Revathy Balu
சிறுகதை வரிசை எண்
# 146
படைப்பு சிறுகதைப் போட்டி 2023
சூனியக்காரியும் தேவதையும்
"சுசீ! சுசீ!" குரல் வாசலிலிருந்து வந்தது.
சசி ஹாலுக்கு வந்து சுற்றுமுற்றும் பார்த்தாள். ஹாலில் உட்கார்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்த கதிர் அவளைப் பார்த்ததும் "என்ன சசி? ஏதாச்சும் தேடறியா?" என்றான்.
"யாரோ கூப்பிட்ட மாதிரி இருந்திச்சு!" என்று முணுமுணுத்துக் கொண்டே புருவத்தை நெறித்தபடி அங்குமிங்கும் பார்த்தாள். அறை பக்கம் திரும்பிய சசியைப் பார்த்து சிரித்தவாறே, "பக்கத்து வீட்டு மல்லிகா ஆன்ட்டீ அம்மாவைக் கூப்பிட்டாங்க!" என்றான் கதிர்.
சசியின் முகம் அவன் எதிர்பார்த்தது போலவே சுருங்கியது.
"இது என்ன கண்றாவி? இப்படியா தெருலேர்ந்து ஒருத்தரைக் கூப்பிடுவாங்க? மேனர்ஸே தெரியாதவங்க. சுத்த நான்ஸென்ஸ்!" என்று கடுகடுவென்று சர்டிபிகேட் கொடுத்து விட்டு அறைக்குத் திரும்பினாள்.
கதிருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. உரக்கவே சிரித்து விட்டான். அவள் சிரிக்காதபோது எதிராளி சிரித்தால் சசிக்குக் கட்டோட பிடிக்காது. அவன் சிரித்ததை நல்ல வேளையாக அவள் பார்க்கவில்லை.
டீவியில் ஆதித்யா சேனல் தான் ஓடிக் கொண்டிருந்தது. கவுண்டமணி கசாப்பு கடைக்காரருக்குப் சங்கீதம் சொல்லிக் கொடுக்கும் பாட்டு வாத்தியாராக நடிக்கும் 'நின்னுக்கோரி வர்ணம், வரணும்' என்னும் சீன் போய்க் கொண்டிருந்தது. சசி கேட்டால் கூட கவுண்டமணி ஜோக்கிற்கு சிரிச்சேன்னு சொல்லிடலாம் என்று நினைத்துக் கொண்டான்.
சசி என்னும் சசிரேகா கதிரின் மனைவியாக இந்த வீட்டிற்கு வந்து மூன்று மாதங்கள் தான் ஆகின்றன. வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்தே தகராறு தான். கதிரின் அம்மா பெயர் சுசீலா. எல்லோரும் 'சுசீ', 'சுசீ' என்றே கூப்பிட்டுப் பழக்கம். அப்பா, அக்கம்பக்கத்தவர், உறவினர் எல்லோரும் அப்படியே தான் கூப்பிடுவர். அம்மாவுக்குத் திருமணமானதிலிருந்து அந்தத் தெருவில் தான் குடியிருக்கிறார்கள். அந்தத் தெருவிலேயே எதிர் வீட்டில் சுசீலாவின் அத்தை இருந்தாள். பக்கத்து வீட்டில் பள்ளி சிநேகிதி மல்லிகா. எல்லோரும் நீட்டி முழக்கிக் கொண்டு, தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே, 'சுசீ! சுசீ!' என்று கூப்பிடுவது வீட்டில் எல்லோருக்கும் பழக்கமாகி விட்டது.
சசிக்கு ஒவ்வொரு முறையும் 'சுசீ' 'சுசீ' என்று யாராவது கூப்பிடும்போது 'சசி' 'சசி' என்று அவளைக் கூப்பிடுவது போல இருக்கிறதாம். வீட்டுக்கு வந்த இரண்டாம் நாளே அதை மிகக் கடுப்புடன் கதிரிடம் கூறினாள். "ஒங்கம்மாக்கு என்ன வேற பெயரே கிடைக்கலியா?" என்று.
"உன் பேரு சசிரேகா தானே? நாங்க வேணா உன்னை ரேகான்னு கூப்பிடலாமா?" என்று கதிர் சாதாரணமாக சிரித்துக் கொண்டே தான் கேட்டான். கேட்டதே தப்பாகப் போய்விட்டது.
அவன் எதிரே வந்து நின்று அவனை ஒரு முறை முறைத்தாள். "இருபத்தி நாலு வருஷங்களா எல்லோரும் கூப்பிடற பெயரை நீ மாத்தி விடுவியா?" என்றாள் கோபத்துடன்.
கதிர் அயர்ந்து போனான். அப்போ அவ என்ன எதிர்பாக்கிறா? அவளுக்கு முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்னால பொறந்த இப்போ அறுவது வயசாகிற அவன் அம்மாவின் பெயரை மாத்தணும்னா? அவ பெயரை மாத்திக் கூப்பிட்டா கோபம் வரும்னா , மாமியார் பெயரை மட்டும் மாத்தலாமா? கதிருக்கு ஒன்றுமே புரியவில்லை.
சசிக்கு எப்போதும் கோபம் வரும். எல்லாவற்றிற்கும் கோபம் வரும். சாதாரணமா, சகஜமா அவ கிட்ட பேசவே முடியாது. சொல்லப் போனா அவ எப்போ குணமா பேசுவா என்றே யாராலேயும் நிர்ணயிக்க முடியாது. இது தான் இந்த மூன்று மாதங்களில் அவளைப் பார்த்து கதிர் தெரிந்து கொண்டது. அவள் ஒரு புரியாத புதிராகத் தான் இருந்தாள்.
சசிரேகா பேரழகி. அழுத்தித் தொட்டால் கன்னி போய் சிவக்கும் நிறம். நல்ல வாட்ட சாட்டமான உடல் வாகு. அதைப் பார்த்து மயங்கிப் போய் தான் கதிர் அவளைக் கல்யாணம் செய்து கொண்டான். அவள் சிரித்தால் கன்னங்கள் குழியும். இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். ஆனால் சந்தோஷமாக சிரிப்பது கொஞ்சம் அரிதான விஷயந்தான்.
கதிர் அவன் பெற்றோருக்கு ஒரே பையன். சசியும் அவள் பெற்றோருக்கு ஒரே பெண். அண்ணா நகரில் வீடு. அவர்கள் தெருவிலேயே இருக்கும் அம்மாவின் சித்தி பெண் மைனா மூலம் தான் இந்த இடம் வந்தது.
"நம்ம கதிருக்கு நல்ல பொருத்தமான ஜோடியா இருப்பா இந்த பொண்ணு, சுசீலாக்கா. அவன் ஒசரத்துக்கேத்த ஒசரம், நல்ல கலர், லட்சணம், அழகு!" என்று அடுக்கிக் கொண்டே போனபோது, பெண்ணின் குணத்தைப் பற்றி இவர்களுக்கும் கேட்கத் தோன்றவில்லை. மைனாவும் ஒன்றும் எதிர்மறையாகச் சொல்லவில்லை.
கல்யாணமான புதிதில் கதிர் அவள் அழகில் மயங்கிப் போய் கிறக்கத்தோடு அவளையே சுற்றி சுற்றி வருவான். தேன் நிலவுக்கு அவள் ஆசைப்பட்டாள் என்று பாலித்தீவுக்குச் சென்றார்கள். நன்றாகப் பேசிக் கொண்டு இருப்பவளுக்கு திடீரென்று 'மூட்' மாறி கோபம் வந்து விடும். அதே போல அது தன்னாலேயே சரியாகப் போய் அவளாகவே தான் ஒன்றும் தப்பாக நடந்து கொள்ளாததைப் போல சாதாரணமாகப் பேசுவாள். அப்பொழுது பார்க்கிறவர்கள் அவளுக்குக் கோபம் அடிக்கடி வரும், தாறுமாறாகக் கத்துவாள் என்று சொன்னால் கூட நம்ப மாட்டார்கள். எது எந்த நொடியில் நடக்கும், எந்த குணம் எப்பொழுது வெளிப்படும் என்பதை இன்று வரை கதிரால் அனுமானிக்க முடியவில்லை.
ஒருநாள் ஒரு ரோஜா வண்ணப் புடவையை உடுத்திக் கொண்டு அலுவலகத்திற்குக் கிளம்பியவளைப் பார்த்து அப்படியே மயங்கி நின்றான். "ஹாய் பியூட்டீ!" என்று தன் பரவசத்தை வெளிப்படுத்தியவன், உடனே வெளியே போய் தெருக்கோடியில் இருக்கும் பூ விற்பவரிடம் ஒரு ரோஜாப்பூவை வாங்கி வந்து அவள் எதிரே மண்டியிட்டு நின்று, "அட! நீ இன்னிக்கு அசல் தேவதை மாதிரியே இருக்கே!" என்று ஸ்டைலாக வசனம் பேசிக் கொடுத்தான். அப்படியே பாய்ந்து அவளை அணைக்க முற்பட்டபோது, சட்டென்று அவனை தள்ளி விட்டு விட்டு கோபமாக அவனை முறைத்தபடி, "அப்போ நா எப்போதும் தேவதையில்ல. இப்போ மட்டும் தான்னு சொல்றியா?" என்றாளே பார்க்கலாம்.
கதிர் ஆடிப் போனான். அதைச் செல்லமாகவோ, சிணுங்கிக்கொண்டோ சொன்னால் கூட பரவாயில்லை. சந்தோஷத்துடன் வெளிப்படும் வெட்கம் என்று எடுத்துக் கொள்ளலாம்.
'இவ கிட்ட என்ன பேசுவது? எப்படிப் பேசுவது?' எதிராளியை அது கணவனாகவே இருந்தாலும் கூட சிறிதும் மதிக்காத சுபாவம், என்ன பேசினாலும் தப்பாகவே எடுத்துக் கொண்டு சீற்றமாக பதில் சொல்வது இதிலெல்லாம் அவன் தடுமாறிப் போனான். இவளை எப்படி எதிர்கொள்வது? நாம் சிரித்துக் கொண்டே பேசினாலும் பிடிக்காது. அவள் சிரித்துக் கொண்டே பேசினாலும் அதில் அடிநாதமாக ஒரு சீற்றம் இருக்கும். அது எப்போது பொசுக்கென்று வெளி வந்து வார்த்தைகளாக வெடிக்கும் என்றே சொல்ல முடியாது.
கதிர் ஒரு அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் கம்ப்யூட்டர் உதவியாளனாக பணிபுரிகிறான். சசிரேகா ஒரு சின்ன கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் இருக்கிறாள். இருவரும் எம்.காம். படித்திருக்கிறார்கள்.
கதிரின் அப்பா ஒரு அரசு அலுவலகத்தில் பணியாற்றி ரிடையராகி விட்டார். அவர் எப்போதும் சாந்தமாகவும் நிதானமாகவும் இருப்பார். அவருக்கு எப்போதும் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்க வேண்டும். அம்மாவும் அப்படியே. கதிருக்குக் கல்யாணம் ஆகும் வரை அந்த வீட்டில் எப்போதும் சிரிப்பு சப்தந்தான். இப்பொழுது தான் வீட்டில் எல்லோரும் சசிரேகாவிற்கு பயந்து யோசித்து யோசித்துப் பேசுகிறார்கள், சிரிக்கிறார்கள்.
வீட்டில் கதிர், அவன் அப்பா, அம்மா மூவரும் சரியான 'லூஸ்' பேர்வழிகளாம். சசி தான் அவர்களுக்கு பெயர் வைத்திருக்கிறாள். வீட்டில் எப்பப் பார்த்தாலும் ஆதித்யாவும், சிரிப்பொலி சேனலும் ஓடிக்கொண்டிருக்கும். இல்லேன்னா முழு நீள காமெடி சினிமாக்கள் பார்த்து சிரித்துக் கொண்டே இருப்பதால் அப்படி ஒரு பட்டப் பெயர் வைத்திருக்கிறாளோ என்று சந்தேகமாக இருந்தது. ஆனால் அதைக் கேட்டபோதும் அவனுக்குச் சிரிப்பு தான் வந்தது. தன் அப்பா அம்மாவிடம் கூட சொல்லி சிரித்தான். அவர்களும் அதைப் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. "அப்படியா?" என்பது போல ஒரு சிரிப்பு சிரித்து விட்டுப் போய் விட்டார்கள்.
"என்னவோ தெரியல. பாவம்பா! அந்தப் பெண்ணிற்கு சாதாரணமா இருக்கவே தெரியல, சந்தோஷமாவும் இருக்கவும் தெரியல. நம்ப வீட்டில என்ன பிக்கு பிடுங்கல் இருக்கு சொல்லு! நல்லா சிரிச்சிக்கிட்டு சந்தோஷமா இருக்கலாம் இல்ல?" என்று அம்மா தான் ஆதங்கப்பட்டாள்.
"பார்க்கலாம்! ஒரு கொழந்த குட்டின்னு பொறந்தா தன்னால மாறாமயா போறா?" என்று அம்மாவே தனக்குத் தானே ஒரு சமாதானமும் சொல்லிக் கொள்வாள். அவர்கள் எதற்கும் கோபப்படாமல் எந்த 'ரீ ஆக்ஷனும்' காட்டாமல் இருப்பதே சசிக்குக் கோபத்தை அதிகரித்தது.
"சுரணை கெட்டவர்கள்" என்று அடிக்குரலில் முனகிக் கொள்வாள்.
அன்று அவள் பிறந்தநாள். அம்மா வெளிர் மஞ்சள் நிறத்தில் ஒரு ஷிஃபான் புடவை அவளுக்காக ஆசை ஆசையாக வாங்கிக் கொடுத்தாள். அதை அலட்சியமாக சோ ஃபா மேல் தூக்கிப் போட்டு விட்டு உள்ளெ சென்று விட்டாள். கதிர் தான் பின்னாலேயே சென்று அவளிடம் பேச முயன்றான்.
"டார்லிங்! வர்றியா? நாம கடைக்குப் போய் உனக்குப் பிடிச்ச மாதிரி ட்ரெஸ் எடுக்கலாம்! பேசாம ஒரு சூடிதார் வாங்கலாமா?" என்றான் சமாதானமாக.
"எனக்குப் பிடிச்ச மாதிரி ட்ரெஸ் எடுக்க நீங்க எல்லாம் யாரு?" என்றாள் சீற்றத்துடன்.
'அடேயப்பா! என்ன மாதிரி டயலாக் டா!' அவசரமாக பின்வாங்கினான் கதிர்.
"சரி! வா, ஒனக்குப் பிடிச்ச 'பிண்ட்' ஹோட்டலுக்குப் போலாமா இன்னிக்கு டின்னருக்கு?" அடுத்த சமாதான முயற்சியில் இறங்கினான் கதிர்.
அதற்குள் ஹாலிலிருந்து சுசீலா சைகையில் அவனை அழைத்தாள்.
"பொறந்தநாளுக்கு அவங்கம்மா வீட்டுக்கு போகணும்னு ஆசைப்படறாளோ என்னவோ தெரியலயே. நம்ம கிட்ட சொல்ல யோசிக்கிறா போல இருக்கு. நீ வேணா அழைச்சிக்கிட்டுப் போயேன்" என்றாள் தாழ்ந்த குரலில்.
"கல்யாணமாகி மூணு மாசமாச்சு. அவங்களும் இதுவரைக்கும் வரல. இந்தப் பெண்ணும் ஒரு தடவை கூட அங்கே போகல. அதுவும் என்னான்னு தெரியல."
'ஓஹோ! அப்படியும் இருக்குமோ?' கதிருக்கு அவளிடம் பேசவே பயமாக இருந்தது. மெதுவாக பேசிப் பேசி அவள் எதிர்த்த போதிலும் வலுக்கட்டாயமாக, "இன்னிக்கி ஒன் பொறந்தநாளுக்கு ஒங்கப்பா அம்மா ஆசிர்வாதம் வாங்கலாம் வா!" என்று அவளை அவள் அம்மா வீட்டுக்கு அழைத்துப் போனான். போகும் வழியில் ஒரு 'ஸ்வீட் ஸ்டாலில் வண்டியை நிறுத்தி அவளிடம் கேட்டு அவள் பெற்றோருக்கு கொஞ்சம் ஸ்வீட்ஸ் வாங்கினான். அப்போது சாதாரணமாகத்தான் பேசினாள்.
அவர்கள் வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தி விட்டு 'காலிங் பெல்' அடிக்கப் போன கதிரை தடுத்து நிறுத்தியது உள்ளேயிருந்து வந்த பலத்த கூச்சல். சசிரேகாவின் அம்மா குரல்தான்! சசியின் அம்மா கோபமாக தன் கணவனைப் பார்த்துக் கத்தும் குரல் கேட்டது. அவர் மிகுந்த தாழ்ந்த தொனியில் பதில் சொல்வதும் கேட்டது.
"வேலைக்காரி வேலை செஞ்சிட்டிப் போகுறவரை ஒங்க ரூமை விட்டு வெளியே வரக்கூடாதுன்னு எத்தினி தடவை சொல்லியிருக்கேன்? ஈன்னு பல்லைக் காட்டிட்டு அவ எதிரே வந்து நிக்கணுமா?" சசியின் அம்மா குரல் ஆக்ரோஷத்தில் உச்சஸ்தாயியில் ஒலித்தது.
கதிருக்கு தூக்கிவாரிப் போட்டது. அவன் வீட்டில் சில நேரங்களில் நடக்கும் நிகழ்வு நினைவுக்கு வந்தது. சசிக்கும் வீட்டு வேலை செய்யும் முனியம்மா வேலைக்கு சீக்கிரம் வந்து விட்டால் அவனோ அவன் அப்பாவோ ஹாலில் நின்றால் கொஞ்சங்கூட பிடிக்காது.
"இவங்களை யாரு இத்தினி சீக்கிரம் வேலைக்கு வரச் சொன்னாங்க? நாம வேலைக்குப் போன பிற்பாடு வர வேண்டியதுதானே?" என்றாள் ஒருமுறை கோபத்துடன்.
"இவுங்க வேலைக்கு வர்றதுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?" என்றான் முதன் முறை சசி இதைப் பற்றிக் கோபப்பட்டபோது. சசி அவனை ஒரு முறை முறைத்து விட்டுப் போய் விட்டாள்.
கதிருக்கு ஒன்றும் புரியவில்லை. முனியம்மா வேலைக்கு வந்தா அது முனியம்மா பாடு, அம்மா பாடு நமக்கென்ன என்று தான் சாதாரணமாக நினைத்தான். இப்போது தான் புரிகிறது இது வேற கண்ணோட்டம் என்று. இத்தனைக்கும் முனியம்மாவுக்கு அவன் அம்மா வயசு இருக்கும். அவன் பிறந்ததிலிருந்து அவங்க இங்க வேலை செய்வதாக அம்மா அடிக்கடி சொல்வாள். அதே போல தெருமுனையில் ஒரு பூக்காரம்மா, அவள் எதிரே மற்றொரு பூக்காரரும் உட்கார்ந்திருப்பார்கள். சசி நேரே பூக்காரரிடம் தான் போவாள்.
"ஏன் இவங்க கிட்ட வாங்கலாமே? எங்கம்மா இங்க தான் வாங்குவாங்க" என்று கதிர் ஒருமுறை சொன்னபோது அவனைப் பிடித்து இழுக்காத குறையாக வீட்டிற்கு அழைத்து வந்தாள். சசியின் குணக்கோளாறுக்கும் அடிக்கடி கோபம் வருவதற்கும் லேசாகக் காரணம் பிடிபடுவது போலத் தெரிந்தது. தன் வீட்டுக்குள் வரும் பிற பெண்களை சந்தேகப்பட்டு வளர்ந்த சூழ்நிலை! அதே போல தன் கணவன் பிற பெண்களிடம் பேசவதும் பிடிக்காது. அப்போதும் கதிருக்குக் கோபமே வரவில்லை. சசியை நினைத்தால் மிகவும் பாவமாகத்தான் இருந்தது.
சசியும் வீட்டுக்குள் நுழைந்ததும் அவள் பங்குக்கு அவள் அப்பாவை விளாசினாள். கதிருக்கு ஏன் மாமனார் வீட்டுக்குப் போனோம் என்று மிகவும் பாவமாகி விட்டது.
அவள் அம்மாவிடம் "கொஞ்சம் சமாதானமாக இருங்க!" என்று சொன்னபோது அவனை ஒரு அற்பப் புழுவைப் போல பார்த்தவள்,"இந்த விஷயமெல்லாம் ஒங்களுக்குப் புரியாது. பேசாம இருங்க!" என்றாள்.
எப்படியோ கொஞ்ச நேரம் ஓட்டி விட்டு கிளம்பலாம் என்று நினைத்தால், சசி, "நீ போ! நான் நாளைக்கு வரேன்" என்று சொல்லி விட்டாள்.
கதிருக்கு அவளை வற்புறுத்த பயமாக இருந்தது. அம்மாவும் பெண்ணும் மாறி மாறி கத்த வீட்டில், ஒரே இரைச்சல். பிறந்த நாளாவது ஆசிர்வாதமாவது? பேசாமல் அவன் திரும்பி விட்டான். மறுநாள் அங்கிருந்தே ஆபீஸ் போய் விட்டு மாலையில் தான் இங்கே வந்தாள். ஒரு நாள் நல்ல மாதிரி இருந்தால் அடுத்த நாள் உர் உர் மூடு வந்து விடும். அப்படியே நாட்கள் ஒடிக் கொண்டிருந்தன.
கதிரின் அம்மாவும் விடாமல் நம்பிக்கையோடு, "நல்ல பொண்ணு தாண்டா. ஒரு குழந்தை பிறந்தால் எல்லாம் தன்னால சரியாகி விடும்டா!" என்று சமாதானமாகப் பேசுவாள். அப்பாவும் கோபமேயில்லாமல்,"விடு! விடு! சின்னப் பெண் தானே? கொஞ்சம் வயசு, அனுபவம் எல்லாம் வந்தால் தன்னால சரியாகி விடும்!" என்று தான் சிரித்துக் கொண்டே சொல்வார்.
கதிரின் அம்மா சுசீலா நல்லா உயரமா ஒடிசலா, மாநிறமாக இருப்பாள். நீளமான முகம். மூக்கும் சற்றே நீண்டு எடுப்பாக இருக்கும். தலைமுடி இடுப்புக்குக் கீழே தொங்கும். இன்றைக்கும் எதிர் வீட்டில் இருக்கும் கதிரின் அத்தை அவ்வப்போது சுசீலாவைக் கூப்பிட்டு ஆசையாக தலை வாரி விடுவாள்.
அத்தை எதிர் வீட்டிலிருந்தே "சுசீ!" என்று கூப்பிடும் குரல் நாராசமாக இருக்கிறதாம். சசி காதைப் பொத்திக் கொள்கிறாள்.
"இந்த வயசுக்கென்ன எதிர் வீட்டில போய் தலையை வாரிக்கிட்டு மினிக்கிக்கிட்டு...." என்று மாமியாரைப் பார்த்துக் கடுப்படிப்பாள். தோள் வரை இருக்கும் இவள் முடியை நாள் முழுவதும் இருபக்கக் கழுத்திலும் வழிய விட்டுக் கொண்டு இருப்பாள்.
கதிருக்கு சத்தியமாக ஒன்றுமே புரியவில்லை. மாமியார் என்ன செய்தால் இவளுக்கு என்ன? இவள் வழிக்கு யாரும் வருவதில்லை. அவள் சகஜமாகப் பழகாததால் அப்பா அம்மா இருவருமே அவளிடம் அவசியத்துக்கு தான் பேசினார்கள். சொல்லப் போனால் அவளுக்கு எப்படி உதவியாக இருக்கலாம் என்று மட்டும் தான் எல்லோருமே யோசித்தார்கள். அப்பா கூட சமயங்களில் அவளுடைய டூ வீலரை வராந்தாவிலிருந்து வாசல் பக்கம் கொண்டு போய் நிறுத்தி வைப்பார். அழுக்காக இருந்தால் துடைத்து வைப்பார்.
இவள் அலுவலகத்திற்குக் கிளம்பும்போது சரியாக லஞ்ச் பாக்ஸ் மேஜை மேல் ரெடியாக இருக்கும். டைனிங் டேபிளில் காலைப் பலகாரம் வைக்கப்பட்டிருக்கும். உர் ரென்று முகத்தை வைத்துக் கொண்டு வேண்டா வெறுப்பாக ரெண்டு இட்லியைத் தின்று விட்டு லஞ்ச் பாக்ஸை எடுத்துக் கொண்டு கிளம்புவாள். சில நாட்கள் லஞ்ச் பாக்சை வைத்து விட்டுக் கிளம்புவாள். அவள் மறந்து விட்டாளோ என்று கதிர் பின்னாலேயே ஓடி அவளிடம் நீட்டினால் அதைப் புறங்கையால் தள்ளுவாள்.
"தெனைக்கும் அவங்க கொடுக்கிறதை தான் தின்னணும்னு தலையெழுத்தா என்ன?"என்று சூடாக வார்த்தைகளைக் கொட்டிவிட்டு தன் டூ வீலரை எடுக்கப் போய்விடுவாள்.
சுசீலா தான் அங்கலாய்ப்பாள், "என்னடா இந்தப் பொண்ணு இப்படிப் பேசுது? அவளுக்கு என்ன வேணுமின்னே தெரியலையேடா! நீங்க அப்பப்போ வெளியில ஹோட்டல்ல போயி சாப்பிடறீங்களே? அந்த மாதிரி ஏதாச்சும் செஞ்சு தரணும்னு எதிர்பார்க்கிறாளோ?" என்று.
"நீ பேசாம இரும்மா! அலட்டிக்காதே! தனக்கு என்ன வேணும்னு தான் அவளுக்கே தெரியலையேம்மா." என்று சொல்லி, சசியின் விஷயங்கள் அனைத்தும் இந்த 'தெரியல, புரியல' விலேயே அடங்கிடும்னு நினைத்துக் கொள்வான் கதிர்.
ஒரு நாள் அம்மா மாலையில் தலையைப் பின்னி பூ வைத்துக் கொண்டு சசி ஆபிசிலிருந்து வரும் நேரம் ஹாலில் நின்றிருந்தாள்.
தன் அறைக்குள் நுழைந்து சசி கதவை சார்த்திக் கொண்டாள். மாலை கதிர் வந்ததும் அம்மா அவனிடம் ஜாடை காட்டி சொன்னாள். "என்னவோ இன்னைக்கு ஆபீசிலிருந்து வந்ததிலிருந்தே கோபமாக இருக்கா. காப்பி குடிக்கிறியான்னு கேட்கக் கூட பயமா இருக்குடா " என்று. கதிருக்கு அலுவலகம் மாம்பலத்தில். சசிக்கு சைதாப்பேட்டையில். வீடு மேற்கு மாம்பலத்தில். ஆளுக்கு ஒரு டூ வீலர். கதிரும் சசியும் சற்று முன்னும் பின்னுமாகத்தான் மாலை வீடு திரும்புவார்கள். சமயத்தில் சசி சீக்கிரம் வந்து விடுவாள். சிலநேரம் அவள் நல்ல மூடில் இருந்தால்,"எங்கேயாச்சும் வெளியே போய் சாப்பிடலாமா?" என்பாள். அவனும் உடனே சந்தோஷமாக அவளை அழைத்துக் கொண்டு கிளம்புவான்.
'ஏன் இன்று ஆபீசிலிருந்து வந்தவுடனேயே கோபமாக இருக்கிறாள்?' என்று யோசித்தவாறே கதிர் அறைக்குள் நுழைந்து அவளைப் பார்த்து சந்தோஷமாக சிரித்தவாறே, "ஹை பேபி! காப்பி குடிக்கலாம் வர்றியா" என்றான்.
"ஆபிசிலிருந்து வந்து வீட்டுக்குள் நுழைஞ்சதுமே ஒங்கம்மா ஹால்ல நிக்குறதைப் பார்த்தா எனக்கு அப்படியே சூனியக்காரக் கிழவி மாதிரி தோணுது. ஆத்திரமா வருது. நா கொஞ்ச நேரம் மொட்டை மாடியில போய் உக்காரப் போறேன்" அவன் பதிலை எதிர்பாராமல் அவள் போய் விட்டாள்.
கதிர் ஒரு கணம் வாயடைத்துப் போனான். 'என்னவெல்லாம் வார்த்தைகள்! ஒரு மாமியாரைப் பற்றி ஒரு மருமகள் பேசக்கூடிய வார்த்தைகளா? இவள் தெரிந்து தான் பேசுகிறாளா....இல்ல...ஏதோ வாய்க்கு வந்ததை உளறுகிறாளா? ஒண்ணுமே புரிஞ்சிக்க முடியலியே?'
இருந்தாலும் எதையும் பெரிசு படுத்தத் தெரியாமலும் நகைச்சுவையாக மட்டுமே பார்க்கத் தெரிந்த அவன் சுபாவத்தினால் அவனுக்கு சட்டென்று சிரிப்பு வந்து விட்டது. உடனே சிரிப்பை அடக்க மாட்டாமல் ஹாலுக்குப் போய் அம்மாவிடம் சசி சொன்னதை சொன்னான். அப்பாவும் ஹாலில் சோஃபாவில் டீவிக்கெதெரே தான் அமர்ந்திருந்தார். அவருக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
அம்மா முகம் தான் சட்டென்று மாறி விட்டது. "எப்படிடா அவளுக்கு இப்படியெல்லாம் சொல்லத் தோணுது! ஏண்டா இப்படியெல்லாம் பேசினா எதிராளி மனசு புண்படுமான்னு யோசிக்கக் கூட மாட்டாளா?" என்றவள் அடுத்தக் கணமே, "ஏண்டா! நா அப்படியாடா இருக்கேன்?" என்றாள் பரிதாபமாக.
அப்பா திடீரென்று விழுந்து விழுந்து சிரித்தார். "சுசீ! சினிமாவில, கதைப் புத்தகத்தில எல்லாம் வருவாங்களே சூனியக்காரக் கிழவி? அதே மாதிரி நீயும் துடைப்பத்தில உட்கார்ந்து பறந்து வர்ற மாதிரி கற்பனை செஞ்சு பார்த்தேன். சும்மா சொல்லக் கூடாது. உன் உசரத்திற்கும், ஒல்லி உடம்பிற்கும் நீட்டு மூக்கிற்கும் அச்சு அசலா அதே மாதிரி இருந்தே." என்று பக பக வென்று சிரித்தார். அம்மா முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அப்பாவுக்கு எதிர் சோஃபாவில் போய் உட்கார்ந்தாள்.
"கோச்சுக்காதே சுசீ. உன் ஒசரத்துக்கும் நீள மூஞ்சி நீள மூக்குக்கு அந்த போஸ் நல்லா சூட்டபிளா இருந்ததுன்னு சொன்னேன்" என்றார் சமாதானமாக.
அப்பா சொன்னதைக் கற்பனை பண்ணிப் பார்த்தான். கதிர். அம்மா புடவை கட்டிக்கொண்டு துடைப்பத்தில் ஏறி வருவது போல. சிரிப்புத் தாங்கவில்லை அவனுக்கு.
"அம்மா!" என்று அடக்க மாட்டாமல் சிரித்தான். உதட்டை சுழித்து பழிப்பு காட்டினாலும், மெதுவாக அம்மாவிற்கும் அவர்கள் சிரிப்பு தொத்திக் கொண்டது.
"ஆங்.. காந்தக் கண்ணழகி! இப்படி பூசு. இங்க பூசு, ஆங்க்........ரைட்ல... இப்படி லெஃப்ட்ல......." என்று கவுண்டமணி சந்தனம் பூசிக் கொண்டு பூ மிதிக்க முஸ்தீபு செய்து கொண்டிருக்கும் சூரியன் படத்து பிரசித்தி பெற்ற காமெடி சீன் ஆதித்யா சேனலில், அமர்க்களமான பிஜிம் ம்யூசிக்குடன்.
"என்ன ஒரே சிரிப்பு?" என்றவாறே மாடியிலிருந்து கடுகடு வென்ற முகத்துடன் கீழே இறங்கி வந்த சசிக்கு டீவி பக்கம் கையைக் காட்டினான் கதிர்.
"சுத்த புத்தி கெட்டதுங்க!" என்று அடிக்குரலில் சொல்லிக்கொண்டே சசி உள்ளே போக, அந்த நிமிடம் தங்களைக் காப்பாற்றிய கவுண்டமணிக்கு நன்றி சொன்னான் கதிர்.
எழுதியவர்:
ரேவதி பாலு
ஓம் சாந்தி அபார்ட்மெண்ட்ஸ், முதல் மாடி,
24, இரண்டாவது பிரதான சாலை
கண்ணப்பா நகர், சென்னை - 600041.
தொ.பே: 98410 19464
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்