கூ.மு.ஷேக் அப்துல் காதர்
சிறுகதை வரிசை எண்
# 145
நிழலும் நிசமும்
-------------------------------
அன்று அவளுக்கு முதலிரவு, அவனுக்கும் தான்.
அறையினுள் மணப்பெண்ணை விட்டு கதவை தாழிடச் சொல்லி சென்றனர்.
மொட்டுகள் மெல்ல திறக்கும் பொழுது கொள்ளும் வெட்கமாய் அவள் வந்தாள்.
அவனோ அருகில் அமர வைத்து விட்டான்.
மின்விசிறி மட்டுமே சத்தமிட்டுக் கொண்டிருக்கிறது. என்ன பேசுவது? எங்கிருந்து ஆரம்பிப்பது? என்ற குழப்பம் இருவருக்கும் தொற்றிக் கொண்டது.
" ஏங்க உங்கள பத்தி சொல்லுங்க" என்று ஆரம்பித்தாள் லதா
" இந்த உலகத்திலேயே நம்மளைய மாதிரி யாரும் இருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்" என்றான் மணி
"ஏன் அப்படி சொல்லறீங்க"
" நிச்சயத்துக்கு பின்னாடி நாம தனியா சந்திச்சுக்கிட்டது இல்ல. போன் நம்பர் வாங்கல. மணி கணக்குல பேசல. இப்ப கல்யாணம் முடிஞ்சு தான் நம்மளை பத்தி தெரிஞ்சுக்க போறோம்"
" ஆமாங்க நீங்க சொல்றது உண்மைதான். நிறைய பேரு கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லாம் பேசிடறாங்க அப்படியே கல்யாணத்துக்கு பின்னாடி பார்த்தா செட்டாகாமல் சிரமப்படுறாங்க"
"நாம கொடுத்து வச்சவங்கதான். கடவுள் ஒரே குணத்துல படைச்ச ரெண்டு பேரு நாமதான்"
இருவரும் சிரித்தனர்
" உங்கள பத்தி கேட்டேனே நீங்க ஒண்ணும் சொல்லலையே"
" என் குடும்பம் நல்ல குடும்பம். என்னையை விட ஒரு மடங்கு மேலேயே உன்ன பாத்துக்குவாங்க. எனக்கு முன்னாடி ஒரே ஒரு காதலி இருந்தா. அவ குடும்பத்தை பிரிஞ்சு வந்தா கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா. என் குடும்பம்தான் எனக்கு எல்லாமே. அதனால காதல.... அந்த முதல் காதல.... தூக்கி போட்டுட்டேன். இப்ப உன்ன பத்தி சொல்லு"
" என் குடும்பமும் நல்ல குடும்பம்தாங்க. என்ன அப்படி தாங்குவாங்க. அவுங்களுக்கு பிறந்த தேவதையினு என்னைய நம்புறாங்க. எனக்கு ஒரு காதல் இருந்துச்சு. அவன் நல்லவன்னு நினைச்சேன். அப்புறம் ஒரு கட்டத்துல தெரிஞ்சுச்சு அவனுக்கு தேவை காமம்தான் காதல் இல்லைனு. நானே அவன விட்டு விலகி வந்துட்டேன்"
" உண்மையாவே நீ கடவுள் கொடுத்த பெரிய பொக்கிஷம் எனக்கு. உன்ன உங்க வீட்டு ஆளுங்கள விட நல்லா பாத்துக்குவேன்"
" உங்களுக்கு ஆம்பளைங்கற எந்த ஆணவமும் இல்லைங்க. இது தாங்க உங்ககிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு"
"அது எப்படி நீ சொல்ற"
" ஆம்பளைங்களா பொறுத்த வரைக்கும் தனது காதல் புனிதமுனு சொல்லுவாங்க. தங்க மனைவி காதல கொச்சையாவே பேசுவாங்க. நானும் பயந்துகிட்டே உங்ககிட்ட எதையும் மறைக்க கூடாதுன்னு சொன்னேன். நீங்க எதையும் லேசா எடுத்துக்கிட்டீங்க ரொம்ப நன்றிங்க"
"ஆம்பளைய போலதான் பொம்பளைக்கும் மனசு. ஆம்பள கல்யாணத்துக்கு முன்னாடி காதலிச்சா தப்பில்ல.. பொம்பளைய காதலிச்சா தப்புன்னு யார் சொல்லி வச்சாங்கனு தெரியல.
ஏ... பொண்டாட்டி என்ன, முதலிரவிலேயே நன்றி சொல்ல ஆரம்பிச்சுட்டா இன்னமும் நிறைய இருக்குல...."
" ஓ அப்படியா ? என்ன நெறைய இருக்கு"
"உனக்கு தெரியாதா?"
" தெரியாதே" என்றாள் வெட்கம் கலந்து சிரிப்புடன்.
கரங்கள் கோர்த்து இருவரும் நெருங்கி வந்தனர்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
" கட் கட்" என்ற சத்தம் கேட்டது.
சுற்றி இருந்த அனைவரும் கைத்தட்டினர்.
" சார் மேடம் ரொம்ப அருமையா பண்ணிட்டீங்க. நா நெனைச்சத விட ரொம்ப நல்லா வந்திருக்கு" என்றார் இயக்குனர்.
இருவரும் ஒருவருக்கொருவர் கை கொடுத்துக் கொண்டனர்.
" கொஞ்ச நேரம் பிரேக் அப்புறம் அடுத்த சாட்டுக்கு போலாம்" என்றார் இயக்குனர்.
நாயகனின் உதவியாளர் வந்தார் "சார் உங்க வீட்ல இருந்து போன் வந்துகிட்டே இருக்கு"
" அப்படியா கொடு. எங்கேயும் நம்ம நிம்மதியா இருக்கக் கூடாது அப்படின்னு முடிவு பண்ணிட்டாங்க"
போனில் "ஹலோ அம்மா சொல்லுங்க. ஷூட்டிங்ல இருக்கேன். உங்க கிட்ட எத்தனை தடவை சொல்றது அவளுக்கு முன்னாடியே காதலன் இருந்திருக்கான். அதை மறச்சு என்னைய கல்யாணம் பண்ணிக்கிட்டா. முன்னாடியே சொல்லாம இப்ப சொல்றா. நான் எப்படி அவளை ஏத்துக்கிறது. நான் ஆம்பள, ஒரு நடிகன், எப்படியும் சுத்தி இருப்பேன். அதுக்குன்னு அவளும் இருப்பாளா? என்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டாளா? இல்ல சொல்லாத கருப்பு பக்கம் இருக்கான்னு யாருக்கு தெரியும். வக்கீல் கிட்ட பேசிருங்க"
" டேய் என்னடா நெனைச்சுகிட்டு இருக்க. எதையும் மறைக்காம உன்கிட்ட நேர்மையா இருக்கா. இவள இப்படி பண்றது தப்பு டா. உண்மைய சொல்றது தப்பாடா?"
" அம்மா இதுதான் என் முடிவு. அப்புறம் உன் இஷ்டம்" என்று போனை தூண்டித்தான் .
"முன்னால் காதலி..... முன்னால் காதலி...." என்று போன் ரிங்டோன் அடிக்க தனியாக பேச எடுத்துச் சென்றான் நாயகன்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்