கரு. கிருஷ்ணமூர்த்தி
சிறுகதை வரிசை எண்
# 157
சிறுகதை
×××××××××××
தலைப்பு :- காலாவதியான உறவு
××××××××××××××××××××××××××××××××××
மனதுக்குள் இதமாக ஒரு வார்த்தை பேசக் கூட ஆள் இல்லை அப்படியொரு தனிமை. ஏனோ இது அவருக்கு பிடித்துப் போய் விட்டது .மனைவி இறந்த பிறகு எல்லாமே தலை கீழாய் மாறிப் போனது பரந்தாமனுக்கு
அன்றும் அப்படி ஒரு நிகழ்வு தான் அது நிகழ்ந்திருக்கவே கூடாது விதி வலியது என்பார்கள். அது உண்மை தான் போலிருக்கிறது . சட்டென உயிர்ப் போகாமல் கொஞ்சம் கொஞ்சமாய் உயிர் போவது போல் ஒரு உணர்வு ஒரு வேளை வலியில்லாமல் உயிர் போவது என்பது இது தானோ . அனுபவித்தவர்கள் யாரும் கூறியதில்லையே
சற்று நேரத்தில் மகன் வந்து விடுவான் அதற்குள் எப்படியாவது இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கான முடியாதே சரி நடப்பது நடக்கட்டும் என்று அமைதியானார் 70 ஐ. தாண்டிய பரந்தாமன்.
உழைத்து களைத்து வீட்டிற்குள் நுழையும் போதே வீட்டின் சூழ்ல் சற்று மாறியிருப்தையும் உணர்ந்து கொண்டான் மகன் சங்கர்
பரந்தாமன் பத்மாவை திருமணம் செய்த புதிதில் இருவரும் சேர்த்து ஒரு முடிவு செய்தனர் . ஆணோ பெண்ணோ ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொள்வதென்றும் அந்த குழந்தைக்காகவே வாழ்க்கையை அர்ப்பணிப்பது என்ற முடிவுடன் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கினார்கள்
எல்லா வகையிலும் அவர்கள் பாசத்தை கொட்டி வளர்த்தனர் மகனுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டும் என்பதற்காக நல்ல தரமான பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்தனர் அடிக்கடி சொந்த பந்தங்களின் விசேசங்களுக்கு சென்று வந்தால் மகனின் படிப்பு பாதிக்கும் என்பதால் சொந்தங்களிடம் கூட கொஞ்சம் நெருக்கம் காட்டாமல் சற்று ஒதுங்கியே வாழ்ந்தனர் .
யார் என்ன பேசினாலும் எதையும் கண்டு கொள்வதில்லை என்று முடிவெடுத்து அமைதியாக மகனுககாகவே வாழ்ந்தனர்.
அந்த நேரத்தில் வேலைக்கு சென்ற மகன் வீடு திரும்பினான். உள்ளே நுழையும் போதே கூடத்தில் சிந்திக் கிடக்கும் காப்பியையும் உருண்டு கிடக்கும் டம்ளரையும் பார்த்துக் கொண்டே கைப்பையை வைத்து விட்டுத் திரும்பினான் எதிரில் மனைவி
பரந்தாமனுக்கு நெஞ்சு படபடத்தது மருமகள் என்ன பேசுவாளோ எந்த மாதிரியான வார்த்தைகள் வரப்போகிறதோ என்று மனம் கூனிக் குறுகியது
ஏங்க இங்கே பாருங்க உங்கப்பாவோட
வேலையே பொழுதன்னிக்கு இவரு செய்யறதே எல்லால் என்னால் ஒழுங்கு படுத்தீட்டு இருக்க முடியாது . கையிலே புடுச்சு குடிக்க முடியலைன வேண்டாண்னு சொல்லிட வேண்டியது தானே.
மகன் அப்பா பக்கம் திரும்பினான் என்னப்பா என்னாச்சு ஏன் இப்படி அடிக்கடி எதையாவது கீழே போடறீங்க பாத்து கவணமா இருங்கப்பா என்றான்
இல்லை ப்பா கை நடுங்கியதாலே டம்ளர் நழுவி கீழே விழுந்திடுச்சு என்றார்
ஏன் பிரஷர் மாத்திரை சரியா சாப்பிடறீங்க தானே
இல்லைப்பா மாத்திரை தீந்துபோய் ஒரு வாரம் ஆச்சு மாத்திரை சீட்டு இங்கே தான் எங்கேயோ வச்சேன் அது கானமே போயிடுச்சு அதன் மாத்திரை வாங்க. முடியலை என்றார் பரந்தாமன்
அப்பொழுது தான் அவனுக்கு புரிந்தது கடந்த வாரம் ஒரு நாள் வீடு பெருக்கும் போது தன் மனைவி ஒரு பேப்பரை எடுத்து கிழிச்சு
போட்டது அது அது அப்பாவேட மாத்திரை சீட்டாக இருக்குமோ என்று தன் மனைவியின் மீது முதல் தடவையாக சந்தேகம் எழ ஆரம்பித்தது.
சரி இருங்கப்பா நான் டாக்டரைப் பார்த்து மாத்திரை வாங்கிட்டு வருகிறேன் என்று சொல்லியபடியே கிளம்பினான். மனைவியின் எந்த பதிலையும் எதிர்ப்பார்க்காமல் . இருப்பா நானும் வருகிறேன் பரந்தாமனும் புறப்பட்டார். வேண்டாம்பா நானே கேட்டு வாங்கீட்டு வந்துடறேன் என்று புறப்பட்டு விட்டான்.
சிறிது நேரத்தில் வீடு திரும்பியவனுக்கு வீட்டில் இருக்கும் அமைதி ஏதோ பிரச்சினை நடக்கப் போகிறது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு எந்த காரணத்தைக் கொண்டும் அப்பாவை கவலைபட வைக்கக் கூடாது .என்று எண்ணிக் கொண்டு அப்பாவை தேடினான் அவர் ஆழ்ந்த சிந்தனையுடன் அதே இடத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டு மனசுக்குள் ஏதோ ஒரு நெருடல் ஏற்பட்டது . அதை மறைத்துக் கொண்டு இயல்பாக இந்தாங்கப்பா மாத்திரை மறக்காமே தினமும் மாத்திரை போட்டுக்கோங்கப்பா என்று சொல்லிக் கொண்டே மனைவியை தேடினான் அவள் சயையல் அறையில் இருப்பது தெரிந்தது .
உடைகளை மாற்றிக் கொண்டு சமையலறைக்குப் போனான். அவள் சமையல் செய்வதைப் பார்த்தாலே இன்னும் கோபம் குறையவில்லை என்பது தெரிந்தது . அவள் பேச மாட்டாள் என்று தெரிந்து இவனே வம்படியாக பேசினான் .
தன் மனைவி ரஞ்சிதாவை எப்பொழுதும் ரச்சு என்று தான் அழைப்பான் .
இதோ பாரு ரச்சு அவரு வயசானவரு அவருக்கு நாம தான் சப்போர்டா இருக்கனும் .அவரு அமைதியாகவும் நிம்மதியாகவும் இருந்து போகனும் .அதை விட்டுட்டு சின்ன சின்ன விசயத்துக்கு எல்லாம் அவர் மேலே இவ்வளவு வெறுப்பைக் காட்டறதுக்கு என்ன இருக்கு அமைதியா இரு என்று மனைவியை சமாதானம் செய்ய முயன்றான்.
இதோப்பாருங்க தினம் தினம் இவரு எதாவது செஞ்சு வெச்சுருவாரு அதை யெல்லாம் நான் இழுத்துப் போட்டு செய்ய முடியாது .நான் அப்பவே சொல்லீட்டேன் இப்பவும் அதே தான் சொல்லுவேன் .
ரச்சு சொல்லறதேக் கேளு அப்படியெல்லாம் அப்பாவே விட முடியாது. அம்மாவும் இல்லே .அவங்க இறந்து மூனு மாசம் தா ஆச்சு அதுக்குள்ளே அப்பாவை வெளியே அனுப்பறது மிகக் கொடுமையடி .அதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன் என்றான்.
பரந்தாமனுக்கு எதுவும் காதில் விழாதது போல் கண்ணை மூடி அமைதியாக ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து விட்டார் .
அப்பா சாப்பிடுங்க என்று மகனின் குரல் கேட்டு கண் திறந்தார். தட்டில் இட்லியுடன் மகன் அமர்ந்திருந்தான் . எனக்கு வேண்டாம் பசியில்லை என்றாலும் விட மாட்டான் என்று நினைத்தவர் இரண்டு இட்லி போதும் பா என்றார் வழக்கமாக மூன்று இட்லி சாப்பிடுவார். இன்று இரண்டு இட்லி போதும் என்று சொன்னார் .
சரிங்கப்பா ரெண்டு மட்டும் சாப்பிடுங்க என்ற மகனின் குரலில் ஒரு இயலாமையும் தடுமாற்றமும் நன்றாக பாரந்தாமனால் கண்டு கொள்ள முடிந்தது. அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு பேசினான் . சாப்பிட்டு விட்டு மாத்திரையை போட்டுகிட்டு நல்ல தூங்கி எந்திரிங்கப்பா மனசுலே எதையும் வச்சுக்காதீங்கப்பா .
அவளுக்கு உங்களாப் பத்தி என்னப்பா தெரியும். உங்களே நான் விடமாட்டேன் பா .நல்லபடியா பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு என் கடமை அது என்னுடைய பாக்கியம் என்றான்.
அம்மா இருந்திருந்தா இப்படி யெல்லாம் நடந்திருக்காது இல்லப்பா .அதுக்குள்ளே அவங்க அவசரப்பட்டு போயிட்டாங்க . சாப்பிட்டு முடித்த தட்டை எடுத்துக் கொண்டு இருங்கப்பா வச்சுட்டு வந்து மாத்திரை எடுத்துத் தர்றேன் என்றவனை வேண்டம்பா நீங்க போயி தூங்குங்க நான் பாத்துக்கறேன் என்று மகனை அனுப்பி வைத்தார்.
படுக்கையில் படுத்தவருக்கு தூக்கம் வரவில்லை கண்களிலிருந்து கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டே இருந்தது .இந்த வயதில் இப்படியொரு நிலைமையா வயது முதிர்ந்த காலத்தில் கட்டியவள் இல்லையென்றால் எவ்வளவு துன்பங்கள் எப்படியான அனுபவங்கள் வேண்டாம் வேண்டாம் யாருக்கும் இந்த நிலை வேண்டாம் .
படுக்கையை விட்டு எழுந்தவர் ஒரு வெள்ளைத் தாளை எடுத்து வெகு நேரமாக ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். எழுதி முடித்ததும் அதை மடித்து பத்திர படுத்தி விட்டு தூங்கி விட்டார். இடையில் மகன் வந்து எட்டிப் பார்த்துச் சென்றதையும் கவனித்திருந்தார் .
காலையில் மறக்காமல் மகன் புறப்படுவதற்கு முன் இரவு எழுதி வைத்திருந்த வெள்ளைத் தாளை மகனின் கைப்பையில் வைத்து விட்டார் . வேலைக்கு செல்லும் முன் அப்பாவிடம் வந்து அப்பா சாப்பிட்டுட்டு அமைதியா ரெஸ்ட்டு எடுங்க நான் வேலைக்கு போயிட்டு வந்துடறேன் என்று சொல்லி புறப்பட்டு விட்டான்.
சிறிது நேரம் கழித்து தன் தோள் பையையும் மனைவி இந்தாங்க இதை எப்பவும் வெளியிலே போகும் போது கையிலே எடுத்துட்டு போங்க என்று வாங்கிக் குடுத்த கைத்தடியையும் எடுத்துக் கொண்டு மனைவி பத்மாவின் படத்தின் அருகில் வந்து படத்தை மெதுவாக வருடினார்.
கண்கள் குளமாகின துக்கம் தொண்டையை அடைக்க உயிர் போகும் வலியை உணர்ந்தார் .
அங்கிருந்தவாறே சமையல் அறையை எட்டிப் பார்த்து விட்டு அமைதியாக புறப்பட்டார். வாசலை தாண்டும் போது ஒரு கணம் நின்று மனைவியின் படத்தை பார்த்து விட்டு வெளியேறினார். எங்கு போகிறோம் எந்த திசையில் பயணிக்கிறோம் என்று இலக்கின்றி நடந்தார்.
அலுவலகத்தில் உணவு இடை வேளைக்கு சிறிது நேரத்திற்கு முன்பாக கைப்பையில் ஏதோ தேடியவனுக்கு அப்பா வைத்த வெள்ளைக் காகிதம் அவன் கண்ணில் பட்டது எடுத்து விரித்துப் பார்த்தவனுக்கு அப்பாவின் கையெழுத்து என்று தெரிந்தது .அப்படியே அதை மடித்து வைத்தவனுக்கு பட படப்பு அதிகமானது. அப்பா என்ன எழுதியிருப்பாரோ
விட்டில் என்ன சூழ்நிலையோ காலையில் சாப்பிட்டார இல்லையா என்று எண்ணியவனுக்கு இத்தனை நாள் இல்லாத பதட்டமும் மன வலியும் அதிகமானது . சிறிது நேரம் கண்மூடி அசுவாசப்படுத்திக் கொண்டு அப்பா வைத்த காகிதத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தான்.
அன்புள்ள மகனுக்கும் மருமகளுக்கும் பரந்தாமனின் அனேக ஆசிர்வாதங்கள் .
அன்பு மகனே உன் அம்மா இறந்த போதே நானும் இறந்திருக்க வேண்டும் இந்த சங்கடமான சூழ்நிலை வந்திருக்காது. இந்த காலாவதியான மனிதனால் உங்களுக்குள்ளும் மனக்கசப்பு வருகிறது. அது நல்லதல்ல இப்பொழுது தான் நீங்கள் வாழ்க்கையை ஆரம்பித்து இருக்கிறீர்கள். எனவே தடையில்லாத சந்தோசத்துடனும் நீண்ட ஆரோக்கியத்துடனனும் ஆயுளுடனும் நீங்கள் வாழ வேண்டும் என்பது தான் உன் அம்மாவின் ஆசையும் என்னுடைய ஆசையும் அதுவே.
எனக்கு எந்த ஒரு மனக்கசப்போ மனசங்கடமோ மன வருத்தமோ இல்லாமல் தான் நான் இங்கிருந்து புறப்படுகிறேன் .நீங்கள் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் மனம் விட்டுப் பேசுங்கள் எல்லாம் சரியாகிவிடும் .இனிமேல் நகரும் ஒவ்வொரு நொடியும் உங்களுக்கானதாக இருக்கட்டும் . வாழ்க்கையில் சந்தோசத்தின் எல்லா பக்கங்களையும் சந்தோசத்துடன் அனுபவியுங்கள்
கடைசியாக ஒன்று எந்தக் காரணத்தைக் கொண்டும் என் தாய் தந்தையால் கொடுக்கப்பட்ட இந்த உடலும். உயிரும் தானாகத் தான் பிரிய வேண்டுமே ஒழிய நானாக பிரியமாட்டேன் .
பின்குறிப்பு = மறக்காமல் மருந்துச் சீட்டை எடுத்துக் கொண்டேன் .
வாழ்த்துகளுடன்
பரந்தாமன் பத்மா ......
முற்றும்
- - - - - - - -
---- --.-.-- --- --- --- ---- ------ ---- --- ---- ---- -----
எழுத்தும் கதையும் எனது சொந்த கற்பனையே என்றும் வேறு எங்கும் பதிவு செய்ய வில்லை என்றும் உறுதியளிக்கிறேன்
இப்படிக்கு .
கரு. கிருஷ்ணமூர்த்தி
9790596300
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்