logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

இலா.லிவின்

சிறுகதை வரிசை எண் # 171


சிறுகதை: ஒருபோதும் காய்க்காத கொய்யா மரங்கள் “நான் போமாட்டேன் மா” “இண்ணைக்கு மட்டும் போ? காசு கேட்டா நாளைக்கு அப்பா சேர்த்து தருவாங்களாம்னு சொல்லு”. மனதில் “இதைத்தான் நீ நேற்றும் சொன்ன” என்று அம்மாவிடம் பதில் சொல்ல வாய் எடுப்பதற்குள், பசி அந்த நினைப்பை அழித்தது. கடைகாரன் திட்டினாலும் பரவாயில்ல. போய் வாங்கிடலாமென மனம் முடிவு செய்துவிட்டது. முகத்தில் இறுக்கத்தை காட்டி “நாளைக்கு போமாட்டேன்” எனக் கண்டிபாகச் சொல்லிவிட்டு. தெருமுனையில் இருந்த சிற்றுண்டி கடைக்கு நடந்தேன். கையில் பிடித்திருந்த ஒரங்கள் சப்பிப்போயிருந்த சின்னத் தூக்கு பாத்திரத்தை ஊஞ்சலாட்டுவதாக என் கை வீச்சின் விசைக்கு ஆட்டிக்கொண்டே நடந்தேன்.  அது என் எண்ணங்களைப் போல இங்கும் அங்கும் ஆடிக்கொண்டே வந்தது. அடுத்த வீட்டில் தோசை சுடும் நெய் வாசனையும், சாம்பாரின் வாசனையும் காற்றில் எங்கோ கேட்கும் இசைபோல மிதந்து கிடக்க, நடையின் வேகத்தை மெதுவாக்கி  முடிந்தவரை மூக்கு வழி ருசியை உள்ளிளுத்துக்கொண்டேன். அவர்கள் வீட்டு நாய்க்கு என்னைக் கண்டால் பிடிக்காது. எனக்கும், அதன் சத்தத்தைக் கேட்டாலே அருவருப்பாகிவிடும், ஒரு நாளாவது ஒரு கல்லைக் கொண்டு அதை அடித்துவிட வேண்டும் என ஆசை. அந்த வீட்டு குண்டன் இப்போ தோசைய வாய்குள்ள திணிக்கும் காட்சி மனதில் வந்து போனது.  மெதுவாக எட்டிப்பார்த்து, வாய்குள் ஊறிய கண்ணீரை விழுங்கிவிட்டு, நடை வேகத்தை அதிகபடுத்தினேன். என்றைக்கும் விட இன்று பசி அதிகாமாகவே இருந்தது, நெற்று இரவு அம்மா கஞ்சி தண்ணீரை அதிகம் விட்டு ஏமாற்றிவிட்டாள். அவள் வெறும் தண்ணியை குடித்து எப்படித்தான் இருக்காளோ? இன்னும் சற்று தொலைவில் மீனுவின் வீட்டில் கொய்யா காய்த்திருக்கும், அவள் அம்மா இந்தக் குரைக்கும் நாயைவிட கடினம், கை வச்சோம் செத்தோம், ஆனாலும் எத்தனை காய் இருக்கிறது, எவ்வளவு இன்று விளஞ்சிருக்கும்  என்று பார்க்கவே இராத்திரி நட்சத்திரம் எண்ணுவது போல இருக்கும். நினைந்தபடி மீனுவின் வீட்டில் கொய்யா காய்கள் முற்றி தொங்கி கிடந்தது. தூரமாகக் கடையின் புகை மூட்டம் தெரிந்தது. நேற்று கடை காரர் பாத்திரத்தை வாங்கிய விதமும், முறு முறுத்துக்கொண்டு கட்டின தோசைகளும், இறுதியில் அப்பாவிடம் பணம் கேட்டு முறைத்ததும் நினைவில் வந்தது. அப்பா என் முன்னால அவமானத்தை மறைக்க அவனிடம் சற்று ஏறிய குரலில் தரத்தானே போறோம் எனச் சொல்லி, மடை மாற்றினதும் நினைவிருக்கிறது. மனதில் அது என்னமோ எனக்குப் பிடிக்காத பெரிய சட்டையை அணியும் அசவ்கரியத்தை தந்தது. இன்று அப்பா இல்லை, கடைகாரரின் கடுத்த முகம் கால பயணம் செய்து மனதில் வந்தது. கால்கள் தானாக மெதுவாக நடக்க துவங்கியது. பாத்திரத்தை இரண்டு கைகளிலும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு புகைக்குள் நுழைந்து உள்ளே சென்றேன். என்னைப் பார்த்ததும் கடைக்காரர், ஒரு வினாடி கூட யோசிக்காமல்,  “அப்பா காசு குடுத்துவிட்டாரா?” எனக் கேட்டார். நான் இல்லை என்பது போல முகம் பாவனை செய்து தூக்கு பாத்திரத்தை மேலே தூக்கி அவருக்குத் தெரியும் படியாகக் காட்டினேன்.  என்னிடத்தில் என்ன வேண்டும் எனக் கேட்பாரென உண்மையாகவே நம்பினேன். கடைக்காரர் எதுவுமே கேட்காமல் தன் வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறிக்கொண்டிருந்தார். என்னை அறியாமலே நான் அந்தக் கடை வாசலுக்கு வெளியிலும் இல்லாமல் உள்ளேயும் இல்லாமல் ஓரம் கட்டப்பட்டிருந்தேன். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, பசி மட்டும் ஒரு எரிச்சலை என் மூச்சில் பரவவிட்டிருந்தது. கடை உணவுகளின் மணமும், அதன் ருசியும், வீட்டில் அம்மாவிடம் தூக்கு வாங்கும்போதே எனக்கு வந்துவிட்டிருந்தது. இப்போது அதை அருகில் அறிகிறேன். கடைகாரர் வேண்டுமென்றே நேரத்தைக் கடத்தினார், நான் கேட்பதா வேண்டாமா என யோசித்தபடி, கையில் இருந்த பாத்திரத்தில் சப்பி உள்ளே போயிருந்த மூலைகளை தடவிகொண்டிருந்தேன். என் வயிற்றை தடவினது போல உணர்விருந்தது. வயிற்றிலிருந்து இரைகள், “விடிந்து வெகுநேரமாகிவிட்டது” எனக் குரல் தந்தது. திரும்பி வீட்டின் திசையைப் பார்த்தேன் என்ன செய்ய? எனக்குத் தெரிந்த விதத்திலெல்லாம் என் முக பாவனையில் அந்தக் கடைகாரரிடம் சாப்பாடு கேட்டுப் பார்த்தேன்.  அவருக்கு நான் வாய் திறந்து கேட்கட்டும் என எண்ணம். என் குரலில் வரும் கடன் காரனின் பிள்ளையின் கெஞ்சலை அவருக்குக் கேட்க வேண்டும். நான் அங்கு அமர்ந்து உணவருந்திக்கொண்டிருந்த நபரைப் பார்த்தேன் அவர் இதோடு மூன்று முறை சாம்பாரையும், நான்கு முறை சட்டினியையும் எடுத்துவிட்டர். தெரு நாய்களுக்கும் எச்சில் இலை உணவு கிடைதிருந்தது. பல்லி கூட ஒரு பூச்சியை இரையாக்கிவிட்டது, சில ஈக்களும் வயிராற தின்றுவிட்டது. கொசுகளுக்கும் காலையிலேயே உணவளித்துவிட்டேன்.   எனக்கு நேரத்தைக் கடத்த இதெல்லாம் தான் அங்கு இருந்தது. நான், மெதுவாக “அண்ணா” எனக் கடன்கார பிள்ளையின் குரலில் அழைத்தேன். அவர் திரும்பவில்லை. நான் “ஐந்து இட்டலிணா, அப்பா நாளைக்கு காசு தருவாராம்” என்று சொல்லும்போதே சுற்றி இருந்த நபர்களைப் பார்தேன் யாராவது அதைக் கவனித்து சிரித்துவிடுவார்களோ என என்னை அறியாமலே கண்கள் சுற்றுக்கொண்டிருந்தது.  அந்த நபர் மீண்டும் ஒரு முறை சட்டினி வைத்துகொள்வதை பார்த்தேன். மீண்டும் கண்களைக் கடைகாரரிடம் திருப்பி, “அண்ணா” என மட்டும் கூப்பிட்டேன். “இருல அடுத்த குண்டா இறக்குனாத்தான் இட்லி” என்று எரிச்சலாகச் சொன்னார். நிச்சயமாய் அந்த இட்லி பாத்திரத்தில்  இட்லிகள் இருந்தது எனக்குப் பிறகு வந்த நபர்களுக்கும் கட்டிக் கொடுத்தார். எனக்கு முன்பாக அந்த இட்லிகள் கொடுக்கப்பட்டபொது மட்டும் என்னிடம் பணம் இருந்திருக்கலாமோ என எண்ணினேன். புது இட்லி குண்டா திறந்ததும், பழைய இட்லிகளில் ஐந்தை கட்டி ஓரமாக வைத்தார். என் அருகில வந்து தூக்கு பாத்திரத்தை வாங்கும்போது “பத்து ரூபாய் தர வக்கில்ல இதுல சாம்பாரு வேற என அவர் முணு முணுத்தது என் காதில் விழுந்தது” என்னை அவர் திட்டவோ அதட்டவோ இல்லை எனக்கும் என் குடும்பத்திற்கும் நன்கு தெரிந்தவர் தான், என் அப்பாவோடு நண்பராய் நடப்பவர்தான். ஆனாலும் அவர் சொன்ன அந்த வார்த்தைகள். அந்தக் குண்டன் வீட்டு நாய்க்குச் சோறுவைக்கும்போது “வாங்க சாப்பிடுங்க” என்று தான் சொல்லுவார்கள்  என்பதை நினைவில் கொண்டு வந்தது.  ஏன் அதை இப்போது நினைத்தேன் என்பது எனக்குத் தெரியவில்லை. தொண்டையில் எச்சில் நிறைந்து நான் விழுங்கினபோது வலித்தது. வயிற்றின் பசி இப்போது காணாமல் போயிருந்தது.  உண்ணாமலும் பசி மறையும் என்பதை அன்றுதான் தெரிந்துகொண்டேன். கடைகாரர் இட்லியையும், தூக்கையும் கையில் தரும்பொது. “காசு இல்லேணா, இனிமேல் கடன் தரமாட்டேன்னு வீட்ல சொல்லிடு” என்று சொல்லிக் குடுத்தார். என் தொண்டை வலி இப்போது இல்லை, எப்படியோ இந்த இட்லியை வாங்கிவிட்டோம் என்கிற நினைப்புதான் நிறைந்தது.  வேகமாக வீட்டை நோக்கி நடந்தேன். வழியில் மீனுவின் வீட்டு கொய்யா மரத்தை மறுபடியும் நோட்டமிட்டேன். மீனுவின் அம்மா, பழுக்கத் தயாரான காய்களை, அணில் தின்றுவிடாதபடி நெகிழியை வைத்து மூடிக்கொண்டிருந்தார்கள். இலா.லிவின்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.