ரா.ராஜசேகர்
சிறுகதை வரிசை எண்
# 17
வெங்கலத்தான் கூட்டம்
***
1989.
சட்டமன்றத் தேர்தல் முடிந்திருந்த சமயம் அது. சுவரில் வரையப்பட்டிருந்த அரசியல்கட்சிகளின் சின்னங்களின் சாயம் மெதுவாக வெளுக்கத் தொடங்கி இருந்தது.
பறையொலி வேகமாகக் கேட்கத் தொடங்கியது. ரோட்டோரத்தில் சைக்கிள்கடை வைத்திருக்கும் நாகேந்திரன் முன்னால் வந்தும் பின்னால் சென்றும் குனிந்தும் நிமிர்ந்தும் சைக்கிளுக்குக் காற்றடித்துக் கொண்டிருந்தான். அது பறையொலிக்கு ஏற்றாற்போல ஒத்திசைவில் அசைந்தாடுவது போல இருந்தது.
பறையொலி வேகமாகவும் இன்னும் அருகிலும் கேட்கக் கேட்க, நாகேந்திரனின் ஆட்டமும் அதற்கேற்றாற்போலானது.
பிள்ளையார் கோயில் தெருவில் இருந்து உள்நோக்கிப் பிரிந்து ஆங்கில Y எழுத்தைப்போல கீழே நீண்டு மேலே பிரிந்து செல்லும் தெருவில் இருந்துதான் அப்பறையொலி கேட்டது.
அந்தத் தெருவின் வலப்பக்கம் கிட்ண நாயக்கர் வீடு. அதற்கு எதிர்ப்புறம் சில அடிகள் தூரத்திலேயே இடப்பக்கம் மூக்கா நாயக்கர் வீடு.
ஒய் ரோட்டின் முனையில் ஓரமாகப் போடப்பட்டிருந்த கொல்லி மூட்டத்தில் புகையும் கனலும் அகதியின் அடரமைதி அழுகைபோல கசிந்து கொண்டிருந்தது.
மூக்கா நாயக்கர் வீட்டிற்கு வெளியில் போடப்பட்டிருந்த நீள மரப் பெஞ்சின் அடியில் சுருண்டு படுத்திருந்தது செவலை நாயொன்று. அது எதோ ஞாபகம் வந்ததாய் எழுந்து முதுகை நீட்டவாக்கில் வளைத்து வெளிவந்து உடம்பில் ஒரு சிலிர்ப்புதறலைப் போட்டுவிட்டு யோசிக்காமல் ஓடியது.
'செவல நாய் ஒதறிட்டு ஓடுதுப்பா… ஒருமுடிவு தெரிஞ்சிடும் இப்போ…' என்றும் 'கறுப்பு நாய் ஒதறினாத்தாம்பா அது...' என்றும் நாயின் உதறலிலும் ஓர் அரசியல் எழுந்தது. இது எதையும் அறியாத நாயோ கம்பத்தினருகில் போய்க் காலைத்தூக்கி அதன் வேலையை முடித்துவிட்டு தேர்முட்டித் தெருவை நோக்கி ஓடியது.
ராசுவின் வீட்டிற்கு முன் ஊரின் பெரியதனக்காரர்களும் உறவுகளும் கூடியிருந்தனர்.
மூக்கா நாயக்கர் ராசுவின் பெரியப்பா. ராசுவின் தந்தை கிட்ண நாயக்கரின் மூத்த அண்ணன். இவர்கள் குடும்பத்தை வெண்கலத்தான் குடும்பம் என்றும் அழைப்பதுண்டு ஊரார்.
பெரம்பலூர் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள வெண்கலம் கிராமம் மூக்கா நாயக்கர் மற்றும் கிட்ண நாயக்கர் மூதாதையரின் பூர்வீகம். பஞ்சமும் பட்டினியும் அப்பகுதியைச் சூழ்ந்தபோது, தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் பிழைப்பு தேடி வந்த இடமே இப்போதிருக்கும் ஊர். செந்தாரப்பட்டி. எனினும் அவர்கள் இங்கு வந்து குடியேறி அதாயிற்று நூற்றைம்பது இருநூறு ஆண்டுகளுக்கு மேல்.
ராசுவின் பாட்டி நல்லம்மாள் கிழவி. மூக்கா மற்று கிட்ண நாயக்கர்களின் அம்மா. அந்தக் கிழவி, கையைப் பின்புறம் கட்டிக்கொண்டு ரோட்டில் நடந்தால் ஒரு பயல் ஏறெடுத்துப் பார்க்க மாட்டான். நடுங்கித்தான் போவான் எவனும். உடனே நல்லம்மா கிழவி, ஒரே அடியில் நான்கைந்து பேரை அடித்து வீழ்த்தும் ஓங்குதாங்கான ஆள் என்றெண்ணிவிட வேண்டாம். நான்கு அல்லது நான்கரை அடி மட்டுமே உயரம் கொண்ட பெண்மணி. எப்போதும் மானம்,மரியதை,சுயமரியாதை,கவுரம்தான் உயிரின் கவசம் என்பதை நெஞ்சக்கூட்டில் நிறுத்தி வைத்திருக்கும் வைராக்கிய மனுஷி. ஆகாரம் கிடைக்காதெனும்போது வயிறு பசித்தால் வைராக்கியத்தையே கரைத்துக் குடித்துக்கூட பசியாற்றுவார். மறந்தும் யாரிடமும் யாசகம் கேட்டுவிட மாட்டார். வீம்பின் வினையாற்றல் வடிவமான அந்தக் கிழவி.
மூக்கா நாயக்கர் நல்ல உயரம். ஓங்குதாங்கான தேகம். சிவந்த மேனி. இடுப்பில் ஒரு வேட்டி. மேலுக்குப் போர்த்தியபடியான பெரிய துண்டொன்றுமே அவரது ஆடைகள். எப்போதும் இரண்டுமே பளீச் வெள்ளைதான். எது மாறினாலும் அது மாறாது.
முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால் அவரை விட்டுவிட்டு இன்னொரு பெண்ணை மணந்தார்.இரண்டாவது மனைவி மூலம் இவருக்குப் பிறந்தது இரண்டு மகன்களும் ஒரு மகளும்.
மூக்கா நாயக்கரின் தனிச்சிறப்பு ஒன்றுண்டு. ஒருபனைமரத்துக் கள்ளைச் சுரைக்குடுக்கையில் வாங்கி வந்து விடுவார் வீட்டில் இறைச்சி சமைக்கும் நாள்களில் எல்லாம்.
மகன்கள் சிறுவயதாக இருக்கும்போதே அவர்களுக்கும் கள்ளும் கறியும் கலந்து ஊற்றுவார். ஊட்டுவார். போதை ஏறிவிட்டால் மகன்களைப் பாடச் சொல்லி ஆடுவார். ஒரு கட்டத்தில் அவர்களைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டும் ஆடுவார்.
கொண்டாட்ட மனநிலையைத் தனக்கே தனக்கெனக் கொய்து வைத்துக்கொண்டவர்தான் மூக்கா நாயக்கர். அதேபோல பெயரைப்போலவே மூக்கு நுனியிலேயே கோபத்தைக் கொழுந்தாகவேக் கட்டித் தொங்க விட்டிருப்பார்.
ஒருமுறை, மனைவியுடன் சந்தோஷமாக இருந்தபோது 'மூக்கரே' என்று எதோ ஒரு குஷிமூடில் மனைவி அவரைச் செல்லமாகச் சொல்லிவிட, மூன்று நாள்கள் சென்றபின்னர் செமத்தியாகப் பின்னி எடுத்துவிட்டாராம் அடி.
சந்தோஷமோ துக்கமோ அவரது மனவிலக்கணம் இயல்பு தாண்டியதுதான் என்றைக்கும்.
மூக்கா நாயக்கரின் தம்பி கிட்ண நாயக்கருக்கு ஒரு மனைவி, மகன் மற்றும் மகள். அந்த மகனே ராசு. மகள் வாக்கப்பட்டுப் போனது அவரது சொந்த மச்சினன் மகனுக்கு. பக்கத்து ஊரில்.
நேற்றுப் பகலில் நடந்த உட்கட்சித் தேர்தலில் அந்த ஊரின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ராசு. அதன் கொண்டாட்டப் பட்டாசும் இனிப்பும் வெடித்தும் வழங்கியும் முடிக்கப்பட்ட போது, மூக்கா நாயக்கர் இறந்துவிட்டதாகத் தகவல் வந்தது.
இரவில் இருந்தே ஊர்க்காரர்களும் உறவினர்களும் வரத் தொடங்கினர். மூக்கா நாயக்கரின் சடலம் கிடத்தப்பட்டிருக்கும் அவரது மகன் வீடு , அடுத்து ராசு வீட்டு வாசலுக்கும் வந்து விசாரித்தனர். இங்கு நிற்பதா அங்கு நிற்பதா என தெரியாமல், வந்தவர்கள் தெருவில் கூடிநின்றுப் பேசியபடியே நிற்பதும் செல்வதுமாக. நேற்று இரவு முதல் இன்று காலை வரை இது தொடர்ந்துகொண்டே.
நேரம் ஆக ஆக ஊர்ப் பெரியத்தனக்காரர்கள் மூக்கா நாயக்கர் மகன்களிடம் பேச, "எங்க ராசு அண்ணன் சொன்னா சரி…" என்றனர். ராசுவிடம் கேட்டபோது,
"நானும் எவ்வளவோ சொல்லிட்டேன்… எங்கய்யா எதுவும் பேச மாட்டேங்கிறாரு… நீங்க வேணா பேசிப் பாருங்க"... என்றார்.
மூக்கா நாயக்கரின் சடலத்தைக்கூட இதுவரைப் பார்க்க வராமல் முரண்டு பிடித்தபடி இருந்த கிட்ண நாயக்கரிடம் பெரியத்தனக்காரர்கள் வந்தனர்.
கால் மேல் கால் போட்டுக்கொண்டு வாயில் புகையிலையை அடக்கிக் கொண்டிருந்தார் கிட்ணா.
சராசரியான உயரமும் நல்ல கறுத்த தேகமும் நறுக் தெறித்தாற்போல வெட்டபட்ட வெள்ளைமுடியை எண்ணெய் வைத்து மேல்நோக்கி சீவபட்ட தலையுடன் எப்போதும் காணப்படுவார் கிட்ண நாயக்கர். இப்போதும் அப்படியே.
கட்டம்போட்ட காடாத் துணியில் தைக்கப்பட்ட கை கைத்த V கழுத்து பனியன். அதே காடாவிலான வேட்டி. தோளில் ஈரோட்டு சென்னிமலைத் துண்டு. எங்கு சென்றாலும் இதுதான் அவரது உயர்ந்தபட்ச ஆடம்பர ஆடை.
கிட்ணாவிடம் அமிழ்தத்தையே கையில் தந்து 'ஆயுள் அதிகரிக்கும் இதை சாப்பிடுங்கள்' என்று கூறினாலும் சாப்பாட்டிற்குப் பின் என்றால் நிர்தாட்சண்யமாக மறுப்பார். சாப்பிடுவதுகூட, அது பழைய சோறோ கம்பங்கூழோ களியோ இட்லியோ தோசையோ எதுவானாலும் தன்னுடைய கனத்த தடிமனான வெண்கல வட்டிலில்தான்.
வயலில் வேலையாய் இருக்கும்போது வெண்கலத் தட்டு கொண்டுவரவில்லை என்றால், தூக்குப் பாத்திரத்தில் இருக்கும் பழைய சோறை அள்ளி எடுத்து ஒருகையில் உருட்டி மறுகையில் குருத்துவாழையிலையைக் கிள்ளி உள்ளங்கையில் அதை வைத்து கொஞ்சம்கூட கையில் பருக்கை ஒட்டாமல் நீராகாரம் ஒழுகாமல் சாப்பிடுவார்.
அப்படி ஒருமுறை அவர் செய்யும்போது, அதைப்பார்த்த ராசுவின் பிள்ளைகளில் ஒருவனான ஏழெட்டு வயது சிறுவனான அவரது பேரன்,"ஏன் தாத்தா… வெங்கல வட்டி இல்லேன்னா சாப்ட மாட்டியா நீ?"... என்று கேட்க, வாயை திறக்காமல் மழுப்பல் சிரிப்பொன்றை உதிர்த்தார் கிட்ணா.
"இப்டி சிரிச்சா என்ன அர்த்தம் தாத்தா?..." என பேரன் விடாமல் தொரட்டிப் போட,
"ம்ம்… ஒம்பாட்டுக்குப் பேசாம இருன்னு அர்த்தம்…" என்று நமுட்டுச் சிரிப்புடன் பதிலளித்துவிட்டு கடைசி உருண்டையை பேரனுக்கு ஊட்டிவிட்டு ஏற்றம் இறைக்க எழுந்து போனார்.
கிட்ணாவின் பிரத்யேகக் குணமொன்று உண்டு. மழையுடன் பேசிக்கொண்டே நடப்பது அது. தூறல் தொடங்கினால் போதும். வீட்டுக்கும் தோட்டத்துக்கும், வேலையில்லை என்றாலும் இரண்டுமூன்று நடை போய் வருவார். மழை, அவரைத் தொட்டுத் தொட்டுப் பேசுவதுகூட இந்த மழைநடைக்கானக் காரணமாகவும் இருக்கலாம். இப்படி மழையுடனான மவுன மொழியாடலின் புரிதல் என்பது கிட்ணாவுக்கும் மழைக்குமானது மட்டுமே.
கிட்ணா அருகில் அமர்ந்தபடியும் நின்றபடியும் இருக்கும் பெரியத்தனக்காரர்களில் ஒருவர், "என்ன மாமா இது… பெரிய மனுஷனுக்கு இது நல்லாவா இருக்கு?...",கேட்க,
"இப்ப யாரு நல்லாருக்குன்னு சொன்னது?...", தன் வாயிலிருந்த புகையிலை எச்சிலை, இருவிரல்களை உதடுகளின் மேல் வைத்து அதனிடையே வெளியேறும்படி புரீச்செனத் துப்பிவிட்டுச் சொன்னார்.
"நம்ம ராசு, பெரியப்பன் சாவுக்கு வர்றேன்னு சொல்லிட்டான்...
இப்ப நீ என்னண்ணா சொல்ற?...", என்று ராமசாமி உடையார் கேட்டார்.
இந்த ராமசாமி உடையார் கிட்ண நாயக்கரின் குடும்பத்தில் நடக்கும் அத்தனை விசயங்களையும் அறிந்தவர். கிட்ணாவை விட இளையவர் என்றாலும் பால்யகாலத் தோழர்கள் இருவரும். ராமசாமி கேட்டதற்கும் கிட்ணாவிடம் இருந்து பதில் இல்லை.
"வெங்கலத்தாரே இதெல்லாம் மொறையா?...என்ன இருந்தாலும் போனது பெரிய சீவன் இல்லையா?..." என்ற சாரங்க செட்டியாரிடம், "பெரிய சீவனோ சின்ன சீவனோ அவனவனுக்கு அவனவன் சீவந்தான் பெருசு செட்டியாரே...
செலருக்கு உசுருதான் சீவன்… செலருக்கு மானம்தான் சீவன்… என்ன மாதிரி பொழப்பத்தவனுக்கு மனசுதான் சீவன்… அதுவும் ரெம்ப பெரிய சீவன்…" என்று கூற, கிட்ணாவிடம் யாரும் மேற்கொண்டு பேசவில்லை.
மூக்கா நாயக்கருக்கும் கிட்ணாவுக்கும் மிகப் பெரும் வயது வித்தியாசம். குறைந்தது இருபதாவது இருக்கும்.கிட்ணா பிறந்தபோது தன் அம்மா அப்பாவிடம் தூங்கியதைவிட மூக்கனின் நெஞ்சில் தூங்கியதுதான் அதிகம் என்று அந்தத் தெருவின் அந்தக்காலப் பெருசுகள் அத்தனையும் சொல்லும் கிண்டல் கலந்த நிஜக் கதை இது.
கிட்ண நாயக்கர் குழந்தையாக இருந்தபோது வயலில் வரப்பின் மீது படுக்க வைக்கபட்டிருந்தார். நல்லம்மா, வயலில் சீனி மிளகாய்க் காய்களைப் பறித்துக்கொண்டிருந்தார். அப்போது யதேச்சையாகத் திரும்பிக் குழந்தையைப் பார்க்கிறார். குழந்தை அருகில் இருந்து, பாம்பொன்று சரசரவென ஓடியது. குழந்தை அலறிக் கத்தியது. தன் குழந்தையைப் பாம்பு தீண்டிவிட்டதாக நல்லம்மா அலறினார். அவர் தூக்கி எறிந்ததில் சீனி மிளகாய்க் காய்கள் அந்தரத்தில் பறந்தன.
மாடுமேய்த்துக்கொண்டிருந்தமூக்கன் ஓடி வந்து பார்க்க, குழந்தை அலறித் துடிக்க, சுற்றுமுற்றும் பார்த்தான் மூக்கன். அருகில் இருந்த கடலைக் காட்டில், கடலைக் கொடிகள் வளைந்து வளைந்து அசைவது தெரிந்தது. சற்றும் யோசிக்காமல், கைகளை விரித்தபடி பறவை ஓட்டம் ஓடினான் மூக்கன். கடலைக் கொடிகளின் மீதில் தெரிந்த மூக்கனின் நிழல், தாழப் பறந்த பருந்தொன்றை வரைந்தது.
கடலைக் கொடிகளின் வளைவிலேயே ஓடி, பறந்து, தாவி விழுந்து கடலைக் கொடிகளுக்குள் கை விட்டு எடுத்தால் மூக்கனின் வலக் கையில் பாம்பு. அதை அப்படியே இடக்கைக்கு மாற்றி, வலக் கையால் வாலைப் பிடித்து தூக்கி தலைக்கு மேல் சுற்ற, காற்றில் சுற்றப்படும் பாம்பும் காற்றோடு காற்றாகிப் போனதுபோல இருந்தது. எதிர்பாராமல் அதை விசிறியடித்ததில், அது ரத்தம் சொட்டச் சொட்டத் தான் போக வேண்டியது சொர்க்கமா நரகமா எனத் தேடித் திரிந்திருக்கும் உயிரற்றதாக.
யாரோ தகவல் சொல்லி அங்கு ஓடி வந்து பார்த்த மூக்கனின் தந்தை பெருமாள் நாயக்கர்,"டேய் மூக்கா… சாரப் பாம்புடா இது... அது தீண்டாதுடா… அதில்லாம கிட்ணன தீண்டிருந்தா தீண்டுன எடத்துல கடிவாய்ப் பல்லு இருக்குமுல்ல… அதுவாக்குல வாய்க்கால்ல போய்ருக்கும்… ஒங்கம்மாதான் ஒண்ணும்புரியாமா அலறிருப்பான்னா நீ அதுக்குள்ள அந்த சீவன சாவடிச்சிப்புட்ட..." என்றார்.
மூக்கன், குழந்தையாகத் தூங்கும் தம்பியையேப் பார்த்துக்கொண்டிருந்தான். கண்களில் கண்ணீர் படுத்திருந்தது.
'பாசம்னாலும் ரோசம்னாலும் எங்க மூக்கனுக்கு மூக்கு மேலயேதான் இருக்கும்' என்று நல்லம்மாவும் சொல்வதுண்டு அடிக்கடி.
வளர்ந்த பிறகு மூக்கனும் கிட்ணாவும் சரியாகப் பேசிக்கொள்வதில்லை. சண்டை சச்சரவு எதுவும் காரணமில்லை. தன் தந்தையைப்போல அவரைப் பார்த்ததே காரணமென்றும் பாம்புக் கதையே காரணமென்றும் ஆளாளுக்கு ஆரூடம் சொல்வதுமுண்டு.
எங்காவது நடந்து செல்கையில் கூட, மூக்கா நாயக்கர் எதிர்ப்பட்டால், கிட்ணா ஓரமாக ஒதுங்கி நிற்பதும், யாரோடும் பேசிக்கொண்டிருக்கையில் திடீரென கிட்ணா பேச்சை சம்பந்தமில்லாமல் நிறுத்தினால், அந்த வழியே மூக்கா நாயக்கர் கடந்து போவார், தலை குனிந்தபடி இருக்கும் தன் தம்பியைப் பார்த்தபடி.
இதற்குப் பெயர் என்ன?. பாசமா? பக்தியா? மரியாதையா? என்று கிட்ணாவிடம் கேட்டால் 'ஒம்பாட்டுக்கு இருப்பா'ன்னு ஒரே பதிலையே உதிர்ப்பார் வழக்கம்போல.
மூக்கா நாயக்கர், தன் மனைவி இறந்த பின்னர், மகன்களின் பேச்சைக் கேட்காமல், நிலத்தை வாரத்துக்கு ஒருவனிடம் விட்டிருந்தார். அவன் கொஞ்சம் அடாவடிப் பேர்வழி. கொஞ்சமல்ல நிறையவே.
ஆயில் எஞ்சின் கிணறு. மூக்கா நாயக்கருக்கும் கிட்ண நாயக்கருக்கும் பொது.
ஒருநாள் வாரக்காரன், தனக்குப் பிரிக்கப்பட்ட நேரத்தில் எஞ்சின் போடாமல் கிட்ணாவின் நேரத்தில் வந்து வம்படியாகப் போட்டான். கிட்ணா எஞ்சினை நிறுத்திவிட்டார். அவன் மீண்டும் எஞ்சினை எடுத்துவிட்டான். இவர் நிறுத்தினார். வாரக்காரன் மீண்டும் எஞ்சினைப் போட, இவர் நிறுத்த என நீண்ட நேரம் நீடித்த பஞ்சாயத்து இழுபறியில் அவன் கிட்ணாவை 'போடா கிழட்டுக் கூ...' வென ஊத்த வார்த்தைப் பேசிவிட, கையிலிருந்த மண்வெட்டிக் கழியால் அவன் மண்டையில் கிட்ணா பதம் பார்க்க, விலகினாலும் அவனுக்கு ரத்தக்காயம் ஏற்பட்டுவிட, தள்ளுமுள்ளு மல்லுக்கட்டாக, அருகில் இருந்த வயல்காரர்கள் ஓடிவந்து விலக்கி விட்டனர்.
அடிபட்ட வாரக்காரன்,வேகமாக சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றான். கிட்ணா, எஞ்சினை எடுத்துவிட்டு வயலுக்கு நீர் பாய்ச்சிவிட்டு வீட்டுக்குச் சென்றார்.
வீட்டுக்குள் செல்வதற்குத் மாட்டுத்தோலால் செய்த தன் செருப்பை வாசலில் கழற்றிவிட்டார். வீட்டுக்குள் செல்லாமல் ஏதோ நினைப்பு வந்தவராக,வெறும்காலுடன் தன் அண்ணன் வீட்டுக்குச் சென்றார். மூக்கா நாயக்கர் வீட்டில், வாரக்காரனின் மொத்தக் குடும்பமும் பஞ்சாயத்து சொல்லிக்கொண்டிருக்கும் சப்தம் வீதிவரை அட்சரம் பிசகாமல் அப்டியே கேட்டது.
"நாயக்கரே… உங்க தம்பிகிட்ட நா ஒண்ணுமே பேசல… இன்னைக்குக் கொஞ்சம் டயம் தவறிப் போச்சு...பெரிய நாயக்கர் உங்கண்ணன்தானுங்களே... இன்னைக்கு மட்டும் கொஞ்சம் வுட்டுக் குடுங்கன்னு கேட்டேன்… அதுக்கு அண்ணனாவது சு...யாவதுன்னு பெரிய வார்த்தை பேசிப்புட்டாரு… என்ன நாயக்கரே இப்டி பேசுறீங்கன்னு கேட்டதுக்கு... என்னைய மம்பட்டிக் கழியிலயே விசிறிப்புட்டாரு… வலியென்னமோ எனக்குத்தான்… ஆனா அந்த அடி எனக்கு இல்ல நாயக்கரே… நீங்க சொன்னீங்கன்னா இப்பகூட வாரக்காச வாங்கிட்டு விலகிடுறேன் நானு..." என்று கூற, கடும் கோபமடைந்த மூக்கா நாயக்கர், "ஏய்… அவனே சொல்லிட்டான்ல அண்ணானாவது 'சு...யா'வதுன்னு… அந்த ஒக்காலஓலிய வெட்டி வீசிட்டு வந்திருந்தீன்னா நீ என் வாரக்காரண்டா… அத வுட்டுப்புட்டு… வழப்பம்கெட்டு வந்து நிக்கிற"... என்று கூற, இதையெல்லாம் தெளிவாகக் கேட்டுக்கொண்டே வந்த கிட்ணா அண்ணனின் வீட்டுக்குள் செல்லாமலேயே வெளியிலிருந்தவாறே திரும்பி நடந்தார் தன் வீட்டுக்கு.
கிட்ணாவின் மண்டைக்குள் ஏறிய மூக்கா நாயக்கரின் வார்த்தைகள், அவரது வெறும்கால்களின் வழியேயும் வழிந்தன. ஆனாலும் வடியவில்லை அவை. இன்று வரை.
இந்தப் பஞ்சாயத்து, ராசுவின் காதுக்கு வந்தது. ராசு, ஜ்தன் தகப்பனை சமாதானப்படுத்த முயன்றார்.
"என்னடா ஒம்பாட்டுக்கு பேசுற… ஒக்காலஓலின்னா என்னடா அர்த்தம்?... ஒங்க அத்த யாருடா?... அவருக்கு தங்கச்சி… எனக்கு அக்கா… அக்காளோட இருக்குற ஈனப்பயலாடா நானு..."
"அட வுடுய்யா… நம்ம பெரியய்யாதானே... பேசிட்டுப் போறாரு… அதப் போயி பெருசா அர்த்தப்படுத்திக்கிட்டு… அவரு அப்டி நெனைச்சா பேசிருப்பாரு?... அப்டியே இருந்தாலும் அது யாரு?... உன் அண்ணன்தானே"...
"ஆமாடா… நாக்கு கூட நம்பளதுதான்… அதுக்காக எத வேணாலும் பேசலாம்… எத வேணாலும் திங்கலாமா?... தெக்கு எது வடக்கு எதுன்னு தெசைய தேடி அலைஞ்சவனுக்குத்தாண்டா தெரியும்… பேசாம போ ஒம்பாட்டுக்கு..." என்றார்.
ராசுவுக்கும் கிட்ணாவுக்கும் ஒரே ஒரு வேறுபாடுதான். கிட்ணா எப்போதும் இறுக்கமானவர். ராசு எல்லோரிடமும் இணக்கமானவர். நெருக்கமானவர்.
தகப்பனுக்கும் மகனுக்கும் நடந்த உரையாடலின் முடிவாக,'இனி வயல்பக்கமே போவதில்லை'யென கிட்ணா முடிவெடுத்தார்.
அதனால், அவரது மழையுடனானப் பேச்சுவார்த்தைக்கூட தோட்டமும் வீடுமென்றிருந்தது, வீடும் ஓணான் கரடும் என்று சற்று நீண்டதாக மாறியது. கெட்டிப்பட்ட அவரது மனதை மழைதான் கரைக்கப் பார்த்தது. ஆனால் தோற்றது. மழைநடையில் மனது கரைவதில்லை. கெட்டிப்படுகிறது போலும்.
மூக்கா நாயக்கருக்கும் கிட்ணாவின் இந்த முடிவு தெரிந்து, 'நா பேசுனா அவரு பெரிய ஜமீனு… கோவிச்சுக்குவாரோ?...' என்று கூறி அவரும் இறங்கி வர மனமின்றி அப்படியே விட்டுவிட்டார்.
இதோ பத்தொன்பது ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தையே அற்றுப் போய்க் கிடக்கிறது. அண்ணன் தம்பியில் தொடங்கியது அவர்களது குடும்பங்கள் வரை நீண்டுபோய்.
சொற்களில்தான் சூன்யமும் இருக்கிறது. பேரண்டமும் இருக்கிறது. பேரன்பும் பெருங்கோபமும் இருக்கிறது. இருளும் ஒளியும் இறைந்தும் நிறைந்தும் கிடக்கிறது. சொந்தமும் பிரிவும் சேர்ந்தே இருக்கிறது. வீட்டிலும் நாட்டிலும் சொற்கள்தான் அரசியல் கொடிகளை ஏற்றி வைக்கிறது. சொற்கள்தான் எப்போதும் முரணும் அரணும்.
காலம் ஆக ஆக, மூக்கா நாயக்கர் செல்லும் இடத்திற்கோ, பாதையிலோ கிட்ணா மறந்தும் எதிர்ப்படுவதில்லை. அப்படியொரு சூழலையும் தவிர்த்தார். வலுக்கட்டாயமாகவும் மனக்கட்டாயமாகவும்.
ராசு மட்டும் பெரியப்பன் மீதான மரியாதையில் எந்த அரசியலையும் கலக்கத் தன் மனதை அனுமதிக்கவே இல்லை. பிழைக்கத் தெரியாத அரசியல்வாதிகளின் வண்ணம் ப்ரியம் சார்ந்தது போல.
எல்லோரும் பேசிப் பார்த்தும் கிட்ண நாயக்கர் மசியவில்லை. ராசுவும் அவரது குடும்பத்தினரும் மட்டும் சென்று துக்க வாசலில் நின்றனர். பங்காளிக் குடும்பம் வந்த பின்னரே, தேங்காய் உடைக்கப்பட்டது.
கட்சிக்காரர்களும் கொடியுடன் வந்து மாலை போட்டுவிட்டுச் சென்றதும் நடந்தது.
மூக்கா நாயக்கருக்கான இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அப்போது,
கிட்ணா அவசர அவசரமாக எழுந்து எங்கோ சென்றார். ராசுவின் கடைசி மகன் பார்த்தான் அதை.
மூக்கா நாயக்கரின் உடல் தெருவிற்குத் தூக்கி வரப்பட்டு, பெஞ்சில் கிடத்தபட்டது. வேட்டி மறைப்பு பிடிக்கப்பட்டு, அந்த உடல் இறுதியாகக் குளித்தது. வெள்ளைத் துணி சுற்றப்பட்டது. மறைப்பு நீக்கப்பட்டதும் உடலுக்குப் பெண்களும் பேரப்பிள்ளைகளும் வாய்க்கரிசிப் போட்டனர். துளசித் தண்ணீர் விட்டனர். சுற்றி வருவதும் சீதேவி வாங்குவதும் நடந்தன.
இறுதியாக எல்லாம் முடிந்து, மூக்கா நாயக்கரைப் பாடையில் வைத்து மாமன் மச்சான் முறைக்காரர்கள் தூக்கினர். பெண்கள் எல்லோரும் வாயிலும் மாரிலும் அடித்துக்கொண்டு அழுதனர்.
ரோட்டில் சலவைத் தொழிலாளி விரித்த சேலையில் பெண்கள் மட்டும் விழுந்து கும்பிட்டு எழுந்தனர். எல்லோரும் அழும் சாங்கிய சம்பிரதாய அழுகையின் சத்தம் கரைந்து தேய்ந்து காற்றாக, நிஜ அழுகை ஒன்று வெடித்துக் கிளம்பிய சத்தம் கேட்டது.
கூட்டத்தில் கேட்ட அந்த நிஜ அழுகையின் சத்தத்தை ராசுவின் கடைசி மகனும் கண்கொட்டாமல் பார்த்தான்.
கிட்ணா, தன் அண்ணன் பாடையில் வைத்து எடுக்கபட்ட இடத்தில் விழுந்து கும்பிட்டு எழுந்து, தலை தலையாக அடித்துக்கொண்டு அழுதார். வாயில் எச்சில் ஒழுக ஒழுக. கண்ணீர், தாரைத்தாரையாக உதிர உதிர.
வெகுதூரத்தில், பாடையில் செல்லும் மூக்கா நாயக்கரின் முகம் மட்டும் வெடித்து அழும் தன் தம்பி கிட்ணாவைப் பார்த்தபடியே ஆடி ஆடிச் சென்றது. அந்த முகத்தின் அசைவும் ஆட்டமும், தன் தம்பியை அழ வேண்டாம் என்று சொல்லிவிட்டுச் செல்வதுபோல தெருமுனையைக் கடந்து மறைந்தது.
இரவு. எல்லாம் முடிந்து வீடுகள், தரை கழுவப்பட்ட ஈரம் காயத்தொடங்கியிருந்தது. அடுத்தநாள் பால் தெளிப்புப் பற்றி ராசுவும் மூக்கா நாயக்கரின் மகன்களும் பெரியவர்களும் வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அங்கிருந்து சற்று தூரத்தில் இருக்கும் மாட்டுப் பட்டியில் எரியும் ஒற்றைக் குண்டு பல்பின் வெளிச்சத்தில் கிட்ணாவும் கல்லூரி படிப்பு முடித்த ராசுவின் கடைசி மகனும் கட்டிலில் அமர்ந்திருந்தனர்.
கிட்ணா, எதுவும் பேசாமல், வாயில் புகையிலையை அடக்கி, அமைதியில் அடர்ந்திருந்தார். தாத்தாவையே பார்த்துக்கொண்டிருந்தான் பேரன். கிட்ணா, அவனைப் பார்க்காமல் வேறு பக்கம் பார்த்தபடி இருந்தார்.
கிட்ணாவிடம் பேரன், "தாத்தா… பெரிய தாத்தா மூஞ்சக் கூட பாக்க வர்லேன்னுட்ட… எழவு வாசப் பக்கம்கூட எட்டிப் பாக்கல… எங்கயோ எழுந்திரிச்சிவேற போயிட்ட… ரொம்ப நேரமா ஆளையே காணோம்… ஆனா பொணம் தூக்கயில எங்க இருந்து வந்த?... எதுக்கு அப்டி தல தலயா அடிச்சிகிட்டு அழுத?..." என்று கேட்க, கிட்ணா எதுவும் பேசவில்லை.
"எதுக்கு தாத்தா அழுத?... கேட்டா சொல்லு… இப்டி இருந்தா என்ன அர்த்தம்?"
தன் வாயிலிருந்த புகையிலை எச்சிலைப் புரீச்செனத் துப்பிவிட்டு, "ஒம்பாட்டுக்குப் பேசாம இருன்னு அர்த்தம்"... என்றார்.
குண்டுபல்பின் ஒளி சற்றுக் கூடுதலாகி, ஒளிர்ந்து ஒழுகியதில் மாட்டுப் பட்டியை மஞ்சள் வெளிச்சத்தின் சாயம் நனைத்துக்கொண்டிருந்தது.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்