logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

கரிக்குருவி

சிறுகதை வரிசை எண் # 147


*யுதிஷ்* ஊரிலேயே ஏழு கெணத்து பண்ணையம், கெணத்துக்கு ஓரேக்கரா ஈரேக்கரா பாத்தியம். எல்லா கெணறுமே அஞ்சு மட்டுலருந்து ஏழுமட்டு ஆழம்க. நாலு ஏத்தம், மூணு கார கெணறு. கார கெணறுன்னா கரண்டு மோட்டரு இருக்கறது. சாமத்துல வெள்ளி மொளைக்கற நேரம் சாலைய சுத்தி கெணத்துங்கள்ல _கீக்கம் கீக்கம்_ என ஏத்த சத்தம் கேட்டே சனங்க முழிப்பாங்க. நடாலும் சாமகோழி கூவுனப்ப, அத்தநாரியூட்டு கெணத்துல ஏத்தம் எறைக்கற சத்தத்த கேட்டுதான் முழிச்சான். பறி, வடம், வால்கயிறு, மாடுக என கொண்டுபோய் ஏத்தத்த பூட்டி மொத பறி எறச்சப்ப ஆந்தைங்க கூட்டுலருந்து _"உர்... உர்..."_ என சத்தமிட்டன. வயக்காட்டு கெணத்துல முடிச்சி ஏத்தம் உடும்போது காக்காய்ங்க கூட்டுலருந்து பறந்து போச்சி. பறி வடமெல்லாம் தூக்கியாந்து கீழ் கெணத்துல பூட்டினான். இதுவும் பருத்திதான், சப்ப* புடிக்க ஆரம்பிச்சிருச்சி. சப்பையெல்லாம் கொட்டாம காப்பு படிச்சா சுகுறா நாப்பது மனுவாச்சும் ஆவும். பக்கத்து ஒட்டுல* அந்த நேரம் சாம்புலு திண்னியும் அவன் மவனும் நெல்லுக்கு எரக்கூட* போட்டுகிட்டு இருந்தாங்க. நடாலுக்கு மாமியாவூடு தோப்புக்கார குடும்பம். தோப்புல சரி பாதிய சாணானுக்கு குத்தவைக்கு உட்டுருந்தாங்க. சாணான் அதுல கள்ளுக்கு முட்டி கட்டியிருந்தான். மாமியோட்டு மரத்துல தெளுவு எறக்கனா மருமவனுக்கு தெனமும் காத்தால ரண்டுபடி, சாய்ந்தரம் ரண்டுபடி கானேச்சி. வயக்காட்டு கெணத்த முடிச்சிகிட்டு கீழ் கெணத்துல ஏத்தம் பூட்டும் போதே ரண்டுபடி தென்னந் தெளுவ குடிச்சி இருந்தான். பொஞ்சாதி பாத்திகளுக்கு தண்ணி கட்டிகிட்டு இருந்தா. தண்ணி ரண்டு சரவுதான் பாஞ்சிருக்கும், நடாலுக்கு வயித்த கொடையறமாரி இருந்தது. மாடுக ரண்டையும் வாரிலயே* நிப்பாட்டிட்டு ரண்டு பர்லாங் தூரம் தாண்டி வேடவட்டில பனந் தெளுவு குடிக்க போயிருந்தான். தென்னந் தெளுவு இனிக்கும், பனந்தெளுவு நல்ல புளிப்பாகவும் சுருக்குனும் இருக்கும், பசியும் தாங்கும். நடாலுக்கு தெனமும் காலை ஆகாரமே மாமியார் ஊட்டு தென்னந் தெளுவும் வேடவட்டி பனந் தெளுவுந்தா. பனந்தெளுவு ரண்டு கோட்ட மிச்சமா குடிச்சிட்டா மத்தியானம் மூணு மணிவரைக்கும்கோட பசியெடுக்காது. வேடவட்டில அளவாக மூணு கோட்ட தெளுவுதான் குடிச்சான். குடிக்கும்போதே கீழ் கெணத்த எரச்சிட்டு சேத்தாளி தொங்கட்டாமுட்டுக்கு போயிட்டு வரனுமுனு நெனச்சிகிட்டான். தொங்கட்டான் இவனுக்கு சிறு வயசு சேத்தாளி, எப்பவும் காதுல தொங்கட்டான் போட்டுகிட்டிருப்பான். ஒடம்பு சரில்லாம படுத்து கெடக்கானு அவன் ஊட்டுக்காரி சோமார சந்தைல பாத்து சொல்லீட்டு போனா, நாளு நாளாச்சி. தெளுவ குடிச்சிட்டு வரும்போதே ஊட்டான்ட சனங்க கூட்டங் கூடியிருந்தாங்க. ஊட்ட நெருங்கறப்பவே ஆத்தா ஓவென ஓப்பாரி வச்சா, _'அடே நடூலவனே பெரியவன் செத்துப் போயிட்டானாம்டா'_ என மண்ணுல உழுந்து பெரண்டா. அக்காகாரிக மூணுபேரும் தண்டையோரம் கூடி அழுதுகிட்டிருத்தாக. ஏழெட்டு சிருசுக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. இவனுக்கு திக்குனு ஆயிபோச்சி. கூடப் பொறந்தவங்கள்ல பெரியாளு மேலதான் ரொம்ப பசம். திங்கற களியகூட நடாளு குண்டால எடுத்து போட்டுருவான், தம்பிமேல அவ்ளோ பாசம். கொக்கராம்பேட்டக்கி ஏக்கனவே ஊரு சனம் ஒரு லாரில கெளம்பியாச்சி, இவன எங்கெங்கையோ தொலவனவுங்க, காணோன்னு உட்டுட்டே போயிட்டாங்க. ஆத்தாம, அழுக தாங்கல, சனங்க முன்னால அழவும் முடியல, வீராப்பு. வாரில நிக்கற மாடோ, வடமோ, பறியோ நாபகமில்ல. தூக்குல இருந்து சொக்காயும் மேல் துண்டையும் உருவி தோல்மேல் போட்டுகிட்டு விருவிருன்னு நடந்தான், வழில சொக்காய போட்டுகிட்டான். தாரமங்கலம் நாலு மைலு, அங்கிருந்து பஸ்ஸு புடிச்சா கொங்கனாரம், அங்கருந்து கட கண்னீல வழி கேட்டுட்டே கொக்கராயம்பேட்டைக்கி போயிரலாம். பெரியாளு எல்லாருக்கும் சேத்துதான் அட்டவான்சு வாங்கினாப்ல. பொஞ்சாதி, மூணு மவளுங்க, ரண்டு மவணுங்க, அதுல ஒரு மவங் கை குருத்து. தம்பிங்க நடாலு, கடைசியாளு கவுண்டன் எல்லாருக்கும் சேத்துதான் அட்டவான்சு. காட்ல நாலேக்கரா பருத்தி. பருத்தி சப்ப புடிக்கர நேரம், கெழவனுக்கு ஊரு மேயறதுக்கும், பஞ்சாயத்துக்குமே நேரம் பத்தாதுங்கறதால அம்மாகாரி _'டே நடூலவன மட்டும் உட்டுட்டு போங்க... இருவதுநா கழிச்சி அனுப்பியுடறேன்_' என நிறுத்திட்டா. கொக்கராம் பேட்டைக்கு போன நாலாம்நாளே அண்ணனுக்கு காலரா பேதின்னு தகோலு. கல்லுகாட்லருந்து ஊருக்கு வந்தவுக சொன்னாங்க. நடாலுதான் போலாம்னு இருந்தான். ஊரு சுத்தி கெழவன் _'நா போயிட்டு வர்றேன், நீ காட்ட பாரு'_ ன்னுட்டு போனான். போனவன் அடுத்தநா சாய்காலம் வந்தவன், _'இப்பதான் நல்லா சோறு திங்கா, அவனுக்கு ஒன்னுமில்ல, குத்துகல்லாட்டம் இருக்கான்'_ னுட்டான். பல நினைவுகளில் இன்னும் வேகமாக எட்டி வச்சு நடந்தான். ஏழர சங்குரி பஸ்ச புடிச்சிறனும்னு வேகமாக நடந்தான். வேடவட்டி தாண்டி தாரமங்கலம் பக்கமா போயிருப்பான், எதுத்தாப்ல அட்வான்சு குடுத்து அண்ணன கூட்டீட்டு போன கொத்துகாரரு புல்லட்டு வண்டில வந்தாரு. _'எங்கண்ணன கூட்டிட்டுபோயி இப்படி கொன்னுபுட்டியே அண்ணா...'_ என சத்தம்போட்டு கத்தினான். சட்டென புல்லட்ட நிறுத்தனவனுக்கு அவமாணமா நெனச்சானோ என்னவோ ஓங்கி கன்னத்துல ஒரு அரை உட்டான், நடாலு அமைதியானான். கொத்துகாரன் பொறநாடியே லாரி வந்திச்சி, லாரிலயே நடாலும் ஏறிகிட்டான். லாரீல பெரியாளு செத்து மல்லாந்து கெடந்தான். கொத்துகாரன் அடிச்சதுல சவத்த பாத்துக்கோட அழல, வீராப்பு, கோவம், ஆத்தாம, இயலாம. சவம் எறக்கி பொதைக்குமட்டும் கொத்துகாரன் கூடவே இருந்தான், அடக்க செலவுக்கு ஏகாலி, கொட்டுக்காரன், குழி வெட்டுனவனுக்கென காசு குடுத்தான், போயிட்டான். பத்துநா கழிச்சி நடாலு கொக்கராம் பேட்டைக்கி போனான். கொக்கராம்பேட்ட சனங்க அண்ணனோட பாசத்த பத்தி சொல்லும்போது, இன்னும் கொஞ்சகாலம் அண்ணனோட வாழ குடுத்து வைக்கலியே என அழுதான். அங்கருந்து அண்டா குண்டா, கொட்லான், சமுட்டி, உளி, கடப்பாறலாம் எடுத்துட்டு வந்தான். பெறவு காட்டு பண்ணையமே கதியாச்சி. அண்ணன் மவளுங்கள வளத்து ஒன்னொன்னா கட்டி குடுத்தான், குடும்பத்த கர சேத்தான். பத்து பணண்டு வருசமாச்சி, அம்மாளுக்கு கொணம் மாறிடுச்சி ஊட்டவுட்டு போனவ திரும்பல. பக்கத்துலதான் மாமமூடு, அங்கதான் போயிருப்பானு இருந்துட்டான். மூணுநா கழிச்சும் வரல, ஒரெட்டு பாத்துட்டு வரலாம்னு போனவன் ஒடிஞ்சிபோய் வந்தான். யாருட்டயும் சொல்லல, பக்கத்துகாட்டு பூசாரி மாமகிட்ட பத்துரூவா கடங்கேட்டான், சட்டி பானைலாம் தொழவி ஏழேமுக்காரூவா குடுத்தாரு. செட்டீட்டில போய் வாடவ சைக்கிள் எடுத்தான், நேரத்துக்கு நாலணா வாடவ. நேரா முத்தநாய்கம்பட்டி பக்கம் போனான், பாக்கரவங்ககிட்டலாம் *நரச்ச தல கோடாம்பிகர சீலையோட ஒரு அம்மாவ பாத்தீகளா* ன்னு கேட்டுகிட்டே போனான். கொல்லவட்டி காத்ராயண் கோயிலுமுட்டம் தேடினான். அதுதான் பாட்டமுட்டு கொலதெய்வங் கோயிலு இருந்தது, அத தாண்டி போயிருக்க மாட்டா என உத்தேசம். திரும்பி காளிப்டி, சின்னதிருபதி கோயிலு பக்கம் சைக்கிள உட்டான். புரட்டாசியில படி கொடுக்கர கோயிலு சின்ன திருப்பதி. அதேபோல கஞ்சநாயக்கன்வட்டி வரை போனான், கஞ்சநாயக்கன்வட்டில ஒரு அத்த வீடு இருந்துச்சி, அங்கயும் இல்ல. திரும்ப ஓமுலூருக்கே போணான் இருட்டிகிச்சி, குதரவண்டி தெருவுல கொழந்தபைய பாட்டமுட்டுக்கு போனான், _'என்னடா இருட்டுல'_ னு கேட்டாரு. _'அம்மாவதா பாட்டா காணம், தொழவிகிட்டு வந்தேன்.. ஒரு கோடு பாத்து சொல்லு_'னு கேட்டான். _'அடே இருட்டுன பெறவு கோடு சொல்லமாட்டேன்…, தண்டயோரமா படு… காலைல பாக்கலாம்'_ னு குச்சி கெழங்கு வாங்கியாந்து குடுத்தாரு. காத்தாலைலேந்து சாப்பிடல, கெழங்க தின்னு தண்ணி குடிச்சான். பசிக்கு கெழங்கு எதுக்குமே தாங்கல, சொல்லவோ கேக்கவோ முடியல, தண்டயோரம் படுத்தாலும் தூக்கம் வரல. காத்தால கல்லபோட்டு பாத்தாரு, _'எங்கடா சரியா கண்ணுஞ் தெரில... கல்லுகோடு கேக்கவேற வந்துட்ட'_ னு ஏசிகிட்டே மறுவடியும் கல்ல போட்டு பாத்தாரு, _'சரவங்கா ஆத்த தாண்டி போ, அங்க ஒரு கோயில்ல இருப்பா'_ ன்னாரு. சரவங்கா ஆத்த தாண்டி காமாண்டவட்டீல அய்யப்பங் கோயிலுக்கு மால போட்டு இருமுடி கட்டிகிட்டிருந்தாங்க. அம்மா அங்க ஒக்காந்துகிட்டிருந்தா. நடூலவன பாத்தோடனே கண் கலங்குனா, நடூலவனும் _"எதுக்குலா கேனச்சி இவ்ளோதூரம் வந்த...? " என திட்டிக்கொண்டே, தேம்பி தேம்பி அழுதான். முந்தானையால நடூலவன் முகத்த தொடச்சிவுட்டா. ஆனாலும் ஏன் அழறான்னு வெளங்கிக்க முடீல, நல்ல கொணமில்லையே. ஒடனே அய்யப்பங் கோயிலு சாமிங்கலாம் சுத்தி நின்னுகிட்டாங்க. விவரத்த சொன்னான். சாமிங்க திட்னாங்க, _'பத்தறமா பாத்துகறதுனா கூட்டீட்டு போ, இல்லனா இங்கியே உட்டுட்டு போ நாங்க பாத்துகறம்'_ னாங்க. நடாலு சத்தியமெல்லாம் செய்தான். வயிரார சோறு போட்டு அனுப்ச்சாங்க. சைக்கிள்ல ஒக்காரவச்சி தள்ளிகிட்டே ஊடுவந்து சேந்தான். பலகாரமெல்லாம் செஞ்சிபோட்டு அம்மாவ நல்லபடியா பாத்துகிட்டான், ஏழாம் மாசம் அம்மா செத்து போனா. அப்பவும் எதோ ஒரு காட்டுல ஒழவுதான் ஓட்டிகிட்டிருந்தான். கெழவி செத்தபெறவு தம்பியோட அட்டகாசம் தாங்கல. கவுண்டனுக்கு வேலயே, கெழவனோட (அப்பனோட) சேந்துகிட்டு காட்ட விக்கறது, கள்ளு சாராயம் தொடுப்புனு செலவழிக்கிறது. காசு தீந்தா மறுபடியும் ஒரு அனப்ப விக்கறது. சூராதி சூரன். யார் தடுத்தாலும் அடி உதையென மிரட்டுவது. நடாலு பொண்டாட்டி புள்ளைக மட்டும்தான் பொறுப்பான கயிட்டவாளிக. நடாலும் தனக்குரிய பங்கை மட்டும் ஒட்டிக்கிட்டு மத்தத கண்டுக்கல. எப்பவாச்சும் கவுண்டனுக்கு புத்தி சொல்வான், எப்பவுமே அவன் கேக்கமாட்டான். பெரியாளு வூட்டுக்காரி மவனுங்க ரண்டு பேரையும் தெக்க வெள்ளாளமுட்டுல பண்ணைத்துக்கு வுட்டுட்டா, காச வாங்கி தின்னுட்டு இருந்தா. அம்மா செத்து நாலு வருசமாச்சு, தம்பி கவுண்டனுக்கு சொகமில்ல. குடிச்சி வவுறு பெருத்து சேலம் சனலாஸ்பத்திரியில கெடந்தான், செத்துபோயிட்டான்னு தகோலு வந்திரிச்சி. சேலத்து மண்டிக்கி மஞ்ச கொண்டுபோயிருந்த ஆளுக வந்து சொன்னாங்க. எட்டுமாச செனமாட்ட புடிச்சி வித்துபுட்டு, சொந்தபந்தம், ஊராரெல்லாம் கூட்டிகிட்டு எட்டுமணி எழுவதுக்கு போனான் நடாலு. ஆஸ்பத்ரில கவுண்டன் நல்லாதான் இருந்தான். அவன் அடக்க செலவுக்கு கொண்டுபோன காச அவங்கிட்டயே குடுத்துட்டு வந்துட்டான். ஒருவாரம் கழிச்சி ஆஸ்பத்ரில இருந்து எப்படியோ தேறி வந்தவன் ஒழுங்காதான் இருந்தான். செலவு பன்னுனது, தின்னதுபோக அறுநூறு ரூவாய நடாலுகிட்ட குடுத்தான். _'எதுக்குடா'_ என்றான் நடாலு, _'ஆட்டுகுட்டி வாங்கி மேயி'_ என்றான். _'எந்தகாலத்துலடா நா ஆடு மேச்சேன்... அதுமில்லாம ஊரெல்லாம் நெல்லும் பருத்தியுமா இருக்கு, எந்த ஆட்ட வாங்கி எங்க மேய்க்க. காயிம் கறியும் வாங்கி சாப்புடு, ஒடம்ப தேத்து'_ னான். _'எதுக்கும் இருக்கட்டும் வையி'_ என்றவன், அன்றிரவே பால்டாயில் மருந்து குடித்து செத்து போனான். அவனோட மாமனார் பண்ணையம் பெருசு, ஊரே அடியோட வராங்க, ராவோட ராவா எரிச்சிடலாம்னான் நடாலு. கவுண்டன் பொண்டாட்டி, _எப்பமுட்டாரு கோடிகீடி கொண்டாருவாங்க.... ஊட்ல போட்டே எடுக்கலாம்_ னுட்டா. அந்தியூர்காரங்க கொட்டுமோளம் போட்டுதான் எடுக்கனும்னுட்டாங்க. கொட்டு மேளத்தோட, கோடி துணியோட, பொண்டுக மாரடிக்க எடுத்து எரிச்சான். சவம் எரிந்து சாம்பலாகும்வரை கவுண்டனோட சேத்தாளிங்க ஒவ்வொருத்தரா சாராயம் பிராந்தின்னு எரியிர சவத்துல கொண்டுபோய் ஊத்துனாங்க. கவண்டனோட ரண்டு பொண்டாட்டி மூணு பிள்ளைக, பாவம் அதுகளாகவே கையூண்டி, கர்ணம்போட்டு கரைசேந்ததுங்க. எல்லோரும் போனதால் கெழவன் தனிமரமானான், ஆறேழு வருடங்கள் நடாலு ஊட்லயே அண்னந்தண்ணி ஆகாரமெல்லாம். கொலதெய்வங் கோயிலுக்கு பூசாரியாகவும் கெழவனே இருந்தான். சாமியாடி குறி சொல்வது, கல்லுக்கோடு பாப்பதெல்லாம் உண்டு. ஒருமுற சந்தை வேவாரத்துக்கு மாடு புடுச்சிகிட்டு போகும்போது மாடு முட்டி, கைல லேசா செராச்சி வுட்ருச்சி. தான் உச்சம்பட்டதாக நினைத்த கெழவன், பங்காளிகளை கூட்டி பூசாரிதனத்தை வேறு குடும்பத்துக்கு கொடுத்துட்டான். பூசாரிதனத்த, மொதல்ல நடாலதான் ஏத்துக்க சொன்னாங்க. பூசாரிதனம் பாத்தா காட்ல வேலபாக்க முடியாது, குடிக்கிற கஞ்சிக்கும் வழியில்லாம போயிரும்னு மறுத்துட்டான். அன்னக்கி ராவு முழுவதும் கெழவன் பெனாத்திகிட்டே இருந்தான். நடாலு பயந்துபோய் பங்காளி பெரியவங்கள எல்லாங் கூட்டியாந்துட்டான். பங்காளிககிட்ட, _இந்த வருசம் கோயில்ல அமுது குடுங்க..., சிறப்பா தெவம் பன்னுங்க..._ னு பெனாத்திகிட்டு இருந்தான் கெழவன். பொழுது விடிஞ்சதும் நடாலு ஏர் ஓட்ட போயிட்டான். _'இன்னிக்கு எங்கியும் வேலவெட்டிக்கி போவாம கெழவன் பக்கத்துலயே இரு, கொஞ்சம் பால் தண்ணி ஊத்து'_ ன்னு பெரியவங்க எவ்வளவோ சொல்லியும் கேக்காம மடுவுல ஒழவுக்கு போயிட்டான். மத்தியானம் கெழவனும் செத்துப்போனான். கைல பணமில்ல பங்காளிங்க கிட்ட கடன் கேட்டான், இல்லங்காம ஆளாலுக்கு கைல இருந்தது, அடுக்கு பாணைல சேத்து வச்சிருந்ததுன்னு குடுத்தாங்க. அடுத்த வெள்ளாமைலதான் கடன கட்னான். பெரியாலும் கெழவியும் அப்புறானிக. சூதுவாது இல்லாம விதியென செத்தாக. கவுண்டனும் கெழவனும் முடிஞ்சவரைக்கும் காடுகள வித்தாக, தின்னாக செத்தாக. ஏழு ஏத்த கிணறும் இப்ப ரண்டாச்சு, ஏக்கராவும் இப்ப நாலாச்சி.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.