Mohamed Mahroof
சிறுகதை வரிசை எண்
# 172
*மூன்று நாள் காதல்*
'வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருளையும் உருளுதடி'
"அப்டீன்டா என்னடி.."
"என்னது.."
மறுபடியும் அந்தப் பாடலை பாடி அந்த இடத்தில் வந்து நிறுத்தினேன்..
அவள் என்னை அப்படியே பார்த்தாள்..
"என்னடி பாக்குறே.."
"ஒனக்கு சரியான திமுருடா.."
"ஏ என்னன்னு தெரியாமதேன கேட்டேன் அதுக்கு ஏன்டி மொறய்க்கிரே.."
"எப்ப பாரு ஒனக்கு அதே நெனப்புடா.."
"வெவரங் கேட்டா வெவரஞ் சொல்லு அத உட்டுட்டு தேவயில்லாமைலா பேசக்குடாது.."
"நீ வெவரந் தெரியாம கேட்டியா.."
"ஆமடி.."
"அப்ப ஏன்டா அங்க பாத்துக்குட்டு கேட்டே.."
"எங்க பாத்துக்குட்டு கேட்டாஹ.."
"நீ சரி வரமாட்டே நாங் கெளம்புறேன்.."
"ஏய் என்னன்டு சொல்லீட்டுப் போடி.."
"எனக்கு வர்ற ஆத்துரத்துக்கு.."
"சரி சரி நா.. ஒன்னுங் கேக்கல ஒக்காரு.."
"மூடவுட் பண்ணீட்டு உக்காருவா.. மூஞ்சப் பாரு.. இனிமே எங் கண்ணுலயே முழிக்காதே.."
என்று எழுந்து நடந்தாள்..
நான் அவள் கையைப்பிடித்து
"ஏ.. போகாதடி.." என்றேன் அவள் திரும்பி ஒரு முறை முறைத்து விட்டு கையை உதறி விடுவித்து நகர்ந்தாள்...
"ஏ.. இன்னக்கி ஞாயித்துக் கெழம லீவு வேஸ்டாப் போயிருன்டி.. வாடி.." என்றேன்
அப்போதும் அவள் திரும்பி பார்க்கவில்லை அவளின் நடை வேகமானது..
'போய்ட்டா.. போய்ட்டா.. நம்ம வாய் சும்ம கெடக்காது.. இந்த நேரம் பாத்தா அந்தப் பாட்டு நம்ம ஞாபகத்துல வரனு.. அவ.. என்ன ஞாபகத்துல எழுதுனானோ.. நமக்கு ஏ.. இல்லாத சந்தேகம்லா.. வரனு.. பாரு நம்ம வாய வச்சிக்கிட்டு சும்ம இருக்காம கோவிச்சிக்கிட்டு போய்ட்டா.. எப்ப சமாதானமாவப் போறாளோ..' என்று நினைத்து புலம்பியபடி அந்த பார்க்கை விட்டு எழுந்து நடந்தேன்...
நடக்கும் பொழுது
அவளை முதன்முதலாக சந்தித்தது ஞாபகத்துக்கு வந்தது...
"சின்னமலைலா எறங்கு... சார் உள்ள போங்க சார் வர்ற ஆளுங்களுக்கு வழிய உடுங்க சார்.." என்ற கண்டக்டரின் பேச்சை யாருமே கேட்கவில்லை... பேருந்து நிரம்பி வழிந்தது..
'இந்த கூட்டத்துல எங்க நகருறது' என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதுதான் அவள் படிகளில் ஏறி உள்ளே வந்தாள்..
வந்தவள் கையில் சரியாக வைத்திருந்த சில்லறையை கொடுத்து டிக்கெட் வாங்கி நகர்ந்தாள்.. நகர்ந்தவள் சரியாக எனக்கு அருகில் முதுகு காட்டி நின்று விட்டாள்..
கோகுல் சாண்டல் பவுடர் வாசனை என்னை ஈர்த்தது..
அந்த வாசத்தில் பெருமூச்சு ஒன்று என்னையறியாமல் வெளிப்பட்டது..
எனது மூச்சுக் காற்று அவளது முதுகை லேசாக சுட்டிருக்க வேண்டும்..
லேசாக என்னை திரும்பிப் பார்த்தாள்..
அந்தப் பார்வையில் நான் கொஞ்சம் இடைவெளியை அதிகப் படுத்தினேன்..
சிறிது நேரத்தில் மறுபடியும் என்னை திரும்பிப் பார்த்தாள்..
ஒரு முறையல்ல இரண்டு மூன்று முறை திரும்பித் திரும்பி பார்த்தாள்...
எனக்கும் ஆவல் வந்தது..
இடையில் எத்தனை நிறுத்தங்களில் ஆட்கள் ஏறியும் இறங்கியும் இங்குமங்குமாக நகர்ந்தாலும் நாங்கள் இருவரும் அந்த இடத்தை விட்டு நகரவில்லை..
எனக்கு சிம்சனில் இறங்க வேண்டும் ஆனாலும் அவளுடன் எல் ஐ சியிலேயே இறங்கினேன்..
இறங்கினாலும் சிம்சனுக்கு நேர் மாற்று திசையில் ஸ்பென்சரை நோக்கி நடந்தேன்..
அவள் அந்த திசையில் போய்க் கொண்டிருந்தாளே..
நான் அவளைத் தொடர்ந்து வருவதை திரும்பித் திரும்பி பார்த்து உறுதி செய்து கொண்டே நடந்தாள்..
நானும் நடந்து ஸ்பென்சரை அடைந்து அவள் எங்கே செல்கிறாள் என்பதை பார்த்து தெரிந்து கொண்டு அதன் பிறகு நான் போக வேண்டிய இடத்திற்கு போனேன்..
மறுநாள் காலையில் கொஞ்சம் முன்னதாகவே புறப்பட்டு சின்னமலை ஸ்டாப்பில் இறங்கி காத்திருந்தேன்...
நான் வந்த கால் மணி நேரத்தில் அவளும் வந்தாள்..
என்னைப் பார்த்ததும் மனதிற்குள் அதிர்ந்திருக்க வேண்டும் காட்டிக் கொள்ளாமல் பார்த்து தலையை குனிந்து கொண்டாள்..
பஸ் வரும் வரை பல முறைகள் என்னை ஜாடையாக பார்த்துக் கொண்டாள்..
பேருந்து வந்ததும் அவளை ஒட்டினாற் போல் நின்று ஏறி நேற்றைப் போலவே இன்றும் அவளருகில் கோகுல் சாண்டல் வாசம் முழுவதையும் உறிஞ்சி எடுத்து விட்டேன்..
அடுத்த நாளும் இது தொடர்ந்தது...
மூனாவது நாள் வேலை முடிந்து திரும்பும் போது நான் எதிர்பார்க்காத ஒன்று நடந்தது...
டிவிஎஸ் நிறுத்தத்தில் அவள்..
மனதிற்குள் உற்சாகம்..
ஏறி என்னருகே வந்து நின்றாள்... மனதிற்குள் சந்தோசத்துடன் கொஞ்சம் தைரியமும் வந்து சேர்ந்து கொண்டது..
இன்றைக்கு எப்படியாவது அவளிடம் பேசி விட வேண்டும் என்று நினைத்தபடி அவளை இன்னும் நெருங்கி வந்து நின்றேன்..
எனது எண்ணத்தை அவள் எளிதாக்கினாள்..
"எங்க வொர்க் பண்றீங்க நீங்க.." என்றாளவள்..
மனதிற்குள் பட்டாம்பூச்சி பறந்தது..
" பீ... பீ... பீ.ஆரன் சன்ஸ்ல.." வாய் குழறி வார்த்தை வெளிவந்தது எனக்கு...
தொடர்ந்து அவள்..
"வீடு..."
"வீடு.. க்ரோம்பேட்ட.." என்றேன்
"அப்ப சின்னமலைல எறங்குறீங்க..."
"அது அது..." என்று நான் இழுத்தேன்..
அவளே தொடர்ந்தாள்..
"நா.. ஸ்பென்சர்லதா வொர்க் பண்றேன் அதா பாத்தீங்களே..
நாங்க நாளக்கி வீடு மாறுரோம்.. நந்தனத்துக்கு போறோம் நாளைலருந்து அங்கதா நான் பஸ் ஏறுவேன் நீங்க தேடிக்கிட்டிருப்பீங்கன்னுதான் இப்ப ஒங்கல்ட்ட பேசுனேன்.."
அவளின் அந்த அணுகுமுறை எனக்கு மேலும் தைரியத்தைத் தந்தது பெயர் கேட்டாள்..
நானும் கேட்டேன்..
குடும்பம் பற்றி கேட்டாள்..
நானும் கேட்டேன்..
கருத்தொருமித்தோம்...
காதலாகினோம்..
எங்கள் அலுவல் நேரத்தை விட காதல் நேரம் கூடுதலாகியது..
பரஸ்பரம் வீடுகளில் நிறைய பொய் சொன்னோம்...
ஆரம்பத்தில் வாங்க போங்க என்று பேசி வந்த நாங்கள் வா போ என்ற உரிமை எடுத்துக் கொள்ள நாளெடுத்துக் கொண்டோம்..
அதே போல வாடி போடா என்ற அளவிற்கு போவதற்கும் நாளெடுத்துக் கொண்டோம்...
இன்று எங்கள் காதலின் வயது இரண்டு...
இதோ கோபித்துக் கொண்டு போய் விட்டாள்..
சமாதானப் படுத்த வேண்டும்..
நல்லவள்தான் ஆனால் கோபக்காரி...
பார்க்கை விட்டு வெளியே வந்து இடமும் வலமுமாக பார்த்தேன் ஆளைக் காணவில்லை...
அதற்குள் எப்படி போயிருப்பாள்..
ஒரு வேளை உள்ளேதான் எங்கேயும் மறைந்திருக்கிறாளோ என்று நினைத்து பார்க்கிற்குள் மறுபடியும் வந்து முழுமையாக நோட்டமிட்டு இல்லாமல் போகவே நொந்து போய் வெளியே பஸ் நிறுத்தத்திலும் அங்குமிங்கும் தேடி இல்லாமல் போகவே முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்..
அவளிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் பேச வேண்டும் ஏதாவது ஏடாகூடமாக பேசி அவளுக்கு கோபம் வந்து விட்டால் மூஞ்சிலடித்தாற்போல பேசி விட்டு நடந்து விடுவாள் அவளாக சமாதானமாகி வரும் வரை காத்திருக்க வேண்டும்..
இப்படித்தான் ஒரு முறை ஏதோ ஒரு விசயத்திற்காக கோபித்துக் கொண்டு போய் விட்டாள்..
நான் அவளுடன் இணைந்த புதிதில் நடந்தது அது என்னால் அவளை பார்க்காமல் இருக்க முடியவில்லை..
அதற்கு தோதாக அவள் வேலைக்கும் வரவில்லை. என்னால் தாங்க முடியவில்லை..
ஒரு நாள் வேதனையில் கழிந்தது..
மறுநாளும் அதே நிலை..
மாலை வரை தாக்குப் பிடித்தேன் அதற்கு மேல் முடியவில்லை நேராக அவள் வீட்டிற்கே போய் காலிங் பெல்லை அழுத்தி காத்திருந்தேன்..
அவள்தான் வந்து கதவைத் திறந்தாள்..
என்னைப் பார்த்ததும் அதிர்ச்சியில் படாரென்று கதவை சாத்திவிட்டாள்..
கால் மணி நேர இடைவெளியில் கதவு திறந்தது..
உடைமாற்றிக் கொண்டு வெளிப்பட்டவள் என்னைத் தவிர்த்து நடந்தாள் நானும் புரிந்து கொண்டு இடைவெளி விட்டு அவளைத் தொடர்ந்தேன்...
குறிப்பிட்ட தூரம் கடந்த பிறகு திரும்பிய அவள்..
"லூசாங்க நீங்க.." என்றாள்
அப்போது வாடா போடி என்ற அளவில் நாங்கள் நெருங்காத நேரம்..
"ஏம்மா.." என்றேன்
"இப்டியா திடீர்னு வந்து நிக்கிறது.. கை கால்லா.. ஆடீருச்சி தெரியுமா..."
"இப்டி ரெண்டு நாளா பேசாம இருந்தா எப்டி.. ரெண்டு நாளா தூங்கள தெரியுமா.."
இப்படித்தான் ஊடலும் கூடலுமாக வளர்ந்த எங்கள் காதல் பல போராட்டங்களைக் கடந்து கரை சேர்ந்தது இன்னும் எனக்குத் தெரியவில்லை அவளுக்கு எப்போது கோபம் வரும் எப்போது பேசாமல் இருப்பாள் என்று இன்றைக்கும் எனக்குத் தெரியவில்லை பழகிப் போய் விட்டது..
இப்படியே பழகிப் போன எங்கள் காதல் வாழ்க்கைக்கு வயது இப்போது பதினைந்து...
ஏதோ யோசனையில் உட்கார்ந்திருந்த போது எனது மகள் வந்து கேட்டாள்..
"என்னப்பா அம்மாவு.. நீங்களும் பேசுறதில்லயா.."
"ஆமடா ஒனக்கு எப்படி தெரியு.."
"அதாம் பாத்தாலே தெரியிதே.."
"அவ அப்டித்தேன்டா.."
"எல்லா.. மூனு நாள்ல சரியாயிரும் பேசீருவாங்கப்பா.."
"ஆமாமா அதுலாம் பேசீருவா எனக்குத் தெரியு... பேசாம எங்க போவப் போறா.."
"ஆமாப்பா பேசீருவாங்க மூனு நாள்ல பேசீருவாங்க.."
"அதென்ன மூனு நாளு ஒனக்கெப்படி தெரியு.."
"போன வாரம் மூனு நாளா எங்கூட பேசாம இருந்தாங்களே.."
"ஒங்கூடயுமா.."
"ஆமப்பா ரெண்டு மூணு தடவ இப்டி கோவிச்சிக்கிட்டு இருந்திருக்காங்க.. ஆனா சரியா மூணாவது நா.. பேசீருவாங்க..."
"ஹஹ்ஹஹ்ஹா அது என்னடா மூணு நா.. கணக்கு..."
"என்னமோ யாருக்கு தெரியு.. ஒரு வேள விருந்தும் மருந்தும் மூணு நா.. ங்ற கணக்கா இருக்குமோ.." என்று கண் சிமிட்டி சிரித்தாள் மகள்..
நான் கொஞ்சம் பின்னோக்கி எங்களது வாழ்க்கையை சுழல விட்டேன்...
இந்த பதினைந்து வருட வாழ்க்கையில் எத்தனை முறை என்னோடு பேசாமல் இருந்திருக்கிறாள் திரும்பவும் சேர்ந்திருக்கிறாள் அத்தனையும் மூணு நாள்தானா...
அடடே இப்பதான் ஞாபகத்துக்கு வருது ஒரு நாள் இரவு நடுநிசியில் தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பி சாரிடா என்றாளே அதுவும் மூணு நாளைக்கு முன்னால் இரவில் கோபித்துக் கொண்டு திரும்பிப் படுத்த அந்த மூணு நாள் கணக்குத்தானா...
நான் எனக்குள்ளே சிரித்துக் கொண்டேன்...
சகியை சகித்துக் கொண்டு இத்தனையை கடந்து வந்ததால்தான் அவர்களின் காதல் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது..
வாழ்க மூன்று நாள் காதல்...!
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்