ஹரிஹரசாஸ்தா. ரா
சிறுகதை வரிசை எண்
# 18
மார்ப்பால்
அந்த நட்ட நடு இராப்பொழுதில், வெம்பனியின் அடர்த்தி காற்றில் கலந்து, வீசாமல் தேங்கியபடி படர்ந்துக்கொண்டிருக்க, ஒரு காய்ந்த சருகை அதன் தாய், “நீ எனக்கு வேணாம் போ” என்றபடி உதறிவிட்டது. நிர்கதியாய் பறந்த அந்த சருகு, நியூட்டனின் ஆப்பிளுக்கு மரியாதை தராமல் படர்ந்து படர்ந்து ஒரு செம்மை நிறப் பெட்டியின் மேல் விழுந்தது. அந்தப் பெட்டியே சமூகத்தின் ஆணிவேர். அறத்தின் குரல். மனிதனின் கண்ணீரை துடைப்பதைவிட, அவற்றை வராமல் தடுப்பதே தருமயோகம். செம்மையான பெட்டி தன் தருமயோகத் தொழிலை செவ்வனே செய்ய துடித்தது. ஆயினும் மனிதக்கரங்களைவிட தூசுக்கரங்களுக்கு அப்பெட்டி பிடித்துவிட்டது போலும். மேலே விழுந்த இலைக்கு தூசியை பிடிக்கவில்லை போலும். பெட்டியும் செம்மைதான்; ஆப்பிளும் செம்மைதான் என்றபடி ஒரு கிழவியின் காலடியில் தன் முகத்தை பதித்தது.
மண்ணில் விழுந்த அநாதையை சரக்கென மிதித்து, இய்த்து, பிய்த்தது ஒரு செருப்பு. உடல் முழுதும் அசைந்தாலும், கரங்களை அசைக்காமல் இருளில் சில இனிப்புண்ணும் ஊருணிகளை நசுக்கி, மருந்துக்கிடங்கின் முன் குத்த வைத்திருந்த என் ஆச்சியின் அருகே வந்தமர்ந்தேன். ஒரு சிறிய நீராவி என்ஜினையே அந்த பிளாஸ்க்குக்குள் அடைத்துக் கொடுத்திருக்கிறான் அந்த மலபார் சேட்டன்.
“ஆச்சி, எவ்ளோ நேரம்தா அழுதுட்டே இருப்ப, இந்தா ஒரு மிடற்று குடி” என்றபடி கப்பில் ஊற்றிய நீராவி என்ஜினை கொடுத்தேன். தொங்கிய பழங்கண்களோ விட்டு விட்டு ஒளிர்ந்து கொண்டிருந்த அந்த மஞ்சள் விளக்குகளை விடாது பார்த்துக்கொண்டிருந்தது. மருத்துவமனைக்கே உரித்தான ஊசி நாற்றம் வெம்பனி காற்றோடு தையல் அடித்து, தையல்நாயகியையும், என்னையும் சுற்றி ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது
அங்கு சுற்றிக்கொண்டிருந்த நர்ஸ்களை விட, அதிக சிரத்தைக் கொண்டது ஆச்சியின் முந்தானை தான். கண்ணுக்கும் மூக்குக்கும் மாறிமாறி வந்துசென்றுக்கொண்டிருந்தது. முடிச்சு போட்டது அதுதானே; ஆரம்பப்புள்ளி அதுதானே; அனுபவிக்கட்டும்.
”ஆச்சி, அம்மாவும் அப்பாவும் சமயநல்லூர் வந்துட்டா, இன்னும் கொஞ்ச நேரம் தா அவுங்க ஆஸ்பத்திரிக்கு வந்துருவாங்க, நீ குடி” என்றபடி காபி கப்பை லேகுவாக திணித்தேன். இவ்வளவு கொடுமையிலும் எவ்வளவு கருணை! தான் குடிக்காமல் அந்த காபியை ஈக்களுக்கு உணவளித்துவிட்டாள்.
“முதுகு தளண்டு போச்சு, கண்ணுல பொற விழுந்து மாசக்கணக்கா ஆச்சு, பின்னாடி இருக்குற மெடிக்கல்ல இருக்குற மாத்திரைல பாதி என் வவுத்துக்குள்ள தா கெடக்கும், இன்னும் இந்த பாதகத்தி என்னென்ன கொடுமைய அனுபவிச்சுக்கப்போறாளோ? என்றபடி பொலபொலவென குற்றாலத்தை தழுவவிட்டாள்.
“நீயே சொல்லு, விஷயத்தை சொன்னா என்ன சொல்லிருக்கணும் எப்படியாச்சு அத்த, இதோ நாங்க கெளம்பிட்டோம், மொத பஸ் புடிச்சு மதுரை பெரியாஸ்பத்திரிக்கு வர்றோம், அப்படிதால சொல்லிருக்கணும். உள்ள துடிச்சுக் கெடக்குறது யாரு? உம் பொண்டாட்டியோட அண்ணன்தான அத விட்டுட்டு நம்ம நந்தினிகிட்ட பொம்பளப்பிள்ளனா மூணு சீரு வாங்கிருப்பேன்… என்ன வாக்கிது? கடைசி வரைக்கும் இந்த சனம் என் கைய நக்கி நக்கி அரிச்சு எடுத்துரும்போல, யப்பா சாமி உம் பிள்ளைக்கி காதுகுத்துதா ஒரு கேடா இந்த நிலைல, சொந்த தாய்மாமனே உசுருக்கு போராடிகிருக்குறப்ப, சீருல வைக்குற 2 பவுன் தங்கத்துக்குதால அவிங்க கண்ணு ஏங்குது”, “உங்கிட்ட அப்படியே மாமா சொன்னாரா ஆச்சி”, “இல்லயா, அக்காதான் சொல்லுச்சு, எங்கை ராசி அப்புடி”
“இல்ல தெரியாம கேக்குறேன், அப்படியென்ன நீ பழக்கம் பண்ணிட்ட, திருட்டு நாயே! தொட்டு தொட்டு முப்பது லட்சம் வரைக்கும் பொய் கணக்கு சொல்லித் திருடிட்ட, மஞ்ச கொளிச்சது நீதான், பாட்டிலு, பொகையல, பொம்பளனு திருடுன முப்பது லட்சத்தையும் தாராள பெரபு அள்ளிக் கொடுத்து அழிச்சுப்புட்ட, நீதான் மொத்தத்தையும் தீத்த, ஆனா பில்ல மாத்திப் போட்டது அவிங்க ரெண்டு பேரும் தால, அப்ப மூணும் கூட்டுக்களவாணி தால, அந்த ஓனரு என்ன சொன்னாரு, மூணு பங்கா பிரிச்சு ஒரு வருஷத்துல பத்து லட்சம் திருப்பி தந்தா போதும்னு சொல்றாருல, அத விட்டுட்டு அவன் நண்பன காட்டிக்கொடுக்க மாட்டானாம் கேட்டா தான் ஒண்டிக்கட்டையாம் அவனுக்கு மூணு பிள்ள சந்தோஷமா இருண்ட்டு போட்டுமாம்!, பீத்த நாயே! அவன காட்டிக்கொடுக்கலனா அவன் பத்து லட்சத்தையும் சேத்து நீதால அழுவனும், என்ன அப்பிடி வெள்ள! நாயே.. நாயே..! இப்ப நீதால நாயே கைய அறுத்துனு ஆஸ்பத்திரியில கெடக்க, இந்த கொசு புடுங்குல ஒன் அரவிந்தா வந்து நின்னான். நாங்கதால நிக்கோம்”
“அரி! நா மனசார வேண்டிகிருக்கேன், இந்த நாயி எப்படியாச்சும் செத்து போயிடனும்னு ஒவ்வொரு நிமிசமும் அடைச்ச நெஞ்சுல புழுங்கிப் புழுங்கி வேண்டிகிருக்கேன். இந்த வயசுல என்ன ஆஸ்பத்திரிக்கும், போலீஸ் ஸ்டேஷனுக்கும் தலகுனிய நிக்கவச்சு.. யப்பா சாமி! எனக்கு உதவி இல்லனாலும் உவத்திரத்த தந்து.. என்ன கொண்ணுப்புட்டான்யா அவன். ஏம்மா! உன் திருட்டு பிள்ளை என்னமா ரொம்ப திமிருறான், நரம்ப அத்து விட்டாதான் சார் இவன்லா திருந்துவான்னு அந்த அய்யா சொல்லும்போது உக்கிப் போயிட்டேன். பெத்த தாய, தெனம் தெனம் அழுக வச்சு இவன் எதுக்கு உயிரோட ருக்கணும். ஒண்ணு அவன் செத்துறனும் இல்ல இந்த சதப்பிண்டம் பிச்சுக்குனு போயிரனும்.”
“அந்த குருசேத்திர கெளவனாச்சும் அம்பத்தெட்டு நாள்தான் அம்புப்படுக்கயில கெடந்தான். ஆனா நா அம்பத்தெட்டு வருஷமா கெடக்கேன், இந்த மார பாருயா, அவனுக்கு பாலூட்டுன இந்த மார பாரு. போதைலகூட மேலலாம் கை வச்சதில்ல.. சொன்ன ஒவ்வொரு வாத்தையும் அம்பு அம்பா குத்தி, பாலும் சீழும் குருதியுமா செதஞ்சு கெடக்கு.”
“எட்டு வயசுல கோலி யெடுத்துட்டு வெளில போச்சு, அப்பயில இருந்து இப்ப வரைக்கும்… ஒழுங்கா படிக்கிறது இல்லாம பன்னென்டோட இஸ்கூல விட்டு நின்னுச்சு, ஒன்ன மாதிரி காலேஜ் போயி எதயாச்சும் படிச்சுருந்தாவாச்சும் திருட்டுத்தனம் கத்துக்காம இருந்துருப்பானோ என்னமோ. இப்ப மார்க்கெட்டிங்குனு ஒழுங்கா சாப்பிடாம, மத்தவங்கல மாறி ஒழுங்கா வேல பாத்தோன்னு இல்லாம பில்ல மாத்தி, கொறஞ்சது 8 மாசமா, எப்படி அரி! 8 மாசமா கொஞ்சகொஞ்சமா திருடி திருடி முப்பது லட்சம் வரைக்கும் எடுத்து மாட்டிக்கிட்டான். இப்ப கைய அறுத்து, எலி மருந்த குடிச்சு, வாய்க்குள்ள இம்மா தண்டிக்கி டியூப விட்டு கெடக்குறான். அன்னைக்கு அவ்ளோ பெரிய சுருள வச்சு ஊது ஊதுனு ஊதுனேல, இன்னைக்கு அதா வாயிலே இம்மாதண்டிக்கி விட்டுட்டாய்ங்க. ஒருவா வீட்டுக்கு கொடுக்கலயா. அப்படி முப்பது லட்சத்த என்னதா பண்ணி தொலஞ்சான்னு தெரில, இவன்லா செத்துறட்டும். பெத்த வயிறும், ஊட்டுன மாரும் பத்திக்கிட்டு எரியுது இவன்லா செத்துறட்டும்.
“இப்ப கூட நா சொல்றே பாரேன். இவன் மருந்த குடிச்சது அவமானத்துலயோ, திருட்டுத்தனம் மாட்டிக்கிச்சுனு குத்த உணர்ச்சியோ இல்ல. முப்பது லட்சத்துக்கு என்ன பண்ண போறேன்னு தெரியாமதா மருந்த குடிச்சுருக்க, எம்பிள்ள அரசாங்க உத்தியோகத்துக்கு போவானு கனவெல்லாம் கண்டேனே, ஓட்டல்ல பாத்திரம் கழுவும்போது கூட எம்பையன் என்ன சைரன் வச்ச அம்பாசெட்டர்ல கூட்டிக்கிட்டு போவானும் நெனச்சேனே” என உணர்ச்சி பொங்கி ஓவென கதறி அழுதுவிட்டாள். “தொலைஞ்சு எத்து போயிட்டா கூட நிம்மயியா கெயக்குமே” என அழுதுகொண்டே சொல்ல, அவள் சொற்களும் உடைந்து விட்டது. அவை என் செவியை தாக்கியது போல நர்ஸையும் உலுக்கிவிட்டது.
“யம்மா! ஆஸ்பிட்டல்மா இது, இப்படி கத்துறீங்க, வாங்க டாக்டர் கூப்புறாரு” என்றபடி வெள்ளை நாடா சென்றுவிட்டாள். முந்தானையால் கண்களை அல்ல மூஞ்சியையே தொடைத்தாள். பின் முந்தானையை சுருக்குப்பை தொங்கிய இடையில் சொருகி விர்ரென எழும்போது சுவரில் மாட்டியிருந்த பெட்டி சட்டென உச்சந்தலையில் இடித்தது. இரு இமைகளும் திரும்பின.
செம்மை நிறத்தில் இருந்தது இலவச ஆணுறைப் பெட்டி.
அதனை கவனியாமல் இரண்டு கால்களும் ஓடி ரூம்குள்ளே வந்தது. காலம் கடந்து விட்டது.
“வாங்க உக்காருங்க”
“விஜயகுமார் பேசண்டுக்கு நீங்க என்ன வேணும்?”
“அம்மாங்கய்யா”
“நல்ல வேல மருந்த குடிபோதைல குடிக்கல, இன்னைக்கி பல பேரு மருந்து குடிச்சு சாகுறதுல, போதைதான் காரணமா இருக்கு உங்க பையன் அந்த தப்ப பண்ணல, ஒருவழியா பொழச்சுட்டான்”
தாயின் கரைந்த கண்கள் சட்டென மலர்ந்தன.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்