logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

த.பழனிவேல்ராஜன்

சிறுகதை வரிசை எண் # 15


கொத்து சத்தம் இப்போதெல்லாம் தாயக்காளின் கொத்து சத்தம் கேட்பதே இல்லை……. கொத்து என்பது வயலில் களை எடுக்கப் பயன்படுத்தும் சிறிய வடிவிலான மண்வெட்டி. அதனை கல் அல்லது சுத்தியல் கொண்டு அதன் நுனிப்பகுதியில் அடித்தும்,கற்களில் தேய்த்தும் கூர்படுத்துவர்.கிராமங்களில் அதிகாலைப் பொழுதில் அநேக வீடுகளில் இந்த கூர்படுத்தும் ஒலி கேட்கும்.இப்பொழுதெல்லாம் அந்த கொத்து சத்தம் கேட்பது அரிதினும் அரிதாகி விட்டது.எங்காவது ஒரு தெருவில்,யாராவது ஒருவரது வீட்டில் எப்பொழுதாவது கேட்கும் கொத்து சத்தம் தாயக்காள் வீட்டில் மட்டும் தினமும் கேட்டுக் கொண்டிருந்தது. சமீப காலமாய் அதுவும் கேட்கவில்லை…. தாயக்காள் வயது இன்றைய தேதியில் எப்படியும் எண்பத்தைந்துக்கு குறையாது இருக்கும்.உடன்பிறந்த தம்பிகள் தத்தம் குடும்பத்துடன் தனித்தனியே வசிக்க தாயக்காள் மட்டும் ஒண்டிக்கட்டையாக தனியே வாழ்ந்து வந்தார். தாயக்காளுக்கு என்று தனிப்பட்ட குடும்பம் கிடையாது.தாயக்காளின் குடும்ப வாழ்க்கையே விசித்திரமானது.தாயக்காள் ஏழு வயதாக இருக்கும் போதே தாய்மாமனுக்கு அதாவது அம்மாவின் அண்ணனுக்கு சொந்தம் விட்டு போய் விடக்கூடாது என்பதற்காக திருமணம் செய்து வைத்து விட்டனர்.அந்த தாய்மாமனுக்கு தாயக்காள் அல்லாது வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்து குழந்தை குழந்தை குட்டிகள் இருப்பதெல்லாம் தனி கதை. பால்ய வயதில் நடந்தது திருமணம் என்பதே அறியாது,கழுத்தில் கிடக்கும் தாலியை கழட்டி விளையாடுமாம்.சில காலத்திலேயே அந்த தாய்மாமனும் இறந்து போக,குழந்தை பருவத்திலேயே தாயக்காள் விதவையாக்கப்பட்டு தான் சார்ந்த சாதிய கட்டமைப்பின் காரணமாக மறுமணம் என்பதே இல்லாமல் விதவையாகவே தாயக்காள் வாழ்ந்து வருகிறார். விதவையாக இருந்தாலும்,தன் சமூகம் சார்ந்த அனைத்து சுப துக்க நிகழ்வுகளில் முன்னின்று சாத்திர சம்பிரதாயங்கள் செய்வதை பார்த்திருக்கிறேன். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.சிறுவயதில் அடிக்கடி வயிறு வலிக்கும்.வயிற்றோட்டம் போகும்.நாங்கள் யாரும் இதற்காக ஆஸ்பத்திருக்கு போனதில்லை.தாயக்காள் வீட்டில் தான் போய் நிற்போம். நல்லெண்ணெய்யை தடவி வயிற்றுப்பகுதியை மேலிருந்து கீழாக வழித்து விட்டு,குடல் விழுந்திருக்கு என்று சொல்லி வயிற்றை தட்டி கொடுக்கும்.தொப்புளில் சிறிது நல்லெண்ணெய்யை தடவி ஒரு டம்ளர் ஓம வாட்டர் வாங்கி குடிக்கச் சொல்லும்.வலியும் வயிற்றோட்டமும் பறந்து போகும். சுளுக்கு பிடிச்சிருக்குன்னு ஒரு கூட்டம் நிற்கும்.கை,கால்களை நீவிப் பிடித்து வெடக்கென விரல்களில் சொடக்கு எடுத்து விடும். வாய்ப்புண் என்று போனால், தான் வளர்த்து வரும் வெள்ளாடுகளில் ஒரு டம்ளர் பால் கறந்து வெறும் வயிற்றில் மூன்று நாள் குடிக்க கொடுக்கும்.வாய்ப்புண் மறைந்து போகும். மஞ்சள் காமாலைன்னு போனா,வடிச்ச சுடு சோத்த நம்ம சிறுநீரில் போட்டு அடுத்த நாள் கொண்டு வர சொல்லும்.அந்த சோறு மஞ்சள் நிறம் மாறி இருந்தா ஒரு டம்ளர் ஆட்டுப்பாலில் கீழாநெல்லியை அறைத்து கலந்து ஒரு வாரத்திற்கு குடிக்க கொடுக்கும்.காமாலை தீர்ந்து விடும். அக்கி வந்து உடம்பெல்லாம் சிவந்து எரிச்சல்ன்னு வருவாங்க.காவி கல்லை உரசி எடுத்து முதுகில் ஏதாவது உருவத்தை படம் வரைந்து விடும்.அக்கி குணமாகி விடும். எதையோ பார்த்து இருள் அடிச்சிருச்சு,காய்ச்சல்ன்னு குழந்தைகளை கூப்பிட்டு வருவாங்க.திருநீறு போட்டு விடும்,சரியாகி விடும். பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைகள் அழுதுட்டே இருக்கு,பால் குடிக்க மாட்டேங்குதுன்னு தூக்கி வருவாங்க.அந்த குழந்தைகளோட காது மடலை தாயக்காள் தடவி பார்க்கும்.காது மடலை தொட்டவுடன் குழந்தை வீறென்று அழுதால் உறை விழுந்திருக்குன்னு சொல்லி ஒரு நூல் சேலையில் குழந்தையை போட்டு,சேலையோட இரண்டு நுனியையும் தூக்கி பிடித்து அந்தப் பக்கம்,இந்தப் பக்கமுன்னு ரெண்டு உருட்டு உருட்டி எடுத்து குழந்தையோட காதுகளில் லேசாக ஊதி விட குழந்தை சிரிக்க ஆரம்பித்து விடும். இப்படி எத்தனையோ வைத்தியங்களை அந்த ஊர் மக்களுக்கு செய்து வந்தாலும் யாரிடமும் அதற்காக பணம் வாங்கியது இல்லை.வெத்தலை,பாக்கு மட்டும் காணிக்கையாக வாங்கி கொள்ளும்.பெரும்பாலன நேரங்களில் அந்த வெத்தலையை வாயில் மென்று கடவாய் பகுதியில் ஒதுக்கியேதான் இருக்கும் தாயக்காள்... காலை எழுந்து வீடு தேடி வரும் அத்தனை பேருக்குமான உதவிகளை செய்து விட்டு கொத்து தட்டும் தாயக்காள்,பின் ஆடுகளை பிடித்துக் கொண்டு காட்டு வேலைக்கு போய் விடும். தாயக்காளின் கொத்து சத்தம் தான் பள்ளி நாட்களில் என்னை எழுப்பி விடும் அலார ஓசையாக இருந்தது. காலங்கள் உருண்டோடி வயது முதிர்வு தாயக்காளை வீட்டிற்குள்ளேயே முடக்கி விட்டது.ஊருக்கே வைத்தியம் பார்த்த தாயக்காள் இன்று மெடிக்கலில் வாங்கி கொடுக்கும் செட்டு மாத்திரைகளில் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் தாயக்காளின் கொத்து சத்தம் கேட்பதே இல்லை……

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  • K.RAJASEKARAN Avatar
    K.RAJASEKARAN - 2 years ago
    கதையை அப்படியே காப்பி எடுத்து வைத்துக் கொள்ளலாம்.அவ்வளவு பயனுள்ள பாட்டி வைத்தியம் கதை வடிவில் சொல்லப்பட்டுள்ளது.பாராட்டுகள் சார்!

  • முருகன் Avatar
    முருகன் - 2 years ago
    அருமையான கதை... பயனுள்ள தகவல்களை கதை மூலம் சொல்லியுள்ளார். வாழ்த்துக்கள்....

  • சில்லு Avatar
    சில்லு - 2 years ago
    வித்தியாசமான கிராமத்தின் உணர்வுகளை உணர முடிந்தது. நகர்புறங்களில் சின்ன சின்ன தொந்தரவுகள் என்றாலே பெரிய பெரிய மருத்துவனைகளுக்கு சென்று பல ஆயிரம் செலவழித்து வருகின்றோம்.ஆனால் இங்கே எளிமையான மருத்துவங்களை கதையின் மூலம் இந்த கதையின் ஆசிரியர் சொல்லியிருக்கிறார். உண்மையில் கிராமங்களில் இப்படி வைத்தியம் கிடைக்கும் என்றால் கிராம வாழ்க்கை சுகமே ஒரு சொர்க்கம் போன்றது. இந்த கதையில் வரும் தாயக்காள் உண்மையில் இருக்கிறார் என்றாள் அது அந்த கிராமத்திற்கு கிடைத்த வரம்.....

  • இரா. தங்கப்பாண்டியன். Avatar
    இரா. தங்கப்பாண்டியன். - 2 years ago
    தாயக்காளைப் பற்றிய அருமையான பதிவு. வாழ்த்துகள்

  • Alagar Avatar
    Alagar - 2 years ago
    தாயக்காள் இங்கு மட்டும் இல்லை ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கிறார்கள்..அவர்கள் இருக்கும். வரையில் பிசியோதெரபி..குழந்தை நல சிறப்பு மருத்துவர்.,.குடல் சம்மந்தமான சிறப்பு மருத்துவர்.இல்லை..எதார்த்தமான உண்மையை எடுத்துரைத்த ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள் ..பரிசு பெற என் ஆசிர்வாதங்களும்..பாராட்டுகளும்