logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

Thenthamizhan

சிறுகதை வரிசை எண் # 143


பெத்த மனசு களையெடுக்கப் போனவ, வேலை முடிஞ்சி வீடு வந்து பாத்தா, என் மனசு பகீரின்னுது. புத்தகப் பை தாறுமாறாக திறந்து கெடந்தது. பொத்திபொத்தி வளர்த்த மவன் போன இடம் தெரியல. 'ஏ... சங்கரா.. சங்கரா"...ன்னு ரெண்டு மூணு வாட்டி கூவிப்பாத்தேன். அக்கம் பக்க வூட்டுகளுள வெளையாடிக் கிட்டிருந்தா 'அம்மா"ன்னு ஆசையாய் ஓடி வரும் மகனின் அரவமே தெரியல. 'எங்கு போயிருப்பான், என்ன செஞ்சிகிட்டிருப்பான்னு ஒரு வெவரமும் தெரியாத பாவி மவ பதை பதைச்சிப் போனேன். அஞ்சி மணிக்கு பள்ளிக்கூடம் வுட்டிருக்கும். நேரே வூட்டுக்கு வந்து நான் எப்போதும் அடுக்களையில் வச்சிருக்கும் பழைய சோத்த தின்னுட்டு வூட்டுப்பாடம் எழுதிக்கிட்டிருக்கும் மவன் வூட்டுல இல்லன்னா பெத்தவ மனசு எம்புட்டு பாடுபடும்? ஓடினேன், அக்கம்பக்கத்து வூட்டுல இருக்கும் கமலா அக்கா, சரசு அத்தை இவங்கூட படிக்கும் கோவிந்தன், குப்புசாமி எல்லோரிடமும் கேட்டுட்டேன், ஒரு பாவியும் எந்த விவரமும் செல்லல. 'இங்குதானே இருந்தான், எங்க போனா"ன்னு என்னையே திருப்பிக் கேக்கறாங்க. அநாதையாய் என்ன வுட்டுட்டு ஆக்சிடெண்டுல அகால மரணத்தில அந்த சண்டாளன் போனபிறகு, இந்தப் பயலை நான் வளர்க்கப்பட்ட பாடுகள் சொல்லி மாளாது. உற்றார் உறவினரை எதிர்த்து அந்த மனுஷன் என்ன கைபுடிச்சி கழுத்தில ஒரு மஞ்சக் கயித்த கட்டி கண்கலங்காமல் பாத்திருந்த காலமெல்லாம் கரையேறி போயிருச்சி. மல்லிகபூ மலர்ந்திருக்கிற மாதிரி என் முகம் எப்பொழுதும் சிரிச்சிக் கிட்டுயிருக்கனும். கொஞ்சம் வாடினாலும் அவரு மனசு பொருக்காது, துடிதுடித்து போயிடுவார். 'என்னடி செல்லம்? என்னடி குட்டி? அம்மா, அப்பா ஞாபகம் வந்திருச்சா? ஒன்னும் கவலப்படாத, ஒரு சிங்கக்குட்டிய பொத்துக்கொடு. அப்புறம் பாரு, அவங்க தானா ஓடி வந்து உன் காலடியில் கிடப்பாங்க. நான் ரெடி, நீ ரெடியான்னு ஒரு பார்வை பார்த்தாருன்னா, என் சோகமெல்லாம் சொல்லாம, கொள்ளாம றெக்கை கட்டி பறந்து போயிடும் மனசு சொர்க்கத்துல மிதக்கும். அப்படி வாழ்ந்தவதான் இப்படி அல்லாடி நிக்கிறேன். அவரு சொன்ன மாதிரியே இந்தக் குட்டிபய, அடுத்த வருசமே பொறந்துட்டான். இவன் பொறந்த பிறகு, அவருடைய நடத்தைய பாக்கனுமே! ஊரே அசந்து போய் நின்னுச்சி. 'என் சிங்கக்குட்டி இருக்கும்போது எனக்கென்னடா கவல?. போங்கடா"ன்னு தோள தட்டித் திரிஞ்ச மனுசன் சொல்லாம, கொள்ளாம போயி சேந்துட்டாரு. அப்புறமென்ன! அல்லல்தான் பாடுதான். அன்னாடம் கஞ்சி காய்ச்சவும், இந்தப் பயல அரசாங்க பள்ளிக்கூடத்துல படிக்க வைக்கவும், நான் படுறபாடு நாய் படுமா? பேய் படுமா? பட்டுகிட்டிருக்கேன். என்ன பாடுபட்டாலும் இந்தப் பய இருக்கிறதால, ஒரு தெம்பா இருந்தேன். இவனும் இப்ப காணலனா நான் யாருகிட்டப் போயி என் கெறைய சொல்லி அழுவேன்? தெருவெல்லாம் தேடி அலைஞ்சேன். ஆத்துல கீத்துல விழுந்து தொலைஞ்சிருந்தா, நான் என்ன பண்ணுவேன்னு கை கால்கள் வௌவௌக்க ஆத்தங்கரை பக்கம் போயி பாத்தேன். அங்க நாலைஞ்சி பேரு குளிச்சிக்கிட்டிருந்தாங்க. 'என் மவன் சங்கர் இங்க வந்தானா? நீங்க யாராச்சும் பாத்தீங்களா?"ன்னு பதபதைச்சி கேட்டேன். 'நாங்க சாயங்காலத்திலிருந்து இங்கதான் துணி தொவச்சி குளிச்சிகிட்டு இருக்கோம். இங்கே வரலையேம்மா"ன்னு சொல்லி கைய விரிச்சாங்க. சாமான் சட்டி தொலைஞ்சி போச்சின்னா, நாலுபேருகிட்ட சொல்லி, நாலு எடத்துல தேடி கெடைக்கலன்னா, போனா போவுதுன்னு வுட்டு தொலச்சிடலாம். இவன் அப்படியா? என் வாழ்க்கையை வளப்படுத்த வந்த தங்க கட்டியாச்சே! குடிக்க குடிக்க இனிக்கும் தாமிரபரணி ஆத்து தண்ணியாட்டம் நெனைக்க நெனைக்க இனிக்கும் என் ரத்தத்தின் ரத்தமாச்சே!. நான் பெத்த செல்லமாச்சே! ஆண்டவன் என்ன ஏன் இப்படி சோதிக்கிறான்? நான் என்ன அப்படி உலகத்துல இல்லாத குத்தத்த செஞ்சிட்டேன்? மனசுக்கு புடிச்ச, ஒரு ஆம்பளைய கைய புடிச்சேன். அதுக்காக பெத்தவங்கள தொறந்தேன். கொண்டவன் திறமாயிருந்தா, கூரையேறி சண்ட புடிக்கலாம்ங்கற மாதிரி அந்த மனுசன் சமத்தா இருந்ததால அதெல்லாம் எனக்கு ஒன்னுமே பெருசா தெரியல. அவரையும், ரோடு ஆக்சிடெண்ட்ல கொண்டுட்டு போயிட்டான் கூத்துவன். இப்ப இவனையும் காணலைன்னா, நான் என்ன பண்ணுவேன்? பொழுது சாயப்போகுது. மானம் வேற கருக்கி மழ வர்ற மாதிரியிருக்கு. நான் தேடாத இடம் பாக்கியில்ல. கேக்காத ஆளு ஒருத்தருல்ல. ஒரே ஒருத்தாராச்சும் 'நான் அவன அங்க பாத்தேன், இங்க நின்னுகிட்டிருந்தான். இவனோடு வெளையாடிகிட்டு இருந்தான்"னு சொல்லலியே! நேரம் ஆக ஆக மனசு அறுத்துப் போட்ட கோழி குஞ்சாட்டம் துடிக்கிதே!, நான் என்ன பண்ணுவேன்? 'ஏ... வள்ளி! என்னடி இங்க நிக்கிற? உன் மொகம் ஏன் பேயறைஞ்ச மாதிரியிருக்குது" என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தா, அம்மனி அக்கா. 'அக்கா என் பையன சாயங்காலத்திலிருந்து காணலக்கா, யாரக் கேட்டாலும் தெரியல தெரியலன்னு சொல்றாங்க"ன்னு அழுதேன். 'ஏய், அழுவாதடி, உன் பையன நான் இப்பதான் மாரியாத்தா கோயில் வடக்கு பிரகாரத்துல ஒரு மூளையில உட்காத்திருந்தத பாத்தேன். ஏன்டா இங்க ஒக்காந்திருக்க, பள்ளிக்கூடம் போனியான்னு கேட்டேன். ம்.. ன்னு ஏதோ முனகினான். வாடா வூட்டுக்கு போகலாம்னு கூப்பிட்டேன். அவன் வர மாட்டேன்னுட்டான். சரி ஓங்கிட்டயாவது சொல்லலாம்னு ஓடி வர்றே"ன்னு சொல்லிச்சி. கோயில்ல வந்து பாத்தா, நான் பெத்த செல்லம் ஒரு மூளையில முடங்கி கெடக்கிறான். 'ஏய் ராசா! ஏன்டா இங்க ஒக்காந்து இருக்கிறே"ன்னு கேட்டுகிட்டே நான் அவன தூக்கினா, உடம்பெல்லாம் கொதியா கொதிக்குது. புள்ள மூஞ்சிய பாக்க முடியல. கண்ணெல்லாம் செவந்திருக்கு. 'என்னடா மழையில நனைஞ்சியா? இல்லையே, இப்பதானே காத்தடிக்குது இடியும் மின்னலும் மின்னிக்கிட்டு இருக்கு ஒரு துளி கூட இன்னும் மழை வுழலியே! அதுக்குள்ள நீ எப்படி நனைஞ்சிருப்ப? எப்படி உனக்கு காய்ச்சல் வந்தது"ன்னு அவன கேட்டேன். அதுக்கு அவன், 'அம்மா காய்ச்சலடிச்சா நீ இட்லி வாங்கி தருவல்ல" ன்னான். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. 'யாருடா சொன்னா? காய்ச்சலில்லன்னாலும், நான் ஒனக்கு இட்லி, தோசை வாங்கித் தருவன்டா"ன்னு அவனை அணைச்சிக்கிட்டேன். அவன் என்ன பாவமா ஒரு பார்வ பாத்து, 'முத்து இருக்கான்ல அவனுக்கு ஒரு நாள் காய்ச்சலடிச்சதான். அவங்க அம்மா அவனுக்கு கடையிலபோயி இட்லி வாங்கி கொடுத்தாங்கலாம். வெங்காயத்தை நசுக்கி கை அக்குலுக்குள்ள வச்சிகிட்டா காய்ச்சல் வரும்-னு அவன்தான் சொன்னான். வந்தா நீ எனக்கு இட்லி வாங்கி தருவல்ல, அதான் அப்படி செஞ்சேன். எனக்கு காய்ச்சல் வந்திருச்சி, இட்லி வாங்கித் தாம்மா"ன்னான். 'அடப்பாவி பயலே, உனக்கு ரெண்டு இட்லி வாங்கிக் கொடுக்கக்கூடவா, நான் வக்கத்து போயிட்டேன், என் உசுர வேணும்னாலும் உனக்கு தருவன்டா, நீ இப்படி செஞ்சிட்டியே"ன்னு தலையில அடிச்சிகிட்டு அழுதேன். எப்ப பாத்தாலும் இட்லி, தோசையான்னு நான் வேலை செய்யும் எஜமானன் வூட்டு புள்ளைங்க அவங்க அம்மாகிட்ட சண்டையிட்ட காட்சி என் மனசுக்குள்ள ஓடிச்சி. நான் பெத்த மவனை நெனைச்சேன், என் கண்கள் ரெண்டும் குளமாச்சி. இச்சிறுகதை எனது சொந்தக் கற்பனையென்றும், தழுவலோ, மொழிப் பெயர்ப்போ அல்லவென்றும் எந்த இதழிலும், இணையத்திலும் வெளியிடப்படவில்லை என்றும் உறுதி கூறுகிறேன்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.