பால அருண் ரா
சிறுகதை வரிசை எண்
# 141
“முடியும் வரை முயற்சி செய்….
முயன்ற வரை உதவி செய்….
முயன்று தவறை திருத்தம் செய்….”
அது ஒரு அழகான அதிகாலை. இருள் சூழ்ந்த நேரத்தில் தன் செந்நிறக் கதிர்களின் உதவியுடன் இருளை எதிர்த்து போரிட்ட சூரியனோ…. இவ்வுலகை பிரகாசமாய் மாற்றி தனது வெற்றியை அறிவித்து உதயமானது.
வானமோ நீல நிற உடையை அணிந்துக் கொண்டிருக்க.... கடலோ சூரியனின் வெற்றியை பிரதிபலிக்க ஆரவாரமாய் ஆர்ப்பரித்து கொண்டிருந்தது....
கரையில் கால் தடங்களை பதித்து.... சூரியனை வணங்கி.... கடலின் உதவியை நாடி.... வலையுடன் மீனவர்கள் படகில் பயணத்தை தொடங்கினர். படகு கடலின் நடுவே நகர்ந்து கொண்டிருந்தது. படகை பார்த்ததும் மீன்கள் ஓடி ஒளிந்தன.
இதைப் பார்த்த அலை தன் நண்பன் ஆமையிடம், ஏன் படகைக் கண்டால் மீன்கள் ஓடி ஒளிகின்றன??? நான் பலமுறை அந்தப் படகை தொட்டுச் சென்றிருக்கிறேனே…. என்று கேட்டது. அதற்கு ஆமை படகில் பயணம் செய்பவர்கள் வலையை விரித்து மீன்களை பிடித்து கரைக்கு கொண்டுச் சென்று அனைவருக்கும் விருந்தாக்கி விடுவார்கள். சில நேரம் நானும் அந்த வலையில் சிக்கிக் கொள்வேன், ஆனால் அவர்கள் என்னை மீண்டும் கடலிலேயே விட்டு விடுவார்கள். அதனால் தான் இந்த பயம் என்று பதில் அளித்தது.
உடனே அலை ஆமையிடம் உனக்கு எப்படி இதெல்லாம் தெரிகிறது??? என்று கேட்க. ஆமையோ நான் கடலிலும் மிதப்பேன்.... கரையிலும் நடப்பேன்.... அதனால் எனக்கு இதெல்லாம் தெரியும் என்று கூறியது.
இதைக் கேட்ட அலை நானும் அந்த கரையை என்றாவது அடைய மாட்டோமா??? என முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன். ஆனால் இன்னும் என்னால் அந்த கரையை காண முடியவில்லை என்று தன் நண்பனிடம் கூறியது.
ஆமையோ என்னாடு வா நண்பா.... நான் உனக்கு அந்த கரையை காண்பிக்கிறேன் என்று அழைத்தது. அதற்கு அலை வேண்டாம் நண்பனே... “நான் முடிந்தவரை முயற்சி செய்து என் இலக்கை அடைந்து விடுவேனென்று என்மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது” என்று கூறியது.
இதைத் கேட்ட ஆமை அலையிடம், சரி உன் விருப்பம் என்னவோ நீ அதையே செய்.... உனக்கு உதவி தேவைப்பட்டால் தயங்காமல் என்னிடம் கேள்.... என்று கூறி விட்டு சென்றது.
அலை, அங்கும் இங்கும் தன் இலக்காகிய கரையை தேடி அலைந்து திரிந்து ஓடிக் கொண்டிருந்தது. அப்போது அதை கண்ட படகு, ஏன் இப்படி அலைந்து திரிகிறாய் அலையே??? என்று கேட்டது. அதற்கு அலை எனக்கு அந்த கரையை அடைய வேண்டும். அது தான் என் இப்போதைய இலக்கு என்று கூறியது.
படகோ சரி நான் ஆழ் கடலுக்குள் சென்றுவிட்டு சிறிது நேரத்தில் மீண்டும் கரைக்கு திரும்புவேன். அப்போது உன்னையும் அழைத்து செல்கிறேன். நீ என்னோடு வா.... உன் இலக்கை அடைந்து விடலாம் என்று கூறி அழைத்தது.
அலையோ படகிடம் உன் அழைப்புக்கு நன்றி நண்பா, ஆனால் “நான் முடிந்தவரை முயற்சி செய்து என் இலக்கை அடைந்து விடுவேனென்று என்மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது”. அது தான் என் வெற்றிப் பரிசு என்று நான் கருதுகிறேன் என்று கூறியது.
இதை கேட்ட படகு, “உன் மேல் உனக்கு இருக்கும் நம்பிக்கை உன்னை அந்த கரைக்கு கொண்டு சென்று சேர்த்து விடும்” என்று எனக்கு தோன்றுகிறது நண்பா.... விரைவில் உன்னை கரையில் சந்திக்கிறேன் என்று அலையிடம் கூறிவிட்டு நகர ஆரம்பித்தது.
நேரமும் நகர்ந்து கொண்டே இருக்க, தன் இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்த அலை சிறு தொலைவில் தன் நண்பன் ஆமை தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருப்பதைக் பார்த்து விரைந்து அருகில் சென்றது.
தன் நண்பன் ஆமையிடம் என்ன ஆயிற்று உனக்கு??? என்று அலை பதர்ட்டத்துடன் கேட்டது. ஆமையோ நான் நீந்திக் கொண்டிருக்கும் போது என் கால்களில் பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றிக் கொண்டன. என்னால் என் கால்களை அசைக்க முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக என் கால்களை பிளாஸ்டிக் கழிவு அறுத்துக் கொண்டிருக்கிறது.... என்று கண்ணீருடன் கூறியது.
பிளாஸ்டிகா??? அப்படி ஒன்று கடலில் இருக்கிறதா??? என்று அலை கேட்டது....
ஆமையோ, ஆம் அது மனிதர்கள் பயன்படுத்திவிட்டு எல்லா இடங்களிலும் வீசிச் சென்று விடுவார்கள். அது அனைவருக்கும் மிகவும் ஆபத்தான ஒன்று. பல விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் அதை அவர்கள் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். “பிளாஸ்டிக் கடலிலும்.... கரையிலும்.... காட்டிலும்.... வீட்டிலும்.... காணும் எல்லா இடத்திலும் நிறைந்துள்ளது”. அவர்களுக்கே பிளாஸ்டிக் ஆபத்தாய் நிற்கும் போது தான் மனிதர்களுக்குத் தெரியும்…. என்று மிகவும் வேதனையுடன் கூறியது.
இதைத் கேட்ட அலை மனிதர்கள் எல்லாம் கொடியவர்களா??? மீன்களை எல்லாம் பிடித்துச் செல்கின்றனர்.... கடலிலும்.... காணும் இடத்திலும்.... பிளாஸ்டிக்கை வீசிச் செல்கின்றனர்.... நாளை எனக்கும் தீங்கு விளைவிப்பார்களோ??? என்று அச்சத்துடன் கேட்டது.
அப்படியும் கூறிவிட முடியாது, ஏனென்றால் நான் கரைக்கு சென்றால்.... “அவர்களால் மட்டுமே என் மேல் இருக்கும் இந்த பிளாஸ்டிக் கழிவை அகற்றி எனக்கு உதவி செய்ய முடியும்”. அவர்கள் அதை செய்வார்கள் என்று நான் நம்புகிறேன் என்று தயக்கத்துடன் ஆமை கூறியது.
உன் கேள்விக்கு பதில் கூறிக் கொண்டே இருந்தால் நான் இங்கேயே மூழ்கி விடுவேன்.... நான் உடனே கரைக்கு செல்ல வேண்டும் என்று கூறிவிட்டு ஆமை தத்தளித்த படி மீண்டும் நீந்த ஆரம்பித்தது.
உடனே அலை சற்று பொறு நண்பா…. நான் உனக்கு உதவி செய்கிறேன் என்று ஆமையிடம் சொன்னது. அதற்கு ஆமை உனக்கு தான் கரை எங்கு இருக்கிறது என்று தெரியாதே.... எப்படி எனக்கு உதவி செய்வாய்??? என்று கேட்டது.
அலையோ, பின்னால் திரும்பி பார் என் நண்பன் வருகிறான். நான் அவனிடம் நடந்ததை கூறி உன்னை கரைக்கு அழைத்து செல்ல சொல்கிறேன். அவன் உன்னை கரையில் சேர்த்து விடுவான், என்று ஆமையிடம் கூறியது.
ஆமையோ, திரும்பி பார்த்து படகு வருவதைக் கண்டு பயந்து நின்றது. ஆமையிடம் அலை, பயப்பட வேண்டாம் நண்பா…. படகும் உன்னை போல என் நண்பனாகி விட்டான் என்றது.
படகு இருவரிடமும் வந்து நின்றது. அலை படகிடம் இவன் என் நண்பன் ஆமை, இவனை நீ கரையில் சேர்த்து விடு. இவனுக்கு காலில் பிளாஸ்டிக் கழிவு சுற்றி காயமாக உள்ளது. இவனால் நீந்த கூட முடியவில்லை என்று கூறியது. படகும் சிறிதும் யோசிக்காமல் என் துடுப்பின் ஓரம் ஒரு காலி இடம் உள்ளது நீ அதில் அமர்ந்துக் கொள் என்று கூறி தன்னோடு அழைத்துச் சென்றது.
படகு கரையில் வந்து சேர்ந்ததும் ஆமை படகிடம் நன்றி நண்பா…. என்று புன்னகையுடன் கூறி கரையில் தத்தி தத்தி நடக்க ஆரம்பித்தது.
ஆமை கரையில் தவிப்பதை பார்த்து, அங்கு விளையாடிக் கொண்டிருந்தவர்கள் ஆமையை மீட்டு.... பிளாஸ்டிக் கழிவை அகற்றி.... “ஆமை நம்பியது போல் அதற்கு உதவியும் செய்தனர்”.
அது மட்டுமல்ல.... தங்கள் செயல்பாட்டால் தங்களை சுற்றியுள்ள உயிர்களுக்கு ஆபத்து என்பதை அங்கிருந்தவர்கள் உணர்ந்து அதை திருத்திக் கொள்ளும் வகையில் “இனிமேல் பிளாஸ்டிக் உபயோகிப்பதை முடிந்த வரை குறைப்பதாகவும்.... பயன்படுத்திய பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக மறுசுழற்சி செய்வதாகவும்…. மற்றவர்களும் இதை உணரந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப் போவதாகவும்…. உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்”….
நடப்பதை எல்லாம் கரையில் இருந்தபடியே படகு பார்த்துக் கொண்டிருந்த போது, “அலையும் கரையை வந்து சேர்ந்தது”.
படகிடம், “நான் என் இலக்கை அடைந்து விட்டேன் நண்பா.... நீ நினைத்தது போல் நாம் இருவரும் கரையில் சந்தித்து விட்டோம்”.... என்று ஆனந்தமாக அலை கூறியது.
படகோ அங்கே பார் நண்பா. நம் நண்பன் ஆமை ஆபத்தில் இருந்து மீண்டு விட்டான் என்றது. ஆம் நானும் அங்கு நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருந்தேன்.
ஆமையின் நம்பிக்கை வீண் போகவில்லை, “அவன் நம்பியது போல் அவனுக்கு மனிதர்கள் உதவி செய்து காப்பாற்றி விட்டார்கள்”….
இப்போதாவது “பிளாஸ்டிக் ஆபத்து என்பதை இவர்கள் உணர்ந்து செயல்படுவார்கள்” என்று நம்புவோம் என்று படகிடம் கூறிவிட்டு கரையை தழுவிச் சென்றது அந்த அலை....
“மற்றவர்கள் உதவியை நாடாமல்.... முயற்சி செய்து கொண்டே…. முடியும் வரை தன்னம்பிக்கையுடன் முன்னே சென்றால் நம் இலக்கை அடையலாம்...."
அதேபோல், “மற்றவர்கள் ஆபத்தில் இருக்கும் போது தக்க சமயத்தில் உதவி செய்து அவர்கள் மீண்டுவர பக்கபலமாய் இருக்க வேண்டும்...."
“நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நம் செயல்பாடு இருந்தால் அதை உடனே திருத்திக் கொள்ள வேண்டும்…."
- பால அருண் ரா
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்