க.பரமசிவன்
சிறுகதை வரிசை எண்
# 165
புன்னகைப்பூ (சிறுகதை)
அதிகாலையில் எழுந்த அப்பா “ சிவகாமி ‘ குமரன்’ எழுந்துவிட்டானா? “ என்று கேட்க , உறங்கிக்கொண்டிருந்த நான் உற்சாகமாய் எழுந்தேன். நானும் என் அப்பா சிவகுமாரும் உடற்பயிற்சியோடு நடைபயிற்சி செய்வது அன்றாட நிகழ்வுதான். வாழ்க்கை ஓட்டத்தைப் பற்றிய வாழ்வியல் நலத்தை அப்பா அடிக்கடி கூறுவார். ஓட்டத்தில் முதன்மை பெறுவதைவிட சமூகத்தில் மாற்றுத்திறனாளி, முதியவர், வாய்ப்பிழந்த வளர்பருவ குழந்தைகளை வாழவைப்பதற்காக இக்காலக் கடிகாரத்தில் பயணிக்க மனிதநேய விதையை விதைத்திருந்தார்.
அன்று நடைபயிற்சியின்போது தொண்ணூறு வயது மதிக்கத்தக்க மூதாட்டியைக் கண்ட என் தந்தை பேருவகை பெற்றார். அவர்களது உரையாடலே என் உள்ளத்தை உறங்கவிடாமல் செய்தது. அந்த முதியவர் என் தந்தையின் தமிழாசிரியர் “தமிழரசி” என்பதை பின்னரே அறிந்துகொண்டேன்.
சொல்லாட்சி திறன்மிக்க அவர் “சிவகுமரா நலமாக உள்ளீர்களா? “ என்று கேட்க பட்டறிவு அனுபவத்தை அடிபணிந்து நாங்களும் நலம் விசாரித்தோம். கிரிக்கெட் நாயகர்களைப் போல நாட்டிற்கு பெருமை சேர்க்க நன்றாகப் படிக்கிறானா? நலமாக இருக்கிறானா? என்று என் தந்தையிடம் கேட்டவர் என்னிடம், பூப் பூத்த பிறகு காய், பழம் நமக்குக் கிடைக்கும். ஆம் இது எல்லோருக்கும் தெரியும். காய்த்த பிறகே பூக் கிடைக்கும் பழுத்த பிறகே காய் கிடைக்கும் அது என்ன? என்று கேட்க, நான் சிந்தையைக் கூர்தீட்ட ‘ தேங்காய்ப்பூ, ஊறுகாய் ‘ என்று வார்த்தைகளை உதிர்க்க ... உப்பிட்ட ஊறுகாயின் தீமையை எடுத்துக்கூறி பச்சைக்காய், பழங்களின் பயன்களை தேன்மொழியால் கூறியது இன்றும் நீங்கா நினைவாக இருக்கிறது.
தேங்காய்ப் பூவோடு நில்லாமல் வாழைப்பூ, முருங்கைப்பூ, வேப்பம்பூப் பற்றிய தெளிவு கிடைத்தாலும், சங்கப்பாடல்களில் செம்பருத்திப் பூவின் மகத்துவம் விளக்கப்பட்டிருப்பதாகக் கூறியது. குழந்தைகளுக்கு வண்ணமயமான பூக்களை உணவாகக் கொடுத்து , சத்துகளைச் சமச்சீராக்கி குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பேண வேண்டும் என்று கூறியது என் உள்ளத்தில் பூவைப்பற்றி அறியும் ஆவல் பேரவாவாக எழுந்தது.
ஒரு கதையோடு சங்குப்பூவின் சத்துகள் மற்றும் மருத்துவப் பயன்களை எடுத்துரைக்க பூங்காவிற்கு அழைத்துச் சென்றார். அங்கே ஓரிடத்தில் அமர பூமணத்துடன் கதை கூறத் தொடங்கினார். “திருமால் சங்கூதினால்தான் மழை பொழியும் என்ற ஐதீகம் உலகில் இருந்தது. நாரதர் உசுப்பேத்த அகங்காரத்தால் சங்கூதுவதை ஓரங்கட்டினார் திருமால். எல்லா உழவர்களும் மழையின்மையால் வேளாண்மையை மறந்து அல்லலுற்றனர். ஆனால் ஒரே ஒரு விவசாயி மட்டும் நிலத்தை உழுதுகொண்டிருக்க , திருமால் இதைப் பார்த்ததும் நாரதரிடம் விளக்கம் கேட்டார். அதற்கு நாரதர் தன் தொழிலை மறந்துவிடக் கூடாது என்பதற்காக எனப் பதில் எடுத்துரைக்க உடனே திருமாலும் தன் தொழிலை மறந்துவிடக் கூடாது என்று நினைத்து சங்குநாதத்தை முழங்க மழை பொழிந்தது. வேளாண்மை செழித்தது. வேலிக்கொடிகளில் வண்ண சங்குமலர்கள் மக்களை மகிழ்வித்தது” இவ்வாறு சுவைபடக் கூறி சங்குப்பூவின் சிறப்பை “இக்காலச் சூழலில் தொற்றால் அச்சம் கொண்டுள்ள நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டைப் போக்க பாரம்பரிய உணவாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது இந்த சங்குபுஷ்பத்தைத்தான். இதற்கு சங்குப்பூ, கருவிளை, காக்கிரட்டான், காக்கினம், மாவுளி, கன்னிகொடி, சங்குகுப்பி, சங்கபுஷ்பி என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதன் இலை, பூ, வேர், விதை என அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. உடல்பருமன், நீரிழிவு, சோர்வு, மறதி, இரத்த ஓட்டக் குறைபாடு, மன உளைச்சல், மன அழுத்தம், படபடப்பு, தூக்கமின்மை, மலச்சிக்கல், கண்பார்வைக்கோளாறு, இளநரை, அறிவாற்றல் குறைபாடு என அத்தனையையும் போக்கும் வல்லமை இந்தப் பூவிற்கு இருக்கிறது. கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய்களையும் புற்றுநோய்களையும் கூட போக்கும் ஆற்றல் மிக்கது. ஆங்கிலத்தில் இதனை பட்டர்பிளை ப்ளு பே (BUTTERFLY BLUE PEA) என்று அழைக்கின்றனர். மாவுச்சத்து உணவுகள் செரிமானத்திற்கு இந்தச் சங்குப்பூக்கள் உதவுகிறது. பொலிவான முகமும் கருகருவென கூந்தலும் பெறுவதற்கும் இந்தப் பூ உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட் மனதை வலுப்படுத்த உதவுகிறது. குழந்தைகளுக்கு மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை உணவாக உட்கொள்ளப் பழக்கப்படுத்தினாலே நல்ல நினைவாற்றலும், அறிவாற்றலும் மிளிரும். தேர்வு நேரத்தில் ஏற்படும் சோர்வினையும் படபடப்பையும் போக்கும் மாமருந்து. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சங்குப்பூத் தேநீரை அவ்வப்போது பருகலாம். அதிகமாக சங்குப்பூ கிடைக்கும் காலங்களில் காயவைத்து பதப்படுத்தியும் பயன்படுத்தலாம்.
கோடையில் மட்டுமே பூக்கக்கூடிய வேப்பம்பூக்களைச் சேகரித்து உலர்த்தி நன்றாக காய்ந்ததும் பொடித்து கண்ணாடி பாட்டிலில் வைத்து வருடம் முழுக்கப் பயன்படுத்தலாம்.
வேப்பம்பூவை சுத்தம் செய்து கல்உப்பு சேர்த்த மோரில் ஊறவிட்டு பிறகு வெயிலில் காயவைத்து எடுத்து வைக்க வேண்டும். இதை வற்றல் குழம்பில் சேர்த்து சாப்பிடலாம். இதோடு வெங்காயம் சேர்த்து நல்லெண்ணெயில் வதக்கி சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இதை பருப்புப்பொடி கலந்த சாதத்தில் சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம் சுவையாகவும் இருக்கும் மிகுந்த சத்துக்களும் கிடைக்கும்.”
இவ்வாறு கூற நானும் என்பங்குக்கு 1000 வகை காய்கறிகளைக் கொண்டு சமையல் செய்வதை இரண்டே அடிகள் “காரவல்லி சதம் ப்ரோக்தம் வஜ்ரவல்லி சதம் த்ரயம் பநஸ; ஷட்ஸதம் ப்ரோக்தம் ச்ராத்தகாலே விதியதே;” (காரவல்லி என்பது பாகற்காய், வஜ்ரவல்லி – பிரண்டை, பநஸம் – பலாக்காய் இவற்றை உணவில் சேர்ப்பதால் 1000 வகைக் காய்கறிகளைக் கொண்டு சமையல் செய்ததற்கு சமம்)திருக்குறள் போல மீண்டும் மீண்டும் கூற ..........
“குமரா இன்னுமா தூங்கிக்கொண்டிருக்கிறாய்? தேநீர் தயாராகிவிட்டது.” என்று என் தாயின் குரல் செவிகளில் பாய திடுக்கென எழுந்தேன் எல்லாம் கனவு. தோட்டத்தில் இருந்த என் தந்தையை நோக்கி ஓடினேன். “ அப்பா நமது கிராமத்தில் நடக்க இருக்கும் உணவுத்திருவிழாவில் நாமும் பங்கேற்போம்.” கூறியவுடன் தந்தை உடனே இசைவு தெரிவித்தார்.கனவினை நனவாக்க தாயிடம் கலந்துரையாடினேன். தோட்டத்தில் சங்குப்பூவினைக் கொய்தோம். வேப்பம்பூவினைச் சேகரித்தோம். வாழைப்பூவினை வெட்டிஎடுத்தோம். சமைத்தோம் பூவால் செய்யப்பட்ட அறுசுவை உணவுகளை அங்கே வைத்து அசத்தினோம். மாணவர்களும் ஊர்மக்களும் ஆர்வமுடன் பூக்களைப் பற்றிக் கேட்டு அறிந்துகொண்டதோடு ரோஜாப்பூவாய் புன்னகைத்து விடைபெற நாங்கள் பேருவகை பெற்றோம்.
நான் ஆய்வுகளில் மூழ்கி பூக்களை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தொழில்நுட்பம் தேடினேன். எதிர்காலம் வகுப்பறைக்குள் நுழைந்து, நண்பர்களைத் தேடிட..............
(மலரும்)
க.பரமசிவன்(ஆசிரியர்)
ஶ்ரீ கோகுலம் பொதுப்பள்ளி,
செங்கல்பட்டு.
திறன்பேசி :7339643964
gparamasivan123@gmail.com
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்