Narmadha Devi
சிறுகதை வரிசை எண்
# 16
செல்லாக்காசு
சிறுகதை, நர்மதா தேவி
---
மாரியம்மா எங்கள் மாரியம்மா… உன்னை வணங்க வந்தோம் கருமாரியம்மா...
தெருமுனைக் கோவில் கூம்பு ஒலிப்பெருக்கி அலறத் தொடங்கியது. செல்வி திடுக்கிட்டு எழுந்தாள். ‘ஐஞ்சாச்சா? தண்ணி வந்து நின்னே போயிருக்குமே!’ பக்கத்துக்கு வீட்டுக் காளியம்மா கட்டை விளக்குமாறைப் போட்டு வாசலை பிராண்டிப் பெருக்கிக்கொண்டிருந்த சத்தம் பாட்டுச் சத்தத்தையும் மீறி நன்றாகவே கேட்டது. ‘எம்மா நேரம் தூங்கிருக்கோம் பாரு!’ பதட்டத்துடன் பிளாஸ்டிக் குடத்தைத் தூக்கிக்கொண்டு பைப்படிக்கு ஓடினாள். கம்பிபோல மெலிதாக வந்துகொண்டிருந்ததைக் குடத்தில் பிடிக்கத்தொடங்கினாள்.
செல்வி மீது மெத்தனப் பார்வையை வீசியவாறு வாசலுக்குத் தண்ணீர் தெளித்துக் கோலம் போடத்தொடங்கினாள் காளியம்மா. ‘இவளோட எகத்தாளப் பார்வைக்குப் போயி தீனி போட்டுகிட்டு… வேற எங்கயாச்சும் பாத்து வப்போம்!’ தெருவை அளக்கத்தொடங்கினாள் செல்வி. ஓட்டுவீடுகள் குறைவாகவும், கூரை வீடுகள் அதிகமாகவும், ஒன்றிரண்டு மாடி வீடுகளும் இருந்த தெரு. சுண்ணாம்புக்கு வழியில்லாத வீட்டுச் சுவர்களில் புதிய தேர்தல் விளம்பரங்கள், தேர்தல் நாளையும் சின்னங்களையும் நினைவுபடுத்திக் கொண்டிருந்தன. சிறுவர்கள் கிட்டிப்புல் அடித்துக் கொண்டிருந்தார்கள். சிறுமிகள் சில்லுக்கோடு விளையாட்டைத் தொடங்கியிருந்தார்கள். நடுத்தெருவில் ஆற அமர உட்கார்ந்து அசைபோட்டுக் கொண்டிருந்தன ஆடுகள். தெருமுனை கட்டைச்சுவரில் உட்கார்ந்திருந்த இளைஞர்கள் தத்தமது ஆண்டிராய்டு ஃபோன்களை நோண்டிக்கொண்டே அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். ‘இந்தத் தெருவுலேயே இந்த ஆடுவளுக்கும், இந்தப் பயலுவளுக்குந்தான் ஒரு கவலையுமில்லே… சரி, நம்ம பொழப்ப பாப்போம்!’ குடத்தைப் பார்த்தாள். கால்வாசிகூட இன்னும் நிரம்பியபாடில்லை.
காளியம்மா பைப்படிக்கு வந்து செல்வியிடம், "ஒங்கூட்டு கொள்ளப் பக்கத்தொட்டியில நாலு குடம் நிரப்பிட்டேன், பயப்படாத!" என்றாள். அப்பாடா என்றிருந்தது செல்விக்கு.
“கொஞ்சம் அசந்துட்டேன்”, தலை சொரிந்து அசடு வழிந்தாள்.
“புல்லறுக்கக்கூட வராம அப்படியென்ன தூக்கம்? பெரிய விருந்தோ? ஆட்டுக்கறியா?”
“ம்கூக்கும்…! சுடுசோத்துக்கே வழியக் காணோம் நீ வேற! நேத்து ரைஸ் மில்லுல வேலை ரொம்பக்கா. நெல்ல அள்ளிக் குவிச்சு பெருக்கிக் கூட்டினது இடுப்பொடிஞ்ச மாதிரி போச்சு. அதான் மதியானம் சாப்புட்டு செத்த படுத்து எழுந்திரிப்போம்ணு நினைச்சு, கண் அசந்தது அப்புடி தூங்கிருக்கேன் பாத்துக்கோ…”
“என்ன சாப்பாடு மதியானம்?”
“சுடுசோறுதான். கருவாட்டை சுட்டு வச்சிக்கிட்டு முருங்கக்கீரை தாளிச்சு தின்னேன். நெத்தாட்டம் போடுறாங்க ரேசன் அரிசி. அது வேவுறதுக்குள்ள உசிரே போவுது. சிலிண்டர் விக்கிற விலைக்கு எங்க வாங்குறது? கேஸ் அடுப்ப சாக்கு போட்டு கட்டிவச்சிட்டு, விறவடுப்பத் திரும்ப கட்டியாச்சு. சாணி அள்ளியாந்து காயவச்சி அடுப்பெரிச்சு…ஏதோ அத்துக்கும் பாட்டுக்கும்ணு ஓடுது"
“புளிக்கொழம்பு ஏதும் வக்கெலயா?”
“தீந்துபோச்சுக்கா புளி”
“வாரத்துக்கு மூணு நாலு நா வச்சா வருசத்துக்கு எப்படி தாங்கும்?”
“ஆமாக்கா, இந்தக் கோடையில புளிய கொஞ்சஞ் சேத்தெடுக்கணும். இப்பலாம் ரோட்டு மரத்துல வேற எடுக்கவுட மாட்றாவோல… ஃபைன் போடுறாவ. பயந்து பயந்துல்ல எடுக்க வேண்டியதா இருக்கு"
“புளி இருந்தாலாச்சும் ஏதோ குப்பையில விளையிற கத்திரி, சுண்டை, பரங்கிணு போட்டு குழம்பு வக்கெலாம்”
"பருப்பு வேற சுத்தர இல்ல. ரேசன்ல இன்னும் வரலனுட்டான். அது கிடைச்சாலாச்சும் வறுத்து, கொஞ்சம் புளி வச்சித் தொவைய அரைக்கலாம். உடப்புடாது போயி கேக்கணும்” உறுதியாகச் சொன்னாள் செல்வி.
“என்னிக்கு ஊருக்குப் போற நீ!”
“இந்த வாரம் வெள்ளிக்கிழமை"
"எலெக்சன் அன்னிக்கேவா போறே?”
“ஸ்…ஆமா அன்னிக்கு எலெக்சன் இருக்குல. ஐய்யோ ஏஜன்டுகிட்ட அன்னிக்கி கிளம்புறதால்ல வாக்கு குடுத்துட்டேன். சரி, ஓட்டுப் போட்டுட்டு சாயங்காலமா போவலாம்”
வயிற்றுப்பாடைப் பற்றி விலாவரியாக நெடுநேரம் பைப்படியிலேயே பேசிக்கொண்டிருந்தவர்கள் மெதுவாக நகர்ந்து காளியம்மா வீட்டுத் திண்ணையில் வந்தமர்ந்தார்கள்.
செல்வி தேர்தல் பற்றிய பேச்சைத் தொடங்கினாள். “ஆமா, என்ன இந்த முறை எலெக்சன் கலையாவே இல்ல?"
“என்னமோ சிங்கப்பூர்லருந்து இப்பத்தான் திரும்பி வந்த மாதிரி புதுசால்ல கேக்குற? பத்துப் பயிஞ்சு வருசமாவே இப்படித்தானே இருக்கு. முன்னலாம் திருவிழா மாதிரி ஜேஜேன்னு எலெக்சன் இருக்கும். இப்ப என்னென்னா, ரொம்ப நேரம் மைக் செட் வச்சிப் பிரச்சாரம் பன்னப்புடாது, வீட்டுக்கு ஓட்டுக் கேக்கக்கூட கொஞ்சமாத்தான் ஆளுவ போவணும், சுவருல விளம்பரம் பன்னக்கூட அனுமதி கேட்டுத்தான் பன்னணும்னு நிறைய கெடுபிடி பன்றாங்க"
"ஆமாக்கா, தேர்தல் நடக்குற மாதிரியே தெரியல”
தேர்தல் குறித்த இவர்களுடைய கலந்துரையாடலுக்கு இடைவேளை விடச்சொல்லும் தொனியில், ஃபைனான்ஸ்காரப் பையன் சைக்கிளில் பெல் அடித்துக்கொண்டு காளியம்மா வீட்டின் முன்வந்திறங்கினான்.
பேச்சு மாறியது.
“தவனை முடியலையா உனக்கு இன்னம்?” செல்வியிடம் கேட்டாள் காளியம்மா.
“எங்கிட்டு முடியுது? இன்னையோட ஆறு நாளைக்கு போவும்”
“இன்னையோட முடிக்க வேண்டிதான் நானு” வீட்டுக்குள் போன காளியம்மா புதிய ஐநூறு ரூபாய் தாள் ஒன்றை எடுத்துவந்து மிடுக்காகத் தவனைக்காரப் பையனிடம் நீட்டினாள்.
‘அம்மாடியோவ்…எங்கிருந்து இவளுக்கு இவ்வளவு காசு தீடீர்னு!?’ செல்விக்குத்தான் வியப்பே ஒழிய, தவனை வசூலுக்கு வந்த பையன் முகத்தில் எந்தவிதமான ஆச்சர்யக்குறிகளும் இல்லை.
அட்டையைக் கொடுத்து அவனிடம் காளியம்மா கையெழுத்து வாங்கிக்கொண்டிருந்த போதே, அவளது பிள்ளைகள், ‘அம்மா ரொட்டி வேணும் இன்னிக்கி. மிச்ச காசு இருக்குல’ என்று கேட்டார்கள். “கடையில பேரு சொல்லி ஆளுக்கு மூணு பரோட்டா வாங்கிக்க சொல்லிருக்காங்க. எலெக்சன் முடியிற வரைக்கும் வாங்கியாந்து சாப்பிடுங்க போங்க…” அம்மா சொன்னதும் பிள்ளைகள் மனதில் சந்தோஷம். குடுகுடுவென ஒயர்கூடையைத் தூக்கிக்கொண்டு ஓடின. “எலேய், ஏழு மணியாவும். இப்பவே ஓடுறீயளே...?!” காளியம்மா சத்தம்போட்டாள். “நாங்க கடத்தெருவுக்குப் போயி விளையாடிட்டு சுடசுட வாங்கியாறோம். உனக்கும், அப்பாயிக்கும், அப்பாக்கும் பொட்டலமா வாங்கியாந்துடுறோம். நாங்க அங்கனவே சாப்டுக்கவா?” குழந்தைகள் விண்ணப்பம் போட்டன. ‘சரி போய் சாப்புடுங்க!’ எனத் தாயின் அனுமதி கிடைத்ததும், ஐய்யா, ஜாலீயென குதூகலமாகக் கிளம்பிப்போனார்கள் அந்த வாண்டுப்பிள்ளைகள்.
“என்ன திடீர்னு ஒரே அமக்கலமா இருக்கே?!” செல்வி கேட்டாள்.
"நீங்களும் தர்றீங்களா?" செல்வியிடம் தவனைக்காரப் பையன் குறிக்கிட்டுக் கேட்டான். தலைப்பில் முடிந்துவைத்த பத்து ரூபாயைத் தந்தாள். வீட்டுக்குப் போய் அட்டையை எடுத்து வந்து கையெழுத்து வாங்கிக்கொண்டாள். அட்டையை சரிபார்த்து, கணக்கு சரியா தம்பி எனச் செல்வி சந்தேகம் கேட்டதும், "இந்தத் தவனையில் நூறு ரூபாய் வாங்கி இருக்கீங்க. பத்து ரூபாய் பிடிச்சுகிட்டு, தொன்னூறு ரூபாய் குடுத்தது. இன்னியோட அஞ்சு நாள் முடிஞ்சிருச்சி. இன்னும் அஞ்சி நாள் கட்டணும் நீங்க, சரிதானா?" விளக்கினான் பையன்.
நூறு ரூபாய்க்கு பத்து நாட்களில் பத்து ரூபாய் வட்டி. இப்படித்தான் பலருக்கும் பிழைப்பு ஓடியது.
ஒனக்கின்னும் காசு தரலையா செல்வி? ஃபைனான்ஸ் பையன் இருக்கும்போதே கேட்டாள் காளியம்மா.
“என்ன காசு? ரேசன்லயா? பொங்க பணம்தான் வாங்கியாச்சே” வெள்ளந்தியாக பதில்கேள்வி கேட்ட செல்வியை ஏறஇறங்க ஒரு பார்வை பார்த்துவிட்டு, இது தேறாது போல என்ற தொனியில் ஒரு பெருமூச்சை விட்டுவிட்டுக் கிளம்பிச்சென்றான் அந்தப் பையன்.
“என்னது புரியாம பேசுற? எலெக்சன் காசு இன்னம் நீ வாங்கலயா?” பையன் அப்பால் போனதும் காளியம்மா கேட்டாள்.
“எலெக்சனுக்கு தராங்களா?” செல்வியின் கண்முழிகள் வியப்பில் புடைத்து வெளியே வந்தன.
“ஆமாடி, ஒரு ஓட்டுக்கு ஐநூறு ரூவாயாம். நம்ப கட்சி குடுக்குது. நேத்து தங்கராசு அண்ணே எங்க வீட்டுக்கு வந்து ஆயிரத்தைனூறு தந்துச்சு. முணு ஓட்டுக்குக் கணக்குப் பன்னி கரெக்டா கட்சியில குடுத்துருக்காங்க பாத்துக்க. அத வச்சி இப்ப தவனை குடுத்தாச்சு. கறி குழம்பு வச்சோம் இன்னிக்கி. இன்னும் ஐநூறு சொச்சம் இருக்கு. இந்த மாசம் செலவுக்கு ஓடும். நம்ம கட்சி குடுக்குறதப் பாத்து அந்தக் கட்சிக்காரனுங்களும் காசு எடுத்துட்டு வருவாங்கணு பேச்சு அடிபடுது. ஆனா, உறுதியா இவங்க நமக்குப் போடுவாங்கணு தெரிஞ்சாதான் அவனுங்க குடுக்குறாங்களாம். அங்கிட்டு முடுக்குத் தெருவுல முன்னூறு ரூபா நேத்து தந்ததுக்கு, பத்தாதுணு சனம் சொல்லி சண்ட போட்டுருக்குவ. கடைசித் தெருவில பேச்சி…எப்படியோ, இந்த மாத்தைக்கு தேர்தல்னால பொழப்பு போயிரும்”
காளியம்மா சொன்ன தேர்தல் புதுக்கதைகளை அதிசயமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் செல்வி.
“நெசமாவே உனக்கின்னும் காசு தரலையா செல்வி?”
“எனக்கெல்லாம் யாரும் தரல” எரிச்சலோடு பதில் சொன்னாள்.
“அதெப்படி தராம இருப்பாங்க? இன்னிக்கு நாளைக்குள்ள தந்துடுவாங்க வருத்தப்படாத…நா வேணா செலவுக்குக் காசு தரட்டா?”
“ச்சேச்சே வேணாம் ஒன்னும்”
செல்வி மகள் சாந்தி முதுகில் பையோடு வீட்டுக்கருகில் நடந்துவந்து கொண்டிருந்தாள். கான்வென்ட் பள்ளியில் விடுதியில் தங்கிப் படிக்கிறாள். இந்த ஆண்டு பன்னிரெண்டாவது. கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் இருந்தாலும், இவளுடைய பள்ளிதான் தேர்தல் மையம் என்பதால், இன்னும் சில நாட்களுக்கு பள்ளியும், விடுதியும் விடுமுறை.
“ஏம்மா இவ்வளவு லேட்டு?” வாஞ்சையாக மகளைக் கேட்டாள் செல்வி. “பஸ் ரொம்ப நேரம் வரலம்மா”
சரிக்கா நாங்க வாறோம் எனக் கிளம்பிய செல்வியிடம், “இந்தாடி… புள்ள வந்திருக்கு, ஒரு நிமிசம் பொறு! நான் கறிக்குழம்பு தாரேன் எடுத்துப்போ!” என்றாள் காளியம்மா.
‘இல்லல்ல வேணாக்கா.. நாங்க வர்றோம்’ எனப் பதறிப்போய், கிளம்பி விடுவிடுவென வீட்டுக்கு மகளை அழைத்து வந்தாள். ஏன் இப்படி படபடப்பாகக் கிளம்புகிறாள் என வியந்தாள் காளியம்மா.
பூண்டு வரமிளகாய் துவையல் அரைத்து, கோதுமை மாவு கரைத்து தோசை ஊற்றி மகளுக்கு சுடச்சுடத் தட்டில் வைத்தாள். “கறிக்கொழம்பு இருந்திருக்கலாம். கொடுத்தாங்கல அத்தை, ஏன் வேணாம்னே…” மகளுக்கு பதில் சொல்ல வாயைத் திறக்கையில் வெளியே சத்தம்.
ஆரு ஊட்ல என உரக்க குரல் கொடுத்தவாறே தலைவாசலில் தலையைத் தாழ்த்தி கூன்போட்டு வீட்டுக்குள் நுழைந்தார் தங்கராசு.
“இருக்கோம் மாமா வாங்க. நல்லாருக்கியளா? சாப்புடுங்களேன்… என்ன விசயம்?” குசலம் விசாரித்த செல்வியிடம், “இந்தாயீ ஐநூறு ரூவா… எலெக்சன் பணம்” நீட்டினார் தங்கராசு.
“என்னத்துக்கு பணம்?” தெரியாதது போலவே கேட்டாள் செல்வி.
“எல்லா ஊட்டுக்கும் கரக்டா கணக்குப் பன்னி குடுத்துட்டோம் ஆயி. உன் வூடுதான் பாக்கி. நேத்து வந்து பாத்தப்ப நீ மில்லுல இருந்து வரல. அதான் இன்னைக்கி வந்தேன். நானாருக்குற வாசி ஒருத்தரயும் உடாம, எல்லாருக்கும் கரெக்டா பட்டுவாடா பன்னிட்டு வாரேன். மத்தவனா இருந்தா ஏமாத்திப்புடுவான்ணு கட்சியில என்னிட்ட காச ஒப்படைச்சிருக்காங்க” தன்னுடைய ‘நேர்மையான’ நடத்தை குறித்த கர்வத்தோடு, நெஞ்சை நிமிர்த்தி சற்று கூடுதல் சத்தத்தோடே பேசினார் தங்கராசு.
“ஓட்டுக்கு ஐநூறு ரூவா. நம்ப மோகன் இருந்திருந்தா ஆயிரம் ரூவா உங்கூட்டுக்கு வந்திருக்கும். பாவம் தவறிப்போயிட்டான். நானும் நம்ப எம்எல்ஏ உதவியாளர்கிட்ட மோகன் இல்லாட்டியும் அவன் சம்சாரம் செல்விக்கு ஆயரூவா தரனும்ன்னு சொல்லிருக்கேன். நாளைக்குப் பேசிட்டு ஐநூறு ரூவா சேத்துத் தாரேன். இப்போதைக்கு இதப்பிடி” ஐநூறு ரூவா தாளை நீட்டினார்.
“வேணாம் மாமா, நான் வாங்கல” எரிச்சலோடு மறுத்தாள் செல்வி.
“ஏன் வேணாங்குற? மத்தவங்களுக்கெல்லாம் ஆயரம், ரெண்டாயரம் தாராங்க, நமக்கு மட்டும் ஐநூறு ரூவாயானு நெனைக்கிறியா? அடுத்த எலக்சனுல பாப்பாவுக்கும் ஓட்டு வந்துரும்ல. இப்பதிக்கி பிடி. ஐநூறுவா குறைவுதான். அதான் நாளைக்கு இன்னும் ஐநூறு கேட்டு வாங்கித் தாறேன்னு சொன்னேன்ல”
“அதெல்லாம் ஒன்னும் வேணாம். ஓட்டுப் போடுறதுக்கு என்னாத்துக்குக் காசு தர்றீய? பொழப்பேதும் இல்லாட்டியும் இந்தக் கட்சி ஜெயிக்கணும்ணு காலம்பூரா ஒழச்ச மனுசன் அவரு. உசிரா நினைச்சு கையில சின்னத்தை பச்ச குத்திக்கிட்டாப்புல. இந்த சின்னத்துக்குத் தவிர நாங்க வேறெதுக்காச்சும் ஓட்டு போட்டிருக்கோமா? இப்ப என்னாதுக்கு வந்து காசு தர்றீய?” செல்வி இப்படித் துடுக்காகக் கேட்பாள் எனத் தங்கராசு சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“ஆயி, புரியாம பேசாத! நிலைமை மாறிப்போச்சு. அந்தத் தொகுதியில காசு குடுத்தியலே, இங்கயும் குடுங்கன்னு சனம் கொடையுது. கட்சியில இந்த முறை கரெக்ட்டா இவ்வளவு ஓட்டுக்கு இவ்வளவுன்னு காசை கணக்குப் பன்னி பட்டுவாடா செய்யிறாங்க. போன முறை காசு குடுக்கச் சொல்லி ஒரு பைசாகூட குடுக்காம முழுசையும் அமுக்கிட்டாப்பள அந்த மந்திரி. இந்த முறை தலைமை கூப்பிட்டு கண்டிசனா சொல்லிருச்சு. ஒழுங்கா பணத்தை சனத்துகிட்ட ஏமாத்தாம தரணும்ணு. அதனால, இந்த எலெக்சன்ல ஊழல் ஏதும் இல்லாம பணப்பட்டுவாடா ரொம்ப கரக்ட்டா நடக்குது பாத்துக்க. என்ன மாதிரி ஆளுங்க கராரா கணக்குப் பாத்து யாருக்கும் பாக்கி வைக்காம நேர்மையா பட்டுவாடா பன்னிட்டு வாரோம். நீ வாங்கலன்னா சரியா இருக்காது. நான் குடுக்காம ஏச்சிட்டதா என்னைய தப்பா சொல்வானுவ. ஒழுங்கா வாங்கிக்க” தேர்தல் பணப்பட்டுவாடா ‘முறையாக’ நடைபெறுவதற்காகத் தனது கட்சி வகுத்திருக்கும் ‘நெறிமுறைகளைப்’ பற்றி அளந்தார் தங்கராசு.
செல்வி சற்றும் அசையவே இல்லை. அவருடைய கண்களையே ஊடுருவிப் பார்த்தாள்.
“இந்தா ஆயி… வாங்கி அந்த சாமி மாடத்துல வையி” இப்போது சாந்தியை தங்கராசு உசுப்பியதும், வேணாம் மாமா, பாப்பா வாங்காத என இருவருக்கும் இடையில் நடக்க இருந்த பணப்பரிமாற்றத்தைத் தடுத்து நிறுத்தினாள்.
“என்ன இப்படி நாடகமாக்குற. புடிவாதம் பன்னாத!” கடிந்துகொண்ட தங்கராசு அடுப்படி நிலைப்படிக்கு இடப்பக்கத்தில் இருந்த முக்கோண வடிவ சாமி மாடத்தில் வைக்கப்போனார். சாமிகிட்ட போயி வைக்கிறீங்களே என அவரைத் தடுத்து மல்லுகட்டினாள் செல்வி. நிலைப்படிக்கு வலப்பக்கத்தில் இருந்த இன்னொரு மாடத்தில் அந்தப் பணத்தை வைத்துவிட்டு, அவள் மேற்கொண்டு பேசுவதற்கு இடம்கொடுக்காமல், ‘ஓட்டு போட்டுரு ஆயி’ எனச் சொல்லிவிட்டு விடுவிடுவென வாசலுக்கு விரைந்தார். வாசலை எட்டியவர் எதையோ யோசித்துவிட்டு, “மோகன் இல்ல. நாளைக்குக் கேட்டு மேக்கொண்டு ஐநூறு வாங்கித்தர வரைக்கும் காத்திருக்கணுமா என்ன? இந்தா இப்பவே புடி! அவனுக்கும் ஐநூறு வச்சிக்க” எனச் சொல்லி மீண்டும் அதே மாடத்தில் மேலும் ஒரு ஐநூறு ரூபாய் தாளை வைத்தார். “அவம்பேரு இன்னும் ஓட்டு லிஸ்ட்ல இருக்கு. இன்னும் எடுக்கல. அவனோட ஓட்ட குத்திக்குற வாய்ப்பிருந்தா போட்டுக்குறோம். எதுக்கு வேஸ்ட் பன்னிகிட்டு? அவன் இருந்தா நம்ப கட்சிக்குத்தானே போட்டுருப்பான்” நுணுக்கமாகத் திட்டமிட்டு தனது கட்சிக்கு வேலை பார்க்கும் திருப்தியில் கிளம்பிப்போனார்.
“இதுநா வரை இந்தக் கட்சிக்குத்தான் போட்டேன். இனி சாகுறவரை இவனுவளுக்குப் போட மாட்டேஞ்சாமீ” இடப்பக்க மாடத்தில் இருந்த ஏற்றாத அகல்விளக்கைப் பார்த்துச் சொன்னாள் செல்வி.
“பின்ன யாருக்குப் போடுவ…” துணுக்குற்று வினவிய மகளுக்கு “தோனுறவங்களுக்குப் போடுவன்” வைராக்கியத்துடன் பதிலளித்தாள்.
சற்று நேரம் நிலவிய அமைதியைக் கலைத்து, ‘அம்மா நான் கோச்சிங் கிளாசுக்கு காசு கேட்டேன்ல’ என ஆரம்பித்தாள் சாந்தி. “என்னவாம் அதுக்கு?” அதட்டினாள் செல்வி.
“அதான் காசு குடுத்தாருல்லா மாமா…” தயங்கித்தயங்கி வார்த்தைகளை மென்று முழுங்கினாள் சாந்தி.
“தார்றியானு கேக்குற…அப்படித்தான?…என்னா தைரியம் உனக்கு? திருட்டுக் காசுல பொழப்பு நடத்துற அளவுக்கு இளப்பமாயிட்டோமா நாம…” பொறிந்து தள்ளினாள்.
“இல்லம்மா நீயும் தவனைதான் வாங்குற…ஊர்ல சரியா கூலி வேலையே கிடைக்கிறதுல்ல…வேலை குடுத்தாலும் பொம்பள செய்யிற வேலைன்னு உனக்கு சரியா கூலியும் தரமாட்டீங்கிறாங்க… என்ன பன்னுவ நீயும்? அப்பாவும் இல்ல இப்ப…” மகள் சாந்தி அம்மாவை சமாதானப்படுத்த முயன்றாள்.
“அறிவிருக்காடி உனக்கு. அதுக்காக இந்தப் பாவக் காசை போயி படிப்புக்கு எடுத்துட்டுப் போறேங்குறியே? யார அடிச்சி ஒலையில போட்டு சம்பாதிச்சானுவளோ தெரியாது. இத செலவழிச்சா உருப்புட்டாப்லதான்”
“பணத்துக்கு இப்ப என்ன பன்றது மா?”
“அதான், திருப்பூர்ல ரெண்டு மாசம் வேலைக்குக் கூப்பிட்டுருக்காங்கல்ல. இந்த வெள்ளிக்கிழமை கிளம்புறேன். ரெண்டு மாசம் ஆவும் நான் வரதுக்கு. முன்பணம் கேட்டிருக்கேன். வெள்ளிக்கிழமை ஏஜென்ட் தந்ததும் உங்கிட்ட குடுத்தனுப்பி, உன்னைய ஹாஸ்டல்ல கொண்டி விட்டுட்டுத்தான் நான் ஊருக்குப் பஸ் ஏறுவேன்”
“ஊர்ல இருக்க மாட்டியா அப்ப?”
“பின்ன எப்படி மா பொழைக்கிறது நாம…புரியாம பேசுறியே நீ? அடுத்த வருசம் உன்னைய காலேஜுல சேக்கணும்னா எங்க காசுக்குப் போறது? திருப்பூர்ல ஹாஸ்டல்ல தங்கி வேலை பாக்கணுமாம். ரெண்டு மாசம் போனா வரும்போது இருபதாயிரம் கொண்டுட்டு வரலாம்னு சொல்றாவ”
**
வெள்ளிக்கிழமை ஓட்டுப்போட்டுவிட்டு மகளுக்குப் பணம் கொடுத்தனுப்பி, அவளை விடுதியில் விட்டுவிட்டுக் கிளம்பி திருப்பூருக்குப் போயாச்சு. திருப்பூரில் ஆறு மாதம் வேலை, ஒரு மாதம் விடுப்புக்கு ஊருக்கு வருவது என இரண்டாண்டுகளுக்கு மேல் ஓடிவிட்டது. முன்பணம் வாங்கி மகளைக் கல்லூரியில் சேர்த்தாச்சு. மகள் இப்போது கல்லூரியில் இரண்டாவது ஆண்டு படித்து வருகிறாள்.
இன்றைக்குப் பனியாரம் செய்துவந்து மகளை விடுதியில் பார்க்க வந்திருந்தாள். காசு சேமித்து மகளுக்கு ஆன்ராய்ட் செல்ஃபோனும், தனக்கு ஒரு பட்டன் ஃபோனும் வாங்கி வந்திருந்தாள். மகள் புது ஃபோன் கைக்கு வந்ததும் அதையே நோண்டிக்கொண்டிருந்தாள்.
“பனியாரத்தை நாளைக்கு வரை வச்சி சாப்பிடலாம் ஆயி” அம்மா சொன்னது காதிலே விழாததுபோல, ஃபோனில் ஏதோ வீடியோவைப் பார்த்துக்கொண்டிருந்தாள் சாந்தி. சற்றுநேரம் கழித்து அதிர்ச்சியுடன் திடீரெனச் சொன்னாள், “அம்மா! இந்தாப்பாரு… ஐநூறு ரூவா, ஆயிரம் ரூவா நோட்டெல்லாம் செல்லாக்காசாக்கிட்டு கவுருமென்டு. பழைய நோட்ட பேங்குல கொடுத்துதான் மாத்திக்கணுமாம். கருப்பு பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்குறதா இப்ப பிரதமர் பேசிட்டிருக்காரு!” வீடியோவைக் காட்டினாள். “இவனுங்கள முதல்ல ஒழிக்கணும்!” முனுமுனுத்தாள் செல்வி.
“உன்கிட்ட காசிருந்தா மாத்திடும்மா!”
“நம்பகிட்ட ஏதும்மா பெரிய நோட்டு?”
இருவருக்கும் ஒரே சமயம் ஞாபகம் வந்தது…
“அம்மா அந்த ரெண்டு ஐநூறுவா தாளு. இரண்டு வருசமா அந்த மாடத்துலயே கிடக்கே.”
“ஆமா…அது எப்பவோ செல்லாக்காசு ஆயிட்டு…அதுக்கென்ன இப்ப…?”
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்