அம்மையார் ஹைநூன் பீவி சிறுகதைப் போட்டிக்கு .... (போட்டிக்கானது)
*தலைநிமிர்* - எஸ்தர்
அன்றும் காலையிலேயே எழுந்து பக்கெட் டில் ஊறபோட்டிருந்த துணிகளைக் கைகளாலேயே மடமடவென துவைச்சுப் போட்டுட்டு, ஒருபக்கம் கேஸ்அடுப்பில் வச்ச உலைத் தண்ணி கொதிச்சிடிச்சா என்று பரபரவென பார்த்துட்டு, துவைச்ச துணிகளை அலசி கயிற்றின்மேல் தண்ணி இமுறும்வரை தொங்கப்போட்டுட்டு மறுபடியும் கிச்சனுக்குள் நுழைந்தாள். அரிசியைக் கழுவி உலையில் போட்டு அடுப்பை சிம்மில் வச்சுட்டு குழாயடிக்கு வந்தாள். பிழிஞ்சு பிழிஞ்சு துணிகளைக் காயவைத்தாள்.
மூங்கிலால் பின்னப்பட்ட கூடையில் வைத்திருந்த கிளிப்புகளை மிக லாவகமாக கீழே குனிந்து மேலே எடுத்து கயிற்றின்மேல் துணிகளுடன் சரியாகப் பொருத்தினாள். அதற்குள் அரிசி வெந்து சோறாகியிருந்தது. கஞ்சியை வடிச்சுட்டு சோற்றுக் குண்டானை நிமிர்த்தினாள். அவளும் அன்றைய தினத்திற்காக தலைநிமிர்ந்தாள்.
ஒவ்வொருநாளும் எல்லோருக்கும் நன்றாகத்தானே விடிகிறது. நல்லநாள், கெட்டநாள், ராகு, எமகண்டம்னு நாலுவகையாக கோணக்க மாணக்க யோசிச்சு நல்லபொழுதையெல்லாம் நாளும் வீணாக்கிக்கொண்டிருக்கிற அளவுக்கு புனிதாவுக்கு விருப்பமில்லை. ஏன்னா நாளு செய்யிற நன்மையை நாமகூட செய்யமுடியாது. விடியற அத்தனைப் பொழுதுகளும் ஆயுசு; முடியற அளவுக்கு வாழ்ந்தாலோ அது பெரிசு என்று நினைப்பவள். நினைப்பதற்கும் காரணமில்லாமல் இல்லை.
அவளின் கடந்தகால நெனப்பெல்லாம் அவ்வப்போது வந்துவந்து போவதுண்டு. நான்கு பிள்ளைகளுடன் நடுத்தெருவில் பொறுப்பில்லாமல் விட்டுட்டுப் போனபுருஷன்... பிள்ளைகளைக் காப்பாத்த இராத்திரி பகலா உழச்சது... அம்பத்தியஞ்சு வயசானாலும் அனுபவிச்சதை மறக்கமுடியுமா?
இருபத்தியாறாவது வருஷத்துல ஒரு நாள்.... பயங்கரமா குடிச்சிட்டுவந்து சந்தேகப்பட்டு அடிச்சு உதைச்சு கொடுமைபடுத்தின புருஷனிடம்... இனிமே வாழவே கூடாது என்று தீர்க்கமாக அன்றுதான் முடிவெடுத்தாள்.
பதினாலு வயசில அறியாப் பருவத்துல ஏதோ சினிமா பாட்டெல்லாம் வளர்த்துவிட்ட காதல்ல மயங்கி விதிவிலக்கில்லா வனிதையாய் வாழ்க்கைப் பட்டாள் காதல் கணவனுக்கு. ஓரிரு வருடங்கள் அப்படியும் இப்படியுமாய் சுமாராப் போனது வாழ்க்கை. ஆரம்பித்தது.... புயல் .... யார் கத்துக் குடுத்தாங்கண்ணே தெரியலை. அந்தப்பழக்கம்... அவனை பதினேழே வயசில அடிமையாக்கிடுச்சு. அன்னேலர்ந்து இன்னிக்கு வரைக்கும் கணவனிடம் காரணமேயில்லாம அடிவுதை வாங்குவது புனிதாவுக்கு வாடிக்கையாகிவிட்டது. இரவு என்ற ஒன்று ஏன்தான் வருகிறதோ என்று அனுதினமும் பயப்பட ஆரம்பித்தாள். இரவில்தான் அடி உதை அதிகம். நீயெனக்கு ‘என்னாடி செஞ்சே? உன் ஆத்தா வீட்லேர்ந்து என்னா கொண்டாந்த? எங்கூட சும்மாதானே ஓடி வந்த”... இப்படி சொல்லி சொல்லி... இது கூட பரவாயில்ல.... ‘அவன ஏன் பார்த்தே?.... இவன் ஏன் உன்னைப் பார்த்தான்?னு” புருஷன் கேட்கும் போது உடம்புமேல பாம்பு கொடிய விஷத்துடன் ஊர்ந்து போவது போலிருக்கும். அவளுக்கு. சட்டென நினைவு வந்தவளாய் குழம்பு செய்ய காய்களை நறுக்க ஆரம்பித்தாள். நறுக்கும்போதும் அந்த நாட்களை நறுக்கித்தள்ள முடியவில்லை அவளால்.
வீட்டை எதிர்த்து உறவுகளை எதிர்த்து காதல் புனிதமானதுன்னு கல்யாணம் பண்ணிக்கிட்ட புனிதா, ஊர்ல நாலு பேரு என்ன நினைப்பாங்களோ, என்ன சொல்லுவாங்களோ?ன்னு ரொம்பவும் மெனக்கெட்டாள். பொத்திபொத்தி இருபத்தியாறு வருடங்கள் வாழ்ந்தே விட்டாள்.
சீரு, செனத்தி எதுவுமே செய்யலன்னு சொல்லி மொத்தையான கட்டையால் அவளை அடிச்ச அடியில தலையிலர்ந்து இரத்தம் ஊத்தஆரம்பிச்சது..... இரத்தத்தைப் பார்த்தும் கூட குடிவெறி புருஷனை விடாமல் பற்றியிருந்தது. அடிவிழுந்ததும் ங்கொய்.... தலை சுத்த ஆரம்பிக்குது... அவ்ளோதான் நாம ... சாகப்போறோம்னு.... ஒரு அபாயம் அவளை வளைந்து கொண்டது. தொப்புனு கீழே விழுந்த அவளை யாரும் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போகலை. பச்சைத் தண்ணிய மட்டும் யாரோ வாயில் ஊத்துறது தெரியறது. ஆனா ஒன்னும் செய்ய முடியல. பல வருடங்களாக பெரிய சிறிய காயங்கள் ஏற்பட்டாலோ அல்லது பெரிய காய்ச்சலே வந்து உடம்பு சரியில்லாமல் படுத்தாலோ புனிதா ஆஸ்பத்திரிக்குப் போகக்கூடாது. இது மாமியார் வீட்டின் கட்டளை. ஆஸ்பத்திரிக்குப் போனா காசு செலவழிஞ்சுடும்.... அவ சும்மாதானே ஓடி வந்தா .... என்ற நெனப்பு அவர்களுக்கு.
மாம்பழத்தைத் தின்றுவிட்டு வெறும் நாரும் கொட்டையுமாகத் தூக்கியெறிவது போன்று புனிதா அனாதையாக இரத்தவெள்ளத்தில் விழுந்து கிடந்தாள். புருஷன் வீட்டு சொந்தத்தில சசியக்கா வந்து பார்த்துட்டு அழுதுகொண்டே ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போய் உயிரைக் காப்பாத்திவிட்டாங்க.
ஒருவழியா அந்த ஊரிலுள்ள பெரியவங்கள வச்சு கணவனிடமிருந்து பிரிச்சிவிட்டாங்க. தனியா வாடகைக்கு ஒரு வீட்டைப் பார்த்து புள்ளைங்களையும் கோழிகூட்டில் அடைகாக்கிற மாதிரி அரவணைச்சு, குடும்பத்தலைவியும் அவளே, குடும்பத் தலைவனும் அவளே என்ற நிலைமைக்கு வர்றதுக்கு எப்பேர்ப்பட்ட உழைப்பு? பொறந்ததுலேயிருந்து கையில் யாரும் அஞ்சுபைசா கூட புனிதாவுக்கு தந்ததேயில்லை. கட்டின புருஷனும் குடிச்சே மொத்தத்தையும் அழிச்சிட்டு வெறுங்கையோடு வருவான். பத்தாக்குறைக்கு இவள்ட்ட இருக்கிற பணத்தையும் புடுங்கிட்டுப் போயிடுவான். இன்னிக்கு இவ உழைக்கிறதோட மட்டுமில்லாம புள்ளைகளை பெரிய படிப்பெல்லாம் படிக்க வச்சிருக்கா. ஆனால் அந்தப் பெரிய பிரச்சினையோடு யாராலயாவது உழைக்கமுடியுமா? சம்பாதிக்க முடியுமா?
ஆறுமாத சிறுசேமிப்பிலிருந்து கட்டில், ஒருவருடமா சிறுகசிறுக சேர்த்து வச்சதில் இருந்து பீரோவும் கிரைண்டரும்.... இப்படி அவள் உழைப்பில் மலர்ந்த பூக்கள்தான் வீட்டிலுள்ள பொருட்கள்.
அவமானம், ஓடுகாலி, வெளங்காதவ, இழுத்துட்டு வந்தவ, உதவாக்கரை, பொறம்போக்கு... இத்தனைப் பட்டங்களும் புருஷனோடு வாழ்ந்தபோது அவளுக்கு கிடைத்தன.
நம்பி வந்தவனின் அன்பு, குழாயைத்திறந்தால் வரும் காற்று போல, ஒருசொட்டுக் கூட அவளுக்கு கிடைக்கல. தன்னம்பிக்கையே ஒருவகையில் அன்புதானே! தன்மேல் நம்பிக்கை வைக்கும் போது அது அன்பாகத்தானே மாற்றுருவம் கொள்கிறது.
பொதுவா பிரச்சினையைத் தீர்ப்பது என்பது பெரிய வெற்றியாக இருப்பினும் பிரச்சினையிலிருந்து முதலில் வெளியே வந்தது முதல்கட்ட வெற்றியாக இருந்தது புனிதாவுக்கு.
வேலைக்கிப் போயிட்டு வந்தும் அஞ்சுபைசாகூட பொண்டாட்டி, புள்ளைகளுக்குத் தராமல் ஏமாத்துறது வெளயறபூமி, ஒன்னையும் விளைவிக்காம மலடா நிக்கறமாதிரியே இருக்குன்னு நினைப்பாள் புனிதா.
புருஷனிடம் பிரிந்து வந்து வாழ்ந்தாலும் புருஷன் அவ்வப்போது அவளுக்குத் தொல்லைகள் கொடுத்து வந்தான். குடிக்கிறதுக்கு காசு கொடு என்று நச்சரிப்பான்; கொடுத்தனுப்பினால் பத்து நிமிஷத்துல மறுபடியும் வந்து கேட்பான் ; தரமறுத்தால் இன்னும் அதிகாரத்துடன் கைஓங்குவான்; ‘உன்னை வேலையிலிருந்தே தூக்கிடுவேன்னு மிரட்டுவான்”. ஒருநாள் புனிதாவின் ஓனர்கிட்டேயே போய் ‘எம்பொண்டாட்டிய எப்படிடா நீ வேலையில வச்சிருப்பேன்னு” கேட்டு சண்டை பிடித்தான்.
‘உன்னால என்னம்மா எனக்கு ஒரே பிரச்சனையாயிருக்கு? எங்க கம்பெனிக்கு இதெல்லாம் ஒத்துவராதும்மான்னு” சொன்னவர் அவளை வேலையை விட்டு நீக்கியும்விட்டார். மூனு நாளா வேலைக்குப் போகாம அழுது கொண்டே அம்மாவை நினைத்துக் கொண்டாள். அன்பு தேவைப்படும்போது அழையாமலேயே வந்துவிடுவாளே அம்மா.
மூணாவது நாள் ஓனரைப்போய்ப் பார்த்து தன்குடும்ப நிலைகளை உள்ளபடியே சொன்னாள். நீண்டநேரம் யோசிச்சபிறகு அவரும் ஒரு கடிதத்தில் கையெழுத்துப்போட்டு கொடுத்தார். அதை எடுத்துட்டுப் போய் லீவா மாத்திட்டு, வேலையில் சேர்ந்துக்கம்மா என்று மனமிரங்கினார் ஓனர்.
அவள் கடந்தகால நினைவுகளோடு சமையலும் வளர்ந்து கொண்டிருந்தது. எட்டுமணி பத்து நிமிஷத்துக்கு சரியா கம்பெனிக்குப் போக வேன் வந்துடும். இவள் வீட்டில் இருந்து அஞ்சுநிமிசம் நடந்த பிறகு மெயின்ரோடு.... அந்த மெயின்ரோட்டில்தான் வேனில் ஏறி கம்பெனிக்கு வேலைக்குப் போகணும். மடமடவென நடக்க ஆரம்பித்தாள். எட்டுமணி ஆறு நிமிசத்துக்குப் போய் நின்றாள். புனிதாவைப் போலவே நிறைய பெண்களும் அந்த வேனில் ஏறினார்கள். புனிதா வேனில் ஏறினதும் பெண்களெல்லாம் ஏளனமாய்ச் சிரிக்கிறது அவளுக்கு ஏதோ ஒரு மாதிரியாய் இருந்தது. ‘ஏங்க்கா உனக்கு இந்த வேண்டாத வேல? உடம்புக்குத் தான் முடியல இல்ல? எம்மாம்பெரிய பிரச்னையை வச்சுக்கிட்டு நீயெல்லாம் வேலக்கி வரலாமா? நீ வரலன்னு யாரு எக்கா அடிச்சா உன்ன?”
இப்படி பலபேரின் வார்த்தை அபிஷேகங்களுக்குள் மூழ்கிதான் வேலைக்குப் போய்விட்டுவந்தாள். அவமானம் அவள் முகத்தை சுருங்கின பூவைப்போல் இறுக்கிவிடும். ஆனாலும் அதை வெளியில் காட்டாமல் அமைதியாக இருந்துவிடுவாள்.
யாருக்குத் தெரியும்? வேலைக்கிப் போனாதான் அவளுக்கு மருத்துவ வசதியே கிடைக்கும்னு? மத்தவங்க கேலி கிண்டலையெல்லாம் பொருட்படுத்தினா ஒருநாளும் வாழ்க்கையில முன்னேற முடியாது. பூனைகண்ணை மூடிட்டா உலகமே இருண்டுடவாப் போவுது?
அந்தத் தோல் ஏற்றுமதிக் கம்பனியில எந்தவொரு தோல்பொருட்களையும் யாரும் வெளியில் கொண்டு போகாதபடி செக் பண்ணனும்; நோட்டமிடணும்; ரவுண்ட்ஸ் போய்ட்டே இருக்கனும். இவைதான் புனிதாவின் வேலை. ஒரு அஞ்சு நிமிசம் கூட உட்காரவே முடியாது. அஞ்சரைமணிக்கு வேலை முடிஞ்சபிறகு கூட ஓவர்டைம் வேலையிருந்தா அதையும் தன்னுடம்பைக் கூட பொருட்படுத்தாமல் பார்ப்பாள் புனிதா. ஓவர்டைம் செஞ்சு வர்ற வருமானத்தில் மகனை டீச்சர் டிரைனிங்ல சேர்த்துவிட்டு, வேலையும் கிடைச்சு அவன் செட்டிலும் ஆயிட்டான். ஒரு நெலமைக்குக் கொஞ்சம் கொண்டாந்துட்டா. மத்த மூணு புள்ளைங்களையும் பெரிய படிப்பு படிக்க வச்சு கட்டியும் குடுத்துட்டா. நிம்மதியா இருக்கலாம்னு நினைக்கிற நேரத்துல கடந்த மூணு வருஷமா லீவுபோட்டுட்டு சென்னை ஆஸ்பத்திரிக்கும் கம்பெனிக்கும் அலையறதுக்கே இப்போ சரியாயிருக்கு. இருபது நாள் ட்ரீட்மென்ட் முடிஞ்சு மறுபடியும் வந்து டூட்டியில ஜாய்ன் பண்றதுன்னு இப்படியே போய்ட்டிருக்கு அவ வாழ்க்கை. கம்பெனி வேலைகளுக்கு நடுவில் சில நிமிடங்கள் ஓய்ந்து உட்கார்ந்தாள்.
தலைவலி, ஜீரம், அல்சர் இப்படி பல உபாதைகள் ஒன்றாய்ச் சேர்ந்து புனிதாவை துன்புறுத்திய அந்த நாட்களில் நெஞ்சுரத்துடன் செயல்பட்டாள். மனதைரியம் தனக்கு எப்படி வந்தது என்று அவளே பலமுறை யோசித்திருக்கிறாள். ஜீரம் வரும், டாக்டருக்கிட்டே போனா ஒரு ஊசிபோடுவார். போட்டதும் சரியாகிவிடும். இப்படியே சில வருடங்களைக் கழித்தாள். ரொம்ப முடியாம ஒரு நாள் மூத்தமகளுக்கு சென்னைக்குப்போன் பண்ணி சொன்னாள். அதற்குப் பிறகு தான் ஆஸ்பிட்டல் சமாச்சாரங்கள்.
‘வயித்தப்புண்ணுதான் உங்கம்மாவுக்கு...”
‘வயித்துப்புண்ணுதான்... என்ன டாக்டர் சொன்னீங்க...? சொல்லுங்க” பதற்றத்துடன் கேட்ட மூத்த மகளிடம்,
‘ஆறாத வயித்துப்புண்ணுதான் உங்கம்மாவுக்கு கேன்சரா மாறியிருக்கு”ன்னு டாக்டர் சொன்னதும் சப்த நாடியும் அடங்கிவிட்டது.
உழைப்பு மட்டுமே உலகாகவும் உயிராகவும் இருக்க, தேவையற்றதை ஏன் சிந்திச்சு உடம்பு கெடுத்துக்கணும்னு தன்னைத்தானே தைரியப்படுத்திக் கொண்டாள். ஓட்டையாகிப்போன சமூகத்துக்கு முன்னாடி உயர்ந்து காட்டணும். இந்த எண்ணமே தலைதூக்கியது அவளுள்.
ஒருபெண் குடும்பத்தை விசாரிச்சு நடத்தினா ஏத்திவச்ச வெளக்கு மாதிரி பிரகாசமாயிருக்கும். வீசுகிற காற்று விளக்கை அணைத்துவிடப் போறேன்னு சொல்லிட்டா வீசுது?
கீமோதெரபி வேதிசிகிச்சை மருந்து ஏற்றிய முதல்முறையில் இரண்டாம் நாளே தலையிலிருந்த மொத்த முடிகளும் கொட்டிவிட்டன. ஸ்கார்ப்பைக் கட்டிக் கொண்டு வேலைக்கு வந்த நாட்களில்.... எத்தனை அவமானங்கள்? பேச்சுகள்? புறக்கணிப்புகள்? அப்பப்பா... ஓய்வு நேரத்திலும் வியர்வையில் வெளிவராத நீரை கண்ணீரில் வெளியேற்றிக் கொண்டிருந்தாள் புனிதா.
அரவணைப்புகளில் வாழ்வது வாழ்க்கையல்ல, எதிர்ப்புகளில் வாழ்வதே வாழ்க்கை, அதுதான் சாதனை வாழ்க்கை! அனிச்சையாய் கண்களைத் துடைத்துக்கொண்டே எழுந்து கடமையில் கண்பதித்தாள்.
விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்குத்தான் என்பதற்கேற்ப மூணுவருஷமா பார்த்துக்கிட்ட புள்ளைங்க இப்ப அவங்க குடும்பம், பிள்ளைங்க, பொழப்புன்னு தவிர்க்க முடியா சூழலில் கழன்று கொண்டனர்.
ஆறுமாசம் டைம் வச்சதையும் தாண்டி தன்னம்பிக்கையினால் புனிதா நாலாவது வருஷமும் நன்றாகத்தான் உயிரோடு இருக்கிறாள்.
புருஷனின் கொடும் போராட்டங்களிலிருந்து ஒருவாறு வெளியே வந்தவள், புற்றுநோயின் கோரப்பிடியிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ள தனியொருவளாய் தலைநிமிர்ந்து போராடிக் கொண்டேயிருக்கிறாள்.
*****
முகவரி :
முனைவர் எஸ்தர் ஜெகதீசுவரி, ம.,
எண்.100, அண்ணா தெரு, ஞாயிறு கிராமம், சோழவரம் தாலுகா, சென்னை - 67.
அலைபேசி - 9380420197, 9790135544.
மின்னஞ்சல் : mjagadees14@gmail.com
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்