளிச்சம் வந்திருந்தது. சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தேன். மணி ஐந்தேமுக்கால் என்றது. வாசல் கதவுக்கு அருகிலேயேதான் எங்களுடைய ஒற்றை அறை இருந்தது. அதனால் அந்த மெல்லிய ஓலியும் தெளிவாகக் காதில் கேட்டது. ஆனால் என் மூளைதான் அழைப்பது யாராயிருக்குமென்று தர்க்கம் பண்ணிக்கொண்டிருந்தது. ‘படபட’வென்று கதவைத் தட்டினால் யாரோ அவசரமாக அழைக்கிறார்கள் என்று நம்மையுமறியாமல் மனதில் ஒரு பதற்றம் தொற்றிக்கொள்ளும். ஆனால் இந்த ஓசை அப்படியில்லை. பூனை நடை மாதிரி மென்மையாக இருந்தது. மற்றவர்களைத் தொல்லைப்படுத்தாமல் அதே நேரம் அழைக்கவும் நினைத்த ஓர் இங்கிதம் அந்த தட்டலில் தெரிந்தது. என் வீட்டில் அழைப்பு மணியெல்லாம் கிடையாது. அறைக் கதவைத் திறந்து வாசலை நோக்கி நடந்தேன். இரவின் தூக்கமின்மை இன்னமும் கண்களில் மிச்சமிருந்தது. ராத்திரி தூங்கும்போது நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது. பெரும்பாலான நாட்களில் என்னுடைய தூக்கத்தைக் கெடுப்பவன் பக்கத்து வீட்டுக்காரன் ராமுதான். வாசல் கதவைத் திறந்தேன். கண்களில் பயம் கலந்த மிரட்சியுடன், மழையில் நனைந்த கோழிக்குஞ்சு போல நடுங்கிக் கொண்டு நின்று கொண்டிருந்தாள் ராதிகா. நேற்றைய சீருடையில் இருந்தாள். “ என்ன ராதிகா! என்னாச்சு? ஏன் இப்புடி ஒடம்பெல்லாம் நடுங்குது?” என்றேன் கனிவுடன். “ மாமா! ராத்திரி அப்பா குடிச்சிட்டு வந்து எங்கிட்ட தப்பா நடந்துக்கப் பார்த்தாரு; எப்புடியோ அவருக்கிட்டேயிருந்து தப்பிச்சி ரூமுக்குள்ள போயி தாழ்ப்பாள் போட்டுக்கிட்டேன். கதவை ஒடச்சிடுறமாதிரி தட்டிக்கிட்டே இருந்தாரு. நான் கதவைத் திறக்கல. என்னோட வாழ்க்கைய பெத்த அப்பனே நாசம் பண்ணிடுவாரோன்னு பயமா இருந்துச்சி. தூக்கமே வரல. ராத்திரி முழுக்க முழிச்சிக்கிட்டே கெடந்தேன். இப்பத்தான் கதவைத் திறந்து பார்த்தேன். கைலி அவிழ்ந்தது கூடத் தெரியாம ஹால்லயே தூங்கிக்கிட்டு கெடக்கிறாரு. ஒரு போர்வைய எடுத்து போர்த்திவுட்டுட்டு வந்திருக்கேன். ராஜேஷ் இன்னும் தூங்கிக்கிட்டிருக்கான். ராத்திரி நடந்தது எதுவுமே அவனுக்குத் தெரியாது” கண்களில் கண்ணீர் பிரவாகமெடுக்க குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள் ராதிகா. “ ஒப்பன் என்னம்மா செய்தான்?” கேட்க வாயும் மனசும் துடித்தன. ஆனாலும், நல்ல வேளையாக அறிவு கடிவாளம் போட்டு விட்டது. வாய் வரை வந்த வார்த்தைகளை வெளிப்படுத்தாமல் கட்டுப்படுத்திக் கொண்டேன். “தப்பா நடந்துக்கப் பார்த்தாருன்னு” ஒரே வாக்கியத்துல ராதிகா சொன்னபிறகு, ‘ ஒன்ன என்னம்மா செய்தான்’னு கேட்குறது அநாகரீகம் இல்லையா? “நம்ம கிராமங்கள்ள பெண்கள் சம்பந்தபட்ட கட்டப்பஞ்சாயத்து எப்ப வந்தாலும், அதுல பெண்களைக் கேள்வி கேட்டே அசிங்கப்படுத்தி பேசுற நாட்டாமை, பஞ்சாயத்தாருக்கும், எனக்கும் அப்புறம் என்ன வித்தியாசம் இருக்க முடியும்?” என்று நினைத்துக் கொண்டேன். ஆண், பெண் சம்பந்தப்பட்ட வழக்குகளில் பெண்களை மட்டுமே குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் ஆணாதிக்க மனோபாவம் இன்னமும் குறையவேயில்லை என்பதுதானே இன்றளவும் நிதர்சனமான உண்மையாக இருக்கிறது ராதிகா, ராமுவின் முதல் வாரிசு. முதல் குழந்தை பெண்ணாக பிறந்ததில் அவ்வளவு சந்தோசப்பட்டவன் ராமு. வீட்டிற்கு மகாலட்சுமியே வந்திருக்கான்னு அவளைக் கொண்டாடியவன், இன்று இப்படி ஒரு செயலைச் செய்துள்ளான். நினைக்கவே அருவருப்பாக இருக்கிறது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக, தாயில்லாத பெண்ணிற்குப் பாதுகாவலனாக இருக்க வேண்டிய அப்பனே அவளிடம் தப்பாக நடக்க முயற்சித்தால், அவள் எங்கே போய் அழுவாள்? யாரிடம் சொல்லி நியாயம் கேட்பாள்? இந்நேரத்துக்கு அவளுக்கு ஆறுதல் சொல்லவும் அடைக்கலம் தரவும், அருகில் உறவென்று யாரும் இல்லை. அதனால்தான் என் வீட்டுக்கதவைத் தட்டியுள்ளாள். சூழ்நிலையின் தாக்கம் பெரிய பாறை ஒன்றைத் தூக்கி வைத்தது போல மனதை அழுத்தியது. “என்னம்மா சொல்ற? ஒங்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணினானா? குடிச்சிட்டா அவனுக்கு கண்ணுகூடவா அவிஞ்சிப்போயிடும்? பெத்த பொண்ணுக்கிட்டயே தப்பா நடந்துக்கப் பார்த்திருக்கானே? இவனெல்லாம் மனுச ஜென்மமா? தூத்தேறி; என்னமோ சொல்லுவாங்கள கதையில, ‘ஆட்டைக்கடிச்சி, மாட்டைக்கடிச்சி கடைசியில மனுசனக்கடிச்சதா’ அதுமாதிரியில்ல இருக்கு இவன் கதை. சரி…. சரி…. இப்போதக்கி நீ உள்ள வந்து உட்காரு. பல்லு தேய்ச்சிட்டு, காப்பி குடி. ராத்திரி முழுக்க தூங்காம இருந்திருக்க. தூக்கம் வந்தா போயித்தூங்கு. ஆனா, இங்கியே இரு. இப்போதைக்கு அங்கே போகாதே. அவனுக்குப் போதை தெளியட்டும். தெளிஞ்சதும் எழுந்திரிச்சி உன்னைத் தேடுவான். வீட்டுல இல்லன்னதும் இங்கதான் வருவான். அவன் வரட்டும். நான் பேசிக்கிறேன்.” ராமுவுக்கு பெத்தவங்க வச்ச பேரு ராமநாதன். ஆனா எல்லாருமே ‘ராமு’ன்னுதான் கூப்பிடுவம்; ராமு எனக்கு பால்ய சிநேகிதன் மட்டுமல்ல; பள்ளித்தோழன்; பக்கத்து வீட்டுக்காரன் எல்லாமே அவன்தான். கிராமத்துல எங்க வீடும் அவன் வீடும் பக்கத்துல பக்கத்துலதான் இருந்துச்சி. ஒன்னு அவன் வீட்டுல நான் இருப்பேன்; இல்லேன்னா அவன் எங்க வீட்டுல இருப்பான்; இதுதான் எப்பவும் நடக்கும். எலந்தமரம், நாவமரம், பனைமரம்னு ஒன்னு பாக்கி வைக்கமாட்டம்: குரங்குமாதிரி மரத்துக்குமரம் தாவுறதுதான் வேலை; உள்ளூரு பள்ளிக் கொடத்துல அஞ்சாவது வரைக்கும் ஒன்னாப்படிச்சம்; அப்புறம் ஆறாவதிலேருந்து எஸ்.எஸ்.எல்.சி வரைக்கும் அஞ்சுமைல் தூரத்திலிருந்த டவுன் பள்ளிக்கொடத்துக்கு சைக்கிள்ள போயி படிச்சம். எஸ்.எஸ்.எல்.சி.யில ரெண்டுபேருமே இங்கிலீஷ்ல பெயிலாயி, அப்புறம் ஒரு வழியா ஐ.டி.ஐ மெக்கானிக் படிச்சு முடிச்சோம். ஒன்றாகவே இந்த தனியார் நூற்பாலையில வேலைக்கும் சேர்ந்தோம். கலியாணந்தான் வேற வேற சமயத்துல நடந்துச்சி. ராமு தன் அத்தை மகள் ராஜேஸ்வரியையே கலியாணம் பண்ணிக்கிட்டான். குவார்ட்டர்ஸிலும் அடுத்தடுத்த வீடு. ஒரே சுவருதான் ரெண்டு வீட்டையும் பிரிக்கும். நாலு சதுரத்துல ஹால், ரூம், கிச்சன், டாய்லெட், பாத்ரூம் எல்லாமே அடக்கம். என் வீட்டுல கடுகு வெடிச்சாலும் அவன் வீட்டுல காதுல விழும். என் மனைவி நீலாவுக்கும், ராமுவின் மனைவி ராஜேஸ்வரிக்கும் அவ்வளவா ஒத்துப் போறதில்லை. அடுத்தடுத்த வீடுன்னாலே, பொம்பளைங்களுக்குள்ள உப்புப்பெறாத விசயத்துக்குக்கூட பிரச்சினை வந்துக்கிட்டேதான் இருக்கும். நாட்டு நடப்பு இதுதானே? ஆனா, ஆம்பளைங்க நாங்க பெருசா எதையும் கண்டுக்கிறதில்லை. நல்ல நண்பர்களாகவே இருந்தோம்; பிள்ளைங்களும் அப்படியே வளர்ந்தார்கள். ராமுவும், அவன் பொண்டாட்டியும் பத்து, பன்னண்டு வருசம் அன்னியோன்னியமாய் நல்லாவே வாழ்ந்தாங்க; எல்லாமே நல்லாத்தான் போயிக்கிட்டிருந்துச்சி: சொற்ப சம்பளந்தான்னாலும் கட்டுசெட்டா வாழ்க்கை நடத்துனாங்க; இரண்டாவதா, மகன் ராஜேஷ் பிறந்ததும், ராஜேஸ்வரிக்கு அடிக்கடி நோவு வந்துக்கிட்டேயிருந்துச்சி. வைத்திய செலவு அதிகரிச்சிக்கிட்டே போச்சு. ஜாதகம், ஜோஸ்யம்னு பார்த்தாங்க. “ஆம்பளப்புள்ள பொறந்த நேரம் சரியில்ல. கிரக அமைப்பு நல்லாயில்ல. அதனாலதான் குடும்பத்தை ஆட்டிவைக்குது”ன்னு ஜோஸ்யக்காரங்க சொன்னதா, சொல்லிக்கிட்டிருந்தான். “வீட்டுக்குள்ள வந்தாலே, ஏன்டா வர்றம்னு இருக்கு மச்சான். ஒரே பிரச்சினை; கொஞ்சங்கூட நிம்மதியில்ல; எப்பப்பாரு ஒடம்பு சரியில்லன்னு பொண்டாட்டி படுத்தி வைக்கிறா; அவளுக்கு வைத்தியம் பண்ணுறதா? பொறந்த புள்ளய பாக்கிறதா? தாய்ப்பாலு இல்ல; புட்டிப்பாலு வாங்கிக்குடுக்க நெறையா செலாவாவுது; பணம் பெரும் பிரச்சினையாயிருக்கு” அடிக்கடி புலம்ப ஆரம்பித்தான் ராமு. எனக்கும் குறைவான சம்பளந்தான்; அவனுக்கு உதவக்கூடிய அளவில் நானில்லை; இருந்தாலும், ‘ஏங்கல் தாங்கலு’க்கு நானும் அப்பப்ப அம்பது , நூறுன்னு குடுத்து உதவிக்கிட்டுதான் இருந்தேன். அதுக்குமேல என்னாலயும் ஒன்னுஞ்செய்யமுடியல. அதுக்கே என் பொண்டாட்டி முணுமுணுத்துக்கிட்டு இருந்தா. ஒரு வருசம் அங்க இங்கன்னு கடனஒடன வாங்கி ஓட்டினான். அதுக்குமேல அவனுக்கு கடன் குடுக்க யாரும் முன் வரலை. ஒரே பொலம்பல். அவனோட பொலம்பலக் கேட்க முடியாம, அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க, கதவைச் சாத்திக்கிற நெலமைக்கு வந்துட்டாங்க. என் பொண்டாட்டியும் அதுல சேர்த்திதான். விரக்தியின் விளிம்புக்கே போயிட்டான் ராமு. ஒருகட்டத்தில எவனோ நண்பன் கூப்பிட்டான்னு சாக்குபோக்குச் சொல்லிக்கிட்டு சரக்கு அடிக்கப் போக ஆரம்பிச்சான். ஆரம்பத்துல அவன் வாங்கிக்குடுத்து ருசி காட்டிவுட்டான். அப்பவே நான் எச்சரித்தேன். ‘குடிப்பழக்கம் வேணாண்டா மச்சான்’னு சொன்னேன். அவன் கேட்கலை. “நீ சும்மாயிருடா மச்சான். உனக்கு அதோட ‘டேஸ்ட்’ தெரியல. அதான் இப்புடி அட்வைஸ் பண்ணிக்கிட்டு நிக்குற; ஒரு நாளைக்கு வந்து ஒரு ‘பெக்’ அடிச்சிப்பாரு; அப்புறம் இப்படியெல்லாம் பேசமாட்டே”ன்னு சொல்லி என் வாய்க்கு பூட்டு போட்டான். பால்ய நண்பன்னாலும், குடிக்கணும்னு முடிவு பண்ணி டாஸ்மாக் கடையில போயி நிக்கிறவனை, குடிக்காம தடுத்து நிறுத்தி இழுத்துக்கிட்டு வர்ற அளவுக்கு எனக்கு தெம்பு, திராணியெல்லாம் இல்ல. அடுத்த விட்டு விவகாரங்களில் நான் தலையிடுவதை என் மனைவியும் விரும்பல. நான் எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன். அவன் கேட்கல. ஒரு கட்டத்தில் ‘எப்படியாச்சும் போடா’ன்னு விட்டுட்டேன். நாளொரு நண்பனும் பொழுதொரு சரக்குமாக டாஸ்மாக் கடையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தான் ராமு. அவனுக்குன்னு எங்கேருந்துதான் ஆளுங்க சிக்குறாங்களோன்னு எனக்கே ஆச்சரியமாயிருக்கும். கடை வாசலை மிதிச்சி கொஞ்சமாச்சும் ‘அதை’ ருசிச்சாத்தான் மனசு அடங்குதுன்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சான். அளவோடு போட்டான்னா, அமைதியா வந்து சோத்தைத் தின்னுட்டு படுத்துடுவான். அளவு அதிகமாயிட்டுதுன்னா, ஒரே அலப்பறைதான். சோத்துத் தட்டெல்லாம் ரோட்டுக்குப் பறக்கும். கண்ணு மண்ணு தெரியாம பொண்டாட்டி, புள்ளைங்கள அடிப்பான். வாயிலேருந்து வர்ற வசனங்களை எழுத்தில் எழுத முடியாது ஒருதடவை அவன் அடிச்சு தள்ளினதுல சுவரில் ‘மடார்’னு மோதி மல்லாக்க சரிந்து விழுந்துச்சி ராஜேஸ்வரி. பின் மண்டையில பலத்த அடி. மண்டை வீங்கிட்டுது. ரத்தம் கட்டிடுச்சி. ரத்தக்கீற்று பிசுபிசுன்னு இருந்துச்சு. அரசாங்க ஆசுபத்திரிக்கு கூட்டிட்டுப் போயி நானும் நீலாவுந்தான் வைத்தியம் பண்ணினோம். மருந்து வச்சி கட்டுப்போட்டு அனுப்பிவுட்டாங்க. ஆனா, கொஞ்ச நாள்ளயே சித்தம் கலங்கிப்போச்சு. திரும்பவும் ஆசுபத்திரிக்கு அழச்சிக்கிட்டுப்போயி, ஸ்கேன் பண்ணிப் பார்த்ததுல சிறுமூளையில ரத்தம் பரவி ஒறஞ்சிப் போச்சுன்னு டாக்டருங்க சொன்னாங்க. சரியான வைத்தியம் பண்ண வழியில்லாம பொண்டாட்டிய அம்போன்னு விட்டுட்டான் ராமு. ராஜேஸ்வரி கண்டமேனிக்கு பேச ஆரம்பிச்சுட்டுது. நிதானமே இல்ல. அதுவா சிரிக்கும். அதுவா அழுவும் எதுக்கு சிரிக்குது, எதுக்கு அழுவுதுன்னு யாருக்கும் தெரியாது. அதுக்கப்புறம் கொஞ்ச நாள்தான் உயிரோட இருந்துச்சி. அது செத்து போனப்ப ராதிகாவுக்கு பத்து வயசு. ராஜேஷ்கண்ணாவுக்கு ஏழு வயசு. பொண்டாட்டி செத்துபோனதும் கொஞ்ச நாளு ஒழுங்கா இருந்தான் ராமு. குடிப்பழக்கத்த வுட்டுட்டான். ‘என்ன அம்போன்னுவுட்டுட்டு போயி சேர்ந்துட்டாளே மகராசி’ன்னு செத்துப்போன பொண்டாட்டிக்காக வாய்விட்டு அழுதுக்கிட்டிருந்தான். “குருவித் தலையில பனங்காயைத்தூக்கி வச்சது மாதிரி” ராதிகா தலையில குடும்பப் பொறுப்பை கொஞ்சம் கொஞ்சமா தூக்கி வச்சிட்டான் ராமு. பத்து வயசுலயே சோறாக்க ஆரம்பிச்சாள் ராதிகா. அது இன்னிவரைக்கும் தொடர்ந்துக்கிட்டு இருக்குது. இதுக்கெடையில, ரெண்டாங் கல்யாணம் பண்ணிக்கணும்னு முயற்சிப் பண்ணிக்கிட்டிருந்தான். தெரிஞ்சவங்க, சொந்த பந்தங்க எல்லாருக்கிட்டயும் பொண்ணு பாக்கச்சொல்லி நடையா நடந்துக்கிட்டிருந்தான். அவனோட குடிப்பழக்கம் பத்தி தெரிஞ்சு வச்சிருந்ததால, யாருமே பொண்ணு குடுக்க முன்வரல. “பொண்ணு எப்பவேணா பெரியமனுசியாயிடுவா. இப்ப ஒனக்கு இன்னொரு கலியாணம் தேவையா”ன்னு நெறையபேரு கேட்டாங்க. மொடாக்குடியன்னு பேரு வாங்குனது வேற ரொம்ப எடஞ்சலா இருந்துச்சி. பொண்டாட்டியை அடிச்சே கொன்னுட்டான்னும் அவன் காதுபடவே பேசினாங்க. இப்படிப்பட்ட ஒருத்தனுக்கு இரண்டாம் தாரமாக கழுத்தை நீட்ட எந்த புண்ணியவதியும் தயாராயில்லை. ரெண்டுவருசம் முயற்சி பண்ணிப் பார்த்தான். குடிப்பதை முற்றிலும் நிறுத்தியிருந்தான். அப்படியிருந்தும் ஒன்னும் தகையல. ஒன்றிரண்டு முதிர்கன்னிகள் ரெண்டாந்தாரமாய் கழுத்தை நீட்ட தயாராயிருந்தாலும், யாரோ பெத்த ரெண்டு புள்ளைங்களுக்கு பொங்கிப்போடத் தயாராயில்லை. வாலிப வயதில் உடற்பசிக்குத் தீனி போட முடியாமல் தவித்தான். இதற்கிடையில் ராதிகா பருவமடைந்தாள். மஞ்சள் நீராட்டுக்கு வந்த அம்மா வழி தாத்தா, பாட்டி இருவரும் பேத்தியை தங்களோடு அழைத்துச் செல்வதாகக் கூறினர். ஆனால், பிடிவாதமாக மறுத்துவிட்டான். வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது. பொண்டாட்டி செத்துபோன சோகத்தை மறக்க கொஞ்சமாய் குடிப்பதாக சொல்லிக்கொண்டாலும், ரெண்டாந்தாரம் அமையலையே என்பதும் , இரவு நேரங்களில் தகிக்க வைக்கும் உடற்பசியும் அவனை மீண்டும் குடிகாரனாக்கியதே உண்மை. இப்போது பெற்ற மகளையே பெண்டாள நினைக்கிற அளவுக்கு காமம் அவன் தலைக்கேறி அடாத செயல் செய்யத் துணிந்துள்ளான். “ இதற்கு என்ன தீர்வு காண்பது? இனிமேல் ராதிகா அவனுடன் ஒரே வீட்டில் வசிப்பது என்பது சிங்கத்தின் கூண்டுக்குள்ளே சிறுமுயலை தூக்கிவீசுவதைப் போன்றதாகும். ராமு மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தால், நிச்சயம் போக்ஸோ சட்டம் பாயும். ஏழு ஆண்டுகளோ, பத்தாண்டுகளோ சிறைத்தண்டணை கிடைக்கும். அப்பனை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு, அவன் பெற்ற பிள்ளைகளை யார் வளர்ப்பது? அதிலும் ராதிகா வயது வந்த பெண். அவளும் படித்துக் கொண்டு குடும்பத்தையும் தாங்கி வருகிறாள். குடிகார அப்பனின் அடாவடிகளைப் பொறுத்துக்கொண்டு அவனுக்குப் பொங்கிப் போடுகிறாள். தம்பியையும் கவனித்து வளர்க்கிறாள். ராதிகாவைப் பொறுத்தவரை, அப்பன் ரெண்டாம்தாரமாக ஒருத்தியை கொண்டுவந்து, அந்த சித்தியிடம் மொத்தடி படுவதைவிட, வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, பள்ளிக்கு செல்வது ஒரு சுமையாகத் தெரியவில்லை அவளுக்கு. படிப்பிலும் படுசுட்டியாகவே இருக்கிறாள்.” யோசித்தபடியே நீலா கொண்டுவந்து வைத்த காப்பியைக் குடித்து முடித்தேன். அன்று ஞாயிற்றுக்கிழமைதான். விடுமுறை என்பதால் சாவகாசமாக யோசித்து ராமுவிடமும் பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என்று யோசித்தபடி செய்தித்தாளில் கண்களை மேயவிட்டேன். காலை எட்டுமணியளவில் “அங்கிள், அக்காவைக் காணோம். இங்கே இருக்காளா?” என்றபடி வந்தான் ராஜேஷ்கண்ணா. “ ம்…இங்கேதான் இருக்குறா, உங்கப்பன் எழுந்திரிச்சிட்டானா? இல்ல இன்னமும் தூங்கிக்கிட்டுதான் இருக்கானா?” “தூங்கிக்கிட்டுதான் இருக்காரு” “ சரி அவன் தூங்கட்டும். நீ போயி டிபன் சாப்பிடு. அக்காவையும் சாப்பிடச் சொல்லு. அவன் போதை தெளிஞ்சி வரட்டும். அதுவரைக்கும் உங்க வீட்டுக்கு போக வேணாம்” பத்துமணிக்குமேல் எழுந்து வெளியே வந்தான் ராமு. “அன்பு! பசங்களைக் காணோம். இங்கே வந்தாங்களா?” என்றபடி தள்ளாடியபடி வாசலில் வந்து நின்றான். “ம்…இங்கதான் இருக்காங்க. ஒனக்கு இன்னும் போதைத் தெளியல போலிருக்கு. போயி தலையில தண்ணியவூத்தி குளிச்சிட்டு வா அப்புறம் பேசலாம்” என்றேன். “ இல்ல அவள அனுப்பு. எனக்கு சோறு வேணும். வயிறு ‘கபகப’ன்னு எரியுது. காலையில எழுந்திரிச்சதும் சோறு வடிக்காம இங்க வந்து என்ன பண்ணுறா?” “ம்… நாளைக்கு அவளுக்கு பரிட்சை இருக்கு. அதுக்கு படிச்சிக்கிட்டு இருக்கா. எம்பொண்ணும் அவளும் சேர்ந்து படிக்கிறாங்க” “இவ என்னா ஐ.ஏ.எஸ் படிச்சி கலெக்டர் வேலைக்குப் போகப்போறாளா? பெத்த அப்பனுக்கு சோறு பொங்கி வைக்காம, அப்புடி என்ன படிக்கிறா அவ?” “இனிமே அவ ஒனக்கு சோறு பொங்கி போட மாட்டா; ஒன் வீட்டுக்கும் வரமாட்டா; வேணுமின்னா நீயே சோறாக்கித்தின்னு; முடியலைன்னா கிளப்புகடையில போயி தின்னுட்டு வா” “அதச்சொல்ல நீ யாரு? நாப்பது வருசத்து நண்பனாச்சேன்னு பாக்கிறேன். நீ ரொம்ப ஓவராப் பேசுற! எதுக்கு எம்பொண்ண ஒன் வீட்டுல வச்சிருக்க? நீ என்னா அவள வச்சிருக்கியா? அவள மொதல்ல என் வூட்டுக்கு அனுப்பிவுடு” உச்சஸ்தாயியில் கத்தினான் ராமு. “வார்த்தய அளந்து பேசுடா குடிகாரப்பயலே! ஒன்னமாதிரி என்னையும் கேவலமானவன்னு நெனச்சிக்கிட்டியா? பெத்த பொண்ணையே பொண்டாள நெனச்சிருக்கியேடா படுபாவி. நீயெல்லாம் உருப்படுவியாடா? “அவ எம்பொண்ணு. அவள நான் அடிப்பேன், உதைப்பேன், என்னவேணாலும் செய்வேன். அதைக் கேக்க நீ யாருடா?” “நீ அடிச்சப்பவோ, உதைச்சப்பவோ நான் ஒன்ன எதுவும் கேக்கலை. நீ அவள பொண்டாள நெனச்சதாலத்தான் நான் கேக்குறேன்.” “இப்ப அவள அனுப்ப முடியுமா, முடியாதாடா?” “ முடியாதுடா, ஒன்னால என்னா செய்ய முடியுமோ செய்துக்க” கோபமாகப் பேசினேன் நான். “நான் போலீசுல போயி கம்ப்ளெயிண்ட் குடுப்பேன்”. “ நானும் ராதிகாவை அழச்சிக்கிட்டு இப்பவே மகளிர் காவல் நிலையத்துக்குப் போறேன். முறைப்படி குற்றச்சாட்டை பதிவுபண்ணி உம்மேல எஃப்.ஐ.ஆர். பதிவு பண்ணிட்டு வர்றேன். ‘போக்சோ’ சட்டம்னு ஒன்னு இருக்கு. தெரியும்ல. பத்து வருசத்துக்கு ஒன்ன கம்பி எண்ண வச்சிடுவாங்க.” ஏய் நானும் போறேன்டா! என்னோட மைனர் பொண்ணைக் கடத்தி வச்சிருக்கிறதா உன் மேல கம்ப்ளெயிண்ட் குடுக்கிறேன். “வாடா பார்த்துடுவோம். யாரோட கம்ப்ளெயிண்ட் எடுபடுது. யாரை போலீஸ் அரெஸ்ட் பண்ணுறாங்கன்னு பார்த்துடுவோம்” சொல்லியபடி வண்டியை ஸ்டார்ட் செய்தேன் நான். ராதிகாவும் வாசலுக்கு வந்தாள். “என்னை மன்னிச்சுடும்மா. நான் ராத்திரி போதையில உன்னைக் கட்டிப்புடிச்சது தப்புதாம்மா. என்னை மன்னிச்சுடும்மா. இனிமே அப்படி நடந்துக்கமாட்டேம்மா. செத்துப்போன என் பொண்டாட்டி ராஜேஸ்வரி மேல சத்தியமா சொல்லுறேம்மா. போலீசுக்கு போவாதம்மா. நம்ம குடும்ப மானமே கப்பலேறிடும்மா” அவளது கைகளைப்பற்றி கெஞ்சினான். அவனது கையை உதறி தன்னை அவனிடமிருந்து விடுவித்துக்கொண்டாள் ராதிகா. “இதப்பாரு, ஒன்ன அப்பான்னு சொல்லவே எனக்கு நாக்கு கூசுது. இனிமே புதுசா ஒன்னும் நம்ம குடும்ப மானம் கப்பலேற போறதில்லை. ஏற்கனவே எல்லாத்தயும் தொலைச்சிட்டுதான் நிக்கிறம். எப்ப இந்த அளவுக்கு நீ தரம் தாழ்ந்து போயிட்டியோ, இனிமே நான் உன்னை நம்பத் தயாராயில்லை. எங்க அம்மாவை அடிச்சிப்போட்டு, அது பைத்தியமாயி செத்துப்போனப்பவே, ஒம்மேல போலீசுல கம்ப்ளெயிண்ட் குடுத்திருந்தா, இந்நேரத்துக்கு நீ ஜெயில்லதான் இருந்திருப்ப. அப்போ எனக்கு வெவரம் பத்தல. ஆனா, நான் இப்போ தெளிவா இருக்கேன். போக்சோ சட்டத்துல உம்மேல வழக்கு பதிவு பண்ணி உன்னை உள்ளே தள்ளாமல் ஓயமாட்டேன்” “இத்தினி வருசம் சோறுபோட்டு வளர்த்த அப்பனுக்கு நீ காட்டுற நன்றி இதுதானா? பெத்த அப்பன் மேலயே கேசு போடப்போறியா? ஒன்னவுட்டாதானே நீ கேசு போடுவ. இப்பவே உன்னை வெட்டிப் போட்டுட்டு மறுவேலை பாக்குறேன்”. சொல்லிக்கொண்டே அரிவாளை எடுக்க தன் வீட்டுக்குள் நுழைந்தான் ராமு. “மாமா ஒரு பூட்டுசாவி குடுங்க. அவர உள்ளவச்சு பூட்டிடுறேன்” சொல்லிக்கொண்டே அப்பனை உள்ளே வைத்து வாசல்கதவைப் பூட்டினாள் ராதிகா. வீட்டிற்கு கொல்லைவாசல் இல்லையென்பதால் அவன் தப்பிக்க வழியேயில்லை. உடனடியாக மகளிர் காவல் நிலையம் நோக்கிப் புறப்பட்டோம். அப்போது எதிரே போலீஸ் வாகனம் ஒன்று அவர்களுடைய குடியிருப்பு பகுதியை நோக்கி வந்துகொண்டிருந்தது. “இங்கே நீலாங்கிறது யாருங்க?” கேட்டுக்கொண்டே வாகனத்திலிருந்து இறங்கினார் பெண் உதவி ஆய்வாளர். “என் மனைவிதான் மேடம்.” என்றேன் நான். “ அவங்கள கூப்பிடுங்க. மைனர் பொண்ணுக்கிட்ட பெத்த அப்பனே தப்பா நடந்துக்கப் பார்த்த்தா போன்ல கம்ப்ளெயிண்ட் பண்ணினாங்க. யாரு அந்த பொண்ணு. அந்தப்பொண்ணோட அப்பா எங்கேயிருக்காரு?” போலீஸ் வாகனத்தைக் கண்டதும் குடியிருப்புவாசிகள் கூடிவிட்டனர். என் மனைவியும் வெளியே வந்தாள். “நாந்தான் மேடம் போன் பண்ணிணேன். இந்தப்பொண்ணு ராதிகாதான் பாதிக்கப்பட்டவ. என் மகள்கூட பத்தாம்வகுப்பு படிக்கிறா. இவளோட அப்பன் ஒரு குடிகாரன். அம்மா செத்துப்போயிட்டாங்க. தம்பி ஒருத்தன் இருக்கான்.ராத்திரி குடிச்சிட்டுவந்து, பெத்த பொண்ணுன்னுகூட பாக்காம தகாதகாரியம் பண்ணப் பார்த்திருக்காரு அந்தாளு.” “ஓ அப்படியா? அந்தாளு எங்க இப்ப?” “வீட்டுக்குள்ள போட்டு பூட்டிவச்சிருக்கேன் மேடம்” தைரியமாக பதில் சொன்னாள் ராதிகா. “காவல் நிலையத்துக்கு வந்து புகாரா எழுதித் தருவியா? என்ன நடந்துச்சோ அதை எழுதித் தரணும்.” “நிச்சயமா எழுதித்தர்றேன் மேடம். வழக்கு கோர்ட்டுக்கு வரும்போது அங்கேயும் வந்து, என்ன செய்தார்னு சொல்றேன் மேடம்” சரி… இப்போ கதவைத்திற. அவர அரெஸ்ட் பண்ணிக்கூட்டிக்கிட்டு வர்றேன். “ மேடம், அவன் ராதிகா மேல ஏகப்பட்ட கோபத்துல இருக்கான். ‘வெட்டிப்போட்டுறேன்’னு சொல்லிட்டு அரிவாள் எடுக்கப் போனவனை உள்ளே வச்சிப் பூட்டியிருக்கு. அதனால இப்ப ராதிகா கதவத்திறந்தா, பாய்ஞ்சுவந்து வெட்டினாலும் வெட்டிப்புடுவான்.” என்றேன் நான். “ஒன்னும் பயப்புடாதீங்க. நானே எங்க கான்ஸ்டபுள விட்டு கதவத்தொறக்க சொல்லுறேன்.” என்றபடி இரண்டு கான்ஸ்டபுள்களைப் பணித்தார். அவர்களின் மிரட்டலில் பயந்துபோய் அரிவாளைப் போட்டுவிட்டு வெளியே வந்தான் ராமு. உடனே அவன் கைகளில் விலங்கை மாட்டினர். தரதரவென்று இழுத்துச் சென்று ஜீப்பில் ஏற்றினர். நானும் ராதிகாவும் காவல் நிலையத்தை அடைந்தபோது, ராமுவை லாக்கப்பில் வைத்திருந்தனர். துணை ஆய்வாளர் முன்பாக அமர்ந்து எழுத ஆரம்பித்தாள் ராதிகா. எப்படி எழுதவேண்டும் என சொல்லித்தந்தேன் நான். “அந்தாளு என்ன செஞ்சாரோ அதை அப்படியே எழுதித்தரணும். அப்பதான் கேசு நிக்கும்.” என்றார் துணை ஆய்வாளர். “நேத்து ராத்திரி குடிச்சிட்டு வந்த என் அப்பா ராமு , ‘எனக்கு நீ வேணும்’னு சொல்லிக்கிட்டு என்னைக் கட்டிப்புடிச்சாரு. நான் திமிறிக்கிட்டு விலகினேன். சட்டுன்னு என்னைக் கீழேதள்ளி என்னோட மாருல கைய வச்சு அழுத்தி கசக்க ஆரம்பிச்சிட்டாரு. வலி தாங்க முடியல. என்னோட பலங்கொண்டமட்டும் அவர புடிச்சித்தள்ளிவுட்டுட்டு, எழுந்து ரூமுக்குள்ள போயி தாழ்ப்பாள் போட்டுக்கிட்டேன். ராத்திரி முழுக்க கதவை ஒடச்சிடுறமாதிரி தட்டிக்கிட்டே இருந்தாரு. ‘எனக்கு நீ வேணும். எனக்கு நீ வேணும்’னு பொலம்பிக்கிட்டே இருந்தாரு. எங்கிட்ட தகாத முறையில நடந்துக்கிட்ட அவருமேல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாள் ராதிகா.” “இதுபோதும்மா. நிச்சயம் பத்துவருசத்துக்கு உள்ள தள்ளிடுவாங்க. பயப்படாம போயி உன்னோட படிப்பைக் கவனி” என்றார் அந்த பெண் அதிகாரி. (1983 சொற்கள்) **********************

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in